உயர்வென்ன தாழ்வென்ன
கதையாசிரியர்: அல்போன்ஸ் மோசஸ்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2026
பார்வையிட்டோர்: 84

சபரி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன். எட்டாவது வரைதான் பள்ளிக் கல்வி அவனுக்கு எட்டியது. அதிக படிப்பு இல்லாத காரணத்தினால் ஊரில் அவ்வப்போது கிடைக்கும் ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று வயிற்றைக் கழுவி வந்தான். காலப்போக்கில் திருமணமும்; செய்து கொண்டான். அதற்குப் பரிசாக ஒரு அழகான பெண் பிள்ளை பிறந்தது. அதைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க ஆரம்பித்தான்.
தனக்குக் கிடைக்காதக் கல்வியையும் அறிவையும் தன் பிள்ளை முழுவதுமாகப் பெற வேண்டும் என்று வைராக்கியமாக அவளை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தான். அவள் பெயர் சாலினி. அவளும் மிகச் சிறப்பாகப் படித்து அவளது வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்;தாள்.
சபரியின் நல்ல நேரம் அவனுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் காவலாளி வேலை கிடைத்தது. அதில் வருகின்ற சம்பளம் மற்றும் மிகைப் பணித் தொகையை வைத்துக் கொண்டு சாலினியின் பள்ளிக் கட்டணம் செலுத்தி வந்தான். பள்ளிக்குப் பக்கத்திலேயே அவனது அலுவலகமும் இருந்தது. அதனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அலுவலகம் செல்வதற்கு முன்பு சாலினியை பள்ளியில் சேர்த்து விட்டு பிறகு வேலைக்குப் போவதும் உண்டும். தன் மகளிடம் தான் பக்கத்திலிருக்கும் நிறுவனத்தில் மேனேஜராகப் பணிபுரிவதாக பொய் சொல்லி வைத்திருந்தான்.
ஒரு நாள் அவனுக்கு சாலினி படிக்கும் பள்ளியிலிருந்து கைபேசியில் அழைப்பு வந்தது. சாலினியின் வகுப்பு ஆசிரியை பேசினார். வீட்டுப் பாட நோட்டுப் புத்தகத்தில் பெற்றோர் கையொப்பம் இட வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்த போதிலும் உங்கள் பெண் நோட்டுப் புத்தகத்தில் கெயெழுத்து வாங்கி வரவில்லை. இன்று ஆடிட்டிங் இருப்பதால் அவளின் நோட்டுப் புத்தகத்தில் உங்களது கையொப்பம் அவசியம் தேவை. எனவே அவளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அனுப்புகிறேன். அந்த நோட்டுப் புத்தகத்தில் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கவும் என்று கூறினார்.
சாலினியும் சபரிக்குப் போன் செய்து அப்பா டீச்சர் வீட்டுப் பாடம் நோட்டு புத்தகத்தில் உங்கள் கையொப்பம் வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருக்கின்றார் நான் உங்கள் அலுவலகம் வருகிறேன் என்றாள்.
சபரிக்கு தூக்கிவாரிப் போட்டது. நாம் இதுவரை அலுவலகத்தில் மேலாளர் வேலை செய்வதாகக் கூறியிருக்கின்றோமே. இங்கே வந்து நான் செக்யூரிட்டி வேலை பார்ப்பது அவளுக்குத் தெரிந்தால் என்ன ஆவது. இப்போது மகள் வந்துப் பார்த்தால் அவமானமாகப் போய் விடுமே என்ன செய்வது என்று குழம்பிப் போனான். அதே சிந்தனையில்; இருந்ததால் பக்கத்தில் முதலாளி வந்து நின்று கொண்டிருப்பது கூட அவனுக்குத் தெரியவில்லை.
முதலாளி மிக நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்ன சபரி நின்று கொண்டே தூங்குகின்றாயா என்று கேட்டார். இல்லை ஐயா என்று தன் மனதில் உள்ள பாரத்தை அவரிடம் கொட்டித் தீர்த்தான். அது சரி அதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்டார்.
ஐயா ஒரே ஒரு உதவி. நான் இந்த நிறுவனத்தில் மேனேஜராகப் புணிபுரிவதாக என் மகளிடம் பொய் சொல்லி வைத்திருக்கின்றேன். அவள் என்னைப் பார்க்க வரும்போது நான் அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வது போல நடிக்க அனுமதி தர வேண்டும். என்னைப் பார்க்க வரும் மகள் என்னைப் பார்க்கும் போது அப்பா பெரிய வேலைதான் செய்கிறார் என்ற நினைப்பில் அவள் பூரிப்படைய வேண்டும் என்று தயங்கித் தயங்கிக் கூறினான்.
அதைக் கேட்ட அவர் சிரித்துக் கொண்டே சபரி வேலையில் உயர்வென்ன தாழ்வென்ன. எந்த வேலை செய்தால் என்ன. ஏன் உனது வேலையை தவறாக, தரக்குறைவாக கருதுகின்றாய் என்று கூறி எனக்கு இதில் உடன்பாடில்லை இருந்தாலும் உனது ஆசைக்கு ஒரு வாய்ப்பளிக்கின்றேன். இன்று நமது கணக்குப்பிள்ளை வேலைக்கு வரவில்லை அவர் இடத்தில் நீ அமர்ந்து கொள் கூறி விட்டு உள்ளே சென்று விட்டார்.
சபரியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. முதலாளியைப் பார்த்து இரு கை கூப்பி கும்பிடு போட்டு விட்டு உடனே ஓய்வறைக்குச் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு கணக்கர் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான். சபரியின் மகள் சாலினி உள்ளே வந்தாள். அப்பாவைப் பார்த்தாள். நோட்டுப் புத்தகத்தில் கையொப்பம் வாங்கினாள். அந்த நேரத்தில் முதலாளி அங்கு வந்தார். அவர் அவளைப் பார்த்து பாப்பா என்ன படிக்கின்றாய் எங்கே படிக்கின்றாய் என்று கேட்டார். அவளும் தான் படிக்கும் வகுப்பு மற்றும் பள்ளியி;ன் பெயரைச் சரளமாக ஆங்கிலத்தில் கூறினாள். அதைக் கேட்ட அவர் ஆச்சரியப்பட்டு நல்லா படிக்கணும் என்று அறிவுரை கூறினார்.
முதலாளி பக்கத்தில் நின்று கொண்டிருந்த போதிலும் சாலினி சபரியைப் பார்த்து அப்பா உண்மையிலேயே நீங்கள் இந்த வேலைதான் செய்கின்றீரா என்று கேட்டாள். அதைக் கேட்ட சபரி ஆம் அதிலென்ன உனக்குச் சந்தேகம்; என்றான். இல்லை அப்பா. நீங்க பொய் சொல்றீங்க. வாசலில் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கின்றேன் என்று கூறிய போது வாசலில் இருந்தவர் ஓ நம்ம செக்யூரிட்டி சபரியின் மகளா நீ ரொம்ப அழகா இருக்க என்று கூறி என்னை உள்ளே அனுப்பினார்.
நான் வந்தது தெரியாமல்தான் நீங்கள் உங்கள் முதலாளியிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள். நீங்களும் முதலாளியும் பேசியதை நான் கேட்டேன். அப்போது நீங்கள் உங்கள்; முதலாளியிடம் உள்ளே அலுவலக அறையில் அமர்ந்து வேலை செய்ய அனுமதி கேட்டீர்கள். அதைக் கேட்ட போது எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை செய்து கொண்டே நகரத்தில் வாழும் செல்வந்தர்களின் பிள்ளைகள் படிக்கும் பணக்காரப் பள்ளியில் தன் மகளும் படிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு எனக்காகப் பணம் கட்டி படிக்க வைக்கும் உமது உயர்ந்த உள்ளத்தைப் பற்றி நான் பெருமையாக நினைத்ததுண்டு. அப்பா என் மீது எவ்வளவோ அக்கறை வைத்துள்ளார். பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளோடு என்னையும் சமமாக படிக்க வைக்கின்றார் என்று நான் நினைத்துப் பூரித்துப் போனதுண்டு. ஆனா நீங்க எனக்காக முதலாளியிடம் பேசி இப்படி இந்த இடத்தில் அமர்ந்திருப்பது ஏன் அப்பா. வேலையில் பாகுபாடு பார்ப்பது தவறு இல்லயா என்று மனதினில் பட்டதை சட்டென்று சொல்லி முடித்தாள்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த முதலாளி கைதட்டி சபாஷ் இப்படித்தான் பேச வேண்டும். இந்த சின்ன வயதிலேயே இத்தகைய பரந்த மனப்பான்மையும் உள்ளதை உள்ளபடி சொல்வதையும்; பார்த்த நான் அதிக மகிழ்ச்சி அடைகின்றேன். தான் என்ன வேலை செயகிறோம் என்பது தன் பிள்ளைக்குத் தெரியக் கூடாது. அப்படித் தெரிந்தால் மகளின் மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடுமோ என்று பயந்துதான் உன் அப்பா என்னிடம் அப்படி பேசினார். அவரது எண்ணமெல்லாம் உன்னை எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும் என்பதுதான். நீ கவலைப்படாதே உனது அறிவுத் திறமையையும் புத்திக் கூர்மையையும் நான் பெரிதும் பாராட்டுகின்றேன். உனது படிப்பிற்கான மொத்த செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்; என்று கூறினார்.
சபரியைப் பார்த்து சபரி எந்த வேலையாக இருந்தாலும் கவலைப்படக் கூடாது. மாறாக அதில் முத்திரைப் பதித்து அதிலிருந்து கடின உழைப்பாலும் நேர்மையாலும் வேலையில் காட்டும் உண்மைத் தன்மையாலும், முன்னுக்கு வர வேண்டும் என்று கூறினார். சபரிக்கு தர்மசங்கடமாகப் போய் விட்டது. எந்த வேலையையும் குறைவாக எடை போடக் கூடாது என்ற உண்மை அப்போது அவனுக்குப் புரிய ஆரம்பித்தது.
| நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அகந்தை வெறி!
மா.சித்திவினாயகம்
June 26, 2026
அன்புள்ள அப்பாவுக்கு…
நாகரத்தினம் கிருஷ்ணா
June 26, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
June 26, 2026