கத்தரிக்காய் திருட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 6,876 
 
 

அலுவலக பணியிலிருந்து ஓய்வு வாங்கி மதுரை மாநகரத்தை விட்டு ஒதுங்கியிருந்த எனது கிராமம் அருகிலேயே வீடு கட்டி சுற்றி வர பத்திருபது செண்ட் தோட்டம் போட்டு அதை பார்த்துக்கொண்டு, ‘சிவனே’ என்று காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் பணி எனக்கு!

அந்த தோட்டத்தில் காய்த்திருந்த கத்தரிக்காயை பார்த்து என் சின்னம்மா கிழவி அவ்வப்பொழுது என் வீட்டை தாண்டி போகும் பொழுது ‘தென்னரசு’ கத்தரிக்கா எம்புட்டு அழகா காச்சு தொங்குதுடா புலம்பி செல்வாள்.

மனைவி அவ்வப்பொழுது சொல்லும் வேலைகளை செய்து கொண்டு, நிம்மதியாய் காலம் போய்க்கொண்டிருக்கும் போது எங்கள் நிம்மதியை கெடுக்கும் வண்ணம் சில நாட்களாய் தோட்டத்திலிருந்து கத்தரிக்காய் காணாமல் போய்க்கொண்டிருந்த்து பெரும் குடைச்சலாய் போய் விட்டது. யார் பறித்திருப்பார்கள்? இந்த கேள்வி என் மனைவிக்கு வர அவள் அந்த ஆச்சர்யத்தை வெளிப்படும் வண்ணம் நீங்க எல்லாம் உத்தியோகம் பார்த்து என்ன பிரயோசன்ம்? வீட்டுல கத்தரிக்காய் காணாம போறதை கண்டு பிடிக்க துப்பில்லை…

இந்த வார்த்தைகளை “தேமே”என்று அந்த காலை வேளையில் கேட்டும் கேட்காதது போல திண்ணையில் இருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேன். வாசலில் யாரோ கேட்டை திறக்கும் சத்தம் யாரென பார்க்க கேட்டின் முன் உயரமாய் மூவர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மெல்ல நடந்து திண்ணைக்கு வர அதுவரை என் அருகே நின்று ‘கத்தரிக்காய் காணாமல் போனதற்கு’ சண்டை போட்டுக்கொண்டிருந்த மனைவி உள்ளே போனாள். போன வேகத்தில் உள்ளிருந்து மூன்று பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்து தர நான் எழுந்து அதை பெறுவதற்குள் வந்த மூவரில் கொஞ்சம் இளைஞராய் இருந்தவர் தானே பெற்று மூவருக்கும் போட்டார்.

மூவர் உட்கார்ந்தவுடன் மெல்லிய புன்சிரிப்புடன் எப்படியிருக்கீங்க தென்னரசு, ரிலாக்ஷா இருக்கற மாதிரி இருக்கு ! கொஞ்சம் அனுபவப்பட்டவராய் இருந்தவர் கேட்டார். நிம்மதியாய் இருக்கேன், ஊர் பக்கம், நடந்து போனாலே அரை மணி நேரம்தான், அங்கயும் தோட்டம், காடுங்களையும் பார்த்துக்கலாம் இங்க பாருங்க வீட்டை சுத்தி தோட்டம் போட்டு அதைய பார்க்கறதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது, புன்னகையுடன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மனைவியின் கணைப்பை கேட்டு உள்ளே சென்றவன் ஒரு தட்டில் பிஸ்கட், மற்றும் கொஞ்சம் “ஸ்னேக்ஸ்” இவைகளை எடுத்து வந்தேன். என் சாய்வு நாற்காலி அருகில் இருந்த டீப்பாயை இழுத்து அதில் வைத்து சாப்பிடுங்கள் என்றேன்.

இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம் தென்னரசு, நாங்க இப்பத்தான் சாப்பிட்டு வந்தோம் ஒருவர் சொல்ல இந்த பார்மாலிட்டீஸ்தான் வேண்டாம் எடுத்து சாப்பிடுங்க, ஒரு நிமிசத்துல காப்பி எடுத்து வந்திடறேன். உள்ளே சென்றவன் மனைவி ரெடியாக வைத்திருந்த காப்பியை எடுத்து முன் புறம் வந்தேன்.

வந்தவர்கள் அமைதியாய் காப்பியை அருந்த நான் மெளனமாய் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். எதற்கு வந்திருக்கிறார்கள் என்று ஓரளவுக்கு யூகிக்க முடிந்தாலும் எதுவும் பேசாமல் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

தென்னரசு நீங்க அவசரப்பட்டுட்டீங்களோன்னு தோணுது, மெல்ல இழுக்க, நான் புன்னகையுடன் இல்லைங்க, இப்பத்தான் நான் நல்ல முடிவு எடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். இந்த அமைதி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, புன்னகையுடன் சொல்ல, அவர்கள் நாங்க எதுக்கு வந்திருக்கோமுன்னு உங்களால யூகிக்க முடியும், கண்டிப்பா முடியும்..அவர் சிரித்துக்கொண்டே சொல்ல நான் புன்னகையுடன் ‘சரிதான்’ என்று தலையாட்டினேன். சரி விஷயத்துக்கு வாங்க..

கொஞ்ச நாளைக்கு நீங்க கொடைக்கானல்ல தங்கவேண்டியிருக்கும் தயக்கத்துடன் சொல்ல, நான் வியப்புடன் கொடைக்கானல்லயா? ஆமா டிபார்ட்மெண்ட் உங்களைத்தான் போக சொல்லியிருக்கு. நான்தான் டிபார்ட்மெண்ட் வேலையை விட்டு ரிட்டையர்மெண்ட் வாங்கிட்டேனே? இருக்கலாம், ஆனா அலமேலு அம்மா அதுதான் கொடைக்கானல்ல பெரிய எஸ்டேட் முதலாளி, ஏற்கனவே எதோ ஒரு கேசை முடிச்சு கொடுத்திருக்கீங்கலாம். அந்தம்மா உங்களைத்தான் “சஜ்ஜஸ்” பண்ணியிருக்கு.

நான் சிரிப்புடன் ஏன் சார் அவங்க சொன்னா உங்க டிபார்ட்மெண்ட் ஒத்துக்க கூடாதில்லையா? இருக்கலாம், ஆனா டிபார்ட்மெண்ட்டும் நீங்க அங்க போறதைத்தான் விரும்புது. காரணம் இது “அன அபிஷியல் மேட்டர்”. அது மட்டுமில்லை, சென்ட்ரல் மினிஸ்டர் கிட்டேயிருந்தும் உங்களை அனுப்ப சொல்லி எங்களுக்கு பிரஷ்ஷர். எனக்கு சிரிப்பு வந்தது, அவங்கனாலதான் எனக்கு பிரச்சினையின்னு ரிட்டையர்மெண்ட் வாங்கி வந்தா மறுபடியும் பிரச்சினையா?

அவர்கள் நான் சொல்வதை அவ்வளவாக காது கொடுத்து கேட்காதவர்கள் போல் இறுகிப்போய் உட்கார்ந்திருந்தார்கள். சரி ஒரு நிமிஷம் இருங்க, மனைவியிடம் போய் சொன்னேன். முதல்ல இந்த கத்தரிக்காயை கண்டு பிடிக்கறதுக்கு வழிய பார்ப்பீங்களா? அதை விட்டுட்டு…இழுக்க.. சரி நான் போய்ட்டு வந்து கண்டிப்பா கண்டு பிடிச்சு கொடுத்திடறேன். அவளிடம் உறுதி கூறியவன், வெளியே வந்து நாளைக் காலையில ஆபிஸ் வர்றேன்..அவர்கள் “அப்பாடி” என்ற புன்னகையுடன் கை குலுக்கி விடை பெற்றார்கள். அவர்கள் போன ஐந்து நிமிடம் கழித்து தோட்டத்துல இருந்து ராசப்பனையும், அவன் சம்சாரத்தையும் வர சொல்லுங்க..சொல்லியபடியே அருகில் வந்தாள் மனைவி.

ராசப்பன் என் கூட வரட்டும், அவன் சம்சாரம் உன் கூட இருக்கட்டும், சொல்லிவிட்டு செல்போனை எடுத்தேன். ஒரு மணி நேரத்தில் கேட் அருகே சத்தம் கேட்க ராசப்பனும் அவன் மனைவியும் நின்று கொண்டிருந்தார்கள்.

குளிர் அதிகமாய் இருந்த அந்த கொடைக்கானலில் அலமேலு அம்மாள் வீட்டில் இரவு பத்து மணி அளவில் யோசனையில் உட்கார்ந்திருந்த அலமேலு அம்மாளின் முன் உட்கார்ந்திருந்தேன். கொடைக்கானல் குளிரின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. அநேகமாக இந்த அறையில் எங்காவது ஒரிட்த்தில் “கனல்” போட்டிருக்கவேண்டும். அல்லது “வார்ம் ஹீட்டர்” போட்டிருக்க வேண்டும்.

திடுக்கிட்டு தன்னிலை பெற்ற அலமேலு அம்மாள் “சாரி மன்னிச்சுக்குங்க” என்னால அதை ஜீரணிச்சுக்க முடியலை, அந்த பொண்ணு “மல்லிகா” முந்தா நேத்து வரைக்கும் இங்க ஓடி ஆடி நடந்துகிட்டிருந்ததை நினைச்சு அப்படியே இருந்துட்டேன்.

பரவாயில்லை, எல்லாருக்கும் நம்ம கூட இருக்கறவங்களை இழக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கும். அந்த பொண்ணுக்கு வயசு எவ்வளவு இருக்கும் ? ஒரு பதினைஞ்சு பதினாறு இருக்கலாம், அதுக்காக அந்த பொண்ணை தப்பான முறையில எடை போட்டுடாதீங்க, ஏன்னா அதோட குணம் அவ இங்க வந்த இரண்டு வருசத்துல எனக்கு அத்துப்படி.

அந்த பொண்ணு எந்த ஊர்ல இருந்து வந்துச்சு? அவங்கப்பா, அம்மாவை பற்றி உங்களுக்கு நல்லா தெரிய்மா?

இங்க எஸ்டேட்டுல வேலை செஞ்சுகிட்டிருக்கறவங்கதான், இந்த பொண்ணை ஒரு முறை எஸ்டேட்டு ஸ்கூல்ல வச்சு பார்த்தேன், அப்ப “ஏகப்பட்ட பிரைஸ்” எல்லாம் வாங்குனா, யார் பொண்ணுன்னு விசாரிக்கறப்பா நம்ம எஸ்டேட்டுல வேலை செய்யற மாரியம்மாள் பொண்ணுன்னு சொன்னாங்க, அவங்களை வர சொல்லி அவளை இங்கேயே வச்சு பாத்துக்கறேன்னு சொன்னப்ப அவங்க சரின்னு சொல்லி கொண்டு வந்து விட்டுட்டாங்க, வந்ததுல இருந்து என் கூடவே இருக்கறா, கிட்டத்தட்ட என் மக மாதிரி அவளை பார்த்துகிட்டிருந்தேன்.

அதனாலதான் அந்த பொண்ணு இறந்ததை “மேலிடத்து” வரைக்கும் கொண்டு போய் விசாரிக்க ஆரம்பிச்சீங்களா? அதுக்காக மட்டும் இல்லை. நான் பொதுவா இந்த பொண்ணு இறந்ததை “ஆக்சிடெண்டல் டெத்”ஆக நடந்திருந்தாலும், இந்த இறப்பு மேல சந்தேகப்பட்டு போலீஸ் கேஸ் கொடுக்க விரும்பலை. ஏன்னா வயசுப்பொண்ணு, அது மட்டுமில்லாம இத்தனை நாளா என் கூட இருக்கறா, அவளை பத்தியும், என்னை பத்தியும் பத்திரிக்கைகள் இஷ்டம் போல எழுத ஆரம்பிச்சுடும்.அதை விட முக்கியமான ஒண்ணு எனக்கு எதிரா ஏதோ ஒரு ‘சதி நடக்குது’ அப்படீங்கறது என் மனசுல பட்டுகிட்டே இருக்குது. அதுக்கேத்த மாதிரி திடீருன்னு இந்த பொண்ணு கால் தவறி பள்ளத்துல விழுந்து இறந்துட்டா அப்படீங்கறது எனக்கு சரியா படலை. அதுக்காகத்தான் தனிப்பட்ட முறையில உங்களை வரவழைச்சேன்.

அதனாலதான் டெல்லியில மினிஸ்ட்ரில் இருக்கற என் தம்பி பையன் மூலமா தனிப்பட்ட முறையில விசாரிக்க சொன்னேன். குறிப்பா உங்களை வர சொன்னேன். ஏற்கனவே எனக்கு ஒரு திருட்டு கேசை கண்டு பிடிச்சு கொடுத்திருக்கீங்க.

ரொம்ப நன்றி, நானும் போலீஸ் கேஸ், ஆய்வு, அப்படீங்கறதுக்கெல்லாம் ஓய்வு வாங்கிட்டு ஒரு இடத்துல உட்கார்ந்துட்டாலும் உங்களுக்காக தனிப்பட்ட முறையில இதை கண்டு பிடிச்சு தர முயற்சிக்கிறேன். இப்ப எனக்கு அந்த பொண்ணை பத்தின “டீடெயில்ஸ்” கிடைக்குமா? அவங்கப்பா அம்மாவை பார்க்கமுடியுமா?

இப்பவே வா?

நோ..நோ.. மணி இப்ப பதினொன்னு ஆகப்போகுது, நான் ஏழு மணியில இருந்து உங்களுக்காக வெயிட் பண்ணிகிட்டிருக்கன்,

மன்னிச்சுங்குங்க, நான் மதுரைக்கு போயிட்டு, அந்த பொண்ணை “பார்மாலிட்டீஸ்”எல்லாம் முடிச்சு, காரியம் எல்லாம் முடிச்சு திரும்ப வர்றதுக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு.

அதானாலென்ன் ! பரவாயில்லை இப்ப நான் கிளம்பறேன். நாளை காலையில உங்களை பாக்கறேன்.

இருங்க ‘டிரைவரை அழைக்க’ நம்ம அம்பாசிடரை எடுத்துட்டு போய் இவங்களை அந்த ஹோட்டல்ல இறக்கிவிட்டுட்டு, அப்படியே காரை அவங்க உபயோகபடுத்த கொடுத்துட்டு நீங்க இங்க வந்துடுங்க.

அவரை தொந்தரவு பண்ணாதீங்க, வேணா நானே வண்டியை எடுத்துட்டு போறேன், என் வேலை முடிஞ்ச பின்னால் இங்க வந்து கொடுத்துட்டு போறேன்.

நல்லது, உங்களுக்கு அந்த ஹோட்டல் ரூம் வசதியா இருக்கா? எல்லா வசதியும் செஞ்சு தர சொல்லியிருக்கேன், எத்தனை நாள் வேணா இருந்து கண்டு பிடிச்சு கொடுங்க, எனக்கு அந்த பொண்ணு இறந்துட்டது பெரிய அதிர்ச்சியா இருந்தாலும், அவ உண்மையிலேயே இயற்கையாத்தான் அந்த பள்ளத்துக்குள்ள விழுந்து இறந்தாளான்னு தெரிஞ்சாகனும்,

கண்டிப்பா சொல்லிவிட்டு விடை பெற்றேன்.

ஓட்டல் அறையில் ராசப்பன் எனக்காக காத்திருந்தான். ஐயா, உங்களை பாக்கறதுக்கு ஒரு பெரியவர் ரொம்ப நேரமா காத்துகிட்டிருந்தாரு. நீங்க வர்றதுக்கு லேட்டானதுனால நாளைக்கு வர்றேன்னுட்டு கிளம்பி போயிட்டாரு.

அவர் யாரு எந்த ஊரு அப்படீன்னு விசாரிச்சியா? என்னைய எப்படி அவருக்கு தெரியுமாமா?

கேட்டனே, அதுக்கு அவரு அதெல்லாம் ஐயாகிட்டே சொல்லிக்கறேன்னு சொல்லிட்டாரு

சரி வா தூங்க போகலாம், நான் கட்டிலில் படுத்த உடன் தூங்கி விட்டேன்..காலையில் ராசப்பன் எழுப்பினான், கண் விழித்த எனக்கு ஒரு நிமிடம் நாம் வீட்டிலிருக்கிறோமா? இல்லை எங்கிருக்கிருக்கிறோம் என்ற சந்தேகம் வந்து விட்டது.

மள மள வென காலை நேர வேலைகளை முடித்து விட்டு அந்த ஹோட்டலின் கீழ் தளத்துக்கு இருவரும் வந்தோம். இரவே அறிமுகமான ‘சர்வர்’ அங்கு வந்தான். என்ன வேணும் சார்? உங்களை ஸ்பெஷலா கவனிச்சுக்க சொல்லி எங்க மேனேஜ்மெண்ட் ஆர்டர் போட்டிருக்கு சார்.

ராசப்பனை அவனுக்கு வேண்டியதை கேட்டு சாப்பிடும்படி சொல்லி விட்டு இரண்டு இட்லி, ஒரு காப்பியுடன் உணவை முடித்துக்கொண்டேன்.

சாப்பிட்டு அறைக்கு வந்த பின் ராசப்பன் அடுத்து நான் என்ன செய்ய்போகிறேன் என்பது போல பார்த்தான். வா ஹோட்டல் வெளி வாசலில் உட்கார்ந்திருக்கலாம், ஒரு வேளை நேற்று என்னை பார்க்க வந்தவர் வரலாம், அவனையும் அழைத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முன் தளத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்.. ராசப்பன் நின்று கொண்டுதான் இருந்தான்.

ராசப்பா நேத்து வந்தவரு எத்தனை மணிக்கு என்னை பாக்க வர்றேன்னு சொன்னாரா?

இல்லை, காலையில வர்றேன்னு சொன்னாரு ! இதா வந்துட்டாரு ஹோட்டலின் முகப்பு சற்று தள்ளி இருக்க, அதன் வழியாக ஒருவர் ராசப்பனை நோக்கி வந்தார். அனிச்சையாக ராசப்பன் என்னை பார்த்து ஐயா இவருதான் நேத்து வந்தவரு.

அவர் என்னை நோக்கி கை எடுத்து கும்பிட்டார். நான் மெல்லிய தலையாட்டலுடன், வாங்க உட்காருங்க, என்னைய தேடி நேத்து வந்திருந்தீங்கலாம், நான் முக்கியமான விஷயமா வெளியே போயிருந்தேன்.

அது விஷயமாத்தான் உங்களை பாக்க வந்தேன். சிறிது தயங்கினார்.. அது விஷயமா? நான் வியப்பாய் விழித்தேன்.

ஐயா எல்லாம் எனக்கு தெரியும்ங்கய்யா, நான் இந்த எஸ்டேட்டு தோட்ட தொழிலாளர் யூனியன் தலைவர். அது போக நேத்து அந்தம்மா வீட்டுல உங்களை பார்த்தப்பவே எனக்கு டவுட்டுத்தான், உங்களை ‘டூட்டி டிரெஸ்ல’ மதுரையில அடிக்கடி பார்த்திருக்கேன்.

நான் மெல்லிய சிரிப்புடன் அடேயப்பா எவ்வளவு விவரமா இருக்கறீங்க, சரி வாங்க வெளியே நடந்து கிட்டே பேசுவோமே.

வேண்டாங்க, உலகத்துக்கு ஆயிரம் கண்ணு, காது மூக்கு, நான் உங்களோட இருக்கறத அலமேலு அம்மா பார்வைக்கு போச்சுன்னா, பாவம் அந்த பொண்னோட அப்பா அம்மா பாடு ரொம்ப கஷ்டமாயிடும்.

எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, என்ன சொல்றீங்க..இழுக்க சார் என் பேர் கன்னியப்பன்,

சொல்லுங்க என்ன சொல்ல வர்றீங்க? அந்தம்மா அந்த பொண்ணு மேல ரொம்ப பாசம் வச்சிருக்குது, அப்படீங்கறப்ப அவங்களுக்கு எப்படி தொந்தரவு பண்ணும் அப்படீங்கறதுதானே.!

நான் புன்சிரிப்புடன் ஒத்துக்கொண்டேன். ஐயா நான் அந்த பொண்ணு எப்படி செத்துச்சு, அப்படீங்கற விஷயத்துக்குள்ள எல்லாம் போகலை, அந்த பொண்ணு இறந்துச்சே, இதுவரைக்கும் பெத்தவங்களை கூப்பிட்டு அவங்களுக்கு இழப்பீடு கொடுக்க தோணுச்சா.

மெதுவா செய்யாலாமுன்னு யோசிச்சிருக்கலாமில்லை, எதுங்கய்யா மெதுவா, அந்த பொண்ணு இறந்து இன்னைக்கு மூணாவது நாள், பேச்சு மூச்சு காணோம்.

நான் என்ன பண்ணனும்னு நினைக்கறீங்க? நான் அந்தம்மாவோட நண்பனா வந்திருக்கேன். அவங்களுக்கு கெஸ்ட், அந்த பொண்ணு இறந்துட்டதுக்கு அவங்க வருத்தமா இருக்காங்க, அப்ப போயி அவங்க கிட்ட இழப்பீடு இதை பத்தி எல்லாம் நான் பேசக்கூடாது.

சார் மறுபடி சொல்றேன் எனக்கும் அதை பத்தியெல்லாம் பேச விருப்பமில்லை, அவங்களுக்கு உரிய இழப்பீடு கிடைச்சா போதும்.

சரி இதுவெல்லாம் எங்கிட்டே சொன்னா வேலை நடக்கும்னு யார் உங்களுக்கு சொன்னா?

சார், அந்த பொண்ணு இறந்த அடுத்த நாளே அந்தம்மா வீட்டுல நீங்க இருக்கறீங்க, இரண்டும் இரண்டும் நாலுன்னு எனக்கு தெரியாதா?

சரி கன்னியப்பன், இன்னும் இரண்டு மூணு நாள்ல கிளம்பிடுவேன், அதுக்குள்ள் முடிஞ்சா இதை பத்தி அவங்க கூட பேசறேன். கன்னியப்பன் விடை பெற்றார்.

அலமேலம்மாள் இதை இரகசியம் என்று சொல்கிறார்கள், ஆனால் இந்த ஆளே போதும் இதை பிரபலப்படுத்த மனதுக்குள் நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

பெரிய அலுவலகம் ! கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்கு மேல் காப்பி, ஏலக்காய், டீ இவைகளை பயிர் பண்ணி தூளாக்கி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு அலுவலகம். அங்கு கிட்ட்த்தட்ட ஐம்பது பேராவது இருப்பார்கள்.

நான் அலமேலு அம்மாளின் அறை வாசலின் செகரெட்டரி எதிரில் நின்றவனை “யெஸ்” என்று நிமிர்ந்த பெண்னை பார்த்தேன். சிவந்த நிறம், கொஞ்சம் அகலமான முகம், நேபாளியர்களை போன்று, கண்களில் எதோ ஒன்று மின்னியது. என் உற்றுப் பார்த்தலை சட்டென்று கத்தரிக்கும் வண்ணம் என்ன வேணும் ? குரலில் கொஞ்சம் எரிச்சல், தமிழ் தடுமாற்றம் தெரிந்தது. நான் என் பெயரை உள்ளே சொல்லும்படி கூறினேன். உடனே அழைப்பு வந்தது.

அந்த நாற்காலிக்குரிய கம்பீரத்துடன் அலமேலு அம்மாள் உட்கார்ந்திருந்தார்கள்.

சரி இப்பொழுது சொல்லுங்கள், அந்த பெண்ணை பற்றி !

என்னை பொறுத்தவரை அழகான சிறு பெண், துரு துருன்னு ஓடிகிட்டே இருப்பா. அடிக்கடி என்னை பார்க்க இங்க வந்துடுவா..இந்த ‘ரூமுக்குள்ளதான்’ உட்கார்ந்திருப்பா. சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல கார்ல ஏறாம நாங்க இரண்டு பேரும் அப்படியே பேசி சிரிச்சுகிட்டு மெல்ல நடப்போம். இங்கிருந்து கொஞ்ச தூரத்துல ஒரு குறுக்கு வழி இருக்கு, அது சரியான காட்டு வழி. இருட்டா இருந்தா மட்டும் அது வழியா போக மாட்டோம், மத்தபடி மெயின் ரோட்டுலயே கிட்டத்தட்ட நாலு கிலோ மீட்டர் நடந்து என் வீட்டுக்கு போவோம்.

முந்தா நாள் மதியம் திடீருன்னு எனக்கு மதுரைக்கு போக வேண்டிய அவசர ஜோலி, நான் போயிட்டேன். அங்க இராத்திரிதான் போன் வந்துச்சு. நாங்க போற குறுக்கு வழியில ஒரு பெரிய பள்ளம் இருக்கும் கீழே கல்லுக ஜாஸ்தி. இந்த பொண்ணு கீழே கிடக்கறதை தேயிலை பறிச்சுட்டு அந்த வழியா போன பொண்ணுங்கதான் பாத்து சொல்லியிருக்காங்க, எஸ்டேட்டு ஆளுங்க இறங்கி போய் எடுத்து வந்தாங்க. ஆள் போயிடுச்சுன்னு ஹாஸ்பிடல்ல சொல்லிட்டாங்களாம். நான் செய்தி கேட்டு உடனே இங்க வரும்போது…அந்தம்மாளின் கண்கள் கலங்கி…

எனக்கு கல்யாணமே வேண்டாமுன்னு இத்தனை வயசு வரைக்கும் இருந்துட்டேன். எனக்கு துணை வேணும்னுதான் இந்த பொண்ணை என் கூடவே வச்சுகிட்டேன். இவ வந்த பின்னாலதான் வாழ்க்கை எனக்கு ரொம்ப சுவாரசியமா போயிட்டு இருந்துச்சு. திடீருன்னு இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கலே. இவ என் கிட்டே வேலை செய்யறவங்க பொண்ணா இருந்தாலும் அவளை எனக்கு தெரிஞ்ச பையனுக்கு கட்டி கொடுத்து இரண்டு பேரையும் என் பக்கத்துலயே வச்சுக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். திடீருன்னு இப்படி ஆன உடனே என் தம்பி பையங்கிட்டே சொல்லி இது உண்மையிலேயே விபத்தா? இல்லை ..

சரி மேடம் உங்க அலுவலகத்துல மதியத்துக்கு மேல நான் விசாரணைய வச்சுக்கறேன். இப்ப உங்க ஆபிசுல இருந்து மெயின்ரோட்டு வழியா அந்த குறுக்கு வழி சொன்னீங்க இல்லையா அது வரைக்கும் போயிட்டு வர்றேன். விடை பெற்றேன்.

மெயின் ரோடு என்று சொன்னாலும் அந்த வழியில் வண்டிகள் அவ்வளவாய் போவதாய் தெரியவில்லை. நான் மெல்ல நடந்த பொழுது அவ்வப்பொழுது என்னை தாண்டியும் எதிரிலும் இருசக்கரம், பேருந்து இவைகள் கடந்து சென்றன. நான் யோசனையுடன் சுற்று முற்றும் பார்க்க இருபுறமும் புதர்களால் காணப்பட்டது. சற்று உள் வாங்கி பச்சை புல்களும் அடுத்து அடர்த்தியான மரங்களும் இருந்தது. உண்மையிலேயே இந்த இடம் அடர்ந்த காடுதான், இந்த பாதை காட்டை பிரித்து போடப்பட்டதாய் தெரிந்தது. ஆனால் நடந்து செல்வதற்கு இரம்யமாய் இருக்கிறது. சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் நடந்து சென்றவன் அலமேலு அம்மாள் சொன்ன குறுக்கு தடம் இடது புறத்தில் அவர்கள் சொன்ன அடையாளத்துடன் இருந்தது. அதற்குள் இடைமறித்த புதர்களை விலக்கி விட்டு நடக்க ஒத்தயடி பாதையாய் அடந்த காட்டுக்குள் செல்வது தெரிந்தது.

இந்த பாதையைத்தான் இங்குள்ளவர்கள் உபயோகப்படுத்தி கொள்வார்கள் போலிருக்கிறது, அதனால் பாதை ‘செம்மண் நிறத்தை’ காட்டிக்கொண்டிருந்தது. இருபுறமும் புதர்கள் அவ்வப்பொழுது என் இருபுஜங்களையும் உரசி காயப்படுத்திக் கொண்டிருந்தது. அலமேலும் அம்மாள் சொன்ன அந்த பெண் விழுந்த கிடந்த பள்ளம் கண்ணுக்கு தென்பட நின்று நிதானமாய் பார்த்தேன். நான் சென்ற பாதை ஒரு அரை வட்டமாய் இந்த பள்ளத்தாக்கை கடந்து செல்வது தெரிந்தது. அரைவட்டத்தில் இருபது முப்பதடி தூரம் பள்ளத்தாக்கு சரிவாய்த்தான் காணப்பட்டது. கண்டிப்பாய் இதில் விழுந்தால் உருண்டு தான் செல்ல முடியும், காயம் மட்டுமே ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதற்கடுத்த பகுதியாக நல்ல செங்குத்து பாறையை ஒட்டி பாதை சென்றது. பாதையின் மேலே ஐந்தடி ஆறடிக்கு மேல் மரங்களின் கிளைகள் அந்த பள்ளத்தாக்கை தாண்டி நீட்டிக்கொண்டிருந்தன. உயரமானவர்கள் கண்டிப்பாய் கொஞ்சம் குனிந்துதான் அந்த பாதையை கடக்க வேண்டும். உடல் வலிமை உள்ளவன் அந்த மரக்கிளையை பிடித்து தொங்கினாலும் தாங்கிக்கொள்ள முடியும். அப்படி வலுவாக இருந்தன கிளைகள்.மெல்ல அந்த மரக்கிளையை பிடித்து குனிந்து பார்த்தேன். நல்ல பள்ளமாய் இருந்த்து. கண்டிப்பாய் விழுந்தால் பிழைப்பதற்கு வாய்ப்பு குறைவுதான்.தரை பகுதி பாறையாகத்தான் கண்ணுக்கு தெரிந்தது.

விழுந்து கிடந்த பெண்ணை சரிவின் வழியாக இறங்கித்தான் எடுத்து வந்திருக்க வேண்டும். சற்று நேரம் அந்த பெண் எப்படி விழுந்திருக்க வாய்ப்புண்டு என்று சிந்தித்து பார்த்தேன். சட்டென ஒரு சல்சலப்பு திடுக்கிட்டு பார்க்க நான் பள்ளத்தின் ஓரத்தில் நின்றிருந்த பகுதியின் எதிரிலிருந்து ஒரு நரி எட்டிப்பார்த்த்து. ஒரு நிமிடம் திடுக்கிட்டு அப்படியே அந்த மரக்கிளையை பற்றியவன் அடுத்து என்ன செய்ய என்று யோசித்தேன். அதற்குள் யாரோ நடந்து வரும் ஓசை கேட்க அந்த நரி சட்டென தலையை உள்ளே நுழைத்து ஓடுவதை புதரின் சலசலப்பின் மூலம் உணர்ந்தேன். இப்பொழுது பேச்சின் சத்தம் நெருங்கி வர எஸ்டேட்டில் வேலை செய்யும் பெண்கள் போலிருக்கிறது சல்சலவென பேசிக்கொண்டு வந்தவர்கள் சட்டென அந்த இடத்தில் ஓரு ஆடவன் நிற்பதை பார்த்தவுடன் சற்று தயங்கி அப்படியே ஒதுங்கி என்னை கடந்தவர்கள் சற்று தூரம் சென்று என்னை நின்று உற்று பார்த்தார்கள்.

அதில் கொஞ்சம் வயதான் பெண் போல தென்பட்டவள் நீங்க யாரு? இங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்க? அவளின் கேள்விக்கு நான் மதுரையிலயிருந்து வந்திருக்கேன், அப்படியே இந்த ரோட்டுல நடந்து வரும்போது ‘இங்கன’ ஒரு பாதை போச்சு, அதுக்குள்ள நடந்து வந்து இந்த பள்ளம் வந்தவுடனே அதை எட்டி பார்த்த்து யோசனையாய் நின்னுட்டேன்.

பார்த்து நில்லுங்க, நான் சொல்வதை அவர்கள் நம்பாதது போல தென்பட்டாலும் மூணு நாளைக்கு முன்னால ஒரு காவு வேற வாங்கியிருக்கு ! சொன்னது என் காதில் விழ காவு அப்படீன்னா? ஒரு வயசுப்பொண்ணு விழுந்து மண்டை போட்டிருச்சு, அப்படியா அப்படி ஒண்ணும் இந்த இடத்துல விழுந்து உயிர் போற மாதிரியான இடமா தெரியலையே

அதுக்கென்ன செய்யறது, உயிர் போச்சே, அதுவும் ‘இளந்தாரிப்புள்ள’ அவங்க வெளியூரு பொண்ணுங்களா? இல்லெ எங்களோட வேலை செய்ய மாரிம்மா பொண்ணு, பாவம் அவ, அதைவிட எங்க முதலாளியம்மாதான் ரொம்ப பாவம்..இழுத்தாள்.

முதலாளி அம்மாவா? ஆமா இந்த எஸ்டேட்டுக்கு முதலாளி அம்மா, இந்த பொண்ணை தன் கூடவே வச்சு பார்த்துகிட்டாங்க, அவங்கதான் மனசு உடைஞ்சு போயிட்டாங்க. புலம்பிக்கொண்டே சென்று விட்டனர். திரும்ப நடக்க ஆரம்பித்தேன்.

மதியம் மேல் ‘அலமேலு அம்மாளின் உறவினன்’ என்ற பெயரில் அலுவலக ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டேன். அல்மேலு அம்மாளின் செகரெட்டரி மீனாகுமாரி. கண்களில் அவ்வளவு சிநேகத்தை காட்டவில்லை, என்றாலும் என்னுடன் வந்து அனைவரையும் அறிமுகப்படுத்தினாள் அவளை கண்டவுடன் அலுவலக ஊழியர்களின் பயத்தை கண்களில் கண்டேன்.

இவர் கணேத்குமார், அக்கவுண்டண்ட், இவங்க சுஜாதா கேசியர், அடுத்து அடுத்து…ஒவ்வொரு அறிமுகபடுத்துதலுக்கு ஒரு கை குலுக்கல்…மேனேஜர் லீவுல இருக்கறாரு, நாளைக்கு வந்துடுவாரு அவரை பாக்கறீங்களா?

பரவாயில்லை, நாளைக்கு பார்த்துக்கறேன். அங்கிருந்து கிளம்பினேன். நான் போன பின்னால் கண்டிப்பாய் அங்கு ஒரு ‘மீட்டிங்’ நடக்கும் என்பது புரிந்தது.

யாரு இவரு? இதுவரைக்கும் பாத்த்தே இல்லை, இவங்க முதலாளிக்கு என்னவாகனும்? இனிமேல் இவர்தான் எஸ்டேட்டை பார்த்துக்குவாரா? இவைகள் கண்டிப்பாய் அலசப்படும்.

போலீஸ் ஸ்டேஷன் இனஸ்பெக்டரிடம் பேசிகொண்டிருந்தேன். ரொம்ப நல்ல பொண்ணுதான் சார், கொஞ்சம் சுட்டித்தனம் மட்டும் வேற ஒண்ணுமில்லை, நானே இரண்டு மூணு முறை பார்த்திருக்கேன், சுவாரசியமாய் சொன்னவரிடம், வேற காதல் அது இதுன்னு..இழுக்க சே சே அப்படி ஒண்ணும் தெரியலை. அந்தம்மா கூடவே இருக்கறதுனால அப்படி இருக்கற வாய்ப்பு ஒண்ணுமில்லை.அவங்க மகளா அப்படீன்னு கூட நிறைய பேர் கேட்டிருக்காங்க. போஸ்ட் மார்ட்டம் என்ன சொல்லுது? பெரிசா காயம் ஒண்ணும் தெரியலை, முன் தலை எங்கோ போய் நச்சுன்னு மோதியிருக்கணும், அப்பவே உயிர் போயிடுச்சுன்னு நினைக்கிறேன். இரண்டு மூணு மணி நேரம் யாரும் கவனிக்காம விட்டிருக்காங்க, இரத்தம் போயிருக்கவும் வாய்ப்பு இருக்கு. மத்தபடி வேற உடம்பு ரீதியா தெரியலை..சொல்லிக்கொண்டே போனார்.

அவரிடமிருந்து விடை பெற்று ஹோட்டலை அடைந்தேன். ராசப்பன் சலித்துக் கொண்டான், ஐயா என்னை தனியா விட்டுட்டு போயிடறீங்க, சும்மா உட்கார்ந்திருக்கறதுக்கு என்னமோ மாதிரியிருக்கு.

ஏய் உண்மையை சொல்லு, இங்க எத்தனை டூரிஸ்ட்டுகள் வந்துட்டு போயிட்டு இருக்காங்க, உட்கார்ந்து இரசிச்சு பார்த்துட்டு நான் வந்த உடனே அப்படி சொல்லறே, செல்லமாய் கிண்டல் அடித்தவன் சரி வா நாம் வேணா ஒரு ரவுண்ட்ஸ் போலாம்.

அவனுடன் அந்த மாலையுமிருளும் கலந்த நேரத்தில் அப்படியே அந்த ஹோட்டலை சுற்றி நடக்க ஆரம்பித்தோம். ராசப்பன் ஏதோ பேசிக்கொண்டே வந்தான் என் சிந்தனைகள் அந்த பெண்ணை பற்றியே இருந்தது.

அந்த பெண் அந்த நேரத்தில் அங்கு எப்படி போனாள்?

இரண்டு அடிக்கடி நடக்கும் பாதை என்பதால் கண்டிப்பாய் தவறி விழுவதற்கு வாய்ப்பு குறைவு.

மூன்று அவளின் தலை எந்த இடத்தில் மோதியது என்பது தெரியவில்லை.

அந்த பெண்ணின் மரணம் அலமேலு அம்மாளை பாதித்த அளவில் மற்றவர்களை பாதித்தாக தெரியவில்லை.. ஒரு வேளை அவள் எஸ்டேட் தொழிலாளி பெண் என்பதால் கூட இருக்கலாம், மனசுக்குள் சமாதானம் செய்து கொண்டேன்.

இவள் மரணம் காரணமாய் அலமேலும் அம்மாளின் மனதுக்குள் வந்துவிட்ட பயம் உண்மைதானா?

ஹோட்டலை அடையும்போது எனக்காக ஒரு வாலிபன் காத்திருந்தான். என் பெயர் வசந்த், நான் அலமேலு அம்மாவிடம் மேனேஜரா இருக்கேன், நான் ஒரு வாரமா லீவுல இருந்தேன். இப்பத்தான் வந்தேன். ஆபிஸ் பக்கமா போனேன், நீங்க வந்திருக்கறதா சொன்னாங்க, சாரி இதுவரைக்கும் உங்களை பார்த்ததில்லை. கை குலுக்கினான். கையில் வலிமை தெரிந்தது. தினமும் உடற்பயிற்சி செய்பவனாய் இருக்க வேண்டும்.

அதுக்காக இவ்வளவு தூரம் வரணுமா? நான் அவங்களுக்கு உறவு, கொஞ்ச நாள் அவங்க கூட இருக்க சொன்னாங்க, கூட இருந்த பொண்ணு இறந்துடுச்சாமே, அதனால மனசு கஷ்டமாய் இருக்கு, கூட வந்திருன்னாங்க. அதுனால முதல்ல உங்க எல்லார் அறிமுகம் வேணுமின்னு வந்தேன்.அவ்வளவுதான்.

ஓ!..அவன் குரலில் மெல்லிய சோர்வு தென்பட்டதாய் எனக்கு தெரிந்தது. நீங்க இவ்வளவு நாள் எங்கிருந்தீங்க? இப்படி ஒரு உறவு இருக்கறதா மேடம் என் கிட்டே சொன்னதே இல்லையே ?

நான் சிரித்து அது இரகசியம், !

அவன் சற்று சோர்ந்து போனது அப்பட்டமாய் தெரிந்தது. அப்புறம் அந்த பொண்ணு மல்லிகாவை பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

சார் அது நல்ல பொண்ணு, கொஞ்சம் சுட்டித்தனம், வேண்டாத பிரச்சினையிலெல்லாம் தலையிட்டுக்கும், மற்றபடி குறை சொல்ல முடியாது.

வேண்டாத பிரச்சினையின்னா?

அப்படீன்னா…சற்று தய்ங்கினவன்..இப்ப ஆபிசுல எங்க வேலையில அது வந்து தனக்கு தெரிஞ்சமாதிரி அட்வைஸ் எல்லாம் சொல்லும்.

நீங்க மேடம் கிட்டே சொல்ல வேண்டியதுதானே !

எங்க சார் ! அவங்களுக்கு அந்த பொண்ணு சொன்னா வேத வாக்கு ! சலித்துக்கொண்டான்.

மறு நாள் காலை சுமார் ஏழு மணிக்கெல்லாம் எழுந்து அலமேலு அம்மாளின் வீட்டுக்கு சென்றவன், அவர்கள் அங்கில்லை என்றவுடன் அலுவலகத்துக்கு விரைந்தேன்

சட்டென கதவை திறந்தவன் ஒரு கணம் தயங்கினேன். மானேஜர் செகரெட்டரியுடன் பார்க்க கூடாத நிலையில் உட்கார்ந்து ஏதோ இரகசியம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சாரி உங்க வேலையில ஏதாவது தொந்தரவு பண்ணிட்டேனா? மேடம் இருக்காங்களான்னு பார்க்க வந்தேன்.

இல்லை..இல்லை..இருவரும் சற்று நெளிந்து விலகி உட்கார்ந்தார்கள். வசந்த சுதாரித்தவன் சார் வாங்க உட்காருங்க..மேடம் இன்னும் இங்க வரலை.

ஓகே நீங்க பேசிக்கிட்டிருங்க, நான் கண்டு கொள்ளாததை போல வெளியே வந்து காரை எடுத்து கிளம்பவும், அலமேலு அம்மாளின் கார் உள்ளே வரவும் சரியாக இருக்க நான் அப்படியே காரை நிறுத்தி விட்டு இறங்கினேன்.

அலமேலு அம்மாளின் கார் எப்பொழுதும் நிற்கும் இடத்தில் நின்றது. அவர்கள் இறங்கி என்னிடம் வந்தார்கள். வீட்டுக்கு போனேன், என்னைய தேடி வந்ததா சொன்னாங்க, சரி ஆபிஸ்தான் போயிருப்பீங்க அப்படீன்னு கிளம்பி வந்துட்டேன்.

இருவரும் பேசிக்கொண்டே அலுவலக வாசலுக்கு வர வசந்த முன்னே வந்து “குட் மார்னிங்” மேடம் என்றான். ஓ லீவு முடிஞ்சு வந்து ஜாயின் பண்ணியாச்சா ?

யெஸ் மேடம், அதனாலதான் நேரத்துலயே வந்துட்டேன், வந்து என்ன என்ன வேலை எல்லாம் “பெண்டிங்க்”ல இருக்கு அப்படீன்னு பேசிகிட்டிருந்தேன், அதுக்குள்ள சார் வந்திட்டாரு..வலுகட்டாயமாய் நாங்கள் சும்மா பேசிக்கொண்டிருந்தோம் என்று எனக்கு தெரியவேண்டும் என்று தெரிவித்தான்.

இப்பொழுது இருவரும் அலமேலு அம்மாளின் அறையில்!

சொல்லுங்க என்ன விஷயமா என்னை அவசரமா பாக்க வந்தீங்க?

நான் சுற்று முற்றும் பார்த்தவன் சட்டென எழுந்து வேகமாக அந்த அறைக்கதவை திறந்தேன். சட்டென தடுமாறிய செகரெட்டரி..சாரி..சாரி..மேடம் கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு..

நான் சிரித்து ஓ,கே..ஓகே..எனக்கு ஏ.சி குளிர் ஒத்துக்கலை, அதுதான், சிரித்துக்கொண்டே உள்ளே வந்தேன். எதுவும் புரியாமல் என் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்தார் அலமேலு அம்மாள்.

ஒண்ணுமில்லை…அந்த பொண்ணு மல்லிகா கடைசியில அதாவது சாகறதுக்கு முன்னாடி எப்படி நடந்து கிட்டா?

ஏன் நல்லாத்தான் நடந்துகிட்டா? ஆனா..ஆனா..கொஞ்சம் யோசிப்பவர் போல் ஆமா ஏதோ சொல்ல வருவா..அப்படியே அமுங்கிடுவா..ஒண்ணுமில்லை அப்படீன்னு அவளே சொல்லிக்குவா…

இது எத்தனை நாளா? இந்த மாதிரி ஒரு மாசத்துக்கு மேல இருக்கலாம், நாங்க தனியா இருக்கும்போது கூட இரண்டு மூணு முறை இப்படி நடந்து கிட்டது இப்ப எனக்கு ஞாபகம் வருது. ஏன் ஏதாவது தெரியுதா? அலமேலு அம்மாளின் குரலில் பதட்டம்.. சே சே..அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீங்க தைரியமா இருங்க..இப்ப எனக்கு உங்களால ஒரு உதவி ! இழுத்தேன். சொல்லுங்க..நாம அந்த மல்லிகா பொண்ணோட வீடு வரைக்கும் போகலாம், அங்க நீங்க அவங்களுக்கு கொஞ்சம் பண உதவி பண்ணவேண்டியிருக்கும்.

தாராளமா, வாங்க போலாம், மேனேஜரை கூப்பிட்டுக்கலாமா? பளீஸ் வேண்டாம், நீங்க தனிப்பட்டு உதவினாத்தான் நல்லா இருக்கும். அப்படியா இருங்க, தன் கைப்பையை பார்த்தார். “செக்புக்கை” எடுத்தவர் சரி வாங்க போகலாம், சே..இதுவரைக்கும் எனக்கு இது கூட தோனாம போச்சு பாத்துக்குங்க..இருவரும் கார் நோக்கி விரைந்தோம். நாங்கள் போவதை செகரெட்டரியும், மேனேஜரும் பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு காரின் கண்ணாடி வழியாக தெரிந்தது.

அந்த எஸ்டேட் குடியிருப்பே அலமேலு அம்மாளை சூழ்ந்து கொண்டது. மல்லிகாவின் பெற்றோர் முதலாளியம்மாளை எதிர்பார்க்கவில்லை, பார்த்தவுடன் அவர்கள் அழுத அழுகை, கூடியிருப்பவர்களுக்கு மனது கஷ்டமாக இருந்தது. நான் கண்களை சுழற்றினேன். அந்த பெரியவர் வேக வேகமாய் அங்கு வந்தவர் அலமேலு அம்மாளுக்கு ஒரு பெரிய கும்பிடாய் வைத்தார். எவ்வளவு தொகை கொடுக்கலாம் என்று என்னிடம் அவர்கள் கேட்க நான் நீங்கள் நினைத்த தொகை கொடுங்கள், ஒரு நிமிடம் என்று “கன்னியப்பண்னே” பக்கத்தில் அழைத்து இவர்கிட்ட கொடுத்து அவங்க கணக்குல போட்டு விட சொல்லுங்க, செக்கை வாங்கிய பெரியவர் அவர்களுக்கு பணம் கொடுத்ததை விட முதலாளி முன்பு தன்னை “கெளரவப்படுத்தியதற்கு” கண்களால் நன்றி தெரிவித்தார்.

அன்று மாலை எதிர்பாராத இரண்டு விருந்தாளிகள் ! முதலில் வசந்த். சார் நானும் மீனா குமாரியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம், கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க போறோம், அந்த உரிமையிலதான் ..குழைந்தான், நான் சார் அது உங்க சொந்த விஷயம், அதை ஏன் எங்கிட்ட சொல்றீங்க? இல்லை நீங்க காலையில ஆபிசுக்குள்ள வரும்போது..இழுக்க நான் சிரித்து அப்பவே அதை மறந்துட்டேன், நீங்கதான் ஞாபகப்படுத்தறீங்க ! அவன் சாரி சார் அப்புறம் வேற ஏதாவது விசேஷமா சார், அந்த பொண்ணு மல்லிகா வீட்டுக்கு போய் மேடம் பணம் கொடுத்துட்டு வந்ததா கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம் சார், நீங்க வந்த பின்னாடி இப்படி எல்லாம் நடக்குது, என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம், குறை பட்டுக்கொண்டான்.

கூட்டிட்டு போயிருக்கலாம், ஆனா அவங்க மேடத்தை தனிப்பட்ட முறையில சந்திக்கறதுதான் மரியாதை, அப்படீன்னு பார்த்தாங்க. உங்களை மட்டும்? இது அவன் பார்வையில் தெரிந்த கேள்வி !

உங்க செல் நம்பர் கொடுங்களேன், நாளைக்கு உங்களை கூட்டிட்டு கொடைக்கானலை சுத்தி பார்க்கனும்? சார் இந்தாங்க சார் என் செல் நம்பர்..கட கடவென ஒப்பிக்க நான் குறித்துக்கொண்டேன். சரி சார் விடை பெற்று சற்று தூரம் போனவனிடம்,

“வசந்த்” மீனா குமாரியை முதல்ல டைவர்ஸ் வாங்க சொல்லுங்க, அப்பத்தான் சட்ட சிக்கல் வராம இருக்கும்..சிரித்துக்கொண்டே சொன்னவனை ‘விழித்து‘விழித்து’ பார்த்து விட்டு சென்றான்.

அடுத்து வந்த பெரியவர் என்னிடம் நன்றி தெரிவித்தவர், சார் என்னடா நான் இப்படி சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க..இப்பவெல்லாம்…அவர் சொன்ன விஷயங்கள் எனக்கு உபயோகமாய் இருந்தது.

இரவு உறங்கப்போகுமுன், “கணக்கு வழக்கு புலனாய்வு பிரிவு” நண்பன் செல்வக்குமாருக்கு வசந்தின் செல் நம்பரை கொடுத்தேன். நாளை மதியத்துக்குள் எல்லா விவரங்களையும் தருவதாக சொன்னான். அப்படியே அவனின் தொடர்பு எண்களையும் விசாரிக்க சொன்னேன்.

இரண்டு நாட்கள் முழுவதுமாய் ஓடியிருந்தது. மாலை ஆறு மணி அளவில் நானும் அலமேலு அம்மாள் மட்டும் வீட்டுக்குள் அவர்கள் அறையில் உட்கார்ந்திருந்தோம்.

நான் சொன்ன அனைத்தையும் அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

1. மல்லிகா கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

2. அவள் செய்த தவறு ஒரு மாதத்திற்கு முன் வசந்தையும், மீனா குமாரியையும் அலுவலகத்தில் தவறான உறவில் பார்த்து விட்டது.

3. அதற்கு முன்னரே அவளுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து அலமேலு அம்மாளுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டிருந்தாள்

4. இதை எல்லாம் சொல்லிவிட்டால் நம்மிடம் சாட்சியங்கள் இல்லை, அது போக சிறு பெண் என்று விஷயங்களை ஒதுக்கி விடலாம்.

5. அன்று நீங்கள் இல்லாத நாள் மல்லிகாவை மீனா குமாரி இங்கு வரவழைத்து மல்லிகாவை மிரட்டியிருக்கிறாள், அந்தம்மா கிட்டே ஏதாவது சொன்னே ? அதை கண்டு பயந்து வீட்டுக்கு ஓடியவள் பதட்டத்தில் எப்படியும் குறுக்கு பாதை வழியாகத்தான் வருவாள் என்று எதிர்பார்த்து அந்த பள்ளத்தின் எதிர்புறம் புதரில் வசந்த் ஒளிந்திருக்கிறான்.

6. அவள் சரியாக அந்த இடம் வர புதரில் இருந்து திடீரென்று வெளிப்பட்ட வசந்த் அவளை தள்ளியிருக்கிறான். அவள் புத்திசாலித்தனமாய் மரக்கிளையை பிடித்து தொங்க, கட்டையை எடுத்து அவள் முன் மண்டையில் அடித்திருக்கிறான். அவள் கையை விட்டு அப்படியே கீழே விழுந்தாள். (நான் நின்று கொண்டிருந்த இட்த்திலே திடீரென நரி எதிரில் வர நான் பதட்டப்பட்டதையும் சொன்னேன்) அதே இடத்தில் புதரில் இருந்து அவன் வெளியே வந்திருக்க வேண்டும்.

7. அப்படி விழுபவள் கண்டிப்பாய் உடல் குப்பற திரும்ப வாய்ப்பில்லாமல் மல்லாந்துதான் தட்டென்று தரையில் விழ பின் மண்டைதான் அடிபட்டிருக்க வேண்டும், ஆனால் முன் மண்டை அடிபட்டது இவனால் தாக்கப்பட்டதால்தான்

8. நான் இதுவரை இந்த அலுவலகத்திலிருந்து வசந்தின் கணக்கிற்கு போன தொகையும், அவன் போட்டிருந்த முதலீடு விவரங்களையும், மீனா குமாரியின் சொத்து மள மளவென உயர்ந்த கணக்கையும் (நண்பன் செல்வக்குமார் உபயம்) அவர்களிடம் காட்டினேன். அது மட்டுமல்ல விபத்தை உருவாக்கி உங்களுக்கும் ஒரு ஆபத்தை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்குள் முடிந்தவரை உங்கள் வருமானத்தை அபகரிக்க இருவரும் வேலை செய்திருக்கிறார்கள்.

எல்லாம் சொல்லி முடித்தவன் மேடம் தனிப்பட்ட முறையில் என்னை அழைத்ததால் முடிந்தவரை கண்டு பிடித்த விவரங்களை கொடுத்து விட்டேன். இனி முடிவு எடுப்பது உங்கள் கையில் எனக்கு நீங்கள் கொடுத்த பணி முடிந்து விட்டது. நீங்கள் இனி காவல்துறை நடவடிக்கைக்கு கொண்டு செல்வீர்களா என்பது உங்களை பொருத்தது.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே சட்டென ‘என் கவனம் திரும்ப’ மூக்கில் மெல்லிய வாசனையை உணர்ந்தேன். சட்டென அலமேலு அம்மாளை அப்படியே இழுத்து அவர்கள் கழிவறையை நோக்கி ஓடினேன். “கடவுளே அங்கு ஜன்னல் இருக்கவேண்டும் வேண்டிக்கொண்டே ஓடினேன்

நல்ல வேலை கண்ணாடி இழைகளால் மடங்கி விரியும் வகையில் ஜன்னல் அமைக்கப்பட்டிருந்தது. அலமேலு அம்மாள் திகைத்து விதிர்த்து என்னை பார்க்க நான் உஷ்.. கையை வாயில் வைத்து காண்பித்து விட்டு “பேசின்” மேல் ஏறி நின்றவன் உயரம் காணாமல் பக்கத்தில் இருந்த பாத் டப்பை திருப்பி போட்டு மிகுந்த சிரமத்துடன் ஏறி நின்று கொண்டு ஒவ்வொரு கண்ணாடியாய் கழட்டி இறக்கி வைத்தேன். அது சளங்க்..சளங்க்..என்ற சத்த்த்துடன் விழுந்தது.

பெரிய போராட்டமில்லாமால் அந்த ஜன்னல் வழியாக முதலில் என் கால்களை நுழைத்து வெளிப்புறமாய் “கால் எங்காவது வைக்கமுடியுமா” என்று அங்கும் இங்கும் சுழற்றி நல்ல வேலை குழாய் இணைப்பு பகுதி தட்டுப்பட அதில் காலை வைத்தவன் உடலை மெதுவாக திருப்பி அலமேலு அம்மாளுக்கு கை கொடுத்து மேலே ஏற்றி விட்டேன்..

பெரிய உயரம் இல்லை என்றாலும் இருவரும் கீழே குதித்ததில் என்னால் எழ முடிந்தது, அவர்களால் முடியவில்லை. அப்படியே இருக்க சொல்லிவிட்டு நான் மறைந்து முன் புறமாக நகர்ந்து சென்றேன். எப்படி இதை உணராமல் போனேன்? இப்படி ஒரு ஆபத்து வருமென்று. என்னையே நொந்தவன், மெல்ல எட்டி பார்க்க முன்புறம் குபு குபுவென்று புகை வந்து கொண்டிருக்க ஆட்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தேன். மீண்டும் திரும்பி வந்து பார்த்த பொழுது எப்படியோ கஷ்டப்பட்டு எழுந்து நின்று கொண்டிருந்த அலமேலு அம்மாளை மெல்ல தாங்கி பிடித்து பின்புறமாய் இருந்த பாதையில் அழைத்து சென்றேன்.

என் அறைக்கு அலமேலு அம்மாளுடன் வந்த்தை பார்த்த ராசப்பனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மூவரும் இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பொழுது..அவர்கள் முகம் முழுவதும் வருத்தத்துடன் இந்த உலகத்தில் ஒரு வயதான் பெண் எவ்வளவு வசதியாய் இருந்தாலும் தனித்து வாழமுடிவதில்லை பார்த்தாயா? நான் புன்சிரிப்புடன் வாழவிடுவதில்லை, அவ்வளவுதான், சொன்னவன், சரி விடுங்க மேடம், உங்க வீட்டை காப்பாத்திட்டாங்க, உங்க ரூமுக்குள்ள எல்லாமே எறிஞ்சு போயிடுச்சாம். நாமளும் அங்கிருந்தா சேர்த்துத்தான். மத்தபடி உங்க எஸ்டேட் ஆளுங்க வீட்டை ரெடி பண்ணிகிட்டு இருக்காங்க. இரண்டு நாள்ல உங்களை அங்க பத்திரமா கொண்டு போய் விட்டுடறேன்.

இரண்டு நாட்கள் வெளி ஆளாய் காவல் நிலையத்தில் “வசந்த” “மீனாகுமாரி” இவர்கள் விசாரிக்கப்பட உண்மைகள் வெளி வந்தன.. .

ஒரு வாரம் ஓடியிருந்தது, அலமேலு அம்மாளின் தம்பி மகன் என்னிடம் கை குலுக்கினார் ரொம்ப தேங்க்ஸ் தென்னரசு, உங்க உதவிக்கு.

நான் மென்மையாய் சார் இனிமேல்தான் மேடத்தை பத்திரமாய் பார்த்துக்கணும், சொன்னவனிடம் எஸ் எனக்கு புரியுது, எங்கப்பாவையும் அம்மாவையும் இங்க வர சொல்லிட்டேன், அவங்க இனி இவங்க கூடத்தான் இருக்கப் போறாங்க.. நானும் தமிழ்நாட்டுக்கு மாத்திட்டு வந்துடலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். இங்க வந்துட்டா அடிக்கடி இவங்களை வந்து பாத்துக்கறது சுலபமா இருக்கும்.

வீட்டிற்கு வந்த பொழுது வீட்டை சுற்றி போட்டிருந்த தோட்டம் என்னை பதினைந்து நாட்களாய் காணாமல் சோர்ந்து போயிருப்பதாக எனக்கு தோன்றியது. பக்கத்தில் வந்த என் மனைவி அந்த கத்தரிக்காய் திருட்டு நீங்க போன பதினைஞ்சு நாள்ல ஒரு நாள்ல கூட நடக்கலை, உங்க சின்னம்மா கிழவி கூட முந்தானையை விசிறிட்டுத்தான் போனா இழுத்துக்கொண்டே சொன்னாலும் குரலில் இருந்த கேலியை கண்டு பதில் சொல்லாமல் நெளிந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *