வளர் பிறை
கதையாசிரியர்: மாறன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 511
(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-32
28. மோகனா

முருகன் என் சொந்த அண்ணன். இதை அறிந்தவுடன் என்மனத்தில் ஒரே கொந்தளிப்பல்லவா ஏற்பட்டது. எவ்வளவு உயர்ந்தகுணம். ஊரில் அவருக்கு எவ்வளவு மரியாதை! இடைவிடாது உழைத்து வியாபாரத்தின் மூலம் ஏராளமாகப் பொருளும் தேடியிருக்கிறார். ஏழை யாக இருந்து சுய முயற்சியால் வ்வளவு மேன்மை யடைந்திருக்கிறார் என் அண்ணன். அவருக்கு என்மீது எவ்வளவு வாஞ்சை ! ஆனால்! ஆனால்……..! அவருக்கு நாட்டியக்கலையின் மேல் ஏன் அவ்வளவு வெறுப்பு? நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேனே, புனிதத்தன்மை யோடு கலைப்பணிசெய்யக்கூடிய உறுதி என்னிடம் உண்டு என்று. நான் சலங்கை கட்டிக்கொண்டு நாட்டியமா வது அவருக்குப் பிடிக்கவில்லை. இதற்காக நாட்டியத்தை விட்டுவிட நான் விரும்பவில்லை. பிற சமூகங்கள் என்னைத் தாசி,வேசி,பரத்தை என்றழைத்தாலும் நான் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.
பெறுதற்கரிய நாட்டியத்திறமை என்னிடம் அமைந் திருக்கிறது. அதைப் பயன்படுத்தாவிட்டால் கலைக்கே நான் துரோகம் செய்ததுபோலல்லவா ஆகும். குடும்பத் தில் வாழ்வது என்ற இன்பத்திற்காகக் கலையின்பத்தைத் தள்ளி விடுவதா? நாட்டியக்கலை என்உயிர். என் ஜீவ னைத் தள்ளிவிட்டு நான் எப்படி வாழமுடியும். முருகன் என் அண்ணன். இந்த உலகில் நான் ஒரு அனாதையில்லை. இந்த மகிழ்ச்சியே போதுமானது. அண்ணனோடு கூடவே இருந்தால்தான் மகிழ்ச்சியடையமுடியுமா? இவ்வளவு காலம் இன்னாரென்று அறியாமலே பிரிந்திருந்தோம். இனி அறிந்தே பிரிந்திருப்போம். அண்ணனைக் காண வேண்டும் என்று ஆசை ஏற்படும்போதெல்லாம் நாகர்கோவிலுக்குப் போய்ப் பார்த்துக்கொள்வது. நாட்டியக்கலைக்காக இப்படியெல்லாம் நான் என் மனதைத் தேற்றிக்கொண்டேன். ஆனாலும் அண்ணன் மீதுள்ள பாசம் உள்ளூரப் பொங்கிக்கொண்டிருந்தது.
நாகர்கோவிலிலிருந்து திரும்பிவந்ததும் என்தாய் சார தாம்பாளிடம் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் சொன் னேன். நான் நாட்டியக்கலைக்குப் பணிசெய்வதற்கென்றே சகோதரபாசத்தைத் தியாகம் செய்ததைக்குறித்து அவ ளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவளுடைய உணர்ச்சி வேகத்தில் “என் மோகனாக் கண்ணே, நான் மறுத்துச் சொல்வேனென்று பயப்படாதே. உனக்கு இஷ்டமிருந் தால், நாட்டியத்தை விட்டுவிட்டு உன் அண்ணனுடன் போய் சுகமாக வாழ்ந்திரு. அவர் சொல்லுகிறபடி உங்கள் குலத்திலுள்ள ஒரு கணவனை மணந்துகொள்” என்று முழுமனதுடனேதான் சொன்னாள். அண்ணனுக் கும் எனக்கும் ஏற்பட்டுள்ள பாசத்தைக் கண்டுதான் அவள் கூட இவ்வளவுதூரம் தாராளமாகச் சொன்னாள். ஆனால் இதனாலும் கலைப்பணியின் மீதுள்ள என் உறுதி தளர வில்லை. நாட்டியத்திற்காகவே உயிர் வாழவேண்டுமென்ற உறுதி என் மனதில் இன்னும் பலமாகவே வேரூன்றியது.
நாட்டியத்தோடு வாழ்வதற்கு என் அண்ணன் வீட் டில் இடமில்லை. ஆகவே சாரதாம்பாள் வீடுதான் எனக் குரியது. நான் பிறந்தது பண்டாரக்குலத்தில். இருப்பது தாசிக்குலத்தவரிடையில். ஈனத்தொழில் புரிவதனால் தாசிக்குலம் அவமானமடைந்திருக்கிறது. இந்த அவமா னத்தைப் போக்குவதற்குச் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். பண்டாரக்குலம் பூக்கட்டுவதைத் தொழிலா கக் கொண்டிருப்பதுபோல தாசிக்குலம் நாட்டியத்தையும் சங்கீதத்தையும் மட்டும் தொழிலாகக்கொண்டு உலகில் வாழமுடியாதா? தாசிக்குலத்தினர் இந்த முடிவுக்கு வந்து விட்டால் இவர்களும் ஏன் மற்ற சமூகத்தினரைப்போல உலகத்தில் கெளரவமாக வாழமுடியாது?
தாசிக் குலத்தினரின்மேல் ஏற்பட்டிருக்கும் அவமானம் ஒழிவதற்கு, இந்தக்குலத்திலுள்ள ஆண்களும் பெண்களும் விவாக முறையை ஏற்படுத்திக்கொண்டு விபசாரத்தை ஒழிக்கப் பாடுபடவேண்டும். இதற்கு நானே வழிகாட்டியாக இருக்கப்போகிறேன். என் வீட்டுக்கு நான்கு வீடுகளுக்கு அப்பால் இருக்கும் வேலா யுதம், தான் தாசிக்குலத்தில் பிறந்து விட்டதற்காக மிகவும் அவமானப்பட்டுத் தன்னையே நொந்துகொள்கிறாராம். இது தவறு. பிறந்தது குற்றமல்ல. தன் சமூகத்தின்மீது ஏற்பட்டிருக்கும் அவமானத்தை ஒழிக்க அவர் முன்வர வேண்டும்.
வேலாயுதம் பி. ஏ. வரை படித்திருக்கிறார். நல்ல அழ கன். உயர்ந்த குணமுடையவர். தான் தாசியின் மகன் என்பதனால் யாரோடும் அதிகமாகப் பேசுவதேயில்லை. வீட்டு மாடியிலேயே உட்கார்ந்து கவலைப்பட்டுக்கொண் டிருக்கிறார். படிப்பு முடியும்வரை தன் வீட்டிற்கே அவர் அதிகமாக வந்ததில்லை. வந்தாலும் இரண்டொருநாள் தங்கிவிட்டுப் பழையபடி சென்னைக்குப் போய்விடுவார். படிப்பு முடிந்து இங்கு வந்த பிறகு அவருடைய கவலை மிகவும் அதிகரித்துவிட்டது. கவலை எல்லாம் தன் பிறப்பைப் பற்றித்தான். அவர் ஏன் அவ்வாறு வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்? அதனால் பயன் ஏதும் உண்டா? தன்குடும்பத்தையும் சமூகத்தையும் சீர்திருத்த அவர் பாடுபட்டால் என்ன?
என் யோசனைகளை அவருக்கு எடுத்துச் சொன்னால் அதன்படி அவர் முயற்சி செய்வாரென்று நம்புகிறேன். அவருடைய முயற்சிக்கு நானும் உதவி செய்யலாம். எங் கள் இருவருடைய ஒத்துழைப்பினால், இந்தச் சமூகத்திற்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்படுமென்பது நிச்சயம். இதை நன்றாகத் தெரிந்துகொண்டு நான் சும்மாயிருப்பானேன்! நல்ல காரியத்தைச் செய்வதில் தாமதமே கூடாது. மனத்துணிவுதான் வெற்றிப்பாதையின் கைகாட்டி.
எனக்கு இன்னும் ஒரு யோசனை தோன்றுகிறது. நான் வேலாயுதததைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன! இதனால் எவ்வளவோ நன்மைகள் உண்டாகும். ஒரு கணவனை மணந்துகொண்டு நான் நாட்டியம் ஆடப் போனால், வேறு எந்த ஆடவனாவது என்னைப்பற்றி இப் போது நினைப்பதுபோல இழிவாக நினைக்க முடியுமா? எனக்குக் கணவன் என்று ஒருவர் இருந்துவிட்டால், பிறர் என்னிடம் நெருங்கிப்பழக வருவார்களா?
என் வாழ்க்கைக்கு இம்மாதிரி ஒரு வழி வகுத்துக் காண்டால் நான் சமூக ஊழல்களைப்பற்றிக் கவலைப் படாமல் என் கலையைமட்டிலும் பிரகாசிக்கச்செய்யலாம். நான் அவரை மணந்து கொள்வதனால் எனது கலைப்பணி இன்னும் நன்றாக சோபிக்கும். குடும்ப வாழ்க்கையின் இன்பத்தையும் நான் பெறமுடியும். வேலாயுதமும், பிற சமூகத்தினரைப்போல் ஒரு குடும்பத்தின் தலைவராக விளங்கலாம். இதனால் அவருடைய மனக்கஷ்டமும் நீங்கி விடும். மேலும் எங்கள் கல்யாணத்தின் மூலமாக நாங்கள் சமூகத்திற்கு ஒரு சேவை செய்தவர்கள் ஆவோம். இந்தச் சமூகத்திலுள்ள ஆண் பெண்கள் எங்களைப்போலவே கல்யாணம் செய்துகொண்டு வாழ விரும்பலாம் அல்லவா!
சமூக முன்னேற்றத்திற்காகவும், கலைப்பணிக்காகவும் பல திட்டங்கள் போட்டு, வாழ்நாள் முழுதும் பாடுபட வேண்டுமானால், நாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்வதுதான் சிறந்தவழி. என்னை மணந்துகொள்ள அவர் மறுக்கமாட்டாரென்று நினைக்கிறேன். என் தாயார் சாரதாம்பாளும் இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதித்து விடுவாள். எனது நல்வாழ்வும், கலைப்பணியும்தானே அவளுடைய வாழ்க்கையின் லட்சியம். நான் தாசித் தொழிலையும் நடத்தி ஏராளமாகப் பணம் சேர்க்கவில்லையே என்று அவளுக்கு வருத்தமிருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது! கலைப்பணி ஒன்றுதான் எனது லட்சியம். தாயார் எனது நோக்கத்தை நன்றாகப் புரிந்துகொண்டத னால் என்னிடம் தாசித்தொழிலைப்பற்றிப் பேசுவதில்லை. என்னை என் போக்கின்படி கலைப்பணிமட்டும் செய்யும்படி விட்டுவிட்டாள். இந்தக்கல்யாண யோசனைக்கு அவள் என்ன சொல்கிறாளென்று பார்க்கலாம்.
இந்தக் கல்யாண ஏற்பாடு வெற்றிகரமாக நிறைவேறி விட்டால், நாட்டியக்கலையைக் கைக்கொள்வதே அவ மானம் என்று நினைக்கும் என் அண்ணனைப் போன்றவர்க ளது மனப்பான்மை மாறிவிடும். அவமானச் சின்னத் தோடு இணைக்கப்பட்டிருக்கும் கலை, அதிலிருந்து விடுதலை யடைந்துவிட்டால் கலையை யார்தான் வெறுப்பார்கள்? இதை நிறைவேற்ற மனத்துணிவுதான் வேண்டும். இப் பொழுதே நான் வேலாயுதத்தைப் போய்ப் பார்த்து இதைப்பற்றிச் சொல்கிறேன்.
29. வேலாயுதம்
ஆஹா! மோகனா என்ன அழகாகப் பேசினாள். பைத்தியக்காரத்தனமாக என் குலத்தின் இழிவைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தேனே. நான் பி. ஏ. வரை படித்திருந்து என்ன பயன். மோகனா சொல்லியது போல பல திட்டங்கள் வகுத்துக்கொண்டு சமூகசேவை செய்யலாம். ஆனால் குலத்தைப்பற்றி ஒரு சபையில் நின்று எப்படிப் பேசுவது!
மோகனா! பெயருக்கேற்றபடி மோகனமான ரூபம்! எவ்வளவு அழகாக, ஆணித்தரமாக, புத்திசாலித்தனமாகப் பேசுகிறாள். முன்னமே அவளைப்பற்றிலேசாகக் கேள்விப் பட்டிருந்தேன். சாரதாம்பாள் தனக்கு வாரீசாக இவளை ஒரு அனாதாஸ்ரமத்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்து நாட் டியமெல்லாம் கற்பித்திருக்கிறாளாம். ஆனால் இவ்வளவு காலமாக தாசிக்குடும்பத்திலேயே இருந்திருந்தும் தாசித் தொழிலில் அவள் மனம் ஈடுபட வில்லையாம். ஆச்சரியமான பெண்தான். அனாதாஸ்ரமத்தில் வளர்ந்ததனால் ஒழுக்கம், கற்பு என்பதைப்பற்றியெல்லாம் நன்றாகத்தெரிந்துகொண் டிருக்கிறாள். அதுமட்டுமல்ல ! சீர்திருத்தத்தைப்பற்றி எவ்வளவு ஆத்திரத்தோடு பேசினாள். சிறந்த அறிவாளி யாகவும் இருக்கிறாள். இப்படிப்பட்ட பெண்களால்தான் தாசிக்குலம் முன்னேற்றம் அடையமுடியும். எவ்வளவு துணிவுடன் சொன்னாள் ‘நாம் இருவரும் கல்யாணம் செய்துகொண்டு சமூகசேவையும், கலைப்பணியும் செய்ய வேண்டும்” என்று. தாசிக்குலத்தினர் எல்லாரும் கல்யாணம் செய்துகொண்டு குடும்பவாழ்க்கை நடத்த வேண்டுமென்பதே ஒரு சிறந்த சீர்திருத்தம்தான். பிற சமூகத்தினர்களைப்போல ஒழுங்கான குடும்ப வாழ்க்கை நடத்தி வருவதென்ற வழக்கம் ஏற்பட்டுவிட்டால் இந்தக் குலத்தைப்பற்றி யார் இழிவாகப் பேசமுடியும்?
மோகனாவின் திட்டம் சரியான திட்டம்தான். மேலும் மோகனாவைப்போல ஒரு மனைவியை அடைவது என் பாக்யமென்றே சொல்லவேண்டும். சீக்கிரமே எனக்கு ஒரு உத்தியோகம் கிடைத்துவிட்டால், மோகனாவுடன் எங்காவது போய் கௌரவமாக வாழ்க்கை நடத்தலாம். மனதிற்கு மிகவும் ஆறுதல் கிடைக்கும்.
30. மோகனா
என் தீர்மானங்கள் சாரதாம்பாளுக்கும் வேலாயுதத் திற்கும் மிகவும் பிடித்திருந்தது. எங்கள் திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. என் அண்ணனும் வந்திருந்தார். இப்பொழுது என் சீர்திருத்தத்தைக் கேட்டு அவருக்கும் ஒருவாறு திருப்தி ஏற்பட்டது. நான் இவ்வாறு துணிந்து மணம் செய்துகொண்டு வாழ்வதைப்பற்றி வேலாயுதத் திற்கு ரொம்பப் பெருமை. எங்கள் முயற்சியினால் தாசிக் குலத்தில் இதுபோல அநேக விவாகங்கள் நடக்க ஏற்பா டாகிறது. விபசாரிகளாக வாழ்வதன் வெட்கக்கேட்டை ஆற அமர யோசித்துப்பார்த்தால் அவர்கள் எப்படி விப சாரிகளாக இருக்க முடியும்? இந்த உணர்ச்சியைக் கிளப்பி விடுவதற்குச் சிலர் தோன்றாமல் இருந்த காரணத்தினால் தான் தாசிக்குலம் வெகுகாலமாகத் தன் பழைய வழியி லேயே சென்று அவமானத்தையே மதிப்பாக எண்ணி வாழ்ந்துவந்தது. இனி அப்படி அல்ல. தாசிக்குலம்தான் தன் கொள்கையை மாற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டதே. இந்த மாறுதலுக்கு நானும் ஒரு சிறு தொண்டு செய்திருப் பதைப்பற்றி மகிழ்ச்சியடைகிறேன்.
நாகேஸ்வரர் சந்நிதியில் எங்கள் திருமணம் நடந்த போது எவ்வளவு கும்பல்! பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். “தாசிகள் கல்யாணம் செய்துகொள் வதாமே!” என்றான் ஒரு பழமை வாதி! “இந்த முறை நல்லதுதான்!” என்று மேல்போக்காகச் சொன்னான் ஒரு சந்தர்ப்பவாதி! இன்னும் என்னென்ன விபரீதமெல் லாம் நடக்கப்போகிறதோ என்று ஒரு கிழத்தாசி என் தாய் சாரதாம்பாளிடம் ஆச்சரியப்பட்டாள். வளர்ப்புத் தாய்க்கு நான் இதுபோன்ற வாழ்க்கை வாழச் சம்மத மில்லாவிடினும் புரட்சிக்கு இடம் கொடுத்துத்தானே ஆக வேண்டுமென்று விட்டுக்கொடுத்துவிட்டாள்.
என் கணவருக்குத் திருநெல்வேலியில் வேலையாகி இருக்கிறது. அவர் அங்கே போயிருக்கிறார். இன்னும் ஒருவாரத்தில் நானும் கணவரும் அங்கு குடும்பம் நடத்த வேண்டும். என் தாயாரும் எங்களுடனேயே வந்து வசிக்க விரும்புகிறாள். கணவர் திருநெல்வேலியில் நல்ல இடத்தில் டு அமர்த்திவிட்டாராம். சீக்கிரமே புறப்பட்டுவந்து எங்களை அழைத்துக்கொண்டு போவதாக அவரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது.
– தொடரும்…
– வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.
![]() |
சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மாதம் பிறந்தது
விந்தியா
May 22, 2026
பரிணாமம்
ஜெயந்தி சங்கர்
May 22, 2026
அமெரிக்காவில் கிச்சா
கிரேஸி மோகன்
May 22, 2026
