கு.ப.சேது அம்மாள்

 

கு.ப.சேது அம்மாள் (1908 – நவம்பர் 5, 2002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை.

வாழ்க்கைக் குறிப்பு
சேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

புதினங்கள்

மைதிலி
உஷா
தனி வழியே
ஓட்டமும் நடையும்
அம்பிகா
கல்பனா
குரலும் பதிலும்
உண்மையின் உள்ளம்
வள்ளியின் உள்ளம் (1961)

சிறுகதைத் தொகுதிகள்

தெய்வத்தின் பரிசு
வீர வனிதை
உயிரின் அழைப்பு
ஒளி உதயம்
அபுனைவு நூல்கள்
சமையற்கலை (இருபாகங்கள்)
பாரதப்பெண்
போதி மாதவன் (புத்தர் வரலாறு)

1930 – 1960 வரையிலான தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்! – விகடன்.காம்

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலின் சகோதரியான இவர், தன் வீட்டில் நிலவிய இலக்கியச் சூழலின் உந்துதலால் எழுதத் தொடங்கியவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதியவர். இவருடைய படைப்புகள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டன.

மங்கை',கலைமகள்’, கலா மோகினி' ஆகிய இதழ்களில் இவர் தொடர்ந்து எழுதியுள்ளார்.வீர வனிதை’ (1958), தெய்வத்தின் பரிசு' (1965),உயிரின் அழைப்பு’ (1966) ஆகியவை இவர் எழுதிய முக்கிய நூல்கள்.

புதுமைப்பித்தன் குடும்பத்திலிருந்து வந்த கமலாவிருத்தாச்சலம் குறைவில்லாக் கதை தந்ததுபோல அமரத்துவம்மிக்க பல சிறுகதைகளைத் தந்த கு.ப.ரா-வின் சகோதரி எப்படி எழுதியிருக்கிறார் என்று பார்க்கும் குறுகுறுப்பு எல்லோரையும்போல எனக்கும் இருந்தது.

1908-ம் ஆண்டில் பிறந்த அவருக்கு அன்றைய கால வழக்கப்படி 11 வயதில் திருமணம் செய்விக்கப்பட்டது. அவருடைய மனதில் இலக்கியத்தின்மீதும் படிப்பின்மீதும் ஆர்வத்தை விதைத்தவர் அவருடைய சகோதரர் கு.ப.ராஜகோபாலன். சேது அம்மாளை, தாகூரின் சாந்தி நிகேதனில் படிக்கவைக்க கு.ப.ரா ஆசைப்பட்டாராம்.

ஆனால், அம்மாவின் வீட்டோ அதிகாரத்தால் அந்த வாய்ப்புப் பறிபோனது. கு.ப.ரா-வுக்கு பார்வை இழப்பு ஏற்பட்ட பிறகு, அவர் சொல்லச் சொல்ல அவருடைய கதைகளை எழுதும் பொறுப்பை சேது அம்மாள் ஏற்றுக்கொண்டார். அப்போது ஏற்பட்ட ஆர்வமே அவரை சொந்தமாகக் கதை எழுதத் தூண்டியது. அவருடைய முதல் கதையான செவ்வாய்தோஷம்'காந்தி’ இதழில் 1939-ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து 500 சிறுகதைகளும், 9 நாவல்களும், சில ஓரங்க நாடகங்களும் அவர் எழுதியுள்ளார். இவையெல்லாம் இன்று வாசிக்க எளிதில் கிடைப்பதாக இல்லை.

`சிறுகதையின் வடிவத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு அதன் சர்வ லட்சணங்களோடு கதை எழுதிய முதல் பெண்மணி இவர்தான்’ என்று அவர் எழுதத் தொடங்கிய காலத்திலேயே பாராட்டப்பட்டவர்.

“ஒரு விஷயத்தை எழுத வேண்டும் என முடிவு செய்த பிறகு அதை சிறுகதையாக எழுதுவதா, நாவலாக எழுதுவதா என்பதை எப்படித் தீர்மானிப்பீர்கள்?” என்ற கேள்விக்கு அவரது பதில்…

`சிறுகதை என்பது ஓர் அங்கம்தான். முழு வாழ்வு அல்ல.” அவருடைய மனதுக்கு மிக நெருக்கமான நாவல் எனத் தன்னுடையகுரலும் பதிலும்’ என்கிற நாவலையே குறிப்பிடுகிறார். ஆணாதிக்கச் சூழலில் பெண்கள் தங்களுக்குள் அன்பால் கட்டுண்டு வாழ்வை எதிர்கொள்ளும்விதத்தை அதில் சித்திரித்துள்ளார். காந்தியத்தின்பால் ஈர்ப்புக்கொண்டு பல கதைகளை அவர் எழுதியுள்ளார்.

இளம் பெண் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?'' என்ற கேள்விக்குஎழுதுவது வாசகரின் மனதில் நிற்க வேண்டும். நம்முடைய புத்தகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு அவர்களுக்கு ஏற்படும்படி எழுத வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.

சிறுகதை முன்னோடி சேது அம்மாள் – https://www.hindutamil.in/

தமிழில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப. சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவர் கு.ப.ரா. எனப்பட்ட கு.ப. ராஜகோபாலன். அவருடைய தங்கைதான் சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை உலகில் காலடி எடுத்து வைத்த பெண் எழுத்தாளர்களுக்கு அவர் முன்னோடி.

அண்ணன் காட்டிய உலகம்

மிகக் குறைந்த காலமே வாழ்ந்த கு.ப.ராஜகோபாலனுக்குக் கண்புரை பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவருக்குக் கைகொடுத்து, அவர் சொல்லச் சொல்ல எழுதித் தந்தவர் சேது அம்மாள். வெறும் எழுத்தராக மட்டும் தங்கை சேது அம்மாளை கு.ப.ரா. நிறுத்திவிடவில்லை. தங்கையின் அறிவு தாகத்தையும் இலக்கிய ஆவலையும் தூண்டிவிட்டார்; படிக்க வலியுறுத்தினார். சேது அம்மாள் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தார்.

இப்படி அண்ணனுடைய கற்பனைகளுக்கு எழுத்துருவம் கொடுத்துவந்த அவர், தானும் இலக்கிய உலகில் புகுந்தார். தனியாகச் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். அவரது முதல் சிறுகதையான ‘செவ்வாய் தோஷம்’, 1935-ம் ஆண்டில் ‘காந்தி’ என்ற இதழில் வெளியானது.

சிறுகதை சாதனை

தொடர்ந்து மணிக்கொடி, பாரதி, கல்கி, குமுதம், ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல இதழ்களில் சேது அம்மாள் சிறுகதைகளை எழுதினார். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி உதயம்’, 13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. அது கு.ப. ராஜகோபாலனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

அதன் பிறகு ‘தெய்வத்தின் பரிசு’, ‘வீர வனிதை’, ‘உயிரின் அழைப்பு’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை சேது அம்மாள் வெளியிட்டிருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ‘1940-களிலேயே சிறுகதையின் வடிவம், நுணுக்கங்கள் சார்ந்த நல்ல புரிதலைக் கொண்டிருந்த எழுத்தாளர்’ என்று சேது அம்மாளை விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

இலக்கிய உலகின் வேறு பல வடிவங்களிலும் சேது அம்மாள் எழுதியிருக்கிறார் என்ற போதிலும், ஆரம்பகாலச் சிறுகதை வடிவத்தில் அவருடைய முயற்சிகளும், ஆரம்பகாலப் பெண் எழுத்தாளராக அவருடைய பங்கும் மிக முக்கியமானவை.