வசுமதி ராமசாமி

 

ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம்.

வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 – 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர். தமிழ் எழுத்தாளரான அவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்ட எழுத்தாளர். படிப்புக்கு வயது தடையல்ல என்ற கருத்துடைய இவர், எழுபது வயதில் திறந்தவெளிப் பல்கலைக் கழக பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தவர்.

இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் வை.மு.கோதைநாயகி போல் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு பெயர் வசுமதி ராமசாமி. கோதைநாயகி ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன.

எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தவர் வசுமதி ராமசாமி.

தமிழ் எழுத்தாளரான அவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. படிப்புக்கு வயது தடையல்ல என்ற கருத்துடைய இவர், எழுபது வயதில் திறந்தவெளிப் பல்கலைப் பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தார். (இறுதி ஆண்டுத் தேர்வின் போது கணவர் மறைந்தது இவரைப் பாதிக்கவே படிப்பைத் தொடரவில்லை.)

தினமணி கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இந்திய, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான “காப்டன் கல்யாணம்’, சமகாலச் சரித்திர நாவல் என்ற வகையில் கல்கியின் “அலை ஓசை’ போலவே குறிப்பிடத்தகுந்த இன்னொரு படைப்பு.

கொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா மோகனாம்பாள்’ விகடனில் வெளிவந்த அதே காலகட்டத்தில், வசுமதி ராமசாமியின் “காப்டன் கல்யாணமும்’ விகடனில் வந்தது. “”தில்லானா மோகனாம்பாள் வந்த நேரத்திலேயே என் நாவலும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. அதைப் படிப்பவர்கள் எல்லாம் என் எழுத்தையும் படிப்பார்கள் இல்லையா?” என்று எந்தப் பொறாமையும் இல்லாமல் அவர் சொல்லி மகிழ்ந்ததுண்டு. கல்கி எழுத்துகளின் தீவிர ரசிகை. தம் எழுத்தில் தென்படும் மெல்லிய நகைச்சுவைக்குக் கல்கிதான் தமது குரு என்று அவர் சொன்னதுண்டு.

காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர். காந்தி சென்ற வழியில் நடந்தவர் மட்டுமல்ல, காந்தி காட்டிய வழியில் நடந்தவரும் கூட.

முத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இவர் கொண்ட நட்பு இவரைச் சமூக சேவை செய்யத் தூண்டியது. அன்னிபெசன்ட் நிறுவிய “இந்திய மாதர் சங்கம்’ என்ற, எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அமைப்பை ஈடுபாட்டோடு நடத்திவந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போது அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது.

லால்பகதூர் சாஸ்திரியிடம் யுத்த நிதியாக அந்தக் காலத்திலேயே 500 பவுன் திரட்டிக் கொடுத்தவர். மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்ட எழுத்தாளர். “தேவியின் கடிதங்கள்’ என்ற இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் ராஜாஜிதான். ராஜாஜியிடம் மூன்று ஆண்டுகள் உபநிடதமும் கற்றவர்.

சிட்டி, ரா.கணபதி, பரணீதரன் போல இவரும், நூறாண்டுத் தவமுனிவரான காஞ்சிப் பரமாச்சாரியார் மேல் மிகுந்த பக்திகொண்டவர். “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அதிபர் ராம்நாத் கோயங்கா, பரமாச்சாரியாரை நடமாடும் கடவுள் என்று, தாம் அளித்த “இல்லஸ்டிரேடட் வீக்லி’ நேர்காணலில் சொன்னபோது, அந்தக் கருத்தை நூறு சதவிகிதம் ஏற்றவர் வசுமதி ராமசாமி. பரமாச்சாரியார் கட்டளைப்படி, “ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் என்ற வகையில் தங்கத் தாலி அளித்துவந்தார். (அந்தச் சங்கத்தைத் தற்போது வசுமதி ராமசாமியின் புதல்வி சுகந்தா சுதர்சனம் நிர்வகிக்கிறார். இலவசத் தங்கத் தாலி வழங்கும் தொண்டு தொடர்கிறது.)

காவிரியுடன் கலந்த காதல், சந்தனச் சிமிழ், பார்வதியின் நினைவில், பனித்திரை, ராஜக்கா முதலிய பல சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். “ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள்’ என்ற ஆன்மிக நூலின் ஆசிரியரும் கூட. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, எஸ்.அம்புஜம்மாள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இன்று ஐநூறு மாதக் கூட்டங்களை ஒரு மாதம் கூட விட்டுவிடாமல் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டிருக்கும் “இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் முதல் கூட்டத்தில் இவரது “சிவன் சொத்து’ என்ற கதையைப் பரிசுக் கதையாகத் தேர்ந்தெடுத்தவர் அகிலன்.

சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் இவரும் ஒருவர். பாரத தேவி, ராஜ்ய லட்சுமி போன்ற பெண் முன்னேற்றத்துக்கான பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தவர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள “சீனிவாச காந்தி நிலைய’த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார். சுமார் 20 ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார்.

சீனிவாச காந்தி நிலையத்தில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மேல் துளசிமாடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஔவை டி.கே.சண்முகம் இலவசமாக நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஔவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.

கணவர் ராமசாமி முன்னணி வழக்கறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். மனைவியின் எழுத்தார்வத்துக்கு உறுதுணையாக இருந்தவர். வசுமதி, கணவர் ராமசாமியைக் கைப்பிடித்தபோது வசுமதியின் வயது பன்னிரண்டுதான். 62 ஆண்டுகள் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தினார்.

“அசோக் லேலண்ட்’ நிர்வாக இயக்குநர் சேஷசாயி இவரது புதல்வர். தவிர, இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமுக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் புதல்விகள். வசுமதி ராமசாமி, தம் குழந்தைகளின் உள்ளத்தில் மட்டுமல்ல, தம்மால் பயன்பெற்ற ஏழைப் பெண்கள் உள்ளங்களிலும் இலக்கிய ரசிகர்கள் உள்ளங்களிலும் நிலையாக வாழ்கிறார்.

[நன்றி: தினமணி]

வசுமதி நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் நான்கு புதினங்களையும் எழுதியுள்ளார். அவை பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன.

படைப்புகள்

  • தேவியின் கடிதங்கள்

சிறுகதைகள்

  • காப்டன் கல்யாணம்
  • காவிரியுடன் கலந்த காதல்
  • சந்தனச் சிமிழ்
  • பார்வதியின் நினைவில்
  • பனித்திரை
  • ராஜக்கா

இதழாசிரியர்

“ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள்’ என்ற ஆன்மிக நூலின் ஆசிரியராகவும், பாரத தேவி, ராஜ்ய லட்சுமி போன்ற பெண் முன்னேற்றத்துக்கான இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார்.