மகளை தேடி




உதவி போலீஸ் கமிஷனர் தன் எதிரில் உட்கார்ந்திருந்த தம்பதியரை வருத்தத்துடன் பார்த்தார். அந்த நகரில் பெரிய தொழிலதிபர், நல்ல வசதி படைத்தவர். அவருக்கு இப்படி ஒரு பிரச்சினை.
உங்க வருத்தம் புரியுது, என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க பொண்ணை மீட்டு கொண்டு வர முயற்சி பண்ணறேன்.

தேம்பிக்கொண்டிருந்த இருவரில் முதலில் தன்னை நிலைப்படுத்திக்கொண்ட அவர் ரொம்ப நன்றி சார், எவ்வளவு செலவு ஆனாலும் சரி. எங்க பொண்ணு வீட்டுக்கு வந்துடணும். நாங்க வர்றோம், சார் கை கூப்பி விடை பெற்றுக்கொண்டனர்.
அவர்கள் சென்ற பின்பும் அமைதியாக உட்கார்ந்திருந்த கமிஷனர், ஐந்து நிமிடங்கள் கழித்து மாரியப்பனை வர சொல் என்று அருகில் இருந்த செகரட்டரியிடம் சொன்னார்.
சல்யூட் வைத்து நின்ற மாரியப்பனை உட்கார் உன் கிட்டே கொஞ்சம் பேசணும்,
யெஸ் சார், எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தவர் விரைப்பாய் கமிஷனரை பார்த்தார்.
இந்த விண்ணப்பத்தை படித்து பார், கையில் கொடுத்த விண்ணப்பத்தை வாசித்தவர் நிமிர்ந்து அவரை பார்த்தார்.
இப்ப வந்துட்டு போன ‘பேரண்ட்ஸ்’ எழுதி கொடுத்திருக்காங்க, இதை குற்றச்சாட்டா பதிவு பண்ணி விசாரணையை ஆரம்பி.. கொஞ்சம் சிக்கலான கேஸ்.
யெஸ் சார், மாரியப்பன் அந்த காகிதத்துடன் அவரது டேபிளுக்கு வந்தவர் மீண்டும் அந்த விண்ணப்பத்தை படித்தார்.
கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் எங்கள் மகள் சில நாட்களாக வீட்டுக்கு வரவில்லை, நான் ஆன்மீகப்பாதையை தேர்ந்தெடுத்து விட்டேன். இனி என்னை உங்கள் மகளாக பார்க்க வேண்டாம் என்று கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறாள். தயவு செய்து அவளை எங்களிடம் சேர்த்து தரும்படி பணிவன்புடன்….
பெருமூச்சு விட்டார் மாரியப்பன், இது மிகவும் சிக்கலான பிரச்சினை, முதலில் அந்த பெண் எங்கிருக்கிறாள் என்று கண்டு பிடிக்க வேண்டும், சரி பார்ப்போம், முதலில் விண்ணப்பித்தவரின் முகவரிக்கு வண்டியை எடுத்தார்.
விசாரித்த முக்கால் மணி நேரத்தில் அரை மணி நேரம் தன்னுடைய பெண்ணின் புராணங்களையே சொல்லி ஓய்ந்த தாய் அதன் பின் விஷயத்துக்கு வந்தாள். அவள் சில நாட்களாக ஏதோ ஆசிரமத்தை பற்றி பேசிக்கொண்டிருந்ததாக சொன்னாள். எந்த ஆசிரமம் என்று மாரியப்பன் கேட்டார்..
எந்த ஆசிரமம் என்று சொல்லாவிட்டாலும் இதே நகரின் மலை அடிவாரத்தில் இருக்கும் ஆசிரமம் ஒன்றிலதான் நாங்க பிரண்ட்சுகளோடு போனோம் அப்படீன்னு சொல்லிகிட்டிருந்தாள்.
மறு நாள் அந்த ஆசிரமத்தில் மாரியப்பன் சாதாரண உடையில் நின்று கொண்டிருந்தார். உள்ளே ஆசிரம்ம என்று சொல்லக்கூடிய அளவில் பெரியதாக
எதுவும் தென்படவில்லை. பெரிய ஹால் மேல் சுவற்றில் நிறைய அந்த ஆசிரமத்து துறவியுடன் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட பெரிய பெரிய அரசியல் தலைகளின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன..
மக்கள் நிறைய பேர் உள்ளே போவதும் வருவதுமாக இருந்தனர். அங்காங்கே துறவி உடையில் சிலர் நின்று கொண்டு அங்கு வருபவர்களுக்கு வழி காண்பித்து கொண்டிருந்தனர். மாரியப்பன் அப்ப்டி நின்று கொண்டிருந்த ஒரு துறவியை நெருங்கினார்..
நீங்க எல்லாம் இந்த ஆஸ்ரமத்துலயே இருக்கறவங்களா?
ஆமாம் என்று தலையசைத்தார் அவர். பாக்கறதுக்கு சின்ன வயசா தெரியறீங்க, இப்பவே இங்க வந்துட்டீங்களே.
ஆன்மீக சேவை செய்யறதுக்கு வயசு எல்லாம் தேவையில்லீங்க.
குட், உண்மைதான் துறவு அப்படீங்கறதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் தம்பி.
இன்னும் ஒரு மணி நேரத்துல எங்க குரு உள்ளே இருக்கற ஹால்ல இதை பத்தி பேச போறாரு. அதுக்காகத்தான் இவங்க நிறைய பேர் உள்ளே போயிட்டிருக்காங்க, நீங்க போய் கேளுங்க, இந்த வழியா போங்க கை காட்டினார்.
இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே தம்பி அதுவரைக்கும் இந்த ஆசிரமத்தை பத்தி தெரிஞ்சிக்கறேன், அப்புறமா உள்லே போய் உட்கார்ந்துக்கறேன். உங்களுக்கு நான் இங்க நிக்கறதுனால ஏதாவது தொல்லையிருக்கா?
இல்லை இல்லை, இருந்தாலும் வர்றவங்க கிட்டே நான் பேசிகிட்டு நிக்க கூடாதில்லையா, எனக்கு கொடுத்திருக்கற வேலை வர்றவங்களுக்கு வழி காட்டணும் அவ்வளவுதான்.
மன்னிச்சுக்குங்க தம்பி, என் பையன் கூட இது மாதிரி ஆன்மீகத்துல நிறைய ஈடுபாடோட இருக்கான்.
அப்படீங்களா, அப்படீன்னா இங்க மகேந்திர சுவாமிகள் அப்படீன்னு ஒருத்தர் இருக்கறாரு, அவரை காண்டாக்டு பண்ணிங்கன்னா, அவர்தான் இளைஞர்களுக்கு ஆன்மீகத்தை பத்தி விளக்குவாறு.
அப்படியா, ரொம்ப நல்லது, அவரை எந்த பக்கமா போய் பார்க்க முடியும்?
இந்த வழியா போங்க, மாரியப்பன் அந்த வழியை நோக்கி நடக்கிறார்.
வழி கொஞ்சம் குறுகலாகவும் ஆங்காங்கே அறைகளாகவும் கட்டப் பட்டிருக்கிறது. இடையில் மீட்டிங் நடத்த வசதியாக ஹால் இருந்தது. ஓரமாக நடந்து செல்ல வழி இருந்தது.
உள்ளே செல்ல,செல்ல அந்த இடம் அமைதியாக இருந்தது. இந்த வழியாக பொது மக்கள் நடமாட்டத்தை காணவில்லை. ஆங்காங்கே கொஞ்சம் பேர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் உடைகள் வெளிர் பச்சை நிறமாய் குர்தா போல இருந்தது. அதில் பெண்களும் கொஞ்சம் பேர் இருந்தனர்.
இவர் அவர்களை உற்று பார்த்து தாண்டி சென்றார். ஒருவரும் அவரை ஏறிட்டு கூட பார்க்காமல் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டிருந்தனர்.
எதிரில் ஒரு இளைஞன் வெளி பச்சை உடையில் நடந்து வர தம்பி இங்க மகேந்திர சுவாமிகள் அறை எங்க இருக்கு?
இதோ இதுதான், கொஞ்சம் இருங்க, கதவை மெல்ல தட்டினான். உள்ளே வரலாம், குரல் வர இவன் முதலில் உள்ளே சென்று ஏதோ பேசி விட்டு வந்தவன் வெளியே வந்து உங்களை வர சொல்றாரு.
மாரியப்பன் உள்ளே சென்றார்.
உதவி கமிஷனர் முன் உட்கார்ந்திருந்தார் மாரியப்பன். அப்ப அந்த பொண்ணு வெளிய வர்றதுக்கு வாய்ப்பு இல்லைங்கறீங்க.
நான் அந்த பெண் கிட்டேயே பேசினேன் சார், அங்க மகேந்திரன் அப்படீங்கறவரை வைச்சு மூவ் பண்ணினேன். நானாகத்தான் வந்திருக்கேன், எனக்கு வீட்டுக்கு வர விருப்பம் இல்லை அப்படீன்னு சொல்லிடுச்சு. பொண்ணு மேஜர் வேறே.
சரி அவங்க பேரண்ட்ஸ் வர சொல்லியிருக்கேன், சொல்லி பார்ப்போம். சொல்லி முடிக்கவும் உள்ளே வந்த தம்பதிகளை உட்கார சொன்னார்.
சார் எங்க பொண்ணு? உங்க பொண்ணு பத்திரமாத்தான் இருக்கா, ஆனா இப்ப உங்களோட வர முடியாதுன்னு சொல்றா?
அதெப்படி சார் சொல்ல முடியும்? நாங்க பெத்தவங்க, நான் கம்பிளெயிண்ட் கொடுத்திருக்கேன், என் பொண்ணை என் கிட்டே ஒப்படைச்சு கொடுங்க அப்படீன்னு..
உதவி கமிஷனர் இதுல நிறைய பிரச்சினை இருக்கு, உண்மையிலேயே அந்த பொண்ணை நாம் கூட்டிகிட்டு வந்தாலும், மறுபடி அங்க போறதுக்குத்தான் வாய்ப்பு இருக்கு, அதுமட்டுமல்ல, நானாகத்தான் வந்தேன் அப்படீனு ஒரு மேஜரான பொண்ணு சொல்லும்போது சட்டம் அவங்களுக்குத்தான் சாதகமா இருக்கும்.
பெற்றவர்கள் எதுவும் செய்ய தோன்றாதவர்களாய் திகைத்து உட்கார்ந்திருந்தார்கள்.
மாரியப்பன் மெல்ல கணைத்து நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? அவர்களை பார்த்து கேட்டார். அவர்கள் தலையசைக்க, உதவி கமிஷனரை பார்த்தார். அவர் தலையாட்டியதும் அவர்களுக்கு பெண்ணை எப்படி கொண்டு வர முடியும் என்று ஒரு வழி சொன்னார்.
ஒரு வாரத்தில் அந்த பெண் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டாள். காதும் காதும் வைத்தது போல் நடந்தது. இரண்டு மூன்று நாட்கள் முரண்டு பிடித்தது போல் இருந்த பெண் போக போக சரியாகி விட்டாள்.
சில நாட்கள் கழித்து செய்தித்தாளில் ஒரு செய்தி படத்துடன் போட்டிருந்தது. அந்த ஆசிரமத்துக்காக ஒரு தொழிலதிபர் இவ்வளவு தொகை நன்கொடையாக அளித்தார் என்று.
![]() |
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க... |