ஜனனி…! ஜெயம் நீ…!
கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2026
பார்வையிட்டோர்: 73
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு வெளிப்புறம்;
குப்பைகளும் கழிவுகளும் ஏகமாய் இறைந்து கிடந்த கரடு முரடான பராமரிப்பற்ற சாலை.
துர்நாற்றம் நிரந்தரமாய் தங்கிவிட்ட, டீக்கடை முகப்பு;
பாய்லரில் இருந்து வரும் ஆவியும், தொடர்ந்து டீயை ஆற்றும்போதும்;
ஆற்றிய பின் வடிகட்டியை வளையத்தோடு சுற்றி, டவராவினால் அழுத்தி சக்கையில் தேங்கியிருக்கும் தேநீரைப் பிழியும்போதும்;
கொதிநீரை கண்ணாடி டம்ளருக்குள்ளும், வட்டா செட்டுக்குள்ளும் ஊற்றி, கழுவிக் கவிழ்க்கும்போதும், குபீர் என ஆவி புறப்பட்டு பரவும் அல்லவா. அந்த ஆவி, கடையினுள் புகுந்த தெருக்குப்பை நாற்றத்தை வெளியேற்றிவிடும்.
துர்நாற்றம் குறைவாக இருக்கும் என்பதால், கடைக்குள்ளே கூட்டம் அதிகமாய் இருக்கும்.
கடைக்கு வெளியே பிசுக்குப் பிடித்துப் போய்க் கிடக்கும் இரு பக்கக் கால்களையும் விரித்துக் கொண்டு நிற்கும் ஒரு விசி பலகை பெஞ்ச்சு.
தன்னை அந்த விசி பலகையில் அமர வைத்த அம்மா மங்கலாக நினைவுக்கு வந்தாள்;
ஒன்றரை ஒண்ணே முக்கால் வயது சிறுமியாக இருக்கும்போது நடைபெற்ற நிகழ்வுகள்தான் என்றாலும், அந்தச் சம்பவமும், அதற்குக் காரணமான முந்தைய நடப்புகளும், மனதில் ஆழப் பதிந்துதான் இருந்தன.
பிசுக்கு பிடித்த பெஞ்சில் அமர்ந்த தாய் மீதும், சேய் மீதும், சுற்றிச் சுற்றி வந்து எங்கு வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு மொய்த்தன ஈக்கள்.
குழந்தையான தன் மீது மொய்கும் ஈக்களை அம்மா கையை வீசி விரட்டுவதும், ஓட்டும்போது எழும்பி எழும்பி எட்டப் போவது போல பாவ்லா காட்டிவிட்டு, போன வேகத்தில் மீண்டும் வந்து அமர்ந்துமாய் போக்குக் காட்டின ஈக்கள்.
சுற்று வட்டாரத்தில் கிடந்த அத்தனைக் கழிவுகளிலும் அமர்ந்து மொய்த்த ஈக்கள் குழந்தை மேல் அமர்ந்து விடக்கூடாது என்பதற்காக, விடாமல் தொடர்ந்து ஒரு கையால் ஈ ஓட்டிக் கொண்டேயிருந்த அம்மா;
நடு நடுவே, டம்ளரில் இருந்து, டவராவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, வாயால் ஊதி ஊதி, ஆற்றி ஆற்றி, வாய் பொறுக்கும் சூட்டில் ஜனனியின் வாயில் புகட்ட,
தாயின் கையால் பொது இடத்தில்அவள் பருகிய முதல் தேநீர் நினைவில் நிழற்பட நொடிப்பெடுப்பாய்த் (ஸ்நாப் ஷாட்) தோன்றி, நெகிழ்வித்தது ஜனனியை.
அப்படித் தன் பசியைத் தீர்த்த அம்மாவை, ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வைத்த தருணத்தை நினைத்து நினைத்து நெகிழ்ந்தாள் ஜனனி.
ஆராய்ச்சி மாணவியான தன்னுடைய ஆராய்ச்சி முடிவுளை, கைடு (வழிகாட்டி) உட்பட , திருட எத்தனித்த பலரைத் தோலுரித்து, தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய மார்த்தாண்டத்திற்கும் இந்தநேரத்தில்,மனம் குவித்து நன்றி தெரிவித்தாள் ஜனனி.
“இந்தப் பயித்தியத்தையெல்லாம் கட்டிக்கிட்டு என்னால மாரடிக்க முடியாது… நீயே கட்டிக்கிட்டு அழு…”
‘மன நல மருத்துவர், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவரிடம் ஆலோசனை பெற தங்கள் குழந்தைகளுடன் வந்த மற்ற மற்றப் பார்வையாளர்கள், எல்லோரும் சுற்றிலும் இருக்கிறார்கள்…!’ என்பதையெல்லாம் சிறிதும், கருத்தில் கொள்ளாமல், அவர்களின் எதிரிலேயே அநாகரீகமாய்க் கூச்சலிட்ட கசப்பான நிகழ்வு தொடங்கி…
‘மனநலக் காப்பக வளாகத்தில், ஒன்றரை வயதுக் குழந்தையுடன் அபலையாய் தவிக்கவிட்டுச் சென்ற கணவனின் இழி செயலை எத்தனை ஆயிரம் முறை தன்னிடம் கூறியிருப்பாள் அம்மா.’
இதைச் சொல்லும்போது அம்மாவின் ரத்தக் கொதிப்புதான் எத்தனை ஏறும்…?
“எந்தப் பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது ஜனனி…!”
ஓரளவு விவரம் தெரிந்தபின் தன்னிடம் பேசிய அம்மாவின் பேச்சில்தான் எவ்வளவு ஆதங்கம் இருக்கும்…!’
“அப்பா என்கிற அந்தக் கிராதகப் பேர்வழிக்குப் பிறகு, எல்லா ஆண்களின் மீதும் ஜனனிக்கு வெறுப்புதான் இருந்தது.
ஒரு கால கட்டம் வரை, ஆண்களைக் கண்டாலே அடியோடு வெறுத்தவள்தான் ஜனனி.
ஒரு கட்டத்தில், தியாகத்துடன் கூடிய, பாசத்துடன் கூடிய, நேர்மையான நட்பு இயல்பாய் மலர, எந்த இடத்திலும் உரிமை எடுத்துக் கொள்ளாமல் பழகிய, மார்த்தாண்டத்தின் கன்னியமான பழக்க வழக்கங்கள் ஜனனிக்குள் நம்பிக்கையை விதைத்தன.
‘இதோ இன்றளவும் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகத்தான் இருக்கிறார் அவர்.’
நினைத்த போதே ஜனனிக்குள் இனம் புரியாத பரவசம் நிரம்பியது.
கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு வெளிப்புறம் இருந்த தேநீரகத்தின் முன் கிடத்தப்பட்ட விசி பலகையில் உட்கார்ந்து, ஈக்களை ஓட்டியபடியே குழந்தை ஜனனிக்கு தேநீர் பருகக் கொடுத்துப் பசியாற்றிய பின் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானாள் வஸந்தா.
மனதில் உறுதி இருந்ததால், எதிர் காலம் பற்றியோ, ‘எங்கே செல்வது?’ என்பதைப் பற்றியோ குழப்பமெல்லாம் வஸந்தாவுக்கு இல்லை.
‘பிறந்த வீட்டுடோடு சென்றுவிடுவது. அங்யேயே செட்டில் ஆகிவிடுவது என்று முடிவு செய்துவிட்ட வஸந்தா, கணவன் வீட்டிலிருந்து ஏதேனும் எடுத்துக் கொள்ள வேண்டுமா…?’ என்பதை யோசித்தாள்.
‘குழந்தை ஜனனி விஷயத்தில் இன்னும் ஓராண்டுக்கு முன்பே இப்படி ஒரு அதிரடியான முடிவை எடுக்காமல் இருந்து விட்டோமே…!’, என்று தன்னிரக்கம் வந்தாலும்.
“லேட் ஈஸ் பெட்டர் தேன் நெவர்’ என்ற ஞானமும் வந்தது அவளுக்கு.
நடந்தவை எல்லாமே ஏதோ நல்லவற்றிற்குத்தான் என்ற முடிவுக்கு வந்தாள் வஸந்தா. எது கற்றுக் கொடுக்கப்பட்டதோ அது தானே சுயமாய் எழும்.
பிறந்த வீட்டில் அடங்கிப் போகத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. தடாலடியாக முடிவு எடுக்கும் துணிச்சல் இல்லாததால் இதுவரை எப்படி எப்படியோ போய் விட்டது.
கடந்த காலத் தவறுகளை நினைத்து வருந்துவதால் எதுவும் ஆகப் போவது இல்லை. ஜனனியின் வளமான வருங்காலத்திற்காக, நிகழ்காலத்தை சிறப்பாகத் திட்டமிட வேண்டும் என்ற மன உறுதியோடு புறப்பட ஆயத்தமானாள்.
“இதுக்கு மேலயும் மறுபடியும் நீ போய் அந்தக் கேடு கெட்டவனோடயா குடித்தனம் பண்ண போற?” – வஸந்தாவின் முகத்தருகே குனிந்து, பளிச் என்று கேள்வி எழுப்பினாள் ஒரு மூதாட்டி.
மன நல மருத்துவரின் முன்னே, அநாகரிகமான முறையில் கத்திய ராஜேந்திரனின் நடவடிக்கைகளை பார்த்து, அந்தக் கத்தலை காதில் வாங்கி முகம் சுழித்த மூதாட்டிதான் அவள்.
பெண்ணீயத்தின் போர்வாளாய் அந்த மூதாட்டியை அடையாளம் கண்டாள் வஸந்தா.
அந்த மூதாட்டியின் கேள்வி, வஸந்தாவுடைய வைராக்கியத்தின் விழுக்காட்டை நூறுக்கு மேல் உயர்த்தியது.
நிராதரவான நிலையில், நிரந்தரமாக, பெற்றோரின் வீட்டுக்கு செல்வதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்னென்ன?’ என்பதை இப்போது தெளிவாக யோசித்துப் பட்டியலிட்டாள் வஸந்தா.
படித்தவள் அல்லவா.
தெளிவாக அனைத்து கோணங்களையும், அலசி ஆராய்ந்தாள்.
பல்வேறு எதிர் விளைவுகள் பற்றிய முழுப் புரிதலும் அவளிடம் இருந்ததால், எதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்ற விடையும் அவளிடம் இருந்தது.
கணவன் வீட்டிற்குச் செல்வதற்கான காரணம் ஏதாவது உள்ளதா என்பதை ஒவ்வொரு விஷயமாக எடுத்துக் கொண்டு கூர்ந்தாய்வு செய்தாள்?’.
வஸந்தாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மாப்பிள்ளை வீட்டார் சிறுகுடி கிராமத்தில் வஸந்தாவின் வீட்டில் குழுமியிருக்கிறார்கள்.
ஊர்க்காரர்கள் பலர் வந்திருக்கிறார்கள்.
லக்ன பத்திரிகை வாசிக்கப் படுகிறது. நிச்சயம் முடிந்து விட்டது.
திருமணத்துக்கும் நாள் குறித்து விட்டார்கள்..
அப்போது, வஸந்தாவின் மாமியாராக வரப்போகிறவள் எழுகிறார்.
“உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளா வந்த பிறகு, எந்த வேலைக்கும் செல்லத் தேவை இல்லை … ” கண்டிப்பாகச் சொல்கிறாள்.
மற்றவர்களும், மாப்பிள்ளை ராஜேந்திரன் உட்பட “அவங்க சொல்றதுதான் சரி…” என்று ஆமோதித்தார்கள்
எந்த நோக்கத்திற்காக அப்படிச் சொன்னார்களோ தெரியவில்லை.
அவர்கள் அப்படிச் சொல்லி விட்டதாலும், அதை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதால், தானும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்ததாலும், தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் எதையுமே புகுந்த வீட்டிற்குக் கொண்டு செல்லவில்லை வஸந்தா.
அதற்காக அவள் என்றுமே வருத்தப்பட்டதுமில்லை.
அனைத்துச் சான்றிதழ்களும் பிறந்தகத்தில் அப்பாவின் ட்ரங்க் பெட்டியிலேயே இருப்பது, தற்போதைய சூழ்நிலையில் அனுகூலமாகத்தான் இருக்கிறது;
எதிர் காலத்தில் எதிலாவது காலூன்ற, படித்த சான்றிதழ்களை எடுத்துக் கொள்ள வேண்டுமே என்பதற்காக அங்கே செல்லவேண்டிய கட்டாயம் இல்லை;
அடுத்து…
நகை நட்டுக்கள் பற்றி யோசித்தாள்.
திருமணத்தின் போது அம்மா வீட்டில் போட்ட மூன்று சவரன் சங்கிலியும் தாலிக்கொடியும் கழுத்தில் தான் இருக்கிறது. மாமியார் வீட்டில் போட்ட நகைகள் எல்லாம், அவர் பணியாற்றும் வங்கியிலேயே அவர் பெயரில் உள்ள வங்கி லாக்கரில் இருக்கிறது.
எனவே அதுவும் ரூல்ட் அவுட்;
மருத்துவ மனையின் விதிகளின்படி மனநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயரைப் பதிவு செய்வதற்கு, அவசியம் எடுத்து வரவேண்டிய ஆவணங்கள் பட்டியலில், ஆதார் குறிப்பிடப்பட்டிருந்ததால், தன்னுடையதும், குழந்தையுடையதுமான ஆதார் அட்டையும் கூட கையில்தான் இருக்கிறது. பெரிய ரிலீஃப்;
அடுத்து உடுப்புகள் பற்றி யோசித்தாள்.
புடவைகள் எல்லாம் பெரும்பாலும் மாமியார் வீட்டில் கணவன் பணத்தில் வாங்கி கொடுத்ததுதான்.
திருமணத்தின் போது அம்மா வாங்கிக் கொடுத்த ஒரு சில பழைய புடவைகளை எடுத்துக்கொள்ள அங்கே சென்று திரும்ப வேண்டிய அவசியம் இல்லை.
குழந்தையின் பொக்கிஷங்கள் என்று அங்கு ஏதுமில்லை…
அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்தபின் தெளிவாக முடிவெடுத்தாள் வஸந்தா.
ஜனனியை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தாள்.
“அப்பா அம்மாவிடம் நிரந்தரமா இங்கேதான் இருக்கப்போறேன்…” என்று ஜனனியோடு போய் நின்றால்…
அவர்கள் எப்படியெல்லாம் ரியாக்ட் செய்வார்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்து, எதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதையும் மனத்தளவில் திட்டமிட்டுக் கொண்டாள் வஸந்தா.
அத்தியாயம் – 5
“வஸந்தா… என்னடீ சொல்றே?” அம்மா பெரிதாகக் கத்தியே விட்டாள்.
“கத்தாதே…!” என்று அடக்கவில்லை வஸந்தா.
‘எதிர் பாராத ஷாக் வரும்போது, அதை எதிர் கொள்ள இப்படிக் கத்துதல் ஒரு பாதுகாப்பு வழிமுறைதான்.
கத்தட்டும் என்று விட்டாள்.
“இப்படி வாழாவெட்டியா வந்து இங்க ஒக்காரத்தான் உனக்குக் கல்யாணம் செஞ்சி வெச்சிதா. போதாததுக்கு கையில ஒரு பொண்குழந்தையுமாச்சு. உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிப் போச்சு… வீடுன்னா அப்படி இப்படித்தான் இருக்கும். அதுக்காக இப்படி அறுத்துக் கட்டுவாங்களா… குளிச்சி முழுகி சாப்பிட்டு ரெடியாகு. அப்பா வயல்லேந்து வந்ததும் உன்னை கொண்டு போய் புருஷன் கைல ஒப்படைக்கச் சொல்றேன்.”
அம்மா நீளமாகப் கத்திப் புலம்பிவிட்டு ஒரு வழியாக முடிவும் எடுத்துவிட்டாள்.
‘பதிலுக்குக் கத்துவதால் எந்தப் பயனும் இல்லை. நிலைமையை தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். ஜனனிக்கு இருக்கும் குறைபாட்டைப் பற்றியும் அந்தக் குறைபாட்டை, இங்கே கிராமத்தில் வயலும் விவசாயமும் இருக்கும் இடத்தில்தான் தீர்க்க முடியும். என்பதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.’
அதற்கான வழி முறைகளையும் அணுகு முறையைம் தனக்குள்ளே வகுத்துக் கொண்டாள்.
“என்னாடி, கல்லுளி மங்கியாட்டம் கம்ம்முனு இருக்கே…?”
போரை மீண்டும் தொடங்கினாள் அம்மா.
“அம்மா, பேத்திக்கு ஏதாவது வவுத்துக்குக் குடு, காலைலேந்து ஒரே ஒரு டீ மட்டும்தான் வாங்கிக் கொடுத்தேன் அவளுக்கு.” இயல்பாகப் பேசினாள் வஸந்தா.
சோர்வாய் கண்மூடிக் கிடந்த பேத்தியை அள்ளி எடுத்து தோளில் போட்டுக் கொண்டு, அடுப்பங்கரையை நோக்கிச் சென்றாள்.
பரும்பும் ரசமும் நெய்யும் ஊற்றி மசியப் பிசைந்து குழந்தைக்கு ஊட்டினாள் பாட்டி.
“அம்மா, நீ பாப்பாவப் பாத்துக்க, நான் வயலுக்குப் போயி அப்பாவை பார்த்துப் பேசிட்டு வரேன்…” என்று வஸந்தா சொல்ல,
“வயலுக்கா… நானும் வரேம்மா…” என்று மழலையில் மிழற்றினாள் ஜனனி.
“சரி சரி நீ மம்மு சாப்டு. அழைச்சிக்கிட்டுப் போறேன்.” என்று ஜனனியிடம் சொல்லிவிட்டு, பின் கட்டுக்குச் சென்று குளித்துவிட்டு வந்தாள்.
வஸந்தா குளித்து விட்டு உள்ளே வந்தபோது ஜனனி உண்ட களைப்பில் தூங்கத் தொடங்கியிருந்தாள்.
பெண் என்பவள் பூமித்தாய் போலத்தான். எத்தனை பாரத்தையும் பொறுத்துத் போகக்கூடியவள்தான். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா. எல்லை மீறி பாரம் ஏற்றும் போது பூகம்பமாய் வெடித்து விடுவாள்.
அன்பைப் போலவே பெண்ணின் வெறுப்பும் மிக ஆழமானது. தன்னை நேசிப்பவர்கள், உரிய காரணங்களுக்காக எட்டி உதைத்தாலும் ஏற்றுக் கொள்வாள். ஆனால் அர்த்தமற்ற ஆணாதிக்கப் போக்கினால், அடிமனதில் கசந்து வெறுத்து விலக்கிவிட்டால், கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் எற்க மாட்டாள்.
அடிமனதில் கசந்துவிட்டது வஸந்தாவிற்கு.
‘உன் புருஷன்’ என்று அம்மா சொல்வது அறவே பிடிக்கவில்லை வஸந்தாவிற்கு.
இருந்தாலும், ‘நானும் என் மகள் இது போல வந்து நின்றால் முதலில் இப்படித்தானே எதிர்வினையாற்றத் தோன்றும்.’ என்று தனக்குள் பார்த்துக் கொண்டாள்.
அம்மாவிடம் பொறுமையாக, விவரமாக அனைத்தையும் சொன்னால் நிச்சயம் தன் முடிவை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருந்தது வஸந்தாவிற்கு. நான் தவறிழைத்து விட்டேன் என்ற முன் முடிவோடு இருக்கும் அம்மாவிடம், இப்போது எந்த நியாயமும் எடுபடாது என்பதை தெளிவாக உணர்ந்தாள் வஸந்தா.
“அம்மா எனக்கும் சாப்பிட ஏதாவது குடேன்.”
“நீ வரப்போறேனு தகவல் தந்திருந்தா தடபுடலா சமைச்சிருப்பேன். நாங்க ரெண்டு பேருதானேனு ஏனோதானோனு சமைச்சிருக்கேன். வா சாப்புடு. என்று துவையல் வைத்து சாதம் பரிமாறினாள்.
காலை முதல் அலைந்த அலைச்சலால் சோர்வாகி விட்ட ஜனனி பாட்டியின் கையால் வயிறார உண்டபின் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
அம்மாவின் கையால் பரிமாறப்பட்ட துவையல் சாதத்தை, சாப்பிடும்போது வஸந்தாவுக்குள் எந்த குற்ற உணர்வும் இல்லை.
“ஏண்டீ, தாலி கட்டின புருசனை உதறி எறிஞ்சிட்டு வந்துட்டமேனு கொஞ்சமும் லஜ்ஜையே இல்லாம, ரசிச்சி ருசிச்சி சாப்பிடறயே, எப்பிட்ரீ உன்னால் முடியுது.” அம்மாவின் கண் கலங்கியது.
சாப்பாடு போட்டுவிட்டு கண்ணீர்விடுவது தவறு என்பதை உணர்ந்தாளோ என்னவோ, முந்தானைணால் கண்களை ஒற்றிக் கொண்டே, சமையலறைக்குள் புகுந்து விட்டாள் அம்மா.
சற்றைக்கெல்லாம் தட்டில் சாதத்தோடு வந்தாள்.
“ரசம் சாதம் சாப்ட்டுட்டு அப்பறம் மோர் போட்டுக்கோ…” என்றாள் அம்மா.
அம்மா, கஷ்டப்பட்டு, தான் இயல்பு நிலையில் இருப்பதாய்க் காட்டிக் கொண்டதை அப்பட்டமாக உணர முடிந்தது வஸந்தாவால்.
“அம்மா வயல் வரைக்கும் போயிட்டு வந்துர்றேன். குழந்தை தூங்கட்டும்.” என்றாள் வஸந்தா.
“இப்போ எதுக்கு வயலுக்கு? அப்பாவே இன்னும் அரை மணி ஒரு மணி நேரத்துல வந்துடுவாரு… அப்பா வர்ற வரைக்கும் ரெஸ்ட் எடு. வந்ததும் அவருக்கு சீக்கிரமா வயித்தை ரொப்பி கிளப்பி விடறேன். காலா காலத்துல உன் வூடு போய் சேருவியாம்…” என்று அம்மா, தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாள்.
கணவன் நிகழ் காலத்தில் அனுசரணையாக இருந்துவிட்டால், கடந்த காலத் தவறுகள் அனைத்தையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதுதான் பெண்ணினத்தின் பெருந்தன்மை.
எத்தனையோ இக்கட்டான, கரடுமுரடான சூழ்நிலைகளையெல்லாம், இதுவும் கடந்து போகும் என கடந்து வந்தவள்தான் வஸந்தா.
திருமணமாகி, ஜனனி பிறந்த பின் இன்று வரை வேறு வழியின்றி, அமைதியாக, பொறுத்துக் கொண்டு இருந்த வஸந்தா ‘பொறுத்தது போதும் பொங்கி எழு!’ என்பதாய், துணிந்து சுயமாக ஒரு முடிவெடுத்தாள்.
“கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்துக்கு, ஜனனிய இப்போ அழைச்சிக்கிட்டுப் போகப்போறேன்…” முதல் முறையாக கணவன் ராஜேந்திரனிடம் உறுதியாக அறிவித்தாள்.
“அதெல்லாம் தேவையில்லை… டாக்டரும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்…” என்று சொல்லி, வழக்கம் போல ராஜேந்திரன். மனைவியின் பேச்சை அலட்சியப் படுத்தினான்.
“ஸாரி, இவ்ளோ நாள் உங்க பேச்சைக் கேட்டது போறும். டாக்டர் கிட்டே அழைச்சிக்கிட்டு போகணும் முடிவு பண்ணியாச்சு. நீங்க வர முடிஞ்சா ஒரு அப்பாவா கூட வாங்க. இஷ்டமில்லேன்னா வரவேண்டாம்.”
முதல் முறையாக வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று அறுத்துக் கட்டிப் பேசினாள்.
“யாரைக் கேட்டு முடிவெடுத்தே…?” சீறினான்.
“பத்து மாசம் சுமந்து பெத்த என் மகளுக்கு வைத்தியம் பார்க்கப் போறதுக்கு யாரைக் கேக்கணும்…?”
“என்னை மீறிப் போயிருவியா நீ?” மிரட்டல் தொனியில் கேட்டான்.
“போவேன்…!’ குரலில் உறுதி இருந்தது
இதுநாள் வரை அடங்கிப் பேசிய வஸந்தாவா இவள். இன்று இந்த அளவுக்கு எதிர்த்து வாயாடுறாளே? யார் கொடுத்த தைரியம் இது? இவளை இப்படியே விடக்கூடாது, முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடணும்’ என்ற எண்ணம் வலுத்தது ராஜேந்திரனுக்கு.
“என்னடீ சொல்றே…?” இடிபோல் முழங்கிக் கத்தினான்.
“போவத்தான் போவேன்… உங்களால முடிஞ்சதப் பார்த்துக்கிடுங்க’னு சொல்றேன்…”
அடிபட்ட சிறுத்தையாய் சீறினான் ராஜேந்திரன்.
சீற்றத்தின் பிரதிபலிப்பாய் வன்முறை வெடித்தது. ராஜேந்திரனின் கை ஓங்கியது.
தன்னை அடிக்க ஓங்கிய கையை இறுக்கமாய்ப் பற்றினாள் வஸந்தா.
தொண்ணூறு சதவீத ஆண்கள், பெண்ணை அடக்கி ஆள நினைக்கிறவர்கள்தான்.
காரணம், முந்தைய தலைமுறையினரின் வளர்ப்பு முறை.
அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமே ஆணாதிக்க மனப்பான்மையில்தானே…!
“அவன் ஆம்பளை… சிங்கம்…”
“ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை…”
“பொம்பளைப் புள்ளை நீ கொஞ்சம் அடக்கிதான் வாசிக்கணும்.”
“இன்னொரு வீட்டுக்குப் போறவ நீ. வாயாடாதே…”
என்ற ரீதியில், பெற்றோர்களாலும் பெரியோர்களாலும் எழுப்பப்படும் பேதங்கள்தானே என்றென்றும் பெண்ணிணத்திற்குப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இது போன்ற சவால்களை மிகச் சாதுர்யமாக எதிர் கொள்ளும் பெண் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெறுகிறாள்.
அதை அசட்டுத் தனமாக அணுகும் பெண் அடையாளம் இழந்துவிடுகிறாள்.
‘கணவனே கண் கண்ட தெய்வம்’;
‘கல்லானாலும் கணவன்…’;
இது போன்ற சொல்லாடல்கள் எல்லாம் அணுகுமுறையின் மேன்மையால் கருத்தாழமிக்கவைதான்.
அதையே கண்மூடித் தனமாகப் பின்பற்றும்போது அர்த்தமற்றதாகி விடுகிறது.
கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பரம் ஏற்படும் புரிதல்;
ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருத்தல்;
தனக்கென வாழாமல், மனைவிக்கென கணவனும், கணவனுக்கென மனைவியும் வாழ்ந்த காலத்தில், பெண்ணிணம் உணர்ச்சி வசப்பட்டு முழங்கிய வாசகங்கள் அவை;
இன்றும், என்றும் அதுபோல இணையர்கள் பரவலாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்றென்றும் இருக்கவும் செய்வார்கள்.
ஆணாதிக்கம் போலக் தோற்றமளிக்கும், சில வாசகங்களை மேம்போக்காகப் பார்த்துவிட்டோ, நுனிப்புல் மேயும் விதமாகவோ, பெண்ணை அடக்க வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள் பெரும்பான்மையான ஆண்கள்.
என்னதான் படித்திருந்தாலும், பட்டங்கள் பெற்றிருந்தாலும், சராசரி ஆண்கள் ஆணாதிக்க மனப்பான்மையில் குடும்பத்தை அணுகும்போது, சிக்கல்களைத்தான் சந்திக்க நேர்கிறது.
வருடக் கணக்காய் அடங்கி வாழ்ந்து வந்த வஸந்தாவின் மாற்றம் ராஜேந்திரனை யோசிக்க வைத்தது.
அவளின் தற்போதைய போர் குணமிக்க சீற்றமான, அணுகுமுறையைக் கண்டு ராஜேந்திரன் முதன் முறையாக மிரண்டான்.
‘சாது மிரண்டு எழுந்து விட்டது. காடு கொள்ளாது…’ என்பதை அவன் உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்திவிட்டது.
‘அடங்க மறு’த்த வஸந்தாவை எதிர் கொள்ள முடியாமல் திணறினான், ‘அத்து மீறு’வதற்குள் சுதாரித்தான்
“வந்துத் தொலையறேன்… இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்…!” உறுமினான்.
வாழ்க்கையில் வஸந்தா பெற்ற முதல் வெற்றி.
ஒரு பிரச்சனை நம் முன் வரும்போது அதற்குத் தீர்வு காண இரண்டே உத்திகள் தான். ஃபைட் ஆர் ஃப்ளைட்…
எதிர்த்துப் போராடுதல் அல்லது புறமுதுகிட்டு ஓடுதல்.
புறமுதுகிட்டு ஓடி தப்பித்த காலம் வஸந்தாவின் வாழ்வில் மலையேறிவிட்டது. எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சல் வந்துவிட்டது அவளுக்கு.
எதிர்த்துப்போராடத் துணிந்தாள்.
முதல் போராட்டத்திலேயே வெற்றி வாகையும் சூடிவிட்டாள்.
“வந்துத் தொலையறேன்.” என்று ராஜேந்திரன் இறங்கி வந்தபின், அதற்கு மேல் வாய் வளர்க்கவில்லை வஸந்தா.
‘இப்போது வீட்டில் உட்கார்ந்து வாய்ச் சண்டை போடுவது அர்த்தமற்றது. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவ மனைக்குச் சென்று ஜனனிக்கு சிகிச்சை தொடங்க வேண்டும்’ என்கிற ஒற்றை இலக்கோடு அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்டாள்.
குழந்தைக்கு மட்டும் பாலில் ஃபார்முலா பவுடர் போட்டு ஆற்றி, டவராவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, ஊதி ஊதிப் புகட்டினாள்.
வழக்கமாக, இப்படி வெளியில் செல்லத் திட்டமிட்டால், விடி கருக்கலில் எழுந்து சமையல் முடித்துவிடுவாள்.
காலா காலத்தில் வீட்டிற்குத் திரும்ப முடியாத பட்சத்தில், கட்டுச் சாதமாகக் கட்டி எடுத்துக்கொள்வாள்.
முடிந்த வரை கடையில் சாப்பிடுவதைத் தவிர்ப்பவள் வஸந்தா.
இன்று எதுவும சமைக்கவில்லை.
காலை டிபன் கூடச் செய்யவில்லை.
புறப்படுவதில் மட்டுமே குறியாக இருந்த வசந்தாவின் இந்த மாற்றம் முற்றிலும் புதியதாயிருந்தது ராஜேந்திரனுக்கு.
இந்த இருக்கமான சூழ்நிலையில் எது பேசினாலும் ஏடாகூடமாகிவிடும் என்பதை உணர்ந்த ராஜேந்திரன் அமைதியாக, ஒரு பார்வையாளனாக அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அத்தியாயம் – 6
ஒயர் கூடையில், ஒரு டவரா செட், சத்துமாவு டப்பா, தண்ணீர் ப்ளாஸ்க் மற்றும் ஒரு டவல், எங்கேயாவது தரையில் உட்கார நேர்ந்தால், தரையில் விரித்து உட்கார இருக்கட்டுமே என ஒருஷீட் செய்தித்தாள், மனநல மருத்துவர் ஏதாவது குறிப்பு சொன்னால் குறித்துக் கொள்ள ஒரு ஷீட் டிம்மி பேப்பர், எழுதிக் கொள்ள ஒரு பால் பாய்ண்ட் பேனா அனைத்தையும் பையில் போட்டுக் கொண்டாள்.
எதற்கும் இருக்கட்டுமே என்று ஜனனியின் கவுன் மட்டும் ஒன்றுக்கு இரண்டாக எடுத்துக் கொண்டாள்.
அனைத்தையும் பங்கிடாக, ஒயர் கூடையில் நிரப்பி வைத்துக் கொண்டாள்.
புறப்படத் தயாராகி விட்டபின், கண்ணாடி முன் சில விநாடிகள் நின்று சீப்பால் தலைமுடியை கீறி ஓரளவுக்குப் படிய வைத்துக் கொண்டாள். அலமாரியைத் திறந்து, தன்னுடையதும், குழந்தையுடையதுமான ஆதார் அட்டைகளை எடுத்து பர்ஸில் வைத்துக் கொண்டாள்;
தூங்கிக் கொண்டிருந்த ஜனனியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு இயந்திர கதியில், மின்சார ரயிலைப் பிடிக்க விரைந்தாள் வஸந்தா.
ராஜேந்திரன் வருகிறானா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப் படவில்லை அவள்.
குழந்தை ஜனனியோடு மனநலக் காப்பக வளாகத்திற்குள் நுழைந்தாள் வஸந்தா.
அங்கு அழைத்து வந்திருந்த பல்வேறு மன நோய் பாதித்த குழந்தைகளை ஆதங்கத்துடனும், ஆற்றாமையுடனும் பார்த்தாள்.
வஸந்தாவின் கண்கள் பனித்தன.
ஒரு குழந்தை… ஜனனியின் வயதுதான் இருக்கும்.
“கீ… கீ…” என்று ஓயாமல் உரத்துக் கத்திக் கொண்டே இருந்தது. அடக்கிய தாயின் தோளைக் கடித்துக் குதறியது. முகத்தை நகத்தினால் பிராண்டியது.
அர்த்தமில்லாமல் உரத்துச் சிரித்துக் கொண்டே இருந்தன சில குழந்தைகள்…
ஒரே சொல்லையே மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தனர் சிலர்…
தாய் தந்தையின் கையிலேயே தங்காமல் அங்கும் இங்கும் ஓடுவதும் குதிப்பதுமாய் சில.
மனநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின், பல்வேறு பரிமாணங்களையும் பார்த்த வஸந்தா, தன் மகள் ஜனனியின் நடத்தைகளை அந்த அப்நார்மல் பிகேவியர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாள்.
தன் மகள் குணமாகிவிடுவாள் என்கிற நம்பிக்கை வந்தது அவளுக்கு.
நம்பிக்கைதானே வாழ்க்கை.
மனநல மருத்துவர்கள் குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றி ஆராயும்போது அவர்களைத் தனியாளாக வைத்து சோதிப்பதில்லை. பாதிப்புக்குள்ளான மற்ற குழந்தைகளையும் அதே அறையில் இருக்கச் செய்துதான் சோதிப்பார்கள்.
பெரும்பாலும் ‘மேட்டர் ஆஃப் பிரைவஸி’ என்பதை, இந்தச் சூழலில் யாரும் பார்ப்பதுமில்லை. பார்க்க வேண்டிய அவசியமுமில்லை.
ஒரு குழந்தையை சோதனை செய்யும்போது, வேறு ஒரு குழந்தை அந்தச் சோதனைக்கு ரெஸ்பான்ஸ் செய்தால், தூண்டலுக்கு ஏற்ற துலங்கல் செய்த குழந்தைக்கு அடுத்தடுத்த சோதனைகளை விரைவாகச் செய்து விட முடியும்.
அதே போல ஒரு சோதனை செய்யும் போது யாருமே எந்த ரியாக்ஷனுமே கொடுக்கவில்லை எனில் அந்த சோதனையை குறிப்பிட்ட பேட்ச்ல் அனைவருக்குமே தவிர்த்துவிடலாம்… இதனால் நிறைய கால விரயம் தவிர்க்கப்படும்.
இப்படியெல்லாம் நிறைய நுட்பங்களும், முறைகளும், உத்திகளும் மன நல மருத்துவத்தில், குறிப்பாக குழந்தைகளின் குறையறியும் முறைகளில் உண்டு.
பல்வேறு சோதனைகளையெல்லாம் செய்து முடித்த பிறகு, ஜனனிக்கு ஆடிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு என்பதை மனநல மருத்துவர் அதிகார பூர்வமாக அறிவித்தார்.
“குழந்தைக்கு ஒண்ணரை வயசாகுதே, பீடியாட்ரிஷியன் ரெஃப்பர் பண்ணி இதுக்கு முன்னால யாராவது நியூரோ கிட்டே காட்டினீங்களா. ஏதாவது பாஸ்ட் ரெக்கார்ட்ஸ் இருந்தா, ஃபாலோ அப் க்கு வசதியா இருக்கும்…” என்றார் மருத்துவர்.
“இவ பிறந்து வீட்டுக்கு அழைச்சி வந்த பிறகு, இன்னிக்கு வரை, குழந்தை நல மருத்துவர் உட்பட எந்த டாக்டர் கிட்டேயும் இதுவரைக்கும் காட்டலை டாக்டர்.” வஸந்தா இதைச் சொல்லும்போது அவளின் இயலாமை குரலில் பிரதிபலித்தது.
“என்ன…? பிறந்த ஒண்ணரை வருஷத்துல, இண்ணிக்குத்தான் குழந்தையை டாக்டர் கிட்டேயே அழைச்சி வந்திருக்கீங்களா. நீங்க படிச்சவங்கதானே?” என்று உரிமையோடு கோபித்தார் மருத்துவர்.
“பிறந்த உடனேயே எல்லாக் குழந்தைங்களைப் போல அழலை டாக்டர் என் பொண்ணு.”
“அரசு மருத்துவ மனைலதானேப் பிறந்திச்சு பாப்பா…?”
“ஆமாம் டாக்டர்…”
“பிரசவம் பார்த்த ஆஸ்பத்திரில பாப்பாவோட நிலையைப் பத்தி அங்கே டாக்டருங்க எதுவும் சொன்னாங்களா சொல்லலியா?”
மருத்துவர் வருத்தமும் கோபமும் கலந்து கேட்க,
“சொன்னாங்க டாக்டர்.”
“என்ன சொன்னாங்க?”
“நரம்புக் கோளாறு இருக்கு பாப்பாவுக்கு, நியூரோ டாக்டர் கிட்டே முறையாக் காட்டுங்கனு சொல்லித்தான் டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டாங்க; சில நரம்பியல் நிபுணர்களை பத்தியும் சொன்னாங்க; கீழ்ப்பாக்கத்துல இதே ஆஸ்பத்திரி பத்தியும் சொன்னாங்க.”
“அப்ப ஏன் காலத்துல குழந்தையைக் கொண்டு வந்த காட்டலை…?”
“என் புருசன் எந்த டாக்டர் கிட்டேயும் போகக்கூடாதுனு ஆர்டர் போட்டுட்டதாலே எனக்கு வேறு வழி தெரியலை. இன்னிக்கு நிலைமை மாறும், நாளைக்கு மாறும்னு இப்படியே போயிடுச்சு டாக்டர்… தப்பு என்னோடதுதான். நான் செஞ்சதெல்லாம் பயித்தியக்காரத்தனம்னு இப்போ தெரியுது. இனிமே சரி பண்ண முடியாதா டாக்டர்…”
இப்படிச் சொல்லும்போது மருத்துவரின் பக்கவாட்டில் நின்ற கணவன் ராஜேந்திரனை வெறுப்போடும், அருவெறுப்போடும் பார்த்தாள் வஸந்தா.
“அம்மா, நீங்க பட்டப் படிப்பு வரைக்கும் படிச்சவங்க. படிச்ச நீங்களே இப்படி அவர்னெஸ் இல்லாம இருந்துட்டீங்களே, குழந்தைகள் விஷயத்துல படிக்காதவங்க கூட இப்பெல்லாம் ரொம்ப கவனமா இருக்காங்க… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை போங்க…?”
வருத்தப்பட்டு நொந்து கொண்டார் மருத்துவர்.
முகத்தில் டன் கணக்கில் கடுகடுப்பு அப்பியிருக்க, பக்கவாட்டில் ஓரமாக நின்ற ராஜேந்திரனின் பக்கம் திரும்பியது மருத்துவரின் பார்வை.
“ஏன் சார்…! நீங்க, படிச்சிருக்கீங்க, பேங்க்ல ஒர்க் பண்றீங்க. குழந்தையை ப்ராபரா கவனிக்காம விட்டுட்டீங்களே…!”
மனநல மருத்துவர் நவீனன் சொல்லிக் கொண்டிருந்தபோதே… பொது இடம் என்று கூடப் பார்க்காமல், கூச்சலிட்டான் ராஜேந்திரன்.
“இந்தப் பயித்தியத்தையெல்லாம் கட்டிக்கிட்டு என்னால மாரடிக்க முடியாது…”
ஜனனியைச் அவன் வலது கைச் சுட்டுவிரல் சுட்டிக் காட்ட, வஸந்தாவைப் பார்த்துக் காட்டுக் கத்தலாய்க் கத்தினான் ராஜேந்திரன்.
மருத்துவர் உட்பட, மற்றவர்களும் நம்மைப் பார்க்கிறார்களே என்கிற எந்தவித அவமான உணர்வும் இல்லாமல், திரியைப் பற்ற வைத்தவுடன் விருட்டென பக்கவாட்டில் செல்லும் பாம்பு வானத்தைப் போல, அந்த இடத்திலிருந்து பக்கவாட்டில் நகர்ந்து, மருத்துவரின் அறையை விட்டு வெளியேறிச் சென்றான்.
இது போன்ற அப்நார்மல் பிகேவியர்களை அடிக்கடி பார்ப்பவரல்லவா மனநல மருத்துவர்கள். டாக்டர் நவீனன் இந்த நிகழ்வை வழக்கம்போல இக்னோர் செய்தார்.
க்ளையண்டுகளுக்குத் தன் மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்ந்தார்.
அன்றோடு அப்பாவின் உறவு முறிந்து போனது ஜனனிக்கு.
ராஜேந்திரன் அநாகரீகமாக் கத்திவிட்டு, மருத்துவ மனையை விட்டு வெளியேறியவுடன், ஒரு சில நொடிகள் பிரமை பிடித்தாற்போல அமர்ந்திருந்த வஸந்தா, பின் அந்த நிகழ்வை முற்றிலும் தன் நினைவில் இருந்து அழித்தாள்.
“இந்த நொடியோட அந்த ஆளை தலை முழுக முடிவு பண்ணிட்டேன் டாக்டர். ‘லேட் ஈஸ் பெட்டர் தேன் நெவர்’னு சொல்லுவாங்க. இதுக்குப் பிறகு என் மகளை எப்படிப் பராமரிக்கணும்னு சொல்லுங்க. நான் என்னைத் தயார் படுத்திக்கறேன்.”
என்று கூறிய வஸந்தாவின் கண்களில் ஒளியைக் கண்டார் மருத்துவர்.
தாய் தந்தை இருந்தவரை ராஜேந்திரன் இருந்த நிலை;
பெற்றோரின் மறைவுக்குப் பின், பிறந்த பெண் குழந்தைமேல் அவனுக்கு இருந்த வெறுப்பு;
பெற்ற குழந்தை என்றும் பார்க்காமல், அதன் சீரான வளர்ச்சிக்கு நேற்று வரை அவன் செய்த தடைகள்;
கிட்டத்தட்ட ஒரு வருடமாக, வேலை பார்க்கும் வங்கியின் மேலதிகாரி மலர் என்ற பெண்ணிடம் அவன் வைத்துள்ள கள்ளத் தொடர்பு;
பல நாட்கள் வெளியூரில் சென்று தங்கி விட்டு வரும் திரை மறைவு வாழ்க்கை…;
என்று அனைத்தையும் மருத்துவரிடம் சொல்லித் தீர்த்தாள்.
தன் வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றியும் கடந்து வந்த பல விதமான காலகட்டங்களின் தாக்கங்களையும் மருத்துவரிடம் விலாவாரியாகச் சொல்லிக் கதறினாள் வஸந்தா.
அனைத்து பாரங்களையும். தன் முன்னே சுமைதாங்கியாய் இருந்த மன நல மருத்துவரிடம் இறக்கிவைத்துவிட்ட பின் மனசு சேசானது வஸந்தாவிற்கு.
கடந்த காலத்தை கழற்றி எறிந்தாள்.
நிகழ்காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள்.
இன்று புதிதாய் பிறந்தவளாய் புது வாழ்வைத் தொடங்கினாள் வஸந்தா.
உள்ளத்தில் உண்மை ஒளி புகுந்து கொண்ட பின் பின் அவள் வாக்கினிலே ஒளி உண்டாகிப் பிரகாசித்தது.
இப்போது ஜனனியின் ரொட்டீன் பற்றியும், குணாதிசயங்கள் பற்றியெல்லாம் வஸந்தா நிதானமாகச் சொன்னவற்றையெல்லாம் கேட்டு கேஸ் ஹிஸ்டரி தயாரித்தார் மருத்துவர் நவீனன்.
“ஜனனி யாரோடயும் கண்ணுக்குக் கண்ணு பார்த்துப் பேசறதில்லை. ஆனா யாராவது எதாவது சொன்னா, எங்கேயாவது பாத்துக்கிட்டே பேச்சை காதுல வாங்கவா. அதை புரிஞ்சிக்குவாளானு தெரியலை. அப்பறம் முக்கியமா ஒரு சங்கதி டாக்டர்…”
“சொல்லுங்க…”
மனநல மருத்துவர் நவீனனும் வஸந்தாவும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அந்த உரையாடல்களை எல்லாம் அமைதியாக உள்வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஜனனி.
ஜனனியைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே அவ்வப்போது டாக்டர் நவீனன்,
“அப்படியா…?”
“ம்…சொல்லுங்க…!”
“ஓஹோ…!”
“வெரிகுட்…!”
என்றெல்லாம் காதில் வாங்கிய செய்திகளுக்குத் தக்கவாறு உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
வஸந்தாவிடமிருந்து, ஜனனி பற்றிய அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தபோது மருத்துவரின் கண்கள் ஜனனியின் பிகேவியரையும் , கூர்ந்து கவனித்துப் பட்டியலிட்டன.
– தொடரும்…
– ஜனனி…! ஜெயம் நீ..! (நாவல்), 25-02-2026, தேவியின் கண்மணி.
![]() |
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நினைவுச் சோலை
ஜெயமணி
May 7, 2026
விண்ணில் ஒரு மணல் வீடு
மா.வீ.தியாகராசன்
May 7, 2026
ஊனம்
வாஷிங்டன் ஶ்ரீதர்
May 7, 2026
