குற்றச்சாட்டு
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: September 18, 2026
பார்வையிட்டோர்: 130

அந்த நகரின் பணக்கார கூட்டங்களால் நடத்தப்பட்ட ‘பார்ட்டி’ ஒன்று, ஆரம்பிக்க போகிறது,
கிட்டத்தட்ட முப்பதாயிரம் சதுர அடி அளவுக்கு பரந்து கிடந்த திறந்த வெளி.
அங்கங்கு வண்ண வண்ண நாற்காலிகள் பூப்போட்ட துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, அதன் மேல் எந்த அழகான யுவதி இல்லை யுவனோ வந்து உட்காருவார்கள் என்று காத்திருந்தது.
அவர்கள் வந்திறங்கும் கார்களின் வகைகள் அவர்களின் பணச் செழுமையை அங்கிருந்தவர்களுக்கு காண்பித்து கொண்டிருந்தன.
ஆண்களின் உடைகள் ஐரோப்பிய நாகரிகத்தை அதிகமாக பறைசாற்றிக் கொண்டிருந்தது.
அவர்களுடன் இறங்கிய பெண்களின் உடைகள் பாதியளவுக்கு சிக்கனமாக இருந்தன. சிக்கனத்தினால், அங்கிருந்தவர்களின் பார்வைகள் பட்ட இடங்கள் பட்டவர்த்தனமாய் என்னை பாரேன் என்று சொல்வது போலிருந்தது.
கலாச்சார உடைகளுடன் வந்திருந்த பெண்களும் நிறைய இருந்தனர். அவர்கள் உடுத்திய சேலைகள் அதன் மினு மினுப்பின் மூலம் பண செழுமையை காட்டியது. அது மட்டுமல்ல தங்கத்தின் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் அவர்களே தங்க நகைகளால் அலங்கார தேவைதகளாக வந்திருந்தனர்.
சரியாக “பார்ட்டி” ஆறு மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப கட்ட நாகரிகத்துடன், அங்கங்கு வயதுக்கு தகுந்தாற் போல் குழுவாக பிரிந்து நாற்காலிகளை ஆக்ரமித்து அரட்டை கச்சேரிகளுடன் நடை போட ஆரம்பித்திருந்தது.
இனி போக போக எப்படி முடியும் என்பது அவர்கள் எடுத்துக்கொண்ட உணவு உடன் பானங்களை பொருத்தது. நமக்கு அதை பற்றி கவலை இல்லை.
இருள் மெல்ல பரவ மின் விளக்குகள் எரிய விடப்பட்டு அந்த இடங்களில் வெளிச்சங்கள் இருந்தாலும் ஒரு சில இடங்களில் இருட்டும் இருந்தது. அது வேண்டுமென்றே விடப்பட்டிருக்கலாம், எதற்காகவென்று வாசகர்களின் யூகத்திற்கே விட்டு விடலாம். ஏனென்றால் இந்த கதைக்கு இது அவசியமில்லை.
ஆனால் அந்த இருள், எந்த நோக்கத்திற்காக வந்திருந்தார்களோ, அவர்களுக்கு மிக சாதகமாக இருந்தது.
நல்லா கவனிச்சுக்கோ, அதா அங்க நிக்கறாரு பாரு, கையில சரக்கோட அவர் பங்களாவுக்கு நீ கிளம்பி போறே, இப்ப அவர் பங்களாவுல அவர் சம்சாரம் மட்டும் இருக்கும், நான் சொல்ற மாதிரி நீ அவர் வீட்டுக்குள்ள நுழையறே, மாடியில இரண்டாவது ரூம்ல வலது பக்கம் ஞாபகம் வச்சுக்கோ, அது பூட்டியிருக்காது, திறந்து உள்ளே போறே, பீரோ ஒண்ணு சுவத்தோட ஒட்டி இருக்கும், அதுல இரண்டாவது “ரேக்”குல இடது பக்கமா வச்சிருக்கற ‘டாகுமெண்ட்’ இருக்கும், அதை உருவி எடுத்து என் கிட்டே கொண்டு வந்து கொடுக்கறே.அவ்வளவுதான்.
அவர்கள் இருவரும் கையில் கோப்பை பிளஸ் திரவத்துடன் இருந்தாலும் அதை அவ்வப்பொழுது உதட்டில் வைத்து, எடுத்து, எடுத்து இப்படியாக தங்களின் திட்டத்தை வகுத்து கொண்டிருக்க, நாம் கையில் சரக்கு வைத்திருக்கும் நபர் என்று சொன்னவரிடம் போகலாம்.
ஹலோ செல்வரத்தினம் எப்படி இருக்கீங்க? ஆளையே பார்க்க முடியலை, கேள்வி கேட்ட நபருக்கு ஐம்பது வயது இருக்கலாம், நேற்று மாலைதான் இவரை பார்த்து பேசியிருந்தார்.
செல்வரத்தினம் அவரை பார்த்து தலையசைப்புடன் நிறுத்தி கொண்டு வேறொருவருடன் பேசுவது போல பாவனை காண்பித்தார். காரணம் கேட்ட நபர் இவருக்கு சமமான ‘பிசினஸ்மேன்’ இல்லை. அது மட்டுமில்லாமல் ஒரு சில உதவிகள் இவரிடமிருந்து பெற்றிருக்கிறார்.
பேசிக்கொண்டிருந்ததாக பாவனை காட்டிய நபரை பார்க்கலாம், அவர் பிரபலமான வக்கீல், ரங்கநாதன். அவர் செல்வரத்தினத்திடம் எல்லாம் சரியா நடக்குமா?
செல்வரத்தினம் சரியாத்தான் இது வரைக்கும் போயிட்டிருக்கு, பார்க்கலாம்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க செல்வரத்தினம் வீட்டுக்குள் சென்று டாகுமெண்டை எடுத்து வர பணிக்கப்பட்டவன் அந்த இருளுக்குள் நழுவி இருந்தான்.
வெளியே வந்தவனிடம் என்ன மோகன் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? இனிமேல்தான் மத்த எல்லாமே இருக்கு, சொல்லிவிட்டு கண்ணை சிமிட்டியவரிடம் எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு, முடிச்சிட்டு வந்துடறேன்,
இந்த வேலை முடிச்சு கொடுத்தா சொளையா “அஞ்சு லட்சம்” கிடைக்கும். மனதுக்குள் கனவாய் விரிய தன் காரை எடுத்து வேகமாக்கினான்.
மனதுக்குள் கணக்கு போட்டான், பிசினஸில் சின்ன சறுக்கல், கிட்டத்தட்ட மூன்று இலட்சத்துக்கு மேல் இழப்பு, என்ன செய்வது ? யோசனை கேட்டு ராஜ்குமாரிடம் வந்த பொழுது அவன் மூலம் இந்த அழைப்பு வந்தது.
நம்ம செல்வரத்தினத்து கிட்ட எனக்கு தெரிஞ்ச “நண்பரோட டாகுமெண்ட்” ஒண்ணு மாட்டிகிச்சு. கிட்டத்தட்ட இதுக்காக அவர்கிட்ட நாற்பது லட்சம் கொடுத்துட்டாரு. இருந்தாலும் அவர் இன்னும் பல லட்சம் கேட்டு நச்சிகிட்டுத்தான் இருக்காராம். அந்த “டாகுமெண்ட்” எங்கிருக்குதுங்கறது எல்லாம் அவருக்கு அத்துப்படி, ஏனா அவரு வீட்டுக்கு அடிக்கடி போயிட்டிருக்கற ஆளு.
அதை எடுத்து கொடுத்தா எவ்வளவு தருவாராம்?
அஞ்சு லட்சம் தர்றதுக்கு கூட தயாராத்தான் இருக்காரு.
செல்வரத்தினத்தின் பங்களாவை ஒட்டிய காம்பவுண்ட் அருகே நிறுத்தி காத்திருந்தான்.
காரில் உட்கார்ந்தவாறே செல்போனில் நேரம் பார்த்தான் ஒன்பதரையை காட்டியது.
நீ தாராளமாகவே உள்ளே போகலாம், செக்யூரிட்டி கூட உன்னை எதுவும் கேட்க மாட்டாரு, காரணம் செல்வரத்தினம் வீட்டுல இருபத்து நாலு மணி நேரமும் ஆளுக போயிட்டு வந்துட்டு இருப்பாங்க, அவரை பார்க்க வந்திருக்காங்களா? இல்லை அவர் சம்சாரத்தை பார்க்க வந்திருக்காங்களா? இப்படி நிறைய பேரு வர்றதால நீ உள்ளே போய் நார்மலா காத்திருக்கறமாதிரி இரு, அப்புறம் மெல்ல மாடிப்படியில ஏறரது உன்னுடைய சாமார்த்தியம், எல்லாம் முடிச்சுட்டு மறுபடி இங்கேயே வந்துடு, யாருக்கும் சந்தேகம் வராதமாதிரி நாம கிளம்பி போயிடுவோம்.
ராஜ்குமார் சொன்னது போலவே அவனை யாரும் கேள்வி கேட்கவில்லை, அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை பார்ப்பது போல பாவனை செய்து காத்திருந்தான்.
பத்து நிமிடத்தில் வேலை ஆட்கள் நடமாட்டம் குறைந்தது போல தெரிந்தது.
சந்தேகப்படாதவாறு மாடிப்படியில் ஏறியவன் ராஜ்குமார் சொல்லியிருந்தபடியே வலது புற இரண்டாவது அறையை அடைந்தான்.
கதவு திறந்திருக்கிறதா? தள்ளி பார்க்க அது சத்தமில்லாமல் திறந்தது. ஆனால் மிக குறைந்த வெளிச்சத்தில் ஒரு பல்ப் எரிந்து கொண்டிருந்தது. காலடி எடுத்து உள்ளே வந்தவன் குழம்பினான்.
அது படுக்கை அறை போல் இருந்தது. கட்டிலில் யாரோ படுத்திருப்பது போலவும் தெரிந்தது. கட்டிலின் கீழ் பக்கம் அந்த பல்ப் வெளிச்சம் வீசிக்கொண்டிருந்தது.
ராஜ்குமாரின் விளக்கத்தில் இது தடுமாற்றம் தர என்ன செய்யலாம் என திணறும் போது அந்த பீரோ அவன் கண்ணில் பட்டது. அப்படியானால் இது சரியாகத்தான் இருக்கிறது, ஆனால் படுக்கை இருக்கும் என்று சொல்லவில்லையே?
சரி இவ்வளவு தூரம் வந்து விட்டோம், மெல்ல அடி எடுத்து பீரோவை நோக்கி போனான். எதற்கும் ஒரு கண் படுக்கையில் படுத்திருக்கும் உருவத்தையும் நோட்டமிட்டு கொண்டுதான் இருந்தது. படுத்த உருவத்திடம் இருந்து எந்த அசைவுகளும் காணப்படாததால், அடி மேல் அடி எடுத்து பீரோவை நெருங்கினான்.
ராஜ்குமாரிடம் அந்த டாகுமெண்டை கையில் கொடுத்தான். பார்ட்டி அப்பொழுது உச்சத்தை தொட்டிருந்தது.
யார் யாரிடம் இருக்கிறார்கள் என்பதை அங்கிருக்கும் யாராலும் சொல்ல முடியாத நிலையில் இரு பாலாரும் இருந்தார்கள். ஆட்டம் பாட்டம் எதுவும் ஓயவில்லை. நேரம் நள்ளிரவு தாண்டி போயிருந்தது.
சரி நீ சொன்னபடி “டாகுமெண்டை” கொண்டு வந்து கொடுத்துட்டேன். பேசின தொகை எப்ப வரும்?
ராஜ்குமார் மோகனின் தோளை தட்டி, நாளைக்கு காலையில உன் படுக்கை யிலேயே பணம் இருக்கும், அதுக்கு நான் “காரண்டி”. சரி வா நாம் கிளம்பலாம் அவர்கள் இருவரும் எழ முயற்சிக்க…
போலீஸ் அதிகாரி ஒருவர் வேகமாக அவர்கள் இருக்குமிடத்தை நோக்கி வந்தார். ராஜ்குமாரும் மோகனும் திகைத்து நிற்க..!
செல்வரத்தினம் மனைவியை கடத்திட்டு போயிட்டீங்கன்னும், அவங்களை கொலை கூட பண்ணியிருக்கலாமுன்னு செல்வரத்தினம் உங்க மேல கம்பிளெயிண்ட் கொடுத்திருக்காரு.. போலீஸ் அதிகாரி மோகனின் தோள் மீது கை வைத்தார்.
கொலையா? நானா? நோ….
ஐ ஆம்.சாரி நீங்க ஸ்டேசன் வந்து பேசிக்குங்க,
ராஜ்குமார் சட்டென முன் வந்து இன்ஸ்பெக்டர் நீங்க தப்பான ஆளை புடிச்சிருக்கீங்க, நாங்க இரண்டு பேரும் இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தோம்.
அப்படியா? ஒன்பதுல இருந்து பனிரெண்டு வரைக்கும் அவர் இங்கதான் இருந்தாருன்னு நிருபிக்க முடியுமா?
அது வந்து வந்து தடுமாற,
போலாமா, வாங்க ஸ்டேசனுக்கு, மோகனை தள்ளாத குறையாக தள்ளி சென்றார்.
காவல் அலுவலகத்தில் மோகன் பல முறை சொல்லிவிட்டான். சார்
செல்வரத்தினம் மனைவியை நான் கூட்டிட்டு போகலை, அவங்க எங்கிருங்கான்னு எனக்கு தெரியாது. கொலையும் பண்ணலை.
அங்கிருக்கற “டாகுமெண்ட்” ஒன்னை எடுத்து வர்றதுக்காகத்தான் அங்க போனேன். அதை எடுத்து வந்தா “அஞ்சு லட்சம்” தர்றதா எங்களுக்குள்ள “டீலிங்” ப்ளீஸ் இதை புரிஞ்சுக்குங்க.
காவல் அதிகாரி சிரித்தார். அப்படியா, அப்படி உங்களுக்குள்ள “டீலிங்” பண்ணிகிட்டது யாரு?
அதை சொல்ல கூடாது சார் நட்பை காட்டி கொடுத்தது மாதிரி ஆயிடும்.
அப்ப உண்மையை சொல்ல மாட்டீங்கன்னா நீங்கதான் அவங்களை கொலை பண்ணியிருக்கங்கன்னு முடிவு பண்ணிக்க வேண்டியதுதான்.
மெல்ல தனக்கும் ராஜ்குமாருக்கும் ஏற்பாடு செதிருந்த ஒப்பந்தத்தை சொன்னான். இதுதான் சார் எங்க டீலிங், நான் சொன்ன வேலைய மட்டும்தான் செஞ்சேன், இப்ப என்னடான்னா கொலை அது இதுன்னு பயமுறுத்தறீங்க.
இருங்க ஒரு நிமிஷம், ராஜ்குமாரின் செல்போன் எண்னை வாங்கி அழைப்பு விடுத்தார். என்ன சார் உங்களுக்கும் மோகனுக்கும் என்ன டீலிங்?
டீலிங்கா, அப்படீன்னா? சார் அன்னைக்கு பார்ட்டியிலதான் ரொம்ப நாள் கழிச்சு சந்திச்சு பேசினோம், அவ்வளவுதான், அதனாலதான் நீங்க அவனை கைது பண்ண வந்தப்போ, நான் சப்போர்ட் பண்ணுனேன். மத்தபடி எனக்கும் அவனுக்கும் எந்த டீலிங் எதுவும் கிடையாது.
கேட்டீங்களா? மோகன், இதுக்கு என்ன சொல்றீங்க. அவங்களை எங்க கூட்டிட்டு போனீங்கன்னு சொல்லிடுங்க, இல்லை அவங்களை கொலை பண்ணீட்டீங்களா?
மரியாதையா நீங்க செஞ்ச கொலைய ஒத்துக்குங்க, இல்லையின்னா .வேற மாதிரி எங்களை ட்ரீட் பண்ணற மாதிரி வச்சிராதீங்க.
அதிர்ச்சியில் உறைந்து நின்றான் மோகன், அட துரோகி…
செல்வரத்தினம் ராஜ்குமாரை அணைத்து பாராட்டி கொண்டிருந்தார். “வெல்டன்”, அருமையா பிளான் பண்ணி அவனை சிக்க வச்சே, இந்த விஷயத்துல நான் “ஸ்கிரீனுக்கே” வரக்கூடாது நம்ம வக்கீல் ஐடியாவே ஐடியாதான், இந்தா முதல் தவணை உனக்கு அஞ்சு லட்சம், மிச்சத்த இந்த கேஸ் முடிஞ்சு அவந்தானு முடிவு வரட்டும் அப்ப கொடுக்கறேன்.
முகத்தில் ஒரு இளிப்புடன் பணத்தை வாங்கி சூட்கேசில் அடைத்தான் ராஜ்குமார்.
கதை இத்துடன் முடித்து விட்டது, மோகனின் விடுதலைக்காக அவன் நடத்தும் போராட்டத்தை அடுத்த அத்தியாயமாய் எழுத நமக்கு பொறுமையில்லை.
கதையை இப்படி முடித்து விடுவதால் வாசகர்களுக்கு ஒன்றும் வருத்தமிருக்காது என்று நினைக்கிறேன்.
நீங்கதான் செல்வரத்தினத்தோட மனைவிய எங்கேயோ கடத்திட்டு போய் கொலை பண்ணிட்டீங்கன்னு, செல்வரத்தினம் கம்பிளெயிண்ட் பண்ணியிருக்காரு ஒழுங்கா உண்மைய ஒத்துக்குங்க, இல்லையின்னா எங்க ட்ரீட் வேற மாதிரி இருக்கும்.
ஓ.கே சார், நான் அங்க போனதுனால அவரோட மனைவிய கூட்டிட்டு போய் கொன்னிருப்பேன்னு நீங்க சொல்றீங்க இல்லையா?
நான் அவங்க வீட்டுக்குள்ளே போயிட்டு எப்படி வந்தேன்னு சாட்சி வச்சிருக்கேன், அஞ்சு நிமிஷம் கொடுங்க, என் வக்கீலுக்கு போன் பண்ண அனுமதி கொடுங்க. அப்புறம் உங்களுக்கு உண்மை புரியும்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் மோகனின் வக்கீலுடன் செல்வரத்தினத்தின் மனைவியும் உடன் வருகிறாள்.
வணக்கம் சார், என்னைத்தான் கொலை பண்ணிட்டாருன்னு மோகனை அரெஸ்ட் பண்ணியிருக்கீங்க, ஆனா நான் உயிரோட வந்திருக்கேன்.
அப்படீன்னா செல்வரத்தினம் உங்களை இவரு கூட்டிட்டு போய் கொலை பண்ணிட்டாருன்னு……
அது எங்களுக்கு தெரியாது சார், நீங்க செல்வரத்தினத்து கிட்டத்தான் கேட்கணும். ஏன்னா அவர் கொஞ்ச நாளாவே என்னை கொல்லறதுக்கு முயற்சி பண்ணறாரொண்ணு எனக்கு சந்தேகம் இருந்துகிட்டே இருந்துச்சு.
எனக்கு மோகன் நல்ல பழக்கம். அன்னைக்கு இராத்திரி அவர் எங்க வீட்டுக்கு வந்ததும் உண்மை. பீரோவை திறந்து டாகுமெண்டை எடுத்ததும் உண்மை, அதுக்கு பின்னாடி என்ன நடந்துச்சுன்னா..!
டாகுமெண்டை எடுத்தவன் அந்த உருவம் படுத்திருந்த கட்டிலின் அருகே வந்து பிரமிளா, பிரமிளா..கிசு கிசுப்பாய் அழைத்தான்.
பயந்து வெளிறி கட்டிலின் அடியில் படுத்து கிடந்த பிரமிளா விறுக்கென்று வெளியே வந்தவள் “மோகன்” மோகன்” நீ சொன்னது சரியா போச்சு, இராத்திரி என்னை அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.
இப்பவெல்லாம் நான் இராத்திரி நிம்மதியா படுத்து தூங்கறதே இல்லை, அதுமட்டுமில்லை எப்பவுமே கட்டில் மேல படுக்கறதே இல்லை, கட்டில் மேல ஒரு பொம்மையை படுக்க வச்சுட்டு முன்னெச்சரிக்கையா கட்டிலுக்கு அடியிலதான் படுத்துக்குவேன்.
அப்படி படுத்துகிட்டிருந்தப்பத்தான், அரை மணி நேரம் முன்னாடி யாரோ ஒரு உருவம் உள்ள வர்றதை பார்த்தேன். அதுவும் நான் பூட்டி வச்சிருந்த கதவை திறந்து வர்றதை கட்டிலுக்கு அடியில இருந்து வந்தவன் காலை பார்த்தேன், அவன் நேரா இந்த கட்டிலுக்கிட்டே வந்தவன் சட்டுனு கையில இருந்த கத்தியில இரண்டு மூணு முறை குத்தறைதையும் பார்த்து அப்படியே பயத்துல இருந்தேன். நல்ல வேளை பின்னாடி யாரோ நடந்து வர்ற சத்தத்துல அந்த உருவம் திரும்பி ஓடறதையும் பார்த்துகிட்டிருந்தேன். அப்பத்தான் உன் காலையும் பார்த்தேன். நீ கட்டிலுகிட்ட வராம நேரா பீரோகிட்ட போகவும் தான் அது நீதானும் ஏற்கனவே நீ பீரோவில இருந்து டாகுமெண்ட் எடுக்க வர்றதையும் சொல்லியிருந்ததால எனக்கு தைரியம் வந்திருச்சு. இருந்தாலும் நீ என் கட்டிலுக்கு வர்ற வரைக்கும் காத்திருந்தேன்.
அவர் ஏன் உங்களை கொல்ல முயற்சி பண்ணனும்?
என் கிட்டே இருக்கற சொத்தை அடிக்கடி அவர் பேருக்கு மாத்தி கொடுக்க சொல்லி என் கிட்டே கேட்டுகிட்டே இருந்தாரு. நான் மறுத்துட்டேன். ஏன்னா நான் இவரை கல்யாணம் பண்ணிக்க விரும்பவே இல்லை. என் அப்பாவோட சகோதரி பையன் இவரு, ஒரே பையன் அப்படீங்கறதுனால அந்த சொத்தை வெளியில போக கூடாதுன்னு என்னை வற்புறுத்தி இவரை கல்யாணம் பண்ணி வச்சாரு.
எங்களுக்கிடையே எந்த விஷயமும் ஒத்து வந்ததே இல்லாததுனால அடிக்கடி சண்டை நடக்கும். உன்னாலதான் எனக்கு ரொம்ப சிரமம் அப்படீன்னு சொல்லிகிட்டே இருப்பாரு.
அப்பத்தான் மோகனை பார்த்தேன். அவர் இந்த டாகுமெண்ட் விவகாரத்தை சொன்னாரு. அன்னைக்கு இராத்திரி அந்த “இன்சிடெண்டுக்கு” அப்புறம் அவர் கூடவே கிளம்பி வெளியே வந்தேன். அப்ப கேட்டுல இருந்த செக்யூரிடிகிட்ட ஒரு செல்பிய எடுத்துட்டே வெளியே வந்தோம்.
மோகன் ராஜ்குமார் இந்த திட்டத்தை சொல்லும் போதே எனக்கு சந்தேகம், ஒரு டாகுமெண்ட் எடுத்துட்டு வர்ற விஷயம், ரொம்ப சாதாரணம், அதுக்கு அஞ்சு லட்சம் அப்படீங்கறது ரொம்ப பெரிய விஷயம், இதுக்கு பின்னாடி ஏதோ இருக்கணும்
இரண்டாவது செல்வரத்தினத்தோட மனைவி என்னோட சிநேகிதி, என் கூட படிச்சவ. அவ வீட்டுல டாகுமெண்ட் எடுக்கற விஷயத்தை அவகிட்டயே சொல்லி அவங்க என்ன செய்ய சொல்றாங்களோ அதை செய்வோம், யாராரெல்லாம் இதுல இருக்கறாங்கன்னும் கண்டு பிடிக்க நினைச்சோம்.
இன்ஸ்பெக்டர் இப்பவாவது என்னை நம்புறீங்களா ?
![]() |
பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. இலக்கிய அங்கீகாரம் 3. “குவிகம்” இலக்கிய…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
யாரைத்தான் நம்புவதோ…?!
வளர்கவி
August 16, 2026
நிழல் வாழ்வின் ரகசியம்: அதிர்வு 404
வேங்கடேஷ் புருஷோத்தம்
July 29, 2026
ஆழ்மனதின் சிறை
நவஶ்ரீ பரமகுரு
July 26, 2026
