சுதந்திரத்தைத் தேடி…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 1,605 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தீர்மானத்துடன் தட்டியவனுக்கு சிரித்த முகத்துடன் கதவைத் திறந்து மனைவியின் இன்முகம் தடுமாற்றத்தைத் தந்தாலும், தன்னை சுதாகரித்தபடி அவளை அணைத்தபடி வந்துவிழுந்தான்.

கதவு தானாகவே சாத்திக்கொண்டது.

எப்படி ஆரம்பிப்பது?

சம்மதிப்பாளா?

இதைக் கணவனாகிய நான் எதிர்பார்க்கலாமா?

என் மீதான அபிப்பிராயம் சிதைந்து வாடாதா?

‘நியெல்லாம் மனுஷனா?’ என்று கேட்டுவிட்டால்…

பெண்கள் பூவுக்குச் சமன்… மனைவி என்கிற நிலையில் அவனும் அவளினை பூவாகத்தான் நினைத்தான்.

ஏழெட்டு வருடத்து காதல் வாழ்வல்லவா?

உடல் வியர்த்தது… கேட்டுவிட்டால்….? கேட்டால்தானே பதில் கிடைக்கும்! எப்படி கேட்பது?

அவளின் முன் குற்றவாளிபோல கூனிக்குறுகி மறுக்கவேண்டும்தானா?

பாத்ரும் கதவை சாத்தாமலேயே… குளித்தான்…

அவளுக்கு அதிசயம்தான்… ‘என்ன வந்தது இவருக்கு. ஆக மிஞ்சிப்போனால் பத்து நிமிடத்திற்குமேல் குளிக்கமாட்டாத அவசரம்… இன்று மட்டும் முப்பது நிமிடங்களாய்…’

சூடாக தேநீர் கொடுத்தாள்.

பருகியபடி… அவளை அருகில் இழுத்தான்.

வெட்கமாய் பார்த்தாள் அவனை…

இத்தனை வருடங்களாய் பார்க்கின்ற பார்வைதான்..

அவனுக்கு தேவைப்படும் போதெல்லாம்… குளிக்க வேண்டும்…. நறுமணம் வீச பூச்சூட வேண்டும்… அழகாய் உடுத்த வேண்டும்…. தாலியை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். பிறகு வெறி அடங்கு மட்டும் புரட்டி எடுத்துவிடுவது அவளுக்கு தெரிந்திருக்கிறது.

இன்றும் அப்படித்தான் என்ற நினைப்பில்….

பார்வையின் அர்த்தத்தை புரிந்தவண்ணம்…. றேடியோவை ‘ஓன்’ பண்ணிவிட்டு…பாத்ரும் நுழைந்து… குளித்து… பூச்சூடி.. அழகாய் உடுத்தி ஆயிற்று….

அருகில் அமர்ந்து கொண்டாள்..

‘இன்று சாமி மலையேறி எப்ப இறங்குமோ’ உள்ளுக்குள் நினைத்தாள்.

அவளின் மனதுக்குள்.. போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

கணப்பொழுதுதான்…

கதவு தட்டப்ப… அவனும் எதிர்பார்த்தது போல எழுத்து போய் கதவைத் திறந்தான்.

வந்தவர்.. சிரித்தபடி நுழைந்தவர்… பரந்தநெற்றி… ஆங்காங்கே நரை தட்டி… ஐம்பது இருக்குமோ…புதிதாக ஷேவ் பண்ணியது பளிச்சென தெரிய… அவரின் மேலதிகாரிதான்… உட்கார்ந்தார்…

‘Hello’

‘Hello’

மனைவியை அறிமுகப்படுத்தினான் அவன்.

அவனும் பவ்யமாக வணங்கினான்.

மேலதிகாரியும் கையசைத்தபடி…அறையை நோட்டம் விட்டார்.

அழகாக – சுத்தமாக இருந்தது. பெண் உள்ளவிடென்றால் சும்மாவா?

அவன் மனதுக்குள் தவித்தான்.

சொல்லிவிட்டால் Yes or no…..பிறகு தவிப்பு வராது.

ச்சி…. என்று ஏளனமாக நினைத்துவிட்டால்…?

காரிலுள்ள பார்சலை எடுத்துவரும்படி மேலதிகாரி பணித்தார்.

“Yes sir” என்றபடி படி இறங்கினான்.

இறங்கி காரின் அருகில் வந்து-அங்கும் இங்கும் சிறிது உலாவினான்.

‘எல்லாம் கச்சிதமாய் முடிந்தால் என்னை இந்த ஜென்மத்தில் அசைக்க முடியாது’

ஆர்வத்துடன் கனைக்கவும் செய்தான்.

பிறகு-

கார் கதவை திறக்கப்போனபோது-

படிகளில் இருந்து தடதடவென மேலதிகாரி வந்தார்.

அவரின் முகம் இறுகி இருந்தது.

நிலைமையை புரிந்து கொண்டான்.

அவனுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

வந்தவர் காரில் உட்கார்ந்து ஸ்ராட் செய்தார்.

மேலேறி வந்து நுழைந்ததும் அவன் மனைவி கோபத்துடன் நின்றிருந்தாள்.

பூகம்பந்தான்.

சமாளிக்க முடியுமா?

“இந்த வேலையும் வேண்டாம்….கிராமத்திற்கே போய் விடுவோம்!” என்றாள்.

சமாதானப்படுத்த முயன்று தோல்விதான் கண்டான்.

கடைசியில் சொன்னான்…

“கணவனின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டிருந்தால் கொஞ்சம் ‘அட்ஜஸ்ட்’ பண்ணியிருப்பாய்”

அந்த வார்த்தை அவளை உலுப்பிவிட்டன. திட்டமிட்டே நடந்திருக்கிறான் என்று தெரியவர… ஆத்திரம் அவன் மீதே திரும்பியது.

“நீ எல்லாம் ஒரு மனித ஜென்மமா! மனையாளையே அடுத்தவனிடம் படுக்கச்சொல்லும் கணவனுடன் வாழ இனி என்னால் முடியாது… அன்பைத் தராவிட்டாலும் பரவாயில்லை… வாழ்வை நம் காதலை கொச்சைப் படுத்திவிட்டாயே!”

மூச்சு வாங்கியபடி இரைந்தாள்.

“ஊரில் நடக்காததையா கேட்டுவிட்டேன்” என்றான்.

“இத்தனைக்குப் பிறகும் உன்னுடன் வாழ எனக்கு சம்மதமில்லை!”

அவள் தீர்மானித்துவிட்டாள்.

கிராமத்திற்கு பஸ் ஏறிவிடுவாள்…. வக்கில் அண்ணனிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வரும்…பிறகு தனிமனித வாழ்க்கைதான்…பெண்ணுக்கு மட்டுமல்ல…ஆணுக்கும் தான்….

தேவைதானா.

திகைத்து நின்றாள்.

‘இன்று என்னை கேட்டாய்…நாளை என் மகளை கேட்கமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?”

‘தீக்குளிக்க சொல்லிவிடுவாளோ’ அவளின் கண்கள் அப்படி… உணர்ந்தான்.

தடுத்துப்பார்த்தான்

கணப் பொழுதின் சிந்தனை மனிதனை மாற்றிவிடுவது உண்மை. புறப்பட்டுவிட்டாள்…

ஒரு சுதந்திரம் தேடி…

– 16-22 ஜூலை 1998, ஈழமுரசு.

MullaiAmudhan எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின்…மேலும் படிக்க...

1 thought on “சுதந்திரத்தைத் தேடி…

  1. என்னங்க இது… சில ஆபாசமான வாக்யங்களைத் தவிர்த்திருக்கலாமே. ஒரு கோர்வையாக இல்லாமல் கதை திடும் திடும் என்று தடம் மாறுகிறது. இதையே சுவைபட எழுதிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வேகாத காய்கறிகளை ச் சுவைத்த மாதிரி இருந்தது. இந்த மாதிரி பல வருடங்கள் முன்னரே திருமதி அனுராதா ரமணன் மங்கையில் ஒரு கதையை எழுதி இருந்தார். அதில் மனைவியைக்கட்டாயப்படுத்தும் கணவனை மனைவி கத்திரிக்கோலால் கொன்று விடுவாள். இத்தனைக்கும் நாயகி பள்ளி ஆசிரியை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *