A for ஆப்பிள் – O for JOY
கதையாசிரியர்: எஸ்.பவிஷ்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 23, 2026
பார்வையிட்டோர்: 92

நாம் வாழும் பூமியில் எப்படி மனிதர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களோ அது போல செவ்வாய் கிரகத்தில் விசித்திரமான சில உயிரினங்கள் வாழ்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் செய்தி தெரிவித்தனர். அப்படி என்ன விசித்திரமான உயிரினம்? சில உயிரினங்கள் வளைந்து நெளிந்து பாம்புபோல இருக்கின்றன. பிற உயிரினங்கள் நீட்ட நீட்டமாக குச்சி போல உடல் அமைப்பு கொண்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் அதற்கு பெயர்கூட வைத்துள்ளனர்.
ஏறக்குறைய சுமார் 26 வகை உயிரினங்கள் வாழ்வதாக தகவல் தெரிகிறது. இந்த 26 வகை உயிரினங்களுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். சில நில பகுதிகளில் A என்ற உயிரினங்களும், சில நில பகுதிகளில் B என்ற உயிர்னங்களும், சில நில பகுதிகளில் C, D , E , F ,…. Z போன்ற 26 வகை உயிரினங்கள் வாழ்கின்றன என்று ஆராய்ச்சியில் சொல்லப்படுகிறது.
A முதல் Z வரை வாழும் உயிரினங்கள் அதனுடைய சொந்தமண்ணில், பிறந்த மண்ணில்தான் வாழும் வேறு பகுதிக்கு போகாது. சிங்கம் எப்படி தனக்கென ஒரு சுற்றுவட்ட எல்லையை அமைத்துக்கொள்கிறதோ அதுபோலத்தான் அந்த A முதல் Z வரை வாழும் உயிரினங்கள் தனக்கென்று ஒரு எல்லையை அமைத்துக்கொண்டு வாழ்கின்றன. தப்பித்தவறி A உயிரினம் B உயிரினத்தின் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் அவ்வளவுதான் அத்தனை B உயிரினங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து Aவை அடித்து உதைத்து கை கால்களை உடைத்து தரையில் போட்டு நசுக்கிவிடும்.
செவ்வாய் கிரகத்தில் வாழும் அத்தனை கூட்டத்திற்கும் ஒரு தலைவன் உண்டு அவன் பெயர்தான் O. O என்ற உயிரினம் மிகவும் புத்திசாலி தலைவன். A முதல் Z வரை எந்த சண்டை வந்தாலோ, பிரச்சனை இருந்தாலோ அனைவரும் ஒன்று கூடி O விடம்தான் நியாயம் கேட்டு செல்வார்கள். அந்த கிராமத்தில் O தான் பஞ்சாயத்து தலைவர். நம்ம ஊரு பஞ்சாயத்து தலைவர் போல அல்ல மிகவும் திறமைசாலி. பஞ்சாயத்து செய்து நீதியை நிலைநிறுத்துவார். இந்த O என்ற பஞ்சாயத்து தலைவர் உத்தரவு (order) போடுவதில் கெட்டிக்காரர். செவ்வாய் கிரகத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற உத்தரவு போட்டுக்கொண்டே இருப்பார்.
இந்த விசித்திரமான உயிரினங்களில் இரண்டு உயிரினங்களுக்கு மட்டும் கோபமும், ஆக்ரோஷமும் அதிகம். J மற்றும் Y என்ற இந்த இரண்டு உயிர்னங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஆக்ரோஷமான உயிரினம் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதி வைத்த குறிப்பு உண்டு.
Jவை கண்டால் Yக்கு பிடிக்காது. Yஐ கண்டால் Jவிற்கு ஆகவே ஆகாது. முன்விரோதம் முற்றிவிட்டது போல இருவரும் கோபத்தோடு ஒருவருக்கொருவர் எதிரிகள் போல வாழ்ந்து வந்தார்கள். Jவிற்கும் Yக்கும் வாக்குவாதம் வந்தால் உடனே கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு கலவரமாக மாறிவிடும். “இந்த இரண்டு உயிரினங்களுக்கு தலைக்கணம் அதிகம் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே இல்லை, பூமியில் மனிதர்கள் வாழ்வதைப்போல. கீரியும் பாம்பும் போல செவ்வாய் கிரகத்தில் Jயும் Yயும் வாழ்ந்து வந்தார்கள்.
இந்த பஞ்சாயத்து தலைவர் Oவிற்கு ஒரு பெரிய பேராசை ஒன்று உண்டு. அப்படி என்ன ஆசை? எப்படியாவது Jவையும் Yஐயும் ஒன்றோடு ஒன்று சேர்த்துவைக்க வேண்டும் என்ற ஆசைதான். சேர்த்துவைப்பதற்கு ஒரு திட்டம் தீட்டியது. என்ன திட்டம்? வழக்கம் போல நீங்கள் கேள்விப்பட்ட திட்டம் தான். Jக்கும் Yக்கும் ஒரு ஓட்டப்பந்தய போட்டிதான். செவ்வாய் கிரகத்தில் ஓட்ட பந்தயம் என்றால் ரொம்ப பேமஸ். சரி, விதிமுறைகள் தான் என்ன?
இருவரும் ஓடி போய் சூரியனை தொட்டுவிட்டு திரும்பி ஓடி வரவேண்டும். யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள் மற்றும் பலசாலிகள். ஒருவேளை இருவரும் சூரியனை தொடமுடியவில்லை என்றால் அவர்கள் இருவரும் தோல்வியை ஒப்புக்கொண்டு இருவரும் ஒன்றாக இணைத்து நண்பர்களாக வாழவேண்டும் என்பது தான் Oவின் திட்டம்.
Jயும் Yயும் போட்டிக்கு சம்மதம் தெறிவித்தனர். போட்டி துவங்கியது, 26 வகை உயிரினங்கள் ஒன்று கூடின, O கொடியசைத்து போட்டியை துவங்கி வைத்தார். J ஒரு அணியாகவும் Y மற்றோரு அணியாகவும் ஓட ஆரம்பித்தனர். இருவரும் ஒரே வேகத்தில் சூரியனை நெருங்கினார்கள். நெருங்க நெருங்க அவர்களால் வெப்பத்தை தாங்க முடியவில்லை. jக்கும் Yக்கும் வேர்த்து கொட்டியது. நெஞ்சு வெடிப்பது போல மூச்சு வாங்கியது. அவர்களுடைய தோள்கள் சுட்டு எரிவது போல இருந்தது. அவர்களுடைய நாக்கு காய்ந்த வாழை இலை போல சுருங்கிப்போனது. ஒருகட்டத்தில் சூரியனை நெருங்க முடியவில்லை. இருவரும் சூரியனிடம் தோற்றுவிட்டனர். இருவரும் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
Jயும் Yயும் தோல்வியடைந்ததை அறிந்த Oவிற்கு கொள்ளை சந்தோஷம். இருவரும் திரும்பவந்து பஞ்சாயத்து தலைவரிடம் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று அவர்களுடைய தோல்வியை பதிவு செய்தனர். தலைவர் O சொன்னதுபோல இருவரும் தோற்றுவிட்டால் நண்பர்களாக இணையவேண்டும். Jயும் Yயும் வரலாற்றில் அன்றுதான் இருவரும் ஒன்றாக இணைந்தார்கள். Jயும், Oவும், Yயும் கைகளை கோர்த்து நண்பர்களாக இணைந்து
JOY என்று சத்தமிட்டு அவர்களுடைய சந்தோஷத்தை தெரிவித்தனர். பிற உயிரினங்களும் JOY என்றால் என்னவென்று அர்த்தம் புரியாமல் JOY JOY JOY என்று சத்தமிட்டு மகிழ்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026
அறிவு அற்றங் காக்கும் கருவி!
வளர்கவி
May 31, 2026