இன்றே கடைசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 7,438 
 
 

டிரைவ் – இன் ஹோட்டலில் கார்கள் ஒழுங்கில்லாமல் அணி வகுத்திருந்தன. காருக்குள் குடும்பமே ஐக்யமாகியிருக்க. வெயிட்டர்கள் பணிவோடு அவர்களிடம் ஆர்டர் எடுததுக கொண்டிருந்தனர்.

புல்வெளியில் டேபிள்கதள் நிரம்பியிருந்தன. ஹோட்டலைச் சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்தன. அந்தப் பகுதி முழுக்க மெல்லிய இருட்டு.

கார்டனில் அங்கங்கே ராட்சஷ டிவிகள்! அவற்றில் வெள்ளைக்காரிகள் ஜட்டி பிராவோடு பீச்சில் ஓடிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் ஊஞ்சலாடின சறுக்கின.

வாடிக்கையாளர்களெல்லாம் பணம் போவது பற்றி கவலைபடாமல் உல்லாசமாயிருக்க மரம் ஒன்றின் கிளையில் அமர்ந்திருந்த அவனுக்கு மட்டும் டென்ஷன்!

அவனது கையில் வில் போன்ற அமைப்பில் உபகணம் ஒன்றிருந்தது. அதன் முகப்பில் கம்பு ஒன்று பொருத்தப்பட்டு. அதன் நுனியில் ஊசி ஒன்று சொருகப்பட்டிருந்தது. அந்த ஊசியில் சயனைட்

அவன் – பெருமாள் – 35, தொழில் – கொலை!

இன்னாரை இந்த தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்று சொல்லி விட்டால் போதும் அன்னாருக்கு அந்தத் தேதிக்கள் சமாதி கட்டிவிடுவான்.

கொலையை ஏவுவது யார் என்றெல்லாம் அவனுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. தெரிந்தால் பின்னால் அதை வைத்து மிரட்டக்கூடும் என்கிற எச்சரிக்கை உணர்வு!

அவனும் அதுபற்றி தெரிந்து கொள்வதில்லை. ஆளைக் காட்டுவார்கள். திரைமறைவிலிருந்து தகவல் வரும். கூடவே அட்வான்ஸும். இவன் கச்சிதமாய் காரியத்தை முடித்து விடுவான். கேஸ் பரபரப்பாய் கொஞ்ச நாட்களுக்குப் பேசப்பட்டு அப்புறம் பரணிற்குப் போய்விடும்.

பெருமாளின் கண்கள் இப்போது அருண் எனும் இளைஞனின் மேல். அவன் இளைஞரணித் தலைவன். கட்சிக்குள் அவன் கோஷ்டி சேர்க்கிறானாம். விட்டால் தலைமைக்கு ஆபத்து என்று பெருமாளை ஏவியிருக்கிறார்கள்.

தனக்குக் குறிவைக்கப்படுவதை அறியாத அவன் இப்போது நான்காவது டேபிளில் அமர்ந்து இடியாப்பத்தில்! அருகில் நண்பர்கள் அவனுக்கு செலவு வைத்துக கொண்டிருந்தனர்.

பெருமாள் கூம்பின் விசையைத் தட்டிவிடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு செகண்டு போதும் ஊசி அருணின்ந புஜத்தில் பாய்ந்து, தாக்கி, ரத்ததில் சயனைடை கலந்துவிட்டு, ஈரப்பதமானதும் கீழே விழுந்துவிடும்.

பார்ட்டிக்கு எறும்பு கடித்தது மாதிரிதான் இருக்கும். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராமல் அடுத்த நான்கைந்து மணி நேரத்தில் ஆள் காலி!

பெருமாளும் வந்தது முதலே பார்க்கிறான் – அருண் கொஞ்ச நேரமும சீட்டில் அமர மாட்டேன்கிறான். எழுந்து போவதும்,போன் பண்ணுவதும், அக்கம் பக்கம் கைகொடுப்பதும்…

இப்போதுதான் செட்டிலாகியிருககிறான்.

விடக்கூடாது. தாக்கு!

ஒன்று

இரண்டு…

மூன்று!

நான்காவது நொடியில் அவன் விசையைத் தட்டினதுதான் தாமதம், ஊசி மின்னலாய் பாய்ந்து போக-

அந்த நேரம் பார்த்துதானா அருண் தன் ஷுவின் லேஸைக் கட்டக் குனிய வேண்டும்? சை!

எல்லாமே வேஸ்ட்!

அடுத்த ஊசியை முயலலாம் என்று பார்ப்பதற்குள் அருண் எழுந்து விட்டான். அவசரமாய் பில் பொடுத்துவிட்டு தன் காரில் கிளம்பிப் போய்விட்டான்.

போகட்டும்! எங்கே போய்விடுவான்! எப்படியும் ராத்திரி தன் ரூமிற்கு அவன் படுக்க வந்துதானேயாகம்! ரூமில் அவன் தனியாகத்தான் இருக்கிறான். ரொம்ப வசதி.

ராத்திரி பன்னிரண்டு மணி வரை பெருமாளுக்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. அருண் தனி வீடு எடுத்து தங்கியிருந்த வீட்டுப்பக்கம் நீண்ட நேரம் காத்திருந்தும் எந்தப் பிரயோஜனமுமில்லை.

அங்கு ஆட்கள் வருவதும் போவதுமாயிருந்தனர். தலைமைக்கு வேட்டு வைக்க அவன் ராத்திரியோடு ராத்திரியாய் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறான் போலிருக்கிறது.

இன்றுதான் கடைசி நான். விடிவதிற்குள் அவனைத் தீர்த்து கட்டாவிட்டால் ஏவின ஏஜெண்ட் சும்மா இருக்கமாட்டான். துளைத்தெடுத்து விடுவான்.

பெருமாளுக்குத் தூக்கம் தூக்கமாய் வந்தது.

வீட்டிற்கு வந்தான். மனைவி மகனெல்லாம் அலுப்பாய் தூங்கிக் கொண்டிருக்க, ஓசையின்றி கதவைத் திறந்து தன் அறைக்கு போய் ஐக்யமானான்.

தூக்கம் வரவில்லை.

அருணை எப்படியும் தீர்த்தாக வேண்டும்.

எப்படித் தீர்க்கப் போகிறேன்? சற்ற நேரத்தில் யோசனையை தூக்கம் வென்றது.

விடியற்காலை.

வானம் நன்றாக இருட்டியிருந்தது. மப்பும் மந்தாரத்துடன் பொச பொசவென தூரல். குளிர்காற்று ஜில்லென ஜன்னல் வழி தாக்க, பெருமாளின் தூக்கம் போயிற்று. எழுந்து சோம்பல் முறீத்தான்.

மணி பார்த்தான்.

நான்கு.

முகம் துடைத்துக கொண்டு டிரஸ் செய்து கொண்டான்.

கையில் தனக்கு வேண்டிய உபகரணங்களை எடுத்துக் கொண்டு. மெல்ல வெளியேற முயன்ற போது மனைவி விழித்துக் கொண்டு, “எங்கேய்யா கிளப்பிட்டே…?” என்று மறித்தாள்.

“வெளியே கொஞ்சம் வேலையிருக்கு!”

“இந்த அசந்த நேரத்தில் அப்படி என்ன வேலை.. ம்? ராத்திரி எப்போ வீடு திரும்பினாய்? பெண்டாட்டி பிளை பத்தின கவலை உனக்கு இருக்கா.?”

“விடுடி கையை! இப்போ என்ன ஆகீ போச்சுன்னு இப்படி பிடுங்குகிறாய்…?”

“இன்னும் என்னய்ய ஆகணும் வீடு ஒழுகுது. பால் கார்டு தீர்ந்து போச்சு. மாத்தி கொடுய்யான்னு சொல்லி நான்கு நாளாச்சி. கேட்கறியா நீ? நான்கு நாளாய் வீட்டில் பால் பாக்கட் போடலே!”

“பால் பாக்கட் தானே?” என்று போது அவனது மனதில் மின்னல் ஒன்று வெட்டிற்று. “இன்னைக்கு ஒருநாள் பொறுத்துக்கோ. நாளைக்கு எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்!”

சொல்லிவிட்டு பெருமாள் பைக்கில் தொற்றினான்.

கணவன் போய்விட்டானே என்று அவள் சும்மா இருக்க வில்லை. தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பி, “கணேசு! எழுந்து பூத்துக்குப் போய் பால் வாங்கி வாடா!” என்று அவனை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள். இந்த வீட்டில் யாருக்கும் பொறுப்பில்லை.

“தூக்கம் வருதும்மா!”

“பொல்லாத தூக்கம்! எழுந்திரு நாயே!”

“இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போறேம்மா!”

“ம்கூம். உடனே கிளம்பு!” என்று பாத்திரத்தை நீட்டினாள். அவன் வெறுப்புடன் எழுந்து டிராயரை சரி பண்ணிக் கொள்ள ‘இந்தா பணம். பத்திரம்!” என்று நீட்டினாள். “சீக்கிரம் போ! இல்லாட்டி தீர்ந்து போயிரும்! என்ன தெரிஞ்சுதா….”

“சரிம்மா” என்று கணேசு கோட்டு வாயைத் துடைத்துக கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

பெருமாள், ஒருவனின் வீட்டுக்கு முந்தின தெருவிலேயே பைக்கை நிறுத்தினான். மழையின் நசநசப்பில் தெரு வெறிச் சோடியிருந்தது.

அருணின் வீடும் கூட நிசப்தத்தில்.

தெரு விளக்குகள் யோசித்து எரிந்துக் கொண்டிருந்தன. அந்த வீட்டை அடைந்ததும் அக்கம் பக்கம் திருமபிப் பார்த்தான். யாரும தென்படவில்லை.

சட்டென காம்பவுண்டில் தொற்றினான்.

அந்தப் பக்கம் ஒரு ஜம்ப்!

வாசலை உற்றுக் கவனித்தான். அவனது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

அங்கே கதவின் நடுமத்தியில் பூனைக்கு பயந்து கொண்டு பை ஒன்று தொங்கிற்று.

அதில் பால் பாக்கட்! ஜில்லென அதன் வெளிபக்கம் நீர்த்திவலைகள். இப்போதுதான் போட்டிருக்கான். ரொம்ப வசதி. ரிஸ்க்கில்லாமல் காரியத்தை முடீக்கலாம். யாரும் பார்க்கவில்லை.

பெருமாள் யோசனையுடன் அந்த பாக்கட்டை எடுத்தான்.

பையிலிருந்து சிரிஞ்ச்.

அதற்குள் சயனைட்

சிரிஞ்சை பாக்கட்டின் விளிம்பில் செலுத்தி – வெளியே எடுத்தான். மறுபடியும் பாக்கட்டை பையில் போட்டுவீட்டு வேகமாய்த் திரும்பி நடக்க ஆரம்பித்தான். காம்பவுண்ட்! ஜம்ப்!

பைக்!

இத்தனை எளிதாய்க் காரியம் முடீயும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

பால்பூத்தில் அந்த இருட்டிலும், அத்தனை தூரலிலும கூட்டம் குழுமியிருந்தது. எனக்கு – உனக்கு என்று அடித்துக கொண்டது.

கணேசும் வேண்டாவெறுப்புடன் கியூவில் நின்றிருந்தான். அவனுக்குத் தூக்கம் தூக்கமாய் வந்தது.

கொட்டாவி. தூக்கத்தை கெடுத்த தாயின் மேல் வெறுப்பு! அதிகாலையில் எத்தனை ஆனந்தமான தூக்கம்!

பால் கவுண்டரில் கிட்டே போனதும், பாத்திரத்தை நீட்டும் போது பாக்கட்டில் பணம் எடுக்க கைவிட்டவனுக்கு அதிர்ச்சி.

அங்கே தாய் கொடுத்த பத்து ரூபாயைக் காணவில்லை. அதற்குப் பதில் விரல்தான் பாக்கட் ஓட்டை வழியே வெளியே போயிற்று! சே! எங்கோ விழுந்துவிட்டிருக்கிறது.

அம்மாவிற்குத் தெரிந்தால் முகுது பழுக்கும்.

பால் இல்லாமல் போனால் தொலைத்து விடுவாள். கடவிளே. என்ன இது சோதனை! தூக்கம் போனதுமில்லாமல்… அம்மாவை நான் எப்படி சமாளிக்கப் போகிறேன்! அவன் யோசனையுடனும். தயக்கத்துடனும் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

பெருமாள் மிகுந்த உற்சாகத்துடுன் பைக்கிலிருந்து இறங்கினான். பெண்டாட்டி வீட்டின் பின் பக்கம் என்னவோ செய்து கொண்டிருக்க, தன் அறைக்குப் போய் லுங்கிக்கு மாறினான்.

இன்னும் ஐந்து மணி நேரத்தில் அருண் காலி. அவன் இந்நேரம் பால்பாக்கெட்டை எடுத்திருப்பான். பெட் காபி! அதுவே அவனது கடைசிக் காப்பி! ஹாஹ்ஹா!

சந்தோஷத்தில் தூகம் வரமறுத்தது. சும்மான்னாலும இழுத்து போர்த்திக் கொண்டு படுக்கையில் விழுந்தான்.

அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்திருந்த கணேசு மிகவும் உற்சாகமாயிருந்தான்.

“இந்தாம்மா பால்!” என்று பாக்கெட்டை நீட்டினான். “இனி என் தூக்கத்தை கெடுக்காதே” என்று அவனும் படுக்கையில் விழுந்தான்.

பால் வாங்காமல் திரும்பினால் அம்மா அடிப்பாள் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசனையுடன் வந்து கொண்டிருக்கும்போது அருண் வீட்டில் தொங்கின பால் கண்ணில் படஇ சத்தமில்லாமல் போய் அதை அபகரித்து வந்தது பற்றி அவன் மூச்சேவிடவில்லை.

அது அறியாத பெருமாள் படுக்கையிலிருந்தபடியே, “சீக்கிரம் காபி போட்டு எடுத்து வாடி!” என்று பெண்டாட்டியை அதட்டினான்.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

தமிழில் முழுநேர எழுத்தாளராக இல்லாமல், பிற பணிகளினூடே எழுத்திலும் அபிமானம் வைத்து நல்ல பங்களிப்புகளைத் தந்து கொண்டிருப்பவர்கள் உள்ளனர். அவர்களில் சமூக சேவை ஆர்வமும் கொண்டு, தமிழ், சமுதாயம் என இரண்டிலும் பணியாற்றி வருபவர் என்.சி. மோகன்தாஸ். இவர், திருச்சி லால்குடியை அடுத்த நம்புக்குறிச்சி கிராமத்தில் ஜூலை 23, 1959 அன்று பிறந்தார். தந்தை சின்னசாமி, தாயார் பத்மாவதி. சகோதரர்கள் பிரசன்னம், ஜெயகுமார் வாங்கிவந்த ஆனந்தவிகடன், துக்ளக் இதழ்கள் இவரது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *