உறுப்புகளைத் தேடி…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2026
பார்வையிட்டோர்: 119
(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-19
அத்தியாயம் – 16

ஹரிஸ் கார் மெல்ல ஊர்ந்தது.
செத்தும் கொடுத்தான் சீதக்காதியாய்….ஒரே ஒரு உடலின் பாகங்கள் எத்தனை உடல்களில் பரவி…. உயிராக வைத்திருக்கிறது.?!
இறந்தபின் உடலை சிதைக்கக்கக் கூடாது ! என்று இன்றைக்கும் மக்கள் உணர்வு பூர்வமாக மட்டுமில்லாமல் சாதி, மதங்கள் சாயம் பூசியும் தடுக்கிறார்கள்.
எவ்வளவு பெரிய தவறு, முட்டாள்தனம்..?!
உறுப்பு மாற்றுக்காகவும் பழுது மற்றும் தேவைக்காகவும் உலகில் பல்லாயிரக்கணக்கானோர் காத்திருப்புப் பட்டியலில் இருந்து உயிருக்குப் போராடி தவிக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதை உரிய நேரத்தில் கிடைக்காமல் இறந்தும் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த உறுப்புகள் தாராளமாகக் கிடைத்தால் நிறைய பேர்கள் உயிர் பிழைப்பார்கள், வாழ்வார்கள்.
உடல் ஒரு விலைமதிப்பற்ற தங்கச்சசுரங்கம். அதனால்தான்..நோயாளிகள் உபத்திரவம் என்று ஒரு சில மருத்துவமனைகளுக்குச் சென்றால்… அவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் சிறுநீரகம் திருடுகிறார்கள். உயிருக்கு உபத்திரவம் இல்லாமல் உருவ வேண்டியதை உறவுகிறார்கள்.
பதினெட்டு வயதிற்கு மேல் உயிராய் வாழ்பவர்கள்… தன் உடனடி ரத்த சம்பந்தம் உள்ள நெருங்கிய உறவு நேரடி உறவிற்கு.. சிறுநீரகத்தில் ஒன்று, கணையத்தின் ஒரு பகுதி, கல்லீரலில் ஒரு பகுதி என்று தாராளமாகக் கொடுக்கலாம்.
கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் உடல் உபத்திரவம், உயிர் சிக்கல் எதுவுமில்லை.
அதற்குக் கண்முன் சான்று…நம் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பெற்றவரும் கொடுத்தவரும் நீண்ட நாள் வாழ்ந்து இறந்தார்கள்.
மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து… கண்கள் இரண்டு, சிறுநீரகங்கள் இரண்டு, இதயம், கல்லீரல், கணையம், நுரையீரல், சிறுகுடல், தோல், திசுக்கள், எலும்புகள், அதன் மஜ்ஜைகள் என்று தேவைப்படும் அனைத்தும் எடுக்கலாம். உயிர் பிரிந்த ஆறு மணி நேரத்திற்குள்…. இறந்தவர்கள் உடலிலிருந்து கார்னியா உள்பட தேவைப் படும் அனைத்தும் எடுக்கலாம்.
மூலைக்கு மூலை மருத்துவக் கல்லூரிகள். வருடாவருடம் பல ஆயிரக்கணக்கானோர் மருத்துவர்களாக வெளியேறல். உடல் அவர்களுக்கு பார்த்துப் படிக்கும் பாடப்புத்தம். அறுத்துப் பார்க்கும் பயிற்சிப் புத்தகம். எவ்வளவு பயன்பாடு..?! – ஹரிஸ் சிலிர்த்தான்.
அப்படியே காரை ஓரம் கட்டி நிறுத்தினான்.
சிலிர்ப்புகள் அடங்கி உடல் உணர்வுகள் சாதாரண நிலைக்குத் திரும்பிய பின்…அஷ்டலட்சுமியை வழக்கம்போல் கைபேசியில் தொடர்பு கொண்டான்.
“அம்மா…!”
“உனக்கு நூறு ஆயுசு.” என்றாள்.
“ஏனம்மா..? “
“நான் உனக்குப் போன் பண்ணனும்ன்னு நெனைச்சேன். நீ பண்ணிட்டே. என்ன விஷயம் சொல்லு..?”
“புதுச்சேரியில் இருக்கேன்.”
“வேலை முடிஞ்சுதா. பாக்கி இருக்கா…?”
”இன்னும் கணையம், தோல், எலும்பு…” அடுக்கினான்.
“இதுக்கு மேல் எதையும் தேட வேணாம், தொடர வேணாம். உடன் புறப்பட்டு வா.”
“ஏனம்மா…?”
“நீ போய் பத்து நாட்களுக்கு மேல் ஆகுது. என் வாழ்நாளில் உன்னை இத்தனை நாட்கள் பிரிந்து இருந்ததே இல்லை. உன்னைப் பார்க்கனும்போல் இருக்கு. பக்கத்தில் இருக்கனும் போல் இருக்கு. உடன் வா.”
“அ…. அம்மா இன்னும் நாலு நாட்கள் பொறுத்திருந்தால் சீக்கிரம் முடித்துத் திரும்புவேன்!”
“பெறப்பட்டவர்கள் எல்லாம் நல்லா இருப்பாங்க. எனக்கு இதுவே திருப்தி. வினயன் இத்தனை பேர்கள் உடல்களில் உயிராய் வாழ்கிறான். அவனும் உயிராய் இருக்கிறான். நாமும் பார்த்தாச்சு என்கிற சந்தோசம், திருப்தி என் மனசு முழுக்க நிறைந்தாச்சு. இது போதும். சீக்கிரம் வா நீ வா. உனக்கும் கலியாண காலம் வந்தாச்சு. விபரம் நேரடியாய்ச் சொல்றேன் ..” அணைத்தாள்.
தாய் சொல்லை தட்டாத பிள்ளை. மேலும் பாசம் மிக்கவன். தாய்க்குப் பிள்ளை, பிள்ளைக்குத் தாய் என்று துணையாய் இருப்பவன். அண்ணன். அப்பாவிற்குப் பிறகு அவளுக்கு இவன் உலகம், உறுதுணை. – ஹாரிஸுக்கு அம்மாவின் தாக்கம் புரிந்தது.
காரைக் கிளப்பினான்.
முதல் கியரைப் போட்டு காரை நகர்த்துவதற்குள்…கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான்.
பிரபா !
“ஹலோ…!” என்றான்.
“எங்கே இருக்கே..?”
‘ஆணுக்கு….சொந்த அக்கா தங்கையைத் தவிர ஒருமையில் அழைப்பு என்பது அறிமுகமில்லாத பெண்ணிடமிருந்து வராதது. கேள்வி படாதது. எப்படி இவள்?’ துணுக்குற்றான்.
“என்ன…! எடுப்பே சரி இல்லை?” கேட்டான்.
“என்ன…”
“ஒருமையில் அதட்டல் உருட்டல் குரல்..?!”
“எனக்குப் பிடிச்சிருந்தா அப்படித்தான் பேசுவேன். நீ பேசினால் பேசு. பேசாட்டி போ.”
‘இவள் விளையாட்டாக பேசுகிறாளா..? விநயமாமாகப் பேசுகிறாளா…? இல்லை சுபாவமே இதுதானா…?!’ குழம்பி….
“சரி. என்ன விசயம் சொல்லு..?” என்றான்.
“நீ மட்டும் ஒருமையில் பேசலாமா..?”
“சரி விடு வாதம் வேணாம். ஏன் போன் பண்ணினே..?”
“எங்கே இருக்கே..?”
“உங்க ஊ ரை விட்டு நகரல…”
“பாக்கமுடையான்பட்டிலேயே இருக்கே..?!”
“இல்லே! புதுச்சேரியில் இருக்கேன்”
“அறை எடுத்துத் தங்கி தண்ணி அடிக்கிறீயா..?”
‘ஆமாம்!’ சொல்ல ஆசை. இருந்தாலும் பொய் சொல்ல விருப்பமில்லை.
“அந்தப் பழக்கம் இல்லே” சொன்னான்.
“உன் வயசென்னா..?”
“32”
“கலியாணம் கட்டி இருக்கியா…?”
“இல்லே..”
“எந்தப் பொண்ணையாவது காதலிக்கிறீயா..?”
“இல்லே..”
“என்னைக் கட்டிக்கிறீயா…?”
“என்னது…?!!…… ” திடுக்கிட்டான்.
“நீ மருமகனான வரனும்ன்னு என் அம்மா ஆசைப்படுறாங்க…”
“அவங்களா..?!”
“ஆமா…”
“உனக்கு விருப்பமில்லையா..?”
“நான் அம்மா பொண்ணு. அவுங்க சொல்படி நடப்பேன்..”
“உன் அம்மா விருப்பத்துக்கெல்லாம் நான் ஆட முடியாது. உனக்கு விருப்பமின்னா சொல்லு யோசிச்சு சொல்றேன்.”
“அதென்ன யோசனை….?”
“அம்மா பொண்ணு பார்த்திருக்காங்க போல. கலியாண திசை வந்திருக்கு. உடனே ஊ ஊருக்கு வான்னு உத்தரவு. கிளம்பறேன்.”
“அப்போ அங்கே பொண்ணு கிடைத்தால் என் அம்மா ஆசையை நிறைவேத்த மாட்டியா..?”
“நீ அம்மா பொண்ணுன்னா…நான் அம்மா பையன். உன்னை மாதிரிதானே நானும் அம்மா பேச்சைக் கேட்கனும். அவுங்க மனசு கோணாமல் நடக்கனும்..?! அதான் யோசனை பண்ணி சொல்றேன்னு சொன்னேன்.”
“ச….சரி….” குரல் அரை மனதாக வந்தது. கைபேசி அணைக்கப்பட்டது.
‘கண்டதும் காதலா.. அம்மா விருப்பமா.. பெண் விருப்பமா..? வெறும் கலாய்ப்பா…? என்ன இது..? ஒரு பெண் இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவாளா..? கலியாணம் கட்டிப்பியா கேட்பாளா..?’
‘ஏன் கேட்கக் கூடாது..? ஆண்தான் கலியாணம் பண்ணிக்கிறீயா..? கட்டிக்கிறீயா..? கேட்கனுமா.? பெண் கேட்கக் கூடாதா..?!’ காரை கிளப்பி மெதுவாக விட்டான்.
அத்தியாயம் – 17
கிரீட்டா கடலூரைத் தாண்டும் போது மீண்டும் கைபேசி அழைப்பு.
எடுத்துப் பார்த்தான்.
மும்தாஜ் !
இவளுக்கென்ன..? யோசனையில்.. கைபேசி இணைப்பைக் காரில் கொடுத்துவிட்டு…
“ஹலோ!” என்றான்.
“நா…நான் மு… மும்தாஜ் பேசறேன்….” பயத்தில் குரல் தடுமாறியது.
“சொல்லுங்க..?”
“எங்கே இருக்கீங்க..?”
“கார் கடலூரைத் தாண்டி போய்க்கிட்டிருக்கு..”
“வேலை எல்லாம் முடிஞ்சுதா..?”
“முடிஞ்சுது.”
“உ…. உங்க அம்மாவுக்குப் போன் பண்ணினேன்.”
“ஏன்… என்ன விஷயம்..?”
“என்னை மருமகளா ஏத்துப்பீங்களா..? கேட்டேன்.”
‘இது என்ன கூத்து..?’ நினைத்தவன்…
“என்ன சொன்னாங்க..?”
“உங்க விருப்பம். உங்களைக் கேட்டு சொல்றேன்னு சொன்னாங்க…”
“சரியா சொல்லி இருக்காங்க…”
“ஆமா…”
“உங்களுக்கு விருப்பம் இருக்கா..?”
“இப்படி திடீர்ன்னு கேட்டா எப்படி பதில் சொல்ல முடியும்..?”
“உங்களுக்கு நான் வேற்று மதக்காரின்னு யோசனையா..?”
“இல்லே..”
“எங்க மதம் பிடிக்காதா..?”
“பிடிக்கும்!..”
“பிடிக்காமல் போனாலும் நீங்க சம்மதம் சொன்னால் நான் உங்க மதத்துக்கே வர்றேன்.”
“மு… மும்தாஜ்…!” – எதிர்பாராத செய்தி! ஹரிசுக்கும் பயத்தில் குரல் நடுங்கியது.
“எங்க மத்துல ஒரு சிலர்தான் வெறியாய் இருப்பாங்க. பலர் அப்படி இல்லே. இன்னைக்கும் நிறைய முஸ்லீம்கள் இந்துக்கள் கோவிலுக்குப் போவாங்க, வருவாங்க. பூசை, திருவிழாக்களிலெல்லாம் கலந்து வர்றாங்க. நாகூர் தர்கா கட்டத்திற்கு நிறைய இந்து மன்னர்கள், மக்கள் உதவி செய்திருக்காங்க. எங்களுக்கும் உங்க மதம் சம்மதம்.”
“…”
“என்ன பேச்சைக் காணோம்..? ஏழைன்னு தயக்கமா..?”
“இ.இ இல்லே…”
“நகை நட்டு போட்டு வரமாட்டேன்னு நினைப்பா..?”
“இல்லே…!”
“அண்ணன் திருடன் என்கிற தயக்கமா..?”
“இல்லே..”
“உங்க தகுதிக்கு நான் சரி இல்லையா..?”
“இல்லே..”
“நான் உங்களுக்கு ஏத்தவளாய் அழகாய் இல்லையா…?”
எவ்வளவு கேள்விகள்…! – நினைத்துக் கொண்டே…
“கொள்ளை அழகு..!” பதில் சொன்னான்.
“அப்புறம் என்ன யோசனை.?”
“யோசிக்க வேண்டாமா..?”
“யோசி..”
“இது உன் விருப்பமா..? அம்மா அப்பா விருப்பமா..?”
“என் விருப்பம்..! அம்மா, வாப்பாக்குத் தெரியாது. ஹரிஸ்…”
“சொல்லு மும்தாஜ்..?”
“என் அம்மா வாப்பா.. எங்க தகுதிக்கு என்னை ஒரு இரண்டாம்தரம் மூன்றாம்தரம் மனுசன், வயசாளிக்கோதான் நிக்காஹ் முடிப்பாங்க. எனக்கு விருப்பமில்லை. அதான் உங்களைக் கேட்கிறேன்..”
‘இளமையில் வறுமை கொடுமை!’ நினைக்க ஹரிசுக்கு கனத்தது.
“நீங்க என்னை ஏத்துக்கிட்டா… உங்க மனசு கோணாமல் நடப்பேன்.”
“….”
“அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்…”
“என்ன..?”
“என் மேல பரிதாபப்பட்டு கஷ்டப்பட்டு நிக்காஹ் முடிக்க வேணாம். மனசு ஒன்றாது. எனக்கு அதில் விருப்பமில்லே. மனசார நிக்காஹ் முடிக்கிறதுலதான் எனக்கு விருப்பம்..”
“இது உண்மையா..?”
“மும்தாஜ்! மறுத்தால் வருத்தம் வருமா..? வருத்தப்படுவீயா..?”
“சரியான காரணமாய் இருந்தால் வருத்தம் வராது. ஒப்புக்குச் சப்பாணியாய் சொன்னால் வருத்தம் வரும்.”
“மும்தாஜ்!”
“சொல்லுங்க…?”
“உனக்கு என்னைத் தவிர உங்க உறவுக்காரப் பையன் மேல், ஆசை, விருப்பம் இருக்கா..?”
“முறைப் பையன் யூனுஸ் நாகப்பட்டினத்தில் இருக்கார். நான், அந்த பையன் எல்லாம் சின்ன வயசுல ஒன்னா சேர்ந்து விளையாடி இருக்கோம். அப்பவே அவர் மேல எனக்கு ஒரு இது. அவரும் என்னை மும்தாஜ்..! மும்தாஜ்ன்னு சுத்தி சுத்தி வரும். இடையில ரெண்டு குடும்பத்துக்கும் சண்டைன்னு பேச்சு வார்த்தை நின்னு ஏழெட்டு வருசம் ஆச்சு. அது இப்போ என்னை கட்டிக்குமா கட்டிக்காதான்னு தெரியாது… துபாய் போய் சம்பத்திச்சு நல்ல வசதியாய் இருக்கு.. நிக்காஹ் முடிக்க வாய்ப்பில்லே. என் தலை எழுத்து இரண்டாம்தாரத்து மாப்பிள்ளைதான். வயசுக்கு வந்த புள்ளைங்க இருந்தாலும் இருக்கும். இல்லாமல் போனாலும் போகும். யார் தலையெழுத்தை யார் மாத்த முடியும் சொல்லுங்க. என்னமோ என் மனசுல உள்ளதைக் கொட்டிட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க”. தொண்டை கமறியது.
“மு…மும்தாஜ்!”
“சொ..சொ..ல்லுங்க..?” கைபேசியில் மூக்குறிந்த அழுகை வாசனை அடித்தது.
“நான் அம்மாகிட்ட கலந்து சொல்றேன்.”
“…”
“அவுங்க உறவுக்காரப் பொண்ணைப் பார்த்து வைச்சிருக்காங்களா, முடித்து வைச்சிருக்காங்களா தெரியல… ஒரு நாலைந்து நாட்களில் நான் உனக்கு ஒரு நல்ல பதில் சொல்றேன்.”
“ம்ம்…சரி” அணைத்தாள்.
மும்தாஜ் ஹரிஸ் இதயத்தைப் பிழிந்தாள்…!அத்தியாயம் – 18
ஹரிஸ் காரை வீட்டு வாசல் முன் நிறுத்தும்போதே..அஷ்டலட்சுமி வீட்டு வாசலில் தாய் மகனை எதிர்பார்த்து நிற்பது போலவே நின்றாள்.
இவன் காரை விட்டு இறங்கி அவளை நெருங்குவதற்குள்ளேயே அவள் இவன் கையைப் இறுக்கிப் பிடித்து..
“ஹரிஸ்….” தழுதழுத்தாள்.
பிரிவின் துக்கம். பாசத்தின் வெளிப்பாடு, அன்பின் குழைவு… குரல் குழைந்து திரண்டு உருண்டு வெளி வந்தது.
அஷ்டலட்சுமி மகன் கையைப் பற்றிக் கொண்டே உள்ளே சென்றாள். அவன் சோபாவில் அமர…எதிரில் அமர்ந்தாள்.
“இளைச்சுப் போய்ட்டேடா..?”
ஒரு சில நாட்கள் பிரிந்தாலும் தாய் கண்களுக்கு மகன் இளைப்புதான். இது உளவியல் வெளிப்பாடு. கண்களின் ஏமாற்றம்.
“இல்லேம்மா..” என்றான்.
“ரொம்ப அலைச்சலோ..?”
“அலைச்சலா இருந்தாலும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, தங்கி, தூங்கி வந்திருக்கேன்.”
“ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கலையா..?”
“அப்படி எல்லாம் இல்லேம்மா…”
“ம்ம்…”
“அம்மா..! இந்த அலைச்சல், தேடல்…..எனக்கு புது அனுபவமாய் இருந்துது. யாரும் எதிர்பாராததாய் இருந்துது. ஒரு உடலின் உறுப்புகள் சாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசமில்லாமல் எல்லார் உடம்பிலும் உட்கார்ந்து தானும் உயிராய் இருந்து அவர்களையும் உயிராய் உலவ விட்டிருப்பதைக் கேட்பதை விட நேரடியாய்ப் பார்க்க ரொம்ப சொந்தோசமா இருக்கு. இது நூத்துக்கு நூறு எல்லோருக்கும் சாத்தியமில்லேன்னாலும்…எப்படியோ உன்னால சாத்தியம்ன்னு நினைக்கும்போது பெருமையாய் இருக்கு…” சொன்னான்.
“எனக்கு… உறுப்புகளைக் காசுக்காக விற்க மனசில்லே. அதே சமயம் அது தானமுமில்லே. இப்படி தானமாய்க் கொடுக்கும் உறுப்புகள் ஏன் காணாமல் போகனும்..? அதை நான் கண்ணால பார்க்கலேன்னாலும்… கருத்தால் பார்க்கனும்ன்னுதான்… மருத்துவமனையில் பிடிவாதம் பிடித்து அவர்கள் முகவரிகளை வாங்கினேன்.
சரி. அதை விடு…! நீ இதை சாக்காய் வைத்து அண்ணன் உறுப்புகள் தேடப்போனீய…. இல்லே உனக்குத் துணை தேடப் போனீயா…?” கேட்டு மகனைக் கூர்ந்து பார்த்தாள்.
“அம்மா..!” திடுக்கிட்டான், துணுக்குற்றான்.
“சும்மா கேட்டேன். அந்த முஸ்லீம் பெண் எனக்குப் போன் பண்ணி கொஞ்சறாப்போல மருமகளாய் ஏத்துக்கச் சொன்னாள். நான் நல்ல பொண்ணு, உங்க சொல்படி நடப்பேன். மதம் மாறவும் தயார்… அப்படி இப்படின்னு நிறையச் சொன்னாள். நான் உன் விருப்பத்தைக் கேட்டு சொல்றேன்னு பதில் சொன்னேன்.” சேதி சொன்னாள்.
“இதை என்னிடமும் சொன்னாள். சரி. இதைக் கேள்!” என்ற ஹரிஸ்…. தன் பாக்கெட்டிலிருந்து கைபேசியை எடுத்தான்.
அதை உயிர்ப்பித்து..பிரபா வீட்டில் எடுத்த செல்பி எடுத்தான்.
“இதைப் பார்” தாயிடம் கொடுத்தான்.
வாங்கி பார்த்த அஷ்டலட்சுமி…
“யார் இவள்…?..” கேட்டாள்.
“அண்ணன் சிறுநீரகம் ஒன்னு இவளிடம்தான் இருக்கு. பேர் பிரபா. நல்லா படிச்சிருக்காள். வீட்ல உட்கார்ந்து வேலை செய்து மாதம் லட்சம் சம்பாதிக்கிறாள். பக்கத்தில் நிக்கிறது அம்மா. அப்பா இல்லே . நல்லா பார் அழகா இருக்காளா..?”
“இருக்காள்…!”
“போன் பண்ணித் தர்றேன். அவள் சொல்றதைக் கேள்” என்ற ஹரிஸ்… அவள் எண்களைத் தொட்டு ஒலிபெருக்கியை உயிர்ப்பித்து காதில் வைத்தான்.
“ஹரிஸ்…” பிரபா குரல்.
மறுவார்த்தை ஏதும் பேசாமல்…
“என்னிடம் சொன்னதை என் அம்மாவிடம் சொல்லு? பேசு….?” தாயிடம் நீட்டினான்.
அஷ்டலட்சுமி குழப்பத்துடன் வாங்கி காதில் வைத்தாள்.
இவள் பேசுவதற்கு முன்பே…” அத்தே…! ” அவள் குரல் அழைத்தது.
அஷ்டலட்சுமி இந்த அழைப்பை எதிர்பார்க்கவில்லை.
‘என்னடா இது…?’ சைகையில் கேட்டாள்.
‘பேசு…!’ அதே சைகையில் இவனும் பதில் சொன்னான்.
“எனக்கு உன் மகன் ஹரீசைப் பிடிச்சிருக்கு. கலியாணம் கட்டி வந்தால் உன்னையும் பிடிக்கும். என்ன சொல்றே..?” பிரபா குரல் தடாலடியாக இவள் காதில் ஒலித்தது.
அஷ்டலட்சுமி முகம் கலவரமானது.
“புரியலே.!? நான் இப்படித்தான் மனசுல உள்ளதை சட்டுன்னு சொல்லிடுவேன். ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உன் விருப்பம்.” சொல்லி துண்டித்தாள்.
அஷ்டலட்சுமி வேர்த்து கைபேசியை அனைத்தாள்.
“என்னடா இது…?!” மகனை ஏறிட்டாள்.
“இப்ப சொல்லு..? உனக்கு இந்த பெண் வேணுமா… அந்தப் பெண் வேணுமா..? பிரபாவா..?… மும்தாஜா…?”
“….”
“இது இல்லாமல் நீ எனக்குப் பெண் தேடி இருக்கியா..? உன் மனசுல உறவுப் பெண் எவளாவது இருக்காளா…? இல்லே… ஜாதகம் வந்திருக்கா..? பார்த்திருக்கியா..? சொல்லு..?” ஹரிஸ் கேள்வி கணைகள் தொடுத்து தாயைப் பார்த்தான்.
அஷ்டலட்சுமி திக்குமுக்காடினாள்.
“என்ன பதில் சொல்ல மாட்டேன்கிறே..? உன் மனசுல உள்ளதைக் கொட்டு. சொல்லு..?” என்றான்.
“பெண் எதுவும் பார்க்கலை. ஜாதகம் எதுவும் வரலை. இந்த மும்தாஜ் பேசினத்தைத்தான் அப்படிச் சொன்னேன்.” என்றாள்.
ஹரிஸ் நிம்மதி மூச்சு விட்டான்.
“சரி. இப்போ சொல்லு..? மருமகள் மும்தாஜா..? பிரபாவா…?”
“அது உன் விருப்பம். எனக்கு எவள் வந்தாலும் சம்மதம்!” என்று முடிவை அவன் தலையிலேயே கட்டினாள் அஷ்டலட்சுமி.
“சரிம்மா.. இன்னும் நான்கு நாட்களில் உங்களுக்குப் பதில் சொல்றேன்.” சொல்லி எழுந்தான்.
அத்தியாயம் – 19
மகன் அகன்ற அடுத்த நொடியிலிருந்து…
‘ஹரிஸ் யாரைத் தேர்வு செய்வான்..?’ என்கிற சிந்தனை அஷ்டலட்சுமியின் மனம், மண்டைக்குள் உட்கார்ந்தது.
பாவம் மும்தாஜ்! குரல் இதயத்திற்குள் உட்கார்ந்து இம்சித்தது. மனசுக்குள் இருந்து வருத்தியது.
‘வறுமையின் கொடுமை! வயதானவனுக்கு வாழ்க்கைப்பட்டு விடுவோமோ என்கிற பயம்.! எல்லா இளம்பெண்களுக்குமே உள்ள இயற்கை மனம்..!’ நினைக்க என்னவோ செய்தது.
பிரபா…!
அடேயப்பா… அடாவடி!
‘எனக்கு உன் மகன் ஹரீசைப் பிடிச்சிருக்கு. கலியாணம் கட்டி வந்தால் உன்னையும் பிடிக்கும்!
கட்டி வைக்கிறீயா.. இல்லையா….? ஏத்துக்குவியா, மாட்டியா..? சொல்..?!’ – வெட்டு ஒன்று துண்டு இரண்டு உத்தரவு.
எந்தப் பெண் இப்படி இருப்பாள்…? எப்படி இவள் வாழ்க்கைக்குச் சரி படுவாள்..?
எப்படி இப்படி துணிச்சல் குணம்..? – மனசுக்குள் மும்தாஜும், பிரபாவும் மாறி மாறி சுழன்று கொண்டே இருந்தார்கள்.
நான்கு நாட்களாக ஹரிஸ் எதற்கும் மெனக்கெட்டதாகத் தெரியவில்லை.
பத்து நாட்கள் இவன் ஊரில் இல்லாததால் பெட்ரோல் வங்கி, விடுதி போக்குவரத்து, பராமரிப்பு என்று பரப்பாக இருந்தான். வீட்டு ற்குச் சாப்பாட்டுக்கு வருவதைத் தவிர மீதி நாட்களின் நேரங்களை அங்கேயே இருந்து கவனித்தான்.
பக்கத்துக் கிராமமான முள்ளங்குடிக்கும் சென்று விளைநிலங்களைப் பார்வையிட்டு வந்தான்.
என்றைக்கு நான்காம் நாள் வரும் ? என்று மனசுக்குள்ளேயே எண்ணிக்கொண்டிருந்த அஷ்டலட்சுமியை நான்காம் நாள் மதியம்…
“அம்மா..!” அழைத்தான் ஹரிஸ்.
“சொல்லுப்பா..?” அவன் அருகில் வந்து சோபாவில் அமர்ந்தாள்.
“சுத்தி வலைக்காம சேதி சொல்லவா…?”
“சொல்லு..?”
“பிரபாதான் உன் மருமகள்!”
“மும்தாஜ்…?”
“அவள் விருப்பப்படி அவளுக்கு மாப்பிள்ளை முடிச்சுட்டேன். அதுக்காகத்தான் இந்த நான்கு நாள் அவகாசம்…”
“….”
“அம்மா..! மும்தாஜுக்கு ஒரு முறைப் பையன் இருக்கான். இவளுக்கு அவன் மேல் ஆசை. ஆனா… எதோ ஒரு மனவருத்தம் ரெண்டு குடும்பத்துக்கும் ரொம்பகாலமா பேச்சுவார்த்தை இல்லே. நான் மும்தாஜ் அப்பாவிடம் அவள் விருப்பத்தைச் சொல்லி… ‘பெத்தப் பெண்ணுக்காக நாம தழைந்து போவதில் தவறில்லை. மனவருத்தம், பேச்சு வார்த்தை இல்லை என்கிற காரணத்துக்காக மகள் மனதை முறித்து அவள் விருப்பத்துக்கு மாறாய் திருமணம் முடிக்க வேணாம். நீங்க… மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பேசுங்க. முறிவு, முடிவு சரி இல்லேன்னா நான் வந்து பேசி முடிக்கிறே!’ ன்னு சொன்னேன்.
அவர் உடனே போனதும்…அவர்கள் இவர் வரவிற்குக் காத்திருந்தது போல் காரியம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமான முடிஞ்சுடுச்சு. அன்னைக்கே நாள் குறித்து வரும் பத்தாம் தேதி அவளுக்குத் திருமணம்.
பிரபாவிடமும் நீதான் மணப்பெண். என் அம்மா மருமகன்னு சேதியும் சொல்லிட்டேன்.’ நிறுத்தினான்.
“ஹரிஸ்..!” அஷ்டலட்சுமி திகைத்தாள்.
“நல்ல பொண்ணும்மா. ஒரு கிட்னியால திருமணமே வேண்டாம்ன்னு தீர்மானமாய் இருந்தவளுக்கு என்னைப் பார்த்ததும் திடீர் ஆசை, விருப்பம்… அதான் அப்படி கலாய்ப்பாய்ப் பேசி தன் எண்ணத்தை வெளிப்படுத்தி விட்டாள். இந்த உண்மையை அவள் நேற்று என்னிடம் சொன்னாள். அப்புறம் அண்ணன் கிட்னி ஒன்னு அவளிடம் இருக்கிறதுனால எனக்கும் அவள் மேல் ஈர்ப்பு. வினயனை நீயும் நானும் உயிருள்ளவரை உயிரோடு பார்க்கலாம், வாழலாம்ன்னு உன் சார்பாகவும் யோசனை செய்து இந்த முடிவை எடுத்தேன். இதையும் பிரபாவிடம் சொன்னேன். ரொம்ப சந்தோசம் சொன்னாள்.
அம்மா ! இந்த உறுப்பு தேடுதலில் ஏதோ ஒன்றாய் வினயன் நமக்குத் திரும்ப கிடைத்ததில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி மட்டுமில்லே. பெரிய கொடுப்பிணை.. நீ உன் மருமகளுக்கு வாழ்த்து சொல்லி சீக்கிரம் வேலையை முடி” – மூச்சு விடாமல் சொல்லி நிறுத்தினான்.
‘எப்படியெல்லாம் சிந்தித்து.. எவர் மனமும் நோகாமல், எவருக்கும் பாதிப்பில்லாமல் என்ன ஒரு முடிவு..?!’ அஷ்டலட்சுமி அப்படியே நெக்குருகி குழைந்து…
“ஹரிஸ்…!” மகனை அணைத்துத் தழுதழுத்தாள்.
(முற்றும்)
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 23, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 23, 2026
ஒரு முழம் பூ
வினோதா ராமன்
June 23, 2026
