திருமண அழைப்பு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 3,612 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு:

நாகமுத்து எனும் ராகவனின் நண்பர், இரண்டு நாட்களுக்கு முன்பு, அவருக்கு அலைபேசி மூலம் ஓர் அவசர அழைப்பை விடுத்தார்.

“வருகின்ற திங்கட்கிழமை வயலூரில் ஒரு திருமணம் இருக்கு. நீங்க அவசியம் முதல் நாள் ராத்திரியே மண்டபத்திற்கு வந்துடுங்க. இது ஓர் எளிமையான திருமணம். பத்திரிக்கை எல்லாம் எதுவும் அடிக்கல. நீங்க மறக்காம வந்துருங்க. நான் அப்புறம் பேசுறேன்.”

இப்படி அவசரகதியில் ஒரு திருமணச் செய்தியை ராகவனின் நண்பர் சொல்லிவிட்டு, ஒரு கணப் பொழுதில் பேச்சை துண்டித்துக் கொண்டார்.

அந்த திருமணத்திற்கு ராகவன் அவசியம் நண்பர் சொன்னபடி கிளம்பிப் போக வேண்டும். சரிதான், ஆனால் திருமணம் யாருக்கு என்பதை தெளிவாகச் சொல்லாமல் ஏன் விட்டுவிட்டார் என்பதுதான் ராகவனுக்கு இன்னும் புரியாத புதிராக இருக்கின்றது. நாகமுத்து மேற்படி தகவல்களை அப்புறம் சொல்கிறேன் என்றார். ஆனால் அதன் பிறகு அவர் சொல்லவே இல்லை.

நாகமுத்து, ராகவனின் இனிய நண்பர். அவரது மகளுக்குத் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. அந்த மகள் தனது கணவரோடு ராஜஸ்தானில் நல்லபடியாக இருக்கின்றார். அவரது மகன் தான்சானியா நாட்டில் நல்ல உத்தியோகத்தில் இருக்கின் றார். அவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் முடிந்து விட்டது. அப்படி என்றால் இப்போது யாருக்குத் திருமணம்? ராகவன் குழப்பத்தில் மந்தியாய் மாறிப்போனார். அவரது மனம் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருந்தது..

பொதுவாக முன்பெல்லாம் திருமணம் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே மணமகன் மணமகள் இருவிட்டாரும் சேர்ந்து ஒரு கோவிலில் வைத்து முகூர்த்த ஓலையை எழுதுவார்கள். அந்த கோவிலில் இப்படிப்பட்ட வேலைகளை செய்வதற்காகவே ஒரு ஐயர் இருப்பார். அந்த ஐயர் இருவீட்டாரின் தகவல்களை வைத்துக்கொண்டு திருமண அழைப்பிதழ் ஒன்றை அவர் பாணியில் எழுதி இரு வீட்டாரிடமும் ஒப்புதல் வாங்கிக் கொண்டு அதற்கு தட்சணையாக ரூபாய் ஐநூறு முதல் இரண்டாயிரம் வரை வாங்கிக் கொள்வார். பல ஆண்டுகளாகவே இந்தப் பழக்கம் பரவலாகவே நடக்கின்ற ஒன்றுதான்.

இந்த முகூர்த்த ஓலை என்னும் அழைப்பிதழ், அதன் பிறகு அச்சகத்திற்குச் செல்லும். அங்கே உற்றார் உறவினர் அங்காளிகள் பங்காளிகள் மாமன் மச்சான்கள் பெயர்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் சேர்க்கப்படும்.

திருமணத்திற்குப் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அழைப்பிதழ்கள் கைக்கு வந்து சேரும். அதன் பின் அந்த அழைப்பிதழ்கள் அனைத்திலும் நான்கு மூலைகளுக்கும் மஞ்சள் பூச்சு மங்களகரமாக நடக்கும்.

நன்கு முகவரி தெரிந்த தூரத்தில் இருக்கும் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் அஞ்சல் துறை பொறுப்பு எடுத்துக்கொண்டு சேர்க்கும். உற்றார் உறவினர்கள் வீடுகளுக்கு நடந்தும், மிதிவண்டியிலும் சென்று ஊர் ஊராய் அலைந்து, வீடுகளை விசாரித்துக் கண்டுபிடித்து, தாம்பூலத் தட்டில் அழைப்பிதழை வைத்து, உடன் வெற்றிலைப் பாக்கையும் வைத்து, அந்த அழைப்பிதல் மேலுரையில் அவர்களின் பெயர்களை முழுசாய் எழுதி, பின்னால் பெரும் நிலக்கிழார் என்றெல்லாம் போட்டு, “அவசியம் கல்யாணத்துக்கு வந்துடுங்க,” என்று சொல்லி அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, அவர்கள் தரும் காப்பி என்ற பெயரில் இருக்கும் சுடு நீரைக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பிறகு கட்டையாய் படுத்து உறங்கிய நாட்கள் எல்லாம் எப்படி மாறிவிட்டது பாருங்கள்.

சமீப காலமாக எல்லாமே அலைபேசி புலனம் மூலமே அழைப்பிதழ்களை அனுப்பி விடுகிறார்கள். வேலையும் மிச்சம். அலைச்சலும் மிச்சம். செலவும் மிச்சமோ மிச்சம்.

நண்பர் நாகமுத்து இன்னும் நவீனமாகிவிட்டார். வெறும் வாய் வழி வார்த்தைகளால் அவர் திருமண அழைப்பை வடிவமைத்துக்கொண்டது சிறப்புதான். ஆனால் இந்தத் திருமணம் யாருக்கு? என்ற விவரத்தையும் அவர் உடனே சொல்லி இருந்திருந்தால், இன்னும் சிறப்போ சிறப்பு தான்.

ஒரு வாரத்திற்கு முன்பு:

மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் வெள்ளிமலர் தனது வீட்டில் மல்லாந்து படுத்தபடி எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளில் மிதந்தபடி இருந்தாள்.

பக்கத்தில் தொலைக்காட்சி மெல்லிய ஓசையோடு இயங்கியபடி இருந்தது. அதனை அணைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் வெள்ளி மலர் படுத்தபடியே சிந்தனையில் மூழ்கி இருந்தாள். அவளது பத்து வயது மகன் பாலகுமாரன் அருகில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

வெள்ளிமலரின் அன்பான அருமையான கணவர், கடந்த ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி இறந்து போனார். அதுவரை வீட்டு வேலைகளை மட்டும் செய்து வந்த வெள்ளி மலர், இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். மாதம் இருபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. ஆனாலும் அவரது கணவர் இருந்தபோது இருந்த மனநிறைவு இப்போது இருக்கவில்லை.

இரவு நேரம் வந்தாலே அவளை பயம் கவ்விக் கொள்கிறது. அவளது சித்தப்பா பலமுறை அவளிடம் மறுமணம் பற்றிப் பேசிய போதெல்லாம் மறுத்திருக்கிறாள். ஆனால் இப்போது சித்தப்பாவின் யோசனைப்படி மறுமணம் செய்து கொள்ள அவள் முடிவு செய்து விட்டாள். ஆனால் பத்து வயதுப் பையனுடன் அவளை மறுமணம் செய்து கொள்ள யார் முன்வரப் போகிறார்கள் என்பதுதான் சற்று சிரமமானதாகத் தோன்றுகிறது.

அவளை விரும்பி மறுமணம் செய்து கொள்பவர்கள்,” மகனை சரியாக நடத்துவார்களா அல்லது மறைமுகமாக கொடுமை செய்தால் என்ன செய்வது?” என்ற அச்சமும் அவ்வப்போது வந்து அவளை பயமுருத்தி விட்டுச் செல்கிறது.

அப்போது அலைபேசியில் அவளுக்கு ஓர் அழைப்பு வர அவள் அலைபேசியை எடுத்துப் பேசினாள். வெள்ளி மலரின் சித்தப்பாதான் பேசினார்.

“மலரு, நான் சொல்றதக் கேளுமா. நான் உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து இருக்கேன். நான் உன்னப் பத்தின எல்லா விஷயத்தையும் அவர்கிட்ட சொல்லிட்டேன். நான் நேரிலேயே அவர் வீட்டுக்கே போயி பார்த்துப் பேசிட்டேன். மாப்பிள்ளை வேற ஜாதி தான். ஆனாலும் நல்ல பையனாதான் இருக்காரு. அவரு திருமங்கலத்துல இருக்காரு. இப்ப அவரு ஒரு தனியார் நிறுவனத்தில் முப்பதாயிரம் சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்காரு. நீ இப்ப சரின்னு சொன்னா அடுத்த வாரமே கல்யாணத்தை வச்சுக்கலாம் என்னம்மா சொல்ற?”

“சித்தப்பா எனக்கு வேற ஜாதிங்கிறதுல ஒன்னும் ஆட்சேபனை இல்ல. ஆனா அவரோட பழக்கவழக்கங்கள் எப்படி என்னென்னனு பாக்கணும். எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்க. அப்புறம் அவரோட அலைபேசி என்ன எனக்குக் கொடுங்க. நான் அவரிடம் பேசிட்டு அப்புறம் உங்ககிட்ட பேசுறேன்.”

“நான் இப்ப உடனே அந்த மாப்பிள்ளையோட எண்ண உனக்கு அனுப்பி வைக்கிறேம்மா.”

நேற்று :

திருமண அழைப்பை விடுத்த நண்பரிடம் இருந்து, காலை பத்தரை மணி வரை, மேல்விவரங்கள் எதுவும் ராகவனுக்கு வரவில்லை. அவரும் நாகமுத்துவிடம் எதுவும் கேட்கவில்லை. திருமணம் யாருக்கு என்ற குழப்பம் இன்னும் ராகவனிடத்தில் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

மதியம் குளித்தார். சாப்பிட்டபின் பயணிக்கத் தயாரானார். மாலை மூன்றரை மணி அளவில் நண்பர் நாகமுத்துவிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

“என்ன நண்பரே, நாங்க இன்னும் பத்து நிமிஷத்துல என்னோட சிற்றுந்துல புறப்படப் போறோம். நீங்க வந்தீங்கன்னா உடனே புறப்பட்டு விடலாம்”என்றார் நாகமுத்து.

“என்ன நாகமுத்து, கும்பகோணம் போகும் வழியில் இருக்கிற வயலூர் தானே! நீங்க போங்க, நான் என்னோட வண்டியிலேயே வந்துடறேன்” என்றார் ராகவன்.

நாகமுத்து அதிர்ந்து போனார்.

“அடடா இந்த வயலூர் இல்லைங்க. திருச்சிக்குப் பக்கத்துல இருக்குற குமார வயலூர்” என்ற உடன் ராகவனும் திகைத்துப் போனார்.

“சரி நாகமுத்து, நீங்க முன்னாடி போங்க. நான் ராத்திரி ஏழு மணிக்குள்ள மண்டபத்துக்கு வந்துடறேன்,” எனச் சொல்ல அவரும்” சரி சீக்கிரம் வந்துருங்க” எனச் சொல்லிவிட்டு அலை பேசியை அணைத்து விட்டார்.

ராகவன் அவரது வீட்டிலிருந்து சரியாக மூன்றரை மணிக்கு புதிய பேருந்து நிலையம் நோக்கிப் புறப்பட்டார். ராகவன் திருச்சி செல்லும் பேருந்து ஒன்றில் மாலை நான்கு மணிக்கு ஏறி அமர்ந்தார். நடத்துனர் சொன்னபடி சரியாக நான்கு பனிரெண்டுக்கு பேருந்து திருச்சியை நோக்கி நகர்ந்தது. ராகவன் பேருந்தில் ஏறி அமர்ந்த உடன் தான் எடுத்து வந்திருந்த தி. ஜானகிராமனின் “மரப்பசு” புதினத்தில் தன்னை மறந்தபடி இருந்தார். காலை முதல் மதியம் வரை புதினத்தின் முதல் 65 பக்கங்களை அவர் வீட்டில் இருக்கும் போது முடித்திருந்தார். தற்போது அவரது வாசிப்பு 66-ம் பக்கத்திலிருந்து தொடங்கியது.

பேருந்து வல்லம். சாஸ்திரா, செங்கிப்பட்டி, துவாக்குடி, திருவெறும்பூர் என போய்க்கொண்டிருந்தது, இந்த இடை நில்லா பேருந்து இடையில் எங்காவது நின்றதா? பயணிகள் அங்கு ஏறினார்களா? இறங்கினார்களா? என்பதெல்லாம் ராகவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதெல்லாம் நடத்துனரின் பணி. நமக்கு

அதில் என்ன சம்பந்தம்? என்ற வகையில் ராகவன் தனது வாசிப்பிலேயே லயித்திருந்தார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு மாலை 5.35 மணிக்கு பேருந்து வந்து சேர்ந்தது. அப்போது அவரது வாசிப்பு 95 பக்கங்களைக் கடந்து நின்றது. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் இருக்கை ஒன்றில் ராகவன் அமர்ந்தபடி வயலூருக்கு எப்படிச் செல்வது? என்பது பற்றி யோசித்தார்.

அங்கிருந்து வயலூருக்கு நேரடியாகப் பேருந்துகள் இல்லை. புத்தூர் நாற்ச்சந்தி வழியாக செல்லும் ஏதாவது ஒரு மாநகரப் பேருந்தில் ஏறிக்கொண்டு அரசு மருத்துவமனையில் இறங்கிக் கொண்டால் அங்கிருந்து வயலூருக்கு செல்வது எளிதாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.

ஆறு மணியைத் தாண்டியதும் ஒரு மாநகரப் பேருந்து ராகவனை ஏற்றிக் கொண்டு பத்திரமாக அரசு மருத்துவமனை அருகே இறக்கிவிட்டுச் சென்றது. ராகவன் அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் வயலூர் செல்லும் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஏழு மணி வாக்கில் வயலூர் பேருந்து வர ராகவன் அதில் பயணித்து வயலூர் மண்டபத்தை அடைந்தபோது இரவு எட்டு மணி ஆகியிருந்தது.

ராகவனின் நண்பர் நாகமுத்து மண்டபத்தில் பரபரப்பாக இருந்தார். இவரைப் பார்த்ததும் சந்தோஷமாய் வரவேற்றார். ராகவன் அவரிடம் தனது பயணப் பையைக் கொடுத்தார். உடனே அவர் அருகில் நின்ற ஒரு இளைஞனிடம் கொடுத்தார்.

கணேஷ் என்பது அந்த இளைஞனின் பெயர் என்பதை பின்னர் ராகவன் அறிந்து கொண்டார். அந்த இளைஞர் இவரது பயணப் பையை அவர் தங்கியிருந்த அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சாவியைத் தானே வைத்துக் கொண்டார். கணேஷ் என்ற அந்த இளைஞரை ராகவன் பார்ப்பது இதுதான் முதல் முறை.

இங்கே காலையில் யாருக்குத் திருமணம் என்பதே இன்னும் ராகவனுக்குத் தெரியாமல் இருப்பது ராகவனை மேலும் சிரமப்படுத்திக் கொண்டிருந்தது. இது பற்றி நண்பர் நாகமுத்து, ராகவனிடம் தெளிவாக சொல்லிவிட்டதாக நினைத்துக் கொண்டாரா அல்லது சொன்னால் நன்றாக இருக்காது என்ற நோக்கில் மறைத்து விட்டாரா- இப்படி சந்தேகங்கள் ராகவனை சங்கடப்படுத்தியபடி இருந்தன.

ஒரு வழியாக நண்பர் நாகமுத்து, ராகவன் அருகில் வந்தார்.

”எல்லோரும் சாப்பிடப் போறாங்க. நீங்களும் வாங்க சாப்பிட்டுட்டு வரலாம்”என்று நாகமுத்து ராகவனை அழைத்தார். ராகவனும் சரி என்றார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் முன்பு டாட்டாவின் நானோ புது பொலிவுடன் வந்து நின்றது. ராகவன், கணேஷ், நண்பர் நாகமுத்து மற்றும் அவரது துணைவி நால்வரும் அதில் ஏறிக் கொண்டனர். நானோவில் செல்லும்போது ராகவன் நண்பரிடம்” கல்யாணம் யாருக்கு?”என்று மெல்லிய ஓசையில் கேட்டார்.

“அடடா உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். கல்யாணம் என்னோட சகலப் பொண்ணுக்கு. அவங்க மணப் பாறையில இருக்காங்க. சகல இறந்துட்டாரு. அதனால நான்தான் கல்யாணத்தை நடத்திக்கிட்டு இருக்கேன். இப்ப நாம சாப்பிடப் போகும்போது பொண்ண உங்களுக்குக் காட்டுறேன்,” என்று அன்புடனும் கனிவுடனும் சொன்னார் நாகமுத்து.

திருமண விழாவிற்கு வந்திருந்த பதினோரு உறவினர்களும் உணவகத் திற்குள் நுழைந்தனர். அந்த உணவகம் பிரம்மாவின் படைப்பைப் போல் பிரம்மாண்டமாக இருந்தது. ராகவனின் நண்பர், ராகவன் அருகில் அமர்ந்தபடியே சாப்பிட்டார்.

அப்போது அவருக்கு எதிரே அமர்ந்திருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்

” சித்தப்பா மாலையெல்லாம் என்ன ஆச்சு?”என்று கேட்டார். உடனே நாகமுத்து அவரிடம் ”மாலை தஞ்சாவூரில் இருந்து வந்துகிட்டு இருக்கு. நானும் உங்க சித்தியும் சாப்பிட்ட பிறகு காந்திச் சந்தைக்குப் போயி மாலையை வாங்கிட்டு வந்துடறோம்” என்று சொல்லிவிட்டு ராகவனிடம் திரும்பி,

”இதோ அவங்கதான் கல்யாணப் பொண்ணு. என்னோட சகலப் பொண்ணு” என்றார் நாகமுத்து.

“சரி இந்தப் பொண்ணுக்கு இது இரண்டாம் கல்யாணமா?”.

“ஆமா”.

“இவங்க வீட்டுக்காரர் என்ன விவாகரத்து பண்ணிட்டாரா?”

“இல்ல அவரு போன வருஷம் ஒரு விபத்துல இறந்துட்டாரு”

“சரி இவங்க, இப்ப எங்க இருக்காங்க?”.

“அவங்க சொந்த ஊரிலேயே மணப்பாறைக்குப் பக்கத்துல கிராமத்துல இருக்காங்க”.

“மாப்பிள்ளை எந்த ஊர்?”

“அவரு மதுரை திருமங்கலம். அவருக்கும் இது இரண்டாம் கல்யாணம்”.

“அவங்க வீட்டிலயும் இறந்துட்டாங்களா?”

“ஆமா” என்றார் நாகமுத்து.

ராகவனுக்கு இப்போதுதான் மனதிற்குச் சற்று ஆறுதலாக இருந்தது. நீண்ட நேரம் அவர் மனதை நெருக்கிக் கொண்டிருந்த விஷயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இரவு உணவு முடிந்த பின் நண்பர் நாகமுத்துவும் அவரது துணைவியும் நானோவில் மாலை வாங்கி வரப் புறப்பட்டுச் சென்றனர்.

ராகவன் அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து கையில் எடுத்து வந்திருந்த “மரப்பசு” புதினத்தின் கடைசி அத்தியாயங்களை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது கணேஷ் அவர் அருகில் நின்று கொண்டு யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். ராகவன் மரப்பசுவின் கடைசி பக்கங்களில் கவனமாக இருந்தார்.

ஆரம்பத்தில் அங்கு கொசுக்கடி அதிகமாக இல்லை. இரவு பத்து மணி ஆவதற்குப் பத்து நிமிடங்கள் இருந்தபோது, அங்கு கொசுக்கடி பெரிய நெருக்கடியாக இருந்தது. நல்லவேளை, அதற்குள் ராகவன் ‘மரப்பசு’வை வாசித்து முடித்துவிட்டார்.

கல்யாண மாலை வாங்கச் சென்ற நானோ ஊர்தி இரவு பத்து மணி வரை வரவில்லை. அங்கே கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. ராகவன் அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க விருப்பம் இல்லாமல் எழுந்தார். கூடவே கணேசும் எழுந்தார். நல்லவேளை மரப்பசுவை படித்து முடித்து விட்டதில் ராகவனுக்கு ஓர் அலாதி மகிழ்ச்சி . அவரும் கணேசும் திருமண மண்டபத்திற்கு நடந்தே செல்வதென தீர்மானித்து, கணேஷ் முன் செல்ல, ராகவன் பின் தொடர்ந்து சென்றார்.

கணேஷ் பற்றிய மேல் விவரங்களை அவரிடமே மெல்லக் கேட்டுத் தெரிந்து கொள்ள ராகவன் மனம் ஆசைப்பட்டது. ஆனால் அதற்கு கொஞ்சமும் வாய்ப்பு இல்லாமல் இருவரும் 10 அடி இடைவெளியில், கணேஷ் முன்னும் ராகவன் பின்னுமாக ஆளுக்கொரு அலைபேசியில் பேசியபடி நடந்து போய்க் கொண்டிருந்தனர்.

வழிநெடுக கணேஷ் பெரும்பாலும் அலைபேசியில் இந்தியில் பேசிக்கொண்டே நடந்து சென்றார். பெரும்பாலும் இந்தியிலும், இடையிடையே கொஞ்சமாய் தமிழிலும் அவர் பேசிக் கொண்டிருந்தார். ராகவனது குழப்பம் உச்சத்தை அடைந்ததே தவிர தெளிவடையவில்லை. .

அவர்கள் சென்று கொண்டிருந்த சாலை குறுஞ்சாலையாகவும் அதிக இருட்டாகவும் இருந்தது, அவர்களுக்கு அலுப்பைத் தந்தது. மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் சில இருசக்கர வாகனங்கள் கண்மண் தெரியாமல் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன. அவற்றிலிருந்து அவ்வப்போது வெளிப்பட்ட வெளிச்சம் அவர்கள் பயமின்றி நடப்பதற்கு உதவியாக இருந்தன. இதற்கு முன்பு ராகவன், நாகமுத்து வீட்டு விசேஷங்கள் அனைத்திற்கும் வந்துள்ளார். ஆனால் கணேசை அப்பொழுது ஒருமுறை கூட அவர் பார்த்ததில்லை. பிறகு இவர் யார்? என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தபடி இருந்தது. தற்காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை. எதற்கும் கணேஷிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது என உள் மனம் உளறியபடி இருந்தது.

இருவரும் வயலூர் திருமண மண்டபத்தை அடைந்தபோது இரவு பதினொன்னரை மணி ஆகியிருந்தது. ராகவன் கை கால்களைக் கழுவிக்கொண்டு அங்கே மண்டபத்தில் இருந்த பாய்களில் ஒன்றை எடுத்து மண்டபத்தில் விரித்துப் படுத்தார்.

கணேஷ், அவர் தங்கியிருந்த சிறிய தனி அறைக்குச் சென்று அங்கேயே படுத்துக் கொண்டார். அந்த சிறிய தனி அறையில் ஒரே ஒரு கட்டில் மட்டும் இருந்தது. கணேஷ் ராகவனையும் அறைக்குள் வந்து படுத்துக்கொள்ளச் சொன்னார். ஆனால் ராகவன் வெளியே மண்டபத்தின் நீண்ட வெளியில் படுத்து போர்வையால் போர்த்திக் கொண்டார். மாலையுடன் நண்பரும் அவரது துணைவியாரும் வந்திறங்கிய காட்சிகள், ராகவனுக்கு கனவு போல நெளிந்தும் வளைந்தும் நிலை குலைந்தும் தென்பட்டன. அதன் பிறகு அவர் அயர்ந்து தூங்கிப் போனார்.

இன்று:

விடியற்காலையில் ராகவன் படுக்கையில் இருந்து எழுந்த போது மணி ஐந்தைத் தாண்டி இருந்தது. அங்கு அப்போது மண்டபத்தின் காவலாளியாக இருக்கும் ஒரு பெரியவர் மட்டும் இருந்தார். ராகவன் அவரிடம்,

” ஐயா ஒருத்தரையும் காணோம் எல்லோரும் எங்கே?”என்று விசாரித்தார்.

“எல்லோரும் கோவிலுக்கு தாலி கட்ட போயிட்டாங்க”என்றார், அந்தக் காவலாளி.

நடந்து வந்த களைப்பில் அசந்து தூங்கியதால் அவர்கள் யாரும், குறிப்பாக நாகமுத்து ராகவனை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து அவரை எழுப்பாமலேயே சென்றிருக்கிறார்கள் என்பது ராகவனுக்குப் புரிந்தது.

ராகவன் குளித்து உடைகளை மாற்றிக்கொண்டு கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, காலை 6:20 மணிக்கு கோயிலுக்குப் புறப்பட்டார். கோவிலின் கிழக்கு வாசலை நோக்கி ராகவன் மெல்ல நடந்தார்.

மணமக்களும், வந்திருந்த உறவினர்களும் திருமணம் முடிந்து கோவிலுக்கு வெளியே உள்ள அழகான புல்வெளியில் அமர்ந்து சொந்த பந்தங்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கே மொத்தமாக ஒரு பதினோரு பேர்கள் மட்டுமே இருந்தார்கள். நண்பர் நாகமுத்து ராகவனிடம் மணமக்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளச் சொன்னார். ராகவனும் நண்பரும் புகைப்படத்திற்காக மணமக்களோடு சேர்ந்து நின்றனர். அப்போது, அங்கே கணேஷ் ஒரு புகைப்படக் கலைஞராக, ராகவனைப் பார்த்துச் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். ராகவன் அவரைப் பார்த்து திகைத்தபடி நின்றார்.

ராகவன் திருமங்கலம் மாப்பிள்ளையிடமும், மணப் பெண்ணினிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். திருமங் கலத்து மாப்பிள்ளை, சத்தியமூர்த்தி ராகவனை உற்று உற்றுப் பார்த்தார். பிறகு,

“ஐயா, நீங்க எங்க பூவலிங்கம் சித்தப்பாவோட படிச்சவங்கதானே? உங்க பேருகூட ராகவன்னு நினைக்கிறேன்” என்று மாப்பிள்ளை கேட்க,

“ஆமா தம்பி! நீங்க பூவ லிங்கத்தோட அண்ணன் மகன் மூர்த்தி தானே?” என்று ராகவன் சொல்ல இருவரும் கட்டி அணைத்தபடி சில நிமிடங்கள் இருந்தனர். அங்கிருந்த அனைவரும் மாப்பிள்ளையையும், ராக வனையும் ஆச்சரியத்துடன் பார்த்தபடி இருந்தனர்.

ராகவன் மணப்பெண்ணைப் பார்த்து புன்னகைத்தபடி,

“வெள்ளிக் கண்ணு உன்னோட மாப்ள, தங்கமான பையன். இனி நீ எதப் பத்தியும் கவலைப்பட வேண்டியது இல்லை. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருப்பீங்க,” என வாழ்த்த மணமக்கள் இருவரும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.

“தம்பி, பூவலிங்கத்தப் பார்த்து எத்தனையோ வருஷம் ஆயிடுச்சு. இப்ப பூவலிங்கம் நல்லா இருக்கானா? இப்ப எங்க தம்பி இருக்கான்?” ராகவன் மாப்பிள்ளையிடம் கேட்க, மாப்பிள்ளை,

“ஐயா, சித்தப்பா செத்துப் போயி ஏழு வருஷம் ஆயிடுச்சுங்க,” என்றார்.

ராகவன் அதிர்ச்சி அடைந்து அப்படியே புல்தரையில் சாய்ந்தார்.

குறிப்பு: இக்கதை எனது “இசையின் எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் நான் தங்களுக்கு அனுப்பும் 5ஆவது சிறுகதை. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. 

முத்தமிழ்ப்பித்தன் எழுத்தாளர் பற்றிய  குறிப்புகள்:  பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன்  இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்:  1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள்  (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க...

1 thought on “திருமண அழைப்பு

  1. அருமையான கதை. கதை என்றால் ஏதாவது ஒரு பாடம் இருந்தே ஆக வேண்டும் என்ற மரபில் இருந்து மீறி எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். ஆனால் நண்பருக்கு ஏன் நாகமுத்து திருமணம் யாருக்கு என்கிற தகவல் கூறவில்லை? இது மட்டும் புரிபடவில்லை. மரப்பசு படித்ததில்லை. படிக்க வேண்டும் என்கிற அவா மட்டுமே உள்ளது. கணேஷ் யார்? அதுவும் சற்று விளங்கவில்லை. திருமண அழைப்புகளை வாட்ஸாப்ப் மூலம் அனுப்பும் சீர்கேடை நீங்கள் எடுத்துக்காட்டியதற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *