தியானம் செய்ய வாருங்கள் !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 88,371 
 
 

தியானம் – 5

வேத வியாசரின் மனைவி ஒரு தெய்வீக குழந்தையை கருவுற்றாள். சுகதேவ் பிறந்தான். பிறந்தது முதல், தன் தந்தை வேத வியாசரை அரித்தான் குழந்தை சுகதேவ். “பிரம்ம ஞானத்தை எனக்கு இப்போதே உபதேசி !”

வேத வியாசரும், சுக தேவரை ( பிற்காலத்தில் சுக முனிவர் ) , மிதிலை ராஜா, ஜனகரிடம் , பிரம்ம ஞானத்தை பற்றிய உபதேசம் பெற, அனுப்பி வைத்தார்,

வியாசரை போன்ற , ஒரு போற்ற தகுந்த மகா ஞானி , தன் மகனை ஒரு ராஜாவிடம் உயர்ந்த உபதேசம் பெற சீடனாக அனுப்பினார் என்றால், அந்த அரசனுக்கு தான் என்ன ஒரு ஏற்றம் ?

அந்த கால கட்டத்தில், ஜனக மகாராஜா , பிரம்ம ஞானி எனவும், கர்ம யோகி எனவும் பெயர் பெற்றவர். சீதையின், தந்தை, ராமனின் மாமனார். அவர் ஸ்திதப்ரஞன் என்பதின் முழு வடிவம் . எதிலும் சம நோக்குப் பார்வை கொண்டவர். கண்ணன் கீதையில் சொன்னது போல் ஜனகரும் யோகத்தில் நிலைத்தவர்.

“ஸர்வபூ⁴தஸ்த²மாத்மாநம் ஸர்வபூ⁴தாநி சாத்மநி|
ஈக்ஷதே யோக³யுக்தாத்மா ஸர்வத்ர ஸமத³ர்ஸ²ந​:” ||6-29|| என்கிறது கீதை

யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான். விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்மஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.’

***

சுக தேவரும் ஜனகனை காண அவர் அரண்மனைக்கு சென்றார். ஜனகர், வியாசரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சுகரை அழைத்து , அவரை தன் விருந்தாளியாக ஏற்றுக் கொண்டார் . இரண்டு மூன்று நாட்கள் கழித்து, தன்னை பார்க்க சொல்லி அவர் தங்க சகல ஏற்பாடுகளும் செய்தார்.

ஆனாலும், சுக தேவருக்கு, ஜனக மகாராஜாவின் சுக போகங்களும், அவரை சுற்றி இருந்த வசதிகளும் மிரள வைத்தன. “இவரா எனக்கு பிரம்ம ஞானம் போதிக்கப் போகிறார்? போகத்தில் மூழ்கிய இவர் எங்கே ? என் தந்தை வேத வியாசர் எங்கே ? என் தந்தை போயும் போயும், ஏன், இவரிடம் சீடனாக அனுப்பினார்? “ என வெறுத்து விட்டார். நொந்து விட்டார்.

இப்படியே சில நாள் கழிந்தது. ஒருநாள், ஜனக மகாராஜா சுக தேவரை கூப்பிட்டு, “ உன்னை நான் என் சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில், பிரம்ம ஞானம் பற்றி கற்க நீ தகுதியானவனா என முதலில் நான் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார் .

அதற்கு சுகதேவர் தயக்கமாக சொன்னார் “ உங்கள் செல்வத்தையும், வசதிகளையும் ,சுக அனுபவங்களையும் பார்க்கும் பொது, உங்களால் எனக்கு பிரம்ம ஞானத்தை போதிக்கும் அளவுக்கு ஞானம் இருக்குமா என சந்தேகமாக இருக்கிறது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் .. நான் திரும்பி போக விரும்புகிறேன். என்னை என் தந்தையிடமே அனுப்பி விடுங்கள் “

ஜனகருக்கு கோபம் வந்து விட்டது. கண்கள் சிவந்து விட்டன ! நாசி துடித்தது. உடனே, தன் காவலாளிகளை கூப்பிட்டார். “ இதோ இந்த பொடிப்பயலை, இழுத்துச்செல்லுங்கள். நாளை, நமது நகரை சுற்றி அழைத்து சென்று, மாட மாளிகைகள், கேளிக்கை கூடங்கள், கடைத்தெரு, அழகான பெண்கள் இருக்கும் அந்தப்புரம், அனைத்தையும் காட்டுங்கள். பார்க்கட்டும்! பார்த்து ரசிக்கட்டும்! .

ஆனால், இந்த பையன் கையில் ஒரு பாத்திரம் நிறைய, தளும்பும் அளவிற்கு, பாலை நிரப்பிக் கொடுங்கள். கூடவே இரண்டு காவலாளிகளையும் வழியில், இவன், ஒரு சொட்டு பால் சிந்தினாலும், இவன் தலையை வெட்டி விடுங்கள். இதுதான் இவனுக்கு தண்டனை ! ம்ம்.. இழுத்துச்செல்லுங்கள் இவனை !” என்று கோபமாக சொல்லி விட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றார்.

சுகதேவர் நடுங்கி விட்டார். இது என்ன கொடுமை ? நான் என்ன செய்வது? அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் என்ன அப்படி தவறாக பேசி விட்டோம்? இந்த தண்டனை பெற !

அடுத்த நாள் :

சுகதேவர் கையில், தளும்ப தளும்ப பாலுடன் ஒரு பாத்திரம். அதை கெட்டியாக பிடித்து கொண்டு, மிதிலை நகரை வலம் வந்தார். சுகதேவரின் பக்கத்திலே, இரண்டு சேவகர்கள், உருவிய கத்தியுடன், அவர் பாலை சிந்துகிறாரா என்று கண்ணில் எண்ணெய் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுகதேவர் , மிக ஜாக்கிரதையாக, பால் சிந்தக் கூடாது என்ற ஒரே எண்ணத்துடன், சிந்தையில் வேறெந்த எண்ணமும் இல்லாமல், பால் பாத்திரத்தை பத்திரமாக பிடித்து கொண்டு, மாட மாளிகைகள், கேளிக்கை கூடங்கள், கடைத்தெரு, அழகான பெண்கள் இருக்கும் அந்தப்புரம் அனைத்தையும் சுற்றி வந்தார்.

இறைவன் அருளாலும், அவரது ஆழ்ந்த கவனத்தாலும், ஒரு சொட்டு பால் கூட கீழே சிந்த வில்லை. அதனால் சுகதேவரின் உயிர் தப்பியது. ஒரு வழியாக, சுகர் அரண்மனை வந்தடைந்தார். அவரை வாசலில் வரவேற்றது வேறு யாருமல்ல, ஜனக மகாராஜா தான்.

சிரித்துக் கொண்டே ஜனகர் கேட்டது இதுதான் “என்ன, சுக தேவரே, எனது நகரை வலம் வந்தீரே, பிடித்திருந்ததா? எனது மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அந்தப்புர பெண்கள், எல்லாம் எப்படியிருந்தது ? அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் !“

சுகர் சொன்னார் “ நான் எதையுமே பார்க்கவில்லை. எனது மனம், உடல் அனைத்தும், இந்த பால் சிந்தாமல் வர வேண்டுமே என்ற சிந்தையில் மட்டும் தான் இருந்தது. வேறு எந்த எண்ணமும் எனக்கு இல்லை !”

ராஜா ஜனகர் சிரித்தார். “ இப்போது புரிந்ததா? உங்கள் மனம், கவனம், எண்ணம் பாலில் மட்டுமே இருந்ததால், வேறு எந்த சிந்தனையும் உங்களுக்கு இல்லை. இதுதான் தியானம், கவனம், நிதித்தியாசம். அது போல தான் நானும், நாட்டில், எவ்வளவு பிரச்சினைகள், தடைகள் இருந்தாலும், எவ்வளவு அலுவல் இருந்தாலும், அவை நடுவிலும் என் மனம் இறை பக்தியில் மட்டுமே நிலைத்திருக்கிறது.

அப்போதுதான் புரிந்தது சுகருக்கு, ஏன் ஜனக மகாராஜாவை எல்லோரும் கர்ம யோகிஎன்றும், பிரம்ம ஞானி என்றும் போற்றுகிறார்கள் என்று. சுகர் ராஜாவின் காலில் விழுந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொண்டு பிரம்ம ஞானத்தை உபதேசிக்க வேண்டினார். அவரை சீடனாக ஏற்றுக்கொண்ட ஜனகர், கேட்ட முதல் மூன்று கேள்விகள் :

ஜனகர் : “ தியானம் என்றால் என்ன ?”

சுகதேவ் : “ எப்போதும் இறைவனை இடைவிடாது பார்ப்பது, அவனது படைப்புகளை ஆழ்ந்து நோக்குவது, புரிந்து கொள்ள முயற்சிப்பது, “

ஜனகர் : “ எந்த மாதிரியான தியானம்” ? ( What type of concentration)

சுகதேவ் : “ நான் தளும்பும் பாலை , பாத்திரத்தில் ஏந்திய படி, அது சிந்தாமல் சிதறாமல் பார்த்துக் கொண்டே, வேறு எதிலும் நாட்டம் இல்லாமல், நகரை வலம் வந்தேனே, அதுபோல, ஒரே ஒரு சிந்தனை (ஏகாக்ரதம்) அதுவே தியானம் “

ஜனகர் : இப்போது சொல்லுங்கள் சுகதேவரே! பிரம்ம ஞானம் என்றால் என்ன?”

சுகதேவ் : “எத்துனை இடையூறுகள், தடைகள், இச்சைகள், சுக துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் பேதலிக்காமல், எப்போதும், இறை உணர்வு அவரது படைப்பு, அதில் முழு மனதுடன், ஈடுபாட்டுடன், தியானத்தில் இருப்பதே பிரம்ம ஞானம்.”

(Courtesy “ ஜெய பிரகாஷ் டங்க்வல் – Speaking Tree and google )

….

பகவத் கீதையில் கிருஷ்ணன் தியானத்தின் சிறப்பை இப்படி சொல்கிறான்.- ‘ஒவ்வொரு மனிதனும், தான் ஆற்ற வேண்டிய கடமைகளையும், நல்ல ஒழுக்கங்களையும் நினைத்து அதில் கவனமாக செயல் படுவது தான் தியான யோகம் .

இதிலே மூன்று நிலைகள் உள்ளன. முதலாவது : மனதை ஒரு முகப் படுத்துவது . இது தான் ஏகாக்கிரகம் (Focus). இரண்டாவது , வாழ்க்கையை ஒரு குறிக்கோளுடன் கூடிய வரம்புக்குள் வைத்துக் கொள்வது * (simplicity and austerity). மூன்றாவது மனதை , சுகத்திலும், துக்கத்திலும் சம நிலையில் வைத்துக் கொள்வது. ( ஸ்திதப்ரக்ஞன்). இதற்கு இடைவிடாத மன பயிற்சியும், வைராக்கியமும் வேண்டும். .

தியானம் என்பது புறச்சடங்குகளை நீக்கி விட்டு (let going rituals) ,உலக ஆசைகளை உதறி விட்டு (Pratyahara) , நம்முள் இருக்கும் இறைவனை காண முயல்வது (god realisation) . அல்லது நான் யார் என்ற (self realisation) கேள்விக்கு பதில் காண முயற்சிப்பது.

( நன்றி : நா. கிரிதாரி பிரசாத் அவர்களின் “கீதைப் பேருரை)

****

“என்ன மணி, தியானம் பண்ண ஆரம்பிக்கலாமா? “ என்று கேட்ட படியே உள்ளே நுழைந்தான் மணியின் நண்பன் விஷ்வா.

“ வா விஷ்வா ! உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன் ! மொட்டை மாடிக்குப் போய் உக்கார்ந்து தியானம் பண்ணலாம் வா !”என்று அழைத்தான் மணி. அப்போது மணி மாலை 5.00.

விஷ்வா சொன்னது போல, இரண்டு பேருக்கும், மொட்டை மாடியில் யோகா விரிப்பு ஏற்கெனவே விரிக்கப்பட்டிருந்தது இரண்டு பெரும் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டனர் .

“உனக்கு தெரியுமா மணி ! தியனத்திற்கென்று சில வரைமுறைகளை பகவத் கீதை சொல்கிறது. எப்படி அமரணும், என்ன நினைக்கவேண்டும், எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று.”

அதுக்கு முன்னே எனக்கு ஒன்னு சொல்லு, தியானம் ஏன் செய்ய வேண்டும் ? அதனால் மனதிற்கும் , ஆத்மாவிற்கும் என்ன பயன்? – என்று எதிர் கேள்வி கேட்டான் மணி .

“சரி, இரண்டையும் சொல்கிறேன், அப்புறம் எப்படி தியானத்தை ஆரம்பிப்பது என்பது பற்றி தியானிப்போம் !!” என்று சிரித்தான் விஷ்வா.

….

யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது.

பதஞ்சலிமகரிஷி ,யோகாவை திட்டமிட்டு நடைமுறைப் படுத்தப்படுத்தியுள்ளார். இவர் வழங்கிய பதஞ்சலி யோகசூத்திரம் சுருக்கமான 196 சூத்திரங்களை கொண்டுள்ளது. அஷ்டாங்க யோகா (எட்டு-அங்கங்கள் யோகா) என்ற முறைக்கு பதஞ்சலியின் எழுத்துக்கள் அடிப்படையாக இருந்தன.

யோகத்தின் எட்டு அங்கங்கள் : பதஞ்சலியின் அட்டாங்க யோகம்

யமம் ,நியமம் ,ஆசனம், பிராணாயாமம் (மூச்சை அடக்குதல்) ப்ரத்யாஹரம்(தனியாக நீக்குதல்) – புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.தாரனை( மன ஒருமைப்பாடு/மனதை ஒரு நிலைப் படுத்துதல்) ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல்,தியானம் (தியானதிற்கு எடுத்துக்கொண்ட பொருளின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்- இதை நிதித்யாசம் என்றும் சொல்வதுண்டு), சமாதி (விட்டு விடுதலை ஆதல் -உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைத்துவிடுதல்.) இவை பற்றி மேலும் அறிய “ தியானத்திற்கு ரெடியா? (தியானம் – 3)” படியுங்கள் :

யோகாவின் குறிக்கோள்

யோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி, மோட்சத்தை அடைவது வரை பல வகைப்படும்.உங்கள் உடல் உங்களுடன் ஒரு நிரந்தர/ நிலையான உறவை பேணி வர வேண்டும் , எப்படி என்றால் ஒரு அமைதியான , நடுநிலையான மனஅமைதி பெற்று விளங்கவேண்டும் என்பதே!.

(நன்றி : விக்கிபீடியா , கூகிள் (ta.wikipedia.org/wiki/யோகக்_கலை)

இதில் யமம், நியமம், ஆசனம், பிராணயாமம் மற்றும் பிரத்யயாரா ஆகிய ஐந்தும் பகிரங்கம். இதை ஏற்கெனவே பார்த்து விட்டோம். தேவைப்படில், மீண்டும் வருவோம். இது பற்றி மேலும் அறிய யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் – ஒரு கையேடு- படிக்கவும்

இப்போது அந்தரங்கம் எனப்படும் தாரணா, தியானா மற்றும் சமாதி பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

பதஞ்சலி சொல்லும் முதல் மூன்று சூத்திரங்கள் : ( sutra 2- 4)

1 . யோக: சித்த விருத்தி நிரோத: “[யோகமென்பது உளச்செயல் தடுத்தல் ].

மன எண்ணங்களை , தடுத்தல் தான் யோகம் . மன உளைச்சல், ஆசைகள், நிராசைகள், கோப தாபங்கள், விருப்பு வெறுப்புகள் , சுக துக்கங்களை அசை போடுதல், குரங்கு, மரத்துக்கு மரம் தாவுவது போல, கடந்த காலம், எதிர் காலத்திற்கு, நிமிடத்திற்கு நிமிடம் மனம் தாவுதல், போன்ற மன விருத்திகளை தடுத்தலே யோகம் (சாந்தி) இது பற்றி மேலும் அறிய

2 ததா த்ருஷ்ட்டு: ஸ்வரூபே அவஸ்தானம் [அப்போதே பார்ப்பவன் தன்னிலையில் உறைகிறான்]

அப்போதுதான், தியானத்தில் மனதை நிறுத்தும் போது தான் , மனிதன் தன்னை தானே உணர்கிறான். இரவில், சந்திர பிம்பத்தை, அசைவற்ற தடாகத்தில், முழுமையாக பார்ப்பது போல. தியானத்தில், மனிதன் தன்னை உணர்கிறான், இறையை உணர்கிறான், . இது பற்றி மேலும் அறிய இந்த கதையை படிக்கவும் – கோயில் (தியானம் -1)

3 வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ர [உளச்செயல் தோற்றம் பிறவற்றிலேயே]

ஒரு கல்லை விட்டெறிந்தால், தடாக நீர் அலைக்கழிந்து, சந்திர பிம்பம் சுக்கு நூறாவது போல , நம்மை அறிந்து கொள்ள முடியாமல் அலைக்கழிகிறோம். அதன் முடிவு, மன அமைதிஇன்மை, துன்பம் ! நமது மனம் ஒரு துணியைப் போல. எந்த நிற சாயத்தில் தோய்த்து எடுக்கிறோமோ, அந்த நிறத்திற்கு மாறி விடுகிறது இது பற்றி மேலும் அறிய , கர்ணன்- சல்லியன் பற்றிய இந்த கதையை படிக்கவும் – காது! ( தியானம் – 2)

(பதஞ்சலி சூத்திரங்கள் : Courtesy : Jaya Mohan’s works on Patanjali Yoga Sutras )

…..

“புரிந்ததா மணி ! தியானத்தால், நம்மை நாமே அறிந்து கொள்ள , உணர்ந்து கொள்ள , நமது உள்ளத்தில் உறையும் ஆன்மா , பரமாத்மா , இறைவன் பற்றி புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். தியானம் மூலம் , உடல், மனம், ஆத்மா மூன்றையும் இணைக்கிறோம். இப்போது தியானத்தை ஆரம்பிப்போமா?” என்றான் விஷ்வா

“சரி, அப்படியே ஆகட்டும்” என்றான் மணி .

சுவாமி சர்வப்ரியானந்தா அவர்கள், தியானம் பற்றிய ஒரு உரையில், தியானத்தை ஆரம்பிக்கும் முன், கடைப் பிடிக்க வேண்டிய விதிகள், படிகள் பற்றி இப்படி சொல்கிறார் .

தியானத்திற்கு முக்கியம், திரும்ப திரும்ப மனந்தளரா பயிற்சி, இடைவிடா பயிற்சி, வைராக்கியம் தேவை. இதற்கு குறுக்கு வழி எதுவும் இல்லை.
தியானத்திற்கு முதலில் வேண்டுவது ஞானம். இதையே, ஷ்ரவணம், மனனம், நிதித்யாசம் (தியானம் ) என்றும் சொல்கிறார்கள். கேட்டு , படித்து தெரிந்து கொள்ளல், அதை ஐயம் திரிபற அறிந்து கொள்ளல், பின்னர் அதை ஆழ்ந்த தியானத்தின் மூலம் ( one pointed focus, attention, concentration) அலசுதல். எனவே ஞானத்திற்கு வேண்டுவது தியானம். விதையிலிருந்து விருக்ஷம், பின் விருக்ஷத்திலிருந்து விதை, மீண்டும் விருக்ஷம், மீண்டும் விதை, இதுவே நம்மை நாமே அறிந்து கொள்ள , உணர்ந்து கொள்ள , நமது உள்ளத்தில் உறையும் ஆன்மா , பரமாத்மா , இறைவன் பற்றி புரிந்து கொள்ளஉதவும் படி ! பதஞ்சலியின் அட்டாங்க யோக சுத்திர ஏழாம் படி !

தியானம் செய்ய முக்கியமான அம்சங்கள் :

1. சோம்பேறித்தனத்திற்கு அடிமையாகாமல், விடாமல் தியானம் செய்யவேண்டும். இடை விடாத, வழக்கமான பயிற்சி முக்கியம்.

ப்ரஹதாரன்யா உபநிஷத் இப்படி சொல்கிறது ” ஓம் அசதோமா சத் கமய! தமசோமா ஜோதிர் கமய மிர்த்யோர்மா அமிர்தம் கமய !! ” -பொருள்: ஓம் !! உண்மைஅற்றதில் இருந்து உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக, மரணத்தில் இருந்து மரணமில்லா பெருவாழ்விற்கு அழைத்துச் செல்வாயாக (Brhadaranyaka Upanishad — I.iii.28)

2. உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்

3. வயிறு காலியாக இருக்க வேண்டும்

4. உகந்த நேரம் சந்தியா வேளை – காலை, மாலை

5 உகந்த இடம் : காற்றோட்டமான அமைதியான சூழல், தனிமை உகந்தது

6 . ஆசனம் : சுகாசனம் அல்லது, அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம் , பத்மாசனம்

7. முத்திரை : ஞான / சின் முத்திரை அல்லது சேஷ்ட முத்திரை

8. உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கவேண்டும்.

9. முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.

10.திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்

11.வாய்அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்

12.கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள்

13.மனநிலை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்எண்ணக் குவிப்பு ஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறுநினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்

14.எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம் ! நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும். கவலை வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம்.

14 A. கூடியவரை எதிர்மறை எண்ணங்களை குறையுங்கள். நேர்மறை எண்ணங்களை வளருங்கள் .

15.மனம் அலைந்தால் , நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு,பிறகு தியானத்தை தொடருங்கள்.எண்ணங்கள் தானே திரும்பி வரும்.

16.மூச்சு இயல்பாக விடுங்கள்

17.தியான காலம்ஆரம்பத்தில்தியான நேரத்தை 5 நிமிடங்கள்,பின் 10 நிமிடங்கள்,பின் 15, நிமிடங்கள்,

பின் 30 நிமிடங்கள்எனப்படிப்படியாகக் கூட்டுங்கள்.

18.நல்ல நட்பை பெற முயற்சியுங்கள், தீயவர் நட்பை ஒதுக்குங்கள்!

19.மனதை உள்நோக்கி குவியுங்கள். உணர்வு சார்ந்த இன்பங்களுக்கு ( உணவு, டிவி, கேளிக்கை போன்றவை ) இடம் கொடுப்பதை படிப்படியாக குறையுங்கள். கடினம் தான். ஆனால், முயற்சி திருவினையாக்கும் ! எளிமையான வாழ்க்கையை பழக்கிகொள்ளுங்கள்!! பற்றின்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். தியானத்தில் ஈடுபட, ஈடுபட , இவை எல்லாம் தானாக, படிப்படியாக வந்து விடும்,

20.இறையுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் ஒருமாத காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால் ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி, மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல், எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள்.

வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும்,தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும்.

(நன்றி : சுவாமி சர்வப்ரியானந்தாவின் உரை ., சஹஜ யோகா-தியான உதவிக்குறிப்புகள் , மற்றும் சித்தர்கள் சங்கமம் ப்ளாக்)

“ சரி ! தியானம் எப்படி ஆரம்பிக்கணும்னு சொல்லிட்டேன் ! இனி ஆரம்பி ! என்றான் விஷ்வா . “நாம தியானத்திற்கு புதிது என்பதால், எளிதான உபாயம் சொல்றேன் . உன் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக்கொள் ! அவரது நாமத்தை மனதில் அல்லது உச்சரிப்பால் நினை. “ஓம் கோவிந்தாய நம” என்றோ, ஓம் பார்வதியே நம என்றோ, ஓம் விக்னேஷாய நம என்றோ, உன் இஷ்ட தேவதையை , உன்னால் முடிந்த அளவு , 108 தடவை , அல்லது 216 தடவை ஆழ்ந்து நினை அல்லது உச்சரி !

மனம் அந்த நாம ரூபத்தில் ஒன்று பட வேண்டும் . இதற்கு நாம ரூப ஜப தியானம் என்று பெயர். கூடிய வரை, வேறு எந்த கவனச்சிதறலையும் தவிர் ! நன்கு தேர்ச்சி பெற்றதும் , நாம ரூபத்தை விட்டு விடலாம் . சரியா ?

இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. தியானத்திற்கும் ப்ரானாயமத்திற்கும் உள்ள வேறுபாடுகள், பிரார்த்தனைக்கும் தியானத்திற்கும் உள்ள வித்தியாசங்கள், ஆழ்ந்த தூக்கத்தை தியானம் என்று சொல்லலாமா? இதெல்லாம் பற்றி அப்புறம் சொல்றேன்!” என்று முடித்தான் விஷ்வா

மணி தியானத்தை ஆரம்பித்தான் . விஷ்வாவும் சேர்ந்து கொண்டான்.

…. தொடரும்

நன்றி : கூகல், விக்கி பீடியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *