ஊனம்
கதையாசிரியர்: வாஷிங்டன் ஶ்ரீதர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 2,226

மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்த என் கவனத்தை குழந்தை விமலின் திடீரென்ற அழுகை சத்தம் கலைத்துவிட, ‘விமல் குட்டி…அழாதேடா…’ என்று சொல்லிக்கொண்டே அவனைத் தூக்கிக் கொண்டேன். ‘இந்த நேரத்தில் சரசு எங்கே போனாள்?’ என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
இன்று சனிக்கிழமை…சட்டென நினைவுக்கு வந்தவுடன், கூடவே எரிச்சலும் வந்தது. இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஒரு மீட்டிங்… அவள் போயிருக்க வேண்டும்.
சரசுவை ஒரு பெரிய அதிகாரி என்று நினைக்க வேண்டாம். சம்பளம் இல்லாமல் செய்யும் தர்ம காரியம்தான் இது. அப்படி அந்த காலனி குழு மீட்டிங்கில் என்னதான் உலகத்தை புரட்டும் ஆலோசனைகளோ, திட்டமோ, தீர்மானங்களோ தெரியாது…ஆனால், சரசு இதுவரை ஒரு மீட்டிங் கூட போகத் தவறவில்லை. இந்த பொறுப்பு இன்னும் எத்தனை மாதங்களோ…?
ஒருவழியாக குழந்தைக்கு உணவு கொடுத்து சமாதானப் படுத்திவிட்டு, கையில் ஒரு கப் சூடான தேநீருடன் மீண்டும் வேலையைத் தொடர்ந்தேன்.
கதவைத் திறந்து உள்ளே வந்த சரசுவின் ஒரு கையில் கத்தையான காகிதங்கள். இன்னொரு கையில் அவளுடை சிறிய கணனி, இதர பொருள்கள். மீட்டிங்கில் வேலை கொடுத்திருப்பார்கள். சரசு பைத்தியம் காகிதங்களை வாங்கி வந்திருப்பாள்.
“விமல் கண்ணு…அப்பா உனக்கு லன்ச் குடுத்தாரா…” என்று கேட்டுக்கொண்டே குழந்தையை அள்ளிக் கொண்டாள். “என்னங்க…நீங்க சாப்பட்டை சூட வைச்சு சாப்டீங்களா? காலையில் நீங்க நல்லா அசந்து தூங்கவே நான் எழுப்பாம ஒன்பது மீட்டிங்குக்கு போயிட்டேன்… ரொம்ப சாரி…”
அவள் அக்கறையுடன் கேட்கவே, நான் கோபத்தை காட்டாமல், “சரசு…நீ எல்லா மீட்டிங்குக்கும் போய்த்தான் ஆகணுமா?”
“என்னங்க இப்படி கேக்கறீங்க? இந்த பொறுப்பு இன்னும் நாலு மாசம்தானே எனக்கு?”
“வருத்தமா சொல்றாப்போல இருக்கே…?”
“நாங்க காலனிக்கு இன்னும் செய்யவேண்டிது நிறைய இருக்கு…”
“உன்னைப் போலவே எல்லா உறுப்பினர்களும் இல்லையே! எந்த மீட்டிங்குக்கும் வராதவங்க இருக்காங்களே…ஒப்புக்கு வந்துட்டு எந்த பொறுப்பையும் எடுக்காம இன்னும் சிலர்…ஆன நீ மட்டும்…”
“நம்ம அமைப்ப பத்தி உங்களுக்கு தெரியுமே! எந்த பொதுக் காரியத்துக்கும் உழைக்கும் சிலர்தான் கடைசி வரை உழைப்பாங்க…சிலர் பட்டும் படாமலும், சிலர் வாய் பேச்சு வீரர்களாயும் இருப்பாங்க…நான் முதல் வகை…என் குணம் அப்படி…”
“அம்மா சரசு…நீ ஒரு தியாகி…சின்ன குழந்தையையும் குடும்பத்தையும் விட்டுட்டு, காலனி மீட்டிங், விழாவுக்கு ஏற்பாடு செய்யறதுன்னு போயிடுவே…” என் குத்தலான பதில் அவள் மனதைத் தீண்டியிருக்கவேண்டும்.
சரசு சலித்துக் கொண்டாள். மேலே எதுவும் பேசவில்லை.
“சரசு…நீ குழுவிலிருந்து விலகிறதுதான் நல்லுதுன்னு எனக்கு தோணுது…என்ன பெரிய குழு… பொறுப்பை விட்டுடு… சரியா?” நான் பிடிவாதமாக பேசினேன்.
“நமக்காகத்தானே குழு இருக்கு? நாம செய்யலென்னா வேற யார் செய்வாங்க!” குழந்தையை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். அவளுக்குக் கோபம் அதிகமா அல்லது ஏமாற்றம் அதிகமா என்று புரியாத நிலை என நினைத்தேன்.
அடுத்த இரண்டு வாரங்கள் மெல்ல நகர்வது போல் இருந்தது. வீடு, வேலை, குழந்தை விம்மலுடன் விளையாடுவது என்று நாட்கள் நகர, எனக்கும் சரசுவுக்குகே இடையே அடிக்கடி ஒரு மௌனத்திரை கிடந்தது. பேச்சு ஓரிரு வார்த்தைகளோடு நின்றது.
சனிக்கிழமை வந்தது. இதோ மீட்டிங் போக சரசு கிளம்பிவிடுவாள்… காலை பதினோரு மணி…வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டது. சரசு விரைந்து போய் கதவைத் திறந்தபோது, வெளியில் ஒரு இளம் பெண் சக்கர வண்டியில் இருந்தாள். வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தவர் பின்னால் நின்றார்.
வந்தவளை, “இவங்க காஞ்சனா…குழுவிலே புதுசா சேர்ந்திருக்காங்க…என் இடத்தை நிரப்ப வந்தவங்க…” என்று சரசு அறிமுகப் படுத்தினாள்.
இப்போது எனக்கு சரசுவின் கடந்த இரண்டு வார மௌனம் புரிந்தது. தன் பொறுப்புகளை சரியான ஒருவரிடம் தர முயற்சி செய்து காஞ்சனாவை அணுகியிருக்கிறாள். சரசுதான் பைத்தியம்னு நினைச்சிருந்தேன்…இப்போது காஞ்சனா பெரிய பைத்தியமோ என்று தோன்றியது. ‘இவள் இருக்கும் நிலையில் பொது நல சேவை தேவையா?’ எனக்குள் தோன்றிய எண்ணம்.
என் முகபாவம் மனசை காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். காஞ்சனா பேசத் தொடங்கி தன் எண்ணங்களையும் கருத்துக்ககளையும் விளக்கி, அவள் ஏன் குழுவில் சேர்ந்தாள் என்பதையும் சொல்லி முடித்தாள். நான் தலையை மட்டும் ஆட்டினேன்…
அவளை வழியனுப்பிவிட்டு வந்த சரசுவை நான் ஏறிட்டுப் பார்த்தேன்.
“உடலில் ஊனம் இருந்தா என்ன? எந்த செயலுக்கும் மனதில் ஊனம் இருக்கக் கூடாது. இல்லீங்களா?” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள். சரசு சொல்லாமல் போன வார்த்தைகளை நான் அசை போட்டேன்…’உங்கள் மனதில் ஊனம் இருந்ததால்தான் என்னை குழுவிலிருந்து விலக சொன்னீர்கள்…’
வெளியே, சக்கர வண்டியிலிருந்து கவனமாக காரில் ஏறிய காஞ்சனாவின் சிரிப்பு என் பக்குவமற்ற மனதை கேலி செய்வதைப் போல் இருந்தது.
![]() |
பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எங்கெங்கு காணினும் சக்தியடா
எஸ்.மதுரகவி
June 20, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 20, 2026
அப்பாவின் பட்டுவேஷ்டி
ஷைலஜா
June 20, 2026
