வர்ணமில்லா வானவில்…
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2025
பார்வையிட்டோர்: 4,797
(2003ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
வணக்கம் சார்!
நான் ஆனந்தன். அஞ்சு அடி ஆறு அங்குலம். வயசு முப்பத்தஞ்சு. நான் என் பொண்டாட்டியைக் கொலை செய்யனும்!
என்னடா முன்பின் அறிமுகம் இல்லாதவன் திடீர்ன்னு இப்புடி ஒரு குண்டைத் தூக்கிப் போடுறானேன்னு நினைக்கிறீங்களா?!
நியாயம் இருக்கு.! நியாயத்தை யார்கிட்ட சொன்னாலும் நியாயம் நியாயம்தான் !!
நான் எதுக்கு மனைவியைக் கொல்லனும்?!….
அவ எனக்குப் பெரிய துரோகம் பண்ணிட்டாள். நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம், காசு, சொத்தையெல்லாம் தன் பேருக்கு எழுத்து மூலம் எழுதி சட்டப்படி செய்து விட்டாள். அதோட மட்டுமில்லாம எனக்கும் சேர்த்து துரோகம் செய்து விட்டாள்.
நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுன்னா எப்படி கஷ்டப்பட்டேன்ங்குறீங்க?…
குவைத்துல வீட்டை நினைச்சு, மனைவியை நினைச்சு, மக்களை நினைச்சு, நாம நல்லா இருக்கனும்ன்னு மனசுல வைச்சு, வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேர்த்தக் காசு. ஒரு பைசா செலவழிக்கிறதா இருந்தாலும் அவசியமா, அவசியமில்லையா..? தேவையா…தேவைஇல்லையா..? ன்னு ஆயிரத்தெட்டுத் தடவை யோசனை செய்வேன். ஒரு டீ குடிக்கிறதா இருந்தாலும் குடிக்கனுமான்னு காசை இறுக்குவேன். இங்கே ஒரு தினார் இந்தியாவுல பல ரூபாயாச்சேன்னு செலவழிக்காம சட்டைப் பையில போடுவேன்.
நான் ஒரு பெரிய முஸ்லீம் வீட்டுல டிரைவர் சார். அந்தாளுக்கு அம்பது வயசு ஆனாலும் மூணு பொண்டாட்டிங்க. இங்க ஒன்னு, அங்க ஒன்னுன்னு ஏழெட்டு வைப்பாட்டிங்க. அந்த ஆளுக்கு நாலு எண்ணெய்க் கிணறுகள் சொந்தம்.. பணத்துக்குப் பஞ்சம் இல்லே. அதனால் ஏழெட்டு என்ன… எத்தனை பொண்டாட்டி, வைப்பாட்டி வேணுமோ வைச்சிக்கலாம்.!
மூணு பொண்டாட்டிங்க ஒவ்வொருத்தியும் ஒவ்வொருத்தியும் ஊர்ல ஆளுக்கொரு மூலையில இருக்காளுங்க. ஒவ்வொருத்திக்கும் வயசுக்கு வந்த பொண்ணுங்க, பையன்கள் இருக்காங்க. ஒவ்வொருத்திக்கும் ஏழெட்டுப் புள்ளைங்க. ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி. வயசுக்கு வந்த பொண்ணுங்க பார்வை ஆளை முழுங்கும். தனியா சந்திக்கிற சமயம் கெடைச்சா ‘என்ன வர்றீயா..?”ன்னு துணிஞ்சு கேட்கும். சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கும். என்னைக் கேட்டுச்சுங்க.
அங்கே தண்டனைதான் உங்களுக்குத் தெரியுமே ! மாட்டினோம்ன்னா பாயிண்டை வெட்டுவானுங்க. இல்லே…. ஆயிரம் கசையடி அடிச்சு சாகடிப்பானுங்க. இந்த விஞ்ஞான யுகத்துல சாகடிக்க எத்தனையோ வழிகளிருக்க காட்டுமிராண்டித்தனமா கல்லால அடிச்சு கொல்லுவானுங்க. இல்லே… நடுரோட்டுல தூக்குல தொங்க வைச்சி, ராணுவ லாரியில வைச்சு ஊர்வலம் நடத்துவானுங்க.
ஏன்ய்யா இப்புடின்னு காரணம் கேட்டா.. அப்போதான் இந்த குரூரத்தைப் பார்த்து மக்கள் நெஞ்சுல பயம் வரும், தப்பு செய்ய மாட்டாங்கன்னு சொல்லுவானுங்க. இதையெல்லாம் மனசுல வைச்சி அவளுங்க கால்ல விழாத குறையா கையெடுத்துக் கும்பிட்டு அம்மா தாயே ஆளை விடுங்கன்னு தப்பிப்பேன்.
அப்புடி கெஞ்சு கூத்தாடி தப்பிக்கும் போது, “என்ன மேன்! நீ ஆம்பளையா ?” ன்னு சிலது நறுக்குன்னு கேட்கும். தமிழழான நமக்குச் சுருக்குன்னு கோபம் வரும்.
ஆத்திரம் அவமானத்தைக் காட்டுற இடமா அது?! பொழைக்க வந்திருக்கோம். ஒழுங்கா உசுரோட ஊர் போய் சேரனும்ங்குற நெனப்புல அடக்கிக் கிட்டு, “இந்தியாவுல நான் ஆம்பளை. இங்கே அலி..!”ன்னு கூசாம சொல்வேன்.
அப்பவும் வெறி எடுத்த ஒன்னு ரெண்டு சும்மா இருக்காது. “அலின்னாலும் பரவாயில்லே மேலே கை வை!”ன்னு சுடிதாரை விலக்குவாளுங்க. அவளுங்களுக்கெல்லாம் வெளியிலதான் முக்காடு, பர்தா. வீட்டுல விதவிதமா டிரெஸ்.
“தாயீ!..” ன்னு கல்லைக் கண்ட நாய் போல ஓடுவேன்.
அப்படியும் ஒருத்தி விடலை.
“நீ என்னதான் கெஞ்சி கால்ல விழுந்தாலும் விடமாட்டேன்!” னு சொல்லி தடாலடியா பாய்ந்தாள்..
நான், “கொலை! கொலை!”- ன்னு கூப்பாடு போட்டதுனால… ‘போடா..’ன்னு கண்டபடி ஏசி விலகி ஓடினாள்.
நான் நினைச்சிருந்தா இந்த உடம்பை வைச்சு அவளுங்ககிட்ட ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்க முடியும். இங்கே லட்சக்கணக்குல அனுப்ப முடியும். மனுசனுக்குப் பணம் பெரிசில்லே. மான அவமானம் முக்கியம். எல்லாத்தையும்விட உயிர் பெரிசு. பணத்தை அனுப்பிட்டு பொணமா ஆகிறதுல என்ன சார் பிரயோசனம் ?! ரொம்ப கற்பு நெறியோட இருந்தேன்.
பொண்ணுங்க தொல்லைதான் தாங்க முடியலையேன்னு பொம்பளைங்க கண் மேல இருந்தா… அவளுங்க அதுக்கு மேல.
“என்ன மேன்! இந்த ஆள் வாரம் ஒரு தடவை மாசம் ஒரு தடவை வர்றான். என்னதான் மருந்து மாத்திரை, பாதாம் பிஸ்தா சாப்பிட்டாலும்…வயசான குணத்தைக் காட்டுறான். ஒரு ரவுண்டுல சுருள்றான். நீ கட்டுமஸ்தா இருக்கே. இந்திய ஆட்கள் அதிலும் குறிப்பா தமிழ்நாட்டு ஆம்பளைங்க இந்த விசயத்துல கில்லாடி ஆளை அசத்துவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன் வா மேன் !” ன்னு இழுப்பாளுங்க.
அலுத்து சலித்து அக்கா வீட்டுக்குப் போனா அவ தூக்கி ஆம்படையான்கிட்ட போட்டக் கதையாய்.. எனக்கு ரொம்ப அவஸ்தை சார். அஞ்சு வருசத்துல பத்து இடம் மாறி இருக்கேன்னா என் அவஸ்தை கஷ்டத்தை நீங்க புரிஞ்சுக்கனும்.
கடைசியா உள்ள இடத்துலதான் கொஞ்சம் தொல்லை இல்லாம திருப்தி. அங்கேயும் ஒரு சங்கடம் வந்துது.
இலங்கை பொம்பளை. சிங்களத்துக் குட்டி. ஆள் பார்க்கிறதுக்கு நல்ல கரவு சரவாய் இருப்பா. உடம்பைப் பார்த்தாலே மயங்கனும். இவ.. நான் வேலை செய்யுற இடத்துல வீட்டு வேலைக்காரி. சமைப்பாள், குழந்தைங்களைக் குளிப்பாட்டுவாள், பராமரிப்பாள், பராமரிப்பாள், பள்ளிக்கூடம் கூட்டிப் போவாள். அவளுக்கு இலங்கையில ஒரு புருசன், ரெண்டு புள்ளைங்க உண்டு. இங்கே வந்து ஒரு வருசம் ஆச்சு.
“என்ன ஆனந்தன் சார்!”ன்னு ஒரு நாள் சீண்டினாள்.
நான் “முடியாது ”ன்னேன்.
“பாருங்க ஆனந்தன் சார். நான் இங்கே தனியா இருக்கிறதுனால வீட்டு எசமான், அவர் வயசுக்கு வந்த புள்ளைங்க, வேலைக்காரங்களால பாலியல் தொல்லை. நிமிசம் அசந்தாலும் பாய்ஞ்சிடுவாங்க போல. பயமா இருக்கு.! மாட்டினா கொத்தி குதறிடுவாங்கன்னு நெஞ்சு குலை நடுங்குது. நீங்களும் பல இடம் பார்த்து வந்திருக்கீங்க. உங்களுக்கும் இதே தொல்லை, எனக்கும் தொல்லை. நான் சொல்ற ஐடியாப்படி நடந்தா நமக்கு விமோசனம்ன்னாள்
“எப்படி? ”ன்னேன்.
“நாம இங்கே திருமணம் முடிச்சு புருசன் பொஞ்சாதியாய் வாழனும்..” சொன்னாள்.
“ஐயோ! ஆத்தா…!”ன்னு அலறினேன்.
“அலறாதீங்க சார். நான் சொல்றதைக் கம்முன்னு கேளுங்க. எனக்கு உங்க மேல ஆசை இல்லே. செக்ஸ் மேலேயும் பிரியம் இல்லே. நாம இங்கே சம்பாதிக்க வந்திருக்கோம். சேதப்படாம இருந்து ஊர் போய்ச் சேரனும்ன்னா இங்கே உள்ள முறைப்படி நாம கலியாணம் முடிச்சு கணவன் மனைவியாய் வாழ்ந்தாதான் நீங்க புருசன் நான் பொண்டாட்டின்னு யாரும் தொல்லை குடுக்க மாட்டாங்க” ன்னாள்.
நான் ஆடாம அசையாம இருந்தேன்.
“திருமணம் முடிச்சா சேர்ந்து வாழனும். நாம இந்த வீட்டுல தங்காம வெளியில ஒரு அறையோ, வீடோ எடுத்து தங்குவோம். வீட்டுக்குள்ள நாம புருசன் பொஞ்சாதியாய் இல்லாம நல்ல நண்பர்களாய் இருந்து சேர்ந்து சமைப்போம், சாப்பிடுவோம். வேலைக்கு வருவோம். உங்க சம்பாத்தியம் தனி. என் சம்பாத்தியம் தனி. சாப்பாடு, குடும்ப செலவு, வீட்டு வாடகையை ஆளுக்குப் பாதியாய்க் கொடுப்போம்!” ன்னாள்.
எனக்கு சரியா இருந்தாலும் மனசுக்குள்ள சின்ன நெருடல்.
அதையும் அவளே உடைச்சா. “செக்ஸ் விசயத்திலேயும் நாம கொஞ்சம் தளர்த்திக்கலாம். உங்களுக்குத் தேவைப்பட்டு என்னைத் தொட்டா… நீங்க எனக்கு காசு கொடுக்கனும். எனக்குத் தேவைப்பட்டு உங்களைத் தொட்டா… நான் உங்களுக்குக் காசு தர்றேன். நான் குடும்பக் கட்டுப்பாடு முடிச்சுட்டேன் அதனால குழந்தை குட்டிகள்ன்னு பின் விளைவுகளுக்குப் பயமில்லே..!” ன்னாள்.
நல்ல ஐடியாத்தான். ஆனாலும் ‘அப்படி வாடி சக்களத்தி!’ ன்னு மனசு கூவிச்சு.
பொம்மனாட்டி பல்லைக் கடிச்சுட்டுப் படுத்துப்பா. ஆம்பளைதான் அலைஞ்ச கேஸ். அடிக்கடி தொட்டு காசு வீண் விரயம். பொம்மனாட்டிக்குத் தேவைன்னா ஆம்பளையைத் தொட வேணாம்.. மாராப்பை விலக்கிட்டு சும்மா படுத்துக் கிடந்தா போதும். இவன் பாய்ஞ்சிடுவான். இது வம்பு. இவ நோகாம காசுக்குக் காசு, சுகத்துக்குச் சுகம் தேடப் பார்க்கிறாள்…! புரிஞ்சுபோச்சு.
“வேண்டாம்”ன்னு மறுத்தேன்.
“சரி. வேண்டாம்ன்னா அதை தள்ளிடுவோம். வெளிக்குக் கணவன் மனைவியாய் உள்ளுக்குள் நண்பர்களாய் இருப்போம்.” ன்னு வலைச்சாள்.
நான் வேண்டான்னு ஒரேயடியாய் மறுத்து விலக்கிட்டேன். அப்புறம் தன் திட்டப்படி அவ வேற ஒரு இளிச்சவாயனேட சேர்ந்து வாழறாள்.
நான் ஒரு நிமிசம் ஓய்வு கிடைச்சாலும் சும்மா இருக்கிறதில்லே சார். அங்கே இங்கே அரையணா காலணா கிடைக்கிற மாதிரி இருந்தாலும் கிடைக்கிற வேலையைச் செய்வேன். ஞாயித்துக் கிழமை கண்டிப்பா விடுப்பு. நான் அதையும் விட்டு வைக்கிறதில்லே. எங்கேயாவது போய் வேலை செய்ஞ்சி அந்த காசையும் சேர்த்து வைப்பேன். இப்படியாயச் சேர்த்து அனுப்பின காசுதான் சார் இன்னைக்கு லட்சம் , கோடி!
நான் பணக்கார குடும்பத்துல பொறக்கலை சார். கொஞ்சம் வசதி, நடுத்தர வர்க்கமும் இல்லே. சரியான ஏழ்மையில பொறந்தவன். சல்லிக் காசோட அருமை, அதன் கஷ்டம் தெரியும்.
குவைத் வர…வங்கியில பணம் எடுத்து ஏஜெண்டுகிட்ட கொடுத்து வரலை. அங்கே இங்கே வட்டிக்குக் கடன் வாங்கி, அதையும் ரெண்டு ஏஜெண்டுகிட்ட லட்சம், லட்சம் குடுத்து ஏமாந்து..கடைசி முயற்சியாய் விட்டதைப் பிடிக்கனும்ங்குற வெறியில என் மாமனார் மாமியார் செய்ஞ்சு போட்ட பொண்டாட்டி, புள்ளைங்க நகைகளையெல்லாம் வித்து அஞ்சு வருசம் ஊருக்கே திரும்பக் கூடாதுங்குற ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டு, மனைவி மக்களை ஒரு குடிசை வீட்டுல வாடகைக்கு விட்டு விமானம் ஏறினேன் சார். அப்படிப்பட்ட எனக்கா உடம்பு சுகம், மத்த சுகம் தேவைப்படும் ?!
எல்லாத்தையும் ஒதுக்கினேன். பணம் பணம்ங்குற வெறி.!!
அத்தியாயம்-2
பணம் சேர சேர கடன் கழியட்டும்ன்னு அனுப்புவேன் சார். என் பொண்டாட்டி சுகுமாரியையும் சும்மா சொல்லக்கூடாது. மொதல்ல வட்டிக்கு வாங்கின கடன்ல்லாம் ஒழியனும்ன்னு நான் அனுப்ப… அனுப்ப அடைச்சாள். ரெண்டு வருசத்துல கடன் அடைஞ்சி நிமிர்ந்ததும்…… புள்ளைங்க நல்லா படிக்க வைக்கனும்ன்னு ஆசைப்பட்டாள். அருண், தருண் நான் விட்டு வரும்போது மூணு வயசு ஒரு வயசு.
“நல்ல பள்ளிக்கூடத்துல சேரு. டியூசன் வை. நமக்குப் பிற்காலம் பேர் சொல்லப் போறது அவுங்கதான். அவுங்க எதிர்காலம் சிறப்பா அமையனும்”ன்னு சந்தோசமா பணம் அனுப்பினேன்.
என்னால பள்ளிக்கூடத்துப் படிப்புக்கு மேல தாண்ட முடியலை. காரணம்… என் அம்மா அப்பா ஏழை, வறுமை. ஒரு புள்ளையைக்கூட படிக்கவைக்க முடியாத அளவுக்குக் கஷ்டம். குறிப்பா சொல்லப் போனா நான் மத்தியான வயித்து சோத்துக்காகத்தான் பள்ளிக்கூடம் போனேன். காமராசர் புண்ணியத்தைக் கட்டிக்கிட்டாரு. அந்த மவராசன் இல்லேன்னா என்னை மாதிரி ஏழைங்க பள்ளிப் படிப்பைக் கூட படிக்க முடியாது.
நான் படிப்பைவிட்டு வேலைக்குப் போய் தலை தூக்கின பிறகு வறுமை எங்க வீட்டுல கொஞ்சம் கொஞ்சமாய் மறைஞ்சுது. இந்த வறுமையை ஒழிக்க நான் பட்ட பாடு ஏராளம். நான் படிச்ச படிப்பையே மறந்தேன். கூலிக்கு வயல் வேலைக்குப் போனேன். மண் வெட்டி புடிச்சி வெட்டினேன். ஏர் புடிச்சி உழுதேன். சித்தாள் வேலைக்குப் போனேன். கிடைக்கிற வேலையெல்லாம் செய்ஞ்சேன்.
என் புள்ளைங்களுக்கும் இந்த குறை வரக்கூடாது. என்னை மாதிரி கஷ்டப்படக்கூடாது. அவுங்க எதிர்காலம் பிரகாசமாய் இருக்கனும்ங்குற எல்லா தாய் தகப்பனுக்கும் உள்ள ஆசை எனக்கும் சார்.
சுகுமாரி அந்த விசயத்துல குறை வைக்கலை. டவுன்ல குடியேறி நம்பர் ஒன் பள்ளிக்கூடத்துல புள்ளைங்களைச் சேர்த்தாள். சேர்த்ததா போன் பேசினாள். கடிதம் எழுதினாள். எனக்கு ரொம்ப திருப்தி மகிழ்ச்சி. அடுத்து பணம் அனுப்ப அனுப்ப “நாம குடி இருக்க ஒரு வீடு கட்டனும்” ன்னாள். ஒரு சராசரி இந்திய குடிமகன் ஆசை. நல்ல விசயம் செய்யுன்னேன்.
“டவுனை ஒட்டி மனை ஒன்னு விலைக்கு வருது… இருபது லட்சம். அதுக்கு மேல வீடு கட்டனும். என்ன பண்ணலாம்”ன்னு யோசனைக் கேட்டாள்.
“மொதல்ல குந்தி இருக்க நமக்கு நல்லதா ஒரு குச்சு வேணும். இப்ப உள்ள என் சம்பாத்தியத்துக்கு நல்ல வசதியாய்க் கட்டலாம். வெளிநாட்டுல வேலை செய்யிறவன் அஞ்சு அடியில கட்டினா ஆகாது. ஏளனமா சிரிப்பாங்க. அடுத்தடுத்து மனை இருந்தா ரெண்டு வாங்கு“ ன்னேன்.
“இருக்கு. வாங்கிடலாம். ரிஜிஸ்டர் யார் பேர்ல செய்யுறது ? உங்க பேர்ல முடிக்கிறதா இருந்தா நீங்க இங்கே இருக்கனும்ன்” னாள்.
“நான் எப்படி வரமுடியும் ? உன் பேர்லேயே எல்லாத்தையும் முடிச்சிக்கோ”ன்னேன்.
நாப்பது லட்சம் ஒரே தடவையா கெடைக்கலை. இருபது லட்சம் முன் பணம் அனுப்பி அக்கிரிமெண்ட் போடச் சொன்னேன். அடுத்து ஆறு மாசத்துல ரிஜிஸ்டர் பண்ணிடலாம்ன்னேன். அப்படியே ஆச்சு. இருபது லட்சம் அனுப்பவே உன்னைப் பிடி என்னைப்பிடின்னு பணம் நெருக்கம். அடுத்த ஆறு மாசத்துல இருபது லட்சம் அனுப்பனுமேன்னு கவலை.
ஓய்வு நேரத்துல ஒட்டக சாணி அள்ளிளேன் சார்.நண்பர்கள் குடியிருந்த இடத்துல என்னவோ துணி அடைச்சி லெட்ரின் அடைச்சுப் போச்சு. நண்பர்கள் அங்கே இங்கே போய் சமாளிச்சானுங்களேத் தவிர அதை சரி செய்ய ஆள் கிடைக்கலை. தவிச்சானுங்க. ஐநூறு தினார் பேசியும் ஆட்கள் இதோ வர்றேன், அதோ வர்றேன்னு இழுக்கடிச்சானுங்க. அவனுங்களுக்கும் அந்த அசிங்கத்துல கை வைச்சி செய்ய அருவருப்பு. நண்பர்கள் அல்லாடிப் போனானுங்க.
நான் அந்த வேலையைச் செய்யிறதா முடிவுப் பண்ணினேன். “சுத்தம் செய்யுற பொறுப்பை என்கிட்ட விட்டுட்டு நீங்க வேலைக்குப் போங்கடா” ன்னு அனுப்பினேன்.
அவனுங்க நகர்ந்ததும் நானே கைவிட்டு அடைச்சிருந்த ஒருத்தன் பனியனை எடுத்தேன். தண்ணி வண்டிக்கு அம்பது தினார் குடுத்து வரவழைச்சு நல்லா கழுவினேன். சுத்தமாச்சு. நண்பர்கள் வந்ததும் அசந்தானுங்க. ஐநூறுல அம்பது தினார் போக எனக்கு சொளையா நானூத்தி அம்பது தினார் கூலி.
நான் ஏன் இதைச் சொல்றேன்னா நான் பணம் சம்பாதிக்க இப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன். முதலாளிகிட்ட ராத்திரி அதிக நேரம் வேலை செய்ஞ்சி போதாம அவர்கிட்டேயே கொஞ்சம் முன் பணம் கடன் வாங்கி மீதி இருபது லட்சம் அனுப்பினேன். ரிஜிஸ்டர் முடிஞ்சுது.
மனை வாங்கிப் போட்டாப் போதுமா ?!. வீடு கட்டனுமே ! அதுக்கு நாயாப் பேயாய் உழைச்சேன் சார்.
நான் கொஞ்சம் கொஞ்சமா பணம் அனுப்ப அனுப்ப சுகுமாரி முப்பது லட்சத்துக்கு வீடு கட்டினாள். போட்டோ புடிச்சி அனுப்பினாள். வீடு ரொம்ப அற்புதம், அழகா இருந்துது.
என் கூட…அக்கம் பக்கம் வேலை செய்யுற திருநெல்வேலி, மதுரைக்கார நண்பர்களெல்லாம் அந்த போட்டோவைப் பார்த்து அசந்துட்டானுங்க. அவனுங்க ஜாலியா செலவு பண்ணுவானுங்க, சினிமா பார்ப்பானுங்க. சுவரிருந்தாத்தான்டா சித்திரம் வரைய முடியும்ன்னு சொல்லி நல்லா தின்பானுங்க. நான் பைசா செலவு செய்யாததினால கஞ்சன், கருமின்னு ஏகடியம் செய்வானுங்க.
“இதுதான்டா கஞ்சன், கருமி சொத்து”ன்னேன். ஆடிப் போயிட்டானுங்க.
அடுத்து என்னைப் பார்த்து செலவைக் குறைச்சானுங்க.
வீடு கட்டடியாச்சு. அடுத்து தொலைபேசி வசதி. வீட்டுக்குத் தேவையான தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், மிக்ஸி கிரைண்டர்ன்னு….. ஒரு வீட்டுக்குத் தேவையான எல்லா சாமான்களையும் வாங்க கொஞ்ச நாளாச்சு.
நிமிர்ந்துட்டோம்ன்னு சந்தோசப்பட்டேன்.
அடுத்து அனுப்பின பணத்துக்கெல்லாம் சோத்துக்கு போர் செட்டோட ஒருவேலி நிலம் வாங்கினாள் சார். ரோட்டோரம் விளையலைன்னாலும் பிற்காலத்துல பிளாட் போட்டு நல்ல விலைக்கு வித்துடலாம்ன்னு புத்திசாலித்தனமாச் செய்தாள்.
அஞ்சு லட்ச ரூபாய்க்கு வாங்கின நிலம் பத்து லட்ச ரூபாய்க்குக் கேட்கிறாங்கன்னு அவளே பெருமைப் பட்டாள். எனக்கு சந்தோசமா இருந்துது. மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்ன்னு பெருமைப் பட்டேன்.
அடுத்து வீட்டோட சேர்த்து ஒரு மாங்கொல்லை வாங்கிப் போட்டாள். இன்னைக்கு அது நல்ல விலை. பல லட்சம். டவுன்ல மெயினான இடத்தை வாங்கி நாலு கடைகட்டி விட்டாள். இன்னைக்கு ஒவ்வொரு கடைக்கும் ஒரு லட்சம் முன் பணம். நாலாயிரம் வாடகை. நாலு கடைக்கும் நாலிரண்டு எட்டாயிரம் மாச வருமானம்.
இனி நாம சம்பாதிக்கவே வேணாம் போதும்ப்பான்னு நிம்மதி மூச்சு விட்டேன். ஆனாலும் விடாம உழைச்சி பணத்தை வங்கியில போடச் சொன்னேன். போட்டாள். மகள் இல்லேன்னாலும் அம்பது பவுன் நகை வாங்கி போட்டு அழகு பார்த்து வங்கி லாக்கர்ல வைத்தாள். நாலு வங்கியில கணக்கு தொடங்கி ஒவ்வொன்னுலேயும் நாலு லட்சம் வைப்புத் தொகையாய் வைச்சாள்.
நாலு முடிஞ்சி அஞ்சாவது வருசம் தொடக்கம்.
“நான் இந்த வருச கடைசியில வருவேன். உனக்கு என்னென்ன வேணும்ன்னு சொல் வாங்கி வர்றேன்”னேன்.
அதுக்கு சுகுமாரி, “அமெரிக்காவுல குண்டு போட்டு சண்டை ஆரம்பிக்கிறேன்ங்குறான். நீங்க போன முறை சண்டையிலேயே உயிர் பிழைச்சது அதிசயம்ன்னு சொன்னீங்க. அந்த தாக்குதலுக்குப் பயப்படாம முதலாளிக்கு விசுவாசமாய் வேலை செய்ததுனால அவர் கொஞ்ச பணம் அன்பளிப்பாய்க் கொடுத்தார். அரசாங்கம் வேற குடுத்துதுன்னு சொல்லி சந்தோசப்பட்டீங்க. அந்த சண்டையில் தவியாய்த் தவிச்சேன். அந்த தவிப்பு இப்போ வேணாம் சீக்கிரம் வந்துடுங்க.” – சொன்னாள்.
‘என்ன அன்பு பாசம் அக்கறை !’ – எனக்கு சுகுமாரியை நினைக்க…. சிலிர்ப்பாய்ப் போச்சு.
இந்தியாவுல உட்கார்ந்து திங்கிற அளவுக்கு சொத்து, வருமானம் இருக்கு. இனி அங்கே போய் சம்பாதிக்க வேண்டியதில்லே. திரும்ப விமானம் ஏறத் தேவையில்லே. பிரிஞ்சி இருந்தது போதும். இனி பொண்டாட்டி புள்ளைங்களோட ஜாலியா இருக்க வேண்டியதுதான் பாக்கி. இருப்போம்ன்னு முடிவு பண்ணினேன். இருக்கிற நாள்லேயும் அசராம உழைச்சேன்.
தமிழ்நாட்டு டாக்ஸிகாரங்க வெளிநாட்டுலேர்ந்து வர்றவங்களைச் சவாரி புடிச்சி ஏத்தி, நடு வழியில கத்தியைக் காட்டி மிரட்டி, இல்லே….கொலை பண்ணி கொள்ளையடிக்கிற சமாச்சாரம் தெரிய எனக்கு நாமும் அப்படி ஆகிடக்கூடாதுன்னு உள்ளுக்குள்ள பயம். பணத்தையெல்லாம் அனுப்பிட்டு கை செலவுக்கு மட்டும் எடுத்துப் போனாப் போதும்ன்னு முடிவுக்கு வந்தேன். இதனால அதிக பணத்தைக் கையில வைச்சுக்காம கொஞ்ச பணத்தை மட்டும் வைச்சிக்கிட்டு எல்லா பணத்தையும் வீட்டுக்கு அனுப்பினேன்.
கெடு முடியக் கிளம்பினேன்.
வழியில உசுருக்கு ஒன்னும் ஆகிடக் கூடாதுன்னு வேண்டுதல்.!!
அத்தியாயம்-3
சென்னை விமான நிலையத்துக்குக் காரை எடுத்துக்கிட்டு பொண்டாட்டி, புள்ளைங்களே என்னை அழைக்க வந்திருந்தது பார்க்க சந்தோசமா இருந்துது.
அருண், தருண் எட்டு ஆறு வயசுல பார்க்க பரவசமா இருந்தானுங்க. நான்தான் உழைச்சி உழைச்சி ஓடாய்ப் போயிருந்தேனேத் தவிர அஞ்சு வருசம் பார்க்காத சுகுமாரி பார்க்க இளமை, பளபளப்பா அழகா இருந்தாள். முகத்துல பணக்காரக் களை, மினுமினுப்பு கொட்டிச்சு.
“சுகுமார்…..!”ன்னு சுத்தியுள்ள கூட்டம் சுற்றுப்புறத்தையெல்லாம் மறந்து விமான நிலையத்திலேயே தாவி அணைச்சேன். அஞ்சு வருச தாக்கம் , ஏக்கம் என்னை அப்புடி அணைக்கச் சொன்னுது.
அவதான் சுதாரிச்சு, “ஐயோ..! அக்கம் பக்கம். பசங்க..” ன்னு நெளிந்தாள்.
சுகுமாரிதான் அதைப் பெரிசா எடுத்துகிட்டாளேத் தவிர கணவன் மனைவியைப் புதுசாக் கண்ட சுத்தி உள்ளவங்களும் என் மாதிரிதான் அணைச்சிக்கிட்டாங்க. இல்லாதவங்க, முடியாதவங்க… பேசி, சிரிச்சி இருந்தாங்க.
மகிழ்ச்சியாய் வீட்டுக்கு வந்தோம். வீடு பெரிசா இருந்துது. வாட்சப், புகைப்படத்துல பார்த்ததைவிட அழகாய் அற்புதமாய் அற்புதமாய் இருந்துது. அன்னைக்கு ராத்திரி அஞ்சு வருச ஏக்கம். கொண்டாட்டம். சிவராத்திரி.
அடுத்த நாள்…. வாங்கின தோட்டம் நிலம் கட்டிவிட்ட கடை எல்லாத்தையும் போய்ப் பார்த்தோம். வங்கி கணக்கு, லாக்கர்ல உள்ள நகை, பத்திரம் எல்லாத்தையும் காட்டினாள். பத்திரம், பணம் எல்லாம் அவ பேர்ல பக்காவா இருந்துது. அப்படித்தானே இருக்க முடியும்.?!
‘நான் உழைச்ச உழைப்பு மொத்தமா… சொத்து பத்து, பணமாய் எல்லாம் அவ பேர்ல இருக்கே. நாளைக்கே இவள் நம்மைக் கழற்றி விட்டாள்ன்னா ஆண்டியாய் இல்லே வெளியில நிப்போம்!’ ன்னு அப்பவே சடக்குன்னு நினைப்பு வந்துது.
‘அட! கட்டின பொண்டாட்டியா அப்படியெல்லாம் செய்வாள்..?!’ ன்னு மனசை மாத்தி உதறினேன்.
கையில கொண்டு வந்த ஒரு லட்சத்தை மட்டும் என் பேர்ல வங்கி கணக்கு ஆரம்பிச்சு வைச்சேன். போய் வர புதுசாய் ஒரு ஹீரோ ஹோண்டா வாங்கினேன்.
பசங்களுக்கு வண்டியைப் பார்த்ததும் கொள்ளைக் கொண்டாட்டம். இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு…என் மதுரை நண்பன் தன் வீட்டுக்குக் கொஞ்சம் பணமும் பொருளும் கொண்டு கொடுக்கச் சொல்லி கொடுத்திருந்தான்.
காலையில கிளம்பி போய்க் கொடுத்து உடனே திரும்பினேன். தூரத்துல வரும்போதே வீட்டு வாசல்ல மாருதி கார் வெள்ளை நிறம் நின்னுது.
‘கார் வைச்சி பார்க்க வர்ற அளவுக்கு நமக்கு பழக்கம் உள்ள ஆள் யார்?’ – நான் யோசனையுடன் வீட்டுக்குள்ளே நுழைஞ்சேன்.
உள்ளே… முப்பது வயசுல ஒரு பையன் நல்ல சிகப்பா அழகா, நீட்டா உடை உடுத்தி சட்டையை பேண்ட்குள்ள விட்டு இன் பண்ணி சோபாவுல உட்கார்ந்து கால் மேல கால் போட்டு சுகுமாரியோட பேசிக்கிட்டிருந்தான்.
அவள் எதிர் நாற்காலியில உட்கார்ந்திருந்தாள்.
என் தலையைக் கண்டதும் அவன் சடக்குன்னு எழுந்திரிச்சு திருதிருன்னு விழிச்சு, “வணக்கம்!” சொன்னான். நல்ல நெடுநெடுன்னு உசரம்.
சுகுமாரி அலட்டிக்கலை.
நான் புரியாம விழிச்சேன்.
சுகுமாரி, “இவர் ஆகாஷ். இன்ஞினியர். நமக்கு நிலம் வாங்கிக் கொடுத்து கடை கட்டி, வீடெல்லாம் கட்டி கொடுத்தவர். இவர் முயற்சி, புத்திசாலித்தனம், உழைப்பு இல்லேன்னா நமக்கு இந்த அளவுக்குச் சொத்து கிடைச்சிருக்காது. உங்களைப் பார்க்கனும்ன்னு சொன்னார். வரச் சொன்னேன். வந்திருக்கார். இவர் என் கணவர்.” – அவனுக்கு என்னையும் எனக்கு அவனையும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.
எனக்கு அவனைப் பார்க்கப் பெருமையாய் இருந்தது. நமக்காக உழைத்தவன் நினைக்க அன்பு சுரந்தது.
“சந்தோசம்!”- கை நீட்டி குலுக்கினேன்.
“கலியாணம் ஆகிட்டா?” – கேட்டு அமர்ந்தேன்.
“முடிஞ்சிடுச்சு. மனைவியும் மகளும் ஊருக்குப் போயிருக்காங்க. ” சொல்லி மரியாதையாய் நின்னான்.
“உட்காருங்க. வீட்டுல விசேசமா?”
“இல்லே சார். பிரவீணா கைக்குழந்தை.“ அடக்க ஒடுக்கமாய் அமர்ந்தான்.
“நான் இன்ஞினியர் படிப்பை முடிச்சிட்டு தனியே தொழில் செய்யுறேன் சார்.” விசிட்டிங் கார்டு கொடுத்தான்.
பிரவீண் கன்ஸ்ட்ரக்ஷன் என்றிருந்தது. பெயர், விலாசம், செல் நம்பர், போன் நம்பர் எல்லாம் இருந்தது.
பக்கம்தான் ஊர்.
“நன்றி. பேசிக்கிட்டிருங்க. நான் கை கால், முகம் கழுவி வர்றேன்.” எழுந்தேன்.
பக்கத்து அறையில் கதவைச் சாத்திக் கொண்டு அருண் தருண் ஒழுங்காய் படிச்சாங்க.
நான் உடை மாற்றி முகம் கழுவி வரும்போது, “நான் வர்றேன் சார்.”- அவன் கிளம்பிப் போனான்.
“ஏதோ மலிவு விலையில் நிலம் வருதுன்னு சொன்னான். அதுதான் பேசிக்கிட்டிருந்தேன்.” சுகுமாரி என் அருகில் வந்து கொண்டே சொன்னாள்.
அடுத்த இரண்டு நாள் கழித்து திருநெல்வேலி பயணம்.
திருநெல்வேலி நண்பன் பொருளும் பணமும் கொடுத்திருந்தான். போய் இறங்கி விலாசம் தேடி கொடுத்தேன்.
“என் புள்ள நல்லா இருக்கானாய்யா ? அவன் புண்ணியத்துல நாலு பொட்டைப் புள்ளைங்களைக் கரையேத்தியாச்சு. இன்னும் அவன்தான் பாக்கி. ஊருக்கு வந்ததும் முடிக்கனும். எப்போ வருவான் ? என்ன வேலை செய்யுறான். கஷ்டப்படுறானா…? இங்கே செல்லமா வளர்ந்தவன்.” – அவன் அப்பாவும் அம்மாவும் … மாறி மாறி பேசினாங்க.
‘உள் நாட்டில், வெளிநாட்டில் சம்பாதிப்பவன் எவனுக்கும் தலைக்கு மேல் சுமை!’ – வலிச்சுது.
அவுங்க மனம் கோணாதவாறு சாதகமாய் பதில் சொல்லி விட்டு ஊர் வர மணி பத்து. வீட்டை நெருங்க… வாசலிலிருந்து மாருதி கிளம்பி சென்றது.
‘ஆகாசுக்கு இந்த நேரத்தில் என்ன வேலை ? ஏன் வந்தான். இந்த நேரத்தில் வந்து பேசிப்போகும் அளவிற்கு என்ன முக்கிய சேதி…நிலம் பற்றியதா. எனக்காக இந்நேரம் காத்திருந்து சென்றானா?’ அதிக யோசனையுடன் அழைப்பு மணியை அழுத்தினேன் சார்.
சுகுமாரி சிறிது நேரம் கழித்துத் திறந்தாள்.
மனதில் கொஞ்சமும் விகல்பம் இல்லாமல், “ஆகாஷ் எதுக்கு வந்து போறார்!” – கேட்டேன்.
சுகுமாரி கொஞ்சம் துணுக்குற்றாள். பின் சமாளித்து, “பஸ் ரூட் ஒன்னு விலைக்கு வருதாம். நீங்கதான் டிரைவராச்சே. வாங்கி விட்டால் லாபம் பார்க்கலாம்ன்னு சொல்ல வந்தார். உங்களுக்காக காத்திருந்து போயிட்டார்.” – சொன்னாள்.
‘மனுசனுக்கு என்ன அக்கறை! எதிரிக்கு எப்படியெல்லாம் சகாயம் செய்யவேண்டுமென்று நினைக்கிறான்!’ – எனக்கே அவன் அறிவுத்திறன் வியக்க வைச்சுது. ‘இவர்களெல்லாம் மற்றவர்களை முன்னேற்றி தானும் முன்னேறும் உழைப்பாளிகள்!’ – நினைக்க பெருமையாய் இருந்துது.
பெட்ரூம் சென்றேன். செண்ட் வாசனை கமகமத்தது. அருண், தருண் அவர்கள் அறையில் நிம்மதியாக படுத்து உறங்கினார்கள்.
எனக்கு எதுவும் விகல்பமாக படவில்லை.
மறுநாள் காலையிலேயே ஆகாஷ் என்னைத் தேடிக்கொண்டு வீட்டுக்குள் வந்தான்.
“சார்! நேத்தி உங்களைத் தேடி வீட்டுக்கு வந்தேன் சார். ராத்திரி பத்து மணி வரை உங்களுக்காக காத்திருந்தேன். நீங்க வரலை. திரும்பி போயிட்டேன்.” – சொன்னான்.
“தெரியும். சுகுமாரி சொன்னாள்.”ன்னேன்.
“என்ன சார் முடிவு?” – கேட்டான்.
“எதுக்கு?”
நேற்று இரவு சுகுமாரி சொன்னதை நான் காதில் வாங்கினேனேயொழிய அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. பயணக் களைப்பு சாப்பிட்டு அது முடிச்சதும் தூங்கிட்டேன். அதனால் அதைப் பற்றி சரியான ஞாபகம் இல்லை. கேட்டேன்.
அவன் பஸ் ரூட் விசயத்தைப் பற்றி சொன்னான்.
“நீங்க டிரைவர் சார். லாபகரமா நடத்தலாம். ஆள் ரொம்ப முடையில இருக்கார். கொறைச்ச காசுக்கு விழுந்திடுவார்.” – சபலப்படுத்தினான்.
எனக்கு விருப்பமில்லை. இருப்பதை வைத்துக் கொண்டு அலட்டலில்லாமல் வாழலாம் என்கிற எண்ணம்.. இருந்தாலும் ஆள் முடையாய் இருக்கிறானென்று அவன் சொன்னதால் வலிய வரும் சீதேவியை ஏன் எட்டி உதைக்க வேண்டும். மனம் கொஞ்சம் சபலப்பட்டுச்சு.
“யோசிக்காதீங்க சார். நம்ம விருப்பத்துக்கு ஆள் சரி வரலைன்னா கழன்றுக்கலாம்.” – கொக்கிப் போட்டான். இடறிவிட்டான்.
“சரி. போகலாம்.” – எழுந்தேன்.
அவன் மாருதியிலேயே சென்றோம். அந்த வீட்டு வாசலில் நிறுத்தினான். ஆள் அப்படியொன்றும் முடையாய்த் தெரியவில்லை. வீடு ரொம்ப வசதியாய் இருந்தது. ஆள் படு பந்தாவாக இருந்தான்.
“ரூட் கேட்க வந்தீங்களா?” என்று முகம் கொடுத்துப் பேசவில்லை.
சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு வந்தவர்களை மதித்து உட்காரக்கூடச் சொல்லாமல் தெனாவட்டாக இருந்தான். நாங்களாகவே அமர்ந்தோம்.
அவன் குருட்டாம் போக்கில் யாரிடமோ ஏதோ எப்படியோ பேசி இருப்பான் போல. ஆகாஷ் அதையே பிடித்துக் கொண்டு என்னைக் கவிழ்த்துக் கொண்டு வந்திருக்கிறான். தெளிவாக தெரிந்தது.
மனதில் வைத்துக் கொள்ளாமல், “என்ன இப்படி?” என்று இவனிடம் குசுகுசுத்தேன்.
“அவர் கௌரவத்தை விடாமல் நடிக்கிறார் சார்.” என்றான் நம்பகமாக.
“என்ன சார் ரேட்டு?”- நான் நேரடியாகவே வியாபாரத்தில் இறங்கினேன்.
“அம்பது லட்சும்!” கை விரல்களை சேர்த்து விரித்து காட்டினான்.
எனக்குப் படியுமென்று நம்பிக்கை வரவில்லை.
“குறைக்கலாமா சார்?”- என்றேன்.
“ம்ம் நாய் போல குரைக்கலாம்.” என்றான். வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே.
“வா ஆகாஷ் போகலாம்.” – எழுந்தேன் அவன் சட்டை செய்யவில்லை.
விற்பவனாக இருந்தால்தானே மதிப்பான்?!
இது என்னவோ எனக்கு ஆசை காட்டி ஒப்புக்கு இழுத்து வந்ததாகப் பட்டது. ‘ஏன் இப்படி?- உண்மையிலேயே ஆகாஷ் நல்ல மனசுக்காரன்தானா?!’- எனக்குள் சந்தேகம் எழுந்தது.
இது ஒன்றை மட்டும் வைத்து ஆளை எடை போடக்கூடாது. மனசை மாற்றினேன்.
“பஸ் ரூட் சரி வராது.” என்றேன் வெளியில் வந்து.
“மறுபடியும் பேசிப்பார்க்கலாம் சார்!” – என்றான் என்னை விடாமல்.
‘ஒருவேளை கமிசன் பணத்துக்கு அலைக்கிறானோ?!’ மறுபடியும் எனக்கு சந்தேகம்.
“இப்படி நாலையும் செய்தால்தான் பொழைக்கலாம். கார் வாங்கும் அளவிற்கு வசதியாகலாம்.” என்றான்.
அதையும் தவிர்த்தேன்.
வேண்டாமென்று ஒரேயடியாக மறுப்பு சொன்னதோடு விட்டான்.
இரண்டொரு நாள் கழித்து அடுத்து ஒரு முக்கியமான வேலை.
“மதியம் சாப்பாட்டுக்கு என்னை எதிர்பார்க்காதே. தாமதமாய் வருவேன்” சுகுமாரியிடம் சொல்லியே சென்றேன்.
ஆனால் பன்னிரண்டு மணி அளவிற்கு நேரத்தோடேயே திரும்பினேன். தூரத்தில் வரும்போதே ஆகாஷ் கார் சொல்லி வைத்தாற் போல வீட்டு வாசலிலிருந்து என் கண்ணில் பட்டு வழக்கம் போல் மறைந்து போயிற்று. இது எனக்கு எதார்த்தமாக தெரியவில்லை. திட்டமிட்டு வந்ததாய் தெரிந்தது. ஆகாஷ் வீட்டில் போனிருக்கின்றது. கையில செல் இருக்கிறது. என்னைத் தேடி வருபவனாக இருந்தால் இவைகளில் ஒன்றை உபயோகப்படுத்தி தெரிந்து வரலாம். இப்படி ஆளில்லா சமயத்தில் வந்து திரும்பி போக வேண்டியதில்லை.
‘என்ன சூது.?! சுகுமாரி – ஆகாசுக்குள் என்ன ரகசிய பேச்சு. கணக்கு வழக்கு?’ – எனக்குள் நெருடியது.
வீட்டிற்குள் சென்றேன். சுகுமாரியிடம் ஆகாஷ் வந்தானா சென்றானா கேட்கவில்லை. அவளாகவே சொல்கிறாளா இல்லையா என்று எதிர்பார்த்தேன்.
சொல்லவில்லை!!
உண்மையை மறைக்கப் போகிறாளா சொல்லப் போகிறாளா என்பதைத் தெரிந்து கொள்ள….”ஆகாஷ் பஸ் ரூட் சம்பந்தமா வந்தாரா?” – என்று கேட்டு அடிக்கண்ணால் பார்த்தேன்.
“வந்தார்!” உண்மையை ஒத்துக்கொண்டாள். “அதை வேணாம்ன்னு ஒதுக்கிட்டீங்களாம் வருத்தப்பட்டார். ஆனா அடுத்து ஏதோ சொத்து இருக்குன்னு சொன்னார்.”- என்றாள்.
“எதுக்கு இப்படி வலிய வலிய வர்றார்?” – என்றேன்.
“ஆதாயம் இல்லாம யாரும் ஆத்தைக் கட்டி இறைக்க மாட்டாங்க. அவருக்கு ரொம்ப நல்ல மனசு. நல்ல இடமா புடிச்சுக் குடுக்கிறார். அதுக்குத் தகுந்தாற் போல கமிசன் கூட்டி குறைவா வாங்குறார். அதனாலதான் இந்த பாடு.” – சொன்னாள்.
எனக்கு வெள்ளை மனசு சார். எதையும் சுலபமா நம்பிடுவேன். எழுந்த சந்தேகம் அடங்கிப் போச்சு. ஒரு நல்லவனைப் போய் சந்தேகப்பட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டேன்.
வளர்த்தலை முடிக்கிறேன்.
அடுத்து எனக்கு வெளியூர் போக வேண்டிய வாய்ப்பு. முடிச்சி திரும்பும் போது…
– தொடரும்…
– ஏப்ரல் 2003ல் Top-1 பாக்யா மாத இதழில் பிரசுரமான குறுநாவல்.