பக்தைக்கு அருளிய பாண்டுரங்கன்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,994 
 

இசை வேளாளர் குலத்தில், சியாமா என்ற பெண்மணியின் மகளாகப் பிறந்தவள் கானோபாத்திரை. நல்ல அழகி. பக்தி மிகுந்தவள். இவளது இனிமையான குரலில் எல்லோரும் மயங்கினர். இசையில் மட்டுமின்றி, நாட்டியத்திலும் தேர்ந்தவள் கானோபாத்திரை.

பக்தைக்கு அருளிய1அவளுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே பாண்டுரங்கரை மிகவும் பிடிக்கும். எனவே இவளது பாட்டும், நடனமும் பெரும்பாலும் பகவான் பற்றியதாகவே இருந்தது. இவளும் பண்டரிநாதனைத் தன் கணவராக நினைத்து, கற்பனையில் பகவானுடன் வாழ்ந்தாள். பகவானை நோக்கி பக்தன் ஒருவன் ஓர் அடி நடந்தால், உடனே கடவுள் அவனை நோக்கி ஓடி வருவார் என்பார்கள். ஆனால், கானோபாத்திரையோ சதா அவரையே அல்லவா நினைத்தாள்!

தாயார் சியாமா அரண்மனையில் நடனம் ஆடுபவள். எனவே, மகளையும் அரண்மனைக்கு நடனமாட அழைத்தாள். கானோபாத்திரை அதை விரும்பவில்லை. தாயாரும் வற்புறுத்தவில்லை. இவளது ஆடல்& பாடலை கோயிலில் பார்த்து ரசித்த அரசர், கானோபாத்திரையை மணம் புரிய விரும்பினார்.

அப்போது பண்டரிபுரம் செல்லும் பஜனைக் குழு ஒன்று இவர்கள் வசித்த நகருக்கு வந்தது. அங்குள்ள கோயிலில் தங்கி கீர்த்தனங்கள் பாடினர் அவர்கள். இவர்களுடன் பஜனையில் கலந்து கொண்ட கானோபாத்திரை, தானும் அவர்களுடன் பண்டரிபுரம் செல்ல விரும்பினாள். தாயாரிடம் சம்மதம் கேட்டாள். அவரும் இதற்குச் சம்மதித்ததால் சிப்ளாகட்டை மற்றும் தம்புராவுடன் அவர்களோடு புறப்பட்டாள்.

பண்டரிபுரம் சென்ற கானோபாத்திரை, அங்குள்ள பீமா நதியில் நீராடி, பகவானை தரிசித்து, நிறையப் பாடல்கள் பாடினாள்… ஆடினாள்! பக்தியும், ஜபமும், நாம பஜனையும் அவளை ஆனந்தக் கடலில் ஆழ்த்தின.

அவளை அடைய விரும்பிய அரசர், தன் சேவகர்களை பண்டரிபுரத்துக்கு அனுப்பினார். வராவிட்டால், அவளை இழுத்து வருமாறும் கட்டளையிட்டார். கானோபாத்திரை அவர்களிடம், ‘‘சேவகர்களே, நான் உங்களுடன் வருகிறேன். அதற்கு முன் ஒரு முறை பண்டரிநாதனை தரிசிக்க விரும்புகிறேன். எனவே, நீங்கள் வெளியிலேயே நில்லுங்கள்!’’ என்றாள்.

பிறகு பகவானின் சந்நிதியை நோக்கிச் சென்ற கானோபாத்திரை, ‘‘கண்ணா, பிறந்தது முதல் உன்னை தியானித்து, உன் நினைவாக வாழும் என்னை இவர்களுக்கு அடிமை ஆக்காமல், அழைத்துக் கொள்!’’ என்று வேண்டினாள்.

பக்தைக்கு அருளியஅப்போது ஆலய மணிகள் மொத்தமும் ஓசை எழுப்பின. சங்கு முழங்கியது… வேத ஒலி கேட்டது. பண்டரிநாதனின் கண்களிலிருந்து பிறந்த ஜோதியில் கானோபாத்திரை கலந்தாள். பகவான் தன் பக்தையை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அதன் பிறகு அவள் உடல் அடியற்ற மரம் போல கீழே விழுந்தது.

இதைக் கண்ட அர்ச்சகர்கள், அரசரின் சேவகர்கள் அறியா மல், கோயிலின் தெற்கில் குழி ஒன்றைத் தோண்டி அவளைப் புதைத்தனர். அப்போது அங்கு ஒரு பிரகாசம் தோன்றியது. கண் சிமிட்டும் நேரத்துக்குள் அங்கு ‘தான்றி’ என்ற பெயருள்ள மரம் ஒன்று தோன்றியது. பச்சை இலைகளுடன் பூக்களும் தோன்றின. அந்த மரத்தின் பூ மணம் நாலா திக்கிலும் பரவியது.

வெளியில் நின்றிருந்த சேவகர்களும், அரசாங்க அதிகாரிகளும் இதையெல்லாம் நம்பாமல் பொய் சொல்வதாகக் கூறி, அர்ச்சகர்களை விலங்கிட்டு, அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர்.

கோபம் கொண்ட அரசரிடம், அர்ச்சகர்கள் அங்கு நடந்ததைக் கூறினர். பின்னர் அரசர் உட்பட எல்லோரும் கோயிலுக்கு வந்தனர். திடீரென்று அங்கு தோன்றிய தான்றி மரத்தைக் கண்டனர். அதற்குள் அங்கு வந்த பெண்களும் ஆடவர்களும் மரத்தைச் சுற்றி வந்து வணங்கி, தீபம் ஏற்றி வழிபடத் தொடங்கியிருந்தனர். மக்கள் இவ்வாறு தெய்வமாகப் போற்றும் கானோபாத்திரையை, தான் தவறாக எடை போட்டதற்காக வருந்திய மன்னர், அர்ச்சகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அதோடு கோயிலுக்கு பொன், பொருள்கள் மற்றும் நிலத்தை காணிக்கையாக எழுதி வைத்தார்.

இன்றும் பண்டரிபுரத்தில் இந்த தான்றி மரத்தைக் காணலாம். இந்த மரத்தை வழிபடும் பக்தர்கள், அதன் இலையைப் பிரசாதமாகப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த மரம் உள்ள கோயில் வாசலை, ‘ஸ்ரீகானோபாத்திரை வாயில்’ என்றே அழைக்கிறார்கள்.

பக்தியால் பகவானிடம் ஐக்கியமடைந்த ஸ்ரீகானோபாத்திரையை நாமும் வணங்குவோமாக!

– ஆலப்புழை உமா ஹரிஹரன் (நவம்பர் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *