நாகலோகக் காதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 17, 2023
பார்வையிட்டோர்: 16,953 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘அர்ஜூனா’ என்று அன்பர்க அழைத்தார் கிருஷ்ண பகவான்.

‘ஸ்வாமி’ என்று மகிழ்வுடன் வந்தான் விஜயன்.

‘பார்த்திபா! நீ கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று மாயவன் கேட்டார் புன்னகை புரிந்த வண்ணம். காண்டீபனுக்கு முதலில் ஐயம் எழுந்தது. ஒரு வேளை மாதவன் தன்னைக் கேலி செய்கிறாரோ என எண்ணினான். திக்விஜயம் செய்து அற்புத அழகிகளை மனைவியராகப் பெற்று இன்ப வாழ்வு வாழ்பவன் அவன். அவனிடம் இப்படிக் கேட்டால்! ‘என்ன பிரபோ விளையாடுகிறீர்களா?’ என்று கேள்வி போடாமல் மௌனமாக நிற்க முடியவில்லை அவனால்.

கண்ணன் நகைத்து விட்டுச் சொன்னார்: ‘கேலி யல்ல பார்த்தா, விளையால்டாவது! கல்யாணத்திலுமா விளையாட்டு!’

‘இதுவரை நிகழ்ந்த திருமணங்களும் அப்படித் தானே! அல்லியை அடைந்ததும், பவளக் கொடியாளை மணம் புரிந்ததும், சுபத்திராவைக் கல்யாணம் செய்து கொண்டதும் எல்லாமே நமது திருவிளையாட்டுகளின் இன்ப ஏடுகளல்லவா?”

‘அவை கிடக்கட்டும், விஜயா, இது விளையாட்டல்ல. வினை தான். இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கவேண்டிய பொறுப்பு என் மீது விழுந்து விட்டது…’

‘அந்தப் பெண்களை என்னிடம் ஒப்புவித்து விடலாம் என் யோசனையோ! உங்களிடம் நான் ஒருவன் வந்து சேர்ந்தேனே’ என்றான் விஜய்ன்.

‘இல்லாவிடில் அர்ஜூனா, உன் ரசனை தெரியாமலா போய் விடும்’.

அவன் சிரித்தான். ‘தேவ, கன்னியர் எங்கு கிடைத்தனர். தங்களிடம் பொறுப்பு வந்தது எவ்விதம். அறியலாமோ?’ என வினாவினான். கிருஷ்ணன் குறும்புச் சிரிப்புடன் ‘பெண் யார், என்ன விஷயம் என்னும் ஆவலை அறிய இது ஓர் வழியோ!’ என்றார். தொடர்ந்தே சொன்னார் ‘விஷ மடு ஒன்றிலே குதித்து அங்கு கொட்ட மடித்தலைந்த காளிங்கன். தலையை மிதித்து கர்த்தனம் புரிந்தேனா! அந்த நாகராஜன் உயிர்ப் பிச்சை வேண்டினான். கொடுத்து அனுப்பவே, அவன் தன் இரு புதல்விகளையும் என்னிடம் சமர்ப்பித்தான். அந் நாககன்னியருக்கு ஏற்ற கணவனிடம் அவர்களை ஒப்புவிப்பதாக வாக்களித்தேன். நீ தான் அவர்களுக்குத் தகுந்தவன்’.

‘சரிதான்! நாகமாவது, கன்னியாவது! இது என்ன புரளி, கிருஷ்ணா!’

‘என்னை, பெண் என்றாலே மயங்கி விடும் பித்தன் என எண்ணினீர்களா? அழகாம், பாம்புப் பெண்ணாம்…’

‘விஜய! நீ உன்னையே மறந்து விடுகிறாயே. நீரின் அசைவில் சலன மிட்ட நிழலைக் கண்டு மயங்கி அல்லி, அல்லி வா வா என்று ஜெபம் பண்ணியது யார்? ‘பவளக் கொடியின் மீதில் ஆசை மறப்பேனோ நானே’ என்று ஓலமிட்டு, பின் பாவையை மணக்கப் பாம்பாக மாறியது யார்? இப்படி நீயாக ஏங்கித் தவிக்க வேண்டும் போலும்! நாககன்னியர் வலிய வரும் சீதேவிகள் அல்லவா? விலக்கத்தான் செய்வாய். எனக்கென்ன, வேறு எவனையாவது பார்த்து, மணம் செய்து வைத்து விட்டுப் போகிறேன்!’ என்று சொல்லி கிருஷ்ணன் வெளியே கிளம்பத் தயாரானார்.

தனஞ்சயன் உள்ளம் துடிக்கத் தொடங்கியது. ‘ கண்ணா வேண்டாம். சும்மா சொன்னால்…’ என்று கெஞ்சத் தொடங்கினான். ‘அப்படி வா வழிக்கு!’ என்று தலையை ஆட்டினார் கிருஷ்ணபிரான். ‘இன்று எனக்கு வேலை இருக்கிறது. நாளை திருமணத்தை முடித்து விடலாம்’ என்று சொல்லி மறைந்தார் மாயவன்.

அவர் போனபின் தான் விஜயனின் மனம் வேலை செய்ய ஆரம்பித்தது! கேட்டதுமே காதல் கொண்டு விட்டான் அவன்! ஆனால், அவர்களை எங்கே பார்ப்பது? ‘கிருஷ்ணன் எப்பொழுதுமே இப்படித்தான். தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது! பிறர் உணர்ச்சிகளைக் கவனிப்பதே இல்லை!’ என்று முணங்கியது அவன் உள்ளம். அதே கவலையாக அவன் வெளியே கிளம்பினான்.

சட்டென்று நின்று பார்க்கும் போது பிருந்தாவனத்தை அடுத்த நீர் நிலையருகே வந்திருப்பதை உணர்ந்தான். முன்பு அந்த இடம் அச்சத்தின் நிலைக்களனாக இருந்தது. அதனருகில் மிருகங்கள் கூடச் செல்லா, வானக் கடலில் நீந்தும் பறவைகள் கூட அந் நீர்ப்பரப்பிற்கு மேலே வந்ததும் மயங்கி நீரில் விழுந்து விடும். ஆனால், இன்றோ! பறவைகள் களிவெறிக் கானம்பாடி பறந்து திரிந்தன. நீர்க்கரை யோரமாக அவன் பார்வை மிதந்தது. திகைத்து நின்றான்.

அது யார்? இவ்வளவு துணிகரமாக விஷ வாவியில் கால்களை ஊன்றி, நீரில் நெளியும் தன் நிழலையே ரசித்த வண்ணம் நிற்கும் மோகனாங்கி யார்? இந்தப் பிராந்தியத்திற்கே புதிதா என்ன! இல்லாவிட்டால், இந்நீரின் தன்மை தெரியாமல் இப்படி நிற்பாளா! அர்ஜுனன் மனதில் பலவிதமான எண்ணங்கள் அலைபுரண்டன. முதலில் அவளுக்கு எச்சரித்துவிட வேண்டும்.

நெருங்கினான். காலடி. ஓசை கேட்டு அவள் தலை நிமிர்ந்து பார்த்தாள். மின் நெளிவு போல ஒரு கண் வீச்சு. உடனேயே நாணத்தின் பிரதிபலிப்பாகி, தலை குனிந்தாள். விஜயனின் உள்ளம் துடித்தது. ‘சுந்தரி, இந்த மடு விஷம் நிறைந்தது. அதில் இவ்விதம் நில்லாதே’ என்றான்.

அவள் செவிடா என்ன! அசையாத பதுமை போல நிற் பானேன்? ‘சுந்தரி, சொல்வது புரியவில்லையா, என்ன! ‘ என்று கேட்டான் அவன்.

அவள் அவனை நோக்கினாள். ‘விஷமா! அது என்னை ஒன்றும் செய்யாது’ என்று சொல்லி, குறும்புச் சிரிப்புடன் நீரில் குதித்து விட்டாள். ‘அட்டா தற்கொலை செய்து கொள்ள வந்தவளா! அவள் எண்ணம் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே. அவளைத் தடுத்திருக்கலாமே. என்ன அழகு! இந்த சௌந்தர்யவதி இப்படியா..’

அவன் நினைவு இற்று விழும்படி காரியம் நிகழ்ந்தது. அற்புத சுந்தரி, வெண்ணலை வீசும் விரி நீரைக் கிழித்து எழும் இளஞாயிறு போல், ஒளி வீசும் சௌந்தர்யத்துடன் திரும்பவும் கரைக்கு வந்தாள். பாதரசக் குண்டுகள் போல் நீர் சொட்ட, அவிழ்ந்து புரளும் கருங்குழலும், சுடர் தெறிக்கும் தேக காந்தியும், நாகத்தின் மணிக் கண்கள் போல் தனி சேபையுடன் மீளிரும் கருவிழிகளும், அவள் நின்ற சாயலும் விஜயனை மயக்கின. ‘நீ யார்? நீ மோகினியா!’ என்று பிரமித்து நின்றான் விஜயன்.

‘இல்லை. நாக கன்னிகை’ என்றாள் அம் மோகனாங்கி. அறிமுகம் அர்ஜுனன் இதயத்தில் மின்னல் தாக்குதலாகப் பாய்ந்தது. ‘நீ தானா நாககன்னி! உன் தங்கை எங்கே?’ என்று அவசரமாகக் கேட்டான்.

இப்பொழுது அவள் திகைத்தாள். ‘நீங்கள் யார்? எங்களைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று சொல் பாணத்துடன், விழிப் பாணத்தையும் ஏவினாள். இனி அர்ஜுனனுக்கு என்ன கவலை. உரிமைக் குரல் தொடுத்தான். ‘பிரியே..’

அவள் சிறிது கோபம் காட்டினாள் முகத்தில். ‘அன்பே! நாகம் படம் விரித்து ஆடும் பொழுது ரொம்ப ரொம்ப நன்றாக, கவர்சிசிகரமாக இருக்கிறது. நீயும் கோபமுற்று சீறும் போது அற்புத அழகுடன் மிளிர்கிறாய்’ என்று காதல் அகராதியைப் புரட்டினான். அது தான் அவனுக்குத் தலைகீழ்ப் பாடமாயிற்றே!

‘நீங்கள் யார் என்று கேட்டால் வீண் வம்பு அளந்து கொண்டு…’ என்று அவள் சீறினாள். அவனோ மகிழ்வுடன் அணுகினான்: ‘கண்ணே . நான் தான் உன் கணவன், வில் விஜயன். காம்பீர்ய காண்டீபன். அழகு அர்ஜுனன். பார்த்தன்..’

அவன் அடுக்கிய பெயர்கள் அவள் உள்ளத்தில் பூரிப்பை எழுப்பின. ரோஜா மலரைப் போல் அவள் கன்னங்கள் சிவந்தன, நாணத்தால். ஆனால், சட்டென்று முகம் கறுத்தது. ‘ராஜன்! தனியாக நிற்கும் கன்னியிடம் தாங்கள் இப்படி வார்த்தையாடுவது சரியல்ல. என் தந்தை, எங்களை கிருஷ்ணபகவானிடம் ஒப்புவித்து விட்டார்.’

அவள் முடிக்கவில்லை. ‘அது எனக்குத் தெரியும். கிருஷ்ணனையும் தெரியும். கண்ணன் நினைப்பையும் நானறிவேன், எல்லாம் நான் விளங்கி விட்டுப் போகிறது’ என்று கூறி, அவளைப் பிடிக்க கை நீட்டினான். அவளோ ஒளிப் பாம்பென நெளிந்து கணத்திலே நீரில் பாய்ந்து பார்வையிலிருந்து மறைய முயன்றாள். விஜயனும் பின்னால் குதித்தான். முன் சென்ற கன்னியின் வழியே தொடர்ந்தான். நீரில் மிதந்து வந்தவர்கள் வேறு லோகத்தில் புகுந்து விட்டது போல் தோன்றியது.

திரும்பிய இடமெல்லாம் நாக நெளிவுகள். சர்ப்ப மேனியின் கண்ணாடிப் பளபளப்பு. தனிக் கவர்ச்சி. ‘இது தான் நாகலோகமா’ என்ற விஜயனின் வியப்பு சொல்லாக உதிர்ந்து விட்டது. திடுக்கிட்டுத் திரும்பினாள் கன்னி. ‘ ஐயோ! நீங்கள் ஏன் வந்தீர்கள்? எப்படி வந்தீர்கள்?’ என்று பதறினாள்.

‘உன் பின்னோலே தான் வந்தேன்’ என்றான் விஜய்ன். புன்னகை புரிந்து அவள் – ‘இங்கு பூலோகவாசிகள் வரக் கூடாதே!’ ‘ என்றாள். ‘நான் வந்து விட்டேனே!’ என்று சிரித்தான் அர்ஜூனன்.

அதன் பிறகு என்ன செய்வது! அவனை நந்தவனத்தின் புதர்களிடையே பதுங்கி இருக்கும்படியும், பின்னர் தான் வந்து கவனிப்பதாகவும் சொல்லிச் சென்றள் அவள். விதவிதமான மலர்ச் செடிகளும், வன்னக் கொடிகளும் நிறைந்த பூங்காவில் புகுந்தான் விஜயன்.

நேரம் சென்றது. ஓசை கேட்டதும் பார்த்தான். கன்னி தான். ‘ ஏன் இவ்வளவு நேரம். நாகலோகத்தில் உள்ளவர்களுக்குப் பசியாமல் இருக்கலாம்: அதனால் எனக்கும் பசிக்காதா என்ன’ என்று கேட்டான். ஆனால், அவன் எதிர்பாராதது 8. ந்தது.

அவள் பதில் சொல்லவில்லை. ஆனால், கூச்சலிட்டாள். ‘ஐயோ நா ஐந்து வந்திருக்கிறது!’ என்று. அர்ஜுனன் ‘பைத்தியம்! ஏன் உளறுகிறாய்?’ என்று கத்தினான். அவளோ அதிகம் கூப்பாடு போட ஆரம்பித்தாள்.

‘ஏனடி இப்படிக் கூச்ச லிடுகிறாய்! என்ன வந்து விட்டது!’ என்று கேட்டுக் கொண்டே வந்து சேர்ந்தாள், அவள் நிழல் போன்ற வேறோர் மங்கை, அவள் கையில் உணவுப் பொருள்களும், கூஜாவும் வைத்திருந்தாள்.

‘மனிதன் வந்து…’

‘அதனால் என்னவாம்!’ என்று கடிந்து விட்டு அர்ஜுனனிடம்: ‘இவள் தான் என் தங்கை. அசடு, மூளையே கிடையாது. கத்துகிறது’ என்று குறைபட்டுக் கொண்டாள். விஜயனின் திகைப்பு அப்பொழுது தான் மாறியது. ‘ஓகோ அது தான் பார்த்தேன், அவளும் உன்னைப்போலவே தான் இருக்கிறாள்’ என்று சொன்னான். அவன் பார்வை இளையவளின் அழகையும், மூத்தவள் வனப்பையும் எடை போடுவதில் அலைந்தது.

‘இவர் தானடி. அவர்…’ என்று ஆரம்பித்தாள். சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு, தலை கவிழ்ந்தாள். அவ்வளவு வெட்கம்! ஆனால், விழி நோக்கு கள்ளத்தனமாக விஜயன்மீது பாயாமல் இல்லை.

தங்கைக்கும் புரிந்து விட்டது. ‘நல்ல வேளை. முட்டாள் தனமாக நான் கத்தினேனே. யாராவது வந்திருந்தால்…?’ என்று முணு முணுத்தாள்.

‘வந்தாலும் ஒன்றும் நேர்ந்திராது. நான் தான் இருக்கிறேனே, அர்ஜூனன் உங்கள் கணவன் என்று அறிமுகம் செய்து வைக்க!’

‘சம்மனில்லாமலே ஆஜரான’ புதிய குரலைக் கேட்டு மூவரும் திரும்பினர். அங்கே கிருஷ்ணபகவான் புன்னகை தவழும் முகத்துடனும், ஆசி கூறும் கையுடனும் கம்பீரமாக நின்றார். ‘என்ன விஜயா?’ எனக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நீயாகவே மணப்பெண்களைத் தேடி வந்து விட்டாய் போலிருக்கிறதே!’ என்று குறும்பாக நகைத்தார்.

‘எல்லாம் தங்கள் கிருபையால் தான’ எனறான அர்ஜு னன், நாகக்கன்னியரோ மகிழ்வுடன், நாணி நின்றனர்.

– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *