என்னை நானே அறியாமல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 26,106 
 
 

நல்ல இருள்…வேகம்…வேகம், என் இரு சக்கர வாகனத்தின் வேகம் என்னை அந்தரத்தில் பறக்கவைப்பது போல் இருந்தது.தலைக்கவசமும் போடாமல் இருந்ததால் தலைமுடிகள் தறி கெட்டு பறந்தது, அப்படியே ஒரு கையால் தலையை அந்த வேகத்திலேயே அழுத்தி விட்டாலும் காற்றை எதிர்த்து எழுந்து பேயாட்டம் ஆடின. சுகமான சந்தோசமாய் இருந்தது.

பாதை இருளாய் இருந்தாலும் வண்டிகளின் முன் வெளிச்சங்கள் அந்த பாதை முழுவதும் தொடர் மின்னலாய் மின்னிக்கொண்டே இருந்தன. நேரம் எவ்வளவு இருக்கும்? தெரியவில்லை, பனிரெண்டுக்கு மேல் இருக்கலாம். இன்னும் அரை மணி நேரத்துக்குள் இதே வேகத்தில் போனால் கோயமுத்தூருக்குள் நுழைந்து விடலாம்.

இன்னும் வேகத்தை அதிகப்படுத்தி பார்க்கலாம். அந்த இருளில் அவ்வளவு வண்டிகள் போய்க்கொண்டிருக்கவில்லை. எதிரில் என்னைப்போல் வேகமெடுத்து நான்கைந்து வண்டிகள் பறந்து கொண்டிருந்தன.

என் வண்டியின் வெளிச்சத்தில் அந்த கரும் பாதையும் அதன் மேல் போடப்பட்டிருந்த வெள்ளை கோடுகளும் வண்டியின் பாதையை காண்பித்து கொண்டிருப்பது போல் தோன்றியது.ஹெட் லைட் வெளிச்சத்தை குறைத்து அதிகப்படுத்தினேன். இப்பொழுது பாதை வெளிச்சமாய் இருப்பதாய் பட்டது.

வேகம் நூறை தொட்டிருந்தேன். மனதுக்குள் திகில் கலந்த சந்தோசம் பரவியது. சிலு சிலுவென குளிர்ந்த காற்று என் காதை ஒட்டி கிச்சு கிச்சு மூட்டி சென்றது.வாயில் இருந்து மெல்லிய பாட்டு தானாய் கிளம்பியது.

வண்டியின் வேகத்தில் பாதையை நோக்கி சென்றவனுக்கு சற்று தூரத்தில் ஏதோ நிழல் போன்ற உருவம் பாதையை கடப்பதற்கு முயற்சிப்பது போல் நின்றது தெரிந்தது. வண்டியின் வேகத்தை சற்று குறைத்து அவனை முன்னேற விட்டு பின் வழியாக வண்டியை செலுத்தி விடலாம் முடிவு செய்தவன் வேகத்தை எண்பதுக்கு குறைத்தேன்.

விறு விறுவென பாதை கடந்து சென்றவன் என்ன நினைத்தானோ சட்டென வந்த பாதையிலேயே மீண்டும் திரும்ப என்னுடைய கணிப்பு கணப்பொழுதில் தவறி விட்டது. வண்டியின் வேகத்தை சடாரென குறைக்க முயற்சி செய்தும் வண்டி என்னை அறியாமல் அவனை நோக்கி இழுத்து செல்வது எனக்கு புரிந்தும் என்னால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது.

டமார்…சர்…சர்ர்…வண்டி தீப்பொறி பறக்க இழுத்துக்கொண்டு செல்வதும் வலது ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி அருகில் இருந்த பெரிய மண் குழியில் விழுவதும் தெரிந்தது. அப்படியே துள்ளி விழுந்தவன் ஐந்து நிமிடத்தில் எழுந்து பார்த்தேன். நடு ரோட்டில் நான் அடித்த உடல் துடித்து அடங்குவது தெரிந்தது.

ஐயோ ஆள் முடிந்ததா? என்ன செய்வது? உடனே இந்த இடத்தை விட்டு கிளம்புவது புத்திசாலித்தனம் என்று புரிந்தது. வண்டியை எடுக்கவும் முடியாது.. வண்டி அந்த பள்ளத்தில் கிடந்தது. இருளில் எதுவும் தெரியவில்லை.ஓடி ஓளிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

அந்த வலியிலும் தடுமாறி ஓடி ஒரு மரத்தின் பின்புறம் ஒளிந்து கொண்டு விழுந்தவனின் நிலையை அங்கிருந்தே பார்த்துக்கொண்டிருந்தேன்.

இப்பொழுது அவனின் துடிப்பு அடங்கியிருந்தது. ஓரிரு வண்டிகள் அப்படியே ஒதுங்குவது தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வண்டிகள் அந்த இடத்தில் நிறைய ஆக்ரமித்தது. ஆட்கள் கச முசவென பேசிக்கொள்வது இங்கிருந்து பார்க்கும்போது தெரிந்தது.

பதினைந்து நிமிட்த்தில் அங்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது தெரிந்தது, பார்த்துக்கொண்டிருந்தேன். அவனை ஸ்டெர்ச்சரில் ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் விரைந்தது.

சே பாவம் அநியாயமாய் ஒரு உயிரை பறித்து விட்டேன். இங்கு பக்கத்தில் வசிப்பவனாகத்தான் இருக்க வேண்டும்.என் தவறு என்று எப்படி சொல்வது? இவன் பாதையை கடந்திருந்தான் என்றால் நானும் போயிருப்பேன், திடீரென்று திரும்புவான் என்று யார் கண்டது?

மனது கேட்கவில்லை. சரி பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குத்தான் கொண்டு போயிருக்கவேண்டும். போய் பார்ப்போம்.

அந்த ஆம்புலன்ஸ் போன பதையில் போக ஆரம்பித்தேன். எனக்கு சுத்தமாக வலியில்லை. கீழே விழுந்த உணர்வு கூட இல்லை. மனம் மட்டும் அடிபட்ட அவனையே நினைத்து மருத்துவமனையை தேடி போனேன்.

ஆ..அதோ..அந்த ஆம்புலன்ஸ்தான் அவனை எடுத்து வந்தது. அங்கு நான்கைந்து ஆட்கள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.திடீரென தலைவிரிகோலமாய் நான்கைந்து பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு வந்தனர்.

ஒதுங்கி நின்று என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரத்தில் அங்கு கூட்டம் அதிகமாக ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அழுகையின் சத்தம் அதிகமாகிவிட்டது.

மருத்துவமனையில் இருந்து உடல் ஒன்று வெளியே கொண்டு வருவது தெரிந்தது. இறந்து விட்டான் போலிருக்கிறது. இப்பொழுது அந்த உடம்பை சுற்றி அழுகை அதிகமாக ஆரம்பித்து விட்டது.

அநியாயமாய் ஒரு உயிரை பறித்து விட்டேன். அழுகை பொத்துக்கொண்டு வந்தது. யாரோ தொடுவது போல் உணர்ந்து திரும்பி பார்த்தேன்.

அடிபட்டு விழுந்து கிடந்தவன் முழு உருவமாய் நின்று கொண்டிருந்தான். ஏன் இங்கு அழுது கொண்டிருக்கிறாய். அங்கு குழியில் இருந்து உன்னுடைய உடம்பையும், வண்டியையும் கண்டு பிடித்து வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அங்கு போய் உன் வீட்டில் உள்ளவர்களை பார்த்து விட்டு வா… சொல்லிவிட்டு அப்படியே பறந்தது.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *