அ.முத்துலிங்கம்

 

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் கடமையாற்றி தற்சமயம் ஓய்வுபெற்று தன் மனைவி கமலரஞ்சினியுடன் வசிப்பது கனடாவில். இவரின் மகன் சஞ்சயனும், மகள் வைதேகியும் வசிப்பது அமெரிக்காவில்.

இலக்கியப் பணிகள்

அ.முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் லாப நோக்கற்ற குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்

நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

புதினம்

 1. உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)

சிறுகதை தொகுப்பு

 1. அக்கா (1964)
 2. திகடசக்கரம் (1995)
 3. வம்சவிருத்தி (1996)
 4. வடக்கு வீதி (1998)
 5. மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
 6. அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
 7. ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
 8. அமெரிக்கக்காரி (2009)
 9. Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)

கட்டுரைத் தொகுப்பு

 1. அங்க இப்ப என்ன நேரம்? (2005)
 2. பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
 3. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
 4. வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
 5. அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
 6. ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)

***********************************************
பிறப்பு : சனவரி 19, 1937(1937-01-19)
கொக்குவில், யாழ்ப்பாணம், இலங்கை
துணைவர்(கள்) கமலரஞ்சினி
பிள்ளைகள் சஞ்சயன்,வைதேகி

Typology Home


***********************************************