அகந்தை வெறி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2026
பார்வையிட்டோர்: 118 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

அந்தப் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பின் கண்ணாடிச் சுவர்களில் மாலை நேரத்துச் சூரியன் பட்டுப் பிரதிபலித்தபோது, அது ஒரு நவீன அரண்மனையைப் போலவே காட்சியளித்தது. அந்த வீட்டின் வரவேற்பறையில், ஒரு சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் மங்களம். அவளுடைய கைகளில் இருந்த விலை உயர்ந்த கோப்பிக் கப் அவளுடைய அந்தஸ்தின் அடையாளமாகத் திகழ்ந்தது. மங்களம் சாதாரணமானவள் அல்ல; அவள்தான் அந்த வீட்டின் சுழலச்சு. அவளைப் பொறுத்தவரை, இந்த உலகம் அவளைச் சுற்றியே சுழல வேண்டும். அதுதான் அவளுடைய எழுதப்படாத விதி.

சமையலறையிலிருந்து வந்த நெய்யின் நறுமணம் வீடெங்கும் பரவிக் கொண்டிருந்தது. மங்களத்தின் மகன் கார்த்திக்கும், அவனுடைய மனைவி சுவேதாவும் இணைந்து இரவு உணவிற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தனர். கார்த்திக் காய்கறிகளை மிகவும் நேர்த்தியாக நறுக்கிக் கொண்டிருக்க, சுவேதா பாத்திரங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டே வேலை செய்வதை, வரவேற்பறையிலிருந்து கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தாள் மங்களம்.

அவளுக்குள் இருந்த அந்த நார்சிசிசப் பூதம் மெல்ல விழித்துக் கொண்டது. தன் மகன், தன்னை விட மற்றொரு பெண்ணிற்கு முக்கியத்துவம் தருவதையோ, அவளோடு மகிழ்ச்சியாக இருப்பதையோ அவளது மனதால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உடனே அவளுடைய மூளை மிக வேகமாக வேலை செய்யத் தொடங்கியது. வரலாற்றில் பிரான்ஸ் நாட்டின் இறுதி ராணியான மேரி அன்ரனிற்றா, இந்த மாதிரியான நார்சிசிசத்தின் முன்னுதாரணம். அவள் பிரான்சைப் பிடித்தாட்டிய அகந்தைப் பேய். அவள் தன் நாட்டு மக்கள் பசியால் வாடியபோது தன் ஆடம்பரத்திலும் அழகிலும் மட்டுமே மூழ்கி கிடந்தவள் , அவளிடம் மக்கள், “சாப்பிடவே எமக்கு இங்கு ரொட்டிக்கும் வழியில்லை மகாராணி” என முறையிட அவள் ரொட்டி இல்லாவிட்டால் நீங்கள் கேக் சாப்பிட வேண்டியதுதானே” என்று கேட்கிற, மக்களின் வலியைக் துச்சமாக மதிக்கிற அகந்தைவெறிபிடித்த நார்சிசிச இராணி. அதே போன்றதொரு மனிதாபிமானமற்ற மூளை இப்போது மங்களத்தின் மனதை ஆக்கிரமித்தது.

சுவேதாவின் சோர்வோ, கார்த்திக்கின் அலுவலகக் களைப்போ அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவளுக்குத் தேவை, அவளது ஆதிக்கமும், எல்லாரும் தன் முன்னால் மண்டியிட வேண்டும் என்ற எண்ணமும் மட்டுமே. இத்தகைய சுயநலமும், தற்பெருமை வெறியும் ஒரு மனிதனிடம் எல்லை மீறும்போது, அங்கே மனிதநேயம் மரணமடைகிறது என்பதற்கு மங்களத்தின் மனநிலையே சாட்சியாக இருந்தது.

திடீரென்று மங்களம் தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சோபாவில் சரிந்தாள். “அம்மா… என்னாச்சு?” என்று பதறியபடி கார்த்திக் சமையலறையிலிருந்து ஓடிவந்தான்.

“ஒன்றும் இல்லைடா… இந்த வீட்டிற்காக முப்பது வருஷம் மாடாய் உழைச்சு என் உடம்பு ஓடாய்ப் போச்சு. இப்போ ஒரு கிளாஸ் தண்ணி எடுத்துத் தரக் கூட இந்த வீட்டில் யாருக்கும் நாதியில்லை. நீயாவது நல்லா இருடா” என்று கண்ணீரைத் துடைப்பது போல் அழுது, தன் விஷம் கலந்த விக்டம் கார்டை’ (Victim Card) மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தினாள். கார்த்திக் உடனே சுவேதாவைப் பார்த்து, “அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சும், நீ அதைச் சொல்லாமல் ஏன் சமையலறையில் வச்சு என்னை வேலை வாங்கிக்கிட்டு இருக்க?” என்று கோபப்பட்டான். சுவேதா அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டாள். மங்களத்தின் உதட்டின் ஓரத்தில் ஒரு ரகசியப் புன்னகை மின்னியது. இந்த நார்சிசிசப் போக்கு ஒரு குடும்பத்தில் இருக்கும்போது, அது அந்த ஒட்டுமொத்த குடும்பத்தையே சிதைத்து, உறுப்பினர்களை வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியிலும், மன அழுத்தத்திலும் வாழ நேரிடச் செய்கிறது. அப்படித்தான் இங்கு குடும்பங்கள் சிதைவதும், சாம்ராட்சியங்கள் அழிந்து மண்மேடாவதும்..

அடுத்த சில வாரங்களில், கார்த்திக்கிற்கு அவனது பன்னாட்டு நிறுவனத்தில் ஒரு பெரிய பதவி உயர்வு கிடைத்தது. வீடே மகிழ்ச்சியில் திளைத்தது. உறவினர்களும் நண்பர்களும் கார்த்திக்கிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். கார்த்திக் மிகுந்த மரியாதையுடன் தன் அம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினான்.

மங்களம் உடனே, “பார்த்தாயா? நான் உனக்காக எத்தனை கோவிலுக்கு வெறும் காலில் நடந்தேன். பூஜைகள் செய்தேன். நான் மட்டும் அன்னைக்கு அந்தப் பரிகாரம் செய்யலைன்னா உனக்கு இந்த வேலை கிடைச்சிருக்காது. எல்லாம் என் ராசி, என் வளர்ப்பு! என்னுடைய பக்தி என்று மார்தட்டிக் கொண்டாள்.

ஜேர்மனியின் அடோல்ஃப் ஹிட்லரின் அந்த அதிதீவிர தற்பெருமை அவளிடம் எப்போதும் வெளிப்பட்டது. ஜெர்மனி நாட்டைத் தனியொருவனாகக் காப்பாற்ற வந்த இரட்சகன் நான்தான் என்று ஹிட்லர் எப்படித் தீவிரமாக நம்பச் செய்தானோ, அதை மற்றவர்களிடம் சொல்லிச்,சொல்லியே நம்பவைத்து அதற்காக உயிர் கொடுக்கவும் தயாராக்கினானோ அதேபோல தன் மகனின் ஒட்டுமொத்த உழைப்பையும், புத்திசாலித்தனத்தையும் புறந்தள்ளிவிட்டு, அவனது வெற்றிக்குத் தானே முழுமுதற் காரணம் என்று அந்தப் பெருமை முழுவதையும் தன்வசப்படுத்திக் கொண்டாள். அவளுக்கு மகனின் வளர்ச்சியை விட, அந்த வளர்ச்சியின் மூலம் தனக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்தே பிரதானமாக இருந்தது. நார்சிசிசம் என்பது ஒரு தனிமனிதனின் குறைபாடு மட்டுமல்ல அதுவே ஒரு நாட்டின் அதிகாரப் பீடத்தில் அமரும்போது உலகையே சுடுகாடாக மாற்றவல்ல மனிதகுலத்தின் பெருங்கேடாகும் என்பதை மங்களத்தின் இந்த அகந்தை வெறி உணர்த்தியது.

இன்றைக்குப் பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் சபித்துக் கொண்டு ஒருவரையொருவர் அகந்தை வெறிகொண்ட ஆட்களாக காட்டிக்கொண்டு தாம் தப்பித்துக் கொள்ளும் தந்திரங்களில் வல்லமையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலக அரசியலின் இனப் பேரழிவுகள் அத்தனையும் இத்தகு அகந்தைவெறியால் வந்தவைதான்.

மாலை நேரத்தில் கார்த்திக்கின் சக ஊழியர்கள் சிலர் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது ஒரு மூத்த அதிகாரி, “மங்களம் அம்மா, உங்க மருமகள் சுவேதா ரொம்பக் கொடுத்து வச்சவங்க. கார்த்திக் ஆபீஸ்ல இவ்வளவு பெரிய உயரத்தைத் தொடுறதுக்கு அவளோட அமைதியான சப்போர்ட் தான் பெரிய காரணம்” என்று பாராட்டினார்கள்.

அவ்வளவுதான், மங்களத்தின் முகம் சுருங்கியது. அவளால் அந்தப் பாராட்டைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. விருந்தினர்கள் சென்ற அடுத்த நிமிடமே, அவள் தன் தோழியிடம் தொலைபேசியில் பேசத் தொடங்கினாள். “மருமகளா ? அவளாலா மகன் பெரும் பதவி அடைந்தான்? அவளுக்கு என்ன தெரியும்? என் மகன் சம்பாத்தியத்தில் சொகுசா கார்ல போறா. நான் இந்த வயசுலயும் அவளுக்குச் சமைச்சுப் போடுறேன். அவளுக்கென்ன மகராசி! எப்போப் பார்த்தாலும் என் மகனை என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்கிறா!” என்று சுவேதாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் புறம் பேசி, அவளது நற்பெயரைக் கெடுக்க முயன்றாள். இதுதான் பெண் நார்சிசிஸ்டுகளின் மறைமுகத் தாக்குதல். பணியிடங்களிலும், சமூகத்திலும் இத்தகைய மனிதர்கள் தலைவராகவோ அல்லது அதிகாரத்திலோ இருந்தால், தன் கீழ் இருப்பவர்களின் உழைப்பைத் திருடி அவற்றைத் தன் பெருமையாக்கிக் கொள்வார்கள்; தங்களை எதிர்க்கும் தகுதியான நபர்களை, ஆற்றல் மிகு மனிதர்களை வதந்திகள் பரப்பி இவ்வாறுதான் இல்லாமல் அழிப்பார்கள்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் மதியம் தற்செயலாக கார்த்திக் வீட்டிற்கு வந்தபோது மங்களம் தன் தோழியிடம் தொலைபேசியில் சுவேதாவைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசிக் கொண்டிருந்த போது அவன் முழுவதுமாக கேட்க நேர்ந்தது . , சுவேதா செய்யாத பல பழிகளை மங்களம் சுமத்தியபடியே இருந்தாள். ஓர் மருமகள், ஓர் மருமகன் என்பது தம் உறவு என்பதை இவ்வாறான அகந்தை வெறி கொண்டவர்கள் சமூகத்தில் ஏற்றுக கொள்வதில்லை. அவர்கள் அவர்களைத் தங்கள் அடிமைகளாகவே எண்ணத்்தலைப்படுகின்றார்கள்.

எப்போதும் சுயநலமும், தன்னிச்சையும் கொண்ட இவர்களைப்போன்ற தனிமனிதர் கள்,அரசியல்வாதிகள், தலைவர்கள் மற்றும் ஊடகர்கள், அப்பாவி மனிதர்களை திசைதிருப்பி குடும்பங்கள், இனங்களுக்குள் மொழி, மத, சாதியப் பிரச்சனைகளை உருவாக்கி அவர்களின் குருதியில் இவர்கள் வாழ்ந்து கொள்வார்கள் இப்படித்தான் எம்முள் பலரும் இங்கே….

அதிர்ச்சியடைந்த கார்த்திக், நேராகத் தன் அம்மாவிடம் சென்று, “அம்மா, ஏன் இப்படிப் பேசுகின்றீர்கள்? சுவேதா உங்களை எவ்வளவு மதிக்கிறாள்? ஏன் அவளைப் பற்றித் தப்பாகப் பேசினீர்கள்?” அவள் உங்களின் மருமகள் அல்லவா என்று கோபமாக கேட்டான்.

மாட்டிக்கொண்ட மங்களம், தன் தவறை ஒப்புக்கொள்ளவே இல்லை. ஹிட்லர் எப்படித் தன் இறுதி நாட்களில் ஜெர்மனியின் தோல்விகளுக்குத் தான் காரணமல்ல, அண்டை நாடுகளும் அவர்களின் அதிகாரமுமே காரணம் என்று பழிசுமத்தினானோ, அதேபோல மங்களமும் தன் தவறை ஏற்க மறுத்து திசைதிருப்பினாள்.

சோபாவில் விழுந்து சத்தமாக அழத் தொடங்கினாள். “ஐயையோ… பெத்த தாயையே மகன் போலிஸ் மாதிரி விசாரணை செய்றானே! பெண்டாட்டி வந்ததும் பெத்தவள் கசந்து போயிட்டாளா? நான் செத்துத் தொலைஞ்சாத்தான் இந்த வீட்டுக்கு விடிவுகாலம் வரும்!” என்று கூச்சலிட்டு, கார்த்திக்கை உணர்வுரீதியாக பிளாக்மெயில் செய்தாள்.

கார்த்திக் உண்மையை உணர்ந்தும், அம்மாவின் இந்த நாடகத்தால் மேற்கொண்டு பேச முடியாமல் திகைத்து நின்றான். அப்போது சுவேதா மெதுவாகக் கார்த்திக்கின் அருகில் வந்து, அவனது கையைப் பற்றினாள்.

“மாமியிடம் வாதாடாதே கார்த்திக். நார்சிசிஸ்டுகளிடம் நீ எந்த ஆதாரத்தைக் காட்டினாலும் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இராணி மேரி அன்ரனிற்றா போல அவர்கள் சுயநலவாதிகள், ஹிட்லர் போல அவர்கள் தங்களை மட்டுமே உயர்ந்தவர்களாக நினைப்பவர்கள். இன்றைக்கு நடக்கிற யுத்தங்களும், அதன் தலைவரகளும் இவ்வாறானவர்கள்தான்..

நார்சிசிசம் என்பது மனிதனின் ஆன்மாவைத் தின்னும் நோய். அது அவனோடு நிற்காமல் தன்னைச் சுற்றியுள்ள நல்ல மனிதர்களையும், சமுதாயத்தையும், மொத்த உலகையுமே நஞ்சாக்குகிறது. இவர்களிடம் சண்டை போடுவதையோ அல்லது இவர்களைத் திருத்த முயல்வதையோ நாம் முதலில் கைவிட வேண்டும் ஏனென்றால் இவ்வாறானவர்கள் வார்தரதைகளால் திருந்தப் போவதில்லை என்றாள் சுவேதா.

படித்தவளான சுவேதா தொடர்ந்தாள், “இதற்குப் பதிலாக, உளவியலில் கூறப்படும் ‘சாம்பல் நிறக்கல் முறை’ மற்றும் ‘எல்லைகளை வகுத்தல்’ போன்ற தற்காப்பு உத்திகளை நாம் பயன்படுத்த வேண்டும். நாம் ஒரு சாலையில் நடந்து செல்லும்போது எத்தனையோ பளபளப்பான கட்டிடங்கள், ஆறுகள் நம் கவனத்தை ஈர்க்கலாம். ஆனால், அவற்றுள் சாதாரணமாக கிடந்து சலிப்பூட்டுகிற, மங்கலான ஒரு சாம்பல் நிறக்கல் கிடந்தால் நாம் அதனை கண்டு கொள்ளாமல் கடந்து விடுகின்றோம் அல்லவா? அதைப்போலவே, நாமும் இவர்களைப் போன்றவர்களின் முன்னால் எவ்வித உணர்ச்சியுமற்ற, மிகவும் சுவாரசியமில்லாத ஒரு ‘சாம்பல் நிறக்கல்’ போல மாறிவிட வேண்டும்.

அம்மா நம்மை வம்புக்கு இழுக்கும் போதோ அல்லது உணர்வுரீதியாகத் தாக்க முயலும் போதோ, நாம் அழவோ வாதாடவோ கூடாது. ஏனென்றால், நம்முடைய கோபமும் கண்ணீரும்தான் அவர்களின் அகந்தைக்குத் தேவையான தீனி. இனிமேல் அவர்களின் நாடகங்களுக்கு எந்தவொரு எதிர்வினையும் காட்டாமல், முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லாமல், வெறும் ஒற்றை வார்த்தைகளில் ‘சரியம்மா, ஆம் அம்மா என்று மட்டும் பதிலளித்துவிட்டு நம் வேலைகளைப் பார்க்க வேண்டும். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உணர்வுகளுக்குள் அவர்கள் அத்துமீறி நுழையாதவாறு மிக உறுதியான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அவர்களைத் திருத்த முடியாது, ஆனால் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்” என்று மிகத் தெளிவாக விளக்கினாள் சுவேதா.

அன்று முதல் கார்த்திக்கும் சுவேதாவும் மங்களத்தின் நாடகங்களுக்குப் பதில் அளிப்பதையோ, அவளோடு கோபப்படுவதையோ முற்றிலும் நிறுத்திக் கொண்டனர். அவர்கள் ‘சாம்பல் நிறக்கல்’ போல எவ்வித உணர்ச்சியுமின்றி ஜடமாக மாறினர். மங்களம் எவ்வளவுதான் தியாகி வேடம் போட்டாலும், அவளது வார்த்தைகளைத் தங்களுக்குள் ஊடுருவ விடாமல் தடுத்து, “சரிம்மா, ரெஸ்ட் எடுங்க” என்று சாதாரணமாகக் கூறிவிட்டுத் தங்கள் எல்லைகளைக் காத்து நகர்ந்து சென்றனர். கைதட்ட ஆளிருந்தால் தானே பேசுபவனுக்கு உருவேறும். கைதட்ட ஆள் இல்லாததாலும், இவர்களிடமிருந்து எவ்வித உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினையும் கிடைக்காததாலும், மங்களத்தின் நார்சிசிச முகமூடி அந்த வீட்டில் மெல்ல மெல்லத் தன் வீரியத்தை இழந்து, தனித்துப் போனது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *