யாரைத்தான் நம்புவதோ…?!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: August 16, 2026
பார்வையிட்டோர்: 19

அந்த ஸ்டேஷன் வாசலில் சந்தேகத்தின் பேரில் அழைத்து வரப்பட்டிருந்தார்கள் ரவுடி ரங்கனும், கத்திக்குத்துக் கந்தனும். முதல் நாள் நடந்த திருவிழாவில் பகதர்கள் அணிந்திருந்த நகைகள் களவு போனதற்காக சந்தேகத்தில் பிடித்துவரப்பட்டவர்கள்.
ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ஜாடையில் எதோ பேசிக்கொண்டிருக்க, ஏட்டு அதட்ட அடங்கிப்போனார்கள்.
டிவியில் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது. காட்டூர் கருப்பராயன் கோயிலுக்குள் கரடி நுழைந்து சாமிக்குப் படைத்திருந்த பழம் பொங்கலைத் தின்று போனதைக் காட்டிக் கொண்டிருக்கையில் கவனித்தான். கத்திக்குத்துக் கந்தன். மெல்ல அருகிலி நின்ற ரங்கனிடம் கேட்டான், நீயூஸை கவனிச்சயா???
கவனிச்சேன்!
என்ன கவனிச்சே?!
நீ என்ன கவனிச்சே சொல்லு?!
கருப்பராயன் கோயிலுக்கு கதவில்லை., திறந்த வெளி!. வாசலிலேயே உண்டியல் கருப்பராயன் என்பதால் பயந்து யாரும் உண்டியலில் இன்று வரை கைவைக்க வில்லை!. பொங்கல் தின்ன வந்த கரடி கூட உண்டியல் பக்கம் ஒதுங்காமல் படையலைத் தின்றுவிட்டு, வெளியே வந்து காட்டுக்குள் ஓடி ஒழிந்ததே? பார்த்தாயா?
ம்ம்ம் பார்த்தேன்.
என்ன முடிவு பண்ணீனே?!
இதுல முடிவு பண்ண என்ன இருக்கு?
டேய்! செய்யாத தப்புக்கு இழுத்துட்டு வந்துருக்கானுக..! வெளியில போனா.. தப்பு செய்யக் கடவுளா வழி காட்டியிருக்கார்.
நீ என்ன சொல்றே?!
ஒண்ணுமில்ல..! ராத்திரி கரடி வேஷம் போட்டுட்டு கோயிலுக்குள்ள நுழைஞ்சா உண்டியலைப் பேத்துட்டு வந்துடலாம். கருப்பராயன்கறதுனால யாரும் சடக்குன்னு ராத்திரி உள்ளே நுழைஞ்சிட மாட்டாங்க! அப்படியே நுழைஞ்சாலும், கரடியா நம்மைப் பார்த்தா பதறி அடிச்சு ஓடீருவானுக! திட்டம் ஓகேவா?
முடிவு செய்த படி, அடுத்த நாள் இரவு கந்தன் தான் மட்டும் கரடி வேஷம் போட்டுக்கிட்டு நள்ளிரவு ஒருமணிக்கு மேல் உள்ளே நுழைந்தான்.
மெல்ல கைக் கத்தியை எடுக்க உட்கார்ந்திருந்த கருப்பராயன் உருவிய வாளோடு உக்கிரமாய் எழ, கத்தியைக் கீழே போட்டு பதாறியடித்து பயத்தில் ஓடினான் கந்தன்.
நின்று நிதானமாய் உண்டியலைப் பேத்துக் கொண்டு, கருப்பராயன் வேஷமிட்டிருந்த ரங்கன் எதிர்திசையில் நடையை கட்டினான்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அன்புக்கு அடிமை!
மஞ்சுளா ரமேஷ் ஆரணி
August 13, 2026
படித்தவரும் படிக்காதவரும்
எஸ்.மதுரகவி
August 13, 2026
மறக்கப்பட்ட போட்டிக்கு AI கொடுத்த உயிர்
நஞ்சப்பன் ஈரோடு
August 10, 2026
