கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,750 
 

என்ன ஆயிற்று?

”பக்தர்களுக்கு வசப்பட்டவன் நான். அவர்களுக்கு வற்றாத அருளை வாரி வழங்கவே நான் இங்கு இருக்கிறேன்” என்ற பரந்தாமன், கோயில் கொண்டிருக்கும் இடமே பண்டரிபுரம்.

கொதிக்கும் சூளைக்குள்1இங்கு, வைராக்கிய சீலரான ராக்கா, தன் மனைவி பாக்கா மற்றும் மகள் பங்கை ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். மண்பாண்டங்கள் தயா ரித்து விற்பதே இவரது தொழில்.

ஒரு நாள், வழக்கம் போல் சூளை போடும் பணியில் ஈடுபட்டார் ராக்கா. மண்பானைகளை முறையாக சூளையில் அடுக்கிக் கொண்டிருந்தார். பானை ஒன்றில் சில பூனைக் குட்டிகள் இருந்தன. தாய்ப்பூனை உணவு தேடச் சென்றிருந்தது. இதை அறியாத ராக்கா, அந்தப் பானையையும் சூளையில் வைத்து விட்டுத் தீ மூட்டினார். பற்றிப் பரவிய தீ, அனைத்து பானைகளையும் தழுவியது.

அப்போது, அங்கே வேக வேகமாக வந்த தாய்ப் பூனை, தான் வைத்த இடத்தில் குட்டிகளைக் காணாமல் தவித்தது. சூளையில் பானைகள் இருப்ப தைப் பார்த்ததும், சூளையைச் சுற்றிச் சுற்றி வந்து கத்திக் கொண்டே இருந்தது.

ராக்கா, விஷயத்தை ஓரளவு புரிந்து கொண்டார். இரு கைகளாலும் முகத்தில் அறைந்தபடி, ”பாக்கா! பெரும் பாவத்தைச் செய்து விட்டோம்” என்று கதறினார். இதைக் கேட்டு ஓடி வந்த பாக்காவும் குமுறினாள்.

அப்போது திடீரென சத்தியம் செய்தார் ராக்கா: ”பண்டரிநாதா! அரக்கு மாளிகைத் தீயில் இருந்து பாண்டவர்களையும், இரண்யகசிபு தீயில் தூக்கி வீசியபோது பிரகலாதனையும் காப்பாற்றினாய். இதேபோல், சூளைத் தீயில் சிக்கியுள்ள இந்த பூனைக் குட்டிகளையும் நீதான் காப்பாற்ற வேண்டும். பூனைக் குட்டிகளுக்கு ஆபத்தை உண்டாக்கிய இந்தத் தொழிலை, இனி நான் செய்யவே மாட்டேன்!”

ஆயிற்று! இடைவிடாமல் இரண்டு நாள் எரிந்த சூளை மூன்றாம் நாள் தணிந்தது. உணவு- தூக்கம் எதுவுமின்றி அழுது கொண்டே இருந்தனர் இருவரும்! தாய்ப் பூனையும் சூளையை விட்டு நகராமல், கத்திக் கொண்டே இருந்தது. அப்போது சூளைக்குள் இருந்த பூனைக்குட்டிகள் திடீரென எதிர்க்குரல் கொடுத்தன. ஆம், பூனைக் குட்டி களை இறைவன் காப்பாற்றி விட்டார்!

பூனைக்குட்டிகள் இருந்த பானை மட்டும் வேகாமல், பச்சையாகவே இருந் தது. அதனுள் இருந்த பூனைக் குட்டிகளை வெளியே எடுத்து தாய்ப் பூனைக்கு அருகில் விட்ட ராக்கா, ”பாண்டுரங்கா… உனது கருணையே கருணை. என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உனது திருவடிகளில் அர்ப்பணித்து விட்டேன். இனி, சூளை போட மாட்டேன்” என்று மனதார வணங்கினார்.

உடனடியாக சூளையைப் பிரித்தவர், தன்னிடம் உள்ள பொருட்களை ஏழைகளுக்கு அளித்து விட்டு, மனைவி- மகளுடன் வனத்துக்குச் சென்றார்.

வனத்தில் காய்ந்த சுள்ளிகளை சேகரித்து, அவற்றை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். சுள்ளி சேகரிக்கும்போதும்… ஒரேயரு சுள்ளி இருந்தால் மட்டுமே அதை எடுப்பார். இரண்டு மூன்று சுள்ளிகளாக இருந்தால், எடுக்க மாட்டார். ‘இவற்றை எவரோ எடுத்து வைத்துள்ளனர்!’ என்று எண்ணிக் கொள்வார்!

கொதிக்கும் சூளைக்குள்2அவரது மனம், ஆன்மிகத் தத்துவத்தையே அசை போட்டபடி இருந்தது. ‘இந்த உடல், இதனால் அனுபவிக்கும் இன்பம் எல்லாமே நிலை யற்றது. இப்படி நிலையில்லாத ஒன்றை பற்றிக் கொண்டிருப்பதை விடுத்து, நிலையாக இருக்கும் பண்டரிநாதனை அல்லவா பற்றிக் கொள்ள வேண் டும்!’ என்று சிந்தித்தார்.

ராக்காவுக்கு ஒரு வழக்கம்! தெருவில் கிடக்கும் கிழிந்த- கந்தைத் துணிகளை எடுத்துத் தைத்து, அதையே ஆடையாக உடுத்திக் கொள்வார். ஒரு நாள், வீதியில் கிடந்த கிழிந்த துணி ஒன்றை ராக்கா எடுக்கும்போது அவரைத் தடுத்தான் ஒருவன்.

”ராக்கா! இதை எடுக்காதீர்கள். இது தீவட்டிக்குப் பயன்படும். பற்றற்ற நீங்கள், கந்தல் துணியை விரும்பலாமா?” என்று கேட்டான் அவன்.

சிறிது நேரம் மௌனம் சாதித்தார் ராக்கா. பிறகு, ”நீ சொல்வது உண்மையே! ஏதேனும் ஒரு வகையில் பிறருக்குப் பயன்படும் கந்தலை இனி தொட மாட்டேன்!” என்றார். இதன் பிறகு, எச்சில் இலையையே இடுப்பில் ஆடை போல் சுற்றிக் கொண்டார்!

பற்றற்ற உத்தம ரான ராக்காவுக்கு இணையானவர் எவரும் இல்லை என்பதை உணர்த்துவதற்கு, சம்பவம் ஒன்றை நிகழ்த்தினார் பண்டரிநாதன்.

ஒரு நாள்… ராக்காவின் மகள் பங்கை, நதியில் குளித்து விட்டு, கரையில் பூஜை செய்து கொண்டிருந்தாள். அங்கே நாமதேவரின் (பண்டரி நாதனை தரிசித்து, அவருடன் நேருக்கு நேர் பேசும் அளவுக்கு தகுதி வாய்ந்த பக்தர்) மகள் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அப்போது துவைப்ப தற்குப் பயன்படுத்திய நீரானது பூஜையில் இருந்த பங்கையின் மீது தெறித்தது.

”அம்மா! தாங்கள் துவைக்கும் தண்ணீர், என் மீது தெறிக்கிறது” என்றாள் பங்கை.

இதைக் கேட்டதும் நாமதேவரின் மகளுக்குக் கோபம் பொங்கியது. ”குயவர் குலத்தில் பிறந்த நீ, ஏதோ ஆசாரமான குடும்பத்தில் பிறந்தவள் போல் பேசுகிறாயே! குலத் தொழிலை மறந்து, மனம் போகிற போக்கில் திரியும் உனக்கு எத்தனை திமிர்? உன் தந்தையோ முற்றும் துறந்த முனிவர் போல் வேஷமிட்டு, உலகை ஏமாற்றுகிறார். நீங்கள் இல்லறத்தாரும் இல்லை; துறவிகளும் இல்லை. உங்களது போலி பக்தி, அந்த பண்டரிநாதனுக்குத் தெரியும்! காட்டுக்குள் இருந்தபடி கபட வேடம் போடும் உன் தந்தையின் மீது, பண்டரிநாதன் வெறுப்புடன் இருக்கிறார் என்பது தெரியுமா உனக்கு?” என பொரிந்து தள்ளினாள்.

இந்த முறை பங்கையும் பதிலடி கொடுத்தாள்: ”நாமதேவர் மகளே! உன் தந்தையின் பெருமை தெரியாதா உனக்கு? அவர் அழுது அழுது பக்தி சம்பாதித்த கதையை ஊரே அறியுமே! கோயிலில் விக்கிரக வடிவில் உள்ள பகவானை, தன்னுடன் பேசும்படியும் உண்ணும்படியும் உனது தந்தை வற்புறுத்துகிறார்; வருத்துகிறார். ஆனால், என் தந்தை அப்படியில்லை. பூனைக் குட்டிகளுக்காக தொழில், குடும்பம், ஆசைகள் என்று சகலத்தையும் துறந்து, காட்டுக்கு வந்து சுள்ளிகளை விற்று, வாழ்க்கை நடத்துபவர்; பற்றற்று வாழ்பவர். இதை அறிவாயா நீ?” என்றாள்.

நாமதேவர் மகளின் முகம் வாடிப் போனது. வீட்டுக்குச் சென்றவள், நடந்ததை தந்தையிடம் விவரித்தாள். ஆச்சரியப்பட்ட நாமதேவர், விறுவிறு வென சென்று பாண்டுரங்கன் சந்நிதி முன்னே நின்று, ”ஸ்வாமி! ராக்கா ஆசை உள்ளவரா? ஆசை யற்றவரா?” என்று கேட்டார்.

பகவான், ”நாமதேவா! ராக்காவுக்கு இணையான வர்கள் அகில உலகிலும் இல்லை” என்றார்.

உடனே நாமதேவர், ”ஸ்வாமி! ராக்காவின் பற்றற்ற தன்மையை எனக்குச் சோதித்துக் காட்டுங் கள்” என்று வேண்டினார்.

பகவானும் சம்மதித்தார். பின்னர் தேவி ருக்மிணி யுடன் கிளம்பினார். நாமதேவர் பின்தொடர, மூவரும் ராக்கா இருந்த வனத்தை அடைந்தனர். அங்கே ராக்கா, மனைவி-மகளுடன் சுள்ளி சேகரித் துக் கொண்டிருந்தார். கண்ணுக்குத் தெரியாத ஜீவராசிக்கும் தன்னால் துன்பம் நேரக் கூடாது என்பதற்காக பூமியில் கவனமாக, மென்மையாக தனது பாதங்களை வைத்து நடந்தார். அவரது மனம் நாராயண நாம ஜபத்தில் ஆழ்ந்திருந்தது.

இதைக் கண்டு மகிழ்ந்த ருக்மிணி, ”எதையும் விரும்பாத ராக்காவின் பற்றற்ற செயலையும் அவனது நாம ஜபத்தையும் பார்த்தாயா?” என்றாள் நாமதேவரிடம்.

அப்போது பகவான், ருக்மிணியைப் பார்த்தார். அவரது எண்ணத்தை அறிந்து கொண்ட ருக்மிணி தனது விலை உயர்ந்த மாணிக்க கங்கணத்தை, ராக்கா சுள்ளி சேகரித்துக் கொண்டிருந்த இடத்தில், தரையில் போட்டு அதன் மீது ஓர் சுள்ளியை எடுத்து வைத்தாள். பிறகு, மூவரும் புதர் ஒன்றில் மறைந்திருந்து ராக்காவை கவனித்தனர்.

அந்த இடத்துக்கு வந்த ராக்கா, சுள்ளியை எடுத்தார். அங்கே மாணிக்க கங்கணம் ஒன்று மின்னுவதைக் கண்ட ராக்காவின் உடல் நடுங்கியது. பயத்துடன் மனைவியை அழைத்தவர், ”பற்றற்ற நிலையில் வாழும் எனது கொள்கைக்கு விரோதமாக இங்கே கங்கணம் ஒன்று இருக்கிறது பார்! இவற்றுக்கு பயந்துதானே வனத்துக்கு வந்தேன். இதுபோன்ற செல்வக் குவியலுக்கு ஆசைப்பட்டுத்தானே, உயிருக்கு உயிராக பழகியவர்கள்கூட, வெட்டிக் கொண்டு மடிகின்றனர். பொய் வீட்டைத் துறந்து, மெய் வீடாகிய முக்தியை நாடி இங்கே வந்துள்ளதை பண்டரிநாதன் அறிவார். ஆனால், விதியின் வலிமையால் இந்தக் கங்கணம் கண் முன்னே தோன்றி பயத்தில் ஆழ்த்துகிறது. இனி, இங்கு இருக்கவே கூடாது!” என்று கதறியவர், குடும்பத்தாருடன் வனத்தில் இருந்து வேக வேகமாக ஓடினார்.

இதைக் கண்ட நாமதேவர் சிலிர்த்தார். ”எனது சந்தேகம் தீர்ந்தது. ராக்காவைப் போல் பற்றற்ற மனம் எனக்கு கிடையாது. இப்படியோர் உத்தம மான பக்தனுக்கு தரிசனம் தந்து அருள் புரியுங்கள்” என்று வேண்டினார்.

அதை ஏற்று, ராக்காவுக்குத் தரிசனம் தந்த பண்டரிநாதன், ”நாமதேவனது சந்தேகத்தைப் போக்குவதற்காகவே உன்னைச் சோதித்தேன். பற்றற்ற மனதுடன் தொடர்ந்து பக்தி செலுத்தி வா! எப்போதும் உன் இதயத்தில் இருந்து, தரிசனம் அளிப்பேன்” என்று அருளி மறைந்தார்.

இறை தரிசனம் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தார் ராக்கா.

– ஜூலை 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *