பாண் போறணை
கதையாசிரியர்: கே.ஆர்.டேவிட்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி 
கதைப்பதிவு: June 24, 2026
பார்வையிட்டோர்: 238
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தினசரி உப்புநீரையே உறிஞ்சி, உப்புக்காற்றையே சுவாசித்ததாலோ என்னவோ… சீரான வளர்ச்சி குன்றி குறண்டிப்போன பூவரசு மரங்கள்… தனக்குள்தானே வெந்து வெதும்பிப் போன ஒரு அபலையின் தோற்றம். அந்தப்பூவரசு மரங்களில்… உடல்முழுவதும் அனுபவக் கண்டல்கள்… கடற்கரைக்கும் பிரதான வீதிக்கும் இடைப்பட்ட மேட்டுநிலத்தில் கடற்கரையை அண்மித்து குறண்டிப்போன அந்தப்பூவரசுமரங்கள் வரிசையாக நிற்கின்றன.
பொருத்தமற்ற சுவாத்தியத்தினால் அந்தப் பூவரசுமரங்கள் குறண்டிப்போனாலும்… அந்தப் பூவரசுமரங்கள் மேலால் அடர்த்தியான… பூவரசம் பூக்கள்… குறண்டிப்போன உடலுக்குள்ளும்… இயல்பான உணர்வுகளின் வெளிப்பாடுகள்…
புத்தளம், கடற்கரை.
ஆரவாரித்தெழும்புகின்ற பெரும் அலைகளின்றி சிறிய அலைகளோடு அமைதியாகக் காட்சி தரும் கடற்பரப்பு… வரிசையாக நிற்கும் குறண்டல் பூவரசுமரங்கள்… சீரான இடைவெளிகள் உடன் கோடடித்தது போல வரிசையாக நிற்கும் அந்தக் குறண்டல் பூவரசுமரங்களின் கீழ் சீமேந்தினால் கட்டப்பட்ட ஆசனங்கள்… தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் சிறியதொரு இறங்கு துறை… இந்த இறங்கு துறையை அண்மித்து சிறியதொரு ஐஸ்கிறீம் கடை. புத்தளம் கடற்கரை பற்றி இவ்வளவுதான் கூறலாம்.
இந்தக் கடற்கரையில் நின்று மேற்கு நோக்கிப் பார்த்தால் சீனநாட்டரசினால் நிர்மாணிக்கப்படும் நுரைச்சோலை அனல்மின் நிலையக் கோபுரம் மங்கலாக ஆனால் இனங் காணக்கூடியளவிற்குத் தெரியும். இந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தைப் பார்ப்பவர்களில் ஒரு சாரார் அதன் பிரமாண்டத்தைப்பற்றிப் பேசிக்கொள்கின்றனர். இன்னும் சிலர் சீனா நாட்டரசின் அரசியல் கபடத்தனமென்றும் பேசிக் கொள்கின்றனர்.
புத்தளம் கடற்கரையோடு அமைந்திருக்கும் பிரதானவீதியில் புத்தளம் நகரத்தின் நுழைவாயிலில் ஒரு முச்சந்தி. மன்னார் பிரதானவீதி வந்து புத்தளம் பிரதான வீதியோடிணையும் முச்சந்தியிது. சந்தியின் ஒருபுறம் மீன்சந்தையும் மற்றைய இருபுறங்களும் கடைத்தொகுதிகளும் அமைந்துள்ளன. மூவின மக்களும் வாழ்கின்ற சிறியதொரு நகரம். புத்தளம் பிரதானவீதியோடு வந்திணையும் மன்னார் வீதியில் கல்லெறி தூரம் வரை நடந்து இடதுபக்கமுள்ள குறுக்கு வீதியில் இறங்கி நடந்தால் கடற்கரையை வந்தடையலாம்.
புத்தளம் நகரப்பகுதியிலும் நகரத்தை யண்டிய பகுதிகளிலும் வசிப்பவர்களுக்கு இந்தக் குறுக்கு வீதியும் இந்தக்கடற்கரையும் மிகவும் பழக்கப்பட்ட இடம் மட்டுமல்ல, மிகப் பிரபலமான இடமென்று கூடக் கூறலாம்.
தினசரி அதிகாலை ஐந்து, ஐந்தரை மணி தொடக்கம் ஏறத்தாழ காலை ஒன்பது மணிவரை இந்தக்குறுக்கு வீதியும் கடற்கரையும் கலகலப்பாகவே இருக்கும். இரவு கடற்தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் அதிகாலையில் இந்த இடத்தில்தான் வந்து சேருவார்கள்.
வீதியின் வலதுபக்கக்கரையோடு வரிசையாக மீன்வியாபாரிகள் இருப்பார்கள். இவர்களைத் தொடர்ந்து மீன்வெட்டிக் கொடுப்பவர்கள் இருப் பார்கள். இடதுபக்கக்கரையோடு மரக்கறி வியாபாரிகளும்… நடமாடும் தேநீர்க்கடை வியாபாரிகளும் நிற்பார்கள்.
மூவினமக்களும் நிறைந்து போய் நிற்பார்கள்.
மீனவனின் வலைக்குள் சிக்கி தனது இயல்பான சூழலை இழந்து மரண அவலப்படும் மீன்களையும் தலைப்பகுதியோடு அமைந்திருக்கும் மீன் செதில்களை சுட்டுவிரல் நகத்தினால் கிளப்பி… குருதி கசியும் மீன்பூவுள்ள மீன்களையும் வாங்குவதில் பொதுவாகவே சகல மக்களும் திருப்தியடை கின்றனர்… இத்திருப்திக்கு காரணம் நிறைந்ததொரு மரபுமுண்டு!
காலை ஆறுமணியிருக்கும்
வழமைபோல் குறுக்குவீதியும் குறுக்குவீதி வந்து கடற்கரை வீதியோடிணையும் சிறிய சந்தியும் கடற்கரையும் கலகலப்பாகவே இருக்கின்றது.
சில்லறை வியாபாரிகள், சைக்கிள் பெட்டி வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், வீட்டுத் தேவைக்கு மீன்வாங்குவோர்…
குறுக்குவீதி வந்து கடற்கரை வீதியோடிணையும் சிறிய முச்சந்தியின் வலதுபக்கமாகவுள்ள குறண்டிப்போன பூவரசமரத்தின் கீழ் குச்சன் அமர்ந்திருக்கின்றான். அவனுக்கு முன்னால், இரண்டு பக்கங்களும் கிழித்து விரிக்கப்பட்ட ‘சொப்பிங் பாக்கில்’ சில மீன்குஞ்சுகள் கிடக்கின்றன.
பலவகையான மீன்குஞ்சுகள்… திரளி, கொய், கெழுறு, முரல், மணலை… இரண்டு மூன்று நண்டுக் குஞ்சுகள்… குச்சன் இப்போது ஒரு மீன் வியாபாரி… இப்போதென்ன தினசரி காலையில் இந்த இடத்தில் குச்சனைக் காணலாம்… மீன் குஞ்சுகளோடு இருப்பான்…
“ஐயா வாங்கோ… அம்மா வாங்கோ… மலிவு விலை அறுபது ரூபா… லாபாய்… லாபாய்…” குச்சன் இரண்டு மொழிகளிலும் குரல் கொடுக்கிறான்.
குச்சன் சிங்களத்தில் மட்டுமல்ல, நுரைச் சோலை அனல்மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இங்கு வந்து தங்கியிருக்கும் சீனநாட்டவரும் இங்கு மீன்வாங்க வருவார்கள்… அவர்களோடு ஆங்கிலத்திலும் கதைத்துச் சமாளிக்கும் வல்லமையுள்ளவன்.
குறண்டிப்போன அந்தப் பூவரசுமரங்கள், பூவரசம் கதியால்களாக இருக்கும் போது குறண்டிப் போனவைகளோ அல்லது வளர்ந்தபின்பு குறண்டிப் போனவைகளோ தெரியாது… ஆனால் குச்சன் குறண்டித்தான் பிறந்தான்..!
சின்னமணி… இவள் தான் குச்சனைத் தனது வயிற்றுத் தோற்புரையில் பத்துமாதங்கள் சுமந்து பெற்றவள்… சின்னமணிக்கு நிரந்தர வறுமை… குறண்டிப்போன பூவரசுமரங்கள் பூத்திருப்பது போல… சின்னமணியின் கருப்பையில் குச்சன் கருவானான். பெண்களின் வயிற்றுக்குள் இரைப்பையும் கருப்பையும் மிக நெருங்கியே அமைந்துள்ளன… கருப்பைக்குள் கிடந்த குச்சன் இரைப் பையின் பசிவெக்கையில் வெந்து… குறண்டி… முகட்டிலிருந்து விழுந்த எலும்புந் தோலுமான எலிக்குஞ்சுபோல்… குச்சனும் எலும்புந்தோலுமாக சூம்பிப்போய் சின்னமணியின் வயிற்றிலிருந்து பூமியில் விழுந்தான்…!
ஒல்லித்தேங்காய் போன்ற நெஞ்சாங் கூடு… பருத்தவயிறு… கண்குழிக்குள் சதையற்ற வெறும் தோலுக்குள் புரளும் செத்தல் முழிகள்… ஈக்கில்கள் போன்ற கை கால்கள்… வறுமை என்ற உத்தியோகபூர்வ ‘சீல்’ குத்தப்பட்டு மை காயாத நிலையிலேயே அவன் பிறந்தான்!
குச்சனுக்கு இப்போது பத்து வயது. உடல் நிலையில் வயதுக்குக் குறைந்த வளர்ச்சியையும் அனுபவத்தில் வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சியையும் அவன் பெற்றிருந்தான்.
வாழ்க்கை அனுபவங்களும், அந்த அனுபவங்களின் தொகுப்பில் புதிய பரிமாணங்களையும் பெறுகின்ற தத்துவப்படிமங்களும் துயர வெக்கையில், கோதுகளை உடைத்து வெளியேறிய குஞ்சுகள்தானே…!
குச்சனுக்கு முன்னாலுள்ள சொப்பிங் பாக்கின் மீது அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பல இன மீன் குஞ்சுகளைப்போல… குச்சனின் மனப்பறிக்குள் பல விதமான அனுபவப் படிமங்கள் நிறைந்திருந்தன…
குச்சன் றோட்டின் வலது பக்கமாக அமர்ந்திருக்கின்றான். றோட்டின் இடது பக்கமாக குச்சனுக்கு நேர் எதிராக கபிரியேல் பாண் வண்டிலோடு நிற்கிறான். குச்சனைப்போல கபிரியேலும் பாண்வண்டிலோடு தினசரி அதிகாலையில் இங்கு வந்துவிடுவான். கபிரியேல் பாண்வண்டிலோடு இதே இடத்தில் தான் நிற்பான்.
அதிகாலையில் இங்கு வருபவர்கள் பல நோக்கங்களுடனேயே வருகின்றனர். மலிவாக மீன் வாங்கலாம். மரக்கறிவாங்கலாம். காலை உணவுக்காக கபிரியேலிடம் சுடுபாண் வாங்கலாம்… இப்படிப்பல நோக்கங்கள்.
கபிரியேல் ஒரு கிறீஸ்தவன். அவனுக்கிப்போது ஐம்பது வயது. அவன் ஒரு இருதய நோயாளி. அவனால் பலத்த வேலைகள் செய்யமுடிவதில்லை. குண்டுச் சட்டிக்குள் கொட்டப்பட்ட நண்டுக் குஞ்சுகள் போல்… அவனுக்கு குஞ்சும் குருமானுமாய் ஐந்து பிள்ளைகள்… கபிரியேலின் குடிசைக்குள் சின்னனும் பெரிசுகளுமாய் ஏழு இரைப்பைகள்… இவைகள் தினசரி இயங்கிக் கொண்டே இருக்கும்… கபிரியேல் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்…!
தனிமனிதனிலிருந்து… சமூகமாக… தேசியமாக வளர்ந்திருக்கும் இந்த மனிதர்களின் இயக்க நிலையின் மூலஸ்தானத்திலுள்ள முதலாவது இயக்கப்புள்ளி… இந்த இரைப்பையும்… அதிலுள்ள பசியுந்தான்…
கபிரியேல் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பேக்கரிக்கு வந்துவிடுவான். பாண் போறணைக்குள்ளால் இறக்கிவைக்கப்பட்டிருக்கும் சுடுபாண்களில் ஒரு தொகைப் பாண்களை வண்டிலுக்குள் அடுக்கிக் கொள்வான். அதேபோல் சீனிபணிசுகளிலும் ஒரு தொகையை வண்டிலுக்குள் அடுக்கிக் கொள்வான்.
பேக்கரி முதலாளி வந்து கணக்கெடுத்துப் பதிந்த பின் கபிரியேல் புறப்பட்டு இங்கு வந்து விடுவான்.
இங்கு வியாபாரம் முடிந்ததும் பேக்கரிக்குச் சென்று முதலாளியிடம் திரும்பவும் பாண்களையும் பணிசுகளையும் பெற்றுக் கொண்டு உள்வீதிகளுக் குள் இறங்கி விடுவான்.
பதினொரு மணி தொடக்கம் பிற்பகல் மூன்று மணிவரை ஓய்வு… அதன் பின் நாலு மணிக்குத் திரும்பவும் பாண் வண்டி லோடு புறப்பட்டால் உள் வீதிகளில் விற்பனை செய்து… இரவு எட்டு மணியளவில்த்தான் பேக்கரிக்கு வருவான்.
மாதம் முடிய சிறிய தொகைப்பணம் சம்பளமாக அவனுக்குக் கிடைக்கும்.
குச்சனுக்கு இந்த மரத்தடியும் மீன் வியாபாரமும் கபிரியேலுக்கு பாண்வண்டிலும் வீதிகளும்… மிகவும் பழக்கப்பட்ட சங்கதிகள்…!
சின்னமணி இவள்தான் குச்சனைப் பெற்றவள். சின்னமணி குச்சனைப் பெற்றதன் மூலம் தாய் என்ற ஸ்தானத்தைப் பெற்றது உண்மை தான்… ஆனால் ஒரு தாயின் கடமைகளை அவளால் செய்ய முடியவில்லை… அதிகாலை ஐந்தரை மணியளவில் சின்னமணி குச்சனை எழுப்புவாள். “ராசா குச்சன்.. எழும்பையா.. மீன் பொறுக்கப் போக வேணும்… கால்கள் இரண்டையும் மடித்து கைகள் இரண்டையும் கால்களுக்கிடையில் செருகியபடி கேள்விக் குறிவடிவில் குறண்டிப்போய் குச்சன் படுத்திருப்பான்.
குச்சனை எழுப்புவதற்கு சின்னமணிக்கு மனம் வராது… அவனுக்குப் பக்கத்தில் குந்தியமர்ந்து குறண்டிப்போய் படுத்திருக்கும் அவனது உப்புப்படர்ந்த முதுகைத் தடவுவாள்… அவளது ஈரல்குலை வெந்து பிளக்கும்…!
“ராசா… குச்சன் நேரம் போகிது… மீன்வள்ளங்கள் கரைப்பட்டிடும்.. எழும்பு குஞ்சு..” அவள் திரும்பவும் எழுப்புவாள். அவளின் கண் குழிக்குள்ளிருக்கும் வெண்மையான நித்திரை அழுக்கு அவளது கண்ணீரில் கரைந்து… நாடியில் தொங்கும்…”
சமகாலத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற பிள்ளைகளைத்தான் அதிகாலையில் படிப்பதற்காகப் பெற்றோர் எழுப்புவார்கள்… ஒருபக்கத்தில் தாயும் மறுபக்கத்தில் தகப்பனும் நின்று… எழுப்பி… செல்லம் கொஞ்சி… ‘ரீ’ கொடுத்து… படிக்க விடுவார்கள்… குச்சனுக்கு இப்போது பத்துவயது.. ஐந்தாம் ஆண்டில் தான் படிக்கிறான். ஏனைய மாணவர்களைப்போல் இவனும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட் சைக்குத் தோற்றியிருக்க வேண்டும்…? குச்சனுக்கு வாழ்க்கைப் பரீட்சை…!
சின்னமணியும் ஏனைய தாய்மார்கள் போல் குச்சனைப் பத்து மாதம் சுமந்துதான் பெற்றாள். ஏனைய தாய்மார்களைப்போல் சின்னமணியும் அதிகாலையில் குச்சனை எழுப்புகிறாள்… ஆனால்… பரீட்சைக்குப் படிக்கவல்ல.
வலைக்குள்ளிருந்து மீன் தெரிவுநடத்தும் மீனவர்கள் பொருத்தமற்ற மீன் குஞ்சுகளைப் பொறுக்கி எறிவார்கள். அவைகளைப் பொறுக்கி விற்பதற்காக…!
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை… அதுதேவையோ… வேதனையற்றதோ… அதுதான் போகட்டும்… ஒரு கிளாஸ் சாயத்தண்ணீர் கொடுத்தனுப்ப அவளிடம் தேயிலை இருக்காது… கண்கள் நிறையக் கண்ணீர் தான் இருக்கும்.
குச்சன் எழும்பி… சாறம் உடுப்பதுபோல களிசானை உடுத்திக் கொண்டு வலதுகையால் இடது தோளையும் இடது கையால் வலது தோளையும் பிடித்துக் கொண்டு பனிக் குருவி நடப்பது போல் அவன் நடப்பான்…
சின்னமணி பார்த்துக் கொண்டு நிற்பாள்… அவளது தொப்புள் குழியிலிருந்து கண்ணீர் வடியும்…
குச்சன் இரண்டு வழிகளில் மீன் குஞ்சுகளைப் பெற்றுக் கொள்வான். ஒன்று மீனவர்களுக்கு மீன் தெரிவு செய்ய உதவி செய்தால் கூலியாக சில மீன்களைக் கொடுப்பார்கள்… அந்தச் சந்தர்ப்பம் சில வேளைகளில்தான் கிடைக்கும். இரண்டாவது மீனவர்கள் சில மீன்குஞ்சுகளைக் கழித்து எறிவார்கள். அவைகளைக் குச்சன் பொறுக்கிக் கொள்வான்.
இன்று பொறுக்கப்பட்ட மீன் குஞ்சுகளையே குச்சன் வைத்திருக்கின்றான்.
குச்சனின் குடும்பத்தில் மொத்தமாக ஐந்து சீவன்கள். தகப்பன் மகேந்திரன், தாய் சின்னமணி, மூத்த தங்கை மலர், இவளுக்கு ஆறுவயது. கடைசித் தங்கை குமாரி, இவளுக்கு மூன்று வயது. மகேந்திரனும் சின்னமணியும் கூலிவேலைக்குச் செல்வார்கள். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நமது மண்ணில் நடந்த யுத்தத்தினால் நம்மவர்கள் கோவணங்களையும் இழந்து கூலிகளாகிவிட்டதால் மகேந்திரனுக்கும் சின்னமணிக்கும் கூலிவேலை கிடைப்பதும் அரிதாகிவிட்டது.
சூரிய ஒளிக்கதிர்கள் பூமியில் நீண்டு கொண்டிருக்கின்றன. மீன் சந்தை கலகலப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
குச்சன் மீன் குஞ்சுகளையும் பார்த்து அடிக்கடி பாண்வண்டிலையும் பார்த்துக் கொள்கிறான். மீன்குஞ்சுகளை விற்று பாண் வாங்குவது வழமையான செயற்பாடு. இன்று மேலதிகமாக கடைசித் தங்கைக்கு ஒரு சீனிபணிஸ் வாங்க வேண்டுமென்றொரு ஆசை குச்சனுக்கு.
“ஒரு பாண் முப்பதுரூபா. ஒரு சீனிபணிஸ் பத்துரூபா… நாற்பது ரூபா… அப்ப ஐம்பதுரூபா சொன்னால்த்தான் நாற்பது ரூபாவுக்கு விற்கலாம்… இன்னும் பத்துரூபா கூடச் சொன்னால் என்ன… அறுபதுரூபா சொல்லுவம்…” குச்சனின் மனம் கணக்குப் போடுகின்றது.
குச்சன் பாண்வண்டிலைப் பார்க்கிறான்.. பெருமளவு பாண்களும் சீனிபணிசுகளும் முடிந்து விட்டன..!
“ஐயா வாங்கோ… உடன்மீன்… மலிவு… லாபாய்… லாபாய்…” குச்சன் தனது கீச்சுக்குரலில் இருமொழிகளிலும் கூறுகின்றான்.
புத்தளம் மூவினமக்களும் வாழ்கின்ற ஒரு பிரதேசம். இங்குள்ளவர்கள் தங்களின் தாய் மொழியோடு ஏனைய இரண்டுமொழிகளையும் ஓரளவு பேசுகின்ற வல்லமையுள்ளவர்கள்.
குச்சன்,
மகேந்திரனுக்கும், சின்னமணிக்கும் திருமணமாகி அவர்களுக்கு முதல் பிறந்த பிள்ளையிவன். சின்னமணியின் வயிற்றில் குச்சன் ஒரு புள்ளியாய் கருத்தரித்தபோது… புதுத்தம்பதிகளின் மனதில் இயல்பாக ஏற்படுகின்ற உணர்வுகள் அவர்களது மனதிலும் ஏற்படத்தான் செய்தது..
ஆண்பிள்ளை பிறந்தால் ஜெயந்தன் என்றும், பெண்பிள்ளை பிறந்தால் ஜெயந்தினி என்றும் பெயர் வைப்பதாகத் தீர்மானித்துக் கொண்டனர்.
ஆண்பிள்ளை பிறந்தது… ஜெயந்தன் என்று பெயர் வைத்தனர்.
குச்சனின் உடல் தசைப்பிடிப்பின்றி எலும்புந் தோலுமாக குச்சி போல் இருந்ததால் ‘குச்சன் என்று செல்லமாக அழைக்கப்பட்டு… நாளடைவில் அவனது ஜெயந்தன் என்ற உண்மைப் பெயர் மறக்கப்பட்டு குச்சன் என்ற பெயரே பாவனைக்கு வந்து…
குச்சனே தனது உண்மைப் பெயரை மறந்து போய் விட்டான்.
“…டேய் குச்சன்.. பள்ளிக்குடத்திலை புதுப்புத்தகங்கள் குடுத்து… என்ரை புள்ளங்கள் கொண்டு வந்தாங்கள்… உனக்கும் கிடைச்சிதா…” பாண்வண்டிலோடு நின்ற கபிரியேல் குரல் கொடுக்கிறான்.
“…நான் இரண்டு மூண்டு நாள் பள்ளிக்குடம் போகவில்லை. குச்சன் சர்வ சாதாரணமாகப் பதில் கூறுகின்றான். புதுப்புத்தகம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவனிடமில்லை.
“ஏன்ரா… குச்சன்… பள்ளிக்குடத்துக்குப் போய் இரண்டெழுத்துப்படிச்சு… சோதினை பாஸ் பண்ணினால்தானே ஏதாவது வேலை வெட்டிக்குப் போகலாம்… இல்லாட்டி வாழ்க்கை முழுவதும் மீன்குஞ்சுகள் பொறுக்கி விக்க வேண்டித்தான் வரும்…” பாம்பின் காலைப் பாம்பறியும் என்பதுபோல தனது வறுமைக்கூடாகக் குச்சனின் வறுமையைப் புரிந்து கொண்ட கபிரியேல் இரக்கப்பட்டு இப்படிக் கூறுகிறான்.
கபிரியேல் வறுமைப்பட்டவன். மிகவும் நல்லவன். அவனது கழுத்தில் ஒரு கறுப்புக்கயிறு.. அந்தக்கயிற்றில் யேசுவின் சிலையோடு சேர்ந்ததொரு சிலுவை…
அவனது நெஞ்சாங்குழியோடு அந்தச் சிலுவை தொங்கிக் கொண்டிருக்கின்றது. அவன் சகல நம்பிக்கைகளையும் இழந்து… அந்தச் சிலுவையை மட்டுந்தான் இப்போது நம்புகிறான்!
கல்விக் கூடங்கள் என்பன பரீட்சை வினாக்களுக்கான விடைகளைத் தயார் படுத்தும் நிலையங்களே தவிர வாழ்க்கைக்கான போதனை களையோ சமூக முடிச்சுக்களை அவிழ்க்கும் அல்லது அறுக்கும் போதனைகளையோ செய்யும் சமூக நிலையங்களல்ல…
என்ற உண்மையை…
மிக நீண்ட கயிற்றில் ‘கல்வி மேய்ச்சல்’ நடத்திய மிகப் பெரும் கல்வியாளர்களாலேயே புரியப்படாமல் இருக்கும் போது… வறுமை என்ற ஒரு முழக்கயிற்றில் ‘சமூக மேய்ச்சல்’ நடத்திய கபிரியேலால் புரிந்துகொள்ள முடியுமா?…
கபிரியேலின் கழுத்திலுள்ள கறுப்புக் கயிற்றில் நெஞ்சாங்குழியோடு தொங்குகின்ற யேசுவின் சிலையோடு கூடிய சிலுவை… யேசு இன்று வணக்கத்திற்குரியவர். அன்று யேசுவைச் சமூக விரோதியாக்கி… அவனது தலையில் முள்முடியை இறுக்கி… சிலுவையில் அறைந்து சொல்லும்படி ஆணையிட்டதும் அந்த நாட்டின் தலைவன் தான்!
அரசுகளின் இயல்புகள்… அன்றும் இன்றும் ஒன்று தான்!
“…டேய் குச்சன்… நேரம் ஏழரை ஆகிது… வித்து போட்டுப் போனால்த்தானே… பள்ளிக்குடம் போகலாம்…” கபிரியேல் கூறுகிறான்.
“நான் இண்டைக்குப் பள்ளிக்குடம் போகயில்லை” குச்சன் எந்தமனத் தாக்கமுமின்றிக் கூறுகின்றான்.
அதிகாலை ஆறுமணியளவில் இயங்க ஆரம்பிக்கும் இந்தச் சந்தை ஏழரைமணியளவில் உச்சநிலையை அடைந்து அதன்பின்பு படிப்படியாக இறங்கி ஒன்பதுமணியளவில் சந்தை முற்றாகக் கலைந்துவிடும்.
இப்போது நேரம்… ஏழரைமணி… சந்தையின் உச்சநிலை…
மிகவும் அழகானதொரு வெள்ளைக் கார்.. குறுக்கு றோட்டில்வந்து கடற்கரைச் சந்தியால் வலது பக்கந்திரும்பி.. றோட்டுக்கரையோடு நிற்கின்றது.
கபிரியேலும் குச்சனும் ஒருமுறை அந்தக் காரைப் பார்த்துக் கொள்ளுகின்றனர்.
காரின் நான்கு கதவுகளும் திறக்கப்பட்டு ஆண்கள் ஆறுபேர் இறங்குகின்றனர். இவர்கள் ஆறுபேரும் அடிக்கடி இங்கு வந்து போவார்கள்.
அகிலன், சாந்தசீலன், குமரவேள், மகேந்திரன், மூர்த்தி, பிரதீபன்… இவர்கள் ஆறு பேரும் அரசசேவைகளில் உள்ளவர்கள். கிழமையில் ஒருநாள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அன்றைய பொழுதைச் சந்தோஷமாகக் கழிப்பார்கள். இன்று சாந்தசீலன் வீட்டில் கூழ் காய்ச்சு வதாகத் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பொருட்களை வாங்குவதற்காகவே இங்கு வந்துள்ளனர்.
“…. அகிலன்… அந்தப் பூவரசு மரத்தடியிலை இருக்கிற பொடியன் வைச்சிருக்கிற மீன் குஞ்சு களைப் பாத்தீயோ… கூழுக்குச் சூப்பராய் இருக்கும்” சாந்தசீலன் கூறுகிறான். சாந்தசீலனிடம் கூர்மை யான கிரகித்தல் திறணுண்டு. மிக இளம்வயதில் பொறுப்பான பதவி வகிப்பவன்.
சாந்தசீலனின் பேச்சைக்கேட்ட அவர்கள் குச்சனையும் அவனுக்கு முன்னால் சொப்பிங் பாக்கில் கிடக்கும் மீன்குஞ்சுகளையும் பார்க்கின்றனர்.
குமரவேள்… அவர் ஒரு டாக்டர். அவரின் பார்வை குச்சனில் நங்கூரமிடுகின்றது.
“…என்ன குமரவேள்… அந்தப் பொடியனை உங்களுக்குத் தெரியுமா…” குமர வேளின் பார்வையை அவதானித்த மகேந்திரன் கேட்கிறான். மகேந்திரன் தினசரி பணத்தோடு பழகும் வாய்ப்புள்ள ஒரு வங்கி ஊழியன்.
“…அந்தப் பொடியனைப் பாத்தீங்களா… பச்சைப்பாலன்… மழையுக்கை நனைஞ்ச கோழிக் குஞ்சுபோலை… குறாவிப் போயிருக் கிறான்… சிறுவர் பாதுகாப்பு… சிறுவர்களுக்கு போசாக் குணவு வழங்க வேண்டும் .. சிறுவர்களைப் படையில் சேர்ப்பது சட்டவிரோதமானது… சிறுவர்களை வீட்டு வேலைகளுக்கமர்த்துவது சட்ட விரோதம்… இப்படித் தினசரி நாலுபக்கங்களி லிருந்தும் குரல் எழுப்பப் படுகின்றது. ஆனால் நடைமுறைகள்… முழங்கைக்கும் மொட்டந் தலைக்கும் முடிச்சுப் போட்ட கதை தான்…” குமரவேளின் கதையில் மனிதம் கசிகின்றது.
“…குமரவேள்… நீங்கள் சொல்றதிலை நிறைய யதார்த்த உண்மைகள் இருக்கு…”
“…நாங்கள் நாட்டோடிருந்தோம்… ஒருவன் ‘பைபிளோடு’ வந்தான்… இப்போது… அவன் நாட்டோடிருக்கிறான்… நாங்கள் ‘பைபிளோடு’ நிற்கிறோம்…”
“…எத்தனையோ அரசியல் முனிவர்களால் சபிக்கப்பட்ட பூமியிது” இது வரை மௌனமாக நின்ற பிரதீபன் கூறுகிறான், பிரதீபன் கல்விக் கந்தோரில் வேலை செய்பவன். அதனால் தானோ என்னவோ… அரசியல் வரலாற்றை முதன்மைப் படுத்தி மிகவும் அர்த்த புஷ்டியாகக் கூறுகிறான்.
“என்ன மூர்த்தி… மௌனமாய் நிக்கிறியள். நீங்களும் ஏதாவது சொல்லுங்கோவன்…” அகிலன் மூர்த்தியைக் கிண்டுகிறான். மூாத்தி பிரதேசசபை ஒன்றில் பணிபுரிபவன்.
“…பூவரசுமரத்தடியிலை இருக்கிற அந்தப்பொடியனைப் போலை ஆக்கள் மௌனமாய் இருப்பதும்… எங்களைப் போல ஆக்கள் அதிகமாகக் கதைக்கிறதுந்தான்… இன்றைய நிலைக்கு முக்கிய காரணமெண்டு நான் நினைக்கிறன்… மூர்த்தி ஆணி இறுக்கியது போல் கூறுகின்றான்.
“…கூட்டத்தில் கூடி நின்று கூடிப்பிதற்றலன்றி… நாட்டத்திற் கொள்ளாரடீ கிளியே! நாளில் மறப்பாரடீ…” பாரதியின் இந்தக்கவிதை வரிகள் இன்று மட்டுமல்ல. இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு வாழத்தான் போகின்றது…” உச்ச நீதிமன்ற நீதிபதியின் தோரணையில் ஆனால் மிகவும் நாசுக்காக தன் கருத்தை வெளிப்படுத்து கிறான் அகிலன்.
குச்சன் பாவம்… அவன் இவர்களின் பேச்சுக்களை அவதானிக்கவில்லை… கவனித்தாலும் அவனால் இவர்களின் சூக்குமமான பேச்சுக்களைப் புரிந்துகொண்டிருக்கமுடியாது. ஆனால் கபிரியேல் இவர்களது பேச்சுக்களை அவதானித்துக் கொண்டு நின்றான். அவனாலும் சரிவரப் புரிந்திருக்க முடியாதென்றுதான் கூறவேண்டும்.
சாந்தசீலனின் தலைமையில் நண்பர்கள் கூழுக்கான பொருட்களை வாங்குவதற்காக காரடியிலிருந்து புறப்படுகின்றனர்.
“…சீலன் அந்தப் பொடியனிட்டை உள்ள மீன்குஞ்சுகளை வாங்குவமா…” குமரவேளின் மனம் இன்னமும் குச்சன்மீதே நங்கூரமிட்டு நிற்கின்றது.
“…வாங்கலாம்… இப்ப கேட்டால் டபிள் விலை சொல்லுவான். திரும்பி வரயுக்கை யெண்டால். நேரம் போகிடும் மலிவாய் வாங்கலாம்”. சீலன் பதில் கூறுகிறான்.
“..ஐயா வாங்கோ… உடன்மீன்… மலிவு விலை” குச்சன், சீலனையும் அவனது நண்பர் களையும் பார்த்துக் குரல் கொடுக்கிறான்.
சீலனும் நண்பர்களும் குச்சனைக் கடந்து செல்கின்றனர்.
குச்சன் பாண்வண்டிலைப்பார்க்கின்றான்.. நாலைந்து பாண்களும், இரண்டு சீனிபணிசுகளும் மட்டும் கிடக்கின்றன.
நேரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
பாணும் சீனிபணிசும் முடியப்போகின்றது என்ற மனவேக்காட்டில் குந்தியிருந்த குச்சன் எழுந்து நின்று தலையைச் சொறிகிறான்.
“பத்துரூபா… குறைப்பம்…” குச்சனின் மனம் கூறுகின்றது. ‘ஐயா… வாங்கோ… ஐம்பதுரூபா…” குச்சன் குரல் கொடுக்கிறன்.
கபிரியேல் குச்சனுக்கு கடனாக பாணும் சீனி பணிசும் கொடுப்பான். அவ்வளவுக்கு கபிரியேல் நல்லவன். ஆனால் முதலாளியிடம் கணக்கை ஒப்படைக்கும் போது… முதலாளி கபிரியேலைத் திட்டுவான்.
நேரம் எட்டை நெருங்கிவிட்டது… பாண் வண்டிலுக்குள் சீனிபணிஸ் கிடந்த இடம் வெறுமையாகக் கிடக்கின்றது.
“கபிரியண்ணை சீனிபணிஸ் முடிஞ்சிதா…” குச்சன் மனம்
பொறுக்கமுடியாமல் கேட்கிறான்.
“ஓமடா குச்சன்… சீனி பணிஸ் முடிஞ்சிது… பாணும் முடியப்போகிது…” கபிரியேல் வேதனையோடு கூறுகிறான்.
சீலனும் நண்பர்களும் வருகின்றனர். ஒவ்வொருவரின் கைகளிலும் ஒவ்வொரு சொப்பிங் பாக்…
“… தம்பி… மீன்குஞ்சுகள் என்ன விலை…” சாந்தசீலன் குச்சனிடம் கதை கொடுக்கிறான். அவனது கதையில் இலேசான நளினம்…!
“நாப்பதுரூபா…” மீண்டும் பத்துரூபா குறைத்து விலை கூறுகிறான் குச்சன்.
“என்ன தம்பி… முள்ளு முத்தாத இந்த மீன்குஞ்சுகள் நாப்பது ரூபா பெறாது…” அந்த மீன் குஞ்சுகளை வாங்கவேண்டுமென்ற முடிவு சீலனுக் குண்டு… அதைக் காட்டிக் கொள்ளாமல் புறா இருக்க முட்டை எடுக்கும் தந்திரத்தில் பேசுகிறான்.மீன்குஞ்சுகள் வாங்குவதில் கூட உளவியல் தந்திரம்…!
“நீங்கள் எவ்வளவு கேக்கிறியள்… மூளை தலைமண்டைக்குள் அமைந்திருப்பதாலோ… என்னவோ தலையைச் சொறிந்தபடி குச்சன் கேட்கிறான்.
“…என்ரை மதிப்புப்படி ஒரே பேச்சு இருபதுரூபா தாறன்…” இருபத்தைந்துரூபா கொடுக்கலாம் என்ற தனது முடிவை வைத்துக் கொண்டு இருபதுரூபா கேட்கிறான்.
தகவம் பரிசுக்கதைகள்
மீன்சந்தைக்குள்ளும் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய அனுபவங்கள் நிறையவுண்டு!
கபிரியேல் சகலதையும் அவதானித்தபடி நிற்கிறான்… அவனுடைய அனுபவத்தனத்தில் இப்படி எத்தனையோ சூட்டுக்காயங்கள் உண்டு!… குச்சன் பாவம் அதிர்ந்துபோய் நிற்கிறான்.
“… என்ன தம்பி… கடுமையாய் யோசிக்கிறாய்… நட்டமெண்டால் வைச்சுக்கொள். நான் போறன்…” குச்சனின் மனநிலை தனக்குச் சாதகமாக இருப்பதைப் புரிந்து கொண்ட சீலன் இரண்டாவது தாக்குதலை நடத்துகிறான்.
அதிகாலையில் ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து… கடற்காற்றின் காலைக்குளிர்… கரம்பை முட்களாய் உடலைக் குத்த… மீனவர்களால் கழித்து எறியப்படும் மீன்குஞ்சுகளை கடல் நீருக்குள் ஓடியோடிப் பொறுக்கி… களிசானிலிருந்து நீர் சொட்டச் சொட்ட இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகக் காத்திருந்து… முடிவு… தங்கச்சிக்கு ஒரு சீனிபணிஸ். அதுதான் போகட்டும் ஐஞ்சு சீவன்களின் காலைச் சாப்பாட்டிற்கு ஒரு பாண் வாங்க முடியாத நிலை…!
“…சரி… தம்பி… ஐஞ்சுரூபா கூடத்தாரான்… மீன் குஞ்சுகளைத் தா…” குச்சன் சஞ்சலப்பட்டுப் போய் நிற்பதை உணர்ந்த சீலன் தனது மூன்றாவது தாக்குதலை நடத்துகிறான்.
குச்சன் வீழ்ந்து விட்டான்.
சீலன் மீன்குஞ்சுகளோடு புறப்படுகின்றான்.
குச்சனின் பிஞ்சுக் கைக்குள் இருபத்தைந்து ரூபா… திகைத்துப்போய் நிற்கின்றான்! குச்சன்!
“…என்ன குச்சன் யோசிக்கிறாய்… யோசிக்காதை… எங்களைப்போலை ஆக்களுக்கு இதுதான் முடிவு…
“…யேசு கூட ஒரு முறைதான் முள்முடி தாங்கினவர்… ஒரு முறைதான் சிலுவை சுமந்தவர்… ஆனால் எங்களுக்கு…”
தினசரி வறுமை என்ற சிலுவை… கண்ணீர் என்ற முள்முடி எங்களைப் பெட்டியுக்கை இறக்கப் போறதில்லை…”
குச்சன் பச்சைப்பாலன்… அவனுக்கு இந்த அனுபவப் பேச்சுக்கள் புரியப்போவதில்லை, என்பது கபிரியேலுக்குத் தெரியாமலில்லை… இருந்தும் குச்சனுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட உணர்வு மேலீட்டால் தனது மனதில் பட்டதை அப்படியே கூறுகின்றான்.
கபிரியேல் மிகவும் அனுபவசாலி. சமுகத் தாக்கங்களுக்குள்ளாகி உணர்ச்சி வசப்படும் போது தனது மனதில் தோன்றுபவைகளை அப்படியே கூறிவிடுவான். ஆனால் அவனது பேச்சில் நிறைய அர்த்தங்கள் இருக்கும்…!
பாண் வண்டிலுக்குள் படிந்திருந்த பாண் துகள்களைத் துப்புரவாக்கிக் கொண்டு நின்ற கபிரியேல்… திருப்பவும் குச்சனைப் பார்க்கின்றான்.
பாவம் குச்சன். அதே இடத்தில் விறைத்துப் போய் நிற்கின்றான்!
வறுமையின் யதார்த்தநிலை… வறுமைக்கான பின்புலம்.. வறுமையின் வரலாறு… இவைகளைத் தொகுத்துப் பார்த்துச் சிந்திக்க அவனால் முடியுமா?…
பாம்பின் காலைப் பாம்பறியும் என்பார்களே… குச்சனின் மனவேதனையைத் தனதாக்கி உணர்கிறான் கபிரியேல்.
“…டேய் குச்சன்… என்னடா யோசிக்கிறாய். அரைக்கிலோ பச்சை அரிசி வாங்கிக் கொண்டு போய்க்குடு… கஞ்சி காய்ச்சிக் குடிச்சிட்டுப் படுக்க வேண்டியது தான்…”,
”எங்களைப் போலை ஆக்கள் தங்கச்சிக்கு சீனிபணிஸ் வாங்கிக்குடுக்க ஆசைப் படக்குடாது.. சுவையாய் சாப்பிட ஆசைப்படக் குடாது… எதிலையும் ஆசைப்படக்கூடாது..தினசரி… பசிக்குச் சாப்பிட்டால் அது போதும்…” இப்படிக் கூறிய கபிரியேல் தொடர்ந்தும் பாண்வண்டிலைத் துப்புரவாக்குவதில் ஈடுபடுகிறான்
பாண்வண்டிலைத் துப்புரவாக்கியபடியே அவன் கதைக்கின்றான்… தனது பேச்சை யாராவது கேட்கவேண்டுமென்றும் அவன் எதிர்பார்க்க வில்லை… எதிர்பார்ப்பதும் இல்லை..!
அவன் பேசுகிறான்…
“….பிறந்த உடனை… இந்த மண்ணிலை என்ரை பிறப்பை உறுதிப்படுத்த பிறப்புப் பதிவு செய்யவேணும்”
“…பதினாறு வயது வந்திட்டால்… இந்த நாட்டுப் பிரசை எண்டதை உறுதிப்படுத்த… அடையாள அட்டை எடுக்க வேணும்…”
“அதுக்குப் பிறகு ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வாக்குரிமைப் பதிவு செய்ய வேணும்…”
“…எல்லாப் பதிவுகளையும் செய்து போட்டு… அடுப்புக்கல்லிலை தலையை வைச்சு… இரைப்பை வலிப்பெடுத்துப் படுத்திருக்கிறம்…”
“…அதுக்கொரு பதிவில்லை…! அதைப் பற்றிக் கேட்டால்… அதுக்குப் பதிலுமில்லை…!?”
“இரைப்பை வலிப்பெடுத்துச் செத்துப் போனால் அதுக்கொரு பதிவுண்டு… மரண அத்தாட்சிப்பத்திரம்!..?”
“…எங்கடை வாழ்க்கை.. பாண்போறணை மாதிரி.. அதுக்குள்ளை நாங்களெல்லாம் பாண்கள் மாதிரி… வெந்து கருகிப்போறதுதான் முடிவு…” இப்படிக் கூறியபடி வண்டிலைத் தள்ளிக்கொண்டு கபிரியேல் புறப்படுகின்றான்.
குச்சன் குந்தியிருந்த கல்லுமட்டும் கிடக்கிறது…குச்சனைக்காணவில்லை…!
நாளைக்குக் காலை… இதேநேரம்… இதே இடத்தில் இருவரும் சந்திப்பார்கள்…!?
– தை 2010, ஜீவநதி.
– தகவம் பரிசுக்கதைகள் – தொகுதி 3, பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, முதலாம் பதிப்பு: மார்ச் 2016, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), கொழும்பு.
![]() |
கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
வளர்கவி
June 29, 2026
காயலாங்கடை
நா.ரங்கராசன்
June 29, 2026
எதுவும் மாறல
மனோகர் மைசூரு
June 29, 2026
