உயர்ந்த உள்ளம்
கதையாசிரியர்: எஸ்.ராமமூர்த்தி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 564

வறட்சி மாவட்டம்தான். இதில் பல பகுதிகள் வானம் பார்த்த பூமியாக தூங்கிகொண்டிருந்தன. சில இடங்களில் பயிர்கள் முளைத்தும், பல பகுதிகளில் கிள்ளிய கொழுந்தைபோல் தொங்கிபோயும் கிடந்தன.
கிட்டதட்ட கடற்கரைக்கு நான்கு கிலோமீட்டர் தூரத்திலிருந்த கள்ளிகுடி கிராமம் மட்டும், வறண்ட பாலைவனமாக காட்சியளித்தது. “இது வானம் பார்க்காத பூமியாம்”இப்படித்தான் வெள்ளச்சி கணக்கன் சொன்னான்
வயல் வரப்பு, வாய்க்கால்களெல்லாம் இருந்தன. இருந்து என்ன செய்ய..! மருந்துக்குகூட புல்பூண்டு இல்லை.
ஊரையொட்டி மேய்ச்சல் நிலமாக காட்சியளிதது கண்மாய்.இதில்,அது கெட்டகேட்டுக்கு கரையும்கூட இருந்தது.இது, அலைமோதி மேலேறும் தண்ணீரை தடுக்கவாம். ஹூம்…ம்
இந்த வறட்சியில், விவசாயத்தை தவிர வேறு நாதியில்லாததால், திண்ணைகளில் உட்கார்ந்து, மூக்கை சிந்தி போட்டு, தெருவை நாசம் செய்து கொண்டிருந்தவர்கள், வாய்க்குவாய் வம்பு பேசி கொண்டிருந்தார்கள்
எப்போதும்போல, பெத்தாரு வீட்டு அடுக்களையிலிருந்து மட்டும், புகை வெளியேறி கொண்டிருந்தது.
குளிக்க மறந்தவர்களெல்லாம், அன்றைக்கு பவுடர் மூஞ்சிகளோடு அந்த வீட்டு வாசலில், உட்கார்ந்தும் நின்றுகொண்டுமிருந்தனர்
வெறும் வாயை மென்று, வீங்கி போயிருந்த கோட்டழகு, நடைபாதையில் நின்றுகொண்டு “எங்கேடா சோக்கா கெளம்பிட்டீங்க” என்றான்.
“பெத்தாரு வீட்டு சின்னவருக்கு, மாப்பிள்ளை பேச வாராங்களாம்”
“இத வச்சு இன்னைக்கும் கொட்டிக்கப்போறியளா? சரி.. சரி..போங்கடா..உங்க வயித்துலெ வண்ணான வச்சுதான் வெளுக்கனும்போல”
“அழகம்மா நாச்சியாரு தயவுலதான், நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம்,கெடைச்சா பாலு இல்லேனா கூழுன்னு இருக்கிற உனக்கெல்லாம் பேச்சுவேற”என முனகியபடியே நடந்தான் மலராசு.
ஊருக்கே, முதல் அரசு ஊழியரான காளைராஜனுக்கு, பெண்ணை பேசி முடித்தனர்.
வெளியூர் சென்று படித்த காளை, நாகரீக யுவதிகளை கண்டவன். மணம்முடிக்க போகும் பெண்ணை பற்றியே அவனது சிந்தனை மூழ்கியது. பகலில் நினைவாகவும், இரவில் கனவாகவும் வந்த, அந்த பாழாய்போன அழகி{அய்யய்யோ தப்பு தப்பு..அந்த பெண்}பாடாய்தான் படுத்திவைத்தாள்.
திருமணம் முடிந்தது…
நினைவாகவும், கனவாகவும் வந்தவளுக்கு நேர்த்தியில்லை. நேரெதிராக இருந்தாள். இருந்தாலும் அவன் மனம் தளர்ந்துவிடவில்லை “நான் ரோட்டு கடைவடைகறி…நீ எனக்கு ஏத்த மெதுவடை”என வாழ்ந்தான்.
காலம் கடந்தது.குழந்தையும் பிறந்தது.”மிச்சமில்லாம கொட்டுங்க” என,பாவத்தை பாக்கியில்லாமல் வாங்கி கட்டிகொள்ளும்,அவளது அண்ணன் வீரமணியின் கு \ணத்தில், பாதியை எடுத்து கொண்டவள்போல, கணவன் மீது எரிந்து விழுந்தாள்.
ஹாலில், படுக்கையில் சாய்ந்த காளை”அடியே,பேனை போடு” என்றான்.”காத்தாடி இல்லாம தூங்க மாட்டியளோ என்றவள், நேத்து வாங்கிபோன காத்து இன்னைக்கு என்னாச்சு”என்றாள்.
குதர்க்கமான பதில், குந்தகமான நடவடிக்கைகளால் கணவனை கூர்மையாக குத்தினாள். “கண்ணை மெல்ல மறைத்து, உன்னை கையிலெடுத்து காலமெல்லாம் அணைத்திருப்பேன்” என கனவு கண்டவனுக்கு, வாழ்க்கை பொய்த்து போனது.
பிறந்த வீட்டிற்கே திரும்பினான். ஊருக்கே பசியாற்றும் அவனது அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும் இது சுமையாகவில்லை. “குலமகள் கோலத்தில்,தேவி மருமகளாக வந்தாள்”என்று நம்பிய, அழகம்மாளுக்கு மட்டும்,உள்ளூர இதை ஜீரணிக்க இயலவில்லை.
ஊர் திருவிழா..
மூன்று ஏக்கர் விஸ்தாரத்தில் இருந்த பெத்தாரு வீடு மட்டும், கல்யாண வீடு போல களை கட்டியது. ’என்னைய விடுங்க சாமி’என, திண்ணையில் தனிமையில் இருந்தான் காளை.
படியேறியும் இறங்கியும் சென்றவர்கள் முகங்களில், குதூகலம் மிளிர்ந்தது.அவர்களின் சிரிப்பிலும் பேச்சிலும், கடந்தகால வாழ்க்கையை மறந்திருந்தான்.வாசலில் வண்ணசேலைகளால், இருட்டை கலராக்கி சென்ற பெண்களில் ஒருத்தி, காளையை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள்.
கரும்பு வில்லும், முல்லை மலரம்பும் இல்லாத மன்மதனைபோலிருந்த காளை, அவனை யறியாமலேயே அந்த ரதியை ஈர்த்தான்.
சிறிது நேரத்திற்கு பிறகு, மலர்கொத்து போன்ற முகத்துடன் தனியாக வந்தவள், பார்த்து சிரித்தாள்.
உப்புபரல்கள்போல பற்கள் பளிச்சிட, களுக்கென்று சிரித்தவள், காற்றோடு காற்றாக காளை மனதில்,
காதல் நெருப்பை பற்ற வைத்துவிட்டு போனாள்.
கோவில் தேரோட்டங்கள், குடும்ப விழாக்களில் யதேச்சையாக சந்தித்தனர்.’நீயும் நானும் ஒன்னு, இனிமேல் என்ன நாணம் என்று காளை கதைக்க, ”மச்சான் சொன்னது நல்ல பாயிண்டு, நாம ரெண்டுபேரும் ஒரே ஜாயிண்டு” என, மனதை பரஸ்பரம் பரிமாறி கொண்டனர்.
திருமணம் முடிந்தது. சொந்த ஊருக்கு பக்கத்திலேயே வேலை, வீடு என தனிக்குடித்தனம் நடத்தினர்.
ஒருவர் காற்றானால் மற்றொருவர் தென்றலாகவும், இவள் கங்கையானால் அவன் நதியாகவும்
கலந்து, புரிந்து நடந்தனர்.
இல்லற இன்பத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. இருந்தும், உப்புக்கும்ஆகாத பிறந்த வீட்டை கைகழுவி விடவில்லை காளை.
அக்கா மகனை கல்லூரியில் சேர்த்ததிலிருந்து, அரசியல் போராட்டங்களில் வந்த வில்லங்கங்களை விலக்கியதுவரை காளைதான் முன்னின்றான். பலஆண்டுகளுக்கு பிறகு சகோதரி{வசந்தா} மகனுக்கு பேன்ட் ஷர்ட்போட்டு அழகு பார்த்தவன், அவனையும் கல்லூரியில் சேர்த்துவிட்டான்.படிப்பான் என்று நினைத்த காளைக்கு ஏமாற்றம். ’போவான் வருவான் வம்பையும் வாங்கி வருவான்’இவனுக்கும் ஜவாப்தாரியாக இருந்து, பட்டம் வாங்கும்வரை ஒரே போராட்டத்தை சந்தித்தான் காளை.
இந்த ரெண்டு பேராலும், எந்த பிரயோஜனத்தையும் காளை கண்டதில்லை.
அக்கா, தங்கை மகனுக்கு காரியதரிசியாக இருப்பதை பார்த்து, மனைவியும் கண்ணை கசக்கவில்லை.
காலம் கடந்தது..குடியேறிய ஊரில், ஏழை குடிபானவர்களின் குடும்ப தகராறுகளை தீர்ப்பதில், வக்கீலாகவும், நீதிபதியாகவும் இருந்து,பிரச்சினைகளை தீர்த்து வைத்த காளைக்கு, அடித்தட்டு மக்களிடம் செல்வாக்கு பெருகியது.
எத்தனை காலத்திற்குதான், காலனும் இதை சகித்து கொள்வான்.வயது மூப்பின்காரணமாக ஒருநாள் திடீரென உயிரிழந்தார். சொந்தபந்தங்கள் அழுததைவிட, அவரால் பயன்பெற்றவர்கள், கண்ணீரை காணிக்கையாக்கினர்.
மணவிழா ஒன்றுக்கு வந்தவர்கள்,காளையின் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தனர்.அதில் ஒருத்தி ”உங்க வீட்டுக்காரரு வழியிலெ, ஏதாவது சம்பந்தம் பண்ணக்கூடாதா?என்றாள். இதுபற்றிய பேச்சு தொடர்ந்த்து.
”ஏத்தா கேக்குறே, கட்டுகுடியாரு, பிச்சைபுள்ளைவீடு,பெருமு வீட்லதான் சம்பந்தம்
பண்ணுவாங்களாம், சாமாஞ்சரக்கெல்லாம் பெருசாவுள்ள வீடுக அதுதானாம், அதான் எங்களை ஒதுக்கிட்டாங்க”
”என்னத்தா சொல்றீங்க, சுப்பையாபுள்ளை, அவரு தம்பி சின்னபெருமா செத்ததுக்கு காரணமே, அந்த குடும்ப பொம்பளைகதான்னு சொல்றாங்க, நீங்க வேறமாதிரி சொல்றீக”
”ஜனம் பெருத்துப்போயி கெடக்குல, அதை கொறைக்கிறதுக்குகூட அங்கெ சம்பந்தம்
பண்ணுவாங்கபோல,அதான் இந்த வம்பு நமக்கு எதுக்குன்னு, நாங்களும் பொண்ணை குடுங்க, பையனை கொடுங்கன்னு கேக்குறதில்லை. கல்லாணம் முடியட்டும் அவுக பண்ற சம்பந்தத்தை பத்தி விலாவாரியா சொல்றேன்” என எழுந்தாள்.
உயிரோடு உள்ளவரை ஒதுக்கி வைத்த பிறந்த வீட்டாரும், உறவுக்காரர்களின் சுடுசொற்களும்,
காளையை இடி விழுந்த மரமாக வேரோடு வீழ்த்திவிடவில்லை. வாடாமல்லியாகதான் மணக்கிறார்.
அவர் சொல்லி வைத்த பாடத்தை பின்பற்றும் பெரிய மகனாலும், கடைசிபெண்குட்டியாலும், குடும்பத்தில் எந்த குறையும் இல்லை. வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்று அவரது மனைவி ஆழமாக நம்பினாலும், காளையின் மனிதாபிமானம் அவர்களை காப்பாற்றுகிறது.
தொடர்புள்ள சிறுகதைகள்
மாதம் பிறந்தது
விந்தியா
May 22, 2026
பரிணாமம்
ஜெயந்தி சங்கர்
May 22, 2026