கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 118 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 13

வயல்வெளியிலிருந்து வந்துவிட்டார் அப்பா.

வீட்டில் மகளையும் பேத்தியையும் கண்டதும் முகத்தில் ஆனந்தம் ஒரு புறமும், அதிர்ச்சி மறு புறமும் விரவியது.

“அறுத்துக் கட்டிக் கிட்டு வந்திருக்கா…” அம்மாவின் குரல் ஆத்திரமாக வந்தது.

அப்பா ஏதும் கேள்வி கேட்கவில்லை.

“சாப்டியாம்மா?”

“சாப்ட்டேம்ப்பா”

“உன்னோட திட்டம் என்ன?”

“குட்டிம்மாவை ஒரு நல்ல நிலைக்கு உயர்த்தணும்ப்பா.”

“அதுக்கு என்ன செய்யப் போறே?”

பாப்பாவுக்கு விவசாயத்துல ஆர்வம் இருக்கு. விவசாயச் சூழல்ல வளர்க்கறதுதான் நல்லது’ என்று, மருதுவர் சொன்ன அனைத்தையும் அப்பாவிடம் சொல்லி முடித்தாள் வஸந்தா.

ஓ கே .. அப்படியே செய்துடுவோம். டாக்டர் சொன்ன ‘சிறிய பேராசிரியர் குறைபாடு’ பற்றி கூகுள் செய்து பார்த்தா நிறைய விவரங்கள் கிடைக்கும். ஆனா அதுபோல கூகுள் சொல்ற விஷயத்தை வெச்சிக்கிட்டு செய்யற எந்த அணுகுமுறையும் வெற்றிகரமா அமையாதுங்கறது என்னோட கருத்து வஸந்தா.

“நானும் அதை ஒத்துக்கறேன்ப்பா.”

“அப்படின்னா ஒண்ணு செய்யி. என் பெட்டீல இருக்கற உன்னோட ப்ளஸ் டூ டாகுமெண்ட்ஸ், பிஜி டிகிரி, மார்க் லிஸ்ட், டிசி எல்லாத்தையும் சரிபாத்து எடுத்துக்கோ, மெட்ராஸ் யுனிவர்சிடி வரைக்கும் போய், தொலை தூரக் கல்வீல எம் ஏ சைக்காலஜி கோர்ஸ்ல ஸ்பாட் அட்மிஷன் போட்டுட்டு வந்துருவோம்.”

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவள் கண்களிலிருந்து நன்றிக் கண்ணீர் ஊற்றெடுத்தது.

“உங்களாலத்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்ப்ப “அ…ப்…பா…” என்று அவர் தோளில் வந்து சாய்ந்து கொண்டாள் வஸந்தா.

கோர்ஸ் சேர்ந்து படிச்சா, கான்ட்டாக்ட் செமினார் வகுப்புகள்ல, அடிப்படைலேர்ந்து பல விஷயங்களைச் சொல்லித்தருவாங்க. நம்ம பாப்பாவோட நிலைமையையும் பேராசிரியர்கள்கிட்டே சொன்னா ரெமடி சொல்லுவாங்க. கோர்ஸ் படிக்கறதுனால, அந்த ரெமடியை எப்படி அணுகணும்னும் நமக்குத் தெரியும். எல்லாத்தையும் உத்தேசிச்சித்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்…”

அப்பாவின் அணுகுமுறையைக் கண்டு பிரமித்துவிட்டாள் வஸந்தா.


‘டிகிரி படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தபின், ஏன் காலத்தைக் கடத்த வேண்டும்…’ என்று உடனடியாக செயலில் இறங்கினர் வஸந்தாவும் அவள் அப்பாவும்.

“குழந்தையைப் பாத்துக்க. யுனிவர்சிடி வரைக்கும் போயிட்டு வந்துர்றேன்.” என்றார் வஸந்தாவின் அப்பா.

வஸந்தாவை பேக் செய்து கணவன் வீட்டுக்கு அனுப்பும் நோக்கத்தில் இருந்த அம்மாவிற்கு, அப்பாவின் முடிவு அதிர்ச்சி அளித்தது. அதே சமயம், ‘அவர் ஒரு முடிவெடுத்துவிட்டால் தெய்வமே வந்தாலும் அதை மாற்ற முடியாது…’ என்பதை அனுபவத்தில் நன்கு அறிந்த அம்மா எதுவும் எதிர்வினை புரியாமல் பேசாமல் இருந்து விட்டாள்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், சேப்பாக்கத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு, லோக்கல் ரயிலில் ஏறி, சேப்பாக்கம் இறங்கி, பல்கலைக் கழகத்தில் ஸ்பாட் அட்மிஷன் முடித்து, தொலை தூரக் கல்விப் பிரிவில் எம் ஏ சைக்காலஜி மாணவி, என உறுதி செய்யும் பல்கலைக் கழக இலச்சினையிட்ட அடையாள அட்டையும், முதல் பருவத்துக்கான ஐந்து பாடப்புத்தகங்களையும் பெற்று, வீட்டுக்குத் திரும்பும் வரை, அப்பாவும் மகளும், பலப் பல விஷயங்களைப் பேசினார்கள். அப்பாவின் அறிவார்ந்த பேச்சுக்களும், அனுபவப் பகிர்வுகளும் வஸந்தாவுக்கு அபரிமிதமான நம்பிக்கையை ஏற்படுத்தியது.

நிறைய திட்டங்களைப் பற்றி விவாதித்தார்கள்.

வானத்தில் கோட்டை கட்டாமல், தங்கள் சக்திக்கு உட்பட்டு, தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பற்றிப் பேசி முடிவெடுத்தார்கள்.


“அழறது எந்த விதத்துலயும் பிரச்சனைக்குத் தீர்வாகாது ராஜேந்திரா.” என்றாள் மேனேஜர் மலர்.

நகைத் திருட்டுச் சம்பவத்துக்குப் அதை மறைப்பதற்காக வீட்டில் எப்படியெல்லாம் தாறுமாறாக நடந்து கொண்டதையும், உச்ச பட்சமாக, முதல் நாள் மனைவி வஸந்தாவோடு மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட மோசமான நிகழ்வுகளையும், அவள் மொத்தமாகத் தன்னை தலைமுழுகிவிட்டுச் சென்றதையும் கூறி கண் கலங்கினான் ராஜேந்திரன்.

“ராஜேந்திரா, நீ நிரபராதினு எனக்குத் தெரியும். சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் உனக்கு எதிரா செயல்படறதுனால கொஞ்சம் நிதானமா அணுக வேண்டியிருக்கு. எல்லாம் சரியாயிரும். கவலைப்படாதே…” என்று ஆறுதல் கூறியதோடு, போன் போட்டு உன் மனைவியோட பேசி அவளுக்கு நிலைமையைப் புரிய வை.” என்றும் சொன்னாள் மலர்.

“ஹலோ மிஸ்டர் ராஜேந்திரன். உங்களை மொத்தமா தலை முழுகிட்டு இங்கே என்னோடயே இருக்கற முடிவுல வந்துட்ட வஸந்தா, உங்க கிட்டே பேச விருப்பமில்லைனு உறுதியா சொல்லிட்டா. இனிமே போன் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்க.” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு கட் செய்து விட்டார் வஸந்தாவின் அப்பா.

“மாப்ளே மாப்ளே…” என்று பாசத்தோடு பேசும் அவரே இந்த அளவுக்கு வெட்டிப் பேசுகிறார் என்பதைப் யோசித்தபோது, இனி எவரிடமும் பேசிப் பயனில்லை என்பதை முடிவு செய்து கொண்டான்.

வங்கித் தலைமை நகைத் திருட்டு விசாரணையைத் தீவிரப் படுத்திய நிலையில், ராஜேந்திரனை தற்காலிகப் பதவி நீக்கம் செய்து ஆணை பிறப்பிக்க உத்தரவிட, அதை உடைப்பதற்காக மலர் தலைமை அலுவலகத்திற்குச் சென்று, பேசி, பதவி நீக்கம் என்றில்லாமல், சம்பளமில்லா விடுப்பில் அனுப்பினாள்.

வஸந்தா, குழந்தை இருவரும் இல்லாத வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை ராஜேந்திரனுக்கு. ஒரு முறை சிறுகுடிக்குப் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று சென்றான்.

தெருவிலேயே நிறுத்தித் திருப்பி அனுப்பினார் முன்னாள் மாமனார்.

தன்னுடைய கடந்த காலத் தவறுக்குப் பிராயச்சித்தமாக தனித்து வாழத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டான் ராஜேந்திரன்.

மலர், ராஜேந்திரனை குற்றச் சாட்டிலிருந்து வெளிக் கொண்டு வர பிரம்மப் பிரயத்தனம் எடுத்தாள். பல முறை டெல்லி, கல்கத்தா என்று சேர்மேன் வரை பார்த்தாள்.

அவள் வெளியூர் செல்லும் நேரங்களிலெல்லாம் ராஜேந்திரன்தான் மலர் வீட்டுக்கும், மலர் மகனுக்கும் காவல்.

வெறுமையில் இருந்த ராஜேந்திரனுக்கு, மலரின் மகனோடு இருப்பது ஒரு மன ஆறுதலைத் தந்தது.


“காலேஜ்ல படிச்ச நீங்க போயி நாத்து பறிக்க நிக்கறது நல்லாவா இருக்கு…?” ஜோதி கேட்க,

“அதானே… நீங்க நாத்து பறிக்கறதாவது. பேசாம பாப்பாவோட அந்த மரத்தடீல குந்துங்க அம்மணி” என்றாள் வேணி.

“எல்லாரும் கேட்டுக்கங்க. என்று தொடங்கி, இந்த வயல் எங்க அப்பாவுக்குத்தான் சொந்தம். மொதலாளி மகளா நான் இங்கே வரல்லை. ஒரு லேபரா வந்திருக்கேன். புருசனோட ஒத்து வரலை. நான் தனியா நின்னு குழந்தையை வளர்த்து ஆளாக்கறேன்னு சவாலோட இங்கே வந்துருக்கேன். எங்க அப்பா வயல்ல மட்டுமில்ல. ஊர்ல எங்கே நாத்து பறி, நடவு, களையெடுப்பு, அறுப்பு, போரடி னு எந்த வேலையா இருந்தாலும் என்னையும் சேத்துக்கணும்னு உங்க எல்லாரையும் கேட்டுக்கறேன்.” தெளிவாக அனைத்தையும் உடைத்துப் பேசினாள் வஸந்தா.

வஸந்தா சொல்ற மாதிரி, அவளையும் உங்களோட ஒருத்தரா சேத்துக்கங்க.” என்று வழி மொழிந்தார் வஸந்தாவின் அப்பா.

அனைவரும் அதைப் புரிந்து கொண்டாலும், முதலாளியின் மகள் தங்களோடு சேர்ந்து வேலை செய்வதை நினைத்து சற்றே கூச்சப் பட்டார்கள்.

“நாத்துப் பறிக்கு வந்தீகளா…

காத்து வாங்க வந்தீகளா…

சேத்துல இறங்கிடுவோம்…

நாத்துப் பறிச்சிடுவோம்…

என்று பலமாகப் பாடியபடி வஸந்தா முதலில் வந்து வயலில் இறங்க, மற்ற கூலியாட்களும் கூச்சம் தெளிந்து சேற்றில் இறங்கினார்கள்.

தன் சொந்த வயலிலேயே விவசாயக் கூலியாக இறங்கி வேலை செய்யும் வஸந்தாவை எல்லோருமே நேசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பாட்டும், குலவையுமாக வயலில் வேலை செய்யும்போது ஜனனி சந்தோஷமாக சிரித்து விளையாடினாள்.

தாத்தா சின்னக் குழந்தைதானே என்று பார்க்காமல், ஜனனிக்கு விவசாயத்தைப் பற்றியெல்லாம் சீரியஸாக சொன்னார்.

நாற்று பறி, நடவு, களை எடுத்தல், அறுப்பு, கட்டு கட்டுதல், கட்டு அடித்தல், தூற்றுதல், வைக்கோல் போர் போடுதல், உழவு, பரம்படித்தல், வரப்பு வெட்டுதல் வருடக் கணக்கில் அனைத்து விவசாய வேலைகளையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தாள் ஜனனி.


சைக்காலஜி படிப்பு ஒரு புறம் காண்ட்டாக்ட் செமினார் வகுப்புகள், பிராக்டிகல் வகுப்புகள், ரெக்கார்ட் எழுதுவது, வைவா ஓசி என்கிற நேர்முகத் தேர்வுகள் என போய் கொண்டிருக்க, நேசித்துப் படிக்கும் வஸந்தாவுக்கு நிறைய விஷயங்கள் கிடைத்தன.

நூலகத்தில் குறிப்பெடுத்தலும், கூகுள் செய்து பார்ப்பதுமாக, ஆழ்ந்து படித்து அறிவை விரிவு செய்வதும், அகண்டமாக்குதலுமாக முன்னேறினாள் வஸந்தா.

உடலுழைப்பும், மூளை உழைப்பும் சமச்சீராக வளர்ந்தன வஸந்தாவிற்கு. தன் வளர்ச்சியின் சாரத்தை ஜனனிக்குள் கடத்தினாள்.

நல்ல அடிவாரம் போட்டதால் தொடக்கக் கல்வியை சிறப்பாகக் கடந்த ஜனனி பள்ளிக் கல்வியின் போது, அறிவியல் கழகம் நடத்திய கண்டுபிடிப்புகள் நிகழ்வில், ஊடு பயிர் பற்றி ஆய்வு செய்து, சமர்ப்பித்த கட்டுரை மாநில அளவில் தேர்வாகியது.

வானமே எல்லையாய் உயர்ந்து கொண்டே இருந்தாள் ஜனனி.


வருடக் கணக்கில போராடி, உண்மையான குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்ததோடு ஒரு வழியாக ராஜேந்திரனின் மேல் இருந்த களங்கத்தையும் போக்கி, வங்கி நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்த சம்பள அரியர் அனைத்தையும் பெற்றுத் தந்தும் விட்டாள்.

இந்த நிலையிலும் ஒரு முறை வஸந்தாவோடு தொலைப் பேசியில் பேசிப் பார்த்தான் ராஜேந்திரன். இப்போதும் முன்னாள் மாமனாரேதான் பேசினார். அவள் திட்டத்தில் ஏதும் மாற்றமில்லை என்பது உறுதியானது.

குடும்பத்திலும் உத்யோகத்திலும், நிறைய அவமானங்களைப் பெற்றுவிட்டதால் இதே கிளையில் பணியாற்ற விரும்பமில்லாமல், மலர், ராஜேந்திரன் இருவருமே கோயம்புத்தூர் கிளைக்கு மாற்றல் வாங்கிச் சென்றார்கள்.

தனியாக வீடு பிடிக்கும் வரை மலர் வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று எண்ணிய ராஜேந்திரனுக்கு அங்கேயே தொடர்ந்து தங்கி அவள் மகனுக்கு ஒரு பாதுகாவலனாக இருக்குமாறு செய்தது விதி.

மலர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போக. அவள் மகனை வளர்க்கும் பொறுப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் ராஜேந்திரன்.

அத்தியாயம் – 14

சிறுகுடி கிராமத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன் தன் துவக்கக் கல்வியைத் தொடங்கிய ஜனனி, உலகம் போற்றும் கண்டுபிடிப்பை அர்பணித்த புகழ் பெற்ற விஞ்ஞானியாக, அதே பள்ளி வளாகத்துக்கு, இப்போது ராஜ மரியாதையுடன் வருகிறாள்.

இந்த இருபது ஆண்டுகளில் ஜனனியின், தோற்றமும், ஆளுமையும், வாழ்க்கைத் தரமும் உயர்ந்ததைப் போலவே, பள்ளியின் தோற்றமும், உட்கட்டமைப்புகளும் வெகுவாக மாறியிருந்தன.

அன்று ஓட்டுக் கட்டடத்தில் இயங்கிய பள்ளி, இப்போது கான்கிரீட் ஒட்டுக் கட்டடத்தில் இயங்குகிறது.

அது மட்டுமா, ஜனனி படித்தபோது, ஓராசிரியர் பள்ளியாக இருந்த நிலை மாறி இப்போது நான்கு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியாக உயர்ந்திருக்கிறது.

பள்ளி முகப்பில், மரவட்டைமேல் இருப்பது போல, கருப்பும் சிகப்புமாகக் கோடுகள் போடப்பட்டு, கூராகச் சீவப்பட்ட நடராஜ் பென்சில் ஒன்றில், கூர் பக்கம் ஒரு சிறுமி, வலது கையில் புத்தகத்தோடு அமர்ந்திருக்க,

பென்சிலின் பின்புறம் ஒரு சிறுவன் வலது கையால் தம்ஸ் அப் காட்டியபடி அமர்ந்து, சந்தோஷமாக பென்சில் பயணம் செய்யும் சர்வ சிஷ்ய அபியான் பேனர், அனைவர்க்கும் கல்வி’ என்பதை அறிவித்துக் கொண்டு நின்றது.

இரண்டு நாட்களாகவே சிறுகுடி கிராமம் பரபரப்பாகத்தான் இருக்கிறது.

அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், துணை மாவட்ட ஆட்சியர் , வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர், மந்திரி என அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கே வந்து செல்வதால், தூய்மைப் பணியானது ஓயாமல் நிகழ்ந்து கொண்டேதான் இருந்தது.

குளோரினை கூடையில் கொட்டி குறிப்பிட்ட இடைவெளிகளில் தட்டி, போடப்பட்டிருந்த குளோரின் கோலங்கள் சாலையின் இரு புறங்களிலும் பளிச்சிட்டன.

பள்ளி முகப்பிற்கு இருபது அடிகள் முன் குமரக் கோவில் செல்லும் குறுக்குச் சாலை இருப்பதால், பள்ளி முகப்பிலேயே சாலை நடுவிலேயே விழா மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டு, மேடை அமைப்புப் பணிகள் துரித கதியில் நடை பெற்று வந்தன.

பள்ளி நிர்வாகம், ஊர் பிரமுகர்கள், கட்சிக்காரர்கள், தொழிலதிபர்கள், வணிகர் சங்கத்தினர், மகளிர் கழகம், மாவட்ட அறிவியல் கழகம் என ஒவ்வோர் அமைப்பும் தனித்தனியாகத் தயாரித்த பெரிய பெரிய பேனர்கள் வரிசையாக, சாலையின் இரு புறமும் நின்று கவனத்தைக் கவர்ந்தன.

ஜனாதிபதி கையால் கோப்பை வாங்கும் ஜனனி;

ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யும் ஜனனி;

பிரதமருடன் ஜனனி;

ஆளுநருடன் ஜனனி;

மாநில முதல்வருடன் ஜனனி;

என, பலதரப்பட்ட புகைப் படங்களை பின்னணியாக வைத்து விழா வளாகத்தை அலங்கரித்தது ஜனனிக்கு மட்டுமில்லை. அந்த ஊருக்கே பெருமை சேர்த்தது.

சிறுகுடி கிராமத்தில் மட்டுமல்ல.

அருகாமை கிராமங்களில் இருந்தெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து ஜனனியின் சாதனைகளையும், சிறுகுடி கிராமத்துக்கு ஜனனியால் கிடைத்த பெருமையை எல்லாம் கூறினார்கள்.

“ஜனனி போல வாழ்க்கைல உயரணும்…”

“ஜனனி மாதிரி பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கணும்…”

““ஜனனிய ரோல் மாடலா எடுத்துக்க. சரியா?…”

“ஆடிசம் குறைபாட்டால பாதிக்கப்பட்ட ஜனனியே இவ்ளோ சாதித்திச்சிருக்கும்போது, எந்தக் குறைபாடும் இல்லாத நீ எவ்ளோ சாதிக்கலாம்..?.”

“சாதிக்கணும்கற வெறி இருக்கணும். கவனத்தை ஏதாவது ஒரு துறைல குவிக்கணும். கவனச் சிதறல் அறவே கூடாது. பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை…”

இப்படியாக, ஜனனி, வருங்காலக் குழந்தைகளுக்கு உதாரணமாகவும், ரோல் மாடலாகவும் ஆகிப்போனாள்.

ஊரெங்கும் ஜனனி ஜனனி என்பதே பேச்சு.

ஊரெங்கும் ஒட்டப்பட்ட வால் போஸ்டர்களில் ஜனாதிபதியுடன் சிரித்தாள் ஜனனி.


சிறுகுடி கிராமத்தில், ஜனனியின் பாட்டி தாத்தா வீடு, திரு மண வீடு போலக் களைகட்டியிருந்தது.

பாட்டியும் தாத்தாவும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

“உங்க பேத்தியால ஊருக்கே பெருமை…” என்று பாராட்டும்போதொல்லாம் உள்ளம் பூரித்தார்கள். புளகாங்கிதம் அடைந்தார்கள்.

வீட்டிற்கு வந்தவர்களை அன்பாக சிறப்பாக வரவேற்று, விருந்து உபசரித்தார்கள்.

தன் மகளை சான்றோர் எனக் கேட்ட தாயான வசந்தாவிற்கு மகிழ்ச்சி எல்லைகடந்து விரவியது.

தேனீயைப் போல சுறுசுறுப்பாய், வந்த விருதாளிகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா, நீங்க உட்காருங்க, வேலை செய்யத்தான் நாங்க இருக்கமே…” என்று அவ்வப்போது வந்து யாராவது சொல்லும்போது, மகளால் கிடைத்த மதிப்பை நினைத்து மகிழ்ந்தாள்.

“ஜனனி இன்னும் அரை மணீல பயணியர் மாளிகைக்கு வந்துருவாங்களாம். அவங்க வர்றதுக்கு முன்னால உங்களை அழைச்சிக்கிட்டுக் கொண்டு போய் விடச் சொல்லி கலெக்டர் உத்தரவு.”

பளிச் எனச் சீருடை அணிந்த காரோட்டி வஸந்தாவின் முன் வந்து நின்றான்.


“சென்னைலேர்ந்து கிளம்பிட்டாங்களா?”

“எத்தனை மணிக்கு வர்றாங்க?”

“ஆன் தி வே. இன்னும் ஒன் அவர்ல வந்துருவாங்களாம்…”

“வீட்டுக்கு வந்துருவாங்களா நேரா…”

“நோ நோ டிராவலர்ஸ் பங்களா இருக்கில்ல அதுலதான் தங்கவைக்கப் போறாங்களாம்.”

“ஏன்? வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்தா என்னவாம்…?” யாரோ வினவ,

“உறவினர் நண்பர்கள்னு எல்லாருமே அவளைச் சுத்திக்கிட்டு டயர்டா ஆக்கிருவாங்க. பயணியர் மாளிகைல தங்கினா, அவளைப் பார்க்க யாரையும் அனுமதிக்காது பாதுகாப்பு போலீஸ். ஜனனி நல்லா ரெஸ்ட் எடுக்கலாம். அங்கேயிருந்து ஃப்ரஷ்ஷா விழா மேடைக்கு அழைச்சி வரலாமே… அதுக்குதான்…”

யாரோ பதிலளித்தார்கள்.

“சரிதான் சரிதான்…” என்று எவரோ ஆமோதித்தார்கள்.

இப்படியாக ஜனனியின் சாதனைகள் பற்றி, ப்ரொக்ராம் பற்றி, விருது பெற்றது பற்றி, நடக்கப் போகும் விழா பற்றி எதையாவது வெள்ளந்தியாக பேசிக் கொண்டிருந்தார்கள் ஜனங்கள்.


பயணியர் மாளிகை

கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகள் உலகளாவிய சாதனை படைத்த வேளாண் விஞ்ஞானி ஜனனியை வரவேற்க பயணியர் மாளிகை வாயிலில் கூடினார்கள்.

கார் வந்து நின்றதும், டிரைவர் இறங்கி பின் கதவைத் திறக்க, ஜனனி இறங்கினாள்.

அம்மாவும், பாட்டியுமாக ஆரத்தி எடுத்தார்கள்.

பாட்டி ஆரத்தியில் இடது கை கட்டை விரலை முக்கி ஜனனியின் நெற்றியில் திலகமிட்டாள்.

ஜனனியின் கூடவே வந்த மார்த்தாண்டம், ஜனனியின் அம்மா மற்றும் தாத்தா பாட்டியின் முன் கை கூப்பி வணங்கினான்.

“ஜனனி, நான் பாண்டி வரைக்கும் போயிட்டு வந்துர்றேன்…” என்று கூற, மார்த்தாண்டம் தன் வளர்ப்புத் தந்தையை விழாவுக்கு அழைத்து வரப் போகும் திட்டத்தை முன்பே அறிந்தவளாதலால் “வாங்க…” என்று விடை கொடுத்தாள்.

மார்த்தாண்டம் சார். விழா தொடங்க இன்னும் ரெண்டு மணி நேரம்தான் இருக்கு. ஜனனிக்கு எல்லாமே நீங்கதான். நீங்க வர ஏதாவது காரணத்தால லேட் ஆயிட்டா, எங்க எல்லாருக்குமே மனசு கஷ்டமாயிரும். நீங்க இங்கே இருங்க. நாங்க யாராவது போய் அழைச்சிக்கிட்டு வரோம். அட்ரஸ் மட்டும் தாங்க போதும்.” என்றார் ஜனனியின் தாத்தா.

“பயப்படாதீங்க. ஒரு மணி நேரத்துல நான் திரும்பிருவேன்…” என்று சொல்லிவிட்டு, வேறு எவரேனும் ஏதாவது கருத்து சொல்வதற்கு வாய்ப்பே தராமல் இடத்தைக் காலி செய்தான் மார்த்தாண்டம்.

“விழா தொடங்க இன்னும் இரண்டே மணி நேரம்தான் இருக்கு. ஜனனியை யாரும் தொந்தரவு பண்ணாம தனியே விடுங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, விழாவுக்கு அவங்க தன்னை தயார் பண்ணிக்கணும்.” என்று சொல்லி ஊடகவியலாளர்கள் உட்பட யாரையுமே உள்ளே விடாமல் தடுத்து திருப்பி அனுப்பிவிட்டார்கள் காவலர்கள்.

தலைமை தாங்க வந்திருக்கும் ம்ருணாளிணி, மரியாதை நிமித்தம், பயணியர் மாளிகை வந்து ஜனனியை சந்தித்தாள்.

பார்த்தவுடன் ம்ருணாளிணியை அடையாளம் தெரியவில்லை ஜனனிக்கு. அவள் தோற்றத்தில் அவ்வளவு மாற்றங்கள்.

‘ம்ருணாளியின் கொள்ளை அழகு என்னவாயிற்று?;

எப்படி அந்த அழகு கொள்ளை போயிற்று?’ ஜனனியின் கண்களில் கேள்விக் கனைகள் தொக்கி நின்றதைப் பார்த்தாள் ம்ருணா.

ஜனனியின் இரண்டு கைகளையும் பற்றினாள் ம்ருணாளிணி, “என்னை மன்னிச்சேன்னு சொல்லு ஜனனி.” என்று அரற்றினாள்.

“நான் எதுக்கு உன்னை மன்னிக்கணும். பிஜி படிக்கும்போது நடந்ததையெல்லாம் இன்னும் நினப்புல வெச்சிக்கிட்டா இருப்பாங்க. ரிலாக்ஸ் ம்ருணா.” என்று தேற்றினாள் ஜனனி.

“உன்னோட ப்ராஜக்ட்டை திருடப் போய், என் காதலையும் பறி கொடுத்தேன். அப்பவும் நான் திருந்தலே. திருடின கை நிக்காதுனு சொல்வாங்கல்ல, ரிசர்ச் இன்ஸிடியூட்ல நான் கைடா இருந்தபோது ஒரு சிலரோட கண்டுபிடிப்புகளையும் திருடி வித்துருக்கேன். அப்படி வித்தப்போ ரெட் ஹாண்டடா மாட்டினதுக்குப் பிறகு, என்னோட கைடன்ஸ் கேரியரை ப்ஃரீஸ் பண்ணிட்டாங்க; மனிதாபிமான அடிப்படைல பதவியை பறிக்காம விட்டாங்க;

“…………”

“நான் செய்த பாவங்களுக்கு எனக்கு கிடைச்ச பரிசுதான் இந்த முடக்கு வாதம்.” ருமாடிக் அட்டாக் வந்து மடக்க முடியாது விரைத்து நின்ற கை விரல்களைக் காட்டியபடியே பேசினாள்.

“நான் பார்க்காத டாக்டரில்லே, செய்யாத வைத்தியமில்லே. யுனானி ட்ரீட்மெண்ட்ல மருந்து ஒத்துக்காம ஸ்கின் ரப்சர் ஆயிடுச்சு. அதான் இப்படி தோல் சுருங்கி…”

“………………” இதெற்கெல்லாம் என்ன பதில் சொல்வது எனத் தெரியாத ஜனனி அமைதியாக இருந்தாள்.

“சீனியாரிட்டில ரிசர்ச் இன்ஸ்டிடியூட்ல உயர் பதவீல இப்போ இருக்கேன்கறதுனால உன்னை ஹானர் பண்ண எனக்கு சான்ஸ் கொடுத்திருக்காங்க. அதே சமயம், உன்னை ஹானர் பண்ற தகுதி எனக்கு இருக்கா ஜனனி?” உடைந்து அழுதாள்.

கை கூப்பித் தொழுதாள்.

அவளின் உப்புக் கடல் பொங்கிக் கரை கடந்தது.

தன் நெஞ்சோடு மிருணாளிணியை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறித் தேற்றினாள் ஜனனி.

அத்தியாயம் – 15

மன்னித்தல் மனித குணம்.

இந்த மண் எப்போதும் மன்னித்தலுக்கே முன்னுரிமை தருகிறது. மன்னிப்பதற்கு மனசு மட்டும் இருந்தால் போதும், பெரிதாக ஞானமெல்லாம் தேவையில்லை.

இந்த மண்ணின் பிரதிநிதியான ஜனனி அனைத்தையும் மன்னித்தாள்.

அழுக்குகளைத் துடைத்தெறிந்ததும் பளிச்சிடும் கண்ணாடி போல இறுக்கமான சூழல் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தது.

இருவரும் முகம் கழுவி, மேக்கப் செய்துகொண்டார்கள்.

கல்லூரித் தோழிகளாய், மலரும் நினைவுளைப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ஜனனியின் அம்மா வஸந்தா, கதவைத் தட்டி சத்தப்படுத்திவிட்டு, உள்ளே வந்தாள்.

அம்மாவிடம் தன் அருகே இருந்த, வகுப்புத் தோழியும் இன்றைய விழாத் தலைவருமான மூத்த விஞ்ஞானி ம்ருணாளிணியை அறிமுகப்படுத்தினாள் ஜனனி.

தன் கதையை ஒன்றுவிடாமல் ஜனனியின் அம்மாவிடமும் கூறினாள் ம்ருணாளிணி.

மார்த்தாண்டம் ம்ருணாளிணியின் பழைய காதலன் என்பதையும், ஜனனிக்கு தீங்கிழைக்க நினைத்ததால் தன் காதலையே தியாகம் செய்தவன் என்பதையெல்லாம் அறிந்தபோது நெகிழ்ந்துபோனாள் வஸந்தா.


“இன்னும் விழா ஆரம்பிக்க ஒரு மணி நேரம்தான் இருக்கு. நாம இப்போ புறப்பட்டு கிராமத்துல உங்க தாத்தா பாட்டி வீட்டுக்குப் போய் அரைமணி நேரம் தங்கிட்டு, பிறகு அங்கிருந்து விழா வளாகத்துக்குப் போலாம்னு ப்ரொக்ராம் பண்ணியிருக்கேன் ஜனனி.”

ம்ருணாளிணி சொல்லிக் கொண்டே இருக்க, ஜனனி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ஏதோ யோசனையோடு இருந்தாள்.

“ஜனனி ஏன் திடீர்னு மூட் அவுட் ஆயிட்டே…?”

“மார்த்தாண்டம் ஒரு மணி நேரத்துல வந்துருவேன்னு சொல்லிட்டுப் போனாரு. இன்னும் வரல்லையேனு கவலைப் படறா ஜனனி.” என்று அவள் தாயார் வஸந்தா விளக்கம் தந்தாள்.

“மாரு எங்கேயாவது டிராஃபிக்ல மாட்டியிருப்பார் ஜனனி.” ஒரு ஃப்ளோவில் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் ம்ருணாளிணி.

“மிஸ்டர் மார்த்தாண்டம் விரைவா வந்துடுவார். கவலைப் படாதே.” என்று தேற்றினாள்.

“மார்த்தாண்டத்துக்கு உறவுனு இருக்கறது அவரோட வளர்ப்புத் தந்தை மட்டும்தானாம். கண்பார்வை இல்லாததனால, ஒரு முதியோர் இல்லத்துலதான் அவரை விட்டு வெச்சிருக்கேன்னு ஒரு முறை சொல்லியிருக்கார். அவர் கதை ரொம்ப பேதடிக்…” என்றாள் ம்ருணாளிணி

“அப்படியா? அவர் எதையும் காட்டிக்கிட்டதே கிடையாதே…”

“என்னை காதலிச்சப்போ, என்கிட்டே சொல்லியிருக்கார்.”

“அவருக்கு அப்பா அம்மா இல்லையா? ஏன்?”

அம்மா வயித்துல ஆறு மாசக் குழந்தையா மார்த்தாண்டம் இருக்கும்போதே, அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாராம். “

அடப்பாவமே…

“அம்மா?”

அவங்களும் போய் சேர்ந்துட்டாங்களாம். அவங்க அம்மா அதிகாரியா இருந்தப்போ எல்லாருக்கும் நிறைய உதவி செய்வாங்களாம். அப்படி அவங்களால பயனடைஞ்ச ஒருத்தர்தான், நன்றிக் கடனா இவரை வளர்த்தாங்களாம்.”

நம்பல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துல பி ஜி படிக்கற சமயத்துலதான் அவருக்கு டயாப்டீஸ் அதிகமாகி, குளூகோமா லெவல் ஏறி கண் பார்வை பாதிச்சி, முழுக்க பார்வை போயிருச்சாம்;

பார்வை போன பின்னால, ஆளு போட்டு வீட்லயே பாத்துக்கச் சொல்றேன்னு சொன்னப்போ, அதெல்லாம் வேண்டாம் என்னை முதியோர் ஹாஸ்டல்ல அவரை விட்டுருனு சொல்லியிருக்காரு.”

“…………”

கவலைப் படாதே ஜனனி விரைவா அழைச்சிக்கிட்டு வந்துருவார் கவலைப்படாதே.” என்று தேற்றினாள் ம்ருணாளிணி.

‘வாழ்க்கையில் இத்தனை இன்னல்களையும் கடந்து வந்தபோதிலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தனக்கு ஒரு காட் ஃபாதர் மாதிரியல்லவா இருந்திருக்கிறார் மார்த்தாண்டம்…’ என்று ஜனனி எண்ணிபோது அவள் கண்கள் குளமாயின.


‘மார்த்தாண்டம் எப்போது வருவார்’ என்ற எதிர்பார்ப்பைத் தவிர வேறு ஒரு சிந்தனையும் இல்லை இப்போது ஜனனிக்கு.

மாத்த்தாண்டம் வந்த பிறகுதான் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று ஜனனி உறுதியாகச் சொல்லிவிட்டதால், பாட்டி தாத்தாவை இங்கே வரச் சொல்லிவிட்டாள் ம்ருணாளிணி.

பாட்டியும் தாத்தாவும் விடுதிக்கு வந்தனர்.

ஜனனியை ஆரத் தழுவி முத்தமிட்டு அன்பைச் சொறிந்தாள் பாட்டி.

உச்சந்தலையில் கை வைத்து தன் உள்ளங்கைக்கு முத்தமிட்டு தன் பாசத்தைப் பொழிந்தார் தாத்தா.

மார்த்தாண்டம் அப்போதுதான் உள்ளே நுழைந்தார்.

அதைக் கண்டதும்தான் ஜனனிக்கு நிம்மதியே வந்தது.

“அப்பா எங்கே?” கேட்டாள் ஜனனி

“அப்பா கார்ல இருக்காரு. நேரமாச்சு சீக்கிரம் கிளம்பணும்… விழா மேடைல போய் பார்த்துக்கலாம். கிளம்புங்க” என்றான் மார்த்தாண்டம்.

“உள்ளே அழைச்சிக்கிட்டு வாங்க தம்பி. நாங்களும் அவரைப் பார்க்கணுமில்ல.”

ஜனனியின் பாட்டி, தாத்தா, அம்மா அனைவரும் ஒன்றாய்க் கேட்க, மறுக்க முடியவில்லை மார்த்தாண்டத்தால்.

நீங்கதான் அவரைப் பார்க்கலாம். அவரால் உங்களைப் பார்க்க முடியாது. நீங்க யாரும் இங்கே இருக்கறதாக் காட்டிக்காம இருக்கறதா இருந்தா அழைச்சிக் கிட்டு வரேன்…”

“சரி. நாங்க அமைதி காக்கறோம். அழைச்சிட்டு வாங்க என்றார்கள் அனைவருமே.”


பார்வையற்றவர்க்கான ஊன்று கோலை தரையில் தட்டிக் கொண்டே வர மார்த்தாண்டம் அவரை உள்ளே அழைத்து வந்தான்.

வஸந்தா, அவளின் பெற்றோர்கள் மூவரும் விரித்த கண்களை மூடவில்லை. அவரையே பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

வாய் மூடி, பேச வேண்டாம் என்று ஜாடை காட்டினான் மார்த்தாண்டம்.

பாட்டி தாத்தா அம்மா மூவரும் ஏன் இப்படி உரைந்து நின்றுவிட்டார்கள் என்பதற்குக் காரணம் ஏதும் தெரியவில்லை ஜனனிக்கு.

ஜனனி தனக்குப் பின்னால் மார்த்தாண்டத்தைப் பார்க்கத் திராணியற்று தலை குனிந்து மறைந்து நின்ற ம்ருணாளிணியை முன்னால் இழுக்க, எதிர் பாராமல் அவளை அங்கே பார்த்த மார்த்தாண்டம் அதிர்ந்தான்.

கண் பார்வையற்ற நிலையில் அருகில் வந்தவரின் கைகளைப் பற்றிக் கொண்டாள் ஜனனி. பற்றிய கைகளை விடுவித்து தன் கைகளால் அவள் கைகளை இறுக்கிக் கொண்டபின்…

“ஜனனி, ‘இந்தப் பயித்தியத்தை வெச்சி என்னால மாரடிக்க முடியாது”ங்கற வார்த்தையை நான் சொல்லியிருக்கவே கூடாது. என் போதாத காலம் என் வாயில அது போல வந்துடுச்சு;

உங்க அம்மா. உத்தமி. எனக்காக எத்தனையெத்தனையோ விட்டுக் கொடுத்தவங்க. கடைசியா அவங்கள இழந்துட்டு நின்னப்போதான், நான் வேலை பார்த்த பாங்க்ல வேலை மேனாஜரா இருந்த மலர் மேடம் எனக்கு அடைக்கலம் கொடுத்தாங்க.

நடுநடுவே இரண்டு மூன்று தரம் உன் அம்மாவுக்கு தூது விட்டப்பவும் கண்டிப்பா முறிஞ்சி போச்சுன்னு தீர்மானமாச் சொல்லிட்டாங்க.

மலர் மேடம் ஹார்ட் அட்டாக்ல திடீர்னு இறந்த பிறகு, மார்த்தாண்டத்தை வளர்க்கறதையே என் முழு நேர வேலையா எடுத்துக் கிட்டேன்.

ஆராய்ச்சி மாணவனா இருந்தப்ப உன்னைப் பத்திச் சொன்னதும், நான் நடந்த எல்லாத்தையும் அவன் கிட்டே சொன்னேன்.”

பார்வையற்ற அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது


கூடப் பிறக்காத அண்ணனாக இத்தனை நாள் தன்னை கண்ணின் இமைபோலக் காத்த மார்த்தாண்டத்தை அருகில் அழைத்து அவன் கையை தன் கையால் எடுத்தாள் ஜனனி.

அருகில் நின்ற ம்ருணாளிணியின் கையை இன்னொரு கையால் எடுத்து இருவரின் கைகளையும் இணைத்தாள்.

எத்தனை ஆண்டுகள் ஆனால்தான் என்ன? எப்படிப் பட்ட பிரச்சனைகள் வந்தால்தான் என்ன? உண்மைக் காதலுக்கு அழிவுதான் ஏது?

அம்மா, என்னைப் பெற்றெடுத்த தாய் பெயர் மலர். உங்க கணவர் ஒரு பெரிய கேஸ்ல மாட்டின பிறகு அந்த மன உளைச்சல்லே, உங்க கிட்டே ரொம்பக் கேவலமா நடந்துகிட்டதையும், ஆஸ்பத்திரீல உங்களை நிரந்தரமாப் பிரிய நேர்ந்த அந்த நாளையும் சம்பவங்களையும், இதுவரை எத்தனையோ ஆயிரம் முறை சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டிருக்காங்கம்மா…” என்று சொல்லி வஸந்தாவின் கைகளைப் பற்றினான்.

இவரையும் என்அம்மாவையும் இணைச்சி தப்பாப் பேசினவங்களையெல்லாம் பத்தி சிறிதும் கவலைப்படாம, பெரும் முயற்சி பண்ணி இவரை அந்த ஜோடிக்கப்பட்ட கேஸ்லேர்ந்து விடுவிச்சி நிரபராதினு வெளிக் கொண்டு வந்த என் அம்மாவுக்கு விசுவாசமா, என்னை இவருதான் உயர்வா வளர்த்தவர்ம்மா.” மார்த்தாண்டத்தின் கண்கள் பனித்தன.

மாப்ளே… என்று மாமனாரும் மாமியாரும் உணர்ச்சிவசப்பட்டு முழங்க, ராஜேந்திரனின் கையை மார்த்தாண்டம் எடுக்க, வஸந்தாவின் கையை ம்ருணாளிணி எடுத்துத்தர, இருவரும் சேர்ந்து அவர்களை சேர்த்து வைத்தார்கள்.

“விழாவுக்கு நேரமாச்சு கிளம்புங்க…”

விழாக் குழுத் தலைவர் வந்து பரபரப்பாய்க் கூற, அஇன்னோவாவின் முன்புறம் ஓட்டுநர் இருக்கையில் மார்த்தாண்டம் அமர,

“ம் அவரு பக்கத்துல போயி உட்காரு…” என்று ஜனனி உட்பட அனைவரும் ம்ருணாளிணியைப் பிடித்துத் தள்ள அங்கே மகிழ்ச்சி சிரிப்பலையாக எழுந்தது.

பின் இருக்கையில் தாத்தாவையும் பாட்டியையும் ஏற்றி விட்டாள் ஜனனி,

நடு இருக்கையில் நடுவில் அமர்ந்து கொண்ட ஜனனி, வலதுபுறம் அப்பாவை ஏற்றிக் கொண்டாள். அம்மா இந்தப் பக்கம் வந்து உட்காருங்க…” என்றாள்.

பிரிந்த எல்லோரும் இணைந்து ஒரே காரில் பயணித்து, விழா மேடைக்கு முன் வந்து நின்றபோது, உலகளாவிய விருதினை விட அதிக மகிழ்ச்சியில் திளைத்தாள் ஜனனி.

உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஜனனியின் கண்களிலிருந்து, உப்புக் கடல் பொங்கிக் கன்னத்தில் வழிந்தது…

இசைக் கடல் வேலூர் ராம்குமார் எழுதி இசை அமைத்த ‘ஜனனீ ஜெயம் நீ…’ எனும் பாடல் மேடையில் ஒலிக்க, மீடியாக்களின் நேரடி ஒளிபரப்பில் உலகெங்கும் காற்றோடு கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது…

(முற்றும்)

– ஜனனி…! ஜெயம் நீ..! (நாவல்), 25-02-2026, தேவியின் கண்மணி.

ஜூனியர்-தேஜ் இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *