கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2026
பார்வையிட்டோர்: 37 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெர்ஹாம்பூருக்கு மாற்றினார்கள். விஜயவாடா விற்கு மாற்றினார்கள். காகிநாடாவிற்கு மாற்றினார்கள். ஆந்திர தேசமெல்லாம் சுற்றினோம். தமிழ் நாட்டிலும் ஊர் ஊராக மூட்டை கட்டிக்கொண்டு சென்றோம். எங்கே போனாலும் வாடகை வீடுகள். வாடகையை வாங்கிக்கொண்டு வீட்டைப் புறக்கணிக்கும் சொந்தக் காரர்கள் ஆயிரத்திற்கு ஆயிரம் பேர்கள். அன்பற்ற அந்நியர் கைகளில் அகப்பட்டுக்கொண்டு துன்புற்று, வெயிலிலும், மழையிலும் அடிபட்டு, வார்னீஷைக் கண்டு ஜன்மங்கள் ஆன கதவு ஜன்னல்கள், ஜீவன் மாத்திரம் மிகுந்திருக்கும் கிழவியையும் கிழவனையும்போல் நின்றிருக் கும். சுவரில் திட்டுத்திட்டாகச் சுண்ணாம்புகள் பெயர்ந்து. விழுந்து, அழுக்குடன் விகாரமாக இருக்கும். சாக்கடைகள் கட்டைத் துடைப்பங்களால் தேய்த்துத் தேய்த்துக் கழு வப்பட்டுக் குழிகள் ஏற்பட்டுத் தண்ணீர் தேங்கி நின்று, துர்க்கந்தம் வீசும்.

இதெல்லாம் பொறுத்தாகிவிட்டது. கண்ணுக்கு அழகாகவும், சற்றுச் சுத்தமாகவும் இருக்கும் ஒரு வீட்டில், சிலகாலம் வசித்துவிட்டு இந்த உயிரை விடவேண்டும் என்ற சபலம் மனத்தில் இருந்தது. அவ்விதம் செய்யா விட்டால் எனக்கு ஜடபரதர்போல் மீண்டும் மீண்டும் ஜன்மம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் என்று தோன் றியது. பென்ஷன் வாங்குமுன் ஒரு வருஷம் அவர் லீவு எடுத்துக்கொண்டார். “பென்ஷன் பணத்தை மொத்த மாக வாங்கி, ஒரு வீடு வாங்கிவிடவேண்டும்; சின்னதாக இருந்தாலும் போதும்” என்றேன்.

“பார்க்கலாம்” என்று அவர் எனக்கு அதிக ஆசை உண்டாக்காமல் முன் ஜாக்கிரதையுடன் சொன்னார்.

அவர் சொன்னதை வைத்துக்கொண்டு நான் சும்மா இருப்பேனா? தினமும் அவருக்கு ஒரு முறை ஞாபகப் படுத்தி, நச்சரித்ததுடன், நானாகவே விசாரிப்பது, பத்திரி கைகளின் விளம்பரங்களைப் பார்ப்பது, கன்டி ராக்டர் களைச் சின்ன வீடு கட்ட என்ன செலவாகும் என்று திட்டங்கள் கேட்பது-இம்மாதிரி செய்துவர ஆரம்பித் தேன். ஒரு தினம் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றைப் படித்து, அவருக்குக் காண்பித்தேன்:

“விரைவில் விற்பனைக்கு-புது வீடு; நகரத்தின் தூசி. ஓசை முதலியவற்றிலிருந்து தனிமையில் இருப்பது. சொந் தக்காரர் வேறு ஊர் போவதால் உடனே விற்பனைக்குக் கிடைக்கும்.”

“இங்கே காண்பி, பார்ப்போம்” என்று அவர் வாங்கிப் படித்தார். “புது வீடு என்று இருக்கிறதே. யுத்தத்திற்குப் பின் கட்டப்பட்டது என்றால் அசாத்திய விலை கேட்பார்களே!” என்றார்.

“புண்ணியம் உண்டு. தயவுசெய்து மலிவு என்ற காரணத்திற்காக ஒரு பழைய வீட்டை வாங்கி விடாதீர்கள்” என்றேன்.

“பழைய வீடு என்றால் என்ன? ரிபேர்களைச் சரியாகச் செய்தால் புது வீடு ஆகிவிடுகிறது” என்றார், வீட்டைப் பற்றின எங்களுடைய தினசரி தர்க்கம் ஆரம்பித்தது. ஒரு மணிநேரம் தர்க்கம் செய்த பிறகு இறுதியில் வீட் டைப் பார்த்து, விலையைக் கேட்டு வருவது என்று தீர்மா னித்தோம்.

பிற்பகல் ஒரு நண்பரின் வண்டியை இரவல் வாங்கிக் கொண்டு, காலையில் பத்திரிகையில் பார்த்த விலாசத்திற் குச் சென்றோம். புறப்படும் சமயம், அவர், கண்டிப்பான குரலில், “பத்துக்குள் இருந்தால்தான் என்னால் வாங்க முடியும். அதற்குமேல் ஒரு பைசாக்கூடக் கொடுக்க முடியாது” என்றார்.

“இந்தக் காலத்தில் இந்தப் பெரிய நகரத்தில் பத்தா யிரத்திற்கு ஒரு வீடு எப்படிக் கிடைக்கும்? ஒரே அறை தான் கிடைக்கும்” என்றேன். அவர் விடை எதுவும் சொல்லவில்லை. மௌனமாக இருந்தார். நல்ல வேளை! மறுபடியும் தர்க்கம் தொடங்கவில்லை என்று நன்றி செலுத்தினேன் இறைவனுக்கு.

நகரத்தின் நெருக்கமான தெருக்களைத் தாண்டி, வெளிச் சென்றோம். பாழ்மனைகள், சிறிய தோப்புகள், வயல்கள் தென்பட்டள. ஒரு கேட்டின் வாசலில் வண்டி நின்றது. உடைந்த கேட்டு; கம்பி கொண்டு கட்டப்பட் டிருந்தது. அதன்பேரில், ‘புது வீடு’ என்ற பெயர் புதிதாக வார்னிஷில் எழுதப்பட்டிருந்தது. கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்றோம். சுத்தமாகவும் மிகவும் ஒழுங்காகவும் இருந்த ஒரு சின்னத் தோட்டத்தின் நடுவில் சிறிய, மிக மிகச் சிறிய வீடு ஒன்று இருந்தது. அதை வீடு என்று சொல்வது சரியல்ல. குடிசை என்றே சொல்லலாம். வெளி வராந்தாவில் ஒரு சாய்வு நாற்காலியில் ஒருவர் படுத்து, ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் வருவதைப் பார்த்துவிட்டுப் புததகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தார். நல்ல உயரம், மிக வசீகரமான தோற்றம். சலவை செய்த வெள்ளை வேட்டியும் சட்டையும் தரித்திருந்தார்.

எங்களை அறிமுகப் படுத்திக்கொண்டோம். “வீட் டைக் காண்பிக்கிறேன்” என்று சொல்லி, உள்ளே அழைத்துச் சென்றார். ஒரே ஒரு பெரிய அறைதான் அந்த முழு வீடும். 25×40 அடி இருக்குமோ அல்லது சற்றுப் பெரிதாக இருக்குமோ தெரியாது. மேலே கூரை. இந்த அறை இரண்டாகத் தடுக்கப்பட்டு, ஒரு புறத்து அறையில் சாமான்கள். சிறிய கட்டில் முதலியன இருந்தன. மற்றொன்று உட்காரும் அறையாக, சில பிரம்பு நாற்காலி கள், எழுதும் சிறிய மேஜை. புத்தக அலமாரி இவை களுடன் இருந்தது. பின்புறம் சென்றோம். வாசற்புறம் போல் அந்தப்புறமும் ஒரு வராந்தா இருந்தது. அந்த வராந்தாவும் இரண்டாகத் தடுக்கப்பட்டு, ஒன்று ஸ்நான அறையாகவும் ஒன்று சமையல் அறையாகவும் செய்யப் பட்டிருந்தது. சமையலறையில் மிக மிகச் சௌகரிய வசதிகள்: நின்றவண்ணம் சமைக்கும் விதம் புகையில்லா அடுப்பு, அடுத்தாற்போல் தண்ணீர்த் தொட்டி, அம்மி, கல்லுரல், பண்டங்கள் தயார் செய்யும் மேடை, எதிர்ப் புறத்துச் சுவரில், அலமாரியில், பளபளவென்று சுத்தி செய்து அடுக்கப்பட்ட பாத்திரங்கள் எல்லாம் எனக்கு மிக்க சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தன. கப்பல்களில் சமையலறை முதலிய வசதிகள் மிக ஒழுங் காகவும் சிக்கனமாகவும் அமைக்கப்பட் டிருக்கும் என்று கேள்விப்பட் டிருக்கிறேன்; ஆனால் நேரில் பார்த்ததில்லை. இந்தச் சமையலறை மிக மிக வசீகரமானதாக. இதில் சமைக்க வேண்டுமென்ற ஆசையை உண்டாக்கிற்று. பாத்திரம் துலக்கும் மேடைக்குமேல் தண்ணீர்த் தொட்டி ஒன்று இருந்தது. அதில் குழாய் பதித்திருந்தது. அந்த மேடைமீது போட்டிருந்த கறுப்புச் சிமின்டைக் கையால் தடவிப் பார்த்தேன். எண்ணற்ற வெளி முற்றங்கள். துர்க்கந்தம் வீசும் சாக்கடைகளின் ஞாபகம் உண்டாயின.

வீட்டுக்காரர் ‘சிமின்ட் அல்ல’ என்றார், என் மனத்தில் இருப்பதை ஊகித்தவர்போல்.

“கடப்பைக் கல்லா?” என்றேன். கடப்பைக் கற்கள் சில சம்யம் உடைந்துவிடுகின்றன. கனமான பாத்திரங் கள் வைத்துத் துலக்க ஏற்றவை அல்ல.

“இல்லை. நல்ல கருங்கல். அதை ஷண்முகம் தாமே ‘பாலிஷ்’ செய்தார்.”

“யார் ஷண்முகம்?”

“இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்.”

“ஓ!”

இவர்தாம் சொந்தக்காரர் என்று நான் எண்ணி யிருந்தேன்.

சமையலறையை விட்டு வெளியே வந்து,ஸ்நான அறை யைப் பார்த்தோம். அங்கேயும் எல்லா வசதிகளும் மிக நாகரிகமாக இருந்தன. நான் இந்த இரண்டு அறைகளின் சௌகரியங்களைக் கண்டு மயங்கிவிட்டேன். இவ்வளவு குறைந்த செலவில் இவ்வளவு சௌகரியங்கள் செய்து கொள்ளக் கூடும், இவ்வளவு சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளலாம் என்று நான் நினைக்கவில்லை; கனவிலும் நினைக்கவே இல்லை! “பகவானே! அவர் இந்த வீட்டை வாங்கும்படி செய்யவேண்டும்” என்று மனத்தில் பிரார்த்தித்தேன்.

வீட்டைக் காண்பித்த ஆசாமி, எங்களை ஸ்நான அறையிலிருந்து அழைத்து வந்து, அந்த வீட்டிற்கு வெளி யில், பக்கத்தில் கட்டப்பட்டிருந்த மற்றொரு சிறிய அறை யைக் காண்பித்தார். “இது என்ன?” என்றேன். “அதிதி அறை” என்றார். நம்மவர்களுக்கு அதிதி அறை வழக்க மில்லையே! கூடச் சென்றோம். மிகச் சௌகரியமாகவும் சிக்கனமாகவும் கட்டப்பட்டிருந்த அதையும் பார்வை யிட்டோம். “மாட்டுக்கொட்டில்தானே?” இது என்று அவர் கேட்டார்.

“ஆமாம். மிகக்குறைந்த செலவில், ஷண்முகம் அதை ஓர் அறையாக மாற்றிவிட்டார்” என்று புன்சிரிப்புடன் கூறி, “இந்த அறையில் மிக மிகப் பெரிய அதிதிகள் தங்கி இருந்திருக்கிறார்கள். அமெரிக்க டி. வி. ஏ. அதிகாரி மார்க்கன், ஆக்ஸ்போர்டு புரொபஸர் எல்லிஸ் பார்க்கர் போன்றவர்கள் இதில் தங்கியிருக்கிறார்கள்” என்றார், அவ்வீட்டைக் காண்பித்தவர்.

“அட ராமா! ஷண்முகம் என்றது தேசீயக் கல்லூரி பிரின்ஸ்பால் டாக்டர் ஷண்முகத்தையா?” என்றார் என் கணவர் ஆச்சரியத்துடன்.

“ஆமாம், உங்களுக்கு அவரைத் தெரியுமா?”

“தெரியாது. ஆனால் அவருடைய பாண்டித்தியத் தைப்பற்றியும் அவருடைய தியாகத்தைப்பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அபாரத் திறமைசாலி தேசீயக் கல்லூரி, மிகக் கேவலமான நிலைமையில் இருந்த சமயம் அவர் அதற்குத் தலைவராக ஏற்பட்டு, அதை மிகவும் திருத்தி, முன்னணியில் நிற்கச் செய்தார் என்றார்களே; அவருக்குச் சம்பளம் நிறைய இருக்குமே! ஏன் இந்தக் குடிசையில் வசித்தார்?”

“முன்பெல்லாம் காலேஜ் ஹாஸ்டலிலேயே ஓர் அறையில் இருந்தார். ஆனால் கல்யாணம் ஆன பிறகு இங்கே வந்துவிட்டார். அவர் தமது சம்பளத்தில் முக்கால் பாகத்திற்குமேல் கல்லூரிக்கே திருப்பிக் கொடுத்து,நல்ல புத்திசாலிப் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் ஏற்படுத்தியிருந்தார். ஆகையால் அவருக்குச் சொந்தச் செலவுக்குப் பணம் மிகக் கொஞ்சந்தான் இருக்கும்.” இவ்விதம் சொன்னவண்ணம் அவர், எங்களை அழைத்துவந்து வாசல் வராந்தாவில் இருந்த வழுவழுப்பான திண்ணையில் உட்காரச் செய்தார். அவரும் தமது நாற்காலியில் உட்கார்ந்தார்.

“அவர் பிரம்மசாரி; எத்தனையோ பெண்கள் வந்ததை வேண்டாமென்று சொல்லிவிட்டார் என்றல்லவோ கேள்விப்பட்டேன்?” என்றார் என் கணவர்.

“ஆமாம். அப்படித்தான் இருந்தார். முப்பது வயதான பின் அவரைத் தொந்தரவு படுத்துவதைக்கூட நிறுத்தி விட்டார்கள்: நாற்பது வயதிற்குமேல் இந்தத் தொல்லை ஏற்பட்டது.”

“எந்தத் தொல்லை”? என்று நான் ஆவலாகக் கேட் டேன். கதைப் புத்தகங்கள் வாசித்து வாசித்துக் கற்பனை செய்வதில் எனக்கு அதிகப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஷண்முகத்தின் சம்சார வாழ்க்கையை நானே சித்திரிக்க முயன்றேன். ‘நாற்பது வருஷகாலம் கடுமையாக விரதம் புரிந்த அவருடைய மனத்தைக் கலைக்க ஒரு மேனகை ஏற் பட்டாள். அவள் எப்படி இருந்திருப்பாள்? மிக மிக அழகாக இருந்திருப்பாள். எங்கே அவளைச் சந்தித் திருப்பார்? ஒருகால் காலேஜ் காலேஜ் வாத்தியாரம்மாக்களில் ஒருத்தியோ? அவளிடம் இவருக்குத் தாங்கொணாக் காதல் ஏற்பட்டிருக்க வேண்டும். அவள்-இத்தனை அருமையான அறிவாளியை மணக்கும் அதிருஷ்டம் பெற்ற அந்தப் பெண்மணி- தனது பாக்கியத்தை எண்ணி நன்றி செலுத்தினாளோ? இராது. பெண்களுக்கு அத் தனை நன்றி சாதாரணமாக இருப்பதில்லை.’- இவ்வாறெல் லாம் எண்ணி, நான் பெருமூச்சுவிட்டேன். உண்மையில் இந்த விருத்தாந்தங்களை எங்களுக்குச் சொல்லி வந்தவருடைய வசீகரத் தோற்றத்தையும், ஷண்முகம் என்று இவர்கள் பேசிக் குறிப்பிடும் ஆளின் குணத்தையும் கலந்து இந்த இரண்டும் பெற்ற ஒரு கற்பனைப் புருஷனைப் பற்றியே நான் பெருமூச்சுவிட்டேன்.

“ஆஷாவின் தொல்லை; அவள் ஒரு வங்காளப் பெண்மணி. உணர்ச்சி நிறைந்தவள்; ஷண்முகத்தை விடமாட் டேன் என்றுவிட்டாள். ஷண்முகத்திற்குப் பிடிவாதம் உண்டு. ஆனால் அவள் இன்னும் அதிகப் பிடிவாதக்காரி. இவரை வென்றுவிட்டாள்.”

“எப்படி?”

“அவருடைய பிரம்மசரிய விரதத்திற்குப் பங்கமில்லாமல் நடந்துகொள்வதாகவும் அவர் சொல்வதை யெல்லாம் கேட்பதாகவும் வாக்களித்தாள்.”

“பாவம்!”

“யாருக்காகப் பாவம் என்று அநுதாபப்படுகிறாய்?” என்று என் கணவர் என்னைக் கேட்டார். அந்த வீட்டைக் காண்பித்தவரும் என்னைப் பரிகாசப் பார்வையுடன் பார்த்தார்.

“ஏன். அந்தப் பெண் ஆஷாவிற்காகத்தான். இந்த மாதிரி பயனற்ற காதல் கொண்டாளே என்றுதான்.”

“அப்படிச் சொல்லமுடியாது. ஷண்முகம் ஆசிரியர் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆஷாவைக் கல்யாணம் செய்துகொண்டு இந்த வீட்டிற்கு அழைத்துவந்தார்…”

“வீடா இது?” என்று என் கணவர் குறுக்கே கேட்டு வைத்தார்.

‘இல்லை. வீடு இல்லை. குடிசைதான். இதை ஷண்முகம் வாங்கின சமயம்’ இது இன்னும் மிகவும் கேவலமாக இருந்தது. வேலையாள் இல்லாமல் அவர்கள் இரண்டு பேருமே இதைச் சரி செய்தார்கள். பாதிக்கு மேற்பட்ட மரச்சாமான்கள், ஷண்முகம், தாமே செய்தவை. அவருக் குத் தச்சுவேலையில் அதிகப் பிரியம். வீட்டிற்குச் சுண் ணாம்பு அடித்தது, வர்ணம் பூசியது எல்லாம் அந்த அம் மாள். அதிதி அறையில், சுவரில் நீங்கள் பார்த்து, வியந்த சித்திரங்களெல்லாம் ஆஷாவின் வேலை. ஷண்முகம் அதி கமாகப் பேசுவார்: மனைவிக்குச் சதா லெக்சர் செய்து கொண்டே இருப்பார்…”

“பாவம் ஆஷா!” என்றேன் நான் மறுபடியும். எத்தனை ஆயிரம் பெண்கள் இம்மாதிரி தம் உள்ளம் முழுவதை யும் தாம் காதல் கொண்ட புருஷருக்கென்று அர்ப்பணம் செய்துவிட்டு, அடிமைபோல் உழைத்து, அதற்குக் கைம் மாறாக அவர்களின் ‘லெக்சர்’களைக் கேட்டுக் காலம் கழிக் கிறார்கள்! பெண்களிள் நிலைபற்றி என் உள்ளத்தில் பரி தாபம் நிறைந்திருந்தது.

“பாவம் என்ன? ஷண்முகத்தைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள். செய்துகொண்டு விட்டாள். இன்னும் என்ன வேணும்? உன் கற்பனைகளையெல்லாம் இங்கே வீணாக்காதே!” என்று என் கணவர் கூறிவிட்டு, என்ன விலை இந்த வீடு?” என்று கேட்டார்.

“விலை பற்றி யோசிக்காதே. ஆனால், வீட்டிற்கு வரு கிறவர்கள் இதன் அருமையை அறிந்து, இதை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆஷாவின் வேலைகளை அவர்கள் போற்றவேண்டும்” என்று ஷண்முகம் என்னி டம் சொல்லிவிட்டுப் போனார்.”

“ஒ, அப்படியானால் நாளடைவில் ஆஷாவின் அருமை அவருக்குத் தெரியவந்ததா?” என்று நான் கேட்டேன்.

“ஆஷா, சாதாரணப் பெண். அவ்வளவு புத்திசாலி யும் அல்ல. அதிகம் படித்தவளும் அல்ல. இயற்கையின் பெண் என்று என்று சொல்லலாம். அருமையாக அவளிடம், பக்தி ஒன்றுதான் இருந்தது. ஷண்முகம் அவளுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். வேதம், வேதாந்தம், தர்க்கம் எல்லாம்பற்றிப் பேசுவார். இந்த வீட்டிற்குப் ‘புது வீடு’ என்று ஆஷாதான் பெயர் வைத் தாள். தன்னை ஒவ்வொரு நாளும் மேன்மை பெறச் செய்து, ஈசுவரனின் வீட்டை அடைய இது வழிகாட்டும் என்பாள் அவள். தனது படிப்பை அவள் மிக ஆவலாக வும் பக்தியாகவும் ஏற்றுக்கொண்டாள்.”

“அவர்கள் இப்போது எங்கே?”

“ஏன் இந்த வீட்டை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்?”

“ஆஷா போனபிறகு, ஷண்முகம் இங்கே இருக்கப் பிடிக்காமல் போய்விட்டார்.”

“ஆஷா போய்விட்டாளா?”

“ஆமாம், மரிக்கவில்லை. வடக்கே போய்விட்டாள்; அகதிகளுக்கு வேலை செய்வதற்காக. அவளுக்கு நகையி லும் புடைவையிலும் அலங்காரத்திலும் இருந்த சப லத்தை எல்லாம் ஷண்முகம் மாற்றினார். அது அவருக்கே தீங்காய் முடிந்தது. நாளுக்கு நாள் வைராக்கியம் பெற்று வந்தாள் ஆஷா. ஒரு தினம் ஷண்முகத்திடம் சொல்லாம லேயே இரவில் புறப்பட்டுப் போய்விட்டாள்.”

“ஏன்? இவள், அவர் பேரில் கொண்டிருந்த அன்பு?”

“அகதிகள் கஷ்டப்படுகையில் இது என்ன சபலம் என்றும், இந்த வாழ்க்கை என்ன பயன் என்றும் அவ ளுக்குத் தோன்றிவிட்டது. இரண்டே வருஷத்திற்குமுன் ஷண்முகத்தை ஆஷா விடமாட்டேன் என்று தொந்தரவு செய்தாள். இந்த இரண்டு வருஷத்தில் அவள், ஷண்முகத்தைவிட அதிகப் பக்குவநிலை பெற்றுவிட்டாள். அகதிகளுக்கு உதவி செய்ய அவள் போகவேண்டும் என்ற போது, ஷண்முகம் அதன் நியாயத்தை ஏற்றுக்கொண் டாலும், அத்தனை தியாகம் செய்யத் தயாராக இல்லை. ஆஷா, கண்டிப்புடன் புறப்பட்டுப் போய்விட்டாள். இவர் இப்போது அவளின்றி வசிக்க முடியாமல் கஷ்டப் பட்டு விட்டு, அவளைத் தாமும் பின் தொடர்ந்து போய் விட்டார்” என்றார் அந்த மனிதர்.

“நீங்கள் யார்?”

“ஷண்முகத்தின் தம்பி நான். இந்த வீட்டைச் சரி யானவர்களுக்கு விற்கும்படி அண்ணா என்னிடம் சொன் னார். நீங்கள் இருவரும் வந்து வசிப்பதென்றால் எடுத்துக் கொள்ளலாம். இதன் விலையைக் கல்லூரிக்குக் கொடுக்கச் சொன்னார். ஷண்முகம் இதை மூவாயிரத்துக்கு வாங்கி னார். பிறகு மூன்றிற்குமேல் இதற்குச் செலவு செய்தார்’ என் கணவர் ஒன்றும் சொல்லவில்லை. தமது ஜேபியில் இருந்த செக் புத்தகத்தை எடுத்துப் பத்தாயிரத்துக்குச் ‘செக்’ ஒன்று எழுதிக் கொடுத்துவிட்டார்.

நாங்கள் இருவரும் மௌனமாக வீடு வந்தோம். தர்க்கம் செய்யவே இல்லை. அந்தப் ‘புது வீட்டில்’ நான் குடித்தனம் செய்யப்போவதை எண்ணினபோது எனக்கு மயிர்க்கூச்சு உண்டாயிற்று.

– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *