கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 24, 2026
பார்வையிட்டோர்: 129 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குளத்தில் குப்புறப் படுத்தபடி மிதந்து கிடந்தான் ராசு. குளத்து நீரின் குளிர்ச்சி உடல் முழுவதும் பரவி உள் உறுப்புகளின் அடி ஆழம்வரை சென்று பதப்படுத்தியது. அதன் சுகம்… அப்படியே மிதந்தபடி கிடந்தான். 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருந்தது குளம். அதன் மூச்சு சிறு அலைகளாய் தோன்றி பெரிய அலைகளாய் உருமாறி கரையிலிருந்த கற்களில் மோதி “க்லுக்… க்லுக்” என்று பின் வாங்கியது. அதன் ஆட்டத்திற்கேற்ப அவன் உடல் அலையோடு அசைந்து கொடுத்தது. அலைகளின் வேகத்திற்கேற்ப உடல் அசைந்து கொடுத்தாலும், மனம் மட்டும் கல்லாய் மல்லாந்து கிடந்தது. மனதை அசைக்க முடியாதபடி அதில் பத்துவின் நினைவுகள் பாறாங்கல்லாய் கனத்தன. 

“பத்து… பத்து…வென குளத்தின் அடி ஆழத்திலிருந்து அதன் மூச்சு அவள் பெயரை உச்சரித்து எதிரொலிப்பதாய் அவன் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. குளத்தின் குரலில் அவள் பெயர் ஒலிக்கும் போதெல்லாம் மனதின் கனம் அதிகரித்து. உடல் நீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து மேலெழுந்தது. 

இவ்வளவு நாட்கள் அவளை பிரிந்திருந்ததில்லை. பிரிதலின் வலி… பகிர்ந்து கொள்ள யாருமில்லாதிருந்த வேளையில் இப்போது தன் ஆசைக்குளம். இப்படித்தான் வாழ்க்கையின் பல கட்டங்களில் குளம் அவனோடு பலதையும் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறது. 

மனதின் வலி கண்ணீராய் வெளிப்பட்ட போது நீர் அதிர்ந்து அலையின் வேகம் அதிகரித்து. உடலின் அசைவு அதற்கேற்ப ஆடி அடங்கியது. 

குளத்தின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு நன்கு பரிச்சயமானது. அசைவின் பின் ஏற்படும் மாற்றம் அவன் அறிவான். சிறுவயதிலிருந்தே குளத்துடனான உறவு அவனுக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. 

முதன் முதலாய் அப்பாவின் கரம் பற்றி குளிப்பதற்காக குளத்தினுள் இறங்கிய நாளிலிருந்து, இன்று வரை அது அவனுக்கு உற்ற நண்பனாய் பல விடயங்களை பகிர்ந்தும், கற்பித்தும் இருக்கிறது. 

பள்ளிக்கூடம் விட்டு குளக்கட்டு வழியாக வரும் போதெல்லாம் குளத்தின் படர்ந்த தேகம் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும். சில நாட்களில் அப்படியே ஆடைகள் களைந்து உச்சியில் குட்டும் வெயிலை குளத்து நீரில் அமிழ்த்தி சுகம் கண்டிருக்கிறான். தாமரைக் கொடிகளை பிடித்தபடி கரையோரமாக முங்கி முங்கி குளித்துக் கொண்டிருந்தவனுக்கு, குளம், ஒரு நாள் நீச்சலடிக்கக் கற்றுக் கொடுத்தது. 

நீச்சல், அவனை குளத்தின் ரகசிய பிரதேசங்களுக்கெல்லாம் கொண்டுசென்றது. ஓரிடத்தில் முங்கி உள் நீச்சலில் குளத்தின் அடிவயிறு தடவியபடி தாமரைக் கொடிகளிடையே வெகுதூரம் சென்று பிறிதொரு இடத்தில் தலைகாட்டுவான். சேற்றுக்குள் முங்கி எழும் ஜப்பான் மீன்களின் முதுகு தடவி, அச்சம் காட்டி மீனோடு மீனாய் நாலா பக்கமும் நீந்தி கரையேறும் போது ஏற்படும் சுகம் ! அப்படியே கரையில் படுத்தபடி அனுபவிப்பான். அம்மாவுக்கு பயம். 

“டேய் தம்பி குளத்துள கனதூரம் போகாதடா… சுழி சுற்றிக் கிடக்கு” 

என்று ஏதோ ஒரு காலத்தில் சுழியில் சிக்கி இறந்த இரத்தினத்தின் கதையை எடுத்து விட்டு உச்சு கொட்டுவாள். குளத்தின் சுழிகள் அவனுக்கு அத்துபடி. அதை ஏறி மிதித்து குப்புற அடிப்பதாய் இருக்கும் மரத்திலிருந்து தண்ணீருக்குள் பாயும் பாய்ச்சல். ஒரு நாள் மரத்தின் உச்சியிலிருந்து குளத்துக்குள் பாய்ந்த பாய்ச்சல் கண்டு, யாரோ அப்பாவின் காதில் வைக்க, உச்சியிலிருந்து தண்ணீரில் பாய்ந்த போது ஏற்பட்ட வலியை மறக்கடிக்கச் செய்தது அப்பாவின் பிரம்படி. அதன் தாக்கம் இரண்டு நாள் காய்ச்சலில் படுத்துக் கிடந்தான். 

பயமென்றால் அப்பாவுக்கு மட்டும் தான். அப்பாவின் பார்வை அடிவயிற்றை கலக்கும். அவரது கண்டிப்பின் பல வலிகளை குளத்தோடு கரைத்துவிட்டிருக்கிறான். சூரியன் மறைந்த பின்னும் இருட்டு தனிமையில் குளத்தினுள் கிடந்த பல நாட்களில் கரையிலிருந்து அப்பாவின் அதட்டல் குளத்தையே அதிரவைக்கும். அப்போதெல்லாம் இருட்டு பயமில்லை. எத்தனை இரவானாலும் நடமாடித் திரியலாம். இருந்தும் அப்பாவுக்கு ஆறேழு மணிக்குள் எல்லோரும் வீட்டிலடைய வேண்டுமென்ற கண்டிப்பு. அதை பலமுறை மீறி அடியும் திட்டும் வாங்கியிருக்கிறான். 

வீட்டின் ஏக்கம் வெகுவாய் மேலெழ, அதில் பத்துவின் நினைவுகள் சுழி போல் சுற்றிச் சுற்றி வந்தன. குளத்தின் விடாத அலைகளின் அசைவு அவன் நினைவுகளை உலுப்பி உலுப்பி விட்டன. 

2 

இருட்டின் மூச்சு மூலை முடுக்கெல்லாம் ஒலித்துத்திரிய அதையும் கடந்து நிசப்தத்தின் வடிவத்தை குழைத்து தள்ளியது அவளது மூச்சின் ஒலி. அது அச்சத்தின் ஒலி. அது அடிவயிற்றிலிருந்து உருண்டு உருண்டு மேலெழுந்து நெஞ்சை அழுத்தியது. 

காற்றின் அசைவற்று உஷ்ணமான இருட்டின் தடங்கள் மெதுமெதுவாய் நகர, அவளிடமிருந்து நித்திரை வெகுதூரம் ஊருக்குள் ஊளையிட்டபடி அலைந்தது. உஷ்ணத்தின் பிசுபிசுப்பு யன்னல் இடுக்குகளுக்கூடாக அவள் முகத்திலறைந்து நீராய் வடிய, அதனோடு போட்டி போட்டபடி கண்ணீரும்! 

இத்தனை நாட்கள் அவனை பிரிந்திருந்ததில்லை. அதன் ஏக்கம் அவளை வெகுவாக உருக்கியிருந்தது. காற்றின் திசையெல்லாம் கேட்கும் குரல்கள் அவன் குரல் போலவே மாயை காட்டி மறைந்தன. 

“பத்து… நான் டவுனுக்கு போறன்… உனக்கு என்ன வேணும்…” 

அவன் இறுதியாக பேசிய வார்த்தைகள். எதுவுமே கேட்காது நாணத்தில், சிரித்து காதலாய் விடை கொடுத்ததை நினைக்கும் போதெல்லாம் அவள் மனம் மயங்கி, கண்கள் மேலே சொருகி சரிந்து விழுவாள். அப்போதெல்லாம் யாராவது தாங்கிப் பிடித்து நீர் தெளித்து அவளை ஆசுவாசப்படுத்த வேண்டி வந்தது. அநேகமாக அம்மாதான் பக்கத்திலேயே இருப்பாள். அவளோடு மல்லுக்கட்டி கெஞ்சிக் கூத்தாடி ஆறுதல் படுத்துவாள். 

“பிள்ள அழாத… அவன் எப்படியாயும் வருவான்… அந்த நரசிம்மர் எங்கள கைவிடான்” 

அம்மாவின் வார்த்தைகள் அவள் காதில் புகாமலேயே நழுவி விடும். திண்ணையில் குந்தி வாசலை பார்த்தபடியே இருப்பாள். ஒழுங்கையில் மனித நடமாட்டம் கண்டால் மனம் திடுக்கிடும். அது அவனாக இருக்கக் கூடாதா என மனம் ஏங்கும்… 

இன்றோடு ஐந்து நாட்களாயிற்று. ஒரு தகவலுமற்று, அவன் பற்றிய எதிர்பார்ப்பின் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க அதில் அவளது கண்ணீர் நிரம்பி வழிந்தது. 

தனக்காக டவுனிலிருந்து என்ன கொண்டு வருவான்? காதலின் ஏக்கத்தோடு காத்திருந்தவளுக்கு மாலை மறைந்து இருள் சூழ, மனதுக்குள் ஒரு உதறலைக் கொடுத்தது. எங்கு சென்றாலும் ஆறு மணிக்கெல்லாம் வீடு திரும்புவான். மணி இரவு பத்தாகியும் வீடு திரும்பாதது… பதறியபடியே காத்திருந்தாள்… அன்று தொடங்கிய காத்திருப்பு, இன்னும் குந்திய படியே… அவன் மட்டும் வரவேயில்லை. 

“பத்மினியக்கா… ராசு அண்ணன்ட சைக்கிள் குளக்கட்டு பள்ளத்துல கிடக்கு… ஆனா அவர காணேயில்ல…” 

விடியற் காலையிலேயே சந்தைக்கு போய் வந்த பக்கத்து வளவு முத்து கூறியதை கேட்டு வீடே அலறியது. 

“ராசுவைக் கடத்திப் போட்டாங்க” ஊருக்குள் பரவியது. அவனுடைய அம்மா அப்பாவுடன் கூடவே பொலிசுக்கு ஓடினாள். அவர்கள் கைவிரித்து விட இயக்க ஆபிசுக்கு ஓடினாள். 

“நாங்க அப்படி யாரையும் கொண்டு வரயில்ல” துரத்தியடித்தார்கள். மனித உரிமை ஒபிசில் பல பேரோடு பேராய் அவன் பெயரையும் பதிவு செய்து கொண்டார்கள். 

சுடுகாட்டின் நிழல் வீட்டில் பதிவதாய் அவள் கனவுகள் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள். தூக்கம் துறந்த காத்திருப்பில் அவன் நினைவுகள் சுற்றி சுற்றி வந்தன. 

நாய்களின் நீண்ட ஊளை, இரவின் செவிகளை கிழித்து விடுவதாய் இருந்தது. பயமும், துக்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைய, வேகமாய் மேலெழும் அவளது மூச்சு ராசு… ராசு… என்று தேம்பியது. 

3

காற்றின் வேகத்தோடு அலை குதித்தெழும்ப அதற்கு ஈடுகொடுப்பதாய் அவன் உடல் எழுந்து வீழ்ந்தது. அதை பொருட்படுத்தாது அவன் எண்ணமெல்லாம் கட்டிலடங்காது பத்துவை நினைத்து தவியாய் தவித்தபடி அலைந்து திரிந்தது. 

அவள் கரங்களை பற்றியபடி குளக்கட்டில் நடந்து திரிந்த நாட்கள், குளத்தோடு ஒண்டி நிற்கும் மதுர மர மறைவில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த பொழுதுகள், அவன் மனக்கண் முன் அடுக்கடுக்காய் தோன்றி மறைந்தன. குளக்கட்டில் அமர்ந்தபடி, அவள் வரவுக்காக காத்திருந்த அந்த சுகமான நாட்களின் வனப்பு இன்னும் குன்றாமல் அவன் நினைவுகளில் தலைகாட்டி நின்றன. 

பிள்ளையார் கோவில் வளைவில் அவள் புள்ளியாய் தெரியும் போதே மனம் துள்ளி ஒரு குறுகுறுப்பில் நர்த்தனமாடும். காத்திருப்பின் சுகம், அணு அணுவாய் அனுபவித்தவனுக்கு, இன்று அதன் வலி நெஞ்சை அடைத்தது. 

குளத்தின் விசாலமான அமைதி அவன் துக்கத்தில் பங்கு கொண்டதாய் இருந்தது. அது அவனுக்கு இதமானதொரு ஆறுதலைக் கொடுத்தது. 

குளத்தில் நீந்தித் திரிந்து கொண்டிருந்தவனுக்கு, குளம் ஒரு நாள் படகு விட கற்றுக் கொடுத்தது. அது மாரியின் படகு. இரு பக்கமும் நீரைக் கிழித்து தள்ளி விட்டபடி அது நகரும் லாவகம் அவன் மனதைக் கொள்ளை கொண்டது. அதைப் புரிந்துக் கொண்டதைப் போல், ஒரு நாள் மாரி அவனுக்கு படகு விட கற்றுக் கொடுத்தான். மாரிக்கு மீன்பிடியற்ற நாட்களில் படகு அவன் சொத்தாயிற்று. படகை அவன் ஓட்டியதை விட, அவனுக்கு இலகுவாய் குளம் லாவகமாய் தன்னுள் நகரவிட்டு ஆர்ப்பரித்தது. 

அவன் நினைவுகள் படகோடு குளத்தின் வெகு தூரத்திற்கு மெதுமெதுவாய் நகர்ந்தன. 

யாருமற்ற ஒரு மாலைப் பொழுதில், பத்துவை படகில் ஏற்றிக்கொண்டு குளத்தின் நடுவுக்குச் சென்றதும், குளத்தை சாட்சியாய் வைத்து அவளுக்கு கொடுத்த முதல் முத்தமும் மனதின் அலைகளில் முட்டி மோதின. 

அன்று அந்த முத்தம் கொடுத்த அதிர்வு இன்றும் அவனை சிலிர்க்க வைத்தது. அந்த சிலிர்ப்பில் பத்துவின் ஏக்கம் உடலை பத்தி எரித்தது. 

“தம்பி… நீ குளக்கட்டு வழிய, அந்த பிள்ளயோட சுத்தித் திரியிறது நல்லாவே இருக்கு…. 

அம்மா ஒரு நாள் கடிந்து கொண்ட போது, அவனுக்குள் ஏற்பட்ட பூரிப்பான பயம். உள்ளுக்குள் சிரித்தபடியே அம்மாவைப் பார்த்தான். 

அம்மாவுக்கு தெரியும், அவனுக்கும், பத்துவுக்குமிடையிலான காதலை பற்றி… அவளுக்கொன்றும் அதில் எதிர்ப்பில்லை. அப்பா தான் ஆரம்பத்தில் கத்தித் தீர்த்தார். பின் ஏனோ அவன் மனமறிந்து விட்டு விட்டார். பத்துவின் வீட்டாருக்கு, அப்பாவில் நல்ல மரியாதை, அதனால் அவர்களுக்கும் அவனில் விரோதமொன்றுமில்லை. 

ஆனாலும், அவனுக்கு வீடுகளுக்கு தெரியாமல் பத்துவுடனான சந்திப்புகளில் உள்ள சுகம் மிகவும் பிடித்தமானதொன்று. கூடவே எப்போதும் குளமும். 

4 

தூக்கத்தின் விளிம்புகளில் நின்றபடி, அவள் அவனுக்காக காத்திருந்தாள். அதன் தாக்கம் மெதுவாய் கண்ணயரும் போது திடுக்கிட்டு எழுந்தாள். அடி வயிற்றிலிருந்து மேலெழும் அந்த வலி அவளை படுக்கையில் புரட்டி எடுத்தது. கண்களின் விளிம்பில் கண்ணீரின் சருகுகளின் சரசரப்பு செவிகளை தாக்கியது. அதில் ராசுவின் குரல் கேட்பதாய் அவள் துடிதுடித்தெழுந்தாள். 

குப்புறப்படுத்தபோது கழுத்தில் கட்டியிருந்த சுரை நெஞ்சை அழுத்தியது. அதை எடுத்து கண்களில் ஒத்தியபடி பிரார்த்தனை செய்தாள்.

அது, அம்மாவால், அவன் மீண்டும் வந்து, அவள் துயர் நீங்க நரசிம்மர் கோயிலுக்கு சென்று பூசை செய்து மந்திரித்துக் கட்டியது. சுரை என்பதை விட அம்மாவின் நம்பிக்கை. அதை மெதுவாய் விரல்களால் தடவி விட்டாள். ஏனோ அவன் வருவான் என்ற நம்பிக்கை அவளுக்குள் சற்று எட்டிப் பார்த்தது. 

பத்மினி என்ற தன் பெயரை அவன் மட்டும் தான் பத்து என்று அழைப்பான். அப்படி அவன் அழைப்பதில் ஒரு அழகிருப்பதாய் அவள் உணர்வாள். அதனாலேயே அப்படி அழைப்பதில் அவளுக்கு ஒரு மயக்கம். 

இப்போது கூட இருட்டைக் கிழித்து வரும் மெல்லிய உஷ்ணக் காற்றில் “பத்து… பத்து…”வென அவனது குரல் தன்னை உசுப்பி விட்டுச் செல்வதாய் உணர்ந்தாள். 

யன்னல் கதவுகளை திறந்துவிட்டு இருட்டின் முகத்தை நேருக்கு நேர் உற்று நோக்கினாள். அந்தப் பார்வையில் இருட்டுக்குள்ளிருந்து அவன் வரமாட்டானா? என்ற ஏக்கம் நிறைந்திருந்தது. 

வன்னிப் பக்கமாய் இடை விடாது கேட்கும் செல் அடிக்கும் சப்தம் அவளுக்குள் பிடிபடாத ஓர் உணர்வை கொடுத்தது. 

“பிள்ள… யுத்தம் வரும் போல கிடக்கு… ஊர் நிலமையும் வர வர மோசமாகுது… ராசுகிட்ட பேசி சீக்கிரமா… கல்யாணத்த முடிப்பமே…” 

அன்று, அம்மா கூறிய வார்த்தைகள் அவளுக்குள் ஏற்படுத்திய பூரிப்பின் உற்சாகம் இருட்டில் தோன்றி மறைந்தது. கல்யாணத்திற்கு தேதி குறித்தாயிற்று. ஊருக்கே அறிவித்திருக்கையில் தான் அவனின் திடீர் மறைவு. 

“அவருக்கு புலிகளோட ஏதும் தொடர்பிருந்ததா?…” 

பொலிஸ் துருவி கேட்ட போது உள்ளுக்குள் ஏற்பட்ட பீதியும், அவனது அப்பாவியான முகமும் அவளை சுழன்றடிக்கச் செய்தன. ஊரே உச்சு கொட்டி துக்கம் விசாரித்தபடி தன்னை சுற்றி வந்த போது வீட்டினறையின் மூலையில் முடங்கிக் கொண்டாள். 

கடந்த ஐந்து நாட்களாய் அவனை எதிர்பார்த்து குளத்திற்கு ஓடுவாள். முன் போல் அவன் தனக்காக குளக்கட்டில் காத்திருக்கமாட்டானா? என்று ஏங்குவாள். அவனில்லாத குளம் வெறுமையாய் வாடியிருப்பதாய் அவளுக்கு தோன்றியது. 

அவர்களது காதல் உறவுக்கு உற்ற தோழனாய் இருந்த இடம். தங்களது ஊடல், கூடல் எல்லாம் முன்னின்று பார்த்த குளம். இன்று அவனில்லாது வெறிச்சோடிக்கிடக்கிறது. 

குளத்தைப் போலவே தனக்குள் அவனில்லாத வெறுமையினை சகித்துக் கொள்ள முடியாது. அவளுக்கு நெஞ்சு அடைத்தது. அடைப்பின் தாக்கம் மூச்சு திணற தேம்பி தேம்பி அழுதாள். இருட்டுக்குள்ளிருந்து காற்று மீண்டும் பத்து பத்து என்றது. 

5 

பத்து மீது, தான் கொண்ட காதல் குறித்து, குளத்துடன் கண்ட கனவுகள் எவ்வளவு. எல்லாமே அதன் அலைகளின் பக்கங்களில் பதித்து வைத்திருப்பதைப் போல், அலைகள் புரண்டு புரண்டு அவனுக்கு ஞாபக மூட்டுவதாய் முட்டி மோதி உசுப்பியது. நினைவுகளின் உசுப்பலினால் அலையோடு புரண்டான். 

“பத்து… நாங்க கல்யாணம் கட்டி… அஞ்சு பிள்ளைகளாவது பெத்துகணும்…” 

என்று ஒரு நாள் குளக்கட்டில் வைத்து கேட்ட போது அவள் காட்டிய நாணம், அவளுக்கு நினைக்க நினைக்க மனம் ஏக்கத்தின் உச்சத்தை தொட்டது. 

மீண்டும் ஊர் யுத்த சூழலுக்குள் புகுவதை உணர்ந்த அப்பா, கண்டிப்பாக சொல்லி விட்டார். 

“தம்பி ராசு… இனி சுற்றித் திரிந்தது போதும்… நல்ல நாளாப் பார்த்து கல்யாணத்த முடிச்சுப் போடுவோம்…” 

அப்பாவை எதிர்த்து நிற்க முடியாது. சிறுவயதிலிருந்தே ஒரு நாளும் அப்பாவை எதிர்த்ததில்லை. பள்ளிக்கூடம் நிறுத்தி தோட்ட வேலையில் இறங்கிய போது கூட அப்பா ஒன்றும் கூறவில்லை. அதுபோலவே பத்மினியுடனான உறவிலும். 

அப்பாவுக்கு தெரியும் அவன் மனம். தள்ளி நின்று தன்னை வழி நடத்திய அப்பாவை ஒரு நாளும் எதிர்த்து நின்றதில்லை. 

பத்துவுடனான தன் கல்யாணத்திற்கு, நாள் குறித்து, காட் அடித்து, ஊருக்கே அழைப்பு வைத்து புது மாப்பிள்ளையாய் ஊருக்குள் வலம் வந்த நாளில்தான்… அவன் நினைவு அப்படியே ஒரு இடத்தில் சுற்றியது. 

“பத்து நான்… டவுனுக்கு போறன்… உனக்கு என்ன வேணும்…” 

ஆசையாய் கேட்ட போது, அவள் எதுவுமே பேசாது காதலாய் கண்களால், என்ன கேட்டிருப்பாள், யோசித்த படியே குளக்கட்டு வழியாக டவுனுக்கு வந்தது. பின் பத்துவுக்காக ஒரு சோடி கொலுசுக்காக கடை கடையாய் ஏறி இறங்கி, அழகான சோடி கொலுசையும் வாங்கிக் கொண்டு, சலூனில் மயிர் வெட்டி வீடு திரும்புகையில் இருட்டிவிட்டது. 

குளக்கட்டு வழியாக குளத்தோடு அளாவிய படியே வீடு வந்து கொண்டிருந்த போதுதான் மதுர மர வளைவில் அந்த வான் நின்று கொண்டிருந்தது. அதைக் கண்டு கொள்ளாது விலகி சைக்கிளை நகர்த்திய போது தான் அது நடந்தது. 

யார் அவர்கள்?… எதற்கென்று தெரியாது… வானுக்குளிருந்து குதித்த மூவர் தன்னை மூட்டையாய் அமுக்கி வானுக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றது… எல்லாமே கெட்ட கனவாக தோன்றி மறைந்தன. 

அன்றிலிருந்து இன்றுவரை பத்துவை பிரிந்த ஏக்கம், நெஞ்சுக்குள் அடைக்க அவர்கள் கேட்ட கேள்விகள் எதுவுமே காதில் விழாது கட்டையாய் கிடந்தது, அடித்த அடிகளின் வலிகளை அவள் நினைவுகளில் புதைத்து விட்டு படுத்துக் கிடந்தது… எல்லாமே அடுக்கடுக்காய் மேலேழுந்தன. 

பத்துவை பார்க்கப் போகும் நாளுக்கான எதிர்பார்ப்பில் காத்திருந்தவனுக்கு, அவர்களின் விடுவிப்பு உடலின் ரணமெல்லாம் மாயமாய் மறைந்து விட்டதாக உணர்ந்தான். அவளுக்காக வாங்கிய கொலுசுளை தேடினான். அது உரித்தெடுத்த காற்சட்டை பக்கெட்டில் இருப்பது ஞாபகம் வந்தது. மூலையில் வீசியெறிப்பட்டிருந்த காற்சட்டையை சுருட்டி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனை, அவர்கள் இருட்டோடு இருட்டாக வானுக்குள்ளிருந்து குளக்கட்டு பள்ளத்தில் தள்ளி விட்டார்கள். அவன் உருண்ட படியே குளத்தில் வந்து விழுந்தான். அவனது ஆசைக் குளம் அவனை வாரி அனைத்துக் கொண்டது. நீரின் குளிர்ச்சி பட மனம் பத்து பத்து வென அலைந்து திரிந்தது. 

6 

இருட்டுக்குளிருந்து வரும் அவனின் குரல், அவளை விடிய விடிய தூங்க விடாது அலைக்கழித்தது. இடையிடையே இரண்டு மூன்று முறை அம்மா தலை தடவி ஆதரவாய் அணைத்து படுக்கச் செய்து சென்றாள். விடியும் தறுவாயில் அம்மாவும் இருட்டைப் பார்த்தபடி அவளுக்காக விழித்திருந்தாள். அம்மாவை அணைத்தபடி இருட்டைக் காட்டி காட்டி அழுதாள். 

“அம்மா… வெள்ள வான்ல கொண்டு போனா… விட மாட்டாங்கன்று.. சொல்றாங்களே” தேம்பினாள். 

“நீ அழாத பிள்ள… ராசு குற்றம் செய்யாதவன்… யாரென்றாலும் அவன விட்டுப் போடுவாங்கள்…” 

அம்மா கலங்கியபடியே தேற்றினாள். இருட்டுக்குள்ளிருந்து அவன் குரல் கேட்கும் போதெல்லாம் அம்மாவை உசுப்பி 

“அம்மா… அவர் வந்திட்டார் போல…” 

“அவன் வருவானடி… விடியக்க பாப்பம்… நீ பேசாம படு…” 

எவ்வளவு தேற்றினாலும் அம்மாவின் ஆறுதல் அவளைத் தணிக்கவில்லை. உள்ளத்தின் அடி வேர்களை பிடுங்கி எடுப்பதாய் அவள் மனம் அதிர்ந்து அதிர்ந்து அடங்கியது. அவள் கண்களில் வழியும் கண்ணீரைப் போல் இருட்டு வடிந்தபடியே விடிந்தது. 

விடியலின் பனி உருகிவழியும் முன்னே அம்மாவின் அலறல் அவளை அவன் நினைவுகளிலிருந்து உசுப்பியது. முற்றத்திற்கு வந்த போது அம்மா, ராசு.. எண்ட மோனே… என்று கத்திக் கொண்டு படலையை தாண்டி குளக்கட்டு பக்கமாக ஓடினாள். கூடவே பக்கத்து வளவு முத்துவும். 

ராசு… ராசு வென மனம் துடிக்க பின்னாலேயே ஓடினாள். குளக்கட்டை அடைந்த போது அங்கு கூட்டம் கூடியிருந்தது. நெஞ்சு துடி துடிக்க கூட்டத்தை நோக்கி ஓடினாள். கூட்டம் குளத்து நீரை பார்த்தபடியே ஒதுங்கியது. கூட்டத்தை விலத்தியபடி குளக்கட்டு பள்ளத்தில் பாய்ந்தாள். 

ரா…….சு 

அங்கே தன் ஆசைக் குளத்தில் ராசு பிணமாக மிதந்து கிடந்தான். 

– ஆகஸ்ட் 2009, ஞானம்.

– தகவம் பரிசுக்கதைகள் – தொகுதி 3, பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, முதலாம் பதிப்பு: மார்ச் 2016, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *