தின பலன்
கதையாசிரியர்: எம்.பாலமுரளி
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 6, 2026
பார்வையிட்டோர்: 112

பாலுவுக்கு காலையில் எழுந்தவுடன் காலண்டர் பார்ப்பது வழக்கம். தனது ராசிக்கான தின பலன் என்ன என்பதை பார்த்து விட்டுதான் பல் துலக்கவே செல்வான். பலன் நன்றாக இருந்தால் சந்தோஷமாக பல் துலக்க செல்வான். வேறு மாதிரி இருந்தால், நேராக பூஜை அறைக்கு போய் விபூதியை நெற்றியில் இட்டு கொண்டு பின்னாடி பல் துலக்க செல்வான்.
அவனுடைய அனுபவத்தில் நல்ல பலன் பலிப்பதை விட கெட்ட பலன் கண்டிப்பாக பலித்து விடுகிறது. அன்றைய தினம், பலன் ‘பகை’ என்று இருந்தது. என்னடா இது சோதனை. வேலையில் தினந்தோறும், யாராவது ஒருத்தனோடு சண்டை போடலனாதான் அதிசயம். பார்ப்போம் என்று அங்கலாய்த்து கொண்டே பல் விளக்க கிளம்பினான்.
காபி குடிக்கும் போது மனதுக்குள் ஒரு சங்கல்பம் செய்து கொண்டான்.
“இன்றைக்கு எந்த சூழ்நிலையிலும் யாருடனும் சண்டை போட மாட்டேன்”.
பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது ஒரு சத்தம்,
“ஏங்க, நீங்க ஒரு முட்டாள். எவனாவது பாத்ரூம்ல போய் காபி டம்ளரை வைப்பானா?”
முட்டாள் என்ற வார்த்தையை கேட்டவுடன் தலையில் சுர்ன்னு ஏறியது.
சங்கல்பம் ஞாபகம் வந்தவுடன், வந்த கோபத்தை அடக்கி கொண்டு,
“சாரிம்மா, ஏதோ ஒரு ஞாபகம், இந்தா இப்ப எடுத்து போய் சிங்க்ல வைச்சிடுறேன்” என்று டம்ளரை எடுத்து வைத்தான்.
அப்பாடி முதல் சோதனை தப்பியாயிற்று.
மனைவியுடன் பேசும் போது மிக கவனமாக பேசினான். பேச்சில் எவ்வளவு குழைய முடியுமோ அவ்வளவு குழைந்தான்.
“இன்னைக்கு என்ன அய்யா இவ்வளவு பிரியமா பேசுறீங்க, மழைதான் வர போகுது போங்க.” என்றாள் அவன் மனைவி.
ஆபிஸுக்கு போகும் வழியில் சரியான டிராபிக். வண்டியை வேகமாக ஓட்டாமல் மெதுவாக ஒட்டினான்.
“ஏய் சாவு கிராக்கி, மெதுவா ஒட்டனும்னா ஒரமா ஒட்டு. நடுவுல மறிச்சுகிட்டு ஒட்டுற. என்ன இது உங்க அப்பன் வீட்டு ரோடா. ஒதுங்கி போடா புறம் போக்கு” என்று திட்டி விட்டு போனான் ஆட்டோகாரன்.
அவனை மறித்து சண்டை போட வேண்டும் என் உடம்பு பரபரத்தது. அன்றைய சங்கல்பம், “திட்டுன்னா திட்டிட்டு போகட்டும். சாமி பார்த்துக்குவார்” என்று சமாதானபடுத்தியது.
ஆபிஸுக்கு போய் வண்டியை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்தினான்.
“சார், இன்னைக்கு இந்த இடத்துல ஒரு பங்ஷனுக்காக சாப்பாடு போட போறாங்க, வேற பக்கம் நிறுத்துங்க சார்” என்றான் வாட்ச் மேன்.
சுற்றி பார்த்தால் ஒரு இடம் கூட காலியாக இல்லை.
வாயில் நன்றாக வந்தது. அடக்கி கொண்டு “ சார், சாவிய தந்துட்டு போறேன். வண்டியை பார்க் பண்ணிட்டு சாவிய சீட்டுல கொண்டு வந்து கொடுத்துடுங்க” என்று சாத்வீகத்துடன் சொல்லி விட்டு அலுவலகத்தில் நுழைந்தான்.
நேரம் ஆகி விட்டது. அட்டடென்ஸ் போடனும் என்று மெஷினை பார்த்தால், எப்பொழுதும் ஆன் செய்யும் ஸப்-ஸடாப் லீவு. மெஷின் ஆப் ஆகி இருந்தது. என்னடா இது சோதனை என்று, “ ஸப்-ஸடாப் லீவுனா, வேற ஸப்-ஸடாப் போட மாட்டாங்களா. சொல்லுங்க சார்” என்று அமைதியாக மேனேஜர் கிட்டசொல்லிட்டு வேலை பார்க்க ஆரம்பித்தான்.
போன் மணி அடித்தது.
“பாலு, ஸ்டேட்மெண்ட் அனுப்ப சொல்லி, மெயில் மேல மெயில் அனுப்பிக்கிட்டே இருக்கோம், கொஞ்சம் கூட பொறுப்பில்லாம வேலை பார்க்குறிங்களே” என்று தன்மானத்தை தட்டி எழுப்பும் மேல் அலுவலகத்தின் உயர் அதிகாரியின் குரல்.
ஸ்டேட்மெண்ட் அனுப்பி இரண்டு நாள் ஆச்சு. இந்த ஆள் என்ன நினைச்சுகிட்டு இருக்கான். நல்லா நாலு கேள்வி கேட்கனும் என்று மனதில் நினைத்து கொண்டு,
“சார், ஸ்டேட்மெண்ட் அன்னைக்கே ரிப்ளை மெயில் அனுப்பிட்டேனே சார். டெலிவர் ஆகலையா? வேணுமின்னா, திருப்பி அனுப்பட்டா” என்று பணிவுடன் பதில் சொன்னான்.
“அட ஆமா, மெயில் வந்திருக்குப்பா. சாரிப்பா. வேற பிராஞ்ச்சுக்கு பதிலா, உன்னை கூப்பிட்டுடேன்.” என்று போனை கட் செய்தார்.
கோபத்தில் உடம்பு பூரா சூடாகி இருந்தது.
அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கியதில், மனது சிறிது சாந்தமாகி போனது.
டீ குடிக்க கேண்டினுக்கு போனான்.
“ஐய்யோ, குமார் உட்கார்ந்திருக்கானே, அவனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். இவன் இருக்கும் போது டீ குடிக்க போனா, நிச்சயம் சண்டை வரும். பேசாம திரும்பி போய் விடுவோம்” என்று திரும்ப எத்தனிக்கும் போது,
“பாலு சார், டீ குடிக்க வந்துட்டு சும்மா திரும்பி போனா எப்படி? நாங்க ஒன்னும் உங்க தலையில டீ செலவ ஏத்தமாட்டோம்” என்றார்கள் குமாரின் நண்பர்கள்.
நடப்பது நடக்கட்டும் என்று, உள்ளே போய் உட்கார்ந்தான்.
“வயசாகி போனா, ரிடையர் ஆகிடனும். சும்மா இன்னும் நடிக்க கூடாது” என்று வம்பை ஆரம்பித்தான் குமார்.
குமார் யாரை குறிப்பிடுகிறான் என பாலுவுக்கு தெரியும். பாலுவை கோப்படுத்த வேண்டுமென்றால் அவனுக்கு பிடித்த ஒரு நடிகரை விமர்சித்தால் போதும்.
அவனை சொன்னால் கூட கோபம் வராது. ஆனால் அந்த நடிகரை விமர்சனம் செய்தால் பழியாக கோபம் வரும். குமாருக்கு இவனை சீண்டி பார்ப்பதே வழக்கம்.
பாலு என்ன நினைத்தானோ தெரியவில்லை, “ சார் டீயை சீட்டுக்கு அனுப்பிடுங்கோ” என்று கிளம்பி விட்டான்.
ஒரு வழியாக அன்றைய தினத்தை யாருடனும் சண்டை போடாமல், வீடு போய் சேர்ந்தான்.
மனதில் தனது சங்கல்பத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய மகிழ்ச்சி.
“ஏங்க நீங்க ஒரு முட்டாள். காலண்டரில் இன்னைக்கு ஷிட்டையும் சேர்த்தா கிழிப்பீங்க.” என்ற மனைவியின் குரல்.
“ஐய்யோ, நாளைக்கு தின பலனையா பார்த்துட்டு போனேன்”. ஓடி போய் ஹாலில் இருக்கும் இன்னோரு காலண்டரை பார்த்தான்.
அன்றைய தின பலன் “வெற்றி”.
தொடர்புள்ள சிறுகதைகள்
கூகுள் குப்புசாமி…
யுவராஜ் சம்பத்
August 22, 2026
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026