கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 24, 2026
பார்வையிட்டோர்: 252 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெண்பிள்ளைகள் கூடி நின்று என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு சின்ன அமைதி, பயம், மிரட்சி ஒவ்வொருவரும் கொண்டார்கள். அவர்களில் சற்றுப் பெரியவளான ஒருத்தி, ஓடி வந்து அவளது காதில் குசுகுசுத்தாள். மாணவர்களது எஸ்பீஏ வரைபுகளை வரைவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அவள் – ராஹிலா – நிமிர்ந்தாள். 

“என்ன?” 

அந்தக் குரல் லேசாக அலைக்கழிந்தது. ஏற்கனவே சொல்லப்பட்ட செய்தி உள்ளே ஏறியதோ, ஏறாததோ போன்ற நம்பாமை தொனித்தது. அச்சிறுமி மீண்டும் சொன்னாள். 

“டீச்சர், நஸீஹாவின் கவுனெல்லாம் ரெத்தம் பட்டிருக்கு…..” 

சாவி கொடுத்த பொம்மை போன்று விருட்டென்று எழுந்த ராஹிலா, நஸீஹாவை நோக்கிச் செல்லுமுன், ஒருமுறை நிமிர்ந்து ஆண்பிள்ளைகளைப் பார்த்தாள். அவர்கள் தம்பாட்டில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். கிராமப்புறப் பையன்கள் அல்லவா? அரட்டை கூடப் பணிவாகத்தான். அந்தளவுக்கு ஆசிரியர்களுக்கு மரியாதை! 

ஒரு ஆசுவாசத்துடன் நடந்துசென்று கூட்டத்தை விலக்கி, நஸீஹாவின் அருகில் போய் நின்றாள். நஸீஹா மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தாள். ‘உட்காருவதா….. நிற்பதா?’ என்று புரியாத தயக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். அருவருப்புடன் நெளிந்தாள். 

“நஸீஹா, எங்க காட்டு…” 

நஸீஹா திருப்பிக் காட்டினாள். வெள்ளைச் சீருடையெங்கும் செங்குருதி களாவியிருந்தது. பச்சை ரத்தம்! முதல் ரத்தம்! ஒரு கணம் சிந்தித்தாள், ராஹிலா. ஆம்! நஸீஹா பெரியவளாகிவிட்டாள். பத்து வயதுச் சிறுமி. இனி என்ன செய்யப் போகிறாள்? இந்தப் பூப்பின் சுமையை எங்ஙனம் தாங்கப் போகிறாள்? வகுப்பிலேயே மிக இளையவள். சின்னஞ்சிறிய ஒல்லி உருவம். அதற்குள்ளாகவா? 

ஓடிப் போய்த் தனது மேஜையில் பரத்தி வைத்திருந்த எஸ்பீஏ புத்தகங்களை ஒரேயடியாக அள்ளிப் பக்கத்திலிருந்த சிறிய மேஜையில் போட்டாள். மேஜைப் புடவையைச் சரேலென இழுத்தெடுத்தாள். ஓடிச்சென்று நஸீஹாவின் இடையைச் சுற்றிக் கட்டினாள். 

“இந்தப் புக்ஸ பாத்துக்கோங்க….. நா பிரின்ஸிபல் சேர் கிட்ட செல்லிட்டு வாறேன்…..!” 

ஏனைய மாணவர்கள் புரிந்தும், புரியாததுமாக நஸீஹாவைச் சூழ்ந்து கொண்டார்கள். “பயப்பிடாத நஸீஹா! எல்லாம் சரியாயிடும்….” பெரிய மாணவி ஆறுதல் கூறினாள். 

அலுவலகத்தில் ஏதோ வேலையாக அமர்ந்திருந்த அதிபரின் முன்னால் ஓடோடிச் சென்று நின்றாள் ராஹிலா. 

“சேர், ஏன்ட கிளாஸ்ல ஒரு கேர்ள் பெரியபிள்ளை ஆயிட்டா…..” 

“ம்……” அதிபர் தலையை ஆட்டி யோசித்தார். “என்ன செய்றது?” 

“ஆட்டோ ஒண்டு புடிச்சித் தாங்க சேர், நா வூட்டுல கொண்டு போய் வுட்டுட்டு வாறேன்” 

அதுவே சரி என்று ஏற்றுக்கொண்ட அதிபர், விரைந்து ஒரு மாணவனை அழைத்து ஆட்டோ கொண்டு வரச் சொன்னார். 

அதுவரை தாமதித்திருந்த அவள் சிட்டென ஓடி, மேல் மாடிப் படிகளில் ஏறித் தனது வகுப்பிற்குள் நுழைந்தாள். 

“நஸீஹா, புக்ஸயெல்லாம் எடு…..” 

அவள் தனது பொருட்களைச் சேகரிக்க ஏனையோர் உதவினர். நஸீஹாவையும் வகுப்பில் சற்றுப் பெரியவளான சுமைய்யாவையும் அழைத்துக்கொண்டு கீழே சென்றாள் ராஹிலா. அதற்குள் ஆட்டோ வந்திருந்தது. “சேர் போயிட்டு வாறேன்…” என்றபடி, நஸீஹாவின் முகத்தை அதிபர் கூடப் பார்த்துவிடக் கூடாதென்ற கவனத்துடன் சட்டென இழுத்துச் சென்று உள்ளே உட்கார வைத்தாள். 

“டீச்சர், தனியாவா போறீங்க?” 

“துணைக்கு இவ இருக்கா சேர்” என்று சுமைய்யாவைச் சுட்டிக் காட்டினாள். பின்னர்,”சரி போங்க” ஆட்டோ சாரதியின் பக்கம் திரும்பிக் கூறினாள். அவன் ஸ்டார்ட் பண்ணும்போதே “எங்கே?” என்று கேட்டான். 

“நஸீஹா, உன்ட வீடு எங்க?” 

“அடுத்த ரோட்டுல….” நஸீஹாவின் குரல் பிசிரடித்தது. 

ஒருவாறாக, ஆண்பிள்ளைகள் யாருடைய கண்களிலும் காட்டாமல் இவளைக் காப்பாற்றியாயிற்று என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்ட அவள், அப்போதுதான் ஆட்டோ சாரதி ஆண் என்பதை உணர்ந்தாள். ‘ஆண்டவனே, இந்தப் புள்ளய நா கவனமா கொண்டு அவட தாய்கிட்ட ஒப்படைக்க ஒதவி செய்…’ கவலை சூழ்ந்து கொள்ள, சற்று முன்புறமாக உட்கார்ந்து நஸீஹாவைப் பின்புறமாகச் சாயச் செய்து மறைத்துக் கொண்டாள். சுமைய்யாவையும் அவ்வாறே செய்யச் சொன்னாள். 

இந்த நேரத்தில் ஆண்கள் கண்களில் பட்டுவிடக்கூடாது; ஏதும் காத்துக் கறுப்பு அண்டி விடவும் கூடாது. அது காலமெல்லாம் இந்தப் பெண்ணுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று அறிந்திருக்கும் அவள், அந்த விஷயங்களில் பூரண நம்பிக்கையும் கொண்டவள். பெண்கள் பவித்ரமாக வாழும்போது அவர்களது வாழ்க்கையும், சுமுகமாக அமையும் என்பதில் அவளுக்கு ஏனோ அதீத நம்பிக்கை இருந்தது. பெண்கள் இயல்பாகவே பூவைப் போல மென்மையானவர்கள். அந்த மென்மையை அவர்கள் காத்துக்கொள்ளாத போது, ஆண்கள் அதன் பாதுகாவலர்களாக மாறுவது எங்ஙனம் என்று அவள் அடிக்கடி சிந்திப்பதுண்டு. 

பக்கத்து வீதியில் நுழையும்போதே, “அந்தா, அது தான் வீடு” என்று சுமைய்யா மூன்றாவது வீட்டைக் காட்ட, வண்டி போய் நின்றது. நஸீஹாவைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு அவளும், சுமைய்யாவும் இறங்கினர். ஆட்டோக்காரன் வண்டியைத் திருப்பத் தொடங்கினான். 

பழங்காலத்து ஓட்டு வீடு. வீட்டின் முன்புறம் யாரும் இல்லை. கதவில் தட்டிய போதும் யாரும் வரவில்லை. திறந்திருந்த வாசல் வழி நேராக நடந்து சென்று, ஓர் அறைக்குள் மாணவியரை இருக்குமாறு பணித்துவிட்டு, நீண்ட நடைவழியே பின்புறம் சென்றாள் அவள். 

அங்கே ஒரு கிழவி சிறிய குழந்தையொன்றைப் பின்கொல்லையில் வைத்து நீராட்டிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தைக்கு நான்கு வயதிருக்கும். பார்த்த மாத்திரத்தில் ராஹிலாவுக்குப் புரிந்தது. இது வெளிநாட்டுக் கேஸ்…..! 

“உம்மா!” அவளது குரலைக் கேட்டுத் திரும்பினாள் கிழவி. முகத்தைச் சுருக்கிப் பார்த்தாள். 

“ஒங்கட நஸீஹா ஸ்கூல்ல சடங்காயிட்டாள். கூட்டிட்டு வந்திருக்கேன்.” 

பெரிய அதிசயத்தைக் கேட்டது போல, அவளது முகம் மாறியது ஒரு கணம். மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது கடுகடுவென. 

“இந்தச் சைத்தானோடயே உசிரு போவுது. இப்ப அது வேறயா?” 

அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. இப்படியா ஏற்றுக்கொள்வது ஒரு சந்தோஷமான விஷயத்தை? 

“ஏன், நஸீஹாட உம்மா எங்க?” 

“ஹூம்…..” என்று அங்கலாய்த்தபடி குழந்தையின் தலைமீது நீரை அள்ளி ஊற்றிய கிழவி, “கட்டார் போயிட்டா” என்றாள். 

“வாப்பா…..?” 

“அவுரு மீன் புடிச்சிக் கொண்டு திரியிறாரு…. நல்லா சம்பாதிக்கிறாரு…. நல்லாக் குடிக்கிறாரு……. 

“சரிம்மா….. நஸீஹாவ பாத்துக்கோங்க. ஆட்டோ நிக்குது….. நான் போறன்……” அவள் முடித்தது தான் தாமதம், புயலென சீறினாள் கிழவி. 

“அவ போயி ஏழு மாசத்துக்கு மேலாச்சு. இன்னம் ஒரு சதம் கூட சல்லி வரல்ல. அப்பன்காரன் புதுமாப்புள்ள மாதிரி திரியிறான். இவள வெச்சிக்கொண்டு நா என்னல செய்யிறது…..? செலவுக்கு எங்க போறது…..? நா பாரமெடுக்க மாட்டேன். நீங்களே கூட்டிட்டு போங்க…” குழந்தையைத் தரதரவென இழுத்தபடி வீட்டினுள்ளே புகுந்தாள் கிழவி. 

ராஹிலா விக்கித்து நின்றிருந்தாள். இப்படி ஒரு பதில் வருமென அவள் எதிர்பார்க்கவேயில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கிழவியைப் பின்தொடர்ந்தாள். 

குசினியில் ஓரமாகக் கட்டப்பட்டிருந்த கொடியிலிருந்து ஒரு துணியை உருவி, குழந்தையைச் சுற்றிக் கொண்ட கிழவி மூச்சிரைக்க உள்ளே சென்றாள். அவளது தள்ளாத வயதில் இது பெரிய சுமைதான் என்று தோன்றிற்று, ராஹிலாவுக்கு. எனினும் மாற்றீடு எதுவுமே புலப்படவில்லை. 

அந்தப் பழங்கால இருண்ட வீட்டின் ஒவ்வொரு அறையையும் கண்களால் துழாவியபடி நஸீஹா இருக்கும் முன்னறை வாசலில் வந்து நின்ற கிழவி, பயத்தால் வெடவெடத்துக் கொண்டிருக்கும் தனது பேத்தியைக் கண்டதும் சிறிது வேகந்தளர்ந்தாள். பின்தொடர்ந்து வருகின்ற ராஹிலாவிடம் திரும்பி அழாக் குறையாகச் சொன்னாள். 

“நீங்களே சொல்லுங்க டீச்சர்…. நா என்னத்த செய்யிறது? இவளுக்கு ஒரு நல்ல சாப்பாடாவது ஆக்கிக் குடுக்க எனக்கிட்ட சல்லி இல்லையே…..!” 

சட்டெனப் பதில் சொன்னாள் டீச்சர், “கவலைப் படாதீங்கம்மா… செலவுக்கு நாங்க பாத்து ஏதாவது செய்றோம். நீங்க புள்ளயப் பாத்துக்கோங்க….!” 

கிழவி யோசனையுடன் குழந்தையின் தலையைத் துவட்டிக் கொண்டிருந்தாள். ராஹிலா சுமைய்யாவை அழைத்துக் கொண்டு வெளியேறினாள். 


யோசிக்கையில் குழப்பமாக இருந்தது. நஸீஹாவின் பிரச்சினை ஒரு தனிமனித பிரச்சினையில்லை, சர்வதேச விசுவரூபம் என்று அவளுக்குப் புரிந்தது. பல்வேறு நூல்களையும், பிறமொழி ஆய்வுகளையும் கரைத்துக் குடித்திருந்த அவள், பெண்களின் மத்தியகிழக்கு வேலை வாய்ப்பு என்கின்ற சாபத்தை தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாவது தடவையாக மனதுக்குள் சலிக்கத் தொடங்கினாள். 

எப்போதும் ஒரு மாணவனது பிரச்சினையை ஆழமாக உற்றுநோக்கும்போது, அங்கே தாய்மார்களின் புலம்பெயர்வே பிரதான ஏதுவாய் இருப்பதை அவள் பலமுறை அனுபவத்தில் கண்டிருக்கிறாள். பல வருடங்களாகக் குழந்தைகளோடு கழிப்பதால், ஒரு மாணவனது முகத்தைப் பார்த்தே அவனது தாய் அருகில் இருக்கிறாளா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடுமளவிற்கு அவள் இந்த விஷயத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாள். எல்லோரும் அன்றலர்ந்த ரோஜாக்கள் என் று பிள்ளைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், ஒரு கிராமப்புறப் பாடசாலைக்கு வந்தால் கண்டு கொள்ளலாம், வாடி வதங்கி வறுமையில் தளர்ந்து போயிருக்கும் பிள்ளை ரோஜாக்களை என்று அவளுக்குத் தோன்றுவதுண்டு. 

ஆட்டோவின் குலுக்கலும், நலுக்கலும் மிகுந்திருந்த அந்தக் கெரவல் மண்பாதையில், அவை எதுவும் பாதிக்க முடியாதபடி சிந்தனையில் மூழ்கியிருந்த அவளது மனதில் பளீரென ஓர் எண்ணம் உதயமானது. 

மாணவரது குணநல அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி, அதிபர்களின் அப்போதைக்கப்போதைய பணமுடைகளைத் தீர்ப்பதற்கும் பேப்பர், பேனா, பிரிஸ்டல் போர்ட், அலுமாரி வாங்கி இடத்தை நிறைப்பதற்குமே போதுமாயிருக்கும்போது, ஒரு மாணவனின் நலனோம்பலுக்கென்று இந்தச் சிறிய கிராமப்புறப் பாடசாலையில் என்ன வளம் மீதமிருக்கப் போகிறது? எனவே, தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களை ஒன்று சேர்த்து நஸீஹாவுக்கு உதவலாம் என்று அவள் சிந்திக்கலானாள். 

பாடசாலையை அடைந்ததும் மீண்டும் அதிபரின் முன்னால் போய் நின்று “சேர்…..;” என்று இழுத்தாள். 

“என்ன…?” 

“அந்த வீட்டுல பெரிய பிரச்சனை சேர்…. செலவுக்கு வழியில்லையாம். நஸீஹாட ஆச்சி பொலம்புறாங்க….” நடந்த சம்பவத்தை விபரித்தாள். 

“அதுக்கு நாம என்ன டீச்சர் செய்யிறது? குணாத்மக்க ஸ்டோக்கும் (குணநல அபிவிருத்தி நிதி) இப்ப இல்லையே…..!” 

“சேர்….. நாங்க ஸ்டாஃப் எல்லாம் சேந்து கொஞ்சம் பணம் சேத்து, பால், சீனி, நல்லெண்ணெய் எல்லாம் வாங்கிக் குடுப்பமா?” 

“அதெப்பிடி டீச்சர்…. ? நாங்க ஏழெட்டுப் பேர் தானே இருக்கோம்… எவ்வளவுண்டு சல்லி போடுறது?” அதுவரை பக்கத்து மேஜையில் அமர்ந்து, தனது வேலையில் மூழ்கியிருந்த நஜாட் சேர் கேட்டார். 

“ஒருத்தர் நூறு ரூவா போடுவோமே சேர்….” 

அதிபருக்கு மறுக்கத் தோன்றிற்று. எனினும், டவுனிலிருந்து மூவாயிரம் ரூபா போக்குவரத்துக்கென்று செலவு செய்து வாடகை ஆட்டோவில் தினமும் பாடசாலைக்கு வந்து கடமை புரிகின்ற, அந்தக் கர்மசிரத்தையுள்ள ஆசிரியை ஒருத்தியே முன்வரும்போது, தான் மறுப்பது நாகரீகமாகாது என்றெண்ணி வாளாவிருந்தார். 

ஆனால், நஜாட் ஆசிரியர் போர்க்கொடி தூக்கிவிட்டார். “நீங்க நெனச்ச மாதிரி செய்யிறதுக்கெல்லாம் எங்களுக்கு வசதியில்ல டீச்சர். எங்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள்…. அதோட ஒவ்வொரு மாணவர்ட பிரச்சினையையும் தூக்கிப் புடிச்சிட்டிருந்தா எங்கட வேலய செய்ய ஏலாமப் போயிரும்……” 

முற்றிலும் மனிதாபிமானமான இந்தப் பிரச்சினையை இப்படியும் அணுகலாம் என்று அப்போது தான் புரிந்தது அவளுக்கு. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு சொன்னாள். 

“சரி….. கஷ்டம்ன்டு சொல்ற ஆக்களை நாங்க ப்ரெஸ் பண்ணல. விரும்புறவங்க செய்வோம், என்ன சேர்?” 

“சரி ஒங்கட விருப்பம்….” அதிபர் அனுமதியளித்தார். 

பின்னர் பட்டாம் பூச்சியைப் போன்று விரைந்து செயல்படலானாள். நஜாட் சேர் தவிர, ஏனைய அனைவரும் தலா நூறு ரூபா வீதம் தர, மொத்தம் எண்ணூறு ரூபா சேர்ந்தது. 


பாடசாலை விடுவதற்கு மணி அடித்தது. மாணவர் துஆ என்று எதையோ பேர் பண்ணிவிட்டு கூச்சலிட்டுக் கொண்டு ஓடி மறைந்தனர். கையெழுத்திட்டுவிட்டு, கேட்டுக்கு வெளியே வந்து காத்திருந்தாள், ராஹிலா. 

அவள் மூன்று மைல் தொலைவிலுள்ள பக்கத்து டவுனிலிருந்து இந்தக் கிராமப்புறப் பாடசாலைக்குக் கற்பிப்பதற்காக வருபவள். பஸ் போக்குவரத்தில்லாத அக்கிராமத்திற்கு வருவதற்கு வாடகைக்கு ஆட்டோ ஒன்றை அமர்த்தியிருந்தாள். மாதம் மூவாயிரம் ரூபா. அத்துடன் தனது ஒன்றரை வயதுக் குழந்தையைக் கவனிப்பதற்காக நியமித்திருந்த பணிப் பெண்ணுக்கும் மாதம் மூவாயிரம் ரூபா போக, எஞ்சிய தனது சம்பளத்தைப் பெருமளவு புத்தகங்கள் வாங்குவதற்கே அவள் செலவிடுவதுண்டு. நகைக் கடை உரிமையாளரான அவளது கணவர், அவள் தொழிலுக்காக அலைந்து திரிவதை விரும்பவில்லை. எனினும், உபாத்திமைத் தொழிலின் மீதுள்ள ஆர்வம் அவளை இயக்கிக் கொண்டேயிருந்ததால், கவுரவமாக வந்து போவதற்கும், குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கும் அவள் இந்த வழி முறையைக் கையாண்டாள். 

“இன்னும் வண்டி வரல்லியா…..?” தோளைத் தட்டிக் கேட்டபடி அருகே வந்து நின்றாள் ரோஜா டீச்சர். 

“இல்ல டீச்சர். நீங்க இன்னம் போகல்லியா?” 

“உங்களோட போகலாம்ண்டு யோசிக்கிறன். ஏன்ட பைசிக்கள் ரிப்பேர். காலைல ஒரு வேன்ல லிஃப்ட் தந்தாங்க. வந்து சேந்துட்டேன்….” 

“அதுக்கென்ன? போகலாம்…” என்று கூறியவள், பிறகு ஞானம் வந்தவளாக, “நான் நஸீஹா வீட்டுக்குக் கொஞ்சம் சாமான் வாங்கிட்டுப் போகணுமே….;; என்றாள். 

“சரி பரவாயில்லை……” என்று ரோஜா டீச்சர் சொல்லி முடிப்பதற்கும், ஆட்டோ வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. இருவரும் ஏறிக் கொண்டனர். இடையில் ஒரு சில்லறைக் கடையின் முன்னால் நிறுத்தி அரிசி, சீனி, பால், நல்லெண்ணெய், முட்டை, தேங்காய் முதலிய சாமான்களை வாங்கிக் கொண்டனர். 

இருவரும் நஸீஹா வீட்டு முன்னால் இறங்கியபோது, கிழவி திண்ணையில் உட்கார்ந்து தலையை நுணாவியபடி யோசித்துக் கொண்டிருந்தாள். அவளருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. மோவாயில் ஊன்றிய கைகளுடன், குழி விழுந்த கண்களை இடுக்கிக் கூர்ந்து பார்த்து, அவர்களை இனங்கண்டு கொண்டாள். பின்னர், அந்த ஆசிரியைகள் இருவரும் சுமந்து வருகின்ற பொருட்களை பார்த்துக் கொண்டேயிருந்தாள். 

“இந்தாங்கம்மா…..” ராஹிலா பொருட்களை சுவரோரமாக உள்ளே வைத்துவிட்டு. விடுவிடென நடந்து சென்று முன்னறைக்குள் எட்டிப்பார்த்தாள். நஸீஹா வேறு உடை மாற்றி, தலையைப் படிய வாரியிருந்தாள். வெட்கத்துடன் முறுவலித்தாள். 

பின்னால் பொருட்களைக் தூக்கிக் கொண்டு வந்த கிழவி, “பகல் சாப்பாடு இன்னம் குடுக்கல்லம்மா….. இந்த நேரத்துல தானே நல்ல சத்தான, பத்தியமான தீன் குடுக்கணும்….. அதுதான் யோசிச்சுக் கொண்டிருந்தன்” என்று சற்று சந்தோஷமாகவே சொன்னாள். 

“இந்த சாமான் எல்லாம் ஒங்களுக்குத் தான். நஸீஹாவுக்கு சுருக்கா ஆக்கிக் குடுங்க…. இப்பவே ஒண்ணரை மணியாச்சி…..” என்றவள், ரோஜாவின் பக்கம் திரும்பி “போவமா?” என்றாள். 

மௌனமாகத் தலையசைத்த ரோஜா டீச்சர் முன்னே நடக்கத் தொடங்கினாள். கிழவியை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்த ராஹிலா, “அப்ப நாங்க போயிட்டு வாறோம்…..” என்று கூறி இரண்டடி நடந்துவிட்டுப் பிறகு சொன்னாள். 

“எதுக்கும் நஸிஹாட வாப்பாக்கு சொல்லுங்கம்மா…. ஏதும் ஒதவி செஞ்சாலும் செய்வாரு….” 

பரபரவென்று சாமான்களைப் பிரிக்கத் தொடங்கிய கிழவி, அதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து, “ஓம்மனே…. நானும் அதுதான் நெனச்ச…..” என்று யோசனையுடன் கூறினாள். 

இருவரும் சென்று ஆட்டோவில் ஏறி அமர்ந்தனர். ராஹிலா “வீட்டுக்குப் போங்க” என்று சாரதியிடம் சொல்ல, அது நகரத் தொடங்கியது. 

சிறிது நேரம் சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருந்த அவளது மனக் கண்முன்னே நஸீஹா என்ற பத்து வயதுச் சிறுமியின் – மருண்ட விழிகள் வந்து மோதிக் கொண்டிருந்தன. வெளிநாட்டு மோகம் அல்லது தேவை எப்படியெல்லாம் சின்னஞ்சிறு பயிர்களைக் கருக வைக்கின்றது என்று சிந்திக்கத் தொடங்கிற்று, அவள் உள்ளம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக திடீரெனச் சொன்னாள் அவள். 

“இந்த ஊர்ல நூத்துக்கு தொண்ணூறு வீதமான தாய்மார் வெளிநாட்டுலதான் இருக்காங்க. புள்ளைகள் ஆச்சிமார்கிட்டயும், சாச்சி, பெரியம்மாகிட்டயும் சீரழியுது. அவங்களயும் குத்தம் சொல்ல ஏலாது… அவங்கவங்க சுமைகளே பெரிசு…. அதுல புதுச்சுமைகளும் சேந்தா…..?” 

“நெறையப் பேர் காசை எதிர்பார்த்துத்தான் புள்ளைகள பொறுப்பெடுக்கிறாங்க. காசு வரல்லாட்டி எல்லாக் கோவத்தையும் புள்ளைகள்ட மேலதானே கொட்ட வேண்டியிருக்கும்…..” தலையைத் திருப்பி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ரோஜா டீச்சர் அதை ஆமோதிப்பது போல, தொடர்ந்து சொல்லி முடித்தாள். அந்தக் கேள்வி தனது உள்ளத்தில் மீண்டும் எதிரொலிக்க, வெளியே வேகமாகக் கடக்கின்ற பற்றைக் காடுகளைக் கண்களால் அளையலானாள், அவள். மீண்டும் ரோஜா டீச்சரே தொடர்ந்தாள். 

“நாலாம் வகுப்புல இருக்கிறாவே இப்தியா…. முந்தியெல்லாம் நல்லா படிப்பா…. எப்பவும் ப்ரிஸ்க்கா இருப்பா…. போன கெழமையிலயிருந்து ஒரு மாதிரி வாடிப் போயிருக்கா….. ஏம்மா ஒரு மாதிரி இருக்கன்டு கேட்டேன்…. எதுவுமே சொல்றா இல்ல. மத்தப் புள்ளைகள் எல்லாம் சத்தமா சொல்லுது, இப்தியாட உம்மா வெளிநாடு போயிட்டாங்க டீச்சர்ன்ட்டு….. அவவுக்கு சரியான வெக்கம்….. கவலயோட தலகுனிஞ்சி உக்காந்துட்டா….. இப்பவுள்ள புள்ளைகளுக்குக்கூட, இதெல்லாம் வெளங்குது…… பெரியவங்களுக்குத் தான்…..” 

“உம்மாமார் எப்பவும் அது வேணும், இது வேணும்ன்டு பெருசா எதிர்பார்க்கத் தொடங்கிர்றாங்க…. பணம் இருந்தா வாழ்க்கையில எல்லாம் சரின்டு நெனச்சிதான், எப்ரோட் போறாங்க… ரெண்டு வருஷத்துக்குப் பிறகு வந்து பாத்தா, மாப்புள்ளயும் இல்ல, புள்ளைகளும் இல்லை, பணமும் இல்ல…….. பட் தே அன்டர்ஸ்டான்ட் இட் வெரி லேட்” 

“இன்னக்கி ட்ரக் எட்டிக்ஷன், சைல்ட் எபியூஸ், பாலியல் வல்லுறவு, பெண்ணீயம் எல்லாமே மிக முக்கியத்துவம் பெர்றதுக்கு அடிப்படைக் காரணமே இந்த ஃபொரின் மோகம் தான். எல்லா நாடுகள்ளயும் சிறுவர் தினம், மகளிர் தினம், அன்னையர் தினம்ன்டு ஒவ்வொரு நாள் கொண்டாடி பல பிரச்சினைகளைப் பத்திப் பேசுறாங்க. ஆனா, சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மூலவேர் எதுவெண்டு யாருமே யோசிக்கிறதா இல்ல…..” 

“ஏன் டீச்சர், அரசாங்கமே பெண்கள் வெளிநாட்டுக்குப் போறத தடை செஞ்சா என்ன…?” 

“அதெப்புடி? அரசாங்கத்துக்கும் வருமானம் வேணுமே…… இப்ப எல்லாமே சல்லிக்காகத் தானே…..?” 

இவ்வளவு நேரமும் மௌனமாக அவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டு வந்த ஆட்டோ சாரதி, அவளுடன் வழக்கமாக மரியாதையாகப் பழகுகின்ற, நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட அவளது வாடகை ஆட்டோ சாரதி கூறினான். 

“சில ஸ்கூல்ல தாய்மார் வெளிநாடு போயிருந்தா அவங்கட புள்ளைகளப் புதுசா சேக்கமாட்டோம்ன்டு சொல்றாங்க. அது நல்ல ரூல்ஸ் …. இல்லியாம்மா………?” 

சிறிது சிந்தித்துவிட்டு அவள் கூறினாள். 

“அது கூட நல்ல தீர்வு இல்ல. இந்த ஸ்கூல் கெடைக்காட்டி புள்ளய இன்னொரு ஸ்கூல்ல கொண்டு போய் சேப்பாங்க. இது கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் இல்ல….. முழு சமூகத்துக்குமான பிரச்சினை. முழு நாட்டுக்குமான பெரிய பிரச்சினை… கலாசார சீரழிவு, அது இதுன்று சொல்லிக்கொண்டு தலையில் அடிச்சிக் கொள்றாங்களே தவிர, யாரும் ஏதும் யோசிக்கிறதா இல்ல…..!” 

கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோ சாரதி, வண்டியை பாதை வளைவில் திருப்பிச் செலுத்தத் தொடங்கிய பின்பு மீண்டும் கூறினான். 

“சில கொமருகள் வெளிநாட்டுக்குப் போறத பெரிய கவுரமா நெனக்கிறாங்கம்மா….. அங்கயிருந்து அதுகள் 

அதுகள் கொண்டு வாற சோப்பென்னா……. பவுடர் என்னா. சென்ட் என்னா சொல்லி….. வேலயில்ல…”

“அதுதானே, இந்த நாட்டுல எவ்ளோ படிச்சாலும், எவ்ளோ ஒழைச்சாலும் இதுபோல வருமாண்டு நெனக்கிறாங்களே…!” 

ரோஜா சொல்ல, மீண்டும் சாரதி தொடர்ந்தான். 

“எங்கட வூட்டுக்குப் பக்கத்துல ஒரு மனுஷி வெளிநாடு போனா. அவளுக்கு ஒரு புள்ளகூட இருக்கு. இப்ப பைத்தியமா திரும்பி வந்திருக்கிறா….! ஏதோ அங்க இன்ஜெக்ஷன் போடுறாங்களாமே…..! மிச்சம் பேசினா அந்த ஊசியப் போட்டு அனுப்பிருவானாமே……! இப்ப முடியெல்லாம் அரைகுறையா வெட்டி, ராவு பகலா ரோட்டுல தனியா பேசிக்கிட்டு அலஞ்சி திரியிறா….!” 

அந்த வார்த்தைகளின் நிஜம் சுட்டெரிக்க, இரண்டு ஆசிரியைகளும் மௌனமாக அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் தனது வீட்டுக்கருகே ரோஜா டீச்சர் இறங்கிக் கொள்ள, வண்டி மீண்டும் தனது திசையில் தொடர்ந்தது. 

தனது வீட்டையடைந்ததும் அவள் இறங்கி உள்ளே நடந்தாள். முன் வராந்தாவில் யாரையும் காணவில்லை. கணவரது செருப்புக்களும் இல்லை. சாப்பிட்டுவிட்டுப் போயிருப்பார். குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறதோ? 

ஓசையின்றி செருப்பைக் கழற்றிவிட்டு ஹோலில் இருந்த மேஜையில் ஹேன்ட்பேக்கை வைத்தாள். டைனிங் ஹோலுக்குள் நுழைந்தாள். அங்கே….. 

ஸோபாவில் ஹாய்யாக அமர்ந்திருந்த வேலைக்காரி, தமிழ்த் திரைப்படத்தில் மூழ்கியிருந்தாள். அவளது ரசனையைக் கெடுப்பது போன்று குழந்தை அவளது முகத்தைப் பிராண்டி…… அழுதுகொண்டிருந்தது. அதை அடக்குவதற்காக, டிவியிலிருந்து தனது பார்வையை எடுக்காமலே, அவள் தனது வெற்றிலைக்காவி படிந்த வாய்க்குள்ளிருந்து காலையிலிருந்து தான் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையின் சிகப்புத்துகள்களை குழந்தையின் வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தாள். 

இவ்வளவு நேரமும் தான் யாருக்காக மிகவும் பச்சாதாபப்பட்டு, வாய் கிழியத் தத்துவம் பேசிவந்தாளோ, அந்த நஸீஹாவுக்கும், தனது குழந்தைக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தோன்றியது ராஹிலாவுக்கு. 

– ஜனவரி 2010, மல்லிகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *