கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 30,817 
 
 

என் காரின் ஸ்டியரிங்கை பிடித்திருக்கும் விரல்கள் அதிர்ஷ்டமானவை. இல்லாவிட்டால் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் கணிணிக்களைக் கையாள லகரங்களில் என்னைச் சம்பளம் வாங்க வைத்திருக்குமா? அப்போது எனக்குத் திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. ஆதலால் அலுவலகத்தில் அன்றாட வேலைகள் முடிந்துவிட்டால் செய்வதற்கு பெரியதாக ஏதுமில்லாத காலகட்டம் அது.

அப்போதுதான் அந்த ஜெர்மன் காரை வாங்கியிருந்தேன். பெயர் வொல்க்ஸ்வேகன்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த காரில் சொகுசாக அமர்ந்தபடி நெடுந்தூரம் பிரயாணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த விதமான கார்களில் அதிர்வுகளை உள்வாங்கி ஜீரணிக்கும் உதிரி பாகத்தைக் கண்டுபிடித்த பொறியாளனின் கைவண்ணம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. எத்தனை பெரிய அதிர்வானாலும் அதை ஒரு அடர் மெளனத்தோடு கடந்து போய்விடும் வகையான இந்த கார்களில் பயணம் என்பது எத்தனை சொகுசாகிவிடுகிறது? வாழ்க்கையில் தொந்திரவுகளையும் ,சங்கடங்களையும், நிர்பந்தங்களையும் நாம் இப்படியே அணுகிவிட்டால் எத்தனை இலகுவாக இருக்குமென்று வண்டி ஓட்டிக்கொண்டிருக்கையிலேயே யோசனை வந்தது.

வண்டியின் உள்ளுக்குள் சில காதல் பாடல்கள் இதழ்களை வருடிக்கொண்டிருந்தன.

அன்று விடுமுறை நாள். நான் சென்று கொண்டிருந்த சாலை ஒரு தொழிற்சாலையை உரசியபடி அமைந்திருந்தது. அதனூடே செல்கையில் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் ரசாயன வாசம் மூக்கைத் துளைக்கும். ஆதலால் அந்த வழியே அதிகம் நடமாட்டம் இராது.

நான் கவனமாக எனது காரைச் சாலையில் செலுத்திக் கொண்டிருக்கையில் தொலைவில் இரு சக்கர வாகனம் ஒன்று சாலையின் நடுவே விழுந்து கிடந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டு நான் எனது காரை நிறுத்தினேன். காரை விட்டு வெளியே வந்த பிறகு தான் இரு சக்கர வாகனத்தின் அருகில் ஒரு மனிதன் கால்கள் அகல விரிந்த நிலையில் விழுந்து கிடந்திருப்பதைப் பார்த்தேன். ஜீன்ஸும், டிசர்டும் அணிந்திருந்தான். அவனுடைய இரு சக்கர வாகனம் மிக மோசமாக சேதமடைந்திருந்ததை வைத்துப் பார்க்கையில் அவன் சந்தித்திருக்கக்கூடிய விபத்து மிக மோசமானதாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன்.

என்னைச் சுற்றிலும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை யாருமில்லை. ஆங்கிலத்தில் ‘கோல்டன் ஹவர்’ என்பார்கள். விபத்தில் சிக்கிக்கொண்ட பிறகான முதல் ஒரு மணி நேரம் தான் அது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒரு மணி நேரத்தில் சாகக்கிடக்கும் ஒருவனைக் கூட பிழைக்க வைத்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம். அந்த முக்கியமான ஒரு மணி நேரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டுவிட நான் அவசரமாக அவனை நெருங்கினேன்.

நான் ஒரு மருத்துவன் அல்ல. ஆயினும் என்.சி.சி.யில் இருந்திருக்கிறேன். ஓரளவுக்கு முதலுதவிகள் செய்யக் கற்றிருக்கிறேன். எத்தனைக்கு என்றால், நீரில் மூழ்க நேர்ந்துவிட்ட ஒருவனை கரையில் இழுத்துப்போட்டு, உயிர் இருக்கிறதா என்று பார்த்து, மூச்சு நின்றிருந்தால், அவன் மார்பில் கை வைத்து அழுத்தி மூச்சை வர வைத்துவிடுமளவிற்குக் கற்றிருந்தேன். ஆனால், அவன் இதற்கெல்லாம் வேலையே வைக்காமல் ஏற்கனவே போய்ச் சேர்ந்துவிட்டிருந்தான்.

அவன் மண்டையில் பலமாக அடிபட்டிருந்தது. தலைமுடியெல்லாம் ஒரே ரத்தம். ரத்தப்போக்கு அதிகம் இருந்ததினாலேயே அவன் இறந்திருந்தான். ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் அந்த ஒரு மணி நேரத்தை நான் எப்போதோ கடந்திருக்க வேண்டும்.

முதல் பார்வைக்கு அவன் அழகாய்த்தான் தெரிந்தான். கல்யாணம், பிள்ளைகள், குறைந்தபட்சம் காதலியாவது இருந்திருக்க வேண்டுமே என்று என் மனம் அடித்துக்கொண்டது. அத்தனைக்கு முகத்தில் ஒரு சிறுபிள்ளைத்தனம். என் கணிப்பில் அவன் வயது இருபதுகளின் மத்தியில் இருக்கலாம்.

அவனுக்கு அருகில் அவனது ஓட்டுனர் உரிமமும், ஒரு வங்கியின் பண இருப்பை சொல்லும் ஒரு சீட்டும் , ஒரு காசோலைப் படிவமும் அதில் அவனுடைய கையெழுத்தும் இருந்தது. அந்த சீட்டைப் பார்த்திருக்கவில்லை என்றால் நான் நூறுக்கு அழைத்திருப்பேன். அந்தச் சீட்டு வெறும் காகிதம் தான். ஆனால் அத்தனை கனமாக இருந்தது. ஏனெனில் அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகை.

சுமார் ஒரு கோடி ரூபாய்!!

ஒரு கோடி என்கிற இலக்கத்தைப் பார்த்தபிறகு நூறுக்கு போன் செய்வது ஒரு புத்திசாலித்தனமான காரியமாகத் தெரியவில்லை. நீங்கள் கேட்கலாம். ‘நீதான் கணிணி மென்பொருள் துறையில் சம்பளம் வாங்குகிறாயே. உனக்கேன் ஒரு கோடி?’ என்று. நல்ல கேள்வி தான்.

ஆனால், கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் கோடீஸ்வரராகவே இருக்கலாம். உங்கள் பெயரில் நாட்டின் முன்னணி தனியார் நிறுவனம் கூட இருக்கலாம். ஆனால் அகஸ்மாத்தாக, நடுச்சாலையில், எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்! ஒரு கோடி ரூபாய் பெரிய பணம் இல்லை தான்.

ஆனால், எங்கெங்கோ போகிறீர்கள். நீங்கள் மட்டுமா போகிறீர்கள்? பல்லாயிரம் கோடி ஜனம் போகிறது. அவர்களில் யாருக்கோ கிடைக்காமல் உங்களைத் தேடி வந்து ஒரு கோடி பணம் அடைகிறது என்றால் அதற்கென்ன பொருள்?

அதிர்ஷ்டம்!!

அதுவல்லவா முக்கியம்? ஒரு கோடி பணம் என்பது வெறும் ஒரு அடையாளம் தானே. வெறும் ஒரு அடையாளம். அந்த அதிர்ஷ்டத்துக்கான ஒரு அடையாளம். ஒரு கோடி என்பது அந்த அதிர்ஷ்டத்தின் அளவைச் சொல்வது. அது அல்லவா முக்கியம். கேட்கும் போதே கிளர்ச்சி தரும் அளவு அல்லவா? யாரிடமெனும் அண்டி ‘எனக்கு கீழே பத்து ரூபாய் கிடைத்தது’ என்று சொல்லிப்பாருங்கள். நான் சொல்ல வருவது புரியலாம்.

நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருத்தரும் இல்லை. இன்னொருவருக்குச் சொந்தமானதை அவரின் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்வது திருட்டு என்றாகிறது. அவனது ஓட்டுனர் உரிம அட்டையில் அவனது பெயரைக் குறித்துக்கொண்டேன்.

சடகோபன்!!

அவன் முகத்தருகே குனிந்து,

“சடகோபன், நான் இவற்றை எடுத்துக்கொள்வதில் உனக்கு ஒப்புதல் இல்லையெனில் நீ தாராளமாக மறுப்புத் தெரிவிக்கலாம்” என்றேன்.

அவனிடமிருந்து எவ்வித சலனமும் இல்லை. எந்தச் சலனுமும் இல்லாதது எப்படி மறுப்பாக இருக்க முடியும்? அந்தக் காகிதங்களை மடித்துப் பைக்குள் வைத்துக்கொண்டு திரும்பி வந்து என் காரில் அமர்ந்தேன். அதை உருமி எழச்செய்தேன். பின் சாலையில் அரைவட்டமடித்து என் வீடு நோக்கி விரட்டினேன்.

வீட்டுக்கு வந்தவுடனேயே அந்த ஒரு கோடி ரூபாயை… இல்லையில்லை… என்னைத் தேடி அடைந்த அதிர்ஷ்டத்தை என்ன செய்வது என்கிற தீவிர சிந்தனையில் ஆழ்ந்தேன். நான் அவன் அளவிற்கு அழகன் இல்லை. ஆனால், எங்கள் இருவருக்கும் ஒரே உயரமும், உடல் வாகும். என் கையில் அவனின் வங்கிக் காசோலையில் அவனது கையோப்பம் இருந்தது. ஆகையால் அவனின் கையோப்பத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் எனக்குப் பெரிதாக ஏதும் சிக்கலிருக்கப்போவதில்லை. ஒரே ஒரு சவாலாக நான் பார்த்தது என்னவெனில், தோற்றம் தான். நான் அவன் போன்றே தெரியவேண்டும். அது எப்படி?

இந்தச் சிந்தனை மருத்துவரும், எனது நண்பருமான அஜீஸை எனக்கு நினைவூட்டியது. அவர் ஒரு மருத்துவரும், ஆராய்ச்சியாளருமாவார். அவருடைய ஆராய்ச்சி என்னவென்றால், ஒரு மனித முகத்தை எவ்விதம் அழகாகத் தோன்ற வைப்பது என்பதுதான். அவரைப் பொறுத்தமட்டில், ஒரு முகத்தில், அது எத்தனை ஒளித்துணுக்குகளை எவ்விதத்தில் வெளியிடுகிறது என்பதைப் பொருத்தே அதன் அழகு அமைகிறது. இந்த அவரின் ஆராய்ச்சியின் ஆச்சர்யமூட்டக்கூடிய அம்சம் என்னவெனில், ஒரு முகத்தை , மிகச்சரியான இடங்களில், மிகத்துல்லியமான அளவுகளில் ஒளித்துணுக்குகளை வெளியிட வைத்து வேறொரு முகமாகவும் காட்டிட இயலும் என்பதுதான்.

இதை நீங்கள் பள்ளிக்கூடங்களில் படித்திருக்கலாம். இது பொருட்கள் எவ்விதம் கண்ணுக்குப் புலப்படுகின்றன என்பதைப் பற்றியது. ஒரு பொருள் எவ்விதம் கண்ணுக்குப் புலப்படுகிறதெனில், அதனில் ஒளித்துணுக்குகள் பட்டு பிரதிபலிப்பதால் தான்.

ஒரு அழகான முகம் பிரதிபலிக்கும் ஒளித்துணுக்குகளுக்கும், ஒரு சுமாரான முகம் பிரதிபலிக்கும் ஓளித்துணுக்குகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்வதன் மூலம் ஒரு சுமாரான முகத்தைக் கூட அழகான முகமாகவே தோன்றச் செய்துவிடமுடியும். ஒளித்துணுக்குகளை வெளியிடும் நுண் துகள்கள் கொண்ட முகமூடி ஒன்று இதற்கு உதவும். சருமத்தின் வெளிப்புற அடுக்குகளில் புதைக்கப்படும் ஒரு மைக்ரோ சிப்பின் மூலம் இந்த முகமூடியை கட்டுப்படுத்தமுடியும்.

அஜீஸ் எனது நண்பருமாவார் என்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வரும் பட்சத்தில் அவரைத் தனிப்பட்ட முறையில் எனக்குச் சாதகமாக இயங்க வைக்க என்னால் முடியும் என்பதே தைரியம் தருவதாய் இருந்தது. அதுமட்டுமல்லாமல், அஜீஸ் வேறு சிலருக்கும் அந்த முகமூடியை செய்து தந்திருந்ததும், அவர்கள் எல்லோருமே அந்த முகமூடிகளைப் பயன்படுத்திய பிறகு எந்தப் பக்க விளைவையும் சந்தித்ததாக புகார் தரவில்லை என்பதையும் நான் கவனித்திருந்தேன். ஆதலால், நான் உடனேயே அந்த பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக்கொண்டேன். அது எப்படி இருந்ததெனில் ஒரு மருந்தகத்தில் நுழைந்து தலைவலிக்கு ஒரு மாத்திரை வாங்குவது போலத்தான் இருந்தது.

அஜீஸ் என்னிடம் ஒரு குடுவை நிறைய திரவ நிலையிலான ஒரு மருந்தைத்தந்தார். அந்த திரவம், ஒரு சிக்கலான தீர்வை மிக மிக எளிதாக்கியிருந்தது. பொதுவாக முகமூடிகள் செய்ய அதிக நேரமாகும். வாரக்கணக்கில் கூட ஆகும். டாம் க்ரூஸ் படங்களில் வருவது போல, ஒரு த்ரீ-டி தொழில் நுட்பத்திலான அச்சு வார்க்கும் இயந்திரம் கொண்டு உருவாக்கப்படும் முகமூடி அல்ல இது. வெறும் திரவம். அதை முகத்தில் முகப்பூச்சு தடவுவது போல் தடவிக்கொள்ள வேண்டும். இப்போது அந்த முகப்பூச்சில் இருக்கும் நுண்ணிய செல்கள் ஒளித்துணுக்குகளை வெளியிடவல்லது. ஒரு முகத்தை வேறொரு முகமாகத் தோன்றவைக்க இரண்டு முகங்களுக்குமுள்ள ஒளித்துணுக்கு வித்தியாசத்தை அதிகப்படியாக அந்த முகமூடி வெளியிட்டால் போதும். அதை ஒரு மைக்ரோ சிப் பார்த்துக்கொள்கிறது.

என் சருமத்தின் டெர்மிஸ் அடுக்கில் ஒரு மைக்ரொ சிப் புதைக்கப்பட்டது. அந்த மைக்ரோ சிப், ஒளித்துணுக்குகள் வெளிப்படுவதைக் கட்டுப்படுத்தியது. நான் யார் போல் தோன்ற வேண்டும் என்பதை நான் அந்த மைக்ரோ சிப்பில் கணிணி மூலம் பதிவு செய்துகொள்ள முடியும். அந்தச் சிப்பிற்கு ஒரு மின்சாரம் தேவைப்பட்டது. அதற்கென அந்த திரவத்தில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை கிரகிக்கும் நுண் சூரியத்தகடுகள் பதிக்கப்பட்டிருந்தன. அது, நான்கு சுவற்றுக்குள் நான் இல்லாதபோது சூரிய சக்தியால் இயங்கும் ஆற்றலைத் தந்தது. நான்கு சுவற்றுக்குள் இருக்கையில், அதற்கு ஒரு பேட்டரியின் தேவை இருந்தது.

அஜீஸ் அதற்குத் தேவையான மென்பொருளை என் கணிணியில் நிறுவித்தந்தார். அதன் மூலம் நான் சடகோபனின் ஓட்டுனர் உரிமத்திலிருந்து அவன் முகத்தை எடுத்து அஜீஸ் தந்த மைக்ரோ சிப்பில் தரவேற்றினேன். பின் வீட்டில் அமர்ந்தபடி ஒரு நூறு முறைக்கெனும் அவனது கையெழுத்தை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்தேன். அவனுடையது அத்தனை கடினமானதாக இருக்கவில்லை.

இப்போது நான் சடகோபனாகியிருந்தேன். ஒரு கருப்புப் பையுடன் நேராக வங்கிக்குச் சென்றேன். வங்கியில் நான் காசாளரை எதிர்கொண்டேன். அவள் தன் சிற்றறையில் அமர்ந்திருந்தாள். என்னை அவள் முன் அமரவைத்தாள். அவள் பெயர் பிரிஸில்லா என்பதை அவளது மேஜையிலிருந்த பெயரட்டையிலிருந்து தெரிந்துகொண்டேன்.

அவளிடம் இப்போது என் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்ட சடகோபனின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு கோடி பணம் எடுக்க விண்ணப்பித்தேன். அடையாளச் சோதனைக்கு சடகோபனின் ஓட்டுனர் உரிமத்தையும் அளித்தேன்.

“பெரும்தொகை இது. சில நடைமுறைகள் இருக்கின்றன, மிஸ்டர் சடகோபன். முடித்துவிட்டு உங்கள் பணத்துடன் வருகிறேன்.” என்றுவிட்டு அவள் அகன்றாள்.

நான் இப்போது காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தேன். உள்ளூர சற்று பயமாக இருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தேன்.

“நான் ராபர்ட், என்னைத் தொடர்ந்து வா?” என்று என் செவியருகே சொல்லிவிட்டு ஒருவன் சென்றான். கருப்பு நிறத்தில் முழுக்கால் சட்டையும், வெள்ளையில் முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். கருப்பு நிறத்தில் தோலால் ஆன பாதணி அணிந்திருந்தான். வெள்ளைச் சட்டை கருப்பு முழுக்கால் சட்டைக்குள் திணிக்கப்பட்டிருந்தது. பார்க்க வங்கி ஊழியன் போலிருந்தான். நான் எழுந்து அவனுடன் நடந்தேன். இருவரும் அந்த வங்கியின் சிற்றுண்டி உணவகத்தில் அமர்ந்தோம்.

“நீ இறந்துவிட்டாய். அது உனக்கு தெரியுமா?” என்றான் அவன் எடுத்த எடுப்பிலேயே.

எனக்கு சட்டென வியர்த்துவிட்டது. நான் அதிர்ச்சி விலகாதவனாய் ராபர்ட்டையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

“நீ அந்த நெடுஞ்சாலையில் செய்ததை நான் பார்த்துவிட்டேன். சடகோபன் வங்கியில் நிறைய பணம். அது தெரிந்து தான் அவன் மீது என் லாரியை ஏற்றினேன். நான் என் வண்டியை மறைவாக நிறுத்திவிட்டு வருவதற்குள் நீ சடகோபனின் உடைமைகளை எடுத்துக்கொண்டு போய் விட்டாய். நான் உன்னைக் கொன்றிருக்க முடியும். சடகோபனை நான் கொலை செய்துவிட்டாலும், அவனது வங்கிக்கணக்கிலிருந்து எப்படி பணமெடுப்பது என்ற குழப்பத்திலிருந்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக நீ என் வேலையை சுலபமாக்கிவிட்டாய். எனக்கு இதுவரை இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீள, எனக்கு லட்சக்கணக்கில் பணம் தேவை. நான் சடகோபன் பணத்தைக் கையாடல் செய்ய ஒரு நியாயமிருக்கிறது. உனக்கு என்ன? இளைஞன். கணிணி பொறியாளன். உனக்கு மருத்துவ காப்பீடு கூட இருக்கலாம். உனக்கெல்லாம் இது தேவையா? நம் இருவரில் அதிக பரிதாபத்தைக் கோருவது நீயா, நானா என்பதை முடிவு செய்துகொள்.”

“இதோ பார். அவனை கொலை செய்தது நான். சடகோபன் இறந்த செய்தி வங்கிக்குத் தெரிந்தால் நீ மட்டுமல்ல, நானும் கூட இந்தப் பணத்தை வெளியில் எடுப்பது முடியாத காரியமாகிவிடும். அவன் உடலை மறைவாக அப்புறப்படுத்தி புதைத்தது நான். ஆதலால், அவனது பணம் முழுக்க என்னையே சேர வேண்டும். அதிர்ஷ்டவசமாக, நீ ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறாய். ஆக உனக்கும் இதில் பங்கிருக்கிறது என்றாகிறது. அதை நான் மறுக்கவில்லை. நான் ஒரு கொள்ளையன். எனக்கு இதெல்லாம் புதிதில்லை. ஆனால், நீ அப்படி இல்லை. உனக்கொரு சமூக இடம் இருக்கிறது. உனக்கு இன்னும் மணமாகவில்லை. இந்தப் பணம் இல்லாவிட்டாலும் உன்னால் சம்பாதித்துவிட முடியும். இந்தப் பணத்தை நீயே எடுத்துக் கொள்ளும்பட்சத்தில், உன்னைப் பற்றிய உண்மையை நான் போலீஸில் சொல்ல வேண்டி வரும். உன் மீது கொலைக் குற்றம் கூட பாயலாம். ஆதலால், இந்தப் பணத்தை நீ எனக்கு முழுமையாகத் தந்துவிட்டால், நீ செய்த வேலைக்காக உனக்கு ஒரு பத்து லட்சம் ரூபாய் தருகிறேன். எப்படிப் பார்த்தாலும் உனக்கு லாபம் தான்.” என்றான் ராபர்ட்.

நான் யோசனையில் ஆழ்ந்தேன்.

“யோசிக்க நேரமில்லை நண்பா. நம்மிடம் அதிக நேரமில்லை.” என்றான் ராபர்ட்.

நான் வேறு வழியின்றி எழுந்து மீண்டும் பிரிஸில்லாவிடம் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது பிரிஸில்லாவும் வந்தாள்.

“ஓரு கோடி பணம். எப்படி வேண்டும் உங்களுக்கு? பணமாகவா? காசோலையாகவா?” என்றாள் அவள்.

“நான் யோசிக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடத்தில் சொல்லட்டுமா?” என்றேன் நான். சரி என்றவள் எழுந்து வெளியே சென்றாள். நான் மீண்டும் தனியே விடப்பட்டேன்.

இந்தப் பிரச்சனையிலிருந்து மீள எனக்கு அதிக வாய்ப்புகளிருக்கவில்லை. வெகு சில வாய்ப்புகளே எஞ்சியிருந்தன.

அதில் முதலாவது, நானே போலீஸுக்குப் போவது. உண்மையை ஒப்புக்கொள்வது. போலீஸ் எனக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு பாதுகாப்பு தரலாம். அதன் பிறகு என்னை ராபர்டிடமிருந்து யார் காப்பாற்றுவது? அவன் என்னை அதற்கு முன்பே பார்த்திருக்கிறான். தவிரவும் நான் ஆள் மாறாட்டம் செய்ய முனைந்தது போலீஸில் எனக்கே எதிராகவும் முடியலாம்.

இரண்டாவது, நான் ராபர்டுடன் ஒத்துழைப்பது. அதற்கு பிரதிபலனாக, லாபத்தில் ஒரு பங்கைக் கோரலாம். ஆனால், பணம் தன் கைக்கு வந்தபிறகு அவன் தான் வாக்குறுதி அளித்ததன் படிக்கு நிற்பான் என்று எந்த நம்பிக்கையும் இல்லை.

மூன்றாவதாக, ஒரு கோடியையும் எடுத்து இல்லாதவர்களுக்கு தானம் செய்துவிடலாம். அப்படிச் செய்தால் ராபர்டுக்கோ எனக்கோ எவ்வித லாபமும் இருக்கப்போவதில்லை. ஆனால், ஒரு வேளை, என்றேனும் ஒரு நாள், ஒரு நெடுஞ்சாலையில், என் புத்தம் புதிய கார் மீது ராபர்டின் லாரி ஏறி இறங்கலாம்.

நான்காவதாக, நான் ஒரு நாள் கால அவகாசம் கேட்கலாம். அந்த அவகாசத்தில் கள்ளப்பணம் தயார் செய்து ராபர்டிடம் தந்துவிட்டு, போலீஸில் ராபர்ட் குறித்து தகவல் தந்துவிடலாம். ராபர்டை போலீஸ் கள்ளப்பணம் வைத்திருந்ததற்காய் கம்பி எண்ண வைத்துவிடலாம். இப்படிச் செய்வதால் நான் சில வருடங்கள் ராபர்டின் தொல்லையின்றி இருக்கலாம். ஆனால் இது போன்ற குற்றங்களில், குற்றவாளிக்கு அதிக காலம் தண்டனையாகக் கிடைக்க வாய்ப்பில்லை. என்றேனும் அவன் என்னைத் தேடி வரலாம்.

ஐந்தாவதாக ,என் முகத்திலிருக்கும் முகமூடியை நான் களைந்து விடலாம். ஆள் மாறாட்டம் என்ற ஒன்றே நடக்கவில்லை என்றாக்கிவிடலாம். ஆனால் அப்படிச் செய்தால் ராபர்ட் என்னை விடப்போவதில்லை. ஏனெனில் அவன் நான் முகமூடி அணியும் முன்பே என்னைப் பார்த்திருக்கிறான். அதுமட்டுமல்லாமல், அப்படிச் செய்வதால் ராபர்டின் கொலைக் குற்றம் குறித்து தெரிந்துகொண்டவன் என்கிற முறையில் நானும் ராபர்ட்டுக்கு உடந்தை என்றாகிவிடவும் கூடும். இது, பின்னாளில் ராபர்ட் வேறு ஏதேனும் சிக்கலில் சிக்கிக்கொண்டாலும் கூட எந்தத் தவறும் செய்யாமலேயே நானும் அவன் பக்கம் நிற்க வைத்துவிடலாம்.

ஆறாவதாக, நான் போலீஸிடம் உண்மையைச் சொல்லிவிடலாம். ஆனால் ஏற்கனவே முகமூடியுடன் பிரிஸில்லா மூலமாக சடகோபனின் அடையாளச்சோதனையை மேற்கொண்டிருக்கிறேன். ஆக, நான் ஏற்கனவே ஆள்மாற்றம் செய்துவிட்டவனாகிவிட்டதால் நான் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.

ஏழாவதாக, ராபர்ட்டுக்கு இதய நோய் இருக்கிறது. ராபர்ட்டை இதய நோய் மரணத்தில் ஆழ்த்தும்வரை நான் எதையும் செய்யாமல் காலம் கடத்தலாம். ஆனால், அவனின் இதயம் எப்போது நிற்பது? நான் எப்போது இந்தத் தலைவலியிலிருந்து விடுபடுவது?

இப்படியாக நான் யோசனையில் ஆழ்ந்திருந்தபோது பிரிஸில்லா என்னருகே வந்தாள்.

“பணத்தை எப்படி பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள், சடகோபன்?” என்றாள் பிரிஸில்லா.

எல்லாவற்றையும் சீர்தூக்கி யோசித்துவிட்டு நான் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். சடகோபன் இறந்துவிட்டான். அதுவும் மிகச்சிறிய வயதில். அத்தனை சிறிய வயதில் அவனுக்கு எப்படி இத்தனை பணம் கிடைத்திருக்கும்? ராபர்ட் சடகோபன் மீது தன் லாரியை ஏற்றிக் கொன்றுவிட்டான் என்பதனாலேயே ராபர்ட் கெட்டவனாகவும், சடகோபன் நல்லவனாகவும் இருந்திருக்க வேண்டியதில்லை. இருவருமே கெட்டவர்களாகவும் இருந்திருக்கலாம். அல்லது ஒப்பீட்டளவில், ராபர்ட்டையும் விட சடகோபன் தீயவனாகவும் இருந்திருக்கலாம். தீய வழியில் கூட இத்தனை பெரிய பணத்தை அவன் அத்தனை சிறிய வயதில் ஈட்டியிருக்கலாம். இப்படி யோசிப்பதிலும் அனுகூலமிருக்கிறது. சந்தேகத்தின் பலனை நான் ராபர்ட்டுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

“பணமாகக் கொடுத்துவிடுங்கள்” என்றேன் நான்.

பிரிஸில்லா ஒரு கோடி ரூபாய்ப் பணத்தை என்னிடம் பணக்கட்டுகளாகத் தந்தாள். நான் உடன் வைத்திருந்த கருப்பு நிற தோல் பையில் அவற்றை அடைத்துக்கொண்டேன். வங்கியிலிருந்து வெளியே வந்ததும் அந்தப் பையை ராபர்டிடம் தந்தேன்.

ராபர்ட் பையை வாங்கி அதனுள்ளிருந்த பணத்தைக் கண்களாலேயே எடை போட்டான். பின் அவன் அருகே இருந்த இன்னொரு வங்கிக்குள் பையுடன் நுழைந்தான். அவன் திரும்பி வந்தபோது அவனிடமிருந்த பை காலியாக இருந்தது.

“ஓரு கோடியையும் எனது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டேன். இருந்தும் உனக்கு வாக்களித்திருக்கிறேன். அதன்படி உனக்கு பத்து லட்சம் தர சம்மதம். எப்போது வேண்டும் உனக்கு?” என்றான் அவன்.

“எனக்கு எதுவும் வேண்டாம்.” என்றேன் நான்.

“நீ உறுதியாகத்தான் சொல்கிறாயா?”

“ஆமாம். எனக்கு பங்கேதும் வேண்டாம்.”

“சரி. நீ நல்ல மனிதன். வந்தனம்.” என்ற ராபர்ட் சிரித்தபடி தன் பாதையில் நடந்தான்.

நான் அருகாமையிலிருந்த தேனீர் அருந்தகம் சென்று ஒரு தேனீர் வாங்கிப் பருகலானேன்.

விதியின் மீதான எனது பிரஞை மிக எளிமையானது.

‘எது உன்னுடையது இல்லையோ, அது நீ எத்தனை முயற்சித்தாலும் உன்னுடையதாகப் போவதில்லை.’ என்பதுதான் அது.

ஒரு கோடி ரூபாய் என்னை, என் வாழ்க்கையை என்னவெல்லாம் செய்திருக்கக் கூடும் என்பது குறித்து ஒரு அவதானம் எனக்கிருந்தது. ஒரு கோடி பணத்தால் ஓரு பத்தாண்டுகளுக்கு நான் உழைக்கவே வேண்டி இருந்திருக்காது. அது என்னை சோம்பேறி ஆக்கவும் செய்திருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் என் மனம், எந்த வேலையும், இலக்கும் இன்றி செக்குமாடாகி இருக்கலாம். அது என் தன்னம்பிக்கையை தகர்த்திருக்கலாம். எந்த உடல் உழைப்புமின்றி கண்டதையும் தின்று வயிற்றை ரொப்பி தாறுமாறாக எடை கூடிப்போகவும் செய்திருக்கலாம்.

சிலருக்கு பார்க்கும் வேலையைத் தவிரவும் வேறு சில திறமைகள் இருக்கும். இருந்தும் அவற்றிலெல்லாம் கவனம் செலுத்த இயலாமல், வயிற்றுப்பிழைப்புக்காக ஒரு வேலையில் ஒண்டிக்கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். அவ்வாறில்லாமல்

எனக்கு கணிணிக்களுக்கு அறிவூட்டுவதன்றி வேறு எதுவும் தெரியாது. ஆக, பத்து வருடங்கள் வீட்டிலேயே இருக்கும் பட்சத்தில், என் கவனத்தை திருப்பிக்கொள்ள எனக்கு வேறு எந்த தளமும் இல்லை. இப்படி எதுவுமில்லாமல், நான் இந்த சமூகத்திற்கு திருப்பித் தர ஏதுமற்றவனாக, வெறும் பெற்றுக்கொள்பவனாக மட்டுமே இருந்துவிடக்கூடும். அதுமட்டுமல்லாமல், ஒரு கோடிப் பணம் என் மீது ராபர்ட் மாதிரியான அனாவசியமான கேடிகளின் கவனங்களை பெற்றுத்தந்திருக்கக் கூடும். இது என் பிரச்சனைகளை பல மடங்கு பெருக்கிவிடலாம்.. நான் ஒரு சில முதலீடுகளை மேற்கொண்டிருக்கலாம். அவற்றில் ஒரு சில முதலீடுகள் நல்ல பலனளித்திருக்க, ஏனைய முதலீடுகளில் நஷ்டத்தை கண்டிருக்கலாம். இறுதியில் லாபங்களை, நஷ்டங்கள் சமன்பட்டு எனக்கு இறுதியில் எந்த லாபமுமே இல்லாமல் போயிருக்கவும் கூடும்.

என்னிடம் அப்போதிருக்கும் வேலையில் ஒண்டிக்கொண்டிருப்பதே உசிதம் என்று தான் எனக்குத் தோன்றியது. எனக்கு இது குறித்து ஒரு பிரஞை இருக்கிறது. என் பணியானது சவால்கள் நிறைந்தது. சவால்களை தொடர்ச்சியாக சந்திக்கச் சந்திக்கத்தான், தீர்வுகளை உருவாக்க மூளை பழக்கப்படுகிறது. அதிகம் சிந்திக்க சிந்திக்க, மூளையின் நரம்புகள் புதிய புதிய பாதைகளை திறந்தபடியே இருக்கின்றன. இந்த முறையில் தான் பிரபஞ்சத்தன்மைகளுக்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக இருக்கின்றன என்பது என் வாதம்.

அதுமட்டுமின்றி, ஒரு கோடிப் பணம், ராபர்ட் போன்ற மூன்றாம் தர கேடியின் வாழ்க்கையை தலைகீழாக மாற்ற வல்லது. அவன் அத்தனை பெரிய பணத்திற்குத் தகுதியானவன் தானா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவனின் விதியை மாற்ற எனக்கு அதிகாரம் இல்லை. விதி, அந்த ஒரு கோடியின் மேல் ராபர்டின் பெயரை எழுதியிருக்காவிட்டால், என் இடத்தில் ராபர்டை விட பலசாலியான ஒருவனை விதி, அன்று அந்த நெடுஞ்சாலையில் அனுப்பியிருக்கலாமே? என் போன்ற, மென்பொருள் மென்னுடலை ஏன் அனுப்ப வேண்டும்?

சூடான தேனீரை பருகி முடித்தவுடன் நான் வீடு வந்து சேர்ந்தேன். மனதில் ஏதோவோர் இனம் புரியாத நிம்மதி பரவியிருந்தது. ஏனென்று சொல்லத்தெரியவில்லை. ஒரு கோடிப் பணத்தை யாரோ ஒருத்தனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். மனம் நிம்மதியாக இருந்தது. வினோதமான பிறவி தானே நான்? அப்படித்தான் இருக்க வேண்டும். தோல்வியை கடந்து போகிறேனா? குப்புற விழுந்தாலும் மீசை மண் ஒட்டவில்லை என்கிற ஸ்திதியா? தெரியவில்லை. ஏதோவொன்று. யாரும் பார்க்கவில்லை. யாருக்கும் எதுவும் தெரியாது. என் மானத்துக்கு எந்த சேகாரமும் இல்லை. என் நாட்கள் இதுகாறும் எப்படி இருந்ததோ அப்படியே இனிமேலும் இருக்கும். அது போதாதா?

சில நாட்களில் இந்த நிகழ்வுகளையெல்லாம் நான் மறந்தேவிட்டேன்.

பின்பொரு நாளில் வங்கி வேலையாக அதே இடத்துக்கு மீண்டும் செல்ல நேர்ந்தது. நான் மொக்கை வாங்கிய அதே இடத்தைக் கடக்க நேர்ந்தபோது, ஏதோ தோன்றி, அதே தெருமுனைக்கு வந்தேன். அங்கே லேசான கூட்டம். என்னவாக இருக்குமென்று பார்க்க கூட்டத்தை நெருங்கி எட்டிப்பார்த்தேன். அங்கே ஒருவன் எசகுபிசகாக விழுந்து கிடந்தான். அவனருகே நான் அவனுக்குத் தந்த கருப்புப் பை இருந்தது. அவனைச் சுற்றிலும் கூட்டம் கூடியிருந்தது. யாரும் அவனை நெருங்கவில்லை. அவனிடம் நான் ராபர்டுக்குக் கொடுத்த பை எப்படி என்று குழப்பமாக இருந்தது

நான் அவனை நெருங்கினேன்.

“பார்த்து நண்பா… அந்தப் பையில் வெடிகுண்டு கூட இருக்கலாம்.” என்றான் கூட்டத்திலிருந்து ஒருவன். அப்போது தான் அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் கூட ஏன் அவனை நெருங்கவில்லை என்பது புரிந்தது எனக்கு.

“இருக்கட்டும். என்றோ ஒரு நாள் போகப்போகிற உயிர் தானே.” என்றேன் நான். ஏதோ துணிச்சலில் சக்ரவர்த்தி போல. சுற்றி இருந்தவர்கள் என்னை ஒருவிதமாய்ப் பார்த்துவிட்டு மெல்ல கலைந்தார்கள்.

நான் அவன் உடல் நிலையை சோதித்தேன். மார்பு துடிக்கவில்லை. நாடி அடங்கியிருந்தது. கண்கள் லேசாக திறந்திருந்தபடிக்கு நிலைகுத்தியிருந்தது. அவன் அப்போதுதான் இறந்திருக்க வேண்டும். அவனின் சட்டைப்பையிலிருந்து சில காகிதங்கள் உருண்டு விழுந்தன.

அந்தக் காகிதங்களில், அவனது ஓட்டுனர் உரிமமும், வங்கிப் புத்தகமும் இருந்தது. வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் சீட்டு ஒன்றில் அவனது கையோப்பமும் இருந்தது. ஓட்டுனர் உரிமத்தில் அவன் பெயர் ‘மதன்’ என்றிருந்தது.

அவற்றையெல்லாம் சேகரித்து என் சட்டைப்பையில் பத்திரப்படுத்திவிட்டு, போலீஸை அழைத்தேன். எஞ்சியதை போலீஸ் பார்த்துக்கொண்டது.

‘ராபர்டுக்கு நான் தந்த கருப்புப்பை மதனிடம் எப்படி?’ என்று யோசித்த எனக்கு எங்கோ பொறி தட்ட விரைந்து அஜீஸை சந்தித்தேன். அவரிடம் விசாரித்ததில் சில உண்மைகள் புரிந்தது. உண்மையில் கூட்டத்தின் மத்தியில் விழுந்து கிடந்தது, எனக்கு ராபர்டாக பரிச்சயமானவன் தான். அவன் நிஜமான ராபர்ட் இல்லை. அஜீஸ் என்னிடம் சொல்லாமல் அவனுக்கும் முகமூடியை அளித்திருந்திருக்கிறார்.

பின்னாளில் தன் திட்டம் பாழானால் போலீஸிடம் சிக்கிக்கொள்ளக்கூடாதென்று தன் அசலான முகத்தை முகமூடி கொண்டு மறைக்க முயற்சித்திருக்கிறான் மதன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான். ஆனால், அவனுக்கிருந்த இதயக்கோளாறு அவனை வீழ்த்திவிட்டது.

இப்போது மதனின் அசலான ஓட்டுனர் உரிமம், அதில் அவனது புகைப்படம், வங்கிக்கணக்கு எண் என எல்லாமும் என் கையில் இருந்தது. அஜீஸின் முகமூடியுடன்.

பிரபஞ்சம் நம் ஒவ்வொருவரின் மீதும் ஒரு தலைவிதியை சுமத்தியிருக்கிறது. ஆயினும், ஒருவரின் முகத்தை வேறொருவர் எடுத்துக்கொள்வதாலேயே, அவரது தலைவிதியையும் எடுத்துக்கொண்டுவிட முடியுமா? தலைவிதி என்பது அத்தனை சல்லிசானதா? ஆனால், பாரிய பிரபஞ்சம் இந்தப் பூவுலகின் ஒவ்வொரு உயிர்களின் நிமித்தம் கொண்டிருக்கும் அர்த்தங்களை முகம் என்ற ஒரு பெளதிக சட்டகத்திற்குள் வைத்து அடைத்துவிடமுடியுமா? அப்படி அடைத்துவிட்டால் ஒருவரின் தலையெழுத்தை மாற்றிவிட முடியுமா? அது சாத்தியமா? என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

விதியின் மீதான எனது பிரஞை முன்னிருந்ததைவிடவும் இப்போது மிக எளிமையானதாகியிருந்தது.

‘எது உன்னுடையதோ அது யார் எத்தனை தடுத்தாலும், உன்னை வந்தடையும்.’ என்பதுதான் அது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *