ஆகா… விட்டேனா பார்! கண்ணனைத் தொலைத்து விடுகிறேன். படைகளே… கிளம்புங்கள்!’’ எனக் கூச்சலிட்டான் ஜராசந்தன். படைகள் கிளம்பினவே தவிர, ஏதும் திரும்பவில்லை. ஜராசந்தன் மட்டுமே திரும்பினான். பதினேழு தடவை இப்படி நடந்தது. ஜராசந்தன் இழந்த படைகளின் கணக்கை இந்த இடத்தில் சுகாசார்யர் சொல்கிறார். யானைகள் 85,51,170; தேர்கள் 85,51,170; குதிரைகள் 2,66,53,510; காலாட்கள் 4,27,55,850. இவ்வளவு இழப்பு ஏற்பட்டும், ஜராசந்தன் திருந்தவில்லை. பதினெட்டாவது தடவையாக, மறுபடியும் கண்ணனுடன் போரிடத் தீர்மானித்தான்.
அப்போது… காலயவனன் என்பவன் யாதவர் களுடன் போரிடும் நோக்கில், மூன்று கோடி வீரர்களுடன் வடமதுரையைச் சூழ்ந்து கொண்டான். அவன் மிகப் பெரும் வீரன். பாவம், முடிவைத் தேடி கண்ணனுடன் போரிட வந்து விட்டான். காலயவனனுக்கு யாதவர்கள் மேல் என்ன கோபம்?
யாதவர்கள் எல்லோரும் சபை ஒன்றில் கூடியிருந் தார்கள். யாதவர்களின் புரோகிதரான ச்யாலர் என்ற மகரிஷியும், கார்க்யர் என்ற மகரிஷியும் அங்கே இருந்தனர். அப்போது பேச்சுவாக்கில் ச்யாலர், கார்க்யரை, ‘‘நீ ஓர் அலி!’’ எனக் கேலி செய்தார். அதைக் கேட்டு அங்கிருந்த யாதவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். கார்க்யருக்கு அவமானமாகப் போய் விட்டது. அவர் மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார். அவர் மனது தன்னைக் கேலி செய்த ச்யாலரை விட்டு விட்டு, யாதவர்களையே நினைத்துக் கொண்டிருந்தது. ‘இவர்கள் சிரித்து விட்டார்களே… இவர்களுக்குப் பயத்தை உண்டாக்கும் குழந்தை ஒன்றை நாம் அடைய வேண்டும்!’ என்று எண்ணினார் கார்க்யர். இரும்புத்தூளை உணவாகக் கொண்டு, 12 வருடங்கள் கடுந்தவம் செய்தார். முடிவில் சிவபெருமான் காட்சி தந்து, ‘‘உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்றருளி மறைந்தார்.
வரம் பெற்ற மகிழ்வோடு அங்கிருந்து கிளம்பினார் கார்க்யர். அப்போது யவனேசன் என்பவன் வந்து, ‘‘முனிவரே! எனக்கு ஒரு பிள்ளை பிறக்க வேண்டும். ஆசி கூறுங்கள்’’ என வேண்டினான். யாதவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த கார்க்யர், ‘‘யவனேசா! யாதவர்களுக்குப் பயத்தைக் கொடுக்கும் குழந்தை ஒன்று பிறக்கும்… போ!’’ என்று சொல்லி ஆசி வழங்கி அனுப்பினார். அதன் பலனாக யவனேசனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. வண்டு போலக் கறுத்த நிறத்துடன் இருந்த அந்தக் குழந்தைக்கு ‘காலயவனன் எனப் பெயரிட்டார்கள்.
யாதவர்களுக்கு பயத்தைக் கொடுப்பதற்காகவே பிறந்த அந்தக் காலயவனன்தான் இப்போது வட மதுரைக்கு வந்தான். ‘எதிர்த்தவர்கள் எல்லோரையும் வெல்லும் திறமை படைத்த காலயவனன் யாதவர் களுடன் போரிட வந்து, வடமதுரையைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான்’ என்பது கண்ணனுக்குத் தெரிந்தது. அவர் உடனே பலராமரிடம் போய், ‘‘அண்ணா! இது என்ன கொடுமை? யாதவர்களுக்கு இரு புறமும் நெருக்கடி வந்து விட்டதே. காலயவனன் இப்போது நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான். இன்றோ, நாளையோ அல்லது நாளை மறு நாளோ ஜராசந்தனும் வரப்போகிறான். காலயவனனுடன் போரிடும்போது ஜராசந்தன் வந்தால், அவன் நம் உறவினர்களைக் கொன்று விடுவான்; அல்லது யாதவர்களைப் பிடித்துத் தன் ஊருக்குக் கொண்டு போவான். இக்கட்டான இந்த நேரத்தில், முதல் வேலையாக யாதவர்களைக் காப்பாற்ற வேண்டும். மனிதர்கள் சுலபத்தில் பிரவேசிக்க முடியாதபடி, கடல் நடுவில் ஒரு நகரத்தை உண்டாக்கி, நம் மக்களை அங்கே கொண்டு செல்ல வேண்டும். பிறகு காலயவனனை கவனிப்போம்!’’ என்று கூறினார்.
பலராமனும் அதற்கு ஒப்புக் கொண்டார். கடல் நடுவில் அற்புத மான ஒரு நகரம் உருவானது. தேவசிற்பி விஸ்வகர்மா, தமது திறமைகளை வெளிப்படுத்தி, அந்த நகரை உருவாக்கினார். வண்டிகள் போவதற்கான அகன்ற பாதை, மனிதர்களுக்காகக் கல் பாவிய சிறு நடை பாதை… பூங்காக்கள், அன்ன சாலைகள், குதிரைகள் முதலான விலங்கினங்களுக்காகக் காற்றோட்டமும், நீரோட்டமும் கொண்ட கால்நடைப் பண்ணைகள் ஆகியவற்றுடன் அந்த நகரம், மக்கள் வசிப்பதற்கேற்ற எல்லா வசதிகளுடனும் இருந்தது. (ஒரு நகரத்தை எப்படி நிர்மாணிக்க வேண்டும்? அதில் என்னென்ன இருக்க வேண்டும்? அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற தகவல்கள் இந்த இடத்தில் மூல நூலில் உள்ளன. நாம் பார்த்தது ஒரு சிலவே).
கடல் நடுவில் அழகாக அமைக் கப்பட்டிருந்த அந்த நகரம் துவாரகை என்று அழைக்கப்பட்டது. தேவேந்திரன், வருணன், குபேரன் ஆகியோர் கண்ணனுக்கு மிக உயர்ந்த வெகுமதிகளையெல்லாம் அனுப்பினர்.
அதன் பின் கண்ணன் தனது யோக சக்தியால் யாதவர்களை துவாரகைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார். பலராமன் அவர்களுக்குப் பாதுகாவலாக இருந்தார்.
அப்போது கண்ணன், ‘‘அண்ணா! சூது வாது அறியாத இந்த யாதவர்களைக் காப்பாற்றி விட்டோம். இனி காலயவனனை நான் கவனிக்கிறேன். நீங்கள் இங்கேயே காவலாக இருங்கள்!’’ என்று சொல்லி விட்டுத் தாமரை மாலை அணிந்து கொண்டு, தான் மட்டும் தனியாகக் கிளம்பினார்.
நகரை விட்டு வெளியே வந்த கண்ணன், காலயவனனின் கண்களில் படும்படியாக மெள்…ள நடந்தார். ஆயுதம் எதுவும் இல்லாமல் வெளிக் கிளம்பிய கண்ணனைப் பார்த்த காலயவனன், ‘‘ஆயுதம் இல்லாமல் தன்னந்தனி ஆளாக இவன் வருவதைப் பார்த்தால், இவன்தான் யதுகுலத் தலைவன் வாசுதேவனாக இருக்க வேண்டும். இவனைப் போலவே நானும் ஆயுதம் இல்லாமல், இவனுடன் சண்டை செய்யப் போகிறேன்’’ என்று கூவி விட்டு ஆயுதம் இல்லாமல் கண்ணனைப் பின்தொடர்ந்தான்.
யோகிகளால் கூட அடைய முடியாதவரான கண்ணன், தீயவனான காலயவனனின் கைகளில் அகப்படுவாரா என்ன! சற்று வேகமாகவே ஓடினார். காலயவனனும் தொடர்ந்தான். அவ்வப்போது கண்ணனை நெருங்க முடிந்ததே தவிர, அவனால் கண்ணனைப் பிடிக்க முடியவில்லை. ‘‘ஏய்! நில்! ஓடாதே!’’ என்று கத்திக் கொண்டே ஓடினான். அவன் கையில் சிக்காமல் ஓடிய கண்ணன், அங்கிருந்த மலைக் குகை ஒன்றில் நுழைந்தார். அதைக் கண்ட காலயவனன், ‘‘அப்படி வா வழிக்கு. அகப்பட்டுக் கொண்டாயா?’’ என்று கத்தியபடியே அவனும் குகைக்குள் நுழைந்தான்.
அங்கு நுழைந்த காலயவனன் எல்லாப் பக்கங்களிலும் கண்ண னைத் தேடினான். கண்ணனைக் காணவில்லை. ஆனால், அங்கே யாரோ ஒருவர் படுத்திருப்பதைக் காலயவனன் கண்டான். ‘ஓடி ஒளிந்தவர் இப்படிக் கண்களில் படும்படியாகப் படுத்திருப்பாரா?’ என்பதைக் காலயவனன் யோசிக்க வில்லை. ‘‘எனக்கு பயந்து கொண்டு வந்தவன், இங்கே படுத்துக் கிடக் கிறாயா? உன்னை விட்டேனா பார்!’’ என்று கூறியபடியே, அங்கே படுத்துக் கிடந்தவரைக் காலால் உதைத்தான் அவன்.
காலயவனனின் உதை பட்ட தும், நீண்ட காலமாக அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து, மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தார். அவர் பார்வையில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அந்தப் பார்வை காலயவனன் மீது விழுந்தது. அவ்வளவுதான். அதே விநாடியில் காலயவனன் சாம்பலாகிப் போனான். அவன் வாழ்நாள் முடிந்தது. அங்கே படுத்துக் கிடந்தவர் யார்? அவர் பார்வை பட்டுக் காலயவனன் ஏன் இறக்க வேண்டும்?
இக்ஷவாகு குலத்தில் மாந்தாதா என்பவர் இருந்தார். அவர் மகன் முசுகுந்தன். ஒரு முறை, அசுரர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் முசுகுந்தனிடம் வந்து, ‘‘மன்னா! எங்களுக்கு சேனாதிபதியாக இருந்து, எங்களைக் காப்பாற்றுங்கள்!’’ என்று வேண்டினர். முசுகுந்தனும் மறுக்காமல் ஒப்புக்கொண்டார். நீண்ட காலம் அவர் தலைமையின் கீழ், தேவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். முருகப் பெருமான் தேவசேனாதிபதியாக ஆன பிறகு, முசுகுந்தனைப் பொறுப்பில் இருந்து விலக்கிய தேவர்கள், அவருக்கு ஓய்வு கொடுத்தார்கள்.
அத்துடன், ‘‘மன்னா! நீண்ட காலமாக, நீ எங்களைக் காப்பாற்றியதற்கு நன்றி. அதற்குப் பிரதியுபகாரமாக ஏதேனும் வரம் வாங்கிக் கொள்!’’ என்றும் கூறினர்.அதற்கு முசுகுந்தன், ‘‘தேவர்களே! நீண்ட காலமாக ஓய்வே இல்லாமல் உழைத்ததால், எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. நான் நன்றாகத் தூங்க வேண்டும். அப்படித் தூங்கும்போது யாராவது என்னை எழுப்பினால், அவன் உடனேயே சாம்பலாக வேண்டும்’’ என்று வரம் கேட்டார்.
‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்றார்கள் தேவர்கள்.
வரம் பெற்ற முசுகுந்தன்தான், அந்தக் குகையில் தூங்கிக் கொண்டிருந்தார். விவரமறியாத காலயவனன், அவர் உறக்கத்துக்கு இடைஞ்சல் செய்து, தேவர்கள் வரத்தின்படி இறந்து போனான்.
விவரமறிந்த கண்ணனோ, யாதவர்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே அந்தத் திருவாரூர்க் காரரிடம் போய்ச் சேர்ந்தார் (திருவாரூரில் இன்று நாம் வணங்கும் சிவபெருமான், முசுகுந்தன் வைத்தது!). தூக்கம் கலைந்த முசுகுந்தனின் பார்வை குகையைச் சுற்றிப் படர்ந்தது. அப்போது அவர் எதிரில் கண்ணன் தரிசனம் அளித்தார்.
மேகம் போன்ற வடிவம், ஸ்ரீவத்ஸம் என்கிற அடையாளம், ஒளி வீசும் கௌஸ்துப மணி, வைஜயந்தி மாலை, நான்கு திருக்கரங்கள், புன்முறுவல் தவழும் திருமுகம், பிறவிப் பிணியைத் தீர்ப்பதுடன் சர்வ மங்கலங்களையும் அருளும் திருவடிகள் ஆகியவற்றுடன் தரிசனம் தந்த கண்ணனை, முசுகுந்தன் வணங்கித் துதித்து நிலையான பக்தியை வரமாகப் பெற்றார்.
– மே 2007