திடீர் பாசம்
நீ பாக்கறதுக்கு கொழு கொழுன்னு இருக்கே! கூட இருக்கறவங்க சொல்லும்போது சந்தோசமாய் இருந்தாலும் இந்த ஒரு வாரமாய் மனசு அடிச்சுக்குது, எதுக்குன்னு தெரியவில்லை.
முதலாளியும், முதலாளியம்மாவும், அதிகமாக என் மீது பாசத்தை பொழியறதாலாயா? ஒரு வேளை ரொம்ப நாள் கழிச்சு வரும் அவர்கள் மகனுக்கு என்னை?…
முதலாளி இப்பவெல்லாம் என்னைய பாக்கற பார்வையே சரியில்லை, தேவையில்லாம என் இடத்துக்கு வர்றதும், என் தலையை தடவறதும், அணைச்சு பேசறதும், எனக்கு ஈரல் குலை எல்லாம் நடுங்குது, பக்கத்துல இருக்கறவங்க என்ன முதலாளி உன் மேலே பாச மழை பொழியறாரு, அவர் மகன் வேற வரப்போறான்!. கண்னை சிமிட்டி சிரிக்கிறார்கள்.
எனக்கு இதை கேட்டதும், அப்படியே கோபம் பற்றிக்கொண்டு வருகிறது, நான்தான் கிடைச்சனா? இங்க எத்தனை பேர் இருக்கறாறாங்க, எனக்கு இதிலெல்லாம் விருப்பமேயில்லை..
முதலாளிதான் இப்படின்னா? முதலாளியம்மா அதுக்கு மேல? இப்பவெல்லாம் ரொம்ப கரிசனத்தை காட்டறாங்க. இவங்க இரண்டு பேரும் கவனிக்கறதை பார்த்தா மனசுக்குள்ள பகீர்னு இருக்கு. இதுவரைக்கும் எல்லார்கிட்டேயும் நல்லா பாசமாத்தான் இருந்தாங்க, இப்ப இவங்க என் கிட்ட அதிகமா பாசத்தை காட்டறப்பத்தான் ரொம்ப பயமாயிருக்கு !
முதலாளி வீட்டில எல்லோரும் எப்பவும் இருக்கறதை விட இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கற மாதிரி தெரியுது. வசதி வாய்ப்பு இவங்க கிட்ட இல்லை யின்னாலும் எங்களை மாதிரி இருக்கறவங்களை காப்பத்தறதுல அவங்களை மாதிரி யாரும் கிடையாது. ஆனா பையன் ஊருல இருந்து வரப்போறான்னு தகவல் வந்த பின்னாடி எங்கிட்ட வந்து வந்து கொஞ்சறதை பாக்கும்போது ஐயோ…என்னை? கடவுளே என்னை காப்பாத்து.
நினைச்சு பாக்கறேன், என்னை எப்படி எல்லாம் வளர்த்துருப்பாங்க, அவங்க என்ன செய்தாலும் கேள்வி கேக்காம செய்யறதுதான் முறை, இருந்தாலும்?
அவங்க பையன் வெளியூருல இருந்து வந்து கொஞ்ச நாளுக்குள்ள கல்யாணத்தை பண்ணி வைக்கோனுமின்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. ஒரு வேளை அந்த பையனுக்காக என்னைய?…
பாவம் அந்த பையன் வெளியூருக்கு வேலைக்கு போய் இரண்டு வருசத்துக்கு மேல இருக்கும், இவங்களும் தான் என்ன செய்வாங்க? ஒத்தை புள்ளைய வேலைக்கு வெளியூருக்கு அனுப்பிச்ச எல்லா பெத்தவங்களை மாதிரிதான் இவங்களும் ரொம்ப கஷ்டபட்டாங்க, அந்த பையன் ஞாபகமா எங்களை எல்லாம் அப்படி பாத்துகிட்டாங்க, இப்ப இவங்களே இப்படி நினைக்கறாங்கன்னு நினைக்கும்போது எனக்கு வயித்துல புளிய கரைக்குது.
அதுவும் இப்பத்தான் நான் வாழப்போற பருவத்துல இருக்கேன், எனக்கும் குஞ்சு குட்டிகளோட இருக்கனும்னு ஆசையிருக்காதா? இவங்க சுய நலத்துக்காக என்னைய பலி கொடுக்கனும்னு நினைக்கிறாங்களே?
யாரோ வர்றாங்களே? அடடே இதுதான் அவங்க பையன் போலிருக்கு, பாரு அய்யனும், அம்மாளும் கட்டி பிடிச்சுகிட்டு அழைச்சுகிட்டு போறதை. ஆனா போகும்போது ஓரக்கண்ணால எங்களை பாத்த மாதிரிதான் இருக்கு. எங்களுக்கு எதுக்கு வம்புன்னு தலையை குனிஞ்சுகிட்டு எங்க வேலைய பாத்துகிட்டு இருந்தோம்.
இப்ப மணி என்ன இருக்கும்? விடியற்காலை அஞ்சு மணி இருக்குமா? யார் உள்ளே வர்றாங்க, முதலாளியம்மா மாதிரி இருக்கு, ஐயோ என் பக்கத்துல வர்றாங்களே, நான் தூங்கற மாதிரி நடிக்கணும், இல்லையின்னா? ஐயோ என் காலை புடுச்சு இழுக்கறாங்களே, என்னை யாராவது காப்பாத்துங்களேன் க்கோ…க்கோ..கோ..க்கோக்க்க்
சாப்பிடு தம்பி, நல்ல பக்குவத்துக்கு வந்த கோழி, இன்னும் இரண்டு மூணு நாள்ல முட்டை வச்சிரிருக்கும், அதனால கறி ருசியா இருக்கும், அதுதான் விடியறதுக்குள்ள அடிச்சு, குழம்பு வச்சு புட்டு சுட்டு வச்சிருக்கேன். சாப்பிடு…