அவனுக்குத் தெரியுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2026
பார்வையிட்டோர்: 58 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலத்தின் கோலத்தில்தான் எத்தனை மாற்றங்கள்!

ஒரு காலத்தில் பல கோப்பிக் கடைகளுக்கு பால் விநியோகம் செய்யும் அளவுக்கு பல மாடுகளை வைத்துக் கொண்டிருந்த ராசம்மாள் இப்போது நான்கு மாடுகளைத் தானே, மேய்த்துக் கொண்டு திரிகிறாள்!

“அப்படியானால் மற்ற மாடுகள் எல்லாம் எங்கே?” என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

அவற்றை எல்லாம் அவள் மகன் தோழன் சாப்பிட்டுவிட்டான்.

“தோழனா?”

அவன் உண்மைப் பெயர் என்னவோ, எனக்கும் தெரியாது. எல்லாரும் அவனை அப்படித் தான் அழைப்பார்கள். என்றாலும், “அவன் எல்லா மாடுகளையும் எப்படிச் சாப்பீட்டான்?” என்று கேட்கிறீர்களா?

ஒவ்வொன்றாகத்தான் விழுங்கினான்! மன்னிக்கவும், மேலும் உங்களைக் குழப்ப விரும்பவில்லை. அவன் கூட்டாளிகளோடு சேர்ந்து செய்யும் குற்றச் செயல்களுக்கெல்லாம் அந்த மாடுகளை ஒவ்வொன்றாக விற்றுத்தான் அபராதமாகவும், ரொக்க ஜாமீனாகவும் செலுத்தி மகனைக் காவல் நிலையத்திலிருந்து மீட்டுக்கொண்டு வருவாள் அந்தக் கிழவி!

இருபது வருடங்களாக, குழந்தை இல்லாமல், வேண்டிய தெய்வத்தை யெல்லாம் மறந்து வேண்டாத தெய்வத்தை யெல்லாம் வேண்டி பெற்றெடுத்த அருமந்த புத்திரன் தான் இந்த தோழன்.

பயல் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அவன் தந்தை, டிரைவர் வெள்ளச்சாமி பாடாங்சிராய் மேட்டில் குறுக்குப் பாதை எடுக்க முடியாத காரணத்தால் மனமுடைந்து, லோரியும் உடைந்து இவ்வுலகையே வெறுத்துப் போய்விட்டார்.

ஏற்கனவே அனாதையாகப் பழகிப் போயிருந்த ராசம்மாவை அந்த அதிர்ச்சி அப்படி ஒன்றும் பாதித்துவிடவில்லை. தன் மகனை சிறந்தவனாக வளர்த்து விடவேண்டும், என்ற ஆசையிலேயே, அவனைக் கடிந்து கொள்ளாமல், கவலை தெரியாமல் கடினமாக உழைத்துக் காப்பாற்றி வந்தாள்.

ஆண்டுகள் (வட்டமாக இருக்குமோ?) உருண்டுகொண்டே இருந்தன. தோழன் மூன்றாம் படிவத்திற்கான தேர்வு எழுத இன்னும் சில தினங்களே இருந்தன. மகன் பாசாகிவிட வேண்டும் என்ற துடிப்பில் மீண்டும் வேண்டாத தெய்வங்களையே வேண்டிக் கொண்டிருந்தாள் ராசம்மாள்.

அன்று இரண்டு போலீஸ்காரர்கள் புடை சூழ காவல் வண்டியிலிருந்து குதித்து இறங்கி வந்த மகனைப் பார்த்ததும் ராசம்மாவுக்கு தலையோ சுழல ஆரம்பித்துவிட்டது, பேசவும் வாயடைத்துப்போய் நின்ற அவளிடம் “உன் மகன் பல நாட்கள் பள்ளிக்குப் போகாமல் வேறு பள்ளிக்கு செல்லும் மாணவர்களையும் மிரட்டி காசு, கடிகாரங்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டிருந்ததால், அவனைப் பிடித்தோம். அவன் அடையாளக் கார்டை எடுத்துப் போகவே வந்தோம். அவனிடம் கொடுத்தனுப்பு!” என்று காவலர்களில் ஒருவர் கூறியதும் சுயதினைவு வந்தவள் போல, போய் எடுத்துக் கொடுத்தாள்.

காவல் வண்டி தோழளை ஏற்றிக் கொண்டு சென்றதும் ராசம்மாள் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாமல் ஓ! வென்று அலறியே விட்டாள். அருகில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் ஆக வேண்டியதைக் கவனிக்கச் சொன்னார்கள். அதன்படி ஒரு மாட்டை விற்று அவனை ஜாமீனில் கூட்டிவந்தாள்.

இது நடந்து சில மாதங்கள்தான் ஆகி இருக்கும் யாரோ, ஒரு பெண்ணின் கைப் பையைத் திருடிக் கொண்டு ஓடியதாக காவல் நிலையத்தில் பிடித்து வைத்திருந்தனர் என்ற செய்தியைக் கேட்டதும் ராசம்மாவுக்கு நெஞ்சு வலி எடுக்க ஆரம்பித்துவிட்டது. மறுபடியும் ஒரு மாட்டை விற்று மகனை அழைத்து வந்தாள்.

நாட்கள் மாதங்களாகிக் கொண்டிருந்தன. தோழன் இப்போது நல்ல பிள்ளையாகவே நடந்து கொண்டான். தேவையில்லாமல் எங்கும் செல்வதும், சுற்றுவதும் இல்லாமல் வீட்டிலேயே புத்தகங்களைப் படித்துப் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பான். மகன் திருந்திவிட்டதில் ராசம்மாவுக்குகூட இப்போது நெஞ்சு வலியே வருவதில்லை! “இந்த இரண்டு மாடுகளை வைத்து எப்படியும் முன்னுக்கு வந்திடலாம் பயல் திருந்தினதே போதும்” என்று ஆறுதலடைந்தது அவள் மனம்.

அன்று சனிக்கிழமை இரவு சில வீடுகளுக்கு அப்பாலிருந்து தமிழ்ப் பாடல்கள் ஒலி பெருக்கியின் வழியாக ராசம்மாவின் காதுகளைப் பிய்த்துக்கொண்டு செல்வதைப்போல இருந்தது. “விடிந்தால் அந்த வீட்டில் திருமணம்” என்று கேள்விப்பட்டதும் தன் மகனுக்கும், ஒரு கல்யாண நாள் வராதா? என்ற ஒரு ஏக்கப் பெருமூச்சு அவள் இதயத்திலிருந்து வெளியாகி காற்றோடு கலந்தது.

“முடவன் கொம்புத் தேனுக்கு ஏங்குவதும், வேலைவெட்டி இல்லாமல் ஊரைச் சுற்றித் திரியும் சோம்பேறிப் பயல்களுக்கு கலயாணம் செய்து வைக்க ஆசைப்படுவதும் ஒன்றுதான்” என்று நினைக்கும்போது இந்தப் பெருமூச்சை விடுவதைத் தவிர அவளுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ‘ஆரம்பத்திலிருந்தே கண்டித்து வளர்த்திருந்தால் இப்படிப் போவானா?’ என்று புலம்பிக் கொண்டிருந்தாள் அவள், ஒரு நாள் நள்ளிரவு மூன்று மணி இருக்கும் இரண்டு போலீஸ் காரர்கள் வீட்டைத் தேடி வந்ததும் ராசம்மாளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது “நல்லா திருந்தினால்கூட பிள்ளையை விட மாட்டார்கள் போல இருக்கிறதே!” என்று மனத்திற்குள் கருவிக் கொண்டே அவர்களிடம் விபரத்தைக் கேட்டாள்.

தோழன் கஞ்சா விற்கும் போது பிடிபட்டதாகவும் அவன் வீட்டை சோதனை செய்யவே அவர்கள் வந்திருப்பதாகவும் கூறினர். ராசம்மாவுக்கு தன் தலையே காணாமற் போய் விட்டது போன்ற ஒரு உணர்வு. “கடவுளே! இவர்கள் சொல்வது பொய்யாக இருக்கக் கூடாதா?” என்ற நப்பாசை அவள் இதயத்தை ஆட்டிப் படைக்க தோழனின் படுக்கையறையை நோக்கி ஓடினாள் அங்கே!

தலைகால் தெரியாமல் போர்வையால் அவன் போர்த்திக் கொண்டு படுத்திருப்பதைக் கண்டதும்தான் அவளுக்கு போன உயிர் மீண்டும் வந்தது. உள்ளத்தில் தோன்றிய ஒருவித மகிழ்ச்சியோடு அவர்களை அழைத்து வந்து காண்பித்தாள்.

காவலர்கள் வந்து போர்வையை நீக்கியவுடன்தான், தோழன் தலையனைகளைக் குறுக்கும் நெடுக்குமாக வைத்து அப்படி மூடிவிட்டுப் போயிருக்கும் உண்மை அவளுக்கும் புரிந்தது. அவர்கள் சோதனையின் முடிவில் ஒன்றும் கிடைக்காவிட்டாலும், ராசம்மாவை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனது அவளுக்கு என்னவோ போல இருந்தது.

ராசம்மாள் விடியும்வரை அழுதாள். புலம்பினாள். விடிந்ததும் மாட்டு வியாபாரி நல்லமுத்து வீட்டிற்கு ஓடினாள்.

நல்லமுத்து பெயருக்கேற்ற குணம் படைத் தவர். நானூறு வெள்ளி பெறுமான மாட்டிற்கு அருநாறு வெள்ளி கொடுத்து மோசம் செய்யமாட்டார். முந்நூறு வெள்ளியை நாலு தடவை தாராளமாக எண்ணிக் கொடுத்து விடுவார் என்பது அவளுக்குத் தெரியும்.

நல்லமுத்து அப்போதுதான் எங்கேயோ புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். ராசம்மாள் அவரிடம் வந்து விபரத்தைச் சொன்னதும், பதில் கூறாமல் தன் பழைய மாடல் சுருக்குப் பையைத் திறந்து நான்கு நூறு வெள்ளித்தான்களை நாலு தடவை எண்ணிக் கொடுத்தார். அவருக்கு நன்றி கூறிவிட்டு ஓடாத குறையாக காவல் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் காவல் நிலையத்தை அடைந்துவிட்ட ராசம்மாவுக்கு அங்கு தன் மகனைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட போதுதான் சட்டத்தின் கரங்கள் எவ்வளவு வலிமை பிக்கவை என்பதை அவனால் உணர முடிந்தது.

இந்தமுறை கடுமையான குற்றம் என்பதால் அவள் காத்திருந்தும் பயனில்லாமல் போய்விட்டதை நினைத்து வேதனையோடு வீடு வந்து சேர்ந்தாள்.

மறுநாள் யார் யாரிடமோ காலில் விழாத வேண்டியும். பணத்தைக் குறையாக கொடுத்து முயற்சித்தும் பார்த்தான். “முயற்சி திருவினையாக்கும்” என்பார்கள் அது அவளைப் பொறுத்தவரை வேதனையாக்கிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.

ம்…மா…ம்…மா…

பசுமாடு சுத்துவதைக் கேட்டதும் “நான் தான் பசி இல்லாமலே அலையறேன்! பாவம் நீ என்ன செய்வே? வா!” என்று சொல்லிக்கொண்டே மாட்டை அவிழ்த்துக் கொண்டு மேய்க்கச் சென்றாள்.

ஒரு மாட்டை நேற்றே வியாபாரியிடம் விற்றுவிட்டதால் இந்த ஒரு மாட்டையும் மேய்ப்பது அவளுக்கு வேதனைக்கு மேல் வேதனையாக இருந்தது.

”சனியன் பிடிச்ச மாடு, எப்படியும் மேய்ஞ்சு தொலையட்டும்!” என்றவள், சோர்வு மிகுதியால் அருகிலிருந்த உயரமான செடியின் கீழ் தலையைச் சாய்க்கப் போனாள், அச்சமயம் அருகிலிருக்கும் புதருக்குள் இருந்து ஏதோ பேச்சுக் குரல் கேட்டதும், தலையை நிமிர்த்திக் கொண்டு செவி மடுக்க ஆரம்பித்தாள் ராசம்மாள். “டேய், தோழனை அப்படி மாட்டி வச்சுட்டீங்களே. பாவம்! அவன் என்ன பாடுபடறானோ?”

“ஆமாண்டா! முகமூடியைப் போட்டுக்கிட்டு, சின்ன அறைக்குள்ளே அவனை விட்டு ‘”உண்மையைச் சொல்லுடான்னு” நாலு பேரு அவனை வயித்துலேயும், மூஞ்சியிலேயும் மாறி – மாறிக் குத்துவாகலாமே, அப்ப வாயியும் மூக்குலேயும் இரத்தம்தானே வரும்?”

“அதோடு நம்ப பேருங்களும் வரும், இன்னும் கொஞ்ச நாளைக்கு நாம் இப்படியே மறைஞ்சுதான் இருக்கனும்.” சில நிமிடங்களில் பேச்சு வராமற் போகவே, வெறி பிடித்தவரைப்போல அந்தப் புதருக்குள் பாய்ந்தாள் ராசம்மாள்.

அங்கே!

வீசியெறியப்பட்ட இரண்டு மூன்று சிகரெட் துண்டுகள்தான் புகைந்து கொண்டு கிடந்தன.

“அடப் பாவிங்களா! என் பிள்ளையை இப்படி வீணாக் கெடுத்திட்டீங்களே!” என்று சில நிமிடங்கள் அங்கேயே நின்று அழுது தீர்த்துவிட்டு, வீட்டிற்கு வந்த ராசம்மாவுக்கு கொஞ்சம் இருந்த நெஞ்சு வலியும் இப்போது அதிகமாக வலிக்க ஆரம்பித்து விட்டது.

மறுநாள் காலைநேரம். “ஐயா இதுவரை எல்லா மாடுகளையும் என் மகனுக்காக வித்தேன். இது தாய்யா எனக்காக விக்கறேன்!” என்று ராசம்மாள் அழுத காட்சியை சகிக்க முடியாத நல்லமுத்து கடைசி மாட்டிற்கான வெள்ளிகளையும் எடுத்துக் கொடுத்துவிட்டார்.

ராசம்மான் வீட்டிற்கு வரும்போது மணி பன்னிரண்டாகிக் கொண்டிருந்தது. பல் கோவில்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களிடம் தோழனுக்காக வேண்டிக் கொண்டது அவள் மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

வீட்டிற்குள் சென்ற ராசம்மாள் கதவை நன்றாகத் தாழிட்டு விட்டு அங்கு சுவரில் மாட்டியிருந்த அவன் கணவரின் படத்தை எடுத்துச் சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டாள். மறு நிமிடம் ஏதோ நினைத்துக் கொண்டவன் போல, விரைவாகச் சென்று தன் மாடுகளுக்காக வாங்கி வைத்திருந்த புதுக் கயிறு ஒன்றை எடுத்து தன் தலைக்கு சிறிதளவே உயரமிருந்த அந்த வீட்டின் குறுக்கு சட்டத்தில் தூக்கி வீசினாள். பல ஆண்டுகளுக்கு முன் தோழனுக்குத் தொட்டில் கட்டுவதற்காக இப்படி வீசியிருக்கிறாள், அப்பொழுதெல்லாம் சரியாக விழாத கயிறு இப்போது சரியாக விழுத்து விட்டது.

டக் டக்… என்று கதவு தட்டப்படும் ஓசையைத் தொடர்ந்து, “அம்மா! நான் வந்து விட்டேம்மா! கதவைத் திறங்கம்மா!” என்ற தோழனின் குரலைக் கேட்டதும், “ஐயோ மகனே! நான் அவசரப்பட்டு விட்டேனே. என்னடா செய்வேன்!” என்று சொல்லத்துடித்தாள். அவளின் குரல்வளையைக் கயிறு நன்றாக இறுக்கிக் கொண்டதால் அவளால் ஏதும் சொல்ல முடியவில்லை.

“அம்மா! நான் பிரிஞ்சுவிட்டதாலே, என் கூட்டாளிங்க என்னைக் கடத்திப் போயி இப்படி எல்லாம் மாட்டி வச்சுட்டாங்கம்மா!”

“என் பிள்ளை நல்லவன் அவன் திருந்தி விட்டான். இனி நான் நிம்மதியாசாவேன்!” என்று பேசமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த ராசம்மாள் தனக்குள் எண்ணிக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“நான் அவங்களைக் காட்டி கொடுத்துட் டேம்மா! நேற்று அவங்களைப் பிடிச்சு உண்மை தெரிஞ்சதும் என்னை விட்டு விட்டாங்கம்மா”

அவன் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்திலிருப்பவர்களெல்லாம் ஓடிவந்து, கயிறை அறுத்துவிட்டனர். கீழே விழுந்த ராசம்மாவின் மடியிலிருந்த வெள்ளி நோட்டுகள் தோழனின் காலடியில் சிதறி விழுந்தன. வந்தவர்கள் அவள் இறப்புக்கு தோழனே காரணம் என்று பேசிக்கொண்டிருந்தனர்.

தோழன் அவர்களைப் பற்றிக் கவலைப் பட வில்லை “நான் நல்லவன் என்பதைக் காலம் சொல்லும், ஆனால் என் அம்மாவுக்கு யார் சொல்லமுடியும்” என்று வேதனை தாளாமல் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான்.

தன் மகன் குற்றமற்றவன் என்பதை அவன் கூறக் கேட்ட பிறகுதான் அந்தத் தாய் தன் உயிரையே விட்டாள் என்ற உண்மை அவனுக்குத் தெரியுமா?

– உதயம் (1979-01)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *