சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை நாடகம்
கதைப்பதிவு: May 16, 2024
பார்வையிட்டோர்: 5,258 
 
 

(இந்நூல் அ.கீ.சு.நூலக ஓலைச்சுவடியிலிருந்து (எண்.ஆர். 2721) பதிப்பிக்கப்படுவதாகும், கி.பி. 1848 ஐ ஒட்டிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4

சிவன்கோயிலுள் சென்று மறைந்தார்!

வசனம் 

“இப்படியாகக் கண்ட கண்ட பேரெல்லாம் நிந்திக்க மகாசினங்காரர் சுந்தரரும் பின்துடர்ந்து வரக்,கிழவந்தணர் கோயிலே புகுந்து அந்தர் தியானமானபோது, சுந்தரருக்கு ஞானம் வந்து அரண்டு பிரண்டு அழுது புலம்பும் விதம் எப்படி யென்றால்” (25)

(அந்தர்தியானம் மறைதல்) 

சுந்தரமூர்த்தி நாயனாரின் பரவசப் பேச்சு

கலிப்பா 

45. நிர்மலமாய் நிற்குணமாய் நிரஞ்சனமாய் நிறரியமாய் 
நின்றுலகைப் படைத்தளித்துத் துடைப்பவன் நீ! 

யென்னையொரு பொருளாகி எழுந்தருளி வையமிசை
மன்னுமொரு வேதியன்போல் வந்தென்ன திருவருளோ?

மாலயனு வலியவந்தே அடிமைப்பட் டொருகொத்
தோலதனை ஈவோமென் றுரைக்கவுங்கே ளாதவன்நீ! 

யேதுமறியா திருக்குமெனை வலியவந் தடுமைசாதன
மீதெனக் காட்டித் தானாண்டு கொண்டதென்னே? 

காளியுடன் வாதாடுங் கர்த்தாவை யேயொப்ப
ஞானியனை வாதாடி நயந்ததென்ன திருவுளமோ? 

சுருதிமறை யால்முனிவர் சித்தரிக்குங் கர்த்தா நீ
பொருதிமக னாயெந்தன் 
புகல்வசையைப் பொறுத்ததென்னோ? 

தேவர்களு முனிவர்களுந் தீண்டாத திருமெய்யைத்
தாவியிழுத் தேனானென தன்னளவு 
வஞ்சித் தித்ததேனோ? 

அன்னதொரு சுரர்முறைகேட்டஞ்சேலெனக் காக்கின்ற
முன்னவனீ கூகூவென்று முறையிட்ட கூத்தனென்னோ? 

தலைவன்நீ நானென்ற சண்டையிட்ட மாலயனின்
நிலைவழக்கைத் தீமலையாய் நின்றுதீர்த் தவன்நீ! 

துறையிருந்து கைகட்டிக் கொண்டு, வெண்ணை நல்லூரில்
மறையவர்கள் முன்பாக வழக்குரைத்து நின்றதென்னோ? 

யித்தனையு மென்பொருட்டோ லேயதின்நீ முன்னாளில்
மெய்த்தவம்நான் செய்ததென்னோ வெளிப்பட்டுச் 
சொல்லாய்! 

அக்கியான மணந்தவன்நீ யடுத்துவந்து தடுத்ததனால்
சுக்கிரான மணம்புணர்ந்த சகித்தியவா சொல்கிறாய், 

ஆண்டவன்நீ ஆண்டாயே ஆண்ட படியென்னை
வேண்டியின்ன முன்போல வெளிப்பட்டு வாராயோ? 

வாராத போதுமெந்தன் மன்னுயிரை … 
சீராக நானினியே செய்யும்வகை சொல்லுகிலாய்! 

(நிர்மலம் – மாசற்று, நிற்குணமாய் – குணங்களுக்கு அப்பாற்பட்டு, நிரஞ்சனமாய் மாசுஇலாது நிறரியமாய் நிற் அரியமாய்; எங்கும் எளிமையாய்; அரியவாய் என்பது, பாடலில் அரியமாய் என வந்தது. அக்கியானம் ஞானமின்மை: சுக்கிரானம் பரமஞானம். 

இப்பகுதியே சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்வில் ஏற்பட்ட திருப் பத்தைக் காட்டும் பகுதி, சுந்தரர், சுந்தரமூர்த்தி நாயனார் என ஆவதற்கு இம் மாற்றமே காரணம். திருவெண்ணெய் நல்லூர்க் கோயிலுக்குள் சிவனார் மறைந்ததும், சுந்தரருக்கு அதுவரை வாது செய்தது சிவனே என்று எண்ணத் தோன்றிற்று.) 

வசனம் 

“இப்படியாக சுந்தரர் புலம்புகிற சமயத்திலே, தேவர்கள் புட்பமாரி பொழிய துந்துபி முழங்க, ஆகாச மார்க்கத்திலே சுவாமி அந்தர்தியானமாய் நின்று சொல்லுகிற வசனம் எப்படியென்றால்,”  (26) 

‘நாம் ஆட்கொண்டோம்!’

திபதை 

46. சுந்தர முதலே தொண்டநீ யாகி 
எந்தன்சே வடிக்கீழ் ஏவல்செய் யுவைகாண்!
அந்த நாள்தனில் ஆங்க னோர்பொருட்டால்
வந்துநீ பிறந்தாய் மத்துன் பிறகே 

வந்துநா முனையே வலியவாட் கொண்டோம்!
அன்னகா லையிலே ஆங்கமற்றி முற்று
மன்னியே யெனைநீ வன்மைசெய் ததனால் 

மாமனோ கரமாய் அவன்தொண்ட னென்ன
மதிவனாம முனக்கு நாமளித் தனங்காள்!
இனியெமக் கெளிதா யிசைத்துவந் தமையாய்
கனிவினார் பதிகங் கழறுவாய் நீயே! 

(சிவன், சுந்தரருக்கு கட்டளையிட்டுப் பதிகங்கள் பாடிவரும்படி கூறு கிறார். வன்மை செய்தது – கிழவனார் வேடத்தில் வந்த சிவனை இழுத்துத் தள்ளியது, ஓலையைப் பறித்துக் கிழித்தெறிந்தது முதலியன கழறுவாய் பாடுவோம்.) 

வசனம் 

“அந்தச் சமயத்தில் சுந்தரர் சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (27)

‘நான் என்ன சொல்லுவேன்’

விருத்தம் 

47. சீதள மலரோன் மாயன் 
தேடியுங் காண்கி லாத 
வேத மாகம மீதெல்லாம் 
விதித்துரை கிலாத 

கோதியா உனது தெய்வ 
குணம்பெரும் கடலை ஆய்ந்து 
ஏதொன்றும் அறியா நாயேன் 
ஏதெனச் சொல்லு வேனே! 

(சீதளம் – குளிர்ச்சி சுந்தரமூர்த்தி நாயனார், இங்கு தன்னை, நாயேன் என்று அடக்கமாக உரைத்துக்கொள்கிறார்.) 

வசனம் 

“அப்போ பரமேஸ்வரர், யென்னை ‘நீ பித்தாவென்று சொன்னபடிக்குப் பித்தாவென் றெடுத்துப் பாடி மேன்மேலுந் தலங்கள் தோறும் பாடும் பிள்ளாய்’ சுந்தரர் பாடுகிற விதம் எப்படியென்றால்” (28)  

திருச்சிற்றம்பலம் 

48. பித்தா பிறைசூடி பெருமானே யருளாளா 
எத்தால் மறவாதே நினைக்கின் றேன்மனத்துள்
வைத்தாய்பெண் ணைத்தென்பால்
வெண்ணைநல்லூர் அருட்டுறையுள் 
அத்தாஉனக் காளாகினே னல்லேன் எனலாமே 

49. நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் 
பேயாய்த் திரிந்ததெய்த்தேன் பெறலாகா அருள்பெற்றேன்
வேயார்பெண் ணைத்தென்பால் 
வெண்ணெய்நல்லூர் ரருட்டுறையுள் 
‘ஆயாவுனக் காளாகி னேனல்லே னெனலாமே! 

(இந்த இரு பாக்களும்சுந்தரர் தேவாரம் எனும் திருமுறையில் அச்சி டப்பட்டவைகளே. திருவெண்ணெய்நல்லூர்ப் பதிகத்து முதலாம் இரண்டாம் பாடல்கள் இவை.) 

திபதை 

50. பதிக மின்தளமாம் பண்ணினாற் பாடி
மதிவுனை சடையார் மகிமையைப் போற்றி 

வெண்ணை நல்லூரை விடுத்தினி தகன்று
நண்ணியே தமது நாவலூர் வந்து 

பவமகல் துறையூர் பாவியே சிவனே
தவநெறி யெனக்குத் தாவெனப் பாடி 

மற்றுள பதியும் மகிழ்வினா லிறைஞ்சி
வெற்றிசேர் தில்லைமேவ நினைந்து 

உந்து நீள்பெண்ணை நதியினனைக் கடந்து
அந்தியம் போதில் அதிக மாநகர்த் 

தில்லை வந்துணுகித் தல முன்னே 
சொல்லும் வாக்கின்றை யூர்சூழ் பதியெனவே 

அருகிலோர் மடத்தி லமர்ந்திருந் தருளிய 
பரிசினத் துடனே பள்ளிகொள் போது 

முதியவந் தணராய் முக்கண ரணுகிப்
பதியவே தலையிற் பாதத்தை நீட்டிக் 

கரந்துபொன் தூவும் கண்டுள முருகிச்
கரந்தநல் லருளைத் துதித்துடன் வாழ்த்தி 

வடகங்கை யெனவே வருமொரு கேடில்
தடந்தித் தன்னையும் தாண்டியே யப்பால் 

திருமாணிக் குழியுந் தினநகர் பரவி
அரியதில் லையிற்போய் அம்பல மணிந்து 

அந்தரத் தொருவர் வாருர்க் கினிய
சுந்தரர் வரவெனச் சொன்னதுங் கேட்டு 

கொள்ளடங் கடந்து குறுகியே ஞானப்
பிள்ளையார் முன்னம் பிறந்த சீகாழி 

மிகுந்திட வஞ்சி வெளிநின்று பரவி
கதிதிருக் கோலக் காவும் புன்கூரும் 

வேறுள பதியும் விரும்பியே தொழுது
கூறுகா வேரி கொழுங்கரை சென்று 

மயிலாடு துறையு மாகாளம் யுகளூர்
கவிலாய் தம்மைக் கருதியே பணிந்து 

நம்பனா ரருளால் நகருளா ரெவரும்
இன்பமா மனத்தி லெதிர்கொடு செய்ய 

செய்யவா ரூரிற் சிறப்புடன் வந்து 
அய்யனைப் பணிந்தே அருந்தமிழ் பாடிக் 

காயமே யிருக்கக் கருத்துமே யிருக்க
நேயமாய்ப் பரவி நின்றார் தாமே! 

(தலங்கள் தோறும் பாடி வரச் சிவன் கட்டளை இட்டதால், சுந்தரர் பலதலங்களுக்கும் செல்கிறார். அவர் செல்லும் ஊர்கள்மேல் காட்டப்பட்டன. தில்லை, சீர்காழி, திருக்கோலக்கா, திருப்புன்கூர், மயிலாடுதுறை, முதலிய ஊர்கள் வந்துள்ளமை காணலாம். 

காயம் உடல்) 

பரவை நாச்சியார் 

வசனம் 

“அந்தச் சமயத்திலே பரவை நாச்சியார் வருகிற வித மெப்படி யென்றால்,” (29) 

பரவை நாச்சியார் வருகிறாள்!

விருத்தம் 

51. சீதள மலர்மா தென்ன 
செங்குந்த வேசி யாரிற் 
பூதல மகிழ வந்து 
பொற்புடன் பிறந்த மின்னாள் 
மாதங்கு சேனை சூழ 
மதிமுக மலர்ந்து பொன்னின் 
பாதாளந் தொனிக்கப் 
பரவையார் வருகின் றாளே! 

பதம் 

52. பரவை வந்தா ளிதோ பாரீர்! சிங்காரமாகப் 
பரவை வந்தா ளிதோ பாரீர்! 

பரவை வந்தாளிதோ பரத நூபுரமுடன்
கரச ரொருகையில் வளைகலீன் கலீனென (பரவை) 

தனபாரக் கச்சிலொளி தகதக தகவென்ன
இடைக்கிண்கிணி யோசை கணீல் கணீலென (பரவை) 

கடந்த காதினை மீண்டு கண்ணினை வாளியார்க்கத் 
துடர்ந்து மேய்வந்து பட்டுசுறீல் சுறீலென (பரவை) 

தாவியே சேடிமார்கள் சதனமெச் சரிக்கையென்ன 
மேவியே யன்னம்போலே மெள்ளமெள்ள மெள்ள 

பரவை வந்தாளிதோ பாரீர்! சிங்காரமாகப்
பரவை வந்தாளிதோ பாரீர்! 

(திருவாரூர்க் கோயிலில் பரவை நாச்சியார் வருகை காட்டப்படுகிறது. சிலம்பு ஒலிக்க, கைவளை ஓசையிட, கண்கள் ஓடிக்காட்ட, முலைக்கச்சு ஒளிவிட, அழகாக அவள் வந்தாளாம். 

தனம் கொங்கை; சேடி தோழி 

சுந்தரர் பார்வை!

வசனம் 

“இப்படியாக வந்து சுவாமியாரை சேவித்துத் திரும்புகிறபோது சுந்தரர் பார்த்துத் தம்முட மனசுடனே சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (30) 

சுந்தரரின் மனம் பட்டபாடு!

தோடி பதம் 

53. ஆரோ யெவரோ யறியேன் மனமே! 
அரனரு ளிதுதானோ? 
சீரோதிய புட்பமன் மதனாசன் பட்டபூ தேவியோ 
கமல சிங்காதப் பெண்ணோ? (ஆரோ)

மின்னல் வடிவோ? ஒளியாததுனாலந்த 
விளக்கு மல்லநல்ல அவியாத துனாலே 
கன்னலல்ல மதன் வளையாத தனாலந்த 
காமனல்ல வுருவம் வந்ததாலே!  (ஆரோ)

அன்னமல்ல சிறகில்ல ததனாலே! 
ஆவியல்ல உடல்கப் பறந்ததாலே! 
சொன்னமல்ல மாத்தில்லா ததுனாலே! 
மத்தரூபமல்ல மறுவில்லா ததுனாலே! 

சித்திரமல்ல காலில் நடக்கிறதாலே 
தெய்வமல்ல விழியிமைக்கிறதாலே 
ருத்திர வாள்விழியார் கூத்தனென்று 
கூத்தனல்ல நின்று கொல்லததனாமலே! (ஆரோ) 

ஆராரோ யெவரோ அறியேன் மனமே 
அரனரு ளிதுதானோ? 

(ஐயமும். ஐயநீக்கமுமாக எழுதப்பட்ட மேற்பகுதி சுவையான நாடகப் பகுதியாகும். 

மதன் மன்மதன்; சொன்னம் – தங்கம்; சுரூபம் உருவம்; ருத்திர கொடிய; கன்னல் கரும்பு: கூத்தன் கூற்றுவன். 

ஒளியாதலால் மின்னலல்ல! அவிந்துபோகாததால் விளக்கல்ல! மன்மதன் வளைக்காததால், கரும்பு மல்ல! ஓர் உருவம் இருப்பதால் காமனும் அல்ல! சிறகு இல்லாததால், அன்னப்பறவையும் இல்லை! உடல் மூடியிருப்பதால், ஆவியும் இல்லை! மாற்றுக் கூற இயலாததால் பொன்னும் அல்ல! களங்கம் இல்லாததால், மதியும் உருவமும் அல்ல! காலால் நடப்பதால், சித்திரம் என்றும் கூறமுடியாது! விழியின் இமை இமைப்பதால், தெய்வம் என்றும் கருத இயலாது! கொடிய வாள் போன்ற விழியுள்ள இவள்,கூற்றுவனும் அல்ல, ஏனென்றால் கொல்லவில்லையே?) 

வசனம் 

“பரவையார் தன் மனதுடனே சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (31) 

பரவைநாச்சியாரின் காதல் தடுமாற்றம்

காம்போதி ராகம் 

54. சந்திரனா? யிந்திரனா? சுக்கிரன்தானோ? – எங்கள் 
தம்பிரான் பேரும் கந்தனோ? மனமே! 
சுந்தர வசந்தனோ? அந்தரதிசயந் தானோ? 
சுபமத்த மன்மதனோ? மனமே! 

இவ்வுருவமு மெவ்விடத்தும் கண்டதில்லை கேட்டதில்லை! 
இவரை எவ்வகை அணுகவோ, மனமே! 
அவ்வுருவம் தன்மீதி லாசைகொள்ள லாமோ? 
வென்றருவ மதன்பொருத லானான்மனமே! 

இருவர்கண்ணு மொன்னுக் கொன்னு கலைக்கண்ணியாகவே. 
இழுக்குதினி என்செய்வோ மனமே! 
ஒருவரிருவர் தம்மைவிட்டே காலெழுவ தில்லை 
உய்வண்ண மெவ்வணங் காண் மனமே! 

இதுவரைக்கு மொருவர்தம்மை இதயத்தெண் ணாதநான் 
இவரை யெண்ணுவ தென்னமோ மனமே!
மதிவிதியின் முறைமையோ? ஈசனருளோ? 
இனிவரவந்த வழிதெரியு மல்லோ மனமே! 

(காம்போதி இராகத்தில் பாடவேண்டிய இந்தப்பாடலில் திருவாரூர் கோயிலில், சுந்தரரைப் பார்த்ததால் பரவைநாச்சியார் என்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட மனக் கலக்கம் விவரிக்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரின் உருவம் அழகான உருவம் என்று காட்டப்படுகிறது.) 

கொங்கை விம்முகிறது!

விருத்தம் 

55. மனமுமுயிரு மிவரைவிட்டு 
வருகுதில்லை காண்வேறு கூட்டை 
பினமுமுன் மாயநாண மொன்றே 
பெயர்ந்தே யிழுத்துப் போகுதையோ! 

தனமு மலைபோல் வளர்ந் தெழுந்து 
தழைந்தே குழைந்து விம்முது! 
காணினி யென்செய் னீசனருள் 
எனமோ யில்லா தேகுவனே! 

(சுந்தரமூர்த்தி நாயனாரின் மீது மோகம் கொண்ட பரவை நாச்சியார் புலம்பும் புலப்பம் மேலே கண்டது. 

பினமு – பின்னும்; எனமே – என்னவோ) 

வசனம் 

“இப்படியாக சுந்தரர் விப்பரவக்கிரனை யிவளாரென்று விசாரி என்றுசொல்ல, அவரை விசாரித்து வந்து தேவடியாரில் பரவையாரென்று சொல்லக்கேட்டு, விரக தாபம் படுகிற விதமெப்படி யென்றால்,” (32) 

காதல் துயரிலிருந்து மீட்கச் சிவனை வேண்டல்! 

தரு 

56. வஞ்சி யொருத்தி வானத்து மின்போல 
வந்தனள் கண்டனன் சிவனே! – அவள் 
மாயா வலைவீசி பொல்ல 
மயக்கிட்டுப் போயினள் சிவனே! 

மைக்கண் கணையை புருவவில் தன்னை 
வளைத்துத் தொடுத்தனள் சிவனே! இவனார் 
நடுவே மதன்வந்து 
பூவாளி செய்யுறான் சிவனே! 

இவனெய்வது மல்லால் இவன்பரிவாரங்கள் 
எல்லாம் பொருகுது சிவனே! ஓகோ
மதனிது னாலல்லோ 
முன்னுளுத்த பொடியானனான் சிவனே! 

அவனுயிர்தனை மீளவருள் கொண்டளிக்கு 
முறையல்லோ சொல்லவேணும் சிவனே!
சந்திர னாரும் குளுந்தவ னென்னைத் 
தழல்கொண் டிறைக்கிறான் சிவனே! அந்தச் 

சந்திரன் பின்னும் பிழைக்கவே தேய்க்குமுன் 
தாளினை யென்சொல்வேன் சிவனே! – உனக்கு, 
விஷத்தை யளிக்குங் கடல்தான் 
உருக்குது யென்சொல்வேன் சிவனே! – அந்த 

ஓதக்கடலைச் சுவறாமல் விட்டவுன் 
மைந்தனை என்சொல்வேன் சிவனே! – அந்தப்  
பெண்மாயத் தகப்பட்டால் ஈதெல்லாம் 
பாரென்று ஒறுக்குது சிவனே! – என்னை 

ஆண்டநீ சும்மா இருக்கத் தகாதினி 
அருள்செய்ய வேணுங்காண் சிவனே 

(உளுத்தபொடி சாம்பல், உரம் அசை. சுவறாமல் – வற்றாமல்; ஒறுத்தல் தண்டித்தல்.) 

காமன் என்மீது மலர்க்கணைகளைப் போடுகிறான்! அவன் என்னைத் துன்புறுத்துகிறான்; அதனால்தான் அவனை முன்பு, சிவனே, நீ எரித்துச் சாம்பலாக்கினாய் போலும்! என்று புலம்பும் பகுதி நயமுடைத்து.) 

வசனம் 

“இப்படியாக சுந்தரர் விரகதாபமாயிருக்க, அங்கே பரவை நாச்சியார் பாங்கியுடனே சொல்லுகிற வசனம் எப்படிஎன்றால்,” (33) 

பரவையாரும் புலம்புகிறாள்! 

விருத்தம் 

57. பாங்கியே தியாகர் தம்மைப் 
பணிந்துநான் வந்த போது 
ஆங்கணோர் ஒப்பிப் லாத 
அதிசய வடிவு மாகி 

பூங்க னைமத னென்ன 
புரிந்தனன் அவன்தான் ஆரோ? 
சாங்கமா யெனக்கு நீயே 
சாத்துவாய் சாத்துவாயே! 

(தியாகர்-சிவன், சாத்துவாய் – சாற்றுவாய் சொல்லுவாய். 

“கோயிலில் நான் கண்ட அத் அழகன் யாரென்று எனக்கு நீ கண்டு சொல் தோழி” என்கிறாள். பரவை நாச்சியார்.) 

‘அவர் பெயர் சுந்தரன்’

விருத்தம் 

58. அன்னமே கேளாய் நீயே 
அவர்முனைப் பாடி நாட்டில் 
பன்னுகீர் நாவ லூரிற் 
பதிந்துவாழ் சைவ ரானோர் 

மன்னிய சிவன்புத் தூரில் 
வலியவாட் கொண்ட தொண்டன் 
இன்னமு மறிகி லாயோ 
இனியசுந் தரன்காண் பேரே! 

(பரவை நாச்சியாரின் தோழியானவள் பரவையாரை மயக்கியவர் பெயர் சுந்தரன்; அவர் திருமுனைப்பாடி நாட்டில். நாவலூர் என்ற ஊரில் பிறந்தவர் என்ற விவரத்தைத் தெரிவிக்கிறாள்) 

வசனம் 

“இப்படியாக அந்த விசேஷத்தைக் கேட்டு விரகதாப மிஞ்சி பரவையார் சொல்லுகிற வசன மெப்படி யென்றால்” (34) 

பரவைநாச்சியாருக்கு மையலால் துன்பம்! 

தரு 

59. எந்தனாவி தோழியே நானேது செய்வேன்?
கண்ணிற் கண்ட போதே! 
சிந்தை தனிலவர் தாமொரு 
திருடர்போலே வந்துபூந்தார்! 

தாளிணைக்கோ? மலர்ந்தசெந் 
தாமரை முகந்தனக்கோ? 
தோளிணைக்கோ? மார்பிணைக்கோ? 
சுந்தரர் ஓய் யாரத்துக்கோ? ஏதினுக்கோ! 

சிந்தைதனி லேராளாமா யாசை கொண்டேன்! 
இவர்தமது சொரூப மெல்லாம் 
அங்கே இருக்கட்டும் அவர்சிறிய நகையொன்று 
ஆவிதனை உருக்கு தையோ! 

மையெலொன்னு வந்தாலே வளைகலை 
நாணமும் போச்சு!
செய்யும்வகை காணேனினி 
சிவளருளைத் தெரிகிலேனே! 

(கலை – ஆடை. பூந்தான் – புகுந்தான். வளை – வளையல். 

ஐயோ, சுந்தரரைக் கண்டதும் என் வளையல், இடுப்பு ஆடை எல்லாம் கழறுகிறதே! நான் என்ன செய்வேன் தோழி! சிவனின் அருள் எப்படி இருக்குமோ? என்றெல்லாம் புலம்புகிறாள் பரவை நாச்சியார்.) 

கலித்துறை 

60. சுந்தர னீசனுக் கன்பன் 
விகாரத் துயரந்தனை 
எந்தடவே கண்டிருப்போ மெனக்காணா 
தேகி யப்பால் 
முந்தவெய் யோனந்த மேற்கே 
மறைந்தென்ன மூடியிருள் 
அந்தியும் தேகமும் அந்தரத்தே 
நின்ற தம்புலியே! 

(வெய்யோன் – ஞாயிறு; அம்புலி – திங்கள். 

சுந்தரரால் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு இருக்கும் ஞாயிறு? அதுதான் மேற்கே மறைந்து விட்டது! ஏ அம்புலியே, இப்போ என் முகம் வாடுகிறதே! என்று புலம்புகிறார் பரவையார்!) 

விருத்தம் 

61. வெண்ணில் புவிமடந்தை வெண்படாம் போத்ததென 
விளங்கித் தோன்றத் 
தண்ணுலவு கடல்தனது அமைந்தரை சரணத்தெனத் 
தருக்கிப் பொங்க 
குண்ணுலவு குளிர்காத்துக் கொழுந்தெழுந்து
நெருப்பையள்ளிக் கொண்டு வீச 
எண்ணிப்பல கமலமலர் சுடுகரங்கள் தொடுத்தமதன் 
எய்கின் றானே! 

(வெண்ணில் -வெண் நிலவில், தண்ணுலவு – குளிர் கொண்ட; குண்ணுலவு – குளிர்ச்சிபொருந்திய 

வெண்ணிலாவின் வெண்ணிற ஒளியால்பூமி, வெள்ளை ஆடை போர்த்தியது போல உள்ளதாம்! கடலானது, அந்நேரத்தில் பொங்கிக் கரையில் மோதுகிறதாம்! குளிர்காற்று, நெருப்பை அள்ளிப் பரவை நாச்சியார் மீது வீசுகிறதாம்! காமத்தால் அவள் பட்ட துன்பம் இது!) 

வசனம் 

“பின்னையும் பரவைக்கி விரக தாபமிஞ்சி சந்திரனை தூஷனை பண்ணுகிற விதம் எப்படியென்றால்”, (35) 

தரு 

62. வாழியே நீ, என்னனையல்லால் மற்றெவற்குங் 
குளுந்திருந்தாய் வெண்ணிலாவே!
ஏழையென்றோ காயலுற்றாய் எனக்குமுனக்கும் 
பகையென்னவோ!வெண்ணிலாவே 

உந்தனையென் முகம்போலவே பொப்பார்கண் 
டுறவு கொண்டேன் வெண்ணிலாவே!
அந்தஉறவும் பாராமல் அழல்போலவே 
காயலுத்தாய் வெண்ணிலாவே! 

நீமுதலே குருத்துரோகி நினக்குமொரு 
உறவுண்டோ வெண்ணிலாவே!
தீமையான நின்னைப் பாம்பு தீண்டியுங் 
கொல்லாதென்னமோ வெண்ணிலாவே! 

தேயத்தவீரன் பண்டு நின்னை 
சீவனுடன் விட்டதென்ன வெண்ணிலாவே?
வாய்த்தமயல் கொண்டுவரும் நாதர்செய்த 
பாவமென்னோ வெண்ணிலாவே? 

(காமத்தால் அவதிப்படும் பரவை நாச்சியாருக்கு நிலவு சுடுகிறது! எனவே அவள் நிலவை நிந்திக்கிறாள்! உன்னைப் பாம்பு தீண்டியதே அப்படியே சாகடித்திருக்கக் கூடாதா? என்று பேசுகிறாள்.) 

மதன் தூஷணை 

63. என்னையெதுக் கெய்யுறாய் மதனா? – உனக்கு
என்னுடன் ஏதுவகை மதனா.
உன்னையின்று கும்பிடுறேன் மதனா!தமியேன் 
ஒருத்தியென்னை மன்னியாய் மதனா! 

நிமலருக்கு நானடிமை மதனா அவர்தாம் 
நினையெரித்த தறியாயோ மதனா?
கமலவிழி துயிலாது மதனா தனித்த 
கன்னிமேற் பொருதுவீரோ மதனா! 

தென்றல் தூஷணை 

64. குண்ணிலே பிறந்துவந்த தெண்ணலாரே -மெத்த 
கொடுந்தழல்போல் வீசுவரோ தெண்ணலாரே? 
மண்ணுலகிற் சஞ்சரித்த தெண்ணலாரே – தனி 
மாதி தன்னைச் காயுவனோ தெண்ணலாரே? 

அய்யய்யோ யெனையுறுத்துறாய் தெண்ணலாரே உன்னை 
அரவ முழுங்காதோ தெண்ணலாரே 
செய்யும் வகை யொண்ணுமில்லை தெண்ணலாரே – இனி
சிறியயென்னைக் காத்தருளாய் தெண்ணலாரே! 

(அரவம் பாம்பு; தெண்ணல் – தென்றல்; குண்ண – குன்ற) 

வசனம் 

“அந்தச் சமயத்திலே தோழிமார்கள் பண்ணுகிற சயித்திய உபசாரங்கள் போராமற் படிக்குச்சொல்லுகிறவிதமெப்படி யென்றால்” (36) 

பன்னீர் வெந்நீராகச் சுட்டது! 

தரு 

65. சுகந்த கந்த பன்னீ ரென்னைச் 
சுடச்சுட வெந்நீ ரிறைத்தார் 
நிகழ்ந்த புஷ்பர் துளிநீ ரென்னை 
நெருப்பினையோ பாயல் செய்தார் 
முகந்து கொண்டு 
மொழிவ மென்றே வசைபேசினார் 
அகந்தை தோழி மார்கள் 
அனைவரும் நல்லவ ராமே! 

வசனம் 

“இப்படியாகப் பரவை நாச்சியார் கேவலம் நித்திரையில்லாமல் விரகதாபப்படுகிறதைத் தியாகராய சுவாமிகள் திருவுளத்தெண்ணி ஸ்தலத்தார் சொப்பனத்திலே யெழுந்தருளி, திருவாய் மலர்ந்த தெப்படி யென்றால்” (37) 

“இருவருக்கும் மணம் செய்து வையுங்கள்!”

விருத்தம் 

66. பனிமொழிப் பரவை யாரைப் 
பரவுமா ரூர னார்க்குக் 
கனிவினா லளித்தோம் நாமே 
காதலாய் ஸ்தலத்தீர் நீங்கள் 
நனிபெரு மகிழ்ச்சி பொங்க 
நாளையே காலை தன்னில் 
இனியநல் முகூர்த்தந் தன்னில் 
இருவர்க்கு மணஞ்செய் வீரே! 

மணம் செய்வித்தார்கள்!

விருத்தம் 

67. காலமே யெழுந்தெல் லோரும் 
கன்னிகை பரவை யாரைக் 
கோலமே செயிது சைவக் 
குறிசிலா ரூரர் தன்னைச் 
சீலமா யலங் கரித்துத் 
திவ்வியசன் தியிற் றானே 
ஞாலமே மகிழத் தெய்வ 
நல்மணஞ் செய்வித் தாரே! 

வசனம் 

“அந்தச் சமயத்திலே ஸ்வாமியார் அந்தர்தியானமாய் நின்று சொல்லுகிற வசன மெப்படி யென்றால்” (38) 

வாழ்த்து! 

விருத்தம் 

68. பைம்புவி மகிழ விந்தப் 
பரவையா ரூடனா ரூரரர் 
இம்பரி போக மெல்லாம் 
இனியனு பவித்து வாழி 
நம்பெருந் தோழ னென்ன 
நாமமு மளித்தோஞ் சந்திர 
பிம்பமாய் மணக்கோ லம்போல் 
வியப்புடன் திரிகு வாயே! 

(நம்பெருந்தோழன் என்று சுந்தரருக்குப் பெயர் அளித்ததைப் பாடல் கூறுகிறது.) 

வசனம் 

“இப்படியாக சுவாமியார் அனுக்கிரகத்தினாலே வேறே திவ்விய மான அரண்மனை அமைப்பித்து, அதிலே யிருந்து பரவையாருக்குஞ் சுந்தரரும் சகல யாக போக்கியங்களை மனுபவித்துக் கொண்டு வருகிற நாளிலே, ஒரு நாள் சுவாமியாரைச் சேவிக்க வருகிற விதமெப்படி யென்றால்” (39) 

திபதை 

69. சங்கீத மேளம் பொங்கத் 
தவளச் சங்குக ளார்ப்ப 
இங்கித வீணை பாட 
இன்னிசை பலவாசிப்பு. 

திருநாவ லூரன் வந்தான் 
சிவன்திருத் தோழன் வந்தான் 
அருமைவன் தொண்டன் வந்தான் 
ஆருரர் வந்தான் வந்தான்! 

என்னவே சின்ன மூத 
இருபுறங் கவரி வீச 
மன்னிய அடப்பை கொண்டு 
வரும்படி தொழும்பர் சொல்ல 

கைக்கிடாய் குரங்கு 
கவுதாரி கோழி 
தக்க கிளைவாய் தத்தைமான் 
கிளைகள் கொண்டுடன் வருக 

குலவுமெய் ஞானப் பண்டிதர் 
அநேகர். பரவியே வருக 
இரத்தினக் குண்டலமு மாத்தின் 
கங்கணமும் முத்துநீள் வடமும் 

முப்புரி நூலும் பொன்னது நாணும் 
பூஷணமுமே! 
வைப்பு மின்னவே புனைந்து- 
வேடிக்கை யாக! 

திருநீறு நெற்றித் திலதமும் ஒளிர 
அரியசீர் பொன்னின் ஆடையுந் தரித்து 
குலவுபொற் பாதக் குறடிமேல் நடந்து 
விலகியே ராச வீதிகள் கடந்து 

சன்னதி வீதி தனையெலாங் கடந்து 
கொள்ளல்சீர் பெரிய கோபுரங் கடந்து 
தேவர்கள் பரவுந் தேவாச் சரிய 
காவணந் தனையுங் கடந்துவந் தனரே! 

வசனம் 

“அந்தச் சமயத்திலே இப்படியாகச் சுந்தரர் வருகிறபோது. தேவராச்சரிய மண்டபத்திலே அடியார்கள் கூட்டத்திலே யிருந்த விறல் மிண்ட ரெழுந்து வருகிற விதமெப்படி யென்றால்” (40) 

விருத்தம் 

70. மலைய நாமதனிற் கொற்ற 
வளம்பெறு செங்கண் ணூரில் 
குலவு வெள்ளாளர் தங்கள் 
குலத்தில்வந் துதைய மானோர் 

தலைமையாம் புகழ் நீறு 
சாத்திய சைவ-ரானோர் 
தொண்டன் பிறவி 
மிண்டர் வருகின் றாரே! 

(விறன்மிண்ட நாயனார் பிறந்த ஊர் கேரளாவில் உள்ள கொல்லம் துறைமுகம் அருகே அமைந்த குன்னூர் ஆகும்.) 

விறல்மிண்ட நாயனார்!

பதம் 

71. எங்கள் சைவ விறல்மிண்ட ரெழுந்து வந்தனர் 
திங்கள் வேணி சிவனார் பாதம் சிந்தைதனில் மறவாத
எங்கள் சைவ விறல்மிண்ட ரெழுந்து வந்தனர்! 

ருத்திராட்ச மாலைபூண்டு உடம்பெல்லாம் நீறுபூசி
சித்திரவயி ராக்கியமாக சிவசமயப் பிசகிலாத 

சீலமன்றிக் கோயில்புகுந் தீயர்தமைக் கொல்வேனென்று
காலஆலம் போலக் கையில் கண்ட கோடாலியைப் பற்றி
எங்கள் சைவ விறல்மிண்ட ரெழுந்து வந்தனர்! 

வசனம் 

“இப்படியாக வந்த விறல் மிண்டர் சுந்தரரைத் துரத்திக் கொண்டு போகிற விதமெப்படியென்றால்” (41) 

தரு 

72. சாலஅடி யார்தமையுஞ் சரணஞ் செயாமல் 
சீலமொன் றிலாதமற் நீவிட னாகிச் 
செல்கின்றாய் சுந்தரா சிவன்சலுகை யோகாதான்
கொல்கின்றேன் பாருன்னைக் குதிகாலைப் பிளந்தே 

கண்டகோ டாலியு மென்கையு மறியாயோ
துண்டதுண்ட மாகவே துணியா யோநீ 
சாம்பசிவ னார்தமக்குத் தந்தை யானாலும் 
வீம்புனா லுன்னை விடுகிலே னானே! 

வசனம்

“இப்படியாகத் துரத்திப் போகிறபோது சுந்தரர் முறையிடுகிற தெப்படி யென்றால்” (42)

– தொடரும்…

– கீழ்த்திசைச் சுவடிகள் வெளியீடு எண் : 81

– பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்), பி.எட்., டிப்.வ.மொ. பி.எச்.டி., காப்பாட்சியர், அ.கீ.சு. நூலகம், சென்னை-600 005.

– பொதுப் பதிப்பாசிரியர்: நடன காசிநாதன் எம்.ஏ., இயக்குநர், தொ. பொ.ஆ.துறை, சென்னை-600 113.

– அ.கீ.சு.நூ. 1995

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *