கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 12,697 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தங்களுக்கு நான் கடிதம் எழுதி வெகு காலமாகி விட்டது போல் தோன்றுகிறது. உங்களுக்கு விவாகமாகிச் சரியாக இரண்டு வருஷங்கள் ஆகின்றன. நாளை நீங்கள் உங்கள் கல்யாணத்தின் இரண்டாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். அதாவது ஒரு புதிய இன்ப உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பீர்கள். இன்ப நிறைந்த உங்கள் மனம் சாகித்யமற்ற சங்கீதத்தின் இனிமையில் லயித்து நடம் புரிந்து கொண்டிருக்கும்.

நாளை அதிகாலையில் சரோஜ் உங்களிடம் வந்து, “அன்பே, இன்றைய தினம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்பாள். உடனே உங்கள் அழகிய முகத்தில் புன்னகை பூத்துத் தவழும்.

“நான் ஒரு பேராசிரியனாக இருப்பது உண்மைதான். எனினும், இந்த முக்கியமான தினத்தை, நாம் தாம்பத்திய வாழ்கையில் பூவும் மணமும் போல் ஒன்றுபட்ட இந்த நாளை நான் இந்த ஜன்மத்தில் எப்படி மறக்க முடியும்?” என்று கேட்பீர்கள்.

அவள் உங்கள் தோளின் மீது சாய்ந்து கொள்வாள். இருவரும் சிறிது நேரம் இன்ப மயமான சிந்தனைகளில் ஆழ்ந்திருப்பீர்கள். “சரோஜ், நீ என்றென்றும் எனக்குச் சொந்தமானவள்” என்று பரவசம் அடைவீர்கள். “ஆமாம், நான் என்றென்றும் உங்களுடையவள்தான்'” என்று அவள் உங்களுடன் கொஞ்சிக் குலாவுவாள்.

நீங்கள் நாளைக்கு நிச்சயமாக ஆபீசிலிருந்து ரஜா எடுத்துக் கொண்டிருப்பீர்கள், சரோஜாவும் சமையலறையிலிருந்து ரஜா எடுத்துக் கொள்ளுவாள். சாப்பாட்டுக்கு கோஹினூர் ஹோட்டல் இருக்கவே இருக்கிறது. காலையில் சரோஜாவை மகாராஜா நந்தவனத்துக்கு அழைத்துச் செல்லுவீர்கள் அல்லவா!

அங்குள்ள அழகிய ஊற்றுக்கு நிச்சயமாகச் செல்லுவீர்கள். பூரணமாக மலர்ந்த புஷ்பத்தின் உருவத்தில் அந்த ஊற்று எவ்வளவு கவர்ச்சியாக நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது பாருங்கள்! அதைச் சுற்றிப் பளிங்குக் கற்களால் செதுக்கப்பட்டுள்ள அன்னப்பட்சிகள் எவ்வளவு ஓய்யாரமாக நிற்கின்றன? ஊற்றிலிருந்து வட்ட வடிவமாகப் பரவி விழும் குளிர்ந்த தண்ணீர்’ மனத்தையும் குளிரச் செய்து இன்பமூட்டுவதாக இருக்கிறது. அதை அடுத்து மாபெரும் பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற புல் தரையின் வனப்பை எப்படி வர்ணிப்பது!

அந்த ஊற்றுத் தண்ணீரில் செரோஜ் குழந்தையைப் போல் விளையாடுவாள். “ஆஹா! இந்த செந்தாமரைப் புஷ்பம் எவ்வளவு அழகாக இருக்கிறது, பாருங்கள்! ஹிருதயத்தைப் போன்ற வடிவம் உள்ள அதன் இலைகளும், இலைகளில் மிதக்கும் முத்துக்களும் மனத்தை எப்படிக்கொள்ளை கொள்ளுகின்றன!” என்று கூறிப் பரவசம் அடைவாள்.

உடனே நீங்கள் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “என் அருமை சரோஜ் ஒரு கவியாகி விட்டாளே” என்று பெருமிதம் கொள்வீர்கள்.

சரோஜ் கொஞ்சும் குரலில், “போங்கள்! உங்கள் முகஸ்துதி எனக்கு வேண்டாம். நான் இப்போது கவியைப் போல் என்ன சொல்லி விட்டேன்! கண்ணால் பார்த்ததைச் சொன்னேன்” என்று கொஞ்சுவாள்.

நீங்கள் மேலும் மேலும் விளையாட்டாக ஏதாவது சொல்லுவீர்கள். கடைசியாக சரோஜ் நாணிக் கொண்டே, “போதும், போதும். வெய்யில் அதிகமாகிறது. வீட்டுக்குப் போகலாம், வாருங்கள்” என்று சொல்லி உங்கள் கையைப் பிடித்து இழுப்பாள்.


சாப்பிட்டு விட்டு அன்று மாலை நீங்கள் ராம்சாகர் ஏரிக்குச் செல்லுவீர்கள், நீங்கள் இருவரும் கைகோத்துக் கொண்டு அந்த ஏரியின் அழகில் லயித்து விடுவீர்கள். மனத்தை மயக்கும் எழில் நிறைந்த இயற்கையின் குழ்நிலையில் இருக்கும் அந்த ஏரியின் அழகை என்னவென்று சொல்லுவது ! ஏரியின் சிற்றலைகளின் சப்தம், அவை ஏதோ முணுமுணுத்துக் கொண்டே ஒன்றையொன்று விரட்டிச் செல்லுவது போல் தோன்றும். அந்த ஆனந் தத்தில் உங்களுக்குக் கல்யாணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன என்ற எண்ணமே மறந்து விடும். கல்லூரியில் வாசிக்கும் இளம் காதலர்களாகவே மாறி விடுவீர்கள். இருவரும் சிரித்துக் கொண்டே ஓடியாடி விளையாடுவீர்கள், ‘கோட்டைப் படிகளில் யார் முந்தி ஏறுகிறார். பார்க்கலாம்’ என்று போட்டி போட்டுக் கொண்டு ஏறுவீர்கள்!

மாலையில் இருவரும் வானொலி சங்கீதத்தைக் கேட்டு மகிழ்வீர்கள். பிறகு சரோஜ் சிறிது சிந்தனையில் ஆழ்ந்து விடுவாள். என்ன செய்வது என்று அவளுக்குத் தோன்றது. அதன் பின் அவளுக்கு அந்தத் தந்தப் பெட்டி ஞாபகம் வரும். அந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து உங்கள் எதிரில் திறப்பாள். இருவரும் பரஸ்பரம் எழுதிக் கொண்ட காதல் கடிதங்கள் அதில் இருக்கும். அதில் சில கடிதங்களில் உள்ள விஷயங்கள் சிரிப்பை உண்டாக்கும். சில கடிதங்கள் வேதனையைக் கொடுக்கும். மற்றும் சில கடிதங்களைக் கண்டு சரோஜும் நீங்களும் கண்ணீர் விடுவீர்கள். உடனே உங்கள் கண்ணீரை அவளும், அவளுடைய கண்ணீரை நீங்களும் துடைத்துக் கொள்வீர்கள், வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை நினைத்துக் கொண்டால் அப்படித் தான். பல்வேறு உணர்ச்சிகள் பொங்கி வரும். சந்தோஷம், துக்கம், நம்பிக்கை, ஏமாற்றம் எல்லாம் மாறி மாறி வரும். பழைய கஷ்டங்களை நினைத்துக் கொள்வதில்கூட இனந் தெரியாத இன்பம் இருக்கிறது அல்லவா! எந்த மனிதரும் வாழ்க்கையின் இலட்சியங்களை அடைவதற்கு முன் கஷ்டங்களாகிற சோதனைக்குட்பட்டுத் தானே தீரவேண்டும்!

இந்தக் கடிதத்தை முழுவதும் நிதானமாக வாசிக்கும் பொறுமை உங்களுக்கு இராமற் போகலாம். ‘இதென்ன தொந்தரவாக இருக்கிறது! ஒரு வருஷத்துக்குப் பிறகு இப்போது தான் இவளுக்கு என் ஞாபகம் வந்ததோ!’ என்று நீங்கள் கிளைக்கலாம்.

ஆனால் நான் என்ன செய்வேன்! என் மனத்நில் இன்று பெரும் புயல் அடித்துக் கொண்டிருக்கிறது. சென்ற வருஷம் முழுவதும் உங்களுக்கும் நான் கடிதம் எழுதவில்லை என்பது உண்மையே. நீங்கள் எழுதிய பல கடிதங்களுக்கு நான் பதில் எழுதவில்லை. அதற்காக உங்களுக்கு முதலில் என்மீது கோபம் கோபமாக வாதிருக்கும். இத்தனை கடிதங்களில் ஒன்றுக்காவது அவள் பதில் எழுதினாளா என்று ஆத்திரப் பட்டிருப்பீர்கள். பிறகு. ‘பாவம்! க்ஷயரோக ஆஸ்பத்திரியில் இருப்பவள் கடிதம் எழுதக்கூடிய நிலைமையில் இருக்கிறாளோ, இல்லையோ!’ என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொண்டிருப்பீர்கள். ‘அவள் எனக்கு எழுதுவதற்கு என்ன இருக்கிறது!’ என்று நீங்கள் எண்ணி யிருக்கலாம்.

பிறகு, என்னைப் பற்றிச் சிந்திப்பதையே நீங்கள் விட்டிருக்கலாம். என்னை அடியோடு மறக்கவும் முயற்சித்திருக்கலாம்.


இவ்விதமெல்லாம் நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது எனக்கே விசித்திரமாகத் தோன்றுகிறது, ஏனெனில், நான் எவ்விஷயமாக உங்களுக்கு எழுத விரும்பினேனோ அதைப் பற்றி இன்னும் எழுதவில்லை. நான் எழுத விரும்புவது பேனாவின் நுனியில் வருகிறது. ஆனால், அந்த எண்ணம் காகிதத்தில் வருமுன் காய்ந்து விடுவது போல் தோன்றுகிறது! எனக்கு அதை எழுதத் தயக்கமாக இருக்கிறது. இந்த மனக் குழப்பத்துக்காக என்னை மன்னித்து விடுங்கள்.

அதாவது, நீங்கள் தயவு செய்து எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். அது மிகவும் சிறிய விஷயம்தான். இருந்தாலும் சொல்லுவதற்குத் தயக்கமாக இருக்கிறது. இனி தயக்கம் என்ன! இதோ சொல்லி விடுகிறேன்.

உங்களை ஒன்று வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் நாளைக்கு சரோஜை உங்களுடன் கூட்டிச் செல்லும் போது, அம்பசாரிக்குச் செல்லாதீர்கள். அந்த இடத்துக்கு நீங்கள் சென்றால், உங்கள் மனம் வேதனைக்கு உள்ளாகும். சந்தோஷமாகக் கழிக்க வேண்டிய தினத்தில் நீங்கள் ஏன் பழைய சம்பவங்களை ஞாபகப்படுத்தி உங்களுக்கு வேதனையை உண்டாக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும்!

உங்களுக்கு நினைவு இருக்கிறதா! அப்போது நாம் பி.ஏ. வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள்… ஏன், எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அன்று ஜூலை மாதம் இருபதாம் தேதி, காலையில் சரோஜ் நம்மிருவரையும் அவளுடைய பிறந்த தினத்தை ஒட்டி இரவு சாப்பிடுவதற்கு அழைத்திருந்தாள். நான் ஏரிக்கு அப்பால் உள்ள மேடாளன ரஸ்தாவழியாக சைக்கிளில் வேகமாகப்போய்க் கொண்டிருந்தேன். ஏரியிலிருந்து குனிர்ந்த காற்று என் முகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. ரஸ்தாவில் இருந்த உயரமான மரங்களின் மீது மாலைக் கதிரவனின் பொற் கிரணங்கள் படர்ந்திருந்தன. பெண்கள் தண்ணீர்க் குடங்களுடன் ஏரிக்கரை மேட்டிலிருந்து கீழே இறங்கிக் கொண்டும் மேலே ஏறிக் கொண்டும் இருந்தார்கள். அவர்கள், மாலை வேளையில் நீல வானத்தைப் பின்னணியாகக் கொண்டு நடமாடும் அற்புதத் தங்கப் பதுமைகள் போல் காணப்பட்டனர்.

அந்தக் காட்சியைக் கண்டு நான் மெய்ம் மறந்து சென்று கொண்டிருக்கையில், என்னை யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டது. உடளே திரும்பிப் பார்த்தேன். நீங்கள் அதற்குள் என் அருகில் வந்து விட்டீர்கள், நீங்கள் சைக்கிளிலிருந்து இறங்கியபோது, எதிர்க் காற்றினால் உங்கள் தலையெல்லாம் கலைந்து கிடந்தது. என்னைப் பிடிப்பதற்காக நீங்கள் வெகுவேகமாக சைக்கிளில் வந்திருக்கிறீர்கள் என்பதை ஊகித்துக் கொண்டேன். நான் மேலே சைக்கிளில் செல்ல முயற்சித்த போது நீங்கள் என்னைத் தடுத்து விட்டீர்கள், ‘வா, மங்களா! சிறிது நேரம் ஏரிக்கரையைச் சுற்றி விட்டுப் பிறகு செல்லுவோம்’ என்று சொன்னீர்கள், உங்கள் பேச்சில்தான் எவ்வளவு கவர்ச்சி!


அப்போது நம் இருவர் கண்களும் சந்தித்தன. நம் இருவர் முகங்களிலும் புன்னகை தவழ்ந்தது. அங்கிருந்த முன் வேலியில் உங்கள் சைக்கிளைச் சாத்தினீர்கள். என் சைக்கிளுக்குப் பூட்டு இல்லாததால், உங்கள் சைக்கிளில் இருந்த சங்கிலியால் இரண்டு சைக்கிள்களையும் சேர்த் துப் பூட்டி விட்டுச் சென்றோம்.

ஏரிக்கரை வழியாக நாம் சென்ற போது எவ்வளவு ஆனந்தமாக இருந்தது! அங்கிருந்த புற்கள் மாலைக் காற்றில் நடுங்குவது போல் தோன்றிய காட்சி இன்றும் என் மனத்தில் அப்படியே பதிந்திருக்கிறது. அப்போது எனக்கு ஏரியில் மூழ்கி நீந்த வேண்டும் போல் இருந்தது. நாம் ஒரு நல்ல இடத்தைத் தேடி அங்கு உட்கார்ந்தோம். ஏரித் தண்ணீருடன் கலந்து வந்த காற்றினால், என் தேகத்தின் மீது சக்தோஷ அலைகள் பாய்வது போல் இருந்தன.

மாலைக் கதிரவன் சிறிது சிறிதாக மேற்திசையில் மறைந்து கொண்டிருந்தான், வானத்தில் ஏக காலத்தில் சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை, ஊதா, ஆரஞ்சு வர்ணங்கள் தோன்றி மனத்தைக் கொள்ளை கொண்டன. அந்த வர்ணங்களுக்கிடையே திட்டுத் திட்டாக வெண் மேகக் கூட்டங்கள் மிதந்து சென்றன. அந்த ஏரித் தண்ணீரில் தெரிந்த அந்த மோகனக் காட்சியின் பிரதி பிம்பம் கவிஞர்களும் வர்ணிக்க இயலாத்தாக இருந்தது.

அந்த அற்புதமான காட்சியின் போதைரசத்தை காம் பகுகப் பருக கம்மை நாம் மறந்தோம். அப்போது நாம் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை. நாம் எழில் ததும்பும் இயற்கையோடு மௌனமாகப் பேசிக் கொண்டிருந்தோம். அந்தக் காட்சியுடன் நாம் ஐக்கியமடைந்து விட்டோம். நான் ஓர் ஓடையானேன்; நீங்கள் வானமாக மாறி விட்டீர்கள்! அப்போது அந்த மோகனக் காட்சியுடன் விளங்கும் வானத்திலிருந்து ஒரு பட்சி வருவது போல் தோன்றியது. அது உங்களையும் என்னையும் விழுங்கித் திரும்பவும் வானத்தை நோக்கி உயரே, உயரே பறந்து சென்றது.

கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்தது. அப்போது ஏரித் தண்ணீர் மீது யாரோ கறுப்புப் போர்வையை விரித்தனர். மேகங்கள் தேய்ந்து மறைந்தன. வானத்தில் தோன்றிய வர்ண ஜாலங்கள் இருந்தவிடம் தெரியாமல் கரைந்து விட்டன. மரங்கள் கரு நிறமாக மாறின. இயற்கையின் அழகு யாவும் இருளால் மறைக்கப்பட்டன.

உலகம் முழுவதும் அந்தகாரம் குழ்ந்து, எங்கும் நிசப்தம் நிலவிய போது தான் நாம் திடுக்கிட்டு எழுந்தோம். அப்போது நீங்கள் “வா போகலாம்” என்று சொன்னதைத் தவிர வேறெதுவும் பேசவில்லை, நாம் மௌனமாகத் திரும்பி வந்தோம். என் சைக்கிளை நான் எடுத்துக் கொண்டேன். உங்கள் சைக்கிளை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள், பிறகு என்னை ஒரு முறை திரும்பித் தலையிலிருந்து கால்வரை அன்பு பொங்கப் பார்த்தீர்கள். இருவரும் பேசாமல் பிரிந்து சென்றோம்.


சென்ற வருஷம் உங்களுக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியிருந்தது. அந்த முதல் வருஷ விழாவைக் கொண்டாடுவதற்காக நீங்கள் சரோஜுடன் அந்த ஏரிக் கரைக்குச் சென்று, நாம் எந்த இடத்தில் உட்கார்ந்திருந்தோமோ, அதே இடத்தில் சரோஜுடன் வெகுநேரம் உட்கார்ந்திருந்ததாகச் சென்ற வருஷம் எழுதியிருந்தீர்கள். உங்களுக்கு உட் காருவதற்கோ, பொழுது போக்குவதற்கோ வேறு இடம் கிடைக்கவில்லையா, சரோஜை சினிமா போன்ற வேறு காட்சிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கக் கூடாதா!

இந்த க்ஷயரோக ஆஸ்பத்திரியில் இருந்து வரும் என் கற்பனைக் கண்முன் ஏரிக்கரையின் இணையற்ற அழகு தத்ரூபமாகக் காட்சியளிக்கிறது. நாமிருவரும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு, அந்த இணையற்ற இயற்கை எழிலை இன்றும் அனுபவிப்பது போல் தோன்றுகிறது. அக்காட்சி பட உருவமாக என் மனத்தில் அழியா வண்ணம் பதிந்திருக்கிறது.


நான் இருக்கும் க்ஷயரோக சிகிச்சை சாலைக்கும் இந்த உலகத்துக்கும் வெகு தூரம் இருக்கிறது. உலகத்துக்கும் எனக்கும் உள்ள தூரம் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. என்னுடைய வாழ்க்கை காய்ந்து கருகி விட்டது. என் எதிரில் கண்ணுக்கு எட்டிய வரையில் பாலைவனத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. போதை கொள்ளச் செய்யும் பழைய சம்பவங்கள் தான் இப்போது எனக்கு ஜீவாம்ருதமாக இருந்து வருகின்றன. லோபி பணம் ஒன்றையே உயிராகக் கருதி அதை இறுகப் பற்றிக் கொண்டிருப்பது போல, நான் அந்தப் பழைய சம்பவங்களையே இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள், உங்கள் கல்யாண ஆண்டு விழாவை ஆனந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இச் சமயத்தில் உங்களுக்கு இந்த விசித்திரமான கடிதத்தை எழுதுகிறேன். இக் கடிதம் உங்களுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கலாம். இருந்தாலும் நீங்கள் என்னை மன்னிப்பீர்களா! என் மனத்திலிருந்த தாபங்களை யெல்லாம் இக் கடிதத்தில் கொட்டி விட்டேன். என்னை மறந்து விடுங்கள். எப்போதாவது கூட இனி என்னைப் பற்றி நீங்கள் நினைக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் அத்தகைய இடம் பெறுவதற்குக்கூட எனக்கு உரிமை இல்லை. என்னைப் போல் தாங்கள் பழைய சம்பவங்களின் நினைவில் வாழ் வேண்டிய துர்ப்பாக்கியசாலியாகி விடவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அந்த மகிழ்ச்சியில் எனக்கு ஏற்படும் இன்பத்தை என்னால் எழுதிவிட முடியாது.

– மங்களா.

– மகாராஷ்டிரக் கதை எழுதியவர் டி.பி.குல்கர்னி, மொழிபெயர்ப்பு : ஜெயமணி

– 1955-05-01, கல்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *