கதையாசிரியர்:
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2026
பார்வையிட்டோர்: 107 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

இது ஒரு தனி உலகம்! 

ஆரவாரம் இல்லை. சந்தடி சலசலப்பு இல்லை. பிரச்சினைகள் புக முடியாத இடம். ஏனென்றால் இங்கே இருப்பவர்கள் அரும்பும், பூவும் பிஞ்சுமாக ஒரு நூறு குழந்தைகள்.  

அவர்களைப் பராமரித்துப் பாடம் சொல்லித்தர சபியா உட்பட சில ஆசிரியைகள், தலைமைப் பொறுப்பில் அறுபதை நெருங்கப் போகும் ஆயிஷா அம்மாள் இருந்தாலும், அத்தனை பாரத்தையும் சுமந்து கொண்டிருப்பவள் சபியாதான்! 

சுமையாக எதையும் கருதவில்லையா? எந்த நேரமும் இதழ் விரித்த ரோஜாவாகத்தான் இருக்கிறது சபியாவின் முகம். தாயைச் சுற்றும் சேய்களாக இந்த இல்லத்துக் குழந்தைகள் இவளைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.  

இப்பொழுது விளையாட்டு நேரம். தொலைவில் மகிழ மரத்தடியில் குழந்தைகள் ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள். சபியாவின் பார்வை அந்த மரத்தடியில் மையம் கொண் டிருக்கிறது. ‘தனக்கும் ஒரு குழந்தை இருந்திருந்தால்…?’

இருந்திருக்கலாம். இருந்திருக்க வேண்டும். பாவம் பாலம் தகர்க்கப்பட்டு விட்டது! 

எவ்வித பாதிப்பையும் சபியா காட்டிக் கொண்டதில்லை.

ஆனால் இப்பொழுது ஒரு பாதிப்பு! 

அமைதியான இந்தத் தனி உலகத்தில் இன்றைக்குச் சபியாவுக்கு மட்டும் ஒரு சலசலப்பு. 

காலையில் அவள் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. ஆயிஷா அம்மாள்தான் மௌனமாக அவளிடம் கடிதத்தை நீட்டினாள். அநேகமாக சபியாவுக்குக் கடிதங்களே வருவதில்லை. ஆனால் மூன்று வருஷங்களுக்கு முன்னால் நிலைமை வேறு. 

பிரித்துப் பார் என்றோ, படித்துச் சொல் என்றோ வாய் திறக்கவில்லை ஆயிஷா அம்மாள். ஆனால் அந்தத் தலைவியின் பார்வை மட்டும், ‘அப்புறமாக விவரம் சொல்கிறாயா?’ என்று வினவும் பாவனையில் இருந்தது. 

எதிர்பாராத கடிதம்… 

வெகுநேரம் உட்கார்ந்து விட்டாள் சபியா, குழந்தைகளின் விளையாட்டில் அவள் பார்வையிருக்கிறது. சன்னமாக உதிர்ந்து இறங்கும் மகிழம்பூக்களில் பார்வையிருக்கிறது. ஆனால் மனம்..

இருபத்து மூன்று வயதுவரை சபியாவும் இந்தக் குழந்தைகளில் ஒன்றைப் போலத்தான் இருந்தாள். ஆனால் பருவம் மட்டும் குமரி முத்திரை குத்திவிட்டிருந்தது. 

‘சபியாப் பொண்ணு இருக்க வேண்டிய எடம் இது இல்லே. ரோஜாப்பூவாட்டம் அழகு யாருக்குக் கெடைக்கப் போகுதோ இந்த ரோஜாப்பூ!’

மற்றவர்கள் அவளை வருணித்தார்கள். நூற்றுக்கு நூறு உண்மை! 

‘அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் இப்படி ஒரு பெண்ணா? இடம் மாறிப் புஷ்பித்திருக்கும் மலரா?’ வியப்போடு கேள்விக்குறியையும் தேக்கியபடி சபியாவின் எதிரில் – மூன்று வருஷங்களுக்கு முன்னால் – ஒரு நாள் நின்றிருந்தான் பஷீர். 

அவன் நகர்ந்த பிறகு ஆயிஷா அம்மாள் சபியாவின் காதைக் கடித்தாள்:

“இந்த பஷீர் பெரிய இடத்துப்பிள்ளை. நம்ம இடத்தைப் பத்தி கேள்விப் பட்டு வண்டியை எடுத்துட்டு வந்து பெரியதொகை குடுத்துட்டுப் போயிருக்கு… இந்த மாதிரி நாலு பெருந்தனக்காரங்க தாராளமா கைநீட்டினா கவலையில்லாம விடுதியை நடத்தலாம்.” 

சரியாகத்தான் சொல்கிறாள் என்று அந்த நேரம் சபியா தலையாட்டினாலும், மனம் என்னவோ அதற்கு இசைவாக ஆட மறுத்தது. அவனுடைய பார்வைதான் காரணமோ? 

இரண்டு நாட்களுக்குப் பிறகு பஷீர் மீண்டும் கார் எடுத்துக் கொண்டு வந்தான். அது இயல்பான வருகை என்று சபியாவின் மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. 

மூன்றாவது முறையாக அவன் வந்த போது கருமேகத் திட்டுகளாகப் பெரிய மூட்டம். சபியாவுக்கு மட்டுமல்ல, மொத்த விடுதிக்குமே! 

“சபியா, நீ அதிர்ஷ்டக்காரப் பொண்ணு…இல்லேண்டா இந்த பஷீர் உன்னைய நிக்கா பண்ணிக்கத் துடிக்குமா? நானும் நல்லா யோசிச்சுப் பாத்தாச்சு. நீ என்ன சொல்றே?” 

ஆயிஷா கேட்டாள். மூன்று முறை பஷீர் விடுதியைத் தேடி வந்தது தனக்காகத்தான் என்பதை உணர்ந்திருந்தும் கூட, ”கல்யாணமா? எனக்கா?” என்று துடிப்போடு கேட்டாள். 

“ஆமா, சபியா! உன்னைய வெளியே அனுப்புறதுக்கு மனசு இல்லே. ஆனா வலிய வர்ற அதிர்ஷ்டத்துக்கு நாங்க தடையா இருக்கப்புடாது, பாரு நாள் குறிக்கிறதுதான் பாக்கி…”

”இல்லே. அவர்கிட்டே நான் பேச வேண்டிய பாக்கியும் இருக்கு!” என்றாள் சபியா. 

அதற்கும் ஏற்பாடாயிற்று. அனாதைக் குழந்தைகளின் விடுதியில் அவர்களோடு ஒருத்தியாக இருக்கும் தன்னை அவன் விரும்புவது சரியல்ல என்று எடுத்துச் சொன்னாள். தன்னை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் அவன் வீட்டாருக்கு இல்லாமல் போகலாம் என்றாள். 

பஷீர் எதற்கும் பிடி கொடுக்கவில்லை. வெளிநாட்டில் தொழில் புரிகிறவன் என்பதால் அவளையும் அழைத்துப்போய் விடுவதாகச் சொன்னபோது சபியா மௌனமானாள். 

மணமாகி மலரும் மஞ்சமுமாக ஓர் அந்தரங்கமும் ஆவலும் ததும்பிக் கொண்டிருந்தபோது, கூடவே ஓர் அந்நியமும் குமிழியிடத் தொடங்கியதை சபியா உணர்ந்தாள். பஷீரைத் தவிர முகம் கொடுத்துப் பேசுகிறவர்கள் இல்லாமல் போனபோது, கத்தி முனையில் நடப்பது போல் நலிந்தாள். 

‘ஊர் பேர் தெரியாத ஒரு எத்தீமை -அனாதையைக் -கூட்டியாந்துருக்கானே…!’ -மகனின் செயலை நிந்தித்தாள் சபியாவின் மாமியார், மற்றவர்களின் பிலாக்கணமும் அதற்குக் குறைந்ததாக இல்லை. 

தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள அதிக நாள் பிடிக்கவில்லை. முறையிட முடியுமா கணவனிடம்? இல்லை. வாய்திறக்கவில்லை சபியா. ஆனால் பஷீரின் தாகமும் மோகமும், வேகமும், ரசனையும் குறைந்ததாக இல்லை. தன்னை அவன் விரும்பிய காரணம் கண்கூடாகப் புரிந்தது அவளுக்கு. 

பயணம் புறப்படும் நாள்வரை பஷீரின் பிடி நழுவவில்லை. சீக்கிரமே திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டு அவன் புறப்பட்ட பிறகு, தன்னுடைய தனிஅறை எத்தனை பெரிய சிறை என்பதை உணர ஆரம்பித்தாள் சபியா. மாமியாரும் மற்றவர்களும் தொடுத்த கணைகள் அவள் நெஞ்சைத் துளைத்துக் குருதி கொட்ட வைத்தன. ஊமைக் காயங்கள், உள்ளுக்குள் ரணங்கள்… 

நான்கு மாதம் நரகத்தில் இடர்ப்பட்ட மாதிரி இருந்தது. பஷீரிடமிருந்து ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கடிதங்கள். அப்புறம் சரளமும் சவுஜன்யமும் அற்றுப்போயின. 

இறுகிப்போன முகத்துடன் அவன் திரும்பி வந்தான்.

“சபியா, நீ இப்படில்லாம் நடந்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கலே!” 

“எப்படில்லாம்?” 

“உன்கிட்டே ஒப்பிக்கணுமா? அம்மாவும் தங்கச்சிங்களும் லெட்டர்லே எல்லாத்தையும்…” 

“எனக்கு ஒண்ணுமே தெரியாது.” 

“எனக்குத் தெரிஞ்சாச்சு. அது போதும்!” ஒரு வாரத்தில் நெருக்கடி முற்றியது. 

“சபியா, நடந்தவரைக்கும் சரி.. நான் முடிவுக்கு வந்தாச்சு.”

‘‘எதுக்கு?” 

“நாம வாழ்ந்தது போதும்!” 

சபியா மருண்டு போனாள். 

“வேறவழியில்லே…நாம பிரிஞ்சிட வேண்டியதுதான். சட்டப்படி ‘தலாக்’ கொடுத்திடறேன்.” 

நடுங்கி நின்றாள். 

“அப்படிச் சொல்லாதீங்க…” 

“அதைத் தவிர மார்க்கம் இல்லே.’ 

“நான் விலகிப் போயிடறேன். கண் காணாத எடத்துக்குத் தள்ளிப் போயிடறேன். ஆனா ‘தலாக்’ சொல்லிடாதீங்க. உங்க பாதையிலே குறுக்கிடாமெ, சொந்த பந்தம் கொண்டாடாமெ, தொலை தூரத்துக்குப் போயிடறேன்…” 

பஷீர் அவளுக்காக இரங்கவில்லை. இறங்கி வரவில்லை. அபலையாக வெளியேறினாளே, எத்தனை பெரிய கொடுமை! சபியாவின் தனியுலகம் இப்பொழுது சலனப்பட்டிருக்கிறது. 

எதிர்பாராத அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து எந்த நிமிஷமும் அவன் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. சபியாவைச் சந்தித்துப் பேசவேண்டுமாம்… 

ஆயிஷா அம்மாளுக்கு நிலவரம் தெரிந்து விட்டது. ‘வந்தால் சந்திப்பாயா, பேசுவாயா?’-பார்வையாலே கேட்டு விட்டு, சபியாவின் மௌனத்தையே சம்மதமாகக் கருதியவளாக நகர்ந்து போனாள் அந்த அம்மாள். 

பஷீர் வந்தாயிற்று! 

தனி அறையில் பலநாள், பல இரவுகள் உறவு கொண்டாடி – உணர்ச்சிகளைப் பிணைத்துத், தணித்துக் கொண்டிருந்தும்கூட, மூன்று வருஷத்துக்குப் பிறகு இப்பொழுது அவனைச் சந்திக்கும் போது சபியாவின் கண்ணும், மனமும், மெய்யும் கூசுகின்றன. 

“சபியா! என்பேர்லே வெறுப்பும் விசனமும் இருக்கும்… நியாயம். ஆனா, இந்த மூணு வருஷத்திலே நான் முழுசா மாறிட்டேன். எவ்வளவோ நடந்து போயிட்டது.”

அவன் பேச்சைக் கேட்டபடி நிலத்தையே வெறித்துப் பார்க்கிறாள் சபியா. 

“எடுப்பார் கைப்பிள்ளையா இருந்திட்டேன்! அம்மாவும் மத்தவங்களும் ஆட்டி வச்சிட்டாங்க. அதனாலே அநியாயமா உன்னைய இழந்துட்டேன். இப்ப நானும் ஓர் அனாதையா ஆனமாதிரி…” 

அவன் பேசிக் கொண்டிருந்தான். அவள் விவரம் கோரவில்லை. 

”சபியா, நான் சொல்றதெல்லாம்…” நிமிர்ந்தாள்.

“நான் ஒண்ணு கேக்கலாமா?” 

தலையாட்டினாள். 

“தப்பு நடந்து போச்சு. தண்டனையை அனுபவிச்சுக்கிட்டிருக்கேன் சபியா…! பிழை பொறுத்துக்குவியா, சபியா? இப்ப ஒரு முடிவோடதான் வந்திருக்கேன்…” 

பாவனையினாலேயே சொல்லச் சொன்னாள். 

“மறுபடியும் உன்னைய நான் அடையணும், சபியா! புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கணும், சபியா…” 

நேருக்குநேர் பார்த்தாள். 

“அது அவ்வளவு சுலபமா?” 

“நீ மனசு வச்சா…” 

”யார் மனசு வச்சாலும் எதுவும்…”

“உன்னைய வதைச்சுடாதே, சபியா…” 

“இல்லே. நீங்கதான் வதைக்கிறீங்க. இன்னொரு பாதகத்துக்கு எண்ணெய் வார்த்துத் தூண்டி விடுறீங்க…” 

“அப்படில்லாம் சொல்லாதே சபியா! பாதகத்துக்குப் பரிகாரம் தேடத்தான் வந்திருக்கேன். ” 

“எது பரிகாரம்…? உங்களுக்கு நான் மறுபடியும் வாழ்க்கைப்படணும்னா இடையிலே இன்னொருத்தனுக்குப் பெண்டாட்டியாகணும். அவனோட மஞ்சத்தைப் பகிர்ந்துகிட்டு தாம்பத்தியம் பூர்த்தியானதும், அவனாலே ‘தலாக்’ சொல்லப்படணும். இது சட்டம்.. ஆமா, உங்களை நான் அடையறதுக்காக ரெண்டாவது முறையா வேறொருத்தனுக்கு நான் தாரம் ஆகணும், அவன் கிட்டேருந்து ‘தலாக்’ வாங்கணும்… இதைச் செய்யச் சொல்றீங்களா. இல்லே சட்டத்தை மீறச் சொல்றீங்களா?”

சபியாவின் குரலில் பிசிறு இல்லை. 

“சபியா, நான்…நான்…” – அவனால் பேச முடியவில்லை. “அந்த சட்டம் சரியான சட்டம்தான்! விவாகரத்துங்கிறதை விளையாட்டா நெனைச்சி, சட்டையை மாத்திக்கிற மாதிரி சுட்டின மனைவியை மாத்திக்கிறவங்க இருக்கறப்ப அந்த சட்டம் அவசியந்தான். இப்ப, சொல்லுங்க.. உங்களை மறுபடியும் அடையறதுக்கு முன்னாடி இன்னொருத்தனுக்கு நான் தற்காலிகமா சுகம் கொடுத்துட்டு விடுதலை வாங்கிட்டு வரணும்னு எதிர்பார்க்கிறீங்களா? சொல்லுங்க…இப்ப நீங்க ஒரு தரகரா வந்து நிக்கிறீங்களா…இல்லே…?” 

சபியா முடிக்கவில்லை. பஷீர் விக்கித்து நின்றான் 

“போயிட்டு வாங்க… பிரச்சினை இல்லாத இந்த இடத்திலே பிரச்சினையைப் புகுத்த வேணாம்! என்னை மாதிரி பெண்களைச் சலனப்படுத்தாதீங்க… சஞ்சலப்படுத்தாதீங்க. போயிட்டு வாங்க!” 

சபியா புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு திரும்பினாள். 

– 1980, இதயம் பேசுகிறது.

– சாயல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1983, தமிழ் மன்றம். கல்ஹின்னை, கண்டி. 

jmsali ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *