அழகி

 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேருந்துப் பயணத்திற்காக ஏகத்துக்கும் ஏங்கியிருக்கிறான் குணா. கையிலிருப்பதோ ஹிரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள், ‘மாநகரப் பேருந்துகள் அத்தனைக்கும் வெள்ளை வண்ணம்தான் பொருத்தமானது! எண்ணற்ற தேவதைகளைச் சுமந்து செல்லும் அவற்றை, அரசு, பச்சை வண்ணத்தால் கொச்சைப்படுத்தி விட்டது’ என்பதாக விஜய டி.ராஜேந்தர் மொழியில் விமர்சிப்பவன், கடன் அட்டைகளை கரும்புச்சாறு விற்கும் மதுராந்தகம் இராமத்து மனிதனிடம் கூட விற்றுவிடும் திறமைசாலி. கைநிறையச் சம்பளம், பை நிறைய ஊக்கத்தொகை என படித்த எம்.பி.ஏவுக்கு அர்த்தம் கிடைத்துவிட்ட நிறைவு. “சேலரி இருபதாயிரத்தைத் தாண்டியவுடளேயே “ஒரு லக்சரி அபார்ட்மெண்ட் வாங்க ஹோம்லோன் அப்ளை பண்ணலாம்னு இருக்கேன் மச்சான்” என்றபோது, “அப்படியே நீ போற வாறே இடத்துலே, நல்ல அழகான பொண்ணுங்க யாரையாவது சந்திச்சா, லவ் பண்ணி, மேரேஜ் பண்ணிடு மாப்ளே” என்று உற்சாகப்படுத்தினான் குணாவின் அறை நண்பன் வினோத். ஆனால் நண்பனின் வாக்கு இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று அவனே நினைக்கவில்லை.

அன்று எப்போதும் போல் காலை ஒன்பது மணிக்கு வண்டியை நகர்த்தியவனுக்கு உற்சாகம் புஸ்ஸென்று வடிந்து விட்டது. பின் சக்கரம் பஞ்சர். ஒன்பதரை மணிக்கு வடபழனியில் உள்ள தனது அலுவலகத்தில் தினசரி மீட்டிங், ஐந்து நிமிடம் தாமதமாகப் போய் நின்றாலும் “ஒருவழியா வந்துட்டான்ய்யா கடன் காரன்” என்று காதுபட நக்கலடிப்பார்கள். வண்டியை மேன்ஷன் ஸ்டாண்டிலேயே விட்டுவிட்டு, ஓட்டமும் நடையுமாக திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை பேருத்து நிறுத்தத்துக்கு வந்தபோது, ஜம்மென்று வந்து நின்றது 25G, பின் படியில் மட்டும் நோத்திக்கடன் போல பத்துப் பேர் தொங்கிக் கொண்டிருந்தார்கள். “தம்பி ‘டை’ கட்டிக்கிட்டு படியிலே தொங்கினாலும் பாதியிலே மரணம் தான். மேலே ஏறுங்க” என்று நடத்துனர் குணாவுக்கு கட்டளையிட்டாலும், இரண்டு படிகளுக்கு மேல் ஏறி வர முடியவில்லை. அத்தனை கூட்டம்.

காலையில் தலைகுளித்த கூந்தல்களின் வாசனை, காலி அலுமினிய மீன் கூடைகளின் வாசனை, டியோட்ரண்ட் வாசனையோடு கலந்து வரும் ஆண்களின் வியர்வை வாசனை என எல்லாம் கலவையாக ஒரு புது அனுபவத்தைத் தர, பேருந்தின் நடுவில் நெருக்கியடித்துக் கொண்டிருந்த பெண்களின் கூட்டத்தை நோக்கி ஒரு நோட்டம் விட்டான் குணா, அந்த கண நேரத்தில் ஒரு மிள்ளல் வெடுக்கென்று வெட்டி மறைந்தது. பேருந்தின் கூரைக் கம்பியைப் பிடித்துக் கொண்டு ஊசலாடிக் கொண்டிருந்த பெண் கூட்டத்தின் நடுவே, ஒரு சிறகு முளைக்காத தேவதை! நகரும் பேருந்தின் ஜன்னல் வழியே கட்டடங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அவள், பின்புறப் படிக்கட்டின் பக்கமாய் எதேச்சையாய் திரும்பியபோது, அவன் முதன் முதலாகப் பார்த்தது அவளது கண்களைத்தான். அவ்வளவுதான், அந்தக் கணமே அவனுக்குள் காதல் ஜனித்தது. கவிதையும் தான், “பலருக்குக் கன்னத்தில் மச்சமென்றால், உனக்குக் கண்களே மச்சமாய்” என குணா எழுதிய கவிதையைப் படித்துவிட்டு “உனக்கு முத்திப் போச்சி. சீக்கிரம் காதலைச் சொல்லிடு” என்றான் வினோத், “என்னடா இன்னைக்குத்தான் பார்த்தேன். அதுக்குள்ளே எப்படி” எனத் தயங்கிய குணா, அதன் பிறகு தனது ஹீரோ ஹோண்டாவைத் தொடுவதே இல்லை . “எனதருமைக் காதலி பேருந்தில் பயணிக்கும்போது, எனக்கு மட்டும் பைக்கா” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு, 256 பேருந்துக் கூட்டுக்குள் இவனும் அடைக்கலாங் குருலியாகிவிட்டான்.

ஆறு மாதங்கள் ஓடியே விட் டன…தேவதையின் பெயரும் கூட கௌசல்யா என்பது தெரிந்து விட்டது. ஒவ்வொரு முறையும் வடபழனியிலேயே இறங்கிவிடுவான் குணா. கௌசல்யா அநேகமாய் போரூரில் இறங்குவாள் என்பது அவன் யூகம். பேருந்தின் நடுப்பகுதியிலிருந்து அவள் கொடுத்தனுப்பும் பஸ் பாஸில், திருவல்லிக்கேணி டு போரூர் என்று அச்சிடப்பட்டிருக்கும். ஒரு முறை அதில் ஒட்டப்பட்டிருக்கும் அவளது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை, கூட்ட தெரிசவில் மெல்ல பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து விட்டான். புகைப்படத்தைப் பார்த்த வினோத், ”நீ அதிர்ஷ்டக்காரன்டா! அடுத்தவன் கொத்திக் இட்டுப் போறத்துக்குள்ளே உன் காதலைச் சொல்லிடு” என்று நெருக்கடி தர ஆரம்பித்து விட்டான்.

அன்று பேருந்திலும் எதிர்பாராத நெருக்கடி. அப்போது தான் நிகழ்ந்தது அந்த மேஜிக் தருணம். “ஹலோ மிஸ்டர் குணா! என்னோட பஸ் பாலைக் கொடுத்து ரொம்ப நேரமாகுது. கண்டக்டர்கிட்ட நோட் போட்டு எனக்குக் கொஞ்சம் பாஸ் பண்ணுங்களேன் ப்ளீஸ்” என்று குயில் குரலில் சொன்னது, சந்தேகமில்லாமல் கௌசல்யாதான். பார்வைகளால் பேசிக் கொண்டிருந்த கௌசல்யா, பெயர் சொல்லிக் கூப்பிட்டது குணாவுக்குத் தொண்டையை அடைந்தது. இறங்கும் போது துணிச்சலாய் கையசைத்தவனுக்கு கௌசல்யாவும் கையசைத்தாள். அதில் ஒருவித ஒத்திசைவு இருந்தது, ‘இரவு இத்தனை நீளமான ஒன்றா’ என்ற கோபத்தோடு கொட்டக்கொட்ட விழித திருந்தவன், மறுநாள் காலை ஆறுமணிக் கெல்லாம் குளித்துக் கிளம்பி ரெடியாகி கீழே வந்தான். பாலிதீன் போர்வையை கச்சிதமாக மூடிக்கொண்டு, நீண்ட ஓய்வில் இருந்த பைக் கண்களில் பட்டது. போர்வையை உருவிப் போட்டுவிட்டு பைக்கை உதைத்து ஏறியவன், அடுத்த அரை மணி நேரத்தில் வந்து நின்றது. கௌசல்யா இறங்கும் போரூர் பேருந்து நிறுத்தம். நான்கு மணி நேரத் தவம்.

சரியாக ஒன்பது நாற்பத்தைந்து மணிக்கு 25G வந்து நின்று, தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. குணாலின் இதயம் முன் எப்போதை விடவும் அதிக வேகத்தில் துடிக்கத் தொடங்க…எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக கௌசல்யா. வலது அக்குளில் உலோக ஊன்றுகோலின் பிடிமானத்தோடு, படிக்கட்டுக்களில் மெல்ல இறங்கினாள். வலது கால் பாதம், ஒரு சிறுமியின் பாதம் போல சிறுத்து, காற்றில் உணர்ச்சியற்று ஆடிக்கொண்டிருந்தது. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை குணா, ஆனால் அவள் முகத்தில் துளிக்கூட அதிர்ச்சியில்லை. அவனை எதிர்பாராமல் அங்கே சந்தித்த கௌசல்யாவின் முகம் சில கணங்கள் வியர்த்து இருண்டு விட்டது. அதைச் சமாளித்து கொண்டு, ”நீங்க எப்படி இங்கே” என்றாள். இவனோ “உங்களைப் பார்க்கத்தான்” என்றான் சகஜமாக

“என்னையா?” என்று கேட்டு அவள் அடுத்து வேறு எதையோ கேட்கும் முன்பே, “வாழ்க்கை முழுக்க உங்க கூட வாறதுன்னு முடிவு செய்துட்டேன், இப்போதைக்குப் பின்னால் உட்காருங்க. உங்களை உங்க ஆபீஸ்லே டிராப் பண்றேன்” என்றான். கௌசல்யா கண்களில் கோடாக கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தாள் அவஸ்தையான மௌனம். அந்த மௌனத்தைக் கலைத்தது குணாவின் பாக்கெட்டில் ஒலித்த செல்ஃபோன், எடுத்து “ஹலோ” சொன்னவனுக்கு, எதிர்முனையில் கிராமத்திலிருக்கும் அவனது ஒரே தங்கை கல்யாணி உற்சாகக் குரலில் பேசினாள். “அண்ணா! ஒரு சந்தோஷமான செய்தி, மாமா என்னைக் கல்யாணம் கட்டிக்க ஒப்புக்கிட்டார்.” இப்போது குணாவின் கண்கள் கலங்கி வழிந்தன.

“என்னோட தங்கை! போலியோ கோள். உங்களை மாதிரியே அழகி” என்று குணா சொல்ல, நிம்மதியாக அவன் பின்னால் பைக்கில் அமர்ந்தாள் கௌசல்யா.

- 13-02-2005 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)