கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 437 
வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்

(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

முன்னுரை

என்னுடைய நாடகங்களைப் பார்ப்பவர்கள், படிப்பவர்களில் சிலர், ‘நாடகம் முடிந்ததும் மறந்துவிடுகிறதே?’ என்று அங்கலாய்ப்பார்கள். கிச்சா பாணியில் பதில் சொல்லவேண்டுமென்றால், ‘நகைச்சுவையே எல்லாவற்றையும் மறக்கடிப்பதற்காகத்தானே?’.

கிரேஸி க்ரியேஷன்ஸ் நாடகக் குழு தொடங்கி முதல் ‘அவுட் டோர்’ ஸ்ரீரங்கத்தில். உறவினர்களும் நண்பர்களும் ஸ்ரீரங்கம் வரை ரயில் கூடவே ஓடிவந்து வழியனுப்பினார்கள். இதே குழு மூன்றுமுறை தலா நாற்பது ஷோ மேனிக்கு அமெரிக்காவில் நாடகம் போட்டதில் ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள அதே அளவு பங்கு ஸ்ரீனிவாசனுக்கு உண்டு.

ஸ்ரீனிவாசன் என்கிற வாசு என் பால்ய நண்பன். குழுவின் ஸ்தாபகன், காரியதரிசி, கூர்க்கா, வாட்ச்மேன் எல்லாம் அவன் தான். நாங்கள் வெளியூர் செல்லும்போதெல்லாம் இவன்தான் ரயில் டிக்கெட் புக் செய்வான். 1999-ல் முதல்முறை எங்களுக்கு அமெரிக்கா செல்ல வாய்ப்பு வந்தபோது, வாசு செய்த முதல் காரியம், ‘அமெரிக்காவுக்கு எந்த ரயில் போகும்?’ என்று எக்மோருக்குப் போய் விசாரித்ததுதான். ஒருவழியாக யார் யாரோ தடுத்தாட் கொண்டதன் பேரில் நாங்கள் விமானம் ஏறி அமெரிக்கா சென்று இறங்கியதும், அங்கே என் வெற்றிலை, சீவல் பொட்டலம் எந்த கஸ்டம்ஸ் சோதனையிலும் அகப்பட்டுக்கொண்டு அல்லாடாமல் காப்பாற்றி என் கையில் சேர்த்ததும் அவனே.

2001 செப்டம்பரில் நாங்கள் இரண்டாம் முறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட அனுபவம் விசித்திரமானது.

சென்னையில் நாங்கள் விமானம் ஏறியவுடனேயே அமெரிக்காவில் வர்த்தக மையக் கட்டடங்களைத் தகர்த்த செய்தி வாசுவுக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது. சொன்னால் எங்கே நான் டென்ஷன் ஆகிவிடப் போகிறேனோ என்று பயந்தே சொல்லாமல் மனசுக்குள்ளேயே முழுப்பூசணிக்காயை மறைத்திருக்கிறான்.

டெல்லியில் இறங்கியதும்தான் எனக்கு விவரமே தெரிந்தது. போன மச்சான் திரும்பிய கதையாக சென்னை திரும்பினோம். வருத்தத்தில் வாசு, 2002 மார்ச்சில் நாங்கள் மறுபடியும் அமெரிக்கா போகும்வரை தன் சூட்கேஸைத் திறக்காமல் அப்படியே வைத்திருந்தான்.

இந்தப் புத்தகத்தில் பார்க்கும் பல சம்பவங்களில் கிச்சாவுக்கு வாசுவின் ஜாடை உற்றுப்பார்த்தால் தெரியும். இரண்டு முறை காரியதரிசியாக வந்த வாசு கடந்த 2004-ல் நாங்கள் மீண்டும் அமெரிக்கா சென்றபோது ஒரு முக்கிய நடிகர் வராததால் நடிகனாக அவதாரம் எடுத்து, பலபேர் வயிற்றில் புளியைக் கரைத்தான். ஒரு நாடகத்தை நூறுமுறை போடுவதென்பதே கஷ்டமான காலத்தில் நாங்கள் அமெரிக்காவில் மட் மட்டுமே நூறு முறை நாடகம் போட்டிருக்கிறோம். இதற்கு முக்கியக் காரணகர்த்தாக்கள் இரண்டு பேர். வாசு ஒருவன். அடுத்ததாக எங்களை அமெரிக்காவுக்கு மூன்று முறை வரவழைத்து, வசதியாக நாடகம் நடத்த வழிசெய்த திருமதி பார்க்கவி சுந்தர்ராஜன், நியூஜெர்சி.

விகடனில் என்னுடைய அமெரிக்க அனுபவத்தைப் பயணக்கட்டுரையாக எழுதும்படி ஊக்கப்படுத்தி உயிரை வாங்கிய நிர்வாக ஆசிரியர் வீயெஸ்விக்கு என் நன்றி. கதைகளில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனையே என்று பொதுவாகப் பத்திரிகைகளில் போடுவார்கள். வாரம்தோறும் விகடனில் அமெரிக்காவில் கிச்சா வெளிவந்தபோது இது ஒரு பயணக்கட்டுரையா, உண்மைக்கதையா, வெறும் கதையா என்று அவராலேயே கணிக்கமுடியாதபடி ஒரு பரமாத்ம சொரூபம் எடுத்துவிட்டது.

இதில் நிஜம் ஒன்றுதான். நகைச்சுவைக்கு இடம் கொடுத்த விகடன்; பகைச்சுவை இல்லாத கிச்சா!

கிரேஸி மோகன்

1

கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகக்குழு ஆரம்பித்து, இருபது வருடங்களாக – சராசரியாக கார்ப்பரேஷன் குழாய் கணக்கில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஏதாவது ஒரு சபாவில் (லோக்சபா, ராஜ்யசபா தவிர) நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறேன். இது தவிர மும்பை, டெல்லி, கொல்கத்தா இன்னும் இந்தியா மேப்பில் இல்லாத ஊர்களுக்கெல்லாம்கூட தெருத்தெருவாகப் போய் அந்த ஊர்வாசிகளை சிந்திக்க முடியாத அளவுக்கு சிரிக்கவைத்திருக்கிறேன். பத்தாத குறைக்குப் பவளக்கொடியாக சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, குவைத் என்று தண்ணீர்க் கண்டம் இருந்தும் தைரியமாகக் கடல் தாண்டி கைதட்டல் வாங்கியிருக்கிறேன்.

இத்தனை சாதித்தும் இதையெல்லாம் பொருட்படுத்தாத சில விவகாரமான பேர்வழிகள் வக்கிரமாக, “என்ன, கல்யாணமாகி இருபது வருஷமாச்சு. விசேஷம் ஒண்ணும் இல்லை போலிருக்கு?” என்று நக்கலாகக் கேட்கும் பெருசுகளைப் போல, “என்ன, ட்ரூப் ஆரம்பிச்சு இருபது வருஷமாச்சு. உன்னை ஏன் அமெரிக்காவுல டிராமா போடக் கூப்பிடலை?” என்று கேட்டுவிட்டு, என்னமோ வீட்டைவிட்டு ஓடிவந்து விவாகம் ஆகாமலேயே விதவையாகி நிற்கும் கதாநாயகியைப் பார்த்து உசுப்பிவிட்டு, என் பதிலுக்குக்கூடக் காத்திராமல் ஓடிவிடுவார்கள்.

இப்படியாக, எனது அமெரிக்கா மசக்கை நாளொரு குமட்டலும் பொழுதொரு வாந்தியுமாக ஜாஸ்தியாகி, கடந்த இரண்டு வருஷங்களாக கனவில்கூடச் சொப்பனாவஸ்தையாகத் துரத்த ஆரம்பித்தது. சாம்பிளுக்கு ஒரு கனவு. கிளிண்டன் ஃபைன் ஆர்ட்ஸுக்காக வாஷிங்டனில் நான் நாடகம் போடப் போகிறேன். திரை விலகியதும் முதல் ரோவில் மோனிகா லெவின்ஸ்கி. மோனிகா என்னைப் பார்த்து, “மோகன், நான் உங்கள் ரசிகை, மோனிகா என்ற எம்பேரை மோகனிகா என்று மாத்திண்டுட்டேன்” என்று கூவ அப்போது அரங்கத்தில் கிளிண்டன் நுழைந்து, “அடிப்பாவி, மோனிகா கள்ளி, ஊராரின் ஏச்சக்கும் பேச்சுக்கும் என்னை ஆளாக்கிவிட்டு, இங்கு ஒய்யாரமாக கிரேஸியின் நாடகம் பார்க்கிறாயே” என்று ‘மனோகரா’ தமிழில் முழங்கிவிட்டு, நாடகத்தை நிப்பாட்டி, எங்கள் குழுவினரின் பாஸ்போர்ட்டைப் பிடுங்கி, பலாத்காரமாக எங்களை வாஷிங்டனில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியாக கடல்மார்க்கமாகச் சென்னைக்கு அனுப்பிவிட்டார்!

விரக்தியில் பாரதியாரின் நாட்டுப்பற்றை நாடகப் பற்றாக மாற்றி, ‘என்று தணியும் எந்தன் அமெரிக்க தாகம், என்று நடக்கும் அங்கு என்னோட நாடகம்’ என்று அடிமனசுக்குள் சுநாதமாக ஈனஸ்வரத்தில் நான் புலம்பிக்கொண்டிருந்த ஒரு பிரபஞ்சமே நடுங்கும் மூர்த்தண்யமான மழைக்கால அமானுஷ்ய அர்த்தராத்திரியில் (ஹி ஹி இலக்கிய அந்தஸ்துக்காக இந்தப் பிரயோகங்கள்!) எனக்கு திருவல்லிக்கேணி, சிங்கராச்சாரி தெருவில் குடியிருக்கும் எனது பால்ய நண்பனும் பர்மனென்ட் சத்ருவுமான மிஸ்டர் கிச்சாவின் தாய்வழிப் பாட்டியான எச்சுமிப்பாட்டி நினைவுக்கு வந்தாள். சமகால திருவல்லிக்கேணி பாட்டிகளால் செல்லமாக ‘எச்சு’ எனப்படும் அவளுக்கு நாக்கில் ‘சச்சு’ (சரஸ்வதி). இதனால் நிறைவேறாத ஆசை உள்ளவர்கள் எச்சுமிப்பாட்டியின் ஆணிக்கால் பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து, ஆசிர்வாதம் வாங்கினால் போதும். இன்டர்நெட், ஈமெயில் வேகத்தில் பாட்டியின் ஆசிர்வாதம் பலித்து, பாதத்தில் விழுந்தவர்கள் வேண்டியது, ‘பீட்ஸா’ போல ‘டோர் டெலிவரி’ செய்யப்படும்.

உதாரணத்துக்கு, எனது கல்லூரி நண்பர் ராமாமிருதம் தலையில் மக்கால் உலகத்தை மேப்பாக வரையலாம். அந்த அளவுக்கு அப்பழுக்கில்லாத வழுக்கை. தலைவழுக்கை அவமானத்தோடு குனிந்த தலை நிமிரிராமல் திருவல்லிக்கேணி மாடவீதியில் நடந்து வந்த ராமாமிருதம், வாழைப்பழத்தோல் சறுக்கி எச்சுமிப்பாட்டியின் பாதத்தில் விழுந்தார்.

ராமாமிருதத்தின் மனக்குறையை தனது மகிமையால் புரிந்துகொண்ட எச்சுமிப்பாட்டி, “அமோக ரோம ப்ராப்திரஸ்து’ என்று ஆசீர்வதிக்க, பத்தே நாளில் உச்சந்தலையில் ஆரம்பித்து உள்ளங்கை, உள்நாக்கு, உள்பாதம் என்று கரடிக்கணக்கில் முடி வளர்ந்து ராமாமிருதம் ரோமாமிருதம் ஆனார்!

எச்சுமிப்பாட்டி நினைவுக்கு வந்ததும் “கண்டேன் அமெரிக்காவை” என்று கொலம்பஸ் கணக்கில் கத்திவிட்டு, நடுராத்திரி என்றுகூடப் பார்க்காமல் திருவல்லிக்கேணிக்கு நாய் துரத்துவது போல நுரைதப்ப ஓடினேன்.

தூக்கத்தில் இருந்த எச்சுமிப்பாட்டியை எழுப்பித்தூணோடு தூணாகச் சாய்த்து, பேலன்ஸ் பண்ணி நிற்கவைத்து, அவள் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தேன்.

நான் சொல்லாமலே அந்தத் தூக்கக் கலக்கத்திலும் எனது அமெரிக்கா ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட எச்சுமிப்பாட்டி, கண்முழித்துக் கணீரென்ற குரலில் “அமெரிக்கா ப்ராப்திரஸ்து” என்று ஆசீர்வதித்தாள்.

அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. அருகே, ‘இருக்கானா? இல்லை, ஒரேடியாகப் போயிட்டானா?’ என்று நினைக்கும் அளவுக்குப் பதனப்படுத்தப்பட்டு மம்மியில் வைத்த எகிப்து அரசரைப் போல ஆடாமல் அசையாமல் அதுவரை ‘சவமே’ என்று படுத்திருந்த கிச்சா, “அமெரிக்கா ப்ராப்திரஸ்து” என்று எச்சுமிப்பாட்டி ஆசீர்வதிக்கும்போது புரண்டு குப்புறப்படுத்து, என்னோடு சோர்ந்து பாட்டியை நமஸ்காரம் செய்து தொலைத்துவிட்டான். எச்சுமிப்பாட்டியின் தெய்வீக ஆசீர்வாத ‘ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்’படி நான் நாடகம் போட அமெரிக்கா போனால், கூடவே கிச்சாவையும் அழைத்துக்கொண்டு போகவேண்டுமாம். இல்லாவிட்டால், ஆசிர்வாதம் வொர்க் அவுட் ஆகாதாம்! இதை பாட்டி எனக்குத் தெளிவுபடுத்தினாள். அந்த நேரம் பார்த்து டெலிபோன் மணி அடித்தது.

நமஸ்கார போஸிலிருந்த கிச்சா போனை எடுத்துப் பேசிவிட்டு, “மோகன், உன் தம்பி பாது மாலாஜி” என்று உளறினான்.

“மோகன், நான்தான் பாலாஜி. நியூ ஜெர்ஸிலேர்ந்து பார்கவி சுந்தர்ராஜனும் சான்பிரான்சிஸ்கோவிலேர்ந்து கண்ணப்பனும் பேசினாங்க. கிரேஸி கிரியேஷன்ஸ் அமெரிக்கால டிராமா போடணுமாம். மொத்தம் முப்பது ஷோ. ஆனா, நம்ம ட்ரூப்லேர்ந்து பன்னண்டு பேர்தான் வரலாமாம்” என் வேதனை புரியாத என் தம்பி, அமெரிக்கா போகும் சந்தோஷத்தில் போனை வைத்துவிட்டான்.

எச்சுமிப்பாட்டி ஆசிர்வாதம் செய்த அடுத்த செகண்ட் அமெரிக்காவிலிருந்து அழைப்பு. காக்கை உட்காரப் பனம்பழம் விழலாம். ஆனால், அருள்மிகு எச்சுமிப்பாட்டி ஆசீர்வதித்தால் பனைமரமே விழுகிறதே! ‘ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும், நோ பீஸ் ஆஃப் மைண்ட்’ என்கிற மாதிரி, அமெரிக்கா செல்லும் வரம் கொடுத்த பாட்டி, கூடவே இந்த வேதாளம் கிச்சாவைக் கூட்டிச்செல்லும் சாபத்தையும் கொடுத்துவிட்டாளே!

“தோ பார்டா மோகன், மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. கிச்சாவை அழைச்சுண்டு போ அமெரிக்காவுக்கு. உனக்கும் கூடமாட ஒத்தாசையா இருப்பான்” என்றாள் எச்சுமிப்பாட்டி.

கூடமாட ஒத்தாசையாக இருக்க, நான் என்ன அமெரிக்காவுக்கு பத்துப் பாத்திரமா தேய்க்கப்போறேன்’ என்று கடுப்பாகச் சொல்ல நினைத்த நான், எங்கே பாட்டி ஆசீர்வாதத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு விடுவாளோ என்ற பயத்தில், “அது இல்லை பாட்டி, பன்னண்டு பேர்தான் வரலாமாம். கிச்சாவையும் சேர்த்தா பதிமூணு ஆயிடுதே” என்றேன் தயங்கியபடி.

“தோ பார், ஆசிர்வாதம் முழுமையா பலிச்சு நீ அமெரிக்கா போகணும்னா, கிச்சாவும் உன்கூட வந்தாகணும். நான் சொல்றதைச் சொல்லிட்டேன். அப்புறம் உன் சவுகரியம்” என்று கூறிவிட்டு, ‘ஹாரர்’ படத்தில் வரும் டிராகுலா போல முகத்தை வைத்துக்கொண்டாள்.

இதையெல்லாம் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த கிச்சா, “பாட்டி, இப்பவே மோகன்கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிடு, பிளேன்ல எனக்கு லோயர் பெர்த் வேணும்னு. இதுக்கு ஒப்புக்கலேன்னா, ஆசீர்வாதத்தை வாபஸ் வாங்கிண்டுடு” என்றான்.

கிச்சாவைக் கழட்டிவிட கடைசி சி ஆயுதமாக, “பாட்டி, கிச்சாவுக்கு பாஸ்போர்ட் இல்லையே?” என்று நான் முடிப்பதற்குள், எச்சுமிப்பாட்டி, கிச்சாவின் பாஸ்போர்ட்டைக் காண்பித்தாள். “கிச்சா ஏழாம் கிளாஸ் எட் எட்டு தடவை எழுதி, ஒன்பது தடவை ஃபெயிலாயிருக்கான். டைப்ரைட்டிங் கிளாஸ்ல சேத்தா, அங்கயும் ஃபெயில். அவன் சம்பந்தமா ‘பாஸ்’னு ஏதாவது ஒண்ணு இருக்கணுமேங்கற ஆசைல போனவாரம்தான் நான் அவனுக்கு பாஸ்போர்ட் அப்ளை பண்ணி வாங்கித் தந்தேன். பாரு, இப்ப நீ கிச்சாவை அமெரிக்காவுக்கு அழைச்சுண்டு போறேங்கறே” – என்னைப் பேசவிடாமல் எச்சுமிப்பாட்டி, கிச்சாவின் அமெரிக்க விஜயத்தை -றுதிசெய்துவிட்டாள்.

கிரேஸி கிரியேஷன்ஸ் மகாவிஷ்ணு என்றால், அமெரிக்கா போக முடிவு செய்யப்பட்ட அந்தப் பன்னிரண்டு பேரும் பிரபந்தம் பாடாமல் குழுவுக்குத் தொண்டுசெய்த ஆழ்வார்கள். எச்சுமிப்பாட்டியின் ஆசீர்வாதத்தால், இடைச்செருகலாக நுழைந்த கிச்சாவுக்காக எந்த ஆழ்வாரைக் கழட்டிவிட்டாலும் அது நான் செய்யும் பஞ்சமா பாதகம் ஆகிவிடும். நரகத்தில் எமதர்மராஜன் என்னை எண்ணெய்க் கொப்பரையில் உட்கார வைத்து ‘சீரியஸ்’ டிராமா எழுதச்சொல்லி நிச்சயமாக இம்சிப்பான். “என்னடா இது சோதனை, கிரேஸிக்கு வந்த வேதனை” என்று திருவிளையாடல் டி.எஸ்.பாலையா ஸ்டைலில் முனகியபடி வீடு திரும்பினேன். வீட்டு வாசலில் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவனான ‘பார்த்தி’ என்கிற பார்த்திபன் நின்றுகொண்டிருந்தான். பார்த்தி, சுதந்தரப் போராட்டத்தில் பங்குபெறாத தியாகி, சாது. என் கஷ்டத்தைச் சொன்னால் விட்டுக்கொடுப்பான் என்ற தைரியத்தில் நாசுக்காக, “பார்த்தி இந்த அமெரிக்கா டூர் விஷயத்துல நீ ஒரு ஹெல்ப் பண்ணணும்…” என்று ஆரம்பிப்பதற்குள், ‘பார்த்தி” முந்திக்கொண்டு, “மோகன், நான் சொல்லவந்ததும் அதேதான், தப்பா எடுத்துக்காத, அமெரிக்காவுக்கு என்னால வரமுடியாது” என்று கெஞ்சாத குறையாகக் கூறிவிட்டு, “வீடுகட்ட கிரவுண்ட் கிடைக்கலேன்னு சொல்லிண்டிருந்தேன் இல்லியா, நேத்து ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு கியவி கால்ல ஆளுக்காள் விழுந்துக்கிட்டிருந்தாங்க. சரின்னு நானும் விழுந்தேன். அந்தக் கியவி, ஸாரி, எச்சுமிப்பாட்டி, ஸாரி தெய்வம், என்னைப் பார்த்து, ‘தௌஸண்ட் ஃபைவ் ஹண்ட்ரட் ஸ்கொயர்ஃபீட் கிரவுண்ட் கிரகப் பிரவேச ப்ராப்திரஸ்து’ னு ஆசிர்வாதம் செஞ்சாங்க. நம்பினா நம்பு, நம்பாட்டி போ. இப்ப நெனைச்சாக்கூட புல்லரிக்குது. என்கூட பாட்டி கால்ல விழுந்தவர், தன்னோட வளசரவாக்கம் கிரவுண்டை அவசரமா அமெரிக்கா போறதால பாதி விலைக்கு வித்து, பத்திரத்தையும் தந்துட்டுப் போயிட்டார். ரெண்டு மாசத்துல நான் அங்க வீடு கட்டியாகணும். அதனாலதான் சொல்றேன். நான் அமெரிக்கா வரலை” என்றான்.

தலைவலி மாத்திரை நான்கு வழிகளில் வேலை செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எச்சுமிப்பாட்டியின் ஆசிர்வாதம் அதற்குமேல் வேலை செஞ்சு, கிச்சா அமெரிக்கா போக வழிசெய்துவிட்டது!

2

ஊர்உலகத்தைப் பொருத்தவரை ‘ஆர்ட் ஃபிலிம்’, ‘அஹம்-ப்ரும்மாஸ்மி’ ரேஞ்சில் கம்ப்யூட்டர் சென்டரில் ஆரம்பித்து, கையேந்தி பவன் வரைக்கும் ஒரு எழவும் புரியாமல் குழப்பி பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் இந்த ‘ஒய்டூகே’ பிராப்ளம் ஜனவரி ரெண்டாயிரம் பொறந்தால்தான் ஆரம்பிக்கப் போகிறது. ஆனால், என்னைப் பொருத்தவரையில் எச்சுமிப்பாட்டியின் ‘அமெரிக்கா ப்ராப்திரஸ்து’ ஆசீர்வாதத்தால் கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவோடு சேர்ந்ததுவும் அல்லாமல், அமெரிக்காவில் நாடகத்திலும் நடிக்க எங்களுடன் கம்பளியில் ஈஷிக்கொண்ட காசி அல்வா மாதிரி ஒட்டிக்கொண்ட கடங்காரன் கிச்சா ரூபத்தில் எனக்கு, ‘ஓய்டூகே’ (‘கே’ ஃபார் கிச்சா) பிராப்ளம் செப்டெம்பரிலேயே ஆரம்பித்துவிட்டது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் கிச்சா நவாப்ஷெரீப் என்றால், நாடகம் நவராத்திரி (எப்பப்பாரு என்ன குலாம் காதர் – கோகுலாஷ்டமி உதாரணம்). சூயிங்கம், பபுள்கம், ஒட்டகம், ஒட்ட வைக்கும் கம். காத்தாடி நூலுக்கு மாஞ்சா போட யூஸ் படுத்தும் வஜ்ஜிர கோந்து கம், இப்படிப் பல ‘கம்’கள் தெரிந்த கிச்சாவுக்கு சுத்தமாகத் தெரியாத ‘கம்’ நாட‘கம்’.

உதாரணத்துக்கு, சில பல மாதங்களுக்கு ரொம்ப முன்னாடி ‘திருவல்லிக்கேணி ஷேக்ஸ்பியர்’ என்று கண்ணாடிக்கு எதிரே தலை சீவிக்கொள்ளும்போது தனக்குத் தானே பட்டம் கொடுத்துக்கொண்ட டி.பி. கோயில் தெரு உப்பிலி ‘தந்தியில் வதந்தி’ என்ற சரித்திர, பூகோள, சோஷியல், சயின்ஸ் ஃபிக்ஷன் டிராமா ஒன்று போட்டான். அதில் போஸ்ட்மேனாக நடித்த கிச்சா, வால் மட்டும் மாட்டிவிட்டால் போதும், பார்க்க ஜாடையில் அசல் வானரம் போல் இருக்கும் கதாநாயகனாக நடித்த உப்பிலியைப் பார்த்து ‘சார் தந்தி’ என்று சொல்வதற்குப் பதிலாக வாய் தவறி ‘சார் மந்தி’ என்று ஊர் அறிந்த உண்மையை உளறிக்கொட்ட, விலைவாசியைக்கூட பொருட்படுத்தாமல் வெங்காயம், தக்காளி, அழுகாத முட்டை என திருவல்லிக்கேணி வாசிகள் வீசி அடித்து நாடகத்தை நாசம் செய்தார்கள். இப்ப, ‘தொட்டதெல்லாம் துவம்சமாகும்’ வால் நட்சத்திர வம்பு ராசி கிச்சா அமெரிக்கா வந்து எங்கள் நாடகத்தில் நடிக்கிறேன் பேர்வழி என்று உப்பிலி டிராமாவில் செய்த மாதிரி ‘தொல்லை அம்பலக்கூத்தாடினால்’ என் மானம் ‘டைட்டானிக்’ ஏறி மூழ்குமே என்று எண்ணிப் பார்க்கும்போதே என் அடிவயிற்றில் கர்ப்பம் வைரஸ் வந்த கம்ப்யூட்டர் போல கலங்கியது. தயவுசெஞ்சு கிச்சாவைப் பத்தி தாறுமாறா நான் சொன்னதை எச்சுமிப்பாட்டியோடது காதுல போட்டுடாதீங்கோ. (வலது காதுல காசுதான் போடலாம். அந்த அளவுக்கு டமாரம்.) பாட்டிக்குத் தெரிஞ்சுதுன்னா ‘அமெரிக்கா ப்ராப்திரஸ்துனு’ ஆசீர்வாதத்தை கான்சல் பண்ணி ‘அமெரிக்கா ட்ரிப் டிராப்திரஸ்துனு’ சபிச்சுருவாள். யெஸ், எச்சுமிப்பாட்டி ஆசிர்வாதம், சாபம் ரெண்டுத்துலேயும் கில்லேடியான பா(ர்)ட்டி.

பாட்டியோட லோ வோல்டேஜ் ஆசிர்வாதம் பலிக்கும்னா, அவளோட ஹை வோல்டேஜ் சாபம் கெலிக்கும். சாம்பிளுக்கு ஒரு சாபம். பாட்டியோட பாப்புலாரிட்டி பிடிக்காத பொச்சரிப்பு புடிச்ச எதிர்வீட்டு ரங்கு மாமா எண்பதில் வளைந்த எச்சுமிப்பாட்டியை ‘கூனிக் கிழவி’ன்னு ரகசியமாக திண்ணை திருவேங்கடாச்சாரிகிட்ட சொல்லி கிண்டலடிச்சிருக்கார். பார்த்தசாரதி பெருமாளின் ‘பர்சனல் கேர் அண்ட் அஃபெக்ஷனில்‘ இருக்கும் எச்சுமிப்பாட்டிக்கு இந்த நியூஸ் கனவுல வந்த பூதத்தாழ்வார் மூல்யமா தெரிஞ்சுடுத்து. பாட்டிக்கு வந்ததே பாக்கலாம் கோபம் ப்ளஸ் சாபம். பாரதி புகுந்த வீட்டுத் தெருவுல நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாகப் போய்க்கொண்டிருந்த ரங்கு மாமாவை துரத்திண்டு வந்த எச்சுமிப்பாட்டி, அவரோட சொக்காய் பின்பக்கக் காலரை வேப்பிலைக் கொத்தா பிடிச்சுட்தடி ராஸ்கல், என்னையா கூனின்னு சொன்னே” என்று கேட்டுவிட்டு எப்படித் தெரிஞ்சுதுனு பாக்கறியா, படுவா இந்த எச்சுமி தூண்லயும் இருப்பா, கூன்லயும் இருப்பா” என்றவள் ரங்கு மாமாவை முன்பக்கமாக ராமர் வில்லை வளைப்பது போல வளைத்து, “இனிமே எப்பவும் எதையோ தரைல போட்டுட்டு தேடறவன் மாதிரி ஆயுசு பூரா கூனனாக இருக்கக் கடவது” என்று திருவல்லிக்கேணியில் வசிக்கும் அத்தனை பேர் கண்களிலும் விழும் அளவுக்கு தெரு மண்ணை வீசி எறிந்து சபித்தாள். படருவதற்கு பாரியின் தேர் கிடைக்காத முல்லைக்கொடி போல முதுகு கொஞ்சம் கொஞ்சமாக வளைய ஆரம்பித்தவர், பாட்டி சபித்த பத்தே நாளில் உச்சந்தலை உள்ளங்காலை தொடும் அளவுக்கு வளைந்து ரங்கு மாமா ‘ரங்கூன் மாமா’ ஆனார்.

இப்படி கொள்ளவும் முடியாமல், எமகாதகி எச்சுமிப்பாட்டியின் சாபத்துக்குப் பயந்து தள்ளவும் முடியாமல் கிச்சா’ என்கிற வேலியில் போற ஓணாணை நான் என் ஜீன்ஸில் எடுத்துப் போட்டுக்கொண்டுவிட்டேன். அட, அட்லீஸ்ட் அந்த ஓணாண் அமெரிக்கா வந்து எக்குத்தப்பாக என்னைக் குடைவதற்கு முன்னால் அதோடு பழகி அதை செல்லப் பிராணியாக்கி, அராத்தாகத் திரிந்துகொண்டிருக்கும் கிச்சா அமெரிக்காவில் எப்படி அமரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவனுக்கு உபதேசிக்க திருவல்லிக்கேணிக்குள் நுழைந்த நான் துவஜஸ்தம்பித்து நின்றேன்.

இரண்டு மாட வீதிகள் கூடும் ஈசான்ய மூலையில், ஹில்லாரி கிளிண்ட்டனும் மோனிகா லெவின்ஸ்கியும் பொறாமையில் “அடி என் சக்களத்தி கிச்சா” என்று கூவி முகவாய்க் கட்டையை முறையே வலது, இடது தோளில் இடித்துக் கொள்ளும் அளவுக்கு, பஜார் தெரு பெயிண்டர் ஜபமணி கைவண்ணத்தில் கிளிண்ட்டனும் கிச்சாவும் ஆலிங்கனம் செய்தபடி ஆஜானுபாகுவான அடியாள் உயர கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. கட் அவுட்டுக்கு கீழே ‘பில்-கிளிண்டன் ரசீது-கிச்சா’ என்று எழுதப்பட்டிருந்தது என்னை ஏகமாகக் குழப்பியது. விசாரித்ததில் தெரிந்தது. மாங்காய் மடையன் ஜபமணி பில் கிளிண்ட்டனை ஹோட்டலில் பில் போடும் சர்வர் என்று நினைத்து, பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் அர்ச்சனைக்கு கவுண்ட்டரில் ரசீது கொடுக்கும் கிச்சாவை ரசீது-கிச்சா என்று விசுவாசத்தோடு எழுதியிருக்கிறான்.

இது போதாதென்று கோயில் சுவரில் ஆரம்பித்து குட்டிச்சுவர் வரைக்கும் ‘எஜமான்’ ரஜினி ஸ்டைலில் கிச்சா நடந்துவரும் போட்டோவை போட்டு,

‘பாயும் புலியே
மேயும் பசுவே சீறும் சிங்கமே
ஊறும் நத்தையே
கூவும் குயிலே
தாவும் அணிலே’

என்று ஒரு பிராணி விடாமல் கிச்சாவைப் போற்றி தி.கேணி புதுக்கவிதைப் புயல் ‘சுவற்றுக்கோழி’ எழுதியிருந்தார். இதில் வயத்தெரிச்சல் என்னவென்றால், ஒரு போஸ்டரில்கூட என் பெயரோ அல்லது கிரேஸி கிரியேஷன்ஸ் பெயரோ இல்லை!

கிச்சாவின் இந்த அமெரிக்கப் பித்தம் தலைக்கேறும் முன்பு அதைத் தடுக்க அவன் வீட்டுக்கு ஓடினேன்.

நல்ல பட்டப்பகலில் கிச்சா டால்ஃபி சவுண்ட் சிஸ்டம் லெவலில் குறட்டைவிட்டபடி தூங்கிக்கொண்டிருந்தான். “பட்டப்பகல்ல தூங்கறானேன்னு பாக்கறியா, நான்தான் அஞ்சு நாளா டாக்டரைக் கூப்பிட்டு அனஸ்தீஸ்ஷியா கொடுத்து கிச்சாவைத் தூங்கவைக்கறேன்” என்ற எச்சுமிப்பாட்டியை புரியாமல் நான் பார்க்க, “இந்தியால பகல்னா அமெரிக்கால ராத்திரி இல்லையா. அதான் இப்பவே பழகிக்க இந்த ஏற்பாடு. இல்லேன்னா அப்புறம் அமெரிக்கா போய், என்னமோ சொல்லுவாளே இங்கிலீஷ்ல” என்று யோசிக்க, அருகில் இருந்த கோடிவீட்டு குப்புசாமி அய்யங்கார் தன் குடுமியை முடிந்தபடி, “எச்சுமி, அது பேரு ஜிட் லாக்” என்று ஜெட் லேக்கை வாய் திறவாமல் ஸ்பஷ்டமாக உளறிக் கொட்டினார். அமெரிக்காவுக்கு ஆகாய விமானத்தில் போகும்போது அடிவயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தியும் தலைச்சுற்றலும் வரும் என்று கேள்விப்பட்ட எச்சுமிப்பாட்டி, அந்த விபரீதத்துக்கு தன் பேரனைத் தயார்படுத்திக்கொள்ள, வீட்டுக் கூடத்து ஊஞ்சலில் கிச்சாவை உட்காரவைத்து, வாசல் வராண்டாவைத் தாண்டி தெருவையும் கடந்து எதிர்வீட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்ப கூடத்துக்கு வரும் அளவுக்குப் புயல்வேகத்தில் தள்ளிவிட்டு அவனுக்கு பிராக்டீஸ் கொடுத்தாள்.

பிராக்டீஸ் முடிந்ததும் எச்சுமிப்பாட்டி ஊஞ்சலுக்குப் பக்கத்தில் கொலுப்படியை நகர்த்தி வைக்க, கிச்சா அயல்நாட்டு அதிபர் போல கை அசைத்தபடி படியில் இறங்கி வந்தான். அருகில் பாய் இல்லை… இருந்திருந்தால் பாட்டியும் பேரனின் கேணத்தனம் தாங்காமல் பைத்தியம் பிடித்து பாயைப் பிறாண்டி இருப்பேன்.

“மோகன் இங்க பாத்தியா…?” என்று மோடி மஸ்தான் ஸ்டைலில் டேபிள் மீது இருந்த கூடையைப் பாட்டி தூக்க, உள்ளே கம்ப்யூட்டர். கஞ்சத்தனத்தால் காசு கொடுத்து எலிப்பொறிகூட வாங்காத எச்சுமிப்பாட்டி கணிப்பொறி வாங்கியது ஏன்? எதற்கு? எப்படி? பாட்டியே பதில் சொன்னாள். “கிச்சா உன்னோட அமெரிக்காவுல ரெண்டு மாசம் இருக்கப்போறான். கடுதாசி போட்டா அது வந்து சேர்றதுக்குள்ள நீங்களே வந்து சேந்துடுவேள்… அதான் கம்ப்யூட்டர் வாங்கிட்டேன். நானும் கிச்சாவும் ஈமெயில்ல ஒத்தருக்கொருத்தர் லெட்டர் போட்டுக்கலாமில்லையா?”

“பாட்டி, எங்கிட்டதான் கம்ப்யூட்டர் இருக்கே. எங்க வீட்டுக்கு வந்து ஈமெயில் கொடுத்துக்கறது, இதுக்காக காசு செலவழிச்சு கம்ப்யூட்டர் வாங்குவாளா?” என்ற என்னை அற்ப ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்து எக்காளமாகச் சிரித்தாள் எச்சுமிப்பாட்டி.

“முட்டாள், நானாவது காசை செலவழிக்கறதாவது, என்னோட பழைய புடைவைகள், ரவிக்கை, கிச்சாவோட வேஷ்டி, உள் பனியன் இதெல்லாம் போட்டு இந்த கம்ப்யூட்டரை வாங்கினேன்” என்று பகர்ந்துவிட்டு காசு கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கிய என்னை சிட்ஃபண்டில் ஏமாந்தவனைப் பார்ப்பதுபோல பரிதாபமாகப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள் பாட்டி. “இப்பல்லாம் கம்ப்யூட்டர் கடலை உருண்டை மாதிரி மூலைக்கு மூலை சந்தி சிரிக்குது. போன வாரம் ‘கம்ப்யூட்டர் வாங்கலையோ கம்ப்யூட்டர்’ னு குரல் கேட்டு வாசலுக்குப் போனா, பிளாஸ்டிக் பக்கெட் தருவானே பரமசிவம், அவன் இப்ப பழைய புடைவைக்கு கம்ப்யூட்டர் தர்றான். ஆனா ஒண்ணுடா மோகன், ஆயிரம் சொல்லு, என்னதான் டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆனாலும் பழைய புடைவைக்கு உள்ள மவுசு அப்படியேதான் இருக்கு.”

இந்த வயத்தெரிச்சல் போதாதென்று எச்சமிப்பாட்டி வாங்கிய கம்ப்யூட்டர் மவுஸ் (Mouse) கைக்கு வசதியாக பெருச்சாளி சைஸில் இருந்தது. அப்போது கிச்சா, “ஏண்டா ஈமெயில் வெறும அடிச்சு அப்படியே அனுப்பினா போதுமா, இல்லை ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பனுமா?” என்று தன் அறியாமையை அம்புக் குறியிட்டு வெளிப்படுத்தினான்.

எச்சுமிப்பாட்டியையும் கிச்சாவையும் பார்க்கும்போது ஒன்று புரிந்தது. அசடாக இருப்பவர்களை அதிர்ஷ்டம் துரத்தித் துரத்தி அடிக்கிறது. அவர்கள் ஆயுசு வரைக்கும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். பி.பி., கொலஸ்ட்ரால், ஹைபெர் டென்ஷன், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர் வைரஸ், பத்தாத குறைக்கு புதிதாக முளைத்த ‘ஓய்டூகே’ இப்படி எல்லாம் தெரிந்தவர்கள் தலை நரைத்து, சொட்டை விழுந்து, நகம் கடித்து, எதையெதையெல்லாமோ தேடி கடைசியில் வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள். கிச்சாவாக இருப்பது சாதனை. கிச்சாவோடு இருப்பது சோதனை. கிச்சாவோடு அமெரிக்கா போவது ரோதனை.

3

வில்லிவாக்கத்தில் கே.வி.நாராயணன் என்று எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருந்தார். மயிலாப்பூருக்கும் வில்லிவாக்கத்துக்கும் இடையே எவ்வளவு தூரம் உண்டோ அதைவிட அஞ்சு மடங்கு தூரம் கே.வி.நாராயணனுக்கும் நகைச்சுவைக்கும் நடுவே உண்டு. ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பாடலைக் கேட்டால்கூட அதில் ‘சிரித்தால்’ என்ற வார்த்தை வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிடுவார். அந்த அளவுக்கு வில்லிவாக்கம் கே.வி.நாராயணன், ஜோக்கடித்தால் சிடுமூஞ்சிகூட இல்லை… அதையும் தாண்டி புனிதமான அழுமூஞ்சி. கேவிக்கேவி அழும் இப்பேர்ப்பட்ட பிரகிருதியை வில்லிவாக்கமே வியக்கும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரிக்கவைத்து நாராயணனை குஷியாக்கி ஜோராயணனாக்கியவன் என்கூட இருந்தே கோலார் சுரங்கம் பறிக்கும் கிச்சா.

அவ்வையார் அமெரிக்கா போயிருந்தால் ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது… அதனினும் அரிது அமெரிக்கா போக விசா வாங்குதல்’ என்று பாடியிருப்பார். அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அத்தியாவசியப் பண்டமான இந்த ‘விசா’ நல்லபடியாக் கிடைத்தால் ‘பிட்ஸ்பர்க்’ வெங்கடாசலபதி கோயிலில் கிச்சாவுக்கு மொட்டையடிப்பதாக வேண்டிக்கொண்டு அமெரிக்கன் எம்பஸி வாசலில், பந்தி தவிர மத்த எல்லாத்துக்கும் பிந்தி வரும் கிச்சாவுக்காகக் காத்திருந்தோம்.

கூவத்தில் முங்கி முங்கிக் குளித்த கழுதை கலரில், கி.மு.-வில் எச்சுமிப்பாட்டியின் தோப்பனார் கோர்ட் டவாலியாக இருந்தபோது அணிந்த கோட்டை போட்டுக்கொண்டதோடல்லாமல், முழங்கால் முட்டி தெரியும் அளவுக்கு தம்மாத்தூண்டு சைஸ் நாலு முழ வேட்டியும் கட்டிக்கொண்டு சைக்கிளில் குரங்கு பெடல் அடித்தபடி வந்து இறங்கினான் கிச்சா. தாத்தா கிழித்த கோட்டைத் தாண்டாமல் அதற்குள் இருந்த கிச்சாவைப் பார்க்கும்போது, பப்ளிக் பாத்ரூம் வாசலில் ஆண்கள் என்று எழுதி ஒரு படம் வரைந்திருப்பார்களே, அது நினைவுக்கு வந்தது. பி.பி., கொலஸ்ட்ரால், வெயிட், செலவு, திமிர், கோபம் இப்படிப் பலவற்றைக் குறைக்க தினமும் வில்லிவாக்கத்திலிருந்து மவுண்ட்ரோடு வரை வெறித்தனமாக வாக்கிங் வரும் கே.வி.நாராயணன், கிச்சாவின் இந்தக் கோலத்தைப் பார்த்து புரண்டு புரண்டு சிரிக்க ஆரம்பித்தவர் அப்படியே புரண்டபடி வாக்கிங்கை அங்கப்பிரதட்சணமாக்கி வில்லிவாக்கம் போய் சேர்ந்தார்.

“கிச்சா… கோட்டு போட்டுண்டா பேண்ட்டும் போட்டுக்கணும்டா” என்று அழாத குறையாக அங்கலாய்த்த என்னிடம், “நான் என்னடா பண்றது… அந்தப் படுபாவி டெய்லர் பேண்ட்டை பயங்கர லூஸா தைச்சுட்டு அதை ஆல்டர் பண்ணக்கூட அவகாசம் இல்லாதபடி இன்னிக்குத்தான் டெலிவரி பண்ணான்… வேற வழி இல்லாம அட்ஜெஸ்ட் பண்ணிப் போட்டுண்டு ரத்னா கஃபே-ல டிபன் சாப்பிட்டுட்டு நான் எழுந்துண்டுட்டேன்…ஆனா பேண்ட் எழுந்துக்கலேன்னா பாத்துக்கோயேன் எவ்வளவு லூஸுன்னு… அதான் ஆபத்துக்குப் பாதகமில்லேன்னு சரக்கு மாஸ்டர் டவலை வேஷ்டியா கட்டிண்டு வந்தேன்…” என்று சாம்பார் நெடியோடு என்னருகில் வந்து என்னைச் சமாதானப்படுத்துவதுபோலப் பேசினான்.

“எம்பஸி ஆபீஸர் கேட்டா நான் சமாளிச்சுக்கறேன். ‘சார்! நீங்களே பாருங்க சார்… என்னோட பாஸ்போர்ட்டுல ஒட்டின பஸ்ட்டு சைஸ் போட்டோல கோட்டு மட்டும்தான் தெரியறது. கீழே பேண்ட் போட்டுண்டுருக்கறதா சிரமத்தைப் பாக்காம நீங்களே விஷுவலைஸ் பண்ணிக்கோங்களேன்’ னு சொல்லிடறேன்…” என்று காஷுவலாகப் பேசிய அவனை கழுத்தை நெரித்துக்கொல்லும் வெறியோடு அருகில் சென்ற என்னை, அவன் போட்டிருந்த தாத்தா காலத்து கோட்டிலிருந்து வீசிய துர்கந்தம் தடுத்து நிறுத்தியது.

என் தலையெழுத்து, ‘ஒரு பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம்’ என்ற பழமொழி எம்பஸியில் உள்ள அமெரிக்கன் ஆபீஸருக்கு ஒருவேளை தெரிந்திருந்து, ஒரு சோறு கிச்சாவை சாக்காக வைத்து ஒட்டுமொத்தமாக எங்க எல்லோருக்கும் ‘விசா’ தர மறுத்துவிடுவாரோ என்ற பீதியில், வந்த கோபத்தை நாங்கள் பதினோரு பேரும் ஆளுக்குக் கொஞ்சமாகப் பகிர்ந்து கொண்டு அடக்கி, கிச்சாவிடம் இதமாக “தோ பார் கிச்சா, எம்பஸிக்குள்ள இருக்கற அமெரிக்கன் ஆபீசர் வெள்ளைக்காரர். அவர் எதிர்ல அசட்டு பிசட்டுன்னு ரசாபாசமா நடந்துக்கக் கூடாது. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிட்டு கம்முனு இருக்கணும். ‘வாட் ஃபார் யூ ஹேவ் கம் ஹியர்?’னு கேப்பார். ‘ஃபார் விசா’ ன்னு சொல்லணும். அப்புறம் ‘வாட் ஈஸ் யுவர் நேம்?’ னு கேப்பார்” என்றேன். உடனே கிச்சா பாய்ந்து, “பளிச்சுனு சொல்லிடுவேனே. நேம் ஈஸ் கிச்சா. மை ஃபாதர் டென் இயர்ஸ் பிஃபோர் நோமோர் ஆஸ் எ விடோ. பிகாஸ் மை மதர் ஈவன் பிஃபோர் மை ஃபாதர் நோமோர் ஷி வாஸ் நோமோர். பட் மை கிராண்ட் பாட்டி எச்சுமி ஈஸ் தில்மாங்கே மோர். மார்னிங் டெய்லி ஐ டேக் நீர்மோர்” என்று தங்குதடையில்லாமல் உளறிக் கொட்டினான். வேறுவழியில்லாமல் அவனை அடக்க, “இப்படி ஏதாவது பேத்தினே, அப்புறம் ‘விசா’ கேட்ட உன்னை ‘மிசா’ல புடிச்சு ஜெயில்ல போட்டுடுவாங்க…” என்று பேஸ்வாய்ஸில் பயமுறுத்தி, “தோ பார் பேரைக் கேட்டா கேணையாட்டம் கிச்சா, குப்பாச்சுலு, சீமாச்சுனு செல்லப் பேரையெல்லாம் சொல்லக்கூடாது… பாஸ்போர்ட்டுல உள்ள உன்னோட ஃபுல்நேமைச் சொல்லணும், புரிஞ்சுதா? அப்புறம் கிரேஸி கிரியேஷன்ஸ்ல உன்னோட வேலை என்னன்னு கேட்டா. பளிச்சுனு ‘ஆர்ட்டிஸ்ட்’னு சொல்லணும்” என்று விசா சம்பந்தமான விஷயங்களை கிச்சாவுக்கு விலாவாரியாக ரிகர்ஸல் கொடுத்தேன்.

எம்பஸிக்குள் நுழைந்த நாங்கள் பன்னிரண்டு பேரும் எங்கள் முறை வந்தபோது, அர்னால்டு ஷ்வாஸ்நேகர் கணக்கில் ஆஜானுபாகுவான அந்த அமெரிக்க ‘விசா’ அதிகாரி முன்பு பத‘விசா’வாக வாக நின்றோம். ஏற்கெனவே விசாவுக்கு வந்த ஐம்பது பேரை இன்டர்வியூ செய்த களைப்பில் சற்றுப் பலவீனமாகி இருந்த அந்த அதிகாரி, இன்னும் எங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட நூறு பேர் விசா க்யூவில் ‘திருவிசா’ கூட்டம் போல நெருக்கியடித்து நிற்பதைப் பார்த்து, இந்த இம்சையை எப்படிச் சமாளிப்பது என்று இங்கிலீஷில் யோசித்தார்.

நாங்கள் பன்னிரண்டு பேரும் ஒரே க்ரூப்தான் என்று எம்பஸியில் வேலை பார்க்கும் தமிழ்ப் பெண் அவர் காதில் கிசுகிசுக்க, எங்களைச் சேர்ந்து ஒட்டுமொத்தமாக அருகில் வருமாறு கூப்பிட்டு ஒரே கல்லில் பன்னிரண்டு மாங்காய் அடிக்க ஆயத்தமானார். தனித்தனியாக இன்டர்வியூ செய்யாமல் எங்கள் பன்னிரண்டு பேரில் ஒருவனை செலக்ட் செய்து அவன் திறமையை அல்லது திணறலை வைத்து எங்கள் குழுவின் விசா தலைவிதியை நிர்ணயிக்க முடிவு செய்தார். மார்க்கெட்டில் பிஞ்சுக் கத்தரிக்காயைத் தேடும் பெரிசுகளைப் போல எங்களை நோட்டம் விட்டவர், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவர் போல “ஹூ ஈஸ் யுவர் லீடர்?” என்றார். நான் கையைத் தூக்குவதற்குள் ஹிண்டு ஹைஸ்கூலில் ஒண்ணாவதிலிருந்து ஏழாவது வரை கிளாஸ் லீடராக இருந்த கிச்சா தன்னைத்தான் அதிகாரி கூப்பிடுகிறார் என்று நினைத்து, “ஐ தி லீடர் ஆல்வேஸ்” என்று பாய்ந்துகூற, அவர் கிச்சாவைப் பார்த்து “கம்” என்றார். கைக்கு எட்டிய அமெரிக்கக் கனி இன்டர்வியூவில் கிச்சாவின் சொதப்பலால் வாய்க்கு எட்டும் முன்பே அழுகிப்போகப் போவதைப் பார்க்க சகியாமல் நாங்கள் பதினோரு பேரும் சூதாட்டத்தில் திரௌபதியை இழந்த பஞ்ச பாண்டவர்கள் போல தலைகுனிந்து நின்றோம்.

நல்லவேளை, அந்த அமெரிக்க ஆபீஸர் நான் கிச்சாவுக்குச் சொல்லிக் கொடுத்தபடி, “வாட் ஃபார் யூ ஹேவ் கம்” என்று கேட்டார். அதிகாரியின் அருகில் இருந்த தமிழ்ப் பெண்ணைப் பார்த்து கிளுகிளுப்பில் தடுமாறிய கிச்சா, “ஃபார் விசா” என்பதற்குப் பதிலாக “ஃபார் உஷா” என்று சொல்ல, அதிகாரி அவளைப் பார்த்து, ‘உஷா, இவறுக்கு எப்படி உன் பேர் தெரிஞ்சுது?” என்று வியக்க “அதான் சார் ஆச்சரியமா இருக்கு. ஏங்க, உங்களுக்கு ஜோஸ்யம் தெரியுமா?” என்று கிச்சாவை வினவ, “எனக்கு ஜோஸ்யம் தெரியாது. ஆனா ஹாஸ்யம் தெரியும்” என்று சகட்டுமேனிக்குச் சமாளிக்க, அந்த பி.டி.உஷா (பர்சனல் டிரான்ஸ்லேட்டர் உஷா) அதிகாரியிடம் கிச்சா ஜோஸ்யம் – ஹாஸ்யம் என்று ‘பன்’ (ஊதண) செய்ததை அதிகாரிக்கு மொழிபெயர்க்க. அவர் வாஷிங்டனுக்கே கேட்கும் அளவுக்கு இடிஇடியெனச் சிரித்தார். கிச்சாவின் முதுகை ஆதரவாகத் தடவி “நாட்டி பாய்” என்று அவர் சொல்ல, சிச்சுவேஷனை மேலும் சாதகமாக்கிக் கொள்ள, “நோ சார், ஐ ஆம் நாட் நாட்டி பாய். ஐ ஆம் எச்சுமிப் பாட்டி பாய்” என்று சொல்ல, அதிகாரி இம்முறை இடி மின்னலெனச் சிரித்தார்.

கிரேஸி கிரியேஷன்ஸ்ல நீ என்னவா இருக்கே?” என்ற அதிகாரியின் கேள்விக்கு கிச்சா நான் சொல்லிவைத்தபடி, “ஐ ஆம் அன் ஆர்ட்டிஸ்ட் சார்” என்று பவ்யமாகக் கூற, “எங்க உன் திறமையைக் காட்டு பார்ப்போம்” என்று கேட்டுவிட்டு கிச்சாவின் நடிப்பாற்றலை ரசிக்கத் தயாரானார். கிச்சா தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சாக்பீஸை எடுத்து எம்பஸி தரையில் ‘சங்கு சக்கரம் பெருமாள் நாமம்’ வரைய, குழம்பிய அதிகாரி, உஷாவைப் பார்க்க “சார் ஆர்ட்டிஸ்டுன்னா நடிகன், டிராயிங் போடறவன்னு ரெண்டு விதமா சிலேடையா மறுபடி பன்’ (Pun) பண்ணறார்” என்று மொழிபெயர்க்க, இம்முறை அதிகாரி இடி மின்னல் மழை மோகினியாகச் சிரித்தார்.

“கேக்க மறந்துட்டேன்… லாஸ்ட் அண்ட் ஃபைனல் கொஸ்டின், வாட் ஈஸ் யுவர் நேம்?” என்று கேட்ட அதிகாரி, “என் நாக்கில் ஸாட்டர் டே (சனி)” என்று புலம்பும் அளவுக்கு நொந்துபோனார். சாதாரணமாக பாஸ்போர்ட்டில் சர் நேம் என்கிற அப்பா பெயரையோ, குடும்பப் பெயரையோ சேர்த்து நம் பெயரை எழுதவேண்டும் (உதாரணமாக நான் மோகன் ரங்காச்சாரி ஆல்ஸோ நோன் ஆஸ் கிரேஸி மோகன்). எதிலும் சற்று வித்தியாசமான கிச்சா (இப்பல்லாம் வெவஸ்தை கெட்டத்தனத்துக்கு வித்தியாசமானவர் என்ற அந்தஸ்தை கொடுத்திடறாங்க.) பாஸ்போர்ட்டில் முழுப்பெயர் என்ற இடத்தில் தன் பெயரோடு தன்னுடைய அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத் தாத்தா, கடுகு உப்பு புளி மொளகாய் தாத்தா என்று ஒரு தாத்தா பேர் விடாமல் சேர்த்து, நடுநடுவே பாகப்பிரிவினை, சுவீகாரம் போன்றவற்றால் மாறிய குடும்பப் பெயர்களையும் சொருகி ‘வெள்ளக்காலி வேங்கட வரத நரசிம்ம சாத்துபடி வரத அயக்ரீவ தேசிக’ என்று ஆரம்பித்து, ‘நந்த வைகுந்த கோவிந்த கோபால கிருஷ்ணன்’ என்று முடித்து, ‘ஆல்ஸோ நோன் ஆஸ் கிச்சா’ என்று முடியும் பெயரை எழுதி பாஸ்போர்ட்டை பாஸ்புக்காக மாற்றியிருக்கிறான். இதுதவிர, இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் போன்றவற்றுக்காக தனியாக ஒரு புத்தகம் தந்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து பாஸ்போர்ட்டுக்கு இலவச இணைப்பு போட்ட முதல் ஆசாமி கிச்சாதான். கிச்சாவின் பாஸ்போர்ட்டில் மட்டும் பிரிண்டட் அண்ட் பப்ளிஷ்ட் பை ஸோ அண்ட் ஸோ என்று போட்டிருக்கும்.

கிச்சாவின் முழுப்பெயரையும் கேட்டு முடிப்பதற்குள் எங்கே தான் ரிட்டயராகிப் போய்விடுவோமோ என்ற கலவரத்தில் அந்த எம்பஸி அதிகாரி அவசர அவசரமாக எங்கள் பன்னிரண்டு பேர் பாஸ்போர்ட்டிலும் இரண்டு மாத விசா எழுதி சாப்பா குத்துக் குத்தி கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக எங்களை வெளியேற்றினார். நாரதர் கலகம் நன்மையில் முடிவது போல கிச்சாவின் கேணைத்தனம் கெலிப்பில் முடிந்தது. தனது அசட்டுத்தனத்தால் விசா வாங்கித் தந்த கிச்சாவை என்னமோ விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலாவைப் பார்ப்பது போல என்னைத் தவிர என் குழுவில் உள்ள அனைவருமே பார்த்தார்கள். செப்டெம்பர் இருபத்தொன்பதாம் தேதி, நள்ளிரவு இரண்டு மணிக்கு கிச்சா நீங்கலாக கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவைச் சேர்ந்த நாங்கள் பதினோரு பேரும் சொன்னபடி மீனம்பாக்கம் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வாசலுக்கு லக்கேஜ் சகிதமாக வந்துவிட்டோம். அட, முதன்முறையாக நாடகம் போட அமெரிக்கா செல்லப் போகும் பன்னிரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து வலதுகாலை எடுத்துவைத்து ஏர்போர்ட்டுக்குள் நுழைவோமே என்ற நப்பாசையில் உள்ளே போகாமல் வெளியே பன்னிரண்டாவது பிரகிருதி கிச்சாவுக்காக ‘தேவுடு’ காத்து நின்றுகொண்டிருந்தோம்.

– தொடரும்…

– அமெரிக்காவில் கிச்சா, முதற் பதிப்பு: மார்ச் 2006, கிழக்கு பதிப்பகம், சென்னை.

கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *