ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 21,546 
 
 

ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே1‘ம்’ என்ற ஒற்றை எழுத்தில் இருந்தே புதிய நட்பு ஒன்று பிறக்கிறது. அவன் என்னிடம் ”நீ தண்ணியடிப்பியா?” என்று கேட்டான். நான் ”ம்…” என்றேன். ‘ம்’ என்றால், மனைவிகள் பேசும்போது கணவர்கள் டி.வி பார்த்துக்கொண்டே கடனே என்று ஒரு ‘ம்’ கொட்டுவார்களே… அந்த ‘ம்’ அல்ல. இன்றைய இளைஞர்களிடம், ”நீ நடிகை …….ஐ (கோடிட்ட இடத்தில் உங்களுக்குப் பிடித்த நடிகையின் பெயரை நிரப்பிக்கொள்ளவும்) திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்று கேட்டால், அவர்கள் எவ்வளவு வேகமாக, அழுத்தமாக, சத்தமாக, சந்தோஷமாக ‘ம்…’ என்று சொல்வார்களோ, அந்த ‘ம்…’!

நான் ‘ம்’ சொன்ன ஆண்டு 1992. இடம்: ஆயிரங்கால் மண்டபம். ஊர்: பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது என்பதால் வேண்டாம். நான் ‘ம்…’ என்று சொன்னது எல்.எல்.சத்யாவிடம்.

சத்யா… எங்கள் கல்லூரியில் பி.ஏ., எக்கனாமிக்ஸ் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறான். நானும் அதே கல்லூரியில் ஃபைனல் இயர்தான் என்றாலும், நான் சயின்ஸ் ஸ்டூடன்ட் என்பதால் சத்யாவிடம் எனக்கு அறிமுகம் இல்லை. இருப்பினும் அருணின் பிரச்னைக்காக சத்யாவைச் சந்தித்தேன்… என்ன பிரச்னை?

இப்போதெல்லாம் பெண்களுக்கு ‘ILU’ என்று மூன்று எழுத்துகளில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால், அவர்கள் ‘K’ என்று ஒற்றை எழுத்தில் ஓ.கே சொல்லி, நீங்கள் இந்த வாக்கியத்தைப் படித்து முடிக்கும் நேரத்துக்குள் பொசுக்கெனக் காதலித்துவிடுகிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் அவ்வளவு எளிதில் காதலித்துவிட முடியாது. வயசுப் பெண்கள் வெளியே செல்லும்போது, அவர்களை விட்டு- அழைத்து வருவதற்கு என்றே எல்லா வீடுகளிலும் அண்ணன்கள் – தம்பிகளைப் பெற்று, சோறு போட்டு வளர்த்துவருவார்கள். அவர்கள் உடன்வராத சமயங்களில் ஒரு பெண்ணை சைட் அடித்து, அவர்களை உச்சிமுடியில் இருந்து உள்ளங்கால் வரை வர்ணித்து, உருகி உருகி கடிதம் எழுதி, ரத்தத்தில் கையெழுத்துப் போட்டுத் தந்தால்தான், திரும்பியே பார்ப்பார்கள். ஆனால், காதல் கடிதம் எல்லோருக்கும் எழுத வராது. எனவே, நன்றாக எழுதுபவர்களிடம் எழுதி வாங்கிக் கொடுப்பார்கள். அவ்வாறு அன்று தமிழ்நாட்டில் அழகாக காதல் கடிதம் எழுதிக்கொண்டிருந்த ஆயிரத்திச் சொச்சம் இளைஞர்களில் ஒருவன் சத்யா.

பேருக்கு கடனே என்று எழுதித்தராமல், எந்தப் பெண்ணுக்குக் கொடுக்கிறோமோ, அவளுக்குத் தகுந்தாற்போல் காதல் கடிதம் எழுதித் தருவது சத்யாவின் சிறப்பு. உதாரணத்துக்கு பி.காம் கந்தசாமிக்காக டீக்கடை நாயர் பொண்ணுக்கு ‘எண்ட ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே…’ என்று ஆரம்பித்து எழுதித் தர… முதல் வரியைப் படித்ததுமே அந்தச் சுந்தரிக்குட்டி கந்தசாமியிடம், ‘ஞானும் ஞிங்களைப் பிரேமிக்கினு…’ என்று காதலாகி உருக… சத்யா எங்கள் கல்லூரியின் ஸ்டார் ஆனான். சத்யநாதன் என்ற அவன் பெயரும் லவ் லெட்டர் சத்யா ஆகி, பின்னர் நம் ஆட்களின் சோம்பேறித்தனத்தால் எல்.எல்.சத்யா ஆனது. அந்த எல்.எல்.சத்யா முன்புதான் நானும் அருணும் அமர்ந்திருந்தோம்.

நான் ‘ம்…’ சொன்ன வேகத்தில் அசந்துபோன சத்யா, கார்ப்பரேட் சாமியார்கள் பணக்கார பக்தர்களைப் பார்ப்பதுபோல் அன்பு, பிரியம், நட்பு, பாசம், கருணை, கனிவு… என எல்லாம் கலந்த பார்வையை என் மீது வீசியபடி, ”எதுக்குக் கேட்டேன்னா, தண்ணியடிக்காத பசங்ககூட நான் சகவாசம் வெச்சுக்கிறது இல்லை…” என்றான்.

”எப்பயாச்சும் பசங்க பார்ட்டினா தண்ணி அடிப்பேன். அப்புறம்… நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும்!” என்றேன்.

”யாரை லவ் பண்ற?” என்று சத்யா நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான்.

”நான் யாரையும் லவ் பண்ணலை. இது என் ஃப்ரெண்ட் அருண்” என்று அவனை அறிமுகப்படுத்திவிட்டுத் தொடர்ந்தேன்.

ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே2”நம்ம காலேஜ்லதான் செகண்டு இயர் படிக்கிறான். இவன் ஒரு பொண்ணை லவ் பண்றான். அந்தப் பொண்ணுக்கு நீ ஒரு லெட்டர் எழுதித் தரணும்” என்றேன்.

”பொண்ணு யாரு?’ என்று அருணிடம் கேட்டான் சத்யா.

”மஹா… என் கிளாஸ்தான்.’

”ஃபர்ஸ்ட் இயர்ல எல்லாம் வராம, இப்ப என்ன செகண்டு இயர்ல திடீர்னு லவ்வு?’

”என் எக்ஸாம் பேப்பர் பறந்துபோய் அவ மேல விழுந்துச்சு. அதுலேர்ந்து லவ் ஆயிடுச்சுண்ணே…” என்றான் அருண் சீரியஸாக. சத்யா, ‘உஷ்…’ என்றபடி என்னை முறைக்க… நான் ராகவேந்திரர் ரஜினிபோல் மந்தகாசப் புன்னகையுடன் தலையாட்டினேன்.

”சரி… பொண்ணு எப்படி இருக்கும்?’ என்றான் சத்யா.

”குஷ்புபோல இருக்கும்ண்ணே’ என்று அருண் சொன்னதும் நான் அதிர்ந்துபோனேன். குஷ்புக்கு இந்த விஷயம் தெரிந்தால் அருணை ஓட ஓட விரட்டி அடிப்பார். மஹா ஒரு துளிகூட குஷ்புபோல இருக்க மாட்டாள். ஆனாலும், தங்கள் காதலிகள் சிவப்பாக, கொஞ்சம் பூசினாற்போல் இருந்தால், ‘என் ஆளு குஷ்புபோல…’ என்று சொல்லும் நோய் அந்தக் காலத்துக் காதலன்கள் அனைவருக்குமே இருந்தது.

”வர்ற பசங்க எல்லாம் இதையே சொல்லுங்க. சரி… பொண்ணு ரசனைல்லாம் எப்படி? என்ன மாதிரி புக்ஸ் படிக்கும்? எந்த மாதிரி சினிமா பிடிக்கும்?’ என்றான் சத்யா.

”மஹாவுக்கு மணிரத்னம் படம்னா உயிருண்ணே!’

”அப்ப ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ணணும். அதுகிட்ட

நீ ‘ஈ…’னு இளிச்சுகிட்டு, ஆர்ப்பாட்டமாப் பேசக் கூடாது. ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்போல முகத்தை எப்பவும் இறுக்கமா வெச்சுக்கணும். டி.ராஜேந்தர்போல வளவளனு பேசாம, நறுக்குனு ஒண்ணு, ரெண்டு வார்த்தைகள்ல பேச்சை முடிக்கணும்.’

”மஹா எப்ப மணிரத்னம் ஃபேன்னு சொன்னாளோ, அன்னைலேர்ந்து அந்த மாதிரிதாண்ணே பேசுறேன். ஒரு தடவை அவளை எறும்பு கடிச்சப்பக்கூட, ‘ஏன்… எறும்பு… கடிச்ச?’னு எறும்பைப் பார்த்துப் பொறுமையாக் கேட்டேன். அதுக்கு அவ கோவிச்சுக்கிட்டா. இப்போ நீங்கதான் சூப்பரா ஒரு லெட்டர் எழுதித் தரணும்…’

”தர்றேன். மணிரத்னம் ரசிகர்களை விஷ§வலாத் தான்டா ட்ரீட் பண்ணணும்.

நீ லெட்டர்ல எழுதுற வாசகத்தைவிட, லொகேஷன்தான் ரொம்ப முக்கியம். நல்ல மழைல… இருட்டான இடமாப் பாத்து அவகிட்ட லெட்டரைக் கொடு.’

”மழை… இருட்டுனா பயந்துட மாட்டாளாண்ணே?’

”மணிரத்னம் ஃபேன்ஸ் மழைக்கும் இருட்டுக்கும் பயப்படவே மாட்டாங்க’ என்ற சத்யா, வெள்ளைக் காகிதம் ஒன்றை எடுத்தான். நான், காலில் மொய்த்த ஈயை விரட்டிவிட்டு நிமிர்வதற்குள், சத்யா லெட்டரை எழுதி முடித்துவிட்டு, ‘போதுமா பாரு…’ என்றான். நான் வாங்கிப் பார்த்தேன்.

அதில், ‘நான் உன்னை லவ் பண்றேன்… நீ என்னை லவ் பண்றியா?’ என்று மிகச் சுருக்கமாக எழுதியிருந்தது. ”என்ன சத்யா இது?” என்றேன். அருணும் கடிதத்தை வாங்கிப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன், ”இப்படிலாம் எழுதினா எப்படிண்ணே லவ் பண்ணுவா?” என்றான்.

கடிதத்தை வாங்கிப் பார்த்த சத்யா, ”ரொம்பப் பெருசாப் போயிடுச்சுல்ல… நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னாலே, நீயும் என்னை லவ் பண்ணுன்னுதான் அர்த்தம். அப்புறம் எதுக்கு ‘நீ என்னை லவ் பண்றியா?’னு கேள்வி என்ற சத்யா, ‘நீ என்னை லவ் பண்றியா?’ என்ற அந்தக் கேள்வி வாக்கியத்தை அடித்துவிட்டான்.

நான் அதிர்ச்சியுடன், ”என்ன சத்யா… இதையும் சுருக்கிட்ட?” என்றேன்.

”வெய்ட்… வெய்ட்…” என்று கடிதத்தைப் பார்த்த சத்யா, மிஞ்சியிருந்த வாக்கியத்தில் ‘நான் உன்னை’ என்ற வார்த்தைகளையும் அடித்துவிட்டான். இப்போது கடிதத்தில் ‘லவ் பண்றேன்’ என்று மட்டுமே இருந்தது. அருண் அழுவதுபோல் என்னைப் பார்த்தான். ”இப்ப லெட்டர் சூப்பரா வந்துருச்சுல்ல?” என்ற சத்யாவை, அருண் முறைத்தான்.

”முறைக்காதடா. நான் சொன்ன மாதிரி மழை நேரத்துல போய் அந்தப் பொண்ணுகிட்ட கொடு. அவ மட்டும் உன்னை லவ் பண்ணலன்னா ‘ஏன்டா நாயே?’னு என்கிட்ட கேளு!” என்றான் சத்யா.

சத்யா சொன்னதுபோல் ஒரு மழைநாளில் கல்லூரி வராண்டாவில் அருண் அந்த லவ் லெட்டரை(?) மஹாவிடம் கொடுத்தான். அவள் லெட்டரைவிட சுருக்கமாக ஒரே வார்த்தையில், ‘நானும்…’ என்று சொல்லிவிட்டு மழையில் இறங்கி அருணைச் சிலிர்க்கவைத்தபடி ஓடினாள்.

அன்று முதல் சத்யாவுடனான என் நட்பு பலப்பட்டது. எந்த நேரமும் சத்யாவுடன் ஆயிரங்கால் மண்டபத்திலேயே இருந்தேன். தினமும் இரண்டு பேராவது லவ் லெட்டர் கோரிக்கையோடு வருவார்கள். அவ்வளவு பேருக்கும் சத்யா உதவி செய்தாலும், அவனுக்குக் காதலில் நம்பிக்கை இல்லை. ஆண்களின் நேரத்தை வீணாக்குவதற்கு என்றே பிறந்தவர்கள் பெண்கள் என்ற கருத்தில், சத்யா ஆழ்ந்த நம்பிக்கை உடையவன்.

அன்று நான் சென்றபோது ஏகப்பட்ட பையன்கள் சத்யா முன் அமர்ந்திருந்தனர். எதிரே வேட்டி கட்டிக்கொண்டு பணிவாக அமர்ந்திருந்த விளாங்குடி வீராச்சாமியிடம், ”பொண்ணு யாரு?” என்று கேட்டான் சத்யா.

” ‘பாம்பே வாணி’ண்ணே… அவங்க அம்மா அப்பா வெளிநாடு போய்ட்டாங்கனு பாம்பேலேர்ந்து நம்ம ஊருக்கு வந்து, பாட்டி வீட்டுல தங்கிப் படிக்குது.’

”உனக்கு எப்படி அது மேல லவ் வந்துச்சு?’

”போன வாரம் அவ பென்சில் கீழ விழுந்துடுச்சு. எடுத்துக் கொடுத்தேன். அப்ப அவ சுண்டுவிரல் நகம் டச் பண்ணிடுச்சு. அதுலேர்ந்து லவ் ஆயிடுச்சுண்ணே’ என்று கூற… அவனை வெறுப்பாகப் பார்த்த சத்யா, ”சரி… பொண்ணு எப்படி இருக்கும்?’ என்றான்.

”அப்படியே அச்சு அசல், குஷ்புபோல இருக்கும்ண்ணே…’ என்றவுடன் சத்யா கொஞ்சமும் எதிர்பாராமல் வீராச்சாமியின் தலையில் ஓங்கி மடேரென அடித்தான். அப்படியே சாய்ந்து தரையில் உருண்ட வீராச்சாமி எழுந்து வேட்டியைக் கட்டிக்கொண்டு, ”ஏன்ணே அடிக்கிறீங்க?’ என்றான்.

”நான் ஒரு தடவை அவளைப் பாத்திருக்கேன். அவ குஷ்புபோலவாடா இருக்கா?’ என்றான் சத்யா மிகவும் கோபமாக.

”இல்லண்ணே… சிகப்பா, கொஞ்சம் குண்டா…’

”செருப்பால அடிப்பேன். சிகப்பா, கொஞ்சம் குண்டா இருந்தா அவங்கள்லாம் குஷ்புவாடா?’ என்ற சத்யா, மற்ற அனைத்து பசங்களையும் பார்த்து, ”டேய்… இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க. இனிமே எவனாச்சும் என் ஆளு குஷ்புபோல இருக்கும்னு சொன்னீங்க… கொன்னேபுடுவேன். கொஞ்சமாச்சும் மனசாட்சியோட சொல்லுங்கடா…’ என்றான்.

”ஸாரிண்ணே…’ என்றான் வீராச்சாமி.

இப்போது சற்று கோபம் தணிந்த சத்யா, ”ஏன்டா… அது பாம்பே பொண்ணு, அது உன்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டு விளாங்குடிக்கு வந்து பானி பூரியும், பேல் பூரியும் கேட்டா என்ன பண்ணுவ?’ என்று கேட்டான்.

”அதுக்கு என்னண்ணே பண்றது? பாம்பே பொண்ணு… இந்திப் பாட்டுதானே கேக்கும்’ என்று வீராச்சாமி கூறியவுடன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சத்யா, ”அய்யோ… ஏன்டா இப்படி என்னைக் கொல்ற… பேல் பூரியும், பானி பூரியும் இந்திப் பாட்டு இல்லைடா. அது திங்கிற ஐட்டம். அறிவுகெட்ட முண்டம். முதல்ல இங்கிருந்து ஓடிரு…’ என்று வீராச்சாமியை எட்டி உதைத்தபோதுதான், தூரத்தில் செல்வம் வருவதை நான் பார்த்தேன்.

சற்றே திகிலுடன், ”டேய்… செல்வம்டா’ என்றேன். செல்வம்… எங்கள் ஊரின் பிரபல ரௌடி கம் கள்ளச்சாராய ஹோல்சேல் வியாபாரி முருகேசனின் அடியாள்.

”இவன் ஏன்டா இங்க வர்றான்?”

”தெரியலையே…’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே எங்களை நெருங்கிய செல்வம், ”கிளம்புங்க… முருகேசன் அண்ணன் உங்களை அழைச்சுட்டு வரச் சொன்னார்’ என்றான்.

”எதுக்குண்ணே..? நாங்க ஏதாச்சும் தப்பு, கிப்பு…’

”அதெல்லாம் தெரியாது. அண்ணன் உங்களை ஆபீஸுக்கு அழைச்சுட்டு வரச் சொன்னாரு.’

செல்வம் ‘ஆபீஸ்’ என்று குறிப்பிட்டது, எங்கள் ஊருக்கு வெளியே இருந்த மாந்தோப்பை. நாங்கள் சென்றபோது ஆபீஸ் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. முருகேசன் லுங்கி, சிவப்பு பனியனுடன் தன் ஸ்டாஃப்கள் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஸ்டாஃப்கள் பஸ், லாரி டயர் டியூப்களில் சாராயத்தை ஊற்றி, டியூபின் மேல் சாக்குத் துணியைக் கட்டி, அதன் மேல் வைக்கோலைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். சுற்றுவட்டாரம் அனைத்து கிராமங்களுக்கும் முருகேசன்தான் கள்ளச்சாராயம் சப்ளை.

நாங்கள் பீதியுடன் முருகேசனை நெருங்க… ”இதுல சத்யா…’ங்கிறது என்று முருகேசன் என்னை நோக்கி கையை நீட்ட, நான் வேகமாக, ”நான் இல்லங்க…’ என்று என் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினேன். ”நீங்கதான் சத்யாவா தம்பி…’ என சத்யாவைப் பார்த்த முருகேசன் நாங்கள் சற்றும் எதிர்பாராதவிதமாக, மடித்துக்கட்டியிருந்த லுங்கியை இறக்கிவிட்டான்.

”நியாயமாப் பாத்தா நானே உங்களை நேர்ல வந்து பாத்துருக்கணும். பிசினஸை நடுவுல விட்டுட்டு வரமுடியலை’ என்ற முருகேசன் செல்வத்தைப் பார்த்து, ”கைகாட்டி கணேசனுக்கு 20 டியூப் அனுப்பிடு. வாலாஜா வடிவேலுக்கு 10. அப்புறம் இன்ஸ்பெக்டர் வந்திருந்தாரு. இந்த மாசம் ரெண்டு கேஸ் கொடுக்கணுமாம்… நீ போறியா?’

ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே3”நான் போன மாசந்தான் அண்ணே போய்ட்டு வந்தேன்.’

”அப்ப விநாயகத்தை அனுப்பிடு’ என்றவன் எங்களைப் பார்த்து, ”நீங்க வாங்க தம்பி…’ என்று மரத்தடியை நோக்கி அழைத்துச் சென்றான். அங்கு தயாராக இருந்த நாற்காலிகளில் எங்களை அமரச் சொன்ன முருகேசன், ”அப்புறம் தம்பி… நீங்க பெரிய புலவர்னு கேள்விப்பட்டேன்’ என்று சத்யாவைப் பார்த்து கேட்க… சத்யா என்னைக் கேள்வியுடன் பார்த்தான்.

”புலவர்லாம் இல்லீங்களே… காலேஜ்ல படிச்சுக்கிட்டிருக்கேன்.’

”இந்தப் புலவர்ங்களே இப்படித்தான். தன்னடக்கம் ஜாஸ்தி.’

”சத்தியமா நான் புலவர்லாம் இல்லண்ணே…’

”அட… நீங்கதானே மண்டபத்துல உக்காந்து பசங்களுக்குப் பாட்டு எல்லாம் எழுதிக்கொடுக்கிறீங்க?’

”அது பாட்டு இல்லை… லவ் லெட்டர்.’

”நான் பாட்டைக் கண்டேனா? லெட்டரைக் கண்டேனா? நீங்க லெட்டர் எழுதிக் கொடுக்கிற பொண்ணுங்க எல்லாம் பூ மாதிரி வந்து மடில விழுதாமே…’

”ஹி… ஹி… ஆமாம்ண்ணே…’

”நமக்கு ஒரு வேலை செய்யணுமே… ‘சரசு’னு ஒரு பொண்ணு. நம்ம ரிடெய்ல் மெர்ச்சன்ட். நம்மூரு மேலக்குடி ஆலமரத்தடிக்குப் பின்னாடி உக்காந்து விக்கும்.’

”என்னது… வடையாண்ணே?’ என்ற என்னை, முருகேசன் முறைத்துப் பார்த்ததில் மூச்சா முனைக்கு வந்துவிட்டது. சேரை இழுத்து சத்யாவுக்கு அருகில் போட்டு அவனை ஒட்டினாற்போல் அமர்ந்துகொண்டேன்.

”சாராயம் விக்கும். அது மேல நமக்கு ஒரு இது… நானும் ஜாடைமாடையாச் சொல்லிப் பாத்தேன். வழிக்கு வர்ற மாதிரி தெரியல. ராத்திரி சரக்கைப் போட்டுக்கிட்டு நிலாவைப் பாத்தா நிலாக்குள்ள நின்னுக்கிட்டு சரசு ஜெகஜ்ஜோதியா சிரிக்கிறா. அதனால ஒரே லெட்டர்ல அவ என் காலடில விழணும்… அப்படி ஒண்ணு எழுதிக் கொடுங்க…’

”எழுதிடலாம்ண்ணே… ஆனா, அவங்க அழகை வர்ணிச்சு எழுதுறவங்களைத்தான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும். அதனால அவங்க அழகைப் பத்தி கொஞ்சம் சொன்னீங்கன்னா லெட்டர் எழுத எனக்கு வசதியா இருக்கும்.’

”சொல்லிட்டாப் போவுது…’ என்று சில விநாடிகள் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்த முருகேசன், ”சரசு அப்படியே குஷ்புபோலவே இருக்கும்’ என்று கூறியவுடன் சத்யா பொளேரென என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

”ஏன் புலவரே அந்தத் தம்பியை அடிக்கிறீங்க?’

”தள்ளி உக்காரவேண்டியதுதானே. மேல இடிச்சுகிட்டே உக்காந்திருக்கான். நீங்க சொல்லுங்கண்ணே…’ என்று சத்யா சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த செல்வம், ”சரக்கு எல்லாம் அனுப்பியாச்சுண்ணே’ என்று சொல்லிவிட்டு என் பின்னால் நின்றுகொண்டான்.

”உடம்பு கொஞ்சம் பூசுன மாதிரி இருக்கும். ஆனா, சரச சிகப்புனு சொல்ல முடியாது. அது ஒரு கலர்’ என்று முருகேசன் சொல்ல… செல்வம் குறுக்கே புகுந்து, ”எலுமிச்சம்பழம் கலர்ண்ணே…’ என்றான். முருகேசன் அப்படியே கொஞ்ச நேரம் செல்வத்தை முறைத்துப் பார்த்தான்.

”எலுமிச்சம்பழம் கலர்னு சொல்லமுடியாது. வேணும்னா இப்படிச் சொல்லலாம்… எலுமிச்சம்பழத்தையும் மாம்பழத்தையும் நறுக்கிப்போட்டு, அதுல தங்க வளையலை உருக்கி ஊத்தி, அதுல மஞ்ச சாமந்திப் பூவை அரைச்சு ஊத்தி, அதுல சாராயத்தை ஊத்தி பத்த வெச்சா, அது திகுதிகுனு எரியுறப்ப ஒரு கலர் வரும்ல… அந்த கலர்’ என்று முருகேசன் சொல்லச் சொல்ல… எனக்கு தலை சுற்றியது.

”சூப்பர்ண்ணே… அதே கலர்தாண்ணே…’ என்ற செல்வத்தை முருகேசன் இப்போது எரிப்பதுபோல் பார்த்தான்.

”உங்களுக்குப் புரியுதா புலவரே?’ என்றான் முருகேசன் சத்யாவிடம்.

”குஷ்பு மேல சத்தியமா புரியலண்ணே’ என்றான் சத்யா அழுவதுபோல.

”அப்ப ஒண்ணு பண்ணுங்க புலவரே… நீங்களே ஃபீல்டு விசிட் போயிட்டு வந்துடுங்களேன்!’

”ஃபீல்டு விசிட்டா?’

”நீங்களே ஒருதடவைப் போயி சரக்கு சாப்பிடற மாதிரி சரசைப் பாத்துட்டு வந்துடுங்க’ என்றவுடன், நான் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, ”சரிண்ணே…’ என்று கூற… சத்யா என்னை முறைத்தபடி, ”அதெல்லாம் வேண்டாம்ண்ணே’ என்றான்.

”இல்லை புலவரே… நீங்களே நேர்ல போய்ப் பாத்துட்டு லெட்டர் எழுதித்தாங்க. எனக்கு அவ அழகைப் பத்தி சரியா சொல்ல வரலை.’

”நான் சொல்றண்ணே’ என்று செல்வம் கூற… முருகேசன் ஆத்திரத்துடன் செல்வத்தின் சட்டையைப் பிடித்து இழுத்து, ”நாளைலேர்ந்து சரசு கடைக்கு நீ போய் சாராயம் கொடுக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டான். செல்வம் முகம் வாடியது.

ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே4மேலக்குடி ஆலமரத்தடிக்குப் பின்னால் நான்கைந்து பிளாஸ்டிக் கேன்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சரசைப் பார்த்தவுடன் அசந்துபோனோம். முருகேசண்ணன் சொன்னதுபோல் நல்ல அழகு. அசத்தலான நிறம். உடல் மெதுமெதுவென, வழவழவென, பளபளவென, தளதளவென இருந்தது. வயது 20-ஐ தாண்டியிருக்காது.

”வாங்க கண்ணுகளா… சின்னப் பசங்களா இருக்கீங்க! இதுக்கு முன்னாடி சாராயம் சாப்பிட்டுருக்கீங்களா?’

”இல்லைங்க…’

”அப்ப சின்ன டம்ளர் சாப்பிடுங்க. ஒரு டம்ளர் ரெண்டு ரூபா’ என்று இரண்டு சிறிய பிளாஸ்டிக் டம்ளர்களை நீட்டினாள். அதில் சாராயம் தூய வெள்ளை நிறத்தில், எங்கள் முனிசிபாலிட்டி விடும் குடிநீரைவிட சுத்தமாக இருந்தது. குடிநீரைவிட சாராயம் சுத்தமாகக் கிடைக்கும் ஊரில் வாழ்வது குறித்து எனக்கு மிகவும் பெருமையாக(?) இருந்தது.

”ஏங்க… இதுக்கு மிக்ஸ் பண்றதுக்கு சோடா… கலரு…’ என்று சத்யா கேட்டவுடன் சரசு குலுங்கக் குலுங்கச் சிரித்தபோது, எனக்கு அந்த மேலக்குடியே குலுங்குவதுபோல் இருந்தது.

”இத அப்படியேதான் குடிக்கணும். எதுவும் கலக்கவேணாம். தொட்டுக்கறதுக்கு வறுத்த மீனு, ஊறுகாய், கருவாடு இருக்கு…’ என்று ஒரு தட்டை எடுத்து நீட்டினாள்.

நாங்கள் வறுத்த மீன்களை கையில் எடுத்துக்கொண்டு ஒரு மடக்கு அருந்தினோம். ரம்மில் எதுவும் கலக்காமல் ராவாக அடிப்பதுபோல் இருந்தது. நாற்றம் பிடுங்கினாலும், சில நிமிடங்களிலேயே சரசுவின் சாராயம் எங்கள் உடலில் துள்ளிக்குதித்து விளையாட ஆரம்பித்தது. நான் போதையுடன், ”புலவரே…’ என்று அழைக்க… ”சொல்லுங்க நண்பரே…’ என்றான் சத்யா கண்கள் செருக.

”நான் இப்ப சொர்க்கத்தோட வாசப்படியில் இருக்கேன்… நீ?’ என்றேன்.

”நான் சொர்க்கத்துக்குள்ளேயே நுழைஞ் சுட்டேன். இங்க ரம்பா, மேனகா, ஊர்வசில்லாம் டான்ஸ் ஆடிட்டிருக்காங்க. இன்னொரு டம்ளர் தாங்க…’

அடுத்த டம்ளரில் நானும் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டேன். ”புலவரே… செத்துப்போன அழகான பொண்ணுங்க எல்லாம் சொர்க்கத்துலதானே இருப்பாங்க’ என்றேன்.

”அதுல என்ன சந்தேகம்?’

”நான் மர்லின் மன்றோவைத் தேடிக் கண்டுபிடிச்சு ‘நீ எப்படிச் செத்தே?’னு கேக்கப்போறேன்’ என்று எழுந்தேன்.

”உக்காருடா… எதிர்த்தாப்லயே ஒரு மர்லின் மன்றோ இருக்கு. மர்லின் மன்றோவுக்கு சதை போட்டு, தலைமுடியைக் கறுப்பாக்கி, புடவைக் கட்டுச்சுனா நம்ம சரசு மாதிரிதான் இருக்கும் மாப்ள…’ என்றவுடன், சரசு சத்தமாகச் சிரித்தபடி, ”என்ன… ரெண்டு டம்ளர்லயே ஏறிடுச்சா?’ என்றாள்.

”இப்ப நீங்க எனக்கு ஒரு உண்மையைச் சொல்லணும். உங்க கண்ணு ரெண்டும் அப்படியே மின்னுது. உங்க ரெண்டு கண்ணுலயும் நிலாவை வெச்சது யாரு?’ என்று சத்யா கூறியவுடன் சரசு சத்தமாகச் சிரித்தாள்.

”நீங்க சிரிக்கிறப்போ என் காதுகிட்ட யாரோ சலங்கையை ஆட்டுறமாதிரியே இருக்கு.’

”சலங்கைனா?’

”அதை விடுங்க. நீங்க பேசறப்போ யாரோ வீணை வாசிக்கிற மாதிரியே இருக்கு.’

”வீணைன்னா?’

”வீணைன்னா… வீணைன்ணா…’ என்ற சத்யா சட்டென என்னை அவன் மடியில் சாய்த்து, என் உடலில் வீணை வாசித்துக் காண்பித்தான்.

”உன் ஃப்ரெண்டுக்கு ரொம்ப ஏறிடுச்சு. சீக்கிரம் அழைச்சுட்டுப் போய் சேரு…’ என்றாள் சரசு.

அப்போது நன்கு போதையேறிய ஒருவன், ”சரசு… ஒரு மீனு கொடு…’ என்று அவள் கன்னத்தில் கை வைக்க… சரசு அவனுக்குப் பொளேரென ஓர் அறை கொடுத்தாள் பாருங்கள்… அடித்த போதையெல்லாம் எனக்கு இறங்கிவிட்டது! அடித்த அடியில் அவன் கீழே விழ…. ”சீ… தள்ளு…’ என்று அவனை சரசு காலாலேயே ஓங்கி ஓர் உதை விட்டாள். இதற்கு மேல் இங்கிருந்தால் ஆபத்து. சத்யா வேறு ஓவராக அவளை வர்ணித்துக் கொண்டிருக்கிறான் என்று எழுந்தேன். நான் சத்யாவைக் கைத்தாங்கலாக அழைத்துச்செல்ல… சத்யா போதையில் நாக்குக் குழுற… ”மாப்ள… சரசுவை ஒரு ஜாடையில் பாத்தா குஷ்புபோலவே இல்லை?’ என்று கூற… நான் சத்யாவைப் பொத்தென கீழே போட்டேன்.

மறுநாளே சத்யா முருகேசண்ணனுக்கு லெட்டர் எழுதி கொடுத்துவிட்டான்.

ஞாயிற்றுக்கிழமை. ஆயிரங்கால் மண்டபம். நானும் சத்யாவும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு நிமிர்ந்தபோது, தூரத்தில் சரசு எங்களை நோக்கி வேகமாக வந்துகொண்டு இருந்தாள். கையில் ஒரு வெள்ளைக் காகிதம்.

நான் திகிலுடன், ”மச்சி… நீதான் எழுதினதுனு தெரிஞ்சுபோச்சுபோல. கையில் லெட்டரோட வர்றா… நம்ம செத்தோம்’ என்று நான் சொல்ல… சத்யாவின் முகத்தில் பீதி. எங்களை நெருங்கிய சரசு, ”இதுல யாரு சத்யா?’ என்றாள். நான் வழக்கம்போல் என் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக, ”நான் இல்லங்க’ என்றேன்.

”நீதான் இந்த லெட்டரை எழுதிக்கொடுத்தியா?’ என்றாள் சரசு சத்யாவிடம்.

”எந்த லெட்டர்?’ என்றான் சத்யா.

”சும்மா நடிக்காத. செல்வம் எல்லாத்தையும் சொல்லிட்டான்.’

”ஸாரிங்க. அது வந்து… முருகேசண்ணன் கட்டாயப்படுத்தி எழுதித் தரச் சொன்னாரு. வேற வழியில்லாம எழுதித் தந்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க…’

”சும்மா சொல்லக் கூடாது. என்னமா வர்ணிச்சு எழுதியிருக்க. மேல் கழுத்து மச்சத்தைக்கூட விடாம கவனிச்சு எழுதியிருக்க… நல்ல ரசனைக்கார ஆளுய்யா. அன்னைக்குக்கூட என்னை நீ நல்லா வர்ணிச்ச…’

”அது சும்மா போதையில் சொன்னதுங்க…’

”பரவாயில்லை. இந்த மாதிரி என்னை ரசிக்கிறவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கேன்’ என்ற சரசு லேசான வெட்கத்துடன், ”ஐ லவ் யூ’ என்றாள். அடுத்த விநாடி, ”ஆத்தாடியோவ்…’ என்று அலறினான் சத்யா.

தலைதெறிக்க ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து அன்று ஓடிய சத்யா, பிறகு அந்தப் பக்கமே செல்வது இல்லை. அதன் பிறகு காதல் கடிதம் எழுதித் தருவதையும் சுத்தமாக நிறுத்திவிட்டான்!

– அக்டோபர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *