கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 9,554 
வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

“மிஸ் ஜனனி…!”

ஆய்வு இணையர் (ரிஸர்ச் அஸோஸியேட்) டாக்டர் மார்த்தாண்டம், வழக்கம்போல பாசமும் மரியாதையும் சரி விகிதத்தில் கலந்த குரலில் அழைத்தார். அவருடைய கையில் தவழ்ந்து கொண்டிருந்தது அன்றைய தபாலில் வந்து, உடைக்கப்பட்ட தபால் உறை.

“…………………….”

அழைப்புக்கு, ஜனனியிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

அவள் பார்வை, ஏதோ ஒரு ஆய்வுக் குறிப்பில் நிலைத்திருந்தது.

பச்சைமசிப் பேனாவால், அடிக் கோடிட்டபடியும், அம்புக்குறிகளிட்டும், ஆங்காங்கே அடைப்புக் குறிகள் போட்டும், ஸ்டடி செய்து கொண்டிருந்தாள் அவள்.

ஜனனியின் கவனம் வேறு எதிலோ பதிந்திருப்பதை உணர்ந்த மார்த்தாண்டம் அமைதியாகக் காத்திருந்தார்.


இந்தக் காட்சியைப் புதிதாகப் பார்க்கிறவர்களுக்கு என்ன தோன்றும்?,

அல்லது இந்தச் சம்பவத்தை மட்டும் பார்த்துவிட்டு, காட்சிப் படிமங்களை உருவகப் படுத்திக் கொள்பவர்கள் என்ன நினைப்பார்கள்…!

‘உலகமே போற்றும் தமிழக வேளாண் விஞ்ஞானி ஜனனி ‘தான்’ என்ற கர்வம் கொண்டவள். பிறரை மதிக்கத் தெரியாதவள்… – இப்படியெல்லாம்தானே முடிவுக்கு வருவார்கள்.

‘தன்னுடைய ஆய்வு இணையர், டாக்டர் மார்த்தாண்டத்தின் அழைப்பை அலட்சியப் படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில்தான்… ஏதோ பலமான யோசனையில் இருப்பதாக நடிக்கிறாளோ…?’ என்று கூட பார்ப்பவர்களுக்கு நினைக்கத் தோன்றும்.

அப்படிப்பட்ட ஈகோயிஸ்ட்டெல்லாம் இல்லை ஜனனி.

விரிவான பார்வையும், அகண்டமான அறிவுமே அவளை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளன.

ஜனனியின் ஓயாத உழைப்பும், உயர்ந்த நோக்கங்களும், உலகளாவிய பார்வை வீச்சும், மேலான எண்ணங்களும், எளிமையான குணங்களும், மிதமான பேச்சும், உயிரிரக்கச் சுபாவங்களும் எவரையும் சுலபமாக ஈர்த்து விடுமே. மார்த்தாண்டம் மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன?

ஜனனியின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதுதான் தற்போதைய ஒரே நோக்கம் மார்த்தாண்டத்திற்கு. அதற்காக பக்கவாட்டில் நின்ற அவர், ஓரிரு தப்படிகள் நடந்து, அவளுக்கு முன்புறம் வந்து நின்றார்;

தன் இடது கையில் வைத்திருந்த தபால் உறையின் விளிம்புகளை நளினமாக அழுத்தி, உறையின் வாய் விரித்தார்;

விரல்களை உள் செலுத்தி, அழைப்பிதழை வெளியில் எடுத்துக் கொண்டே, மீண்டும் அழைத்தார்.

“மிஸ் ஜனனி ……………………”

முதல் அழைப்பைக் காட்டிலும் சற்றே டெசிபல் உயர்ந்திருந்தது இரண்டாவது அழைப்பில்.


மாநில அறிவியல் கழகத் தலைமையகத்திலிருந்து, முறைப்படி தபாலில் அனுப்பப்பட்டிருந்த பாராட்டு விழா அழைப்பிதழ்தான் மார்த்தாண்டத்தின் கையில் இருந்தது.

மறுநாள், அதாவது இன்னும் 20 மணி நேரத்தில், மாநில பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஜனனிக்கு நிகழவிருக்கும் பாராட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்தான் அது.

அந்த அழைப்பிதழின் பின்புறமே நிகழ்ச்சி நிரலும் பட்டியலிடப் பட்டிருந்தது.

விழா சம்பந்தமாக, நிகழ்ச்சி நிரல் உட்பட அனைத்து விவரங்களையும் விழாவின் பிரதான நாயகியான ஜனனிக்கு நினைவூட்ட வேண்டும். அப்-டேட் செய்ய வேண்டும் என்பதற்காக, மீண்டும் மீண்டும் அழைப்பிதழை பார்த்துப் பார்த்து மனதில் வாங்கி உறுதி செய்து கொண்டார் மார்த்தாண்டம்.

ஜனனிக்கு வெறும் ஆய்வு இணையராக மட்டும் செயலாற்றவில்லை மார்த்தாண்டம். ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், நேர்முக உதவியாளர் போலவும், இன்னும் சொல்லப் போனால், ஜனனியின் வளர்ச்சி ஒன்றே தன் ஒரே குறிகோளாகக் கொண்டு, அவளுக்கு வரும் எந்த இடர்பாடுகளையும் காக்கும் ஓர் அரணாக, நின்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர் அவர்.

ஜனனியும் மார்த்தாண்டத்தின் மீது மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவள்.

‘இன்றைய உலகம் தழுவிய விஞ்ஞானி, என்கிற தன் அசாதாரண வளர்ச்சிக்குக் காரணம், எல்லா வகையிலும், தனக்குக் காப்புபோல மார்த்தாண்டம் இருப்பதுதான்…’ என்பதே ஜனனியின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதுதான் உண்மையும் கூட.

செங்கல்பட்டுக்கு, எத்தனை மணிக்கு இங்கிருந்து புறப்படவேண்டும்?

பயணியர் விடுதியை அடையும் உத்தேச நேரம்;

அங்கிருந்து சிறுகுடி கிராமத்தில் இருக்கும் அவளின் பாட்டி தாத்தாவின் வீட்டிற்குச் செல்வது எப்போது?;

அங்கே எத்தனை மணி நேரம் அவளால் செலவழிக்க முடியும்?;

அங்கிருந்து அவள் பயின்ற துவக்கப் பள்ளியில் தடபுடலாக நடக்க இருக்கும் விழா வளாகத்தை எத்தனை மணிக்குக் சென்றடைய வேண்டும்…?;

மீடியாவுக்கு எந்த விதமாக விஷயங்களை பேட்டியின்போது ஃபோக்கஸ் செய்ய வேண்டும்…?

இப்படி, அனைத்துக் கோணங்களிலும், எல்லாவற்றையும், முறையாகப் பட்டியலிட்டு, ஒரு முறைக்குப் பல முறை அதை ஆய்வு செய்து, தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருந்தார் மார்த்தாண்டம்.

அது மட்டுமல்ல, எந்தெந்த வாகனத்தில் யார் யார் பயணிக்க உள்ளோம். என்ற பயணத் திட்டம்;

பயணியர் மாளிகையை அடைந்தவுடன் அவளுக்குப் பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும், சால்வை போர்த்தியும் மரியாதை செய்ய எந்தெந்த அதிகாரிகள் பணிக்கப்பட்டு இருக்கிறார்கள். என்ற குறிப்புகள்,

பதில் மரியாதையாக, ஜனனி யார் யாருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்க வேண்டும்.

இது போன்று, அனைத்தையும் துல்லியமாகத் திட்டமிட்டு, திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தத் தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளையும், முறையாக செய்து முடித்துவிட்டார் மார்த்தாண்டம்,

அனைத்துத் திட்டங்களையும் குறித்து ஜனனியிடம் பேசி முடிவு எடுக்க வேண்டித்தான் பாக்கி. அதன் பொருட்டு, சந்திக்க வந்த மார்த்தாண்டம், அவளை அழைத்துவிட்டு, அவளின் ரெஸ்பான்ஸ் எதிர்பார்த்து அவள் முன் நிற்கிறார்.

முன் தினமே மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அழைப்பிதழை, ஹார்டு காப்பி எடுத்து அவளிடம் சமர்ப்பித்துவிட்டார் மார்த்தாண்டம். இப்போது அவர் கையில் இருப்பதும், அதே அழைப்பிதழ்தான். வடிவத்தில்தான் மாறுதல். அச்சடிக்கப்பட்டு, தபாலில் வந்திருக்கிறது.

மின்னஞ்சல் மூலம் வந்த அழைப்பிதழை முன்பே பார்த்துவிட்டாள் என்றாலும்; விழாவைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் ஜனனிக்கு முன்னமேயே சந்தேகமறத் தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும்;

இறுதி அழைப்பாக, இன்று, துறை மூலம் அஞ்சலில் அனுப்பப்பட்டுப் பெற்ற அழைப்பிதழை, விழா நாயகியிடம் சமர்ப்பித்து, விளக்கமாய் அப்-டேட் செய்தல்தான் மரியாதை என்பதை மனதில் கொண்டு, தன் கடமையைச் செய்யத் தயாராக நின்றார் மார்த்தாண்டம்.

“……………………..”

இரண்டாவது அழைப்பின்போது அவர் குரல் சற்றே பலமாகவும் கனமாகவும் இருந்ததால், அனிச்சையாக மார்த்தாண்டத்தின் மீது ஜனனியின் கவனம் திரும்பியது.

அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்தாள். ஜனனியின் கண்கள் மார்த்தாண்டத்தின் முன்னே நிலை கொண்டாலும், டாக்டர் மார்த்தாண்டத்தின் கண்களைப் நோக்கவில்லை அந்த நயனங்கள்.

மாறாக, அவள் பார்வை அவர் தலைக்கு மேல் தாண்டி தொடர்ந்து நேராக வீசியது.

சோதனைச் சாலையின் எல்லையில் நின்ற கண்ணாடித் தடுப்பை ஊடுறுவி வெளியே தொடுவானத்தை நோக்கி நீண்டது அந்தப் பார்வை;


கண்ணாடித் தடுப்பு உள்ளது என்று எவரேனும் சொன்னால்தான் தெரியும். அந்த அளவுக்குச் சுத்தமாக, பளிச் என்று துடைக்கப்பட்டிருந்த ஆய்வகத்தின் பின்புற எல்லைக் கண்ணாடித் தடுப்புகளுக்கு அப்பால் காணப்பட்ட நகரக் காட்சிகள், ‘சட்டமிட்ட நீர்வண்ணச் சித்திரம் போலத் தோற்றமளித்து.

வானத்தையும், மேகத்தையும், இயற்கையையும், வீடு வாசல்களையும், பார்த்து, ரசித்து உள் வாங்கினாள் ஜனனி.

கண் மட்டத்துக்கு மேல், தொடுவானத்தில் முட்டி, இடதும் வலதுமாய் அலைந்தன அவள் பார்வை.

மேகங்கள் பக்கவாட்டில் நகர்வதும், ஏதேதோ உருவங்கள் சிருஷ்டியாவதும், கலைவதும், மீண்டும் புதிய உருவங்கள் தோன்றுவதுமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மேக மண்டலத்தின் நகர்வுகளை கண் கொட்டாமல் பார்த்து ரசித்தாள் ஜனனி.

அனிச்சையாய், ஜனனியின் பார்வை சற்றே கீழ் நோக்கி இறக்கியது.

இப்போது கண் மட்டத்தில் இருந்த காட்சிகளில் கவனம் சென்றது…

கண்களை ஜில் என்று குளிர்விக்கும் மரங்களையும், அடுக்குமாடி வீடுகளின் பல தளங்களையும், தனி வீடுகளின் மேற்கூரைகளையும், தண்ணீர் தொட்டிகளையும், பல்வேறு கோணங்களில் கண்டு களித்தாள்.

விகுவாகவும், தளர்வாகவும் கட்டப்பட்ட கொடிகளில் தொங்கியபடி காய்ந்து கொண்டிருக்கும் பல விதமான வண்ண வண்ண ஆடைகளையும், டிஷ் ஆண்டெணாக்களையும் பரவசத்துடன் நோக்கினாள்.

ஆங்காங்கே மகிழ்ச்சியோடு, சிறகடித்துக் கொண்டு, இங்குமங்கும் அலைந்த பறவைகளின் சுறுசுறுப்பைப் பார்த்து ஆனந்தித்தாள்.

“அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…” என்ற சினிமாப் பாடல் அப்போது அவள் மனதின் ஒரு மூலையில் முழக்கமிட்டது.

மேற்கூரை, கைப்பிடிச் சுவர் இவை எல்லாவற்றிலும் இருந்து படிப்படியாக இறங்கியது அவள் பார்வை.

பால்கணி, வீட்டு முகப்பு, வாயிற்படி, சன்னல்கள், சுற்றுச் சுவர் என, பார்வை இயல்பாக, கண் மட்டத்திற்குக் கீழே சரிந்தன.

கான்ஸன்ட்ரேஷன். அதாவது கவனம். அதற்கு அடுத்த நிலை ஃபோக்கஸ். அதாவது கவனத்தை ஓரிடத்தில் குவித்தல் என்ற இரண்டு வெற்றிப் படி நிலைகளும் ஜனனியிடம் வசப்பட்டிருந்தன.

எழுத்தாளர்கள், ஓவியர்கள், இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள் என அனைவருமே கவனத்தை ஏதாவது ஒரு இடத்தில் குவிக்கும்போதுதான் சாதனை புரிகிறார்கள்.

இந்த விஷயம் தெரிந்தவர்கள், கவனம் குவித்து தவம் செய்யும் நிலையில் உள்ளவர்களைத் தொந்தரவு செய்து கவனச் சிதறலை ஏற்படுத்துவதில்லை. மாறாக, இங்கித்துடன், வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போய் விடுவார்கள்.

இங்கிதம் தெரிந்தவர் மார்த்தாண்டம்.

ஏதோ ஒன்றில், கவனத்தைக் குவித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானி ஜனனியை தொந்தரவு செய்யாமல், ‘சிறிது நேரம் கழித்து வந்து பேசிக் கொள்ளலாம்…’ என்று ஓசைப்படாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.’

ஜனனியின் கண் மட்டத்துக் கீழ் காட்சியளித்தன வீடுகள். வில்லாக்கள். தெருக்கள், சாலைகள்… எல்லாம்.

வீடுகளின் பின்னணியில், முன்னால் நின்ற காம்பவுண்ட் சுவரும், பிளாட்பாரத்தில், ஆங்காங்கே வளர்ந்து கிளை பரப்பி நின்ற பல்வேறு விருட்சங்களும் அவள் கண்களுக்குள் குளிர்ச்சியைப் பாய்ச்சின.

நடைமேடையில் நின்று கொண்டு அழகு சேர்ப்பதோடு, பிராண வாயுவை உற்பத்தி செய்து விநியோகிக்கும் மரங்கள் ஒவ்வொன்றின் தனித்தன்மையையும் தனித்தனியாய் ரசித்தாள்.

பளிச் என எண்ணை தடவி, மஸாஜ் செய்து, பாலிஷ் போட்டு விட்டது போல, தக தக வெனப் பளபளக்கும் இலைகளையும், கிளை நுனியில் இயல்பாய் எழும்பித் துவளும் கொழுந்துகளையும் அசைத்துக் கொண்டு நின்ற புங்கன் மரம்;

இளஞ்சிகப்பு, இளமஞ்சள், வெள்ளை, பிங்க் என பல்வேறு நிறங்களில் மலர்ந்து புன்னகைத்து நின்ற போகன் வில்லாக்கள்;

கருப்பு நிற முருங்கைக் காய்ப் போல வாளிப்பாய்த் தொங்கும் காய்களுடன், தூய மஞ்சள் நிறத்தோடு கொத்துக் கொத்தாய்த் தொங்கும் சரக் –கொன்றை;

அழுத்தமான மஞ்சளைப் பூசிக்கொண்டு மலர்ந்து முறுவலிக்கும் மஞ்சள்-பட்டி;

வெள்ளை நிறத்திலும் மற்றும் இள ஊதா நிறத்திலும் புஷ்பித்திருக்கும் மந்தாரை மரங்கள்;

இப்படியே பார்த்துக் கொண்டே சென்ற ஜனனியின் பார்வை, உச்சாணியில் பூத்துக் குலுங்கி, ஆகாயத்தை அன்னார்ந்து பார்க்கும் ‘கானகத் தழல்’ மரங்களிள் நெருப்புச் சிகப்புப் புஷ்பங்களின் மேல் நிலைக்க, தீண்டுமின்பம் அனுபவித்தாள் ஜனனி.

ஓங்கி, உயர்ந்து, கிளைப் பரப்பி, வண்ண வண்ணமாய் மலர்ந்து, நறுமணம் வீசுவது மட்டுமல்லாமல், கரு நிழலாய் தரு நிழல் பரத்தி, நின்ற பல்வகை மரங்கள், முக்கியமாக, அந்தச் சாலைக்கு இடப்பட்ட ‘நிழற்சாலை’ என்ற பெயரையும், நிலை நிறுத்திக் கொண்டிருந்தன.

தங்களுக்கு அடைக்கலம் தரும் அந்தப் பரந்து விரிந்த பசுமைத் தாயகத்தைச் சுற்றிச் சுற்றி வந்த வண்ண வண்ணப் பறவைகள், சந்தோஷமாய் தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் போது கூவிக் குலாவும் பறவைகளின் மகிழ்ச்சி ஆரவாரங்கள் கண்ணாடியால் அடைக்கப்பட்ட ஆய்வுக் கூடத்துக்குள் ஒலிக்கவில்லை என்றாலும், ஜனனியால் அனைத்தையும் முழுமையாக உணர முடிந்தது.

அத்தியாயம் – 2

ஆய்வகத்தின் முதல் தகுதி தூய்மைதானே.

அந்த வகையில், தற்போது ஜனனி தற்காலிகமாகத் தங்கியிருக்கும் அந்த ஆராய்ச்சிக் கூடமுமே மிகத் தூய்மையாகக் காட்சியளித்தது.

ஆய்வகத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகளின் அறைகள், வழிகாட்டி விஞ்ஞானிகளுக்காக ஒதுக்கப்பட்ட கேபின்கள், கள ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளின் ஆய்வுக் கூடங்கள், அனைத்துத் அறைகளிலும், போடப்பட்டுள்ள மேசைகளில் பல்வேறு நீள அகலங்களில் கம்பீரமாக நிற்கும் கணினிகள், குறிப்பேடுகள், பதிவேடுகள் ஏன் குப்பைத் தொட்டிகள் கூட தூய்மைப் பணியாளர்களால் நளினமாகத் துடைக்கப்பட்டு பளிச் பளிச் என ஒளிருமாறு பராமரிக்கப் பட்டிருந்தன.

பல நாட்கள், பல மணி நேரங்கள் பல வாரங்கள் என தேவைக்குத் தகுந்தாற்போல அப்ஸர்வேஷனில் வைக்கப் படவேண்டிய பல்வேறு ஸ்பெஸிமன்கள், அதாவது வகை மாதிரிகள்;

‘சாம்ப்பிள்ஸ்’ அண்ட் ‘ஸ்பெஸிமன்ஸ்’ என்று எழுதப்பட்டு, முகப்பிலேயே நிறுத்தப்பட்டிருந்த ‘வார்ட்ரோப்’பில், பேட்ச் எண் மற்றும் விவரக் குறிப்புகள் இணைக்கப்பட்டு முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பல்விதமான பரிசோதனைளை நடத்தும்போது, சேர்மங்களை தயாரிப்பதற்காகத் தேவைப்படும் பல்வேறு தனிமங்கள் கரைந்த சொல்யூஷன்கள்; மற்றும் பல்வேறு ஆய்வுகளுக்குத் உயிர்நாடியாக விளங்குகிற, உயிர்ப்புடன் கூடிய திரவங்கள்.

அனைத்தும், பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் உருவாக்கப்பட்ட குப்பிகளில், குடுவைகளில், சீசாக்களில், சோதனைக் குழாய்களில் எல்லாம் நிரப்பப்பட்டு ப்ரதயேகமான ட்ரேயில் வைக்கப்பட்டிருந்தன.

அழியா மை கொண்டு, சங்கேதக் குறியீடுகளால் எழுதப்பட்டு, கழுத்தில் கட்டப்பட்டிருந்த வித விதமான குறிப்புகளோடு, ட்ரேயினுள் அடங்கியிருந்த கன்டெய்னர்கள், கன்வேயர் பெல்ட் மூலம் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருந்தன.

தொடர்ந்து, பிராணவாயுவின் அளவைப் பராமரிப்பதற்காக, வைக்கப்பட்ட அனைத்தும், வைப்ரேட்டர் ட்ரேயில் அமர்ந்தபடி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன.

சில ட்ரேக்கள், ‘ட்ர்டக்… ‘ட்ர்டக்… ‘ட்ர்டக்…’ என்ற சீரான ஓசையை எழுப்பியபடி ஒரே சீராக ஓடிக் கொண்டிருந்தன. கன்டெய்னருக்குள் முக்கால் வாசி நிரம்பியிருந்த திரவங்களுக்கு, சீரான அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

வேறு சில ட்ரேக்கள், சில சுற்றுகள் இடப்புறமும், பிறகு, அதே எண்ணிக்கையில் வலப்புறமுமாக… மாறி மாறிச் சுற்றி திரவங்களை வைபரேட் செய்து கொண்டே இருந்தன.

மற்றும் சில, இடதும் வலதும் மாறி மாறி டடக் டடக் எனத் திரும்பித் திரும்பி கண்டைனர் திரவத்தை வெகுவாக அதிரவைத்துக் கொண்டே இருந்தன.

இவை எல்லாமே வருடம் முழுதும் 24/7 நிற்காமல் இயங்க வேண்டிய இயக்கங்கள்.

இவை தவிர, ஃப்ரீஸரில்தான் இருக்க வேண்டும் என்ற ஸ்பெஸிமன்களுக்காக எம் டி அறையில் ஆளுயரத்திற்கு மேல் உயரமான குளிர் சாதனப் பெட்டிகள் இரண்டு கம்பீரமாக நின்று கொண்டிருந்தன.

வேலை நாட்கள் மட்டுமில்லை. விடுமுறை நாட்களிலும் கூட அவை இயங்காமல் போனால், ஆராய்ச்சிக்குத் தேவையான உயிர்ச்சத்துக்குத் தடை ஏற்பட்டுவிடும் என்பதால் இந்த இயக்கத்தில் மட்டும் ஆய்வகங்கள் எப்போதும் மிகவும் கவனமாகத்தான் இருக்கும்.

காரணம் க்வாலிடி கண்ட்ரோல் அதிகாரிகள் வந்தால் முதலில் இந்த இயக்கங்களைத்தான் ஆய்வ செய்வார்கள் என்பதால் நிறுவனத் தலைவர்கள் இதற்கு முன்னுரிமை தருவார்கள்.

மின் தடை வந்தாலும் கூட, பாட்டரிகளின் துணையோடு அவை இயங்கிக் கொண்டேதான் இருக்க வேண்டும். மிகவும் சென்ஸிடிவ் ஆன பகுதி என்பதால், பிரத்யேகமாகமான, குளிரூட்டப்பட்ட அந்த அறைக்குள் வழக்கம் போல, ‘அந்நியர்கள் அனுமதி இல்லை’ என்பதை பல்வேறு மொழிகளில் குறிப்பிட்டு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது.

ஆங்காங்கே, தேவையான இடங்களில், ரத்தச் சிகப்பு நிறத்தில் இருக்கும், கையடக்கமான உருளைப் பகுதியில், வெள்ளை நிறத்தால் ‘ஃபயர்’ என்று எழுதப்பட்ட ‘தீ அணைப்பான்’கள் முறையாக மாட்டி வைக்கப்பட்டிருந்தன.

எமர்ஜென்ஸி எக்ஸிட்’ என்று இரண்டு பாதைகள் உள் புறமாகப் பூட்டப்பட்டு அந்தப் பூட்டின் சாவி, அருகில் இருந்த ஒரு மூடப்பட்ட சிறு பிறைக்குள் இருப்பதை எவரும் எளிதில் அறியும் வண்ணம் மூடியிலேயே சாவியின் படம் ஒட்டப்பட்டிருந்தது.

ஒரு படம் என்பது ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் அல்லவா.

ஆய்வகக் காட்சிகள், செயல்பாடுகள், நடைமுறைகள், பராமரிப்பு அனைத்தும் அவளோடு கலந்துவிட்ட ஒன்றல்லவா. எனவே இந்தப் பழக்கப்பட்ட காட்சிகளில் இருந்து தன்னை சடுதியில் விடுவித்துக் கொண்டாள் ஜனனி.

ஆய்வகத்திற்கு வெளியே நீண்டு பரவியிருந்த சாலையை ஒட்டிய பிளாட்பாரத்தில், ஒரு மரத்தின் கீழ் நின்ற ஜனனியின் நிலை கொண்ட பார்வையானது, அவள் மனதிற்குள் நிகழ்ந்த எத்தனையெத்தனையோ ரசவாதங்களை அவள்முகம் பிரதிபலித்தது அப்போது…!


நகரத்தின் பரபரப்பில் இருந்து ஒதுங்கி அமைதியான பகுதியில் அமைந்து இருக்கும் நிழற்சாலை அது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் போடப்பட்ட லே அவுட்.

குடியிருப்புப் பகுதியாகத்தான் அறிமுகமானது அந்த லே அவுட்.

பெட்டிக் கடை, ஒர்க் ஷாப், ஜெராக்ஸ் கடை, பஞ்சர் கடை, மெடிக்கல் ஷாப், கன்ஸல்டன்ஸிகள், மருத்துவ மனை, ஆய்வகங்கள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள், தனியார் வங்கி, சீட்டுக் கம்பெனி என ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இன்டஸ்ட்ரியல் ஏரியாவாக மாறிக் கொண்டிருந்தாலும், இன்னும் ஓயாமல் அனைத்து விதமான இரும்புக் குதிரைகளெல்லாம் எதிரும் புதிருமாக ஓடி, டிராஃபிக் ஏற்படுத்தும் பரபரப்பான சாலையாக மாறவில்லை அது.

ஜனனி பார்த்துக் கொண்டே இருக்கும் இந்தக் கணம், சாலையில் மனித நடமாட்டம் அறவே இல்லை.

ஜனங்கள், வீட்டின் கதவை சார்த்திக்கொண்டு, தொலைக் காட்சிக்கு முன்னாலே அமர்ந்து கொண்டோ, கணினியை இயக்கிக் கொண்டோ, கைப்பேசியில் தங்களைக் கரைத்துக் கொண்டோ இருக்கக் கூடும்.

ஆம்.

காலங்கள் மாறிக் கொண்டே இருக்க. காட்சிகளும் மாறத்தானே செய்யும்.

கோவில்கள், குளங்கள், திருவிழாக்கள், என வெளி உலகில் சுற்றி வருவதும், பல வித குணாம்சமுள்ள மனிதர்களிடம் பழகிப் பொழுது போக்குவதையே, ஆரோக்கியமான வழக்கமாக வைத்திருந்த கிராமத்து ஜனங்களையே தொலைக் காட்சிப் பெட்டிகளும், கைப் பேசிகளும் கட்டிப் போட்டு முடக்கி விட்டதைப் பார்க்கும்போது, இது போன்ற நகரங்களில் அதன் தாக்கங்களைப் பற்றிச் சொல்லவேண்டுமா என்ன…?


கண் மட்டத்திற்கு மேலும், கண் மட்டத்திலும் பரவியிருந்த விசாலமான. விஸ்தாரமான பார்வையை, படிப்படியாகக் குறைத்து, கண் மட்டத்திற்குக் கீழ், தலை தாழ்த்தி ஆய்வகத்தின் பின் புறத் தெருவில் ஆய்வகத்திற்கு நேர் எதிரே இருந்த வீட்டின் முன் நிலைகொண்டது ஜனனியின் கவனம்.

வீட்டின் காம்பவுண்டு சுவருக்கு முன், கவையாகிக் கொம்பாகி, நிற்கும், காட்டகத்தி இலையைப் போன்ற வடிவத்தில், அதைவிட அளவில் இரண்டு மடங்கு பெரிய இலைகளாய், மெழுகு தடவியது போல, விரைப்பாகப் பளபளத்துக் கொண்டிருந்த ‘சொர்க்கம்’ மரத்தின் அடிவாரத்தில் கவனம் முழுவதும் குவிந்து, குத்திட்டு நின்றது ஜனனியின் விரிந்த பார்வை.

மரத்தின் அடிவாரத்தில், அவள் கண்ட அந்தக் காட்சி;

நான்கு கால்களையும் ஆட்டிக்கொண்டு, இடதும் வலதுமாய் அசைத்தபடி , மல்லாக்கப் படுத்துக் கிடந்தது ஒரு தெரு நாய்.

அதன் பால் மடி ஊறிப் பருத்திருந்தது.

செவ்வறியோடிய அந்தத் தாய் நாயின் மடியில், முட்டி முட்டிப் பால் பருகின, பல வண்ண நாய்க் குட்டிகள்.

தாய் நாய், நாக்கை நீட்டி… நீட்டி… “புஸ்… புஸ்… புஸ்…” என்று மூச்சு விட்டவாறு அமுதூட்டுகையில், கிடைக்கும் சுகத்தை அனுபவித்தது.

தாய் நாயின் பாசத்தையும், குட்டிகளின் கும்மாளத்தையும், பார்க்கப் பார்க்க, ஜனனியின் கண்கள் பனித்தன.

அவளின் ‘தெரிவை’ப் பருவத்தில் அறிந்து கொண்ட ஒரு திருவாசகப் பாடலுக்கு இந்தக் கணத்தில் முழுப் பொருளும், பொழிப்புரையும் தெரித்தது போல உணர்ந்தாள் ஜனனி.

சின்ன வயதில், சிவன் கோவில் ஓதுவார் பரமசிவம் அய்யாவின் முன்னால், அவ்வப்போது ஜனனியைக் கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டு, தானும் சிறிது நேரம் உட்காருவார் அவள் தாத்தா.

கம்பீரமான குரல் அவருக்கு.

சிறிதும் பிசிர் அடிக்காமல், ராக, தாளக் கட்டுகளோடு தமிழ் மறைகளைப் பாடும்போது ஓதுவார் தன்னை இழந்துவிடுவார்.

இன்னதுதான் என்றில்லை. எது தோன்றுகிறதோ அதைப் பாடுவார்.

ஒருநாள் தேவாரம், சில நாட்கள் திருவாசகம், சில தினங்களில் திருமந்திரம், என இஷ்டத்துக்குப் பாடுவார்.

பாடுபவர்களுக்கு ஒரு ரசிகன், ஒரே ஒரு ரசிகன் எதிரில் இருந்தாலும் போதுமே, தன்னை மறந்து பாடுவார்களல்லவா…!

ஓதுவார் பரமசிவம் அய்யாவுக்கு ஜனனி, அவள் தாத்தா என இரண்டு ரசிகர்கள் இருக்க, தைத்ரீயம் தவழ, மனமுருக பரவசத்துடன் அவர் பாடுவதை எத்தனை நேரம் கேட்டாலும் தெவிட்டாது.

சில நேரங்களில், அவராகவே பொருளும் பொழிப்புரையும் சொல்லுவார். அன்றாட வாழ்விலிருந்து எளிய உதாரணங்கள் சொல்லி கடினமான பதங்களையும் ஏற்றிவிடுவார்.

ஓதுவார் கற்றுத் தந்த, மாணிக்க வாசகரின் திருவாசகத்தில், ‘பிடித்த பத்து’ப் பகுதி அனிச்சையாக ஜனனிக்குள் சுரந்து, அவளை நெகிழ்வித்தது.

‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’

என்ற திருவாசகப் பாடல், இந்தக் கணத்தில், ஜனனியின் ஊனை உருக்கி, அவள் உள்ளொளியைப் பெருக்கியது.

மூளையின் ஒரு ‘செல்’ மீது அழுத்தமாய்க் கீறப்பட்டு, கல்வெட்டாய்ப் பதிவாகியிருந்த ஒரு சொற்றொடரை அவள் உதடுகள், அனிச்சையாய் உச்சரித்தன.

‘தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை…!’


சிறிது நேரம் கழித்து வருவோம் என்று தற்காலிகமாக ஜனனியை தனிமையில் விட்டுச் சென்ற மார்த்தாண்டம், மீண்டும் வந்தார்.

“ஜனனி… ப்ளீஸ் லுக் ஹியர்… ப்ளீஸ் லுக்… ப்ளீஸ்…”

தன் பொறுப்புகளையும், கடமைகளையும் இரு கண்களாகக் கொண்ட மார்த்தாண்டம், நேர நிர்வாகத்தை அனுசரித்து தன் பக்கம் கவனத்தைக் கவர, ஜனனியைத் தொடர்ந்து அழைத்தார்.

ஒரு கட்டத்தில், பளிச் என்று, ஜனனி தன் பார்வையை மார்த்தாண்டத்தின் பக்கம் திருப்பினாள்.

கையில் இருந்த அழைப்பிதழை அவள் கையில் கொடுத்துவிட்டு,

“ஜனனி… ப்ளீஸ் இதை ஒரு முறை பாத்துருங்களேன்…!” என்று சொன்ன மார்த்தாண்டம், அவள் அதைப் பார்த்து முடிக்கும் வரை காத்திருந்தார்.

“மேடம் நான், உங்களோட ஆவணங்களை, லே அவுட் பண்ணி வெச்சிருக்கேன். பார்த்துட்டு, ஏதாவது மாற்றம் வேணும்னா சொல்லுங்க…” என்று வாய் சொல்ல, பக்கவாட்டில், மேஜை மேல் விரிக்கப்பட்டிருந்த வெண் பட்டுத் துணியின் மீது, வைக்கப் பட்டிருந்தவற்றை காட்டிக் கொண்டிருந்தது மார்த்தாண்டத்தின் வலது ஆள்காட்டி விரல்.

கரும் பச்சை வண்ணத்தில் இருந்த அகலமான ரிப்பனில் கோர்க்கப்பட்ட உள்ளங்கை அகலத் தங்கப் பதக்கம்;

லேமினேஷன் செய்யப்பட்ட பாராட்டுப் பத்திரம்;

அறிவியல் கழகம் அளித்த நினைவுப் பரிசு;

இவைகளோடு, மேஜையில் லேசாய் சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த ஏ 3 நீள அகலங்களில் சட்டமிடப்பட்ட, ‘ஜனனி, ஜனாதிபதியிடம் தங்கப் பதக்கம் பெறும்’ மேக்ஸி சைஸ் புகைப்படம்…;

கலை நயத்துடன் அடுக்கப் பட்டிருந்த அனைத்தையும் பார்த்தவுடன் முறுவலித்தாள் ஜனனி.

“இதெல்லாம் எதுக்கு இங்கே டிஸ்பிளே பண்ணணும்…?” கேட்டாள்.

“ப்ரோட்டா கால் நிமித்தம், உங்களை இங்கே சந்திக்க உயர் அதிகாரிகளும், சீனியர் விஞ்ஞானிகளும் வருவாங்க. அவங்க கவன ஈர்ப்புக்காகத்தான் மேடம்…” என்றார் மார்த்தாண்டம்.

அடடே! எப்படியெல்லாம் ஒருவரைக் கொண்டாடவேண்டும் என்று வகை வகையாக வித விதமாக யோசித்து யோசித்து, இப்படியெல்லாம் நேர்த்தியாய்ப் காட்சிப்படுத்தி வைத்த மார்த்தாண்டத்தைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தாள் ஜனனி.

கையில் இருந்த அழைப்பிதழை மீண்டும் ஒரு முறை பார்த்தாள்.

தன் சொந்த ஊரான சிறுகுடி கிராமத்திலே தான் துவக்கக் கல்வி கற்ற பள்ளி வளாகத்தில், தனக்கு எடுக்கும் விழா அழைப்பிதழின் முகப்பில், ஜனாதிபதி கைகளால் தான் விருது பெறும் புகைப்படத்தைப் பார்த்தபோது, ஜனனி உள்ளத்தால் தலைநகரத்திற்குப் பயணித்துவிட்டாள்.

அத்தியாயம் – 3

புது டெல்லி;

ஜனாதிபதி மாளிகை;

இந்த மாளிகையைக் கண்களால் கண்டு களிப்பதும், , அதைப் பின்னணியாக வைத்து பற்பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், செல்ஃபி எடுத்துக் கொள்வதும், சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்குகள்.

“இந்த இடத்துலதான் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும்;

இதுதான் ராஜ பாதை, அதோ அந்த இடத்துலதான் பிரதம மந்திரி கொடி ஏத்திட்டு முப்படைகளோட அணி வகுப்பை ஏத்துக்குவார்;”

இதுதான் இந்தியா கேட்…”

இப்படியெல்லாம் டூரிஸ்ட் கைடு சொல்லும் விளக்கங்களையெல்லாம் கேட்டு வியப்பதும், இன்பச் சுற்றுலா செல்பவர்களின் வழக்கம்.

ஆனால், ஒரு சாதனையாளராக ஜனாதிபதி மாளிகைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, விருந்தில் கலந்து கொள்வது என்பது ஒரு பேரனுபவம்.

ஜனனிக்கு வாய்த்தது அந்தப் பேரனுபவம்.


‘தமிழக வேளாண் விஞ்ஞானி வாழ்க!!’

‘வாழ்த்துக்கள் விஞ்ஞானி ஜனனி!’

‘உலகத்துக்கேப் படியளந்த தமிழ் ஜனனி வாழ்க வளர்க…’

‘தமிழகத்தின் அன்னலெட்சுமி ஜனனி…’

இப்படியெல்லாம் பதாகைகளுடனும்,

போட்டோ ஷாப்செய்து உருவாக்கப்பட்ட, நெற்பயிரின் பின்னணில் சிரித்துக் கொண்டு நிற்கும் ஜனனி;

உலக வரைபடத்தில் ஊடுறுவியது போன்ற ஜனனி போன்ற போஸ்டர்களையும் தாங்கிய படி, வழி மேல் விழி வைத்து டெல்வி வாழ் தமிழர்கள் கூடி நின்றார்கள்.

மார்த்தாண்டம் கார் நிறுத்தினார்.

முன்னால் பாதுகாப்புக்காக சென்ற காவலரின் ஜீப் சடாரென்று நின்றது.

“இங்கே நிறுத்தாதீங்க சார்…” என்று இந்தியில் கத்திக் கொண்டே ஓட்டமும் நடையுமாக வந்தார் எஸ்பி.

டோண்ட் ஒர்ரி சார் இவங்க டெல்லி வாழ் தமிழர்கள். இவங்க நம்ம விஞ்ஞானியை ஹானர் பண்ண வந்திருக்காங்க… அவங்க கைல இருக்கற பதாகைகளையும், போஸ்டர்களையும் பாருங்க…” என்றார் மார்த்தாண்டம் நுனி நாக்கு ஆங்கிலத்தில்

“சார் பூங்கொத்தோட வந்துதான் ஒரு பிரதமரை காலி பண்ணினாங்க. எங்க வேணா எது வேணா நடக்கலாம். விஞ்ஞானிய காரை விட்டு இறக்காதீங்க…”

எஸ் பியும் இப்போது ஆங்கிலத்துக்கு வந்துவிட்டார்.

“எங்க ஊர் பொண்ணு உலக அளவுல சாதிச்சிருக்கு. ஏன் உலகத்துக்கே சோறு போட்ட தமிழ் பொண்ணு சார். அவங்களை ஹானர் பண்ணினா உங்களுக்கு பொத்துக் கிட்டு வருதோ?”

ஒரு நடு வயது பெண் எஸ்பியிடம் விவாதித்தாள். துரதிருஷ்ட வசமாக, அவள் விவாதம் மொழி சார்ந்தும் இனம் சார்ந்தும் அமைந்து விட்டது.

அந்த விவாதத்தையே, தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டார் எஸ் பி. “இதனாலதான் டிபார்ட்மெட்காரங்க ஓட்டற வாகனத்துல விஐபிய ஏத்தணும்னு சொன்னேன். மெத்தப் படிச்ச கம்யூனிட்டிங்கற காரணத்துனால, நீங்க ட்ரைவ் பண்ற வண்டீல ஏற அனுமதிச்சேன். இப்படிச் சிக்கல் பண்ணிட்டீங்களே…?” என்று பதறினார் எஸ் பி

“என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார் மார்த்தாண்டம்.

“எஸ் பி சார் எதாவது ஆல்டர் நேட் ஏற்பாடு பண்ண முடியுமா பாருங்க… ப்ளீஸ். உள்ளே உட்கார்ந்திருக்கற விஞ்ஞானியும் அதையேத்தான் கேக்கறாங்க.” என்றார்.

ஒகே… வெயிட் பண்ணுங்க, என்று பந்தோபஸ்துக்கு வந்த காவலர்களை அழைத்து ஏதோ கட்டளைகளைப் பிறப்பித்தார்.

நேரம் ஆக ஆக கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.

“சார். போலீஸ் டிபார்ட்மெண்டுக்கே இதுபோல விஐபிக்களை சமாளிச்சி திருப்பி அனுப்பறதுதான் பெரிய சவால் சார். இப்ப பாருங்க ஏகப்பட்ட கூட்டம் கூடிருச்சு. மீடியா ஆட்கள் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சிட்டாங்க பாருங்க…”

“சார் நான் பிடிஐ. விஞ்ஞானியை பேட்டி எடுக்கலாமா?”

ஒரு இளம் பெண் கழுத்தில் தொங்கிய ஐடி கார்டு மற்றும் காமிராவுடனும் எஸ் பி முன் வந்து நின்றாள்.

“சாரி மேடம். சட்டம் ஒழுங்கு, பந்தோபஸ்து காரணமா இப்போ விஞ்ஞானியைச் சந்திக்க அனுமதிக்க மாட்டோம். ராஜ் பாத் எண்ட்ல வழக்கமா ப்ரஸ் மீட் நடத்தற இடத்துல வெயிட் பண்ணுங்க. அங்கே பேட்டி எடுத்துக்கலாம்…” என்றார் காவலர்.

“தமிழ் விஞ்ஞானி ஜன…னீ…!” என்று கூட்டத்தில் ஒருவர் கத்த, வாழ்க என்று கோரஸாய் குரல் எகிறத் தொடங்கியது.

‘வேறு ஏதாவது போராட்டமாகவோ, மரியல் நிகழ்வாகவோ இருந்தால், தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் என கூட்டத்தைக் கலைக்கலாம். விஞ்ஞானியைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகக் கூடிய கூட்டம் என்றுதான் சொல்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் தீவிரவாதிகள் இருக்கலாம். ஒரு மொழியைத் தீவிரமாக நேசிக்கும் ஒருவர், மற்ற மொழியை தவறாக விமர்சித்து விட்டால் போதும். நாடே பற்றி எரியும். இதையெல்லாம் உணராமல் அந்த விஞ்ஞானி காரை நிறுத்திவிட்டார். இடை எப்படிச் சமாளிப்பது’ என்று யோசித்தார் எஸ்பி.

அந்த நேரத்தில் தான் ஆம்புலன்ஸ் போன்ற வடிவத்தில் பிரச்சார வண்டி வந்து காரில் அருகே நின்றது.

பெண் காவலர்கள் நான்கு பேர் சென்று காரிலிருந்து ஜனனியை இறக்கி, பிரச்சார வண்டியில் ஏற்றினார்கள். வண்டியின் கூரையிலிருந்த ஸ்லாட் வழியாக பாராட்ட வந்த மக்களைப் பார்த்து கும்பிடச் சொன்னார்கள்.

பலவிதமான கோஷங்களை எழுப்பிய படியும், விசில் அடித்த படியும் “உலகத்துக்கே சோறு போட்ட தமிழச்சி” என்று கூவியபடியும் ஜனனியின் கண்டுபிடிப்பைக் கொண்டாடினார்கள்.

“ஓகே ஸ்டார்ட்…” என்று எஸ் பி உத்தரவிட பிரச்சார வாகனத்தில் நின்றபடியே ஜனாதிபதி மாளிகைக்கு வந்து சேர்ந்தாள் ஜனனி.

உலகளாவிய அறிவியல் அறிஞர்களால் நிரம்பி வழிந்த ஜனாதிபதி மாளிகையில் தான் ஒரு முக்கியமான, போற்றுவதற்கு உரிய விஞ்ஞானியாக இடம் பெற்ற அந்த நாள் ஜனனியின் வாழ்வில் ஒரு பொன்னாள்.


‘ஜெய் ஜவான் ஜெய் கிஸான்’.

முதலில் உயிரைப் பாதுகாக்கும் சிப்பாயைக் கூறியபின், அடுத்து மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் உழவனைப் போற்றுகிறது மேற்கண்ட ஸ்லோகன்.

சுழன்றும் ஏர் பின்னது உலகம்;

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றெல்லாம் சொல்கிறதே வள்ளுவம்.

உலகம் முழுவதற்கும், பொருந்தும் வகையில், மகத்தான கண்டுபிடிப்பாக இருப்பதால், உலகளாவிய அறிவியல் கழகம் ஜனனியை கௌரவிக்க உலகளாவிய விழாவாக நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது.

பல்வேறு நாடுகளிலிருந்தும் விஞ்ஞானிகளின் பிரதிநிதிகள் வந்து, சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விஞ்ஞானிகள் பலர் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த சூழலில், ஜனாதிபதியின் கரங்களால் பாராட்டுப் பத்திரமும் பதக்கமும் பெற்ற தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் எதிர் மேஜையில் மார்த்தாண்டத்தால் காட்சிப்படுத்தப்பட்ட அந்த ‘ஸ்நாப் ஷாட்’.


பாராட்டு விழாக் குழுவினர் ஜனனியை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்ற தருணம்;

ஜனாதிபதியை நேருக்கு நேர் பார்த்து கை கூப்பிய தருணம்;

இருக்கையை முதற் குடிமகனே தன் வலது கையால் சுட்டிக் காட்டி, சைகையால் உட்காரச் சொன்ன தருணம்;

என அனைத்து இனிய தருணங்களும் சீரியல் எபிசோட் போல் தொடர்ந்து மனத்திரையில் காட்சியானது.

மாளிகையின் உள் அரங்கத்தின் ஒரு பகுதியில் அனைத்து ஜனாதிபதிகளின் உருவப் படங்களும் நேர்த்தியாக பொருத்தப்பட்டிருக்கும், ‘பெரிய விருந்து மண்டபத்தில்’ உலக விஞ்ஞானிகள் பலரும் கலந்து கொண்டு, இந்திய ஜனாதிபதியோடு அமர்ந்து, தும்பையாய் வெளுத்த மேசை விரிப்பின் மீது, நேநீர் விருந்தை ருசித்த தருணம்…, மனத்திரையில் பிரகாசித்து ஜனனிக்குக் கிளர்ச்சியூட்டியது.

விருந்தில் கலந்து கொண்ட தன் தாயின் மகிழ்ச்சியையும், மந்தஹாசத்தையும் நினைத்து நினைத்து, இப்போதும் ஜனனியின் மனசு மந்தஹாசித்தது…?

பாட்டி, தாத்தாவையும் ஜனாதிபதி மாளிகை விருந்துக்கு அழைக்கத்தான் செய்தாள் ஜனனி. விழாக் குழு அனுமதியும் தந்தது.

“நம்ம கிராமத்துலயே நீ படிச்ச துவக்கப் பள்ளியிலேயே உனக்கு விழா நடத்தப் போறாங்க அங்கே வந்து கலந்துக்கறோம்.” என்று பெருந்தன்மையாகச் சொல்லி விட்டார்கள் அவர்கள். அம்மா மட்டும் விமானத்தில் வந்து இறங்கினாள். மார்த்தாண்டம்தான் ஏர்போர்ட் சென்று அம்மாவை அழைத்து வந்தார்.

பரிசளிப்பு விழா முடிந்த கையோடு,

தன்னார்வ வழிகாட்டிகள் வழிநடத்த, ‘மார்பிள் ஹாலில்’ தொடங்கி. பல்வேறு மகாராஜாக்கள், மகாராணிகள், வைஸ்ராய்கள், கவர்னர் ஜெனரல்கள் போற்ற முக்கியஸ்தர்களின் உருவப்படங்கள், சிற்பங்களெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு களித்தார்கள்.

தர்பார் மண்டபத்தில் சிம்மாசன அறையைப் பார்த்தபின், பிரதான கதவைத் திறந்து காட்டினார்கள்.

அங்கிருந்து ராஜ பாதை, ஜெய்ப்பூர் தூண், இந்தியா கேட் ஆகியவற்றை ஒரு நேர் கோட்டில் பார்த்து ரசித்த அனுபவம், இப்போது நினைத்தாலும் ஜனனிக்கு மனதை நிறைத்தது.

கல்லூரியில் யு ஜி படித்தபோது, தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்றவர் மார்த்தாண்டம். ஆர் டி சி எனக் குறிப்பிடக்கூடிய குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டவர்.

மொகலாயப் பூங்கா, அங்கிருந்த அலங்கார நீரூற்றுகள், விஸ்தாரமான புல்வெளிகள் அனைத்தையும் காட்டிவிட்டு, மார்த்தாண்டம் விளக்கினார். “இந்த ஏரியாவுலதான் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர தின அணி வகுப்பு நடக்கும். இதே இடத்துல ஒரு ரிபபப்ளிக் டேல நானே மார்ச் பாஸ்ட் பண்ணியிருக்கேன்.” என்று சொன்னதை இப்போது நினைத்துப் பார்த்தாள் ஜனனி.

மார்த்தாண்டத்தின் பன்முகத் திறமைகளை எல்லாம் ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு, சுயநலம் சிறிதும் இல்லாமல், முழுக்க முழுக்க, தனக்காகவே வாழும் தியாக சீலத்துக்கும்;

தன் மேல் அதீமாய் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், பாசத்திற்கும் நான் என்னதான் பிரதி செய்யப் போகிறேன்…?’

உணர்ச்சி வசப்பட்டாள் ஜனனி

மார்த்தாண்டம் பயணத் திட்டத்தை கவனமாய் பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில், அவரை பாதாதி கேசம் பாசத்தோடும் நேசத்தோடும் நோக்கினாள்.

அம்மாவிற்கு அடுத்த நிலையில், தனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மார்த்தாண்டத்தைப் பார்த்துக் கேட்டாள்…

“உங்க சிங்கிள் பேரண்ட் சிறுகுடி விழாவுக்கு வருவாங்கதானே?”

“ஷ்யூர்.”

“யாரு அழைச்சி வருவாங்க?”

“உங்களை பயணியர் மாளிகைல ட்ராப் பண்ணிட்டு, நான் போயி அழைச்சிட்டு வரதா ப்ளான். அவரும் வரணும்னு துடிச்சிக்கிட்டுதான் இருக்காரு மேடம்.”

“என்னை விட கிட்டத்தட்ட வயசுல பெரியவர் நீங்க. வா ஜனனி போ ஜனனின்னு ஒருமைலயே அழைக்கலாம்னு எத்தனை முறை சொன்னாலும் கேட்கவே மாட்டீங்களா மார்த்தாண்டம் சார்.”

நீங்க மட்டும் சார்னு சொல்லலாம் நான் மட்டும் மேடம்’னு சொல்லக் கூடாதா…?

இருவருக்கும் இடையே இது போல பல முறை உரையாடல் நிகழ்ந்திருக்கிறன.

உரிமை எடுத்துக் கொள்ளுதல் என்பது தேவையற்ற ஒன்று.

உரிமையோடு பேசுதல் ஆரம்பத்தில் கிளர்ச்சியை தோற்றுவித்தாலும், நாளடைவில், நட்பின் அல்லது உறவின், வளர்ச்சியை முடக்கிவிடும் என்பதுதான் உண்மை.

மனிதர்களின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில் உரிமையோடு பேசுவதாக எண்ணிப் பேசுகிற பேச்சில் சொற்குற்றம் வந்துவிட வாய்ப்புகள் அதிகம்.

சொற்குற்றத்தால், பலப் பல முறிவுகளை சந்தித்த நட்புகளும் உறவுகளும் நிறைய உண்டு மனித உறவுகளில்.

குறிப்பிட்ட எல்லையைக் கடக்காமல், ஒருவரோடு ஒருவர் பழகும் உறவே என்றென்றும் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கும். என்ற பேருண்மையை அறிந்து வைத்திருந்ததால் மார்த்தாண்டம், ஜனனி இருவருமே எந்தச் சூழ்நிலையிலும், ஒருவருக்கொருவர் உரிமை எடுத்துக் கொண்டதே இல்லை.

சிந்தனை வயப்பட்ட ஜனனியின் உள்ளத்தில் கெலைடாஸ்கோப் போல மாறி மாறி எல்லையற்ற காட்சிப் படிமங்கள் தோன்றி விரிந்தன.

– தொடரும்…

– ஜனனி…! ஜெயம் நீ..! (நாவல்), 25-02-2026, தேவியின் கண்மணி.

ஜூனியர்-தேஜ் இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *