கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினக்குரல்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 24, 2026
பார்வையிட்டோர்: 276 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆத்திரம் அவனுக்குள். கேட்டை படார் என்று திறந்து கால்களை எட்டி வைத்து விரைந்து நடப்பது அவனுக்குள் ஊடுருவும் ஆத்திரத்தின் வடிவங்களில் ஒன்று. 

“ச்சே…. பொம்பளகிட்ட எந்த நாளும் பேச்சு வாங்கியே ஏ மூச்சும் வயசும் போகுது. இன்ணைக்கு இத முடிச்சிக்கிட்டே வந்துடனும் நேரத்தோட வந்துட்டா அந்த ஆள பார்த்து பேசிப்புடலாம். கொஞ்சம் அப்பிடி இப்பிடினாலும் அந்த ஆள் மிஸ்சிங் அப்புறம் அடுத்த கெழமதான். பார்க்கலையானு காலங்காத்தால எத்தன தரம் பேச்சு வாங்கியிருப்பேன். என்னா வெக்கங்கெட்ட பொளப்பு. கொஞ்ச நஞ்சொம் வெசயம் தெரிஞ்சவள கட்டினா இப்பிடிதான். நா மட்டும் என்னா விதிவிலக்கா. கெடயவே கெடயாது. கட்டிகிட்ட பாவத்துக்கு நல்லா பட்டுமாளவேண்டியது தான். நம்ம தலையெழுத்து இப்பிடித்தானா என்னா பண்ணமுடியும்னுங்கிறேன்” அவனின் மனதில் நீர் குமிழ்களாய் தோன்றி மறைந்த நினைவுகள் கூட அவனைச் சுட்டது. 

சின்னக் குழந்தை தீட்டிய சித்திரத்தைப் போல ஒழுங்கில்லாது அகன்றும் குறுகியும் நீண்டும் செல்லும் பாதையைக் கடந்து வீட்டுக் குப்பைகளின் குவியல்கள், கட்டாக்காலி நாய்கள், முச்சக்கரவண்டிகளின் சங்கமம் என முடிவடைந்திருந்த முச்சந்திக்கு வந்துவிட்ட அவன் தெற்கு பக்கமாக கட்டையும் நெட்டையுமான தோற்றம் கொண்ட, சீமெந்து, பலகையிலான கட்டடங்களாக முன்னூறு மீற்றருக்குள் ஓடியிருந்த கடை வீதியிலும் விரைவை குறைக்காது நடந்தான். 

அந்த கடைகளின் நடுவில் ஒரு கடை! 

ஒருக்களித்து இருந்த கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு அவன் உள்ளே வந்தான். கண்ணாடி மாளிகைக்குள் வந்ததுபோல இருந்தது அவனுக்கு. வலது இடது புறங்களில் ஒட்டுதல் இல்லாத நீண்ட முகம் பார்க்கும் கண்ணாடிகள், மனிதர்களில் முன்புற பின்புறங்களை தடையின்றி காண்பிக்கும் ஆற்றலுக்கும் குறைவில்லை. மனித மனசைக் காண்பிக்கத்தான் நாதியில்லை. 

அறையின் மேற்குப் புறத்திலும் தெற்குப் புறத்தின் ஒரு பகுதியிலும் கண்ணாடிகளினால் உருவாகிய அலுமாரிகள். அதனுள்ளே அழகழகாக வர்ணகுவியல்களில் பேரம், நெரில் மசாஜ் கலவை பெட்டிகள், கோலோன், பேபிகோலோன், நவரத்தின, அமலா ஒயில் போத்தல்கள், பிஜன், கோத்ரிஜ், கெனா போன்ற தலைமயிர்களுக்கு நிறம் கொடுக்கும் கலவைகள், புதியபுதிய சீப்புகள், பேப்பர் சேவியட் என அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 

இடம் கிடைத்த இடத்தில் எல்லா மதத்தினரின் படங்கள். காசு வைக்கும் பெட்டியின் அருகில் தொந்தி வயிறுடன் கூடிய சீனப் பொம்மை. சுவரில் மாட்டிய டிவியில் தமிழகத்து ஏதோ செனல். ஓ… முன்புற கண்ணாடி சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மல்லிகைப் பந்தல் கலண்டர். அதன் பக்கத்தில் சாயப்பூச்சுடன் யாரோ ஒரு நடிகையின் படம். கால்கள் இல்லாத நீண்ட அரை மேசையில் முடிதிருத்தும் கருவிகள், பல வகையான தோற்றத்தில், நிறங்களில் பிளாஸ்டிக் சீப்புக்களின் கலவைகள், கத்திரிக்கோல்கள் இத்தியாதி…. இத்தியாதி. அறையின் மூலையில் மெல்லிய நீலநிற வோசிங்பேசன். 

அவன் இடதுபக்க கண்ணாடிக்கு சமமாக நீண்டிருந்த மர பெஞ்ஜில் கிடந்த அன்றைய பத்திரிகையை எடுத்து விரித்தான். 

வழுக்கைத் தலையர் ஒருவருக்கு முடிதிருத்துபவர் ஏதோ செய்து கொண்டிருந்தார். வழுக்கைத் தலையர் கண்களை மூடி சயனித்திருந்தார். 

அவனுக்கு பத்திரிகையில் மனம் ஓடவில்லை. 

அவன் சுவரில் இருந்த கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டான். 

“வந்தவேல நேரத்தோட முடியனும்” என்கிற அவா ஆத்திரத்தைப் போலவே அவனுக்குள் நிரம்பிக்கிடந்தது. 

பத்திரிகையை கோணல் மாணலாய் மடித்து பக்கத்தில் வீசாத குறையாக தூக்கிப்போட்டான். 

“அது எங்கட கடையான் பேப்பர் இல்லை. வடிவாக மடிச்சி வையுங்கோ” முடிதிருத்துபவர் மொட்டத்தலையரின் தலையில் ஏதோ ஊற்றிக் கொண்டே சொன்னார். 

“பெஞ்சில் இருந்தா கடபேப்பரனுதான் நாங்க நெனப்போம். இருந்த மாதிரிதான் பேப்பர் மடிச்சி வச்சிருக்கு” அவன் கொஞ்சம் காரமாக பதிலளித்தான். 

முடிதிருத்துபவர் ஒன்றும் பேசவில்லை! அவரின் இரண்டு கைகளும் மசாஜ் வேலையில் ஈடுபட்டிருந்தன. 

அவன் அமைதியில்லாமல் தவித்தான். 

“இந்த வழுக்கை தலையனுக்கு எப்ப மசாஜ் முடியும். எப்ப நா… முடிவெட்டிக்கிட்டு போறது. லேட் ஆகினா அந்த ஆள எப்படி பாக்கிறது.” என நினைத்தவனுக்கு பரபரப்பான உணர்வு தொற்றிக் கொண்டது. பெருமூச்சு ஒன்று அவனிடம் இருந்து வெளிப்பட்டது. 

ஒப்புக்கு அதே பத்திரிகையை மீண்டும் எடுத்து விரித்துப் படித்தான். 

“ஐயா பேப்பர ஒழுங்கா மடியுங்கோ. வந்தாரெண்டால் ஏதும் சொல்லுவர்” முடிதிருத்துபவர் அவனைப் பார்த்துச் சொன்னார். 

அவனுக்குள் இருந்த ஆத்திரமும் பரபரப்பும் வெளியில் வந்து விழத் தொடங்கியது. 

“இந்தா… நாங்க கடக்கி வந்தா எவனுட்டு பேப்பருனு பாத்துகிட்டு இருக்க ஏலாது. முடிவெட்டுறத பார்த்துக்கிட்டு இருக்கவேணுமானு கேக்கிறேன். பத்துபதினைஞ்சு நிமிஷத்துக்கு சும்மா ஒக்காந்து கெடக்கிறவேள பேப்பர படிக்கிறது குத்தமா?” அவன் கொஞ்சம் கடுமையாக கேட்டான். 

“ஐயா… அது எங்கட பேப்பர் இல்லை” 

“ஏன் எங்களுக்காக பேப்பர் வாங்கி வக்ககூடாதோ?” 

“பேப்பர் வேண்டி வாரவன் இண்டைக்கு லீவு 

“மத்தவெனுட்டு பேப்பர் பாக்க கூடாதுனா மேல எடுத்து வைச்சிக்குங்க. அப்ப பெரச்சன இல்லை” 

அவன் நறுக்கென்று சொல்லி வைத்தான். 

முடிதிருத்துபவர் அவரது வேலையில் கவனமாக இருந்தார். 

“என்னா… நேரம் போகுமா…?” அவன்தான் மீண்டும் கேட்டான். 

“அரை மணித்தியாலம்!” 

“என்னா அர மணித்தியாலமா! எம்புட்டு நேரோம் காத்திருக்கனுமா” அவன் வாயைப் பிளந்து உச்சஸ்தாயியில் கேட்டான். 

“இன்னும் இரண்டுபேர் வருவினம்” 

“இன்னும் ரெண்டுபேரா! நா இல்ல இங்க வந்து காத்து கெடக்கிறேன். அப்புறம் எப்படி ரெண்டு பேர்” 

“இந்த பேப்பர்க்காராள் உங்களுக்கு முதல் வந்திட்டு போனவர். அவர் திரும்பி வருவார் என்று ப்ேபர வச்சிப்போட்டு போனவர்.” 

“என்னடா நாயம் இது! நல்ல கத. இவருக்கு பின்னுக்கு நா தா பத்துபேரு வருவான் ஏதாச்சும் வச்சிட்டுப் போவான். நாங்க காத்து கெடக்கணுமா?” 

முடிதிருத்துபவர் தனது வேலையை இடைநிறுத்தி அவனிடம் வந்து அவனை விநோதமாகப் பார்த்தார். பின்னர் குனிந்து பெஞ்ஜின் தொங்கலில் கீழே கிடந்த நீலநிறத் தொப்பியை எடுத்து பெஞ்ஜின் மீது வைத்துவிட்டு மீண்டும் வழுக்கைத் தலையருக்கு தன் வேலையை தொடர்ந்தார். அவன் முடிதிருத்துனரையும் பெஞ்ஜில் கிடந்த நீல நிறத் தொப்பியையும் ஒன்றும் விளங்காதவனாய் திரும்பி திரும்பி பார்த்தான். ஏதோ பிரச்சினை தொடரப் போகிறது என்பதை அவனால் கொஞ்சமாக உணர்ந்து கொள்ள முடிந்தது. தனது நிகழ்ச்சி நிரலுக்கு பாதகம் ஏற்படுவதாக அது அமையுமா என அவனின் மனம் அலையடித்தது. அவனுக்கு விடை தெரியவில்லை. அவனுக்குள் இருந்த ஆத்திரம் காய்ச்சல்காரனுக்கு வைத்த தேமோ மீற்றரைப்போல் “விர்” என்று ஏறி வந்தது. 

“எவனுட்டு தொப்பி இது? பக்கத்துல வச்சி ஏதோ எண்ண மனக்குது” என்றவன் அதை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு கைவிரல்களை பெஞ்சின் விளிம்பில் வைத்து தேய்த்துக் கொண்டான். தொப்பியில் இருந்து ஏதும் தனக்கு தொற்றிக்கொள்ளும் என்கிற பயம் அவனுக்கு! 

“அந்த தொப்பியை தொடாதேங்கோ, பெரியவர் வச்சிட்டுப் போனவர்.” “பெரியவரா… என்னா வௌயாடுறீங்களா…” அவன் சினமானான். 

“உங்களுக்கு நான் இரண்டுபேர் இருக்கினம் என்று சொன்னன்தானே. மறந்து போனியளோ” 

“நா…. இப்ப இருபது நிமிஷத்துக்கு மேல் இங்க காத்துக்கெடக்கேன். நா வந்தோன சொல்லி இருந்தா அப்பவே போயிருப்பேன். நா வேலவெட்டி இல்லாம சும்மாவா கெடக்கிறேன். இவருக்கு பெறகு நா தா” அவனே விடையையும் சொல்லி முடித்தான். 

முடிதிருத்துனர் ஒன்றும் பேசவில்லை! அவன் கடிகாரத்தைப் பார்த்து டிவியையும் பார்த்தான். 

“பொறுமை கடலினும் பெரிது” என எவரோ ஒருவர் அந்த காலை வேளையில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். 

“இவஞ்சளுக்கு வேற வேலயே இல்ல.” என்று மனதுக்குள் புகைந்து கொண்டு கண்களை வாசலில் படரவிட்டான். முன் கதவை திறந்து கொண்டு தொப்பை வயிறுடன் ஒருவர் நுழைந்தார். அவனை ஒரு தரம் எதற்காகவோ பார்த்துவிட்டு அவன் அருகில் குந்தினார். பத்திரிகையை ஆசையோடு எடுத்துப் படிக்கப் பிரித்தார். 

அவன் அவரை ஆத்திரத்தோடும் வஞ்சிப்பது போலவும் பார்த்தான். அவர் தலைப்புச் செய்திகளில் லயித்துப் போனார். இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும். 

வழுக்கை தலையர் கதிரையில் இருந்து எழும்பி தலையை இரண்டு மூன்று தரம் சுற்றியும் சாய்த்தும் ஏதோ செய்துகொண்டே சேர்ட்டில் இருந்து பணத்தை எடுத்து முடிதிருத்துனரிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார். “தம்பி… இனி வாற ஆக்களுக்கு நம்பர் துண்டு குடும். அப்பதான் உமக்கு பிரச்சினை குறையும். என்ன நான் போய் வரட்டே” அவர் வெளியில் போய்விட்டார். அவன் அவரைப் பார்த்து ஏதோ சொல்வதற்கிடையில் புதிதாக வந்தவர் பத்திரிகையை அவசரமாக மடித்து பெஞ்ஜின் மீது வீசிவிட்டு விருட்டென்று போய் முடிவெட்டும் கதிரையில் குந்திக் கொண்டார். கூடவே “தம்பி…. கொஞ்சம் பக்கத்தால குறைச்சி விடுங்கோ…. என்ன” என்று கூறி உல்லாசமாக கதிரையில் தலையை வைத்து சாய்ந்து கொண்டு அவரின் வாயைத் திறந்து பற்களை ஈ ஊ என்று காண்பித்தும் கைவிரல்களினால் காதுப்பக்கம் நீட்டிக் கொண்டிருந்த மயிர்களை சுருட்டிக் கொண்டும் அவரின் வயதுபோன அழகை அவரே வியந்து பாராட்டிக் கொள்வது போல விழிகளை அகல விரித்தும் கூர்மையாக கண்ணாடியில் பார்த்து லயித்துக் கொண்டிருந்தார். 

அவனோ எரிமலையின் உச்சியில் இருந்தான். 

“இது என்னாணு கேக்கிறேன்…. மொதல்லேயே நா இல்ல வந்து காத்துக் கெடக்கிறேன். இப்படினு தெரிஞ்சாநா நேத்து அந்திக்கு வந்தே ஏதாச்சும் வச்சிட்டுப் போயிருப்பேன். இங்க என்னாடானா அவெஅவெனுட்டு வேலய செஞ்சிட்டு கரெக்டா டைமுக்கு இங்க வந்து எல்லாத்தையும் செஞ்சிக்கிறாங்க. ரொம்ப நல்லா இருக்குது” அவனால் சாதிக்க முடியவில்லை என்பதை அவனே உணர்ந்து பற்களை இறுக கடித்துக் கொண்டே அனல் பறக்கும் கண்களினால் அந்நியமாய் போன அந்த இருவரையும் பார்த்து ஒன்றும் செய்ய முடியாதவனாய் தன் கைகளை பெஞ்ஜின்மீது வைத்து அழுத்திக்கொண்டு நின்றான். 

புதிதாய் வந்த தொப்பை வயிற்றுக்காரரின் தலையை முடிதிருத்துபவருக்கு சமர்ப்பணம் செய்து விட்டாகியது. 

அவன் பெஞ்சில் கிடந்த பத்திரிகையை எடுத்து வேண்டுமென்றே கசக்கி மெல்லத் தள்ளிவைத்தான். 

“தம்பி…. கனநேரத்துக்கு முன்னம் வந்தவரோ…” தொப்பையர் கேட்டார். 

“ஓம் ஐயா…. கனநேரமா” முடிவெட்டிக்கொண்டே சொன்னார் முடிதிருத்துனர். 

“பேப்பர், பார்க்கமட்டுமில்லப்பா;; இப்படியும் எல்ப்பண்ணும் என்ன” அவர்தான் சொன்னார் கொஞ்சம் நக்கலாக, நையாண்டியாக. 

“தூ…. எங்களுக்கு இங்க நேரம் போவுது. ஒங்களுக்கு நக்கலு” அவன் அவர்மீதும் சீறினான். தொப்பையார் மௌனமாகினார். 

அவருடன் இருந்தவரும் தான்! 

இருபது நிமிடம் கடந்திருக்கும். 

நடுத்தர உயரமானவர் ஒருவர் உள்ளே வந்தார். 

அறையின் வெள்ளைநிற மின்விளக்கு வெளிச்சம் தலையில் விழுந்து பளபளத்தது! எதையோ குனிந்து பார்த்து தேடினார். பத்திரிகையை விலக்கி தொப்பியை கண்டதும் முகம் மலர்ந்தது. 

அவன் பக்கத்தில் போய் குந்திக்கொண்டார். அவனையும் மற்ற இருவரையும் பார்த்தார். கைவிரல்கள் தலையை தடவிக் கொண்டிருந்தன. அவன் அவரைப் பார்த்தான். 

“இவெங்களுக்கெல்லாம் இந்த சலூன்ல என்ன வேல மொறகெட்ட பயலுக” அவன் மனதிற்குள்ளே கருவிக் கொண்டான். 

அவர் தொப்பியை மடியில் வைத்து தடவிக் கொண்டிருந்தார். அவரது தலைக்கவசம் ஆயிற்றே அது. 

“என்ன கனநேரம் கிடக்கோ” தொப்பியை தடவியவர் கேட்டார். 

“கொஞ்சம் பொறுங்கோ… இவருக்கு இந்தா முடிஞ்சிட்டுது” 

முடிதிருத்துனர் கூறிக்கொண்டே தொப்பையரின் முகத்தில் கொஞ்சம் பொண்ட்ஸ் பவுடரை தடவி விட்டார். 

“நா….. வெட்டிக்கிட்டு போறேன்” அவன் பெஞ்சில் இருந்து எழும்பிக் கொண்டு போய் நாற்காலியில் உக்காருவதற்கு தயார்போல நின்றான். 

தொப்பியைத் தடவியவர் முடிதிருத்துனரை பார்த்து அசடு வழிந்தார். 

“உங்களுக்குத்தான் அடுத்து” 

“என்னய்யா சொல்லுற. இம்புட்டு நேரம் இருந்துபுட்டேன். இப்ப வந்தவர முடிவெட்ட கூப்பிடுறியா?” அவன் இரைச்சலாக கத்தினான். 

“என்னத்துக்கு இப்ப சத்தம் போடுறியள். உங்களுக்கு முன்னமே நா வந்துட்டன். வரேக்க கட பூட்டிக்கிடந்தது. தொப்பிய என்ட அடயாளத்துக்கு இந்த தம்பியிட்ட குடுத்திட்டு போனனான். அப்ப எனக்குத் தானே முதல் வெட்டவேணும்” தொப்பி வைத்திருந்தவர் அவசர அவசரமாக பதற்றத்தோடு சொன்னார். 

“அதுசரி…. இப்படியே…. எவனாவது வருவான். நாங்க பாத்துகிட்டே இருக்கணுமா. இப்படியே இருந்தா கடசியில நக்கிட்டுதா போக வேண்டி வரும்.” அவன் அடித்தொண்டையில் கத்தினான். 

“இஞ்ச தம்பி இந்த கத சொல்லாத. நாங்கள் எல்லாம் சரியாத்தான் நடப்போம்” தொப்பிச் சொந்தக்காரர் உசாரானார். 

“அதயு பாத்துபுடுகிறேன்.” அவன் சொல்லிவிட்டு மீண்டும் பெஞ்சில் குந்தினான். தொப்பிச் சொந்தக்காரர் நின்று கொண்டிருந்தார். 

ஒரு நிமிடம் குறைந்துபோனது. 

தொப்பையர் கதிரையில் இருந்து எழும்பிய அதே தருணத்தில் தொப்பிச் சொந்தக்காரர் முடிதிருத்துனரின் தோள்பட்டையை பிடித்துக்கொண்டு முதுகை இடித்துக்கொண்டே விரைந்து சென்று கதிரையை பிடித்து சட்டென்று குந்திக்கொண்டார். 

அவன் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

“இந்த சலூனுக்கு வந்த என்ன செருப்பால அடிக்கனும். மானம் கெட்டவைங்க” அவன் சொற்களில் தன் ஆத்திரத்தை காண்பித்தான். 

“தம்பி பேப்பரவச்சிரு. இங்க வாறவைக்கு உதவட்டும். உமக்கும் நல்லதுதானே” தொப்பையர் வாயைக்கிளறி விட்டுப் போனார். 

அவர் சென்ற சில கணங்களிலே இன்னும் சிலர் அந்த கடைக்குள் நுழைந்து மீதமாய் இருந்த பெஞ்சில் குந்திக் கொண்டனர். 

அதில் ஒருவர் பத்திரிகையை வெடுக்கென்று எடுத்து சந்தோஷமாய் பக்கங்களை புரட்டினார். மற்றவர் டிவியில் ஓடிக்கொண்டிருந்த சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனுக்கு மனமும் கைவிரல்களும் நடுங்கின. 

குரல் அடைக்கப் பார்த்தது. கண்கள் சிவந்து பிதுங்கி நின்றன. மூக்கு விறைத்தது. தன் கண்களை சிமிட்டாது வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்கள் காட்சியை பார்க்கவில்லை. 

“உனக்குத்தான் அடுத்த சான்ஸ். கொஞ்சம் பொறு” அவன் மனம் அவனுக்கு கணக்கு காட்டிற்று. 

இன்னமும் கைவிரல்கள் பெஞ்ஜில் வைத்து அழுத்திக் கொண்டும் கால்களை தரையில் பொறுமையில்லாமல் தட்டிக்கொண்டும் அவதிப்பட்டான். 

அந்தோ! 

முப்பது வயதில் ஒரு இளம் தாய்! கைகளில் பூமாலையாக சின்னக்குழந்தை! கண்ணாடிக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள். 

அவன் அவளைப் பார்த்து விருட்டென்று எழுந்து அவளுக்கு இடம் கொடுத்தான். அவள் ஒன்று நடக்காததைப் போல பெஞ்சின் ஓரத்தில் பக்குவமாய் குந்திக்கொண்டாள். 

“ரோ… ரோ…. ரோ….” குழந்தைக்கு தாலாட்டு காட்டும் அவளையும் குழந்தையையும் பார்த்தான். அவள் ஏதோ அவனிடம் இறைஞ்சுவதைப் போல இருந்தது! 

“என்னம்மா? புள்ளைக்கு முடிவெட்டவோ?” 

“ஓம் அண்ணேன். குழந்தைக்கு சுகமில்லை. மயிர் வெட்டதான் வந்தனான்” அவள் இரக்கமான தொனியில் இறைஞ்சினாள் போல இருந்தது. “மூன்று பேர் இருக்கினம். பரவாயில்லையோ அக்கா” என்றார் முடிதிருத்துனர். 

“கன நேரமாகுமோ” 

“ஓ” 

அவள் அமைதியானாள். பின்னர், அவனைப் பார்த்து கண்களைச் சுழலவிட்டான். அவன் நின்ற கோலம் அவளுக்கு புரிந்தது. நிச்சயமாக அடுத்தமுறை அவன்தான்! 

அவன் மீண்டும் அவளைப் பார்த்தான். அவளின் மடியில் இருந்த குழந்தையைப் பார்த்தான். குழந்தையின் முகத்திற்கு வெட்டிய ஓரிரு தலைமுடிகள் வந்து விழுந்தன. குழந்தைக்கு நோகாதவாறு அவள் அவற்றை மெல்ல பொறுக்கி. வீசிக்கொண்டிருந்தாள். 

“ந்தா…. நா….. போறேன். ஏம்புட்டு சான்ச இந்த புள்ளைக்கு கொடுங்க” அவன் எல்லோருக்கும் கேட்கும்படியாக உரக்கச் சொல்லிட்டு கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு விருட்டென்று வெளியில் இறங்கி நடந்தான். 

– 25.10.2009, தினக்குரல்.

– தகவம் பரிசுக்கதைகள் – தொகுதி 3, பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, முதலாம் பதிப்பு: மார்ச் 2016, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *