ஜனனி…! ஜெயம் நீ…!
கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 49
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம் – 10

“சேதி தெரியுமா…?”
“என்னா சேதி?”
“தனத்தரசி சமாச்சாரம்தான்…”
“யாரு, அந்த மொத புருசன கழட்டிவிட்ட மவராசிதானே…?”
“உனக்கு புதுக் கதை தெரியாதாங்காட்டியும்…?
“அது என்னாயா புதுக் கதை…?
கேட்டுவிட்டு காதை தீட்டிக் கொண்டதாள் அமூசு,
கோவில் குளக்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த பொன்னுரங்கமும், புனிதாவும் சற்றே அடித்துத் துவைத்தலை நிறுத்தினார்கள்.
அப்போதுதான் ஆற்றங்கரையில் துணி மூட்டையோடு வந்து நின்ற வண்ணான் தீர்காயுசு, காது மடலை மடக்கிக் கொண்டு காத்திருந்தான்.
தலை முழுகப்போன சரோஜா, ருக்மணி, தேவகி எல்லோரும் முழுகாமல் கழுத்துவரை நீருக்குள் புதைத்துக் கொண்டு காத்திருந்தார்கள் புதுக்கதை கேட்பதற்காக.
“அந்தச் செருக்கி, தனத்தரசி, தன் ரெண்டாவது புருசனையும் விவாகரத்து செஞ்சிட்டாளாம்.”
ஆரவல்லி கெக்கலித்தபடிச் சொல்லி, மொத்தப் பற்களும் வெளியே தெரிய இடியிடியெனச் சிரித்தாள்.
“அடியாத்தீ…!”
“பொம்பளையா அவ…?”
“ஏன்? முணாவதா எவனையாவது தொரத்தராளா?”
இப்படியெல்லாம் பலரின் வாய்க்குள் புகுந்து புறப்பட்டுக்கொண்டிருந்தாள் தனத்தரசி.
ஊரெல்லாம் தனத்தரசியின் செயல்பாடுகள் வைரலாகிக் கொண்டிருந்தன.
தனத்தரசி.
சிறுகுடி கிராமத் தலையாரியின் ஒரே மகள்.
தலையாரி, தன் வசதிக்குத் தக்கபடி நிறைய செலவு செய்து மகளை ஒரு பிரசித்தமான கல்லூரியில் படிக்க வைத்தார்.
ஆர்க்கிடெக்ட் படிப்புப் படித்தபோது கடைசீ செமஸ்டருக்கு முன் வளாகத் தேர்வு நடத்திய அமெரிக்க நிறுவனம் அவளுக்கு வேலை தர, கல்லூரியில் கடைசீ செமஸ்டர் தேர்வு முடிந்த மறுநாளே புறப்பட்டு புனே சென்றாள். கம்பெனி கொடுத்த பயிற்சிகளை பெற்றுக் கொண்டாள்.
கல்கத்தா தலைமை அலுவலகத்தில் தனத்தரசிக்கு போஸ்டிக் போட்டது நிறுவனத் தலைமையகம்.
வேலைக்குப் போன ஆறாவது மாதம், ஒரு இளைஞனோடு வீட்டுக்கு வந்தாள் தனத்தரசி.
“அப்பா இவர் ஜோசப்…” என்று அறிமுகப் படுத்தினாள்.
“…………………..”
“நான் இவரை ரிஜிஸ்தர் ஆபீஸ்ல வெச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ப்பா…” தகவல் சொன்னாள்.
கையில ஜோசப் போட்ட மோதிரத்தைக் காட்டினாள்.
தகவல் அறிந்த தலையாரிக்குக் கோபம் தலைக்கு ஏறியது.
‘தாயில்லா பொண்ணுனு ரொம்ப எடம் கொடுத்துட்டோமா?’ என்று வேதனைப் பட்டார்.
நடந்த எதையும் மாற்ற முடியாது என்ற யதார்த்தத்தை மனதில் கொண்டு, தன்னை கட்டுப் படுத்திக் கொண்டார்.
நாளாவட்டத்தில், ‘எப்படியோ பொண்ணு நல்லா இருந்தா சரி…” என்று தனக்குத் தானே சமாதானமும் செய்து கொண்டுவிட்டார்.
கோடிக் கணக்கில் செலவு செய்து, பெண்ணுக்கு எப்படியெல்லாமோ தடபுடலாகத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு, தங்கமும் வெள்ளியுமாக சேர்த்து வைத்த தலையாரி கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டார்.
வேறு வழி?
மகள் தனத்தரசியும் அப்பாவின் சொத்துக்களையோ நகைகளையோ எதிர் பார்க்கவேயில்லை என்பதால்,
‘பேரனோ பேத்தியோ பிறந்தால் அதற்கு அத்தனையும் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தார் தலையாரி.’
வருடம் ஒன்று ஆயிற்று.
எதுவும் விசேஷமாகச் சொல்லவில்லை தனத்தரசி.
ஒரு நாள் முருகானந்தம் என்ற இளைஞனோடு திடீரென்று அப்பாவைப் பார்க்க வந்தாள் தனத்தரசி.
ஒரு வருஷத்திற்கு முன் ஒரே ஒரு நாள் பார்த்த ஜோசப்பை அடையாளம் தெரியவில்லை தலையாரிக்கு.
ஆனால் முகத்தில் ஏதோ மாறுதல் இருப்பதாகப் பட்டது. எப்படிக் கேட்பது என்று திணறிக் கொண்டிருந்தார் அவர்.
அவர் கேட்பதற்கே இடம் வைக்கவில்லை தனத்தரசி
“அப்பா”
“ம்…”
“என் கூட உள்ளது யாருன்னுதானே யோசிக்கறீங்க?”
“………………………” அமைதியாக நின்றார் தலையாரி.
“நான் முதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்ட ஜோசப் ஒத்து வரல்லைப்பா. அதனால டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டேன். இவரு முருகானந்தம். இவரை நான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்.”
கழுத்தில் தாலியைக் காட்டி, மிகச் சாதாரணமாகச் சொல்ல, தலையாரி மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.
‘ஸ்ட்ரோக்’ என்றனர் மருத்துவர்கள்.
கோமாவுக்குப் போய்விட்டதாக அறிவித்தார்கள்.
பேச்சு மூச்சில்லாமல், மல ஜலம் வெளியறுவதைக் கூட உணர முடியாமல், மணல் மூட்டையாய்ப் படுத்தேக் கிடந்தார்.
ஒரு வாரம். ஒரே வாரம்தான்.
போய்ச் சேர்ந்து விட்டார் தலையாரி.
அனைத்து வகையிலும், ஊரில் உயர்ந்து நின்ற தலையாரியின் பெருமையெல்லாம், ஒரே மகளால் சந்தியில் நின்றதுதான் இப்போது ஊர்வாய்க்குக் கிடைத்த அவல்.
இது நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.
இன்று, இரண்டாவது புருஷன் முருகானந்தத்தையும் தனத்தரசி விவாகரத்து செய்துவிட்டாள் என்கிற புதிய செய்தி கிராமம் முழுதும் தலைப்புச் செய்தியாக எதிரொலித்த இந்த நேரத்தில்,
துரதிருஷ்ட வசமாக, வஸந்தா அமெரிக்க நிறுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியைக் கொண்டு வர, வசந்தாவின் அப்பாவும் அம்மாவும் கவலைப் பட்டார்கள்.
‘தனத்தரசியின் தாறுமாறான, ஒழுக்கக் கேடான நடத்தைகளுக்குக் காரணம் அவள், ஐடி கம்பெனியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, புனே, கல்கத்தா, என டிரெயினிங் போய், ‘யு எஸ்’, ‘யு கே’ என வெளிநாடுகளுக்கெல்லாம் பணி நிமித்தம் சென்றதுதான்’ என்ற எண்ணம் ஊர் முழுதும் விரவிக் கிடக்க, வஸந்தாவின் பெற்றோர் மட்டும் விதி விலக்கா என்ன?
“தனத்தரசியின் நிலை உனக்கு வந்துட வேண்டாம் வஸந்தா”
அவள் கைப் பிடித்து, அழுது, அரற்றி ஐ டி கம்பெனி வேலைக்குச் செல்ல அனுமதி மறுத்தனர் அவள் பெற்றோர்.
அவளும் ‘நான் போய்தான் தீருவேன்…’ என்று பிடிவாதம் எல்லாம் பிடிக்கவும் இல்லை.
‘பெற்றோர் நம் நல்லதுக்குத்தான் சொல்வார்கள்’ என்ற திடமான நம்பிக்கையோடு படிப்பு முடிந்ததும், டைப்பிங், ஷார்ட்ஹாண்ட், கம்ப்யூட்டர் வகுப்பு என தன் ஊர் அருகிலேயே இருக்கும் நிறுவனங்களில் சேர்ந்து தன் தகுதியை வளர்த்துக் கொண்டாள் வஸந்தா.
விவசாயக் குடும்பத்தில் பிறந்து , சாணி மெழுகிய களிமண் தரையில் படுத்து உறங்கி, அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்தவள் வஸந்தா.
ஜாதகப் பொருத்தம் பார்த்து, குலம் கோத்திரம் விசாரித்து, வங்கிப் பணியாளர் ராஜேந்திரனை கல்யாணம் செய்து வைத்தனர் பெற்றோர்.
அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக நிம்மதியாகவும் இருந்தனர்.
ஓட்டு வீட்டு மண் தரையில் படுத்த வஸந்தா, கல்யாணத்துக்குப் பின் ஒட்டு வீட்டில், மின்விசிறிக்குக் கீழ் விரிக்கப்பட்ட மெத்தையில் படுப்பதும், லேப்டாப்பில் மின் புத்தகம் வாசிப்பதுமாக மாறிப்போனாள்…
நாளாவட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமாக வஸந்தாவின் பொழுது போக்கு அம்ஸங்களை குறைத்தனர் மாமியார் வீட்டில். பொறுப்புகள் கூடின.
யதார்த்தத்தை முகம் சுழிக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டாள்.
குடும்பக் கடமைகளில் தன்னை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டாள்.
வயதான தன் மாமனார் மாமியாருக்குப் பணிவிடை செய்யவேண்டிய தார்மீகக் கடமையை தவறாமல் செய்தாள்.
கணவனை விட நிறைய படித்துள்ளோம் என்ற இறுமாப்பு சிறிதும் கிடையாது வஸந்தாவுக்கு.
படித்த நாம் வேலைக்குச் செல்லாமல் இருக்கிறோமே என்ற குறையும் அவளுக்கு இல்லை.
ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக இருப்பதில் பெருமிதமடைந்தாள்.
என்னதான் ஆத்மார்த்தமாக, மனப்பூர்வமாக, பெற்றெடுத்தத் தன் தாய் தந்தை ஸ்தானத்தில் வைத்து மாமியார் மாமனாரைப் பராமரித்தாலும், வழக்கமான மாமியாரின் குணத்தை காட்டிக் கொண்டுதான் இருந்தாள் கணவனின் தாய்.
மாமனார் மிக மிக நல்ல குணம் உடையவர்தான் என்றாலும், மாமியாரை மீறி அவர் எப்போதும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பியதில்லை.
மாமியார் மருமகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் எல்லாவற்றையும் கணவனிடம் சொல்லும் வழக்கம் அறவே கிடையாது வஸந்தாவிற்கு.
அப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள் அவள் பெற்றோர்.
இருந்தாலும் எப்போதாவது, தவிர்க்க முடியாத பட்சத்தில், “ஏன் சொல்லவில்லை… என்று எதிர் காலத்தில் பொல்லாப்பு வந்துவிடுமோ…?” என்கிற எண்ணத்தில், ஒரு சிலவற்றை சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும்போது கூட,
“அட்ஜஸ்ட் பண்ணிக் கிட்டுப் போ…” என்று, மனைவி வஸந்தாவிடம் சொல்லுவதோடு சரி. எந்தச் சூழலிலும், அம்மாவிடம் வாய் கொடுக்கவே மாட்டான் ராஜேந்திரன்.
‘பெண்கள் விவகாரத்தில் ஆண்கள் தலையிட்டால் தேவையற்ற சிக்கலாகிவிடும். நிம்மதி போய் விடும்’ என்பதே ராஜேந்திரனின் சித்தாந்தம்.
இதுபோல எதிலும் தலையிடாமல் இருப்பது எஸ்கேபிசம். தப்பித்தல். இது ஆண்மை அல்ல.
ஆண்மை என்பது, தாய்க்கும், மருமகளுக்கும் இடையில் உள்ள கருத்து வேற்றுமைகளை அறிந்து, அதை அகற்றுதல்.
மனைவியையும் தாயையும், தாய் மகளாக மாறும் வண்ணம் மாற்றுதலே ஆண்மை.
தாய், மனைவி இருவரிடம் தனித்தனியே பேசிப் அவர்களுக்குள் புரிதலை வளர்த்தலே ஆண்மை.
ஆண்மை தவறேல். என்ற பாரதியின் கோட்பாடு அறியாதவன் ராஜேந்திரன்.
ஆண்மை தவறியவன் அவன்.
‘காய்க்கும் மரத்திற்குக் கல்லடி ஒன்றும் புதிதல்லவே…!’
எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல், தன் கடமைகளை முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டுதான் இருந்தாள் வஸந்தா.
இப்படியே ஓடிக் கொண்டிருந்த வாழ்வில் திடீரென சில மாற்றங்கள் வந்தன.
மாமனார் குளியலறையில் வழுக்கி விழுந்தார்.
ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.
இடுப்பெலும்பு முறிவு. அறுவை சிகிச்சை செய்து ப்ளேட் பொருத்தப்பட்டது.
மாவுக் கட்டுடன், படுத்த படுக்கையில் கிடந்தார் மாமனார்.
நடுத்தரக் குடும்பம் ராஜ வைத்தியம் என்றானது சூழ்நிலை.
கணவனுக்கு வரும் சம்பளத்தை வைத்து, சிக்கனமாகச் செலவு செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தாள் வஸந்தா.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் “குழந்தைப் பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடலாமே…?” என்று கொஞ்சம் தள்ளிப் போட்டார்கள் ராஜேந்திரனும் வஸந்தாவும்.
‘பட்ட காலிலே படும் என்பார்களல்லவா…!”
தொடர்ந்து, பிசியோ தெரபி செய்யப்பட்டதில், வாக்கர் வைத்துத் தன் காரியங்களைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கி, சீராகப் போய்க்கொண்டிருந்த மாமனாரின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பம்.
ஒரு நாள் எதிர் பாராத வேளையில், தலை சுற்ற, வாக்கரோடு மல்லார்ந்து விழுந்தவர்தான்.
பின் மண்டையில் அடிபட்டு பேச்சு மூச்சில்லாமல், ஒரு வாரம் கோமாவில் கிடந்து ஒரு வழியாய் போய்ச் சேர்ந்து விட்டார்.
அதைத் தொடர்ந்து, கணவன் போன துக்கத்திலும், சொச்ச காலத்தை எப்படித் தள்ளப் போகிறோம்’ என்ற ஏக்கத்திலும் இரத்த அழுத்தம் அதிமாகி, நெஞ்சுவலி வந்து கணவன் இறந்த நாற்பத்து எட்டாவது நாள் மாமியாரும் மாண்டாள்.
குறுகிய காலத்தில், அப்பாவையும் அம்மாவையும் இழந்துவிட்ட ராஜேந்திரனுக்கு எல்லா வகையிலும் தன்னால் இயன்றவரை ஆறுதல் தந்தாள் வஸந்தா.
வீட்டில் இருந்த இறுக்கமான சூழலை மாற்றிக் கொள்ள, வங்கியில் தந்த எல் டி சி சலுகையைப் பயன் படுத்திக் கொண்டு ஊட்டி, கொடைக்கானல் என்று ஒரு பத்து நாட்களுக்கு டூர் போட்டு என்ஜாய் செய்தார்கள்.
அத்தியாயம் – 11
வஸந்தாவிற்கு நாள் தள்ளிப் போயிற்று,
மாமனார் மாமியார் உடல் நலமில்லாமல் இருந்த காலத்தில், அடிக்கடி அரசு மருத்துவ மனைக்குச் சென்றபோது, ரத்தப் பரிசோதனை நிலையத்தில் பணி புரியும் செவிலியின் நட்பு கிடைத்திருந்தது வஸந்தாவிற்கு.
செவிலி கார்த்திகாவின் வீட்டிற்குப் போனாள்.
அவளிடம் நாள் தள்ளிப் போகிற விஷயத்தை சொன்னாள் வஸந்தா.
உடனே, தன் வீட்டிலேயே வைத்திருந்த ‘ஹோம் ப்ரக்னன்ஸி கிட்’ வைத்து டெஸ்ட் போட்டுப் பார்த்தா கார்த்திகா.
‘கிட்’ல் இரண்டு கோடுகள் கீற்றுக்களாய் தெரிய, கன்கிராஜூலேஷன்ஸ்” என்று வாழ்த்தினாள் செவிலி. சமையறைக்குச் சென்று சர்க்கரை கொண்டு வந்து வாயில் ஊட்டிவிட்டுக் கொண்டாடினாள்.
ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறுபுறம் வெட்கமுமாக மலர்ந்தாள் வஸந்தா.
“ஹோம்கிட் சமயத்துல எரர் காட்டும். ஏமாத்திரும். வேரியேஷன்ஸ் வர வாய்ப்பு உண்டு. நாளைக்கு லேப்ல டெஸ்ட் எடுத்துப் பாத்துடலாம்…” என்று செவிலி புன்னகையோடு சொல்ல,
“சரி” என்றாள் வஸந்தா.
மறுநாள்,
கணவன் வேலைக்குப் போன பிறகு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றாள், நர்ஸ் கார்த்திகாவே பரிசோதனைச்சாலைக்கு அழைத்துச் சென்று, முறையாகப் பரிசோதனைகள் எல்லாம் செய்தபின், ஓகே கன்கிராட்ஸ் என்று சொல்லி ரிப்போர்ட் கொடுத்தாள்.
வசந்தாவின், நாக்கை நீட்டச் சொல்லியும், கண்களின் கீழ் இரப்பையை சற்றே கீழ் இறக்கியும் பார்த்துவிட்டு, ரிப்போர்ட்டை பரிசீலித்துவிட்டு, கர்ப்பத்தை உறுதி செய்தார் அரசு மருத்துவர்.
செவிலி கார்த்திகா, மருத்துவமனைப் பதிவேட்டில் பெயர் பதிந்து கொண்டதோடு, முறைப்படி விவரங்களைப் பதிவு செய்து, மருத்துவ அட்டை வழங்கினார்.
இந்த அட்டைல உள்ள நம்பர் ஆன் லைன்ல ஏறிரும். நீங்க எந்த ஊர் ஆரம்ப சுகாதார மையத்துக்குப் போனாலும் இந்த நம்பரைத் தட்டினா, உங்க ஜாதகமே தெரிஞ்சிரும். எதாவது பிரச்சனைன்னா, இங்கேதான் வரணும்னு இல்லே. பக்கத்துல இருக்கற நிலையத்துக்கு இந்த அட்டையோட போனா போதும்…”
விவரமாகச் சொல்லி வாழ்த்தி அட்டையைத் தந்தாள் ஆரம்ப சுகாதார மையச் செவிலி.
மேலும், கர்பிணிகளுக்கு என அரசாங்கம் அலாட் செய்துள்ள, மாத்திரை மருந்துகள், சத்துணவு மாவுகள், போன்றவை அடங்கிய சீல் வைக்கப்பட்ட ரோஸ் கலர் கூடையோடு உள் ‘கிட்’ டைத் தந்தாள்.
கிட்’டை போட்டோ எடுத்து கணவனுக்கு வாட்ஸப் செய்தாள். கைப்பேசியில் விஷயத்தை ராஜேந்திரனுக்குச் சொன்னாள்.
“அப்படியா…!” எனக் மகிழ்ந்தவன், “மதியம் லீவு கொடுத்துட்டு வரேன்…” என்றான்.
வந்தான்.
எப்போதும் அலுவலகத்திலிருந்து வருவதைப் போல வெறும் கையை வீசிக் கொண்டு வந்தான்.
‘தான் அப்பாவான செய்தியறிந்ததும், முதல் முதலில் தன்னைப் பார்க்க வருகிறார், ஒரு முழம் புஷ்பம் கூட வாங்காமல் வந்திருக்கிறாரே…!’ என்று ஒரு கணம் ஆதங்கப் பட்டது வஸந்தாவின் மனசு.
அடுத்த கணம், ‘அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.’ என்று மனசை சமாதானமும் செய்து கொண்டாள்.
ராஜேந்திரன் வந்ததும் வராததுமாய், சூல் கொண்டதை சோதித்தறிந்து உறுதி செய்ய, இந்த இரண்டு நாட்களாய், தான் செய்த சாகசங்களையெல்லாம் வெள்ளந்தியாக அவனிடம் சொன்னாள்.
“ஓ… நீயாவே எல்லாத்தையும் பாத்துக்குவே. அப்படித்தானே…! என்னோட உதவி எதுக்கும் தேவையில்லைன்னு சொல்லு…!” என்று குத்தலாகப் பேசினான் ராஜேந்திரன்.
“அப்படியா? என்று வியந்து, கன்னம் தடவி உச்சந்தலை முகர்ந்து பாராட்டுவான்’ என்று நினைத்த வஸந்தாவுக்கு ஏமாற்றமாகி விட்டது.
ராஜேந்திரனின் இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்தாள் வஸந்தா.
‘அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று முடிவு செய்து கொண்டாள். அவரிடம் தள்ளிப் போன விஷயத்தைச் சொல்லி அவர் துணையோடு மருத்துவ மனைக்குச் சென்றிருக்கவேண்டும். ‘சர்ப்ரைஸாக’ இருக்கட்டுமே என்று தன்னந்தனியாக ப்ரக்னன்ஸி டெஸ்ட்க்குப் போனது தன் தவறுதான்…” என்று சமாதானப் படுத்திக் கொண்டாள்.
“ஸாரிங்க. சர்ப்ரைஸா இருக்கட்டும்னுதான், உங்க கிட்ட சொல்லாம செஞ்சிட்டேன்…!” என்றாள் வஸந்தா.
இதற்கு அவனிடமிருந்து எந்த எதிர் வினையும் இல்லை.
மாறாக, “உன் அப்பா அம்மாகிட்டே சொல்லியாச்சா?” என்று கேட்டான். கேள்வியில் குத்தல் இருந்தது.
“அதெப்படிங்க? நீங்க இல்லாம அவங்க கிட்டே நான் சொல்லுவேன்…!” என்று சொன்னதைக் கேட்டவுடன், கழுத்தை ஒருசாய்த்துக் கொண்டு கேவலமாக ஒரு பார்வை பார்த்தான் ராஜேந்திரன்.
‘பரவாயில்லையே! இதையும் தான்தோன்றித் தனமா இல்லாம, புருசனோட சேர்ந்து செய்யணும்னு தோணிச்சே… அதுவரைக்கும் சந்தோஷம்…’ என்று ஏளனம் செய்வது போல இருந்தது அந்தப் பார்வையும் உடல் மொழியும்.
‘மனசு விட்டுப் பேசுவதெல்லாம் குற்றப் பாடாகப் போகிறதே…!’ என்பதை நினைத்து மனசு, விட்டுப் போனது வஸந்தாவுக்கு.
இதற்கு மேல் ராஜேந்திரனோடு, எதைப் பேசுவதற்கும், எதை பகிர்ந்து கொள்வதற்கும், வஸந்தாவிற்குள் தயக்கம் வந்துவிட்டது.
ஒரு கட்டத்தில், ‘இவர் லீவு போட்டுவிட்டு வந்திருக்கவே வேண்டாமோ…!’ என்று கூடத் தோன்றியது.
எதுவும் பேசாமல் அமைதியாகச் சில நிமிடங்கள் கடந்தன.
“இப்பவே மாமா மாமி கிட்டே சொல்லிருவமா?” என்று கேட்டான் ராஜேந்திரன்.
தொடக்கத்தில், உன் அப்பா அம்மா என்று சொன்னவன், இப்போது மாமா மாமி என்று சொன்னதில், சற்றே ஆறுதல் அவளுக்கு.
“ம்…” என்று ஒற்றை வார்தையில் பதில் சொன்னாள்.
கைப் பேசியை ஸ்பீக்கரில் போட்டு, எதிர் முனையையும் ஸ்பீக்கரில் போடச் சொல்லி, “நீங்க பாட்டி தாத்தா ஆகப் போறீங்க…? என்று இருவரும் ஒருவர் பின் ஒருவர் சொன்னார்கள்.
“அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், பழம், புஷ்பம் மஞ்சள் கிழங்கு என மங்கலப்பொருள்களோடு, வஸந்தாவுக்குப் பிடித்த ஆவின் பால்கோவாவும் சேர்த்து எடுத்துக் கொண்டு, அப்பாவும் அம்மாவும் வந்து சேர்ந்தார்கள்.
சிசுவின் வளர்ச்சிக்கு ஏற்ப, வயிற்றுப் புரட்டல், மசக்கை, வாந்தி என கர்ப காண்டத்தின் அத்யாயங்கள் தொடர்ந்தன.
அவஸ்தைகளும், கஷ்டங்களுமாக, சுகமான சுமையைச் சுமந்திருந்தபோதுகூட, ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப்போடாமல், தான் உண்டு தன் அலுவலகம் உண்டு என்று இருந்தான் ராஜேந்திரன்.
சில நேரங்களில் அவள் செய்யும் சமையல் மணமே, குமட்டலை ஏற்படுத்தியது வசந்தாவிற்கு.
அது போன்ற சமயங்களில், பத்து பதினைந்து நிமிடங்கள் சமையல் கட்டை விட்டு வெளியேறி காற்றோட்டமான போர்டிகோவில் மின் விசிறியைச் சுழலவிட்டுக் கொண்டு, சிறிது நேரம் உலவுவாள். சமநிலைக்கு வந்தவுடன், மீண்டும் சமையலறையில் நுழைந்து மீதி சமையலை முடிப்பாள்.
மாதா மாதம் சிசுவின் வளர்ச்சியை சோதித்து அறிய, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்குக் கூட ராஜேந்திரன் ஒத்துழைக்கவில்லை.
நர்ஸ் கார்த்திகாவின் உதவியால் ஒவ்வொரு செக்அப்’பையும் முடித்தாள்.
சிறு குடி கிராமத்தில், தெருவடைத்துப் பந்தல் போட்டு, வஸந்தாவிற்கு வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் விமரிசையாக நடத்தி விட்டார்கள் பெற்றோர்.
கை நிறைய வளையல்களுடன், பிறந்த வீட்டில் வளைய வந்தாள் வஸந்தா.
வயல் வெளிகளுக்கெல்லாம் கூட சென்று வந்தாள்.
ஆபீசில் வேலை, ஆடிட்டிங், இன் சர்வீஸ் ட்ரைனிங் என ஏதோ காரணங்களைச் சொல்லி சொல்லி, சிறுகுடிக்கு வருவதை மொத்தமாகத் தவிர்த்தான் ராஜேந்திரன்.
சிறுகுடி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் வஸந்தாவுக்கு சுகப் பிரசவம் ஆயிற்று.
ஜனனி பிறந்த அன்று, மருத்துவ மனைக்கு வந்து சென்றான் ராஜேந்திரன்.
‘எதையும் கண்டு கொள்ளாமல் விட்டேர்த்தியாக, அவர் வேலையை மட்டும் பார்க்கும் ராஜேந்திரனை நினைத்து மிகவும் கவலைப் பட்டாள் வஸந்தா.
‘இப்படியே விட்டால் ரொம்பவும் இடம் கொடுத்துவிடும்…’ என்பதை உணர்ந்தாள்.
‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பது அறிவீனம்’ என்பதை யோசித்து, குழந்தைக்கு ஆறு மாதம் முடியும் வரை தாய் தந்தையோடுதான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த ஜனனி, முடிவை மாற்றிக் கொண்டாள்.
குழந்தை பிறந்த ஒரே மாதத்திலேயே கணவன் வீட்டுக்கு வந்துவிட்டாள்.
அவ்வப்போது வஸந்தாவின் அம்மா வந்து ஓரிரு நாட்கள் ஒத்தாசையாக இருந்துவிட்டுப் போனாள்.
மற்ற நாட்களில் எல்லாம் தனியாகவே, குழந்தையையும், குடுப்ப வேலைகளையும் சமாளித்தாள் வஸந்தா..
குழந்தை ஜனனியும் மற்ற மற்ற குழந்தைகளைப் போல, அழுவதும், ஆர்ப்பாட்டம் செய்வதுமாக இல்லாமல், உயிர் உள்ள பொம்மை போலத்தான் கிடந்தது.
பிறந்த போதே, ஜனனி வீரிட்டு அழவில்லை.
‘ஆவிரி ஆவிரி’ எனப் பால் பருகவில்லை.
கை கால்களை உதைத்துக் கொண்டு சிணுங்கவில்லை.
“பேபி கொஞ்சம் அப்நார்மல்தான்.
பீடியாட்ரிஷன் அனுமதியோட நீயூரோ ஒருத்தரை கன்ஸல்ட் பண்ணிருங்க…”
அறிவுறை வழங்கினார், பிரசவம் பார்த்த கைனகாலஜிஸ்ட்.
கைனகாலஜிஸ்ட் சொன்னதை மனதில் வைத்து,
‘ஏங்க ஜனனிய நியூரோ கிட்டே அழைச்சிப் போகணும்க” என்று கேட்கும் போதெல்லாம் ராஜேந்திரன் தட்டிக் கழித்தான்.
“டாக்டரும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். சில குழந்தைகளுக்கு பேச்சு வர லேட்டாகும், பேசாம இரு. தானாச் சரியாகும்…” என்று சொல்லிவிடுவான்.
நடுவில் ஒரு முறை நர்ஸ் கார்த்திகா வீட்டிற்கு வந்தாள்.
“நீங்க வந்தா, சாதாரணமா பாத்துட்டுப் போயிருங்க சிஸ்டர். ஆஸ்பத்திரி, டாக்டர், நியூராலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட்னு எதையாவது வஸந்தாகிட்டேச் சொல்லி அவ மனசைக் கலைச்சிட்டுப் போயிடறீங்க. எனக்குப் பெரிய தலைவலியாவுது…”
என்று ராஜேந்திரன் கார்த்திகாவிடம் கடுப்படித்துவிட்டார்.
அத்துடன், நர்ஸ் கார்த்திகா, வஸந்தாவுடனான நட்பை முறித்துக் கொண்டாள். வஸந்தாவின் செல் நம்பரை ப்ளாக் செய்து விட்டாள்.
எல்லா வகையிலும் கையறு நிலையில் நின்றாள் வஸந்தா.
திக்கற்றவளுக்கு தெய்வமே துணை… என்ற ரீதியில் ஆண்டவன் மேல் பாரம் போட்டுவிட்டு குழந்தை நார்மலாக ஆகிவிடுவாள் என்ற நம்பிக்கையோடு பொறுமையாகத்தான் காத்திருந்தாள் வஸந்தா.
அத்தியாயம் – 12
தாய் தந்தை காலமான பிறகு, முழுச் சம்பளத்தையும் வஸந்தா கையில் கொண்டு வந்து கொடுத்து, வீட்டு நிர்வாகத்தைச் செய்யச் சொன்னவன்தான் ராஜேந்திரன்.
திடீரென்று ஒரு நாள்,
மாதச் சம்பளப் பணத்தில் கால் வாசித் தொகையை மட்டுமே வஸந்தாவின் கையில் கொடுத்தான்.
“ஏன் இவ்வளவுதான் தரீங்க…?”
வஸந்தா இயல்பாய்க் கேட்டாள்.
“நீ என்ன என்னோட ஆடிட்டரா…?”;
“எனக்கு என்ன நிர்வாகம் பண்ணத் தெரியாதா?”;
“குடுத்து வெச்சா மாதிரி கேக்கறே…?”;
“இவ்ளோ நாள் நான் கொடுத்த பணத்துக்கு கணக்கு குட்ரீ…” என்றெல்லாம் தாறுமாறாகப் பேசினான் ராஜேந்திரன்.
வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தான்.
‘இத்தனை நாள் இப்படியெல்லாம் பேசியதில்லையே?;
அதுவும், இப்போ ‘ஒரு-வயசுக் குழந்தையை, அதுவும் அப்நார்மலா உள்ள பொண்ணை வெச்சிக்கிட்டுத் தவிக்கற நேரத்துல, என்கிட்டே ஏன் திடீர்னு இப்படியெல்லாம் நடந்துக்கறார்?’
புரியாமல் தவித்தாள் வஸந்தா.
‘ஆபீசில் வேலை பளுவால் இப்படிப் பேசுவாராயிருக்கும்..?’ என்று சமாதானப் படுத்திக் கொண்டாள்.
எதையும் மனதில் போட்டுக் கொண்டு குழம்பாமல், ‘தெய்வம் விட்ட வழி’, என்று இயல்பாக அனைத்தையும் கடந்து போனாள் வஸந்தா.
அதே வாரத்தில், வஸந்தாவின் அப்பாவும் அம்மாவும், வருவதாக போனில் சொல்லி விட்டு ஒரு நாள் வந்தார்கள்.
தன் பெற்றோர்கள் வரவிருப்பது தெரிந்தும், அன்று மாலை அலுவலகம் முடிந்து வழக்கமான நேரத்தில் வரவில்லை ராஜேந்திரன்.
கணவனுக்குப் ஃபோன் செய்தாள் வஸந்தா.
“அப்பாவும் அம்மாவும் உங்களைப் பார்த்துட்டுத்தான் கிளம்பணுன்னு காத்திருக்காங்க.. எப்ப வருவீங்க..?” என்று கேட்டாள்.
“ஆடிட் நடக்குது. நான் வர மிட் நைட் ஆயிரும். அவங்களை ஊருக்கு அனுப்பிரு…” என்றவன், தொடர்ந்து, “அவங்க இப்போ வரலையேனு யார் அழுதாங்க…” என்று சுருக் எனச் சொல்லிவிட்டு, பேசி இணைப்பைத் துண்டித்து விட்டான் ராஜேந்திரன்.
‘என்ன ஆயிற்று இவருக்கு? சிறிது நாட்களாகவே இப்படி மந்திரித்து விட்டதைப் போல இருக்கிறார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். இவருக்கு என்ன பிரச்சனை. சொன்னால்தானே தீர்வு காண முடியும்;
இவர் இப்படியெல்லாம் பேசக்கூடியவர் இல்லையே…?; கொஞ்ச நாட்களாகவே ஏன் இவர் பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு…?’
யோசிக்க யோசிக்க, ராஜேந்திரனின் பேச்சு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதாக உணர்ந்தாள். வஸந்தாவிற்குள் ராஜேந்திரன் மீது சந்தேகம் தலைத் தூக்கியது.
“மாப்ளை எப்போ வர்றாராம் வஸந்தா..?” கேட்டாள் அம்மா.
கண்களாலேயே வினவினார் அப்பா.
“அவருக்கு ஆபீஸ்ல ஆடிட்டாம். மிட் நைட் ஆயிடும்னு சொன்னாரு. நீங்க புறப்படுங்கப்பா…”
சரி… மாப்பிள்ளைய ரொம்ப விசாரிச்சதாச் சொல்லு…” என்று சொல்லிவிட்டு மனமே இல்லாமல் கிளம்பினார்கள்.
அவர்கள் சென்றபின் வஸந்தா ஒரு முடிவுக்கு வந்தாள்.
ஹோம் மேக்கராகவே, இதுநாள் வரை வீட்டோடு இருந்து விட்ட வஸந்தாவுக்குள் குபீரென போர்குணம் மூண்டது.
குழந்தையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டாள்.
முதன் முறையாக, வாயிற்படி தாண்டினாள்.
வாயிற் கதவை இழுத்துத் தாழிட்டாள். பூட்டினாள்.
டவுன் பஸ் ஏறினாள்.
ஐந்து நிறுத்தங்கள் தாண்டி, ‘பேங்க் ஸ்டாப்பிங்’கில் இறங்கினாள்.
வங்கியின் கதவுகளில் பூட்டுக்கள் தொங்க, ஒரு கணம் அதிர்ந்தாள்.
“கைப் பேசியில் ராஜேந்திரனின் எண்களை அழுத்தினாள்.”
“ஏண்டீ சும்மாச் சும்மா போன் பண்ணிக்கிட்டே இருக்கே… ஆடிட்டிங் பிஸியா போய்க் கிட்டிருக்கு. மிட் நைட் ஆகும்னு சொன்னேனில்லை. அறிவில்லையா ஒனக்கு … உள் பக்கமா பூட்டுப் போட்டுட்டுப் படு. மாத்து சாவி போட்டுத் திறந்துக்கிட்டு உள்ளே வந்துடுவேன். இனிமே இப்படி ஆபீஸ் வேலை நேரத்துல டிஸ்ட்ரப் பண்ணாத…” என்று கடுப்படித்துவிட்டுக் கட் செய்தான்.
பொய் சொல்கிறார். பச்சை பொய் புளுகுகிறார். எங்கோ தவறு இருக்கிறது. என்று உள்ளுணர்வு உணர்த்தியது.
‘ஏதோ பெரிய்ய தப்பு நடக்குது…’ வஸந்தாவின் சந்தேகம் வலுத்தது.
‘பதறினால் காரியம் சிதறிப் போகும்.’ என்று எச்சரித்தது அவள் புத்தி.
எதுவாக இருந்தாலும் சமாளிப்போம். என்று முடிவெடுத்தாள்.
வங்கிக் கிளையின் ஒரு ஓரத்தில் இருந்த ஏடிஎம் க்கு வெளியே, வங்கிச் சீருடையுடன் அமர்ந்திருந்த இரவுக் காவலர் எழுந்து இவளை நோக்கி வந்தார்.
“நீங்க ராஜேந்திரன் சார் ஒய்ஃப்தானே…? கல்யாணத்தப்ப பாத்தது…”
வஸந்தாவின் அருகே வந்து கேட்டார்.
ஆமாம்ணே…
“சாரோட தலைச்சன் பாப்பாங்களா?”
தோளில் சரிந்திருந்த குழந்தையைப் பார்த்து விசாரித்தார்.
“ம்…”
“ஏம்மா…! என்று தொடங்கினார்.
சந்நதம் வந்தவரைப் போல ராஜேந்திரனின் நடவடிக்கைகளைப் பற்றி கதை கதையாகச் சொன்னார்.
சொல்லிய அனைத்தையும் கேட்ட வஸந்தாவுக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.
இத்தனை நாட்கள் ராஜேந்திரனின் இழிவான நடவடிக்கைகளுக்குக் காரணம் மலர் என்ற மேனேஜர்தான் காரணம் என்பது இப்போது தெரிந்துவிட்டது.
“என் மக மாதிரிம்மா நீங்க. நான் சொன்னதா காட்டிக்கிடாதீங்கம்மா… எனக்குச் சிக்கலாயிரும்.” என்றார் வயதான அந்தக் காவலர்.
“நிச்சயமா உங்களை எந்த இடத்துலயும் காட்டிக் கொடுக்க மாட்டேன்ணே…” என்று சொல்லிவிட்டு முட்டிக் கொண்டு வந்த அழுகையை வலிந்து அடக்கிக் கொண்டாள்.
அழுவது கோழைத்தனம் என்று முடிவெடுத்தாள்.
அடுத்து ஆகவேண்டியதை யோசித்தாள்.
மனதை ஒருமுகப் படுத்தினாள்.
சுதாரித்தாள்.
வீட்டை அடைந்தாள்.
‘துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…’ என்ற பாடல் வரிகளுக்கு உருவம் கொடுத்தாற்போல இருந்தது வஸந்தாவின் நடவடிக்கைகள் அத்தனையும்.
விடிகாலையில்தான் வீடு திரும்பினான் ராஜேந்திரன்.
இரவு வங்கிக்கு வந்ததையோ,
மலர் என்ற பெண்ணின் வலையில் வீழ்ந்து விட்டதாக அவனைப் பற்றிக் கேள்விப் பட்டதையோ வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“ஆடிட்டிங் விடிய விடிய நடக்குங்களா?” நிதானமாய் கேட்டாள்.
ஆமாம். பேங்ல எல்லாரும் இப்பத்தான் போறாங்க. நானும் பூட்டிக்கிட்டு வரேன். இன்னும் ரெண்டு மணி நேரத்துல திரும்பவும் திறக்கணும். வர வர பேங்க்ல வேலை ரொம்பரொம்ப அதிகமாயிருச்சு…” என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டான் ராஜேந்திரன்.
‘என்னமாய் நடிக்கிறான்…?’ என்று நினைத்துக் கொண்டாள்.
ஒவ்வொரு நாளாகக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள்.
காலத்தை ஓட்டினாள். அவ்வப்போது,
“குழந்தையை மருத்துவரிடம் காட்ட அழைத்துச் செல்வோமா?”
என்று கேட்பதும், ராஜேந்திரன் “வேண்டாம்…” என்று மறுப்பதும் வாடிக்கையானது.
கணவன் மறுப்பான் என்பதால் வஸந்தா கேட்காமல் இருப்பதில்லை. என்றோ ஒரு நாள் மனம் திருந்தி அழைத்துச் செல்வான் என்கிற அசாத்திய நம்பிக்கை இருக்கத்தான் செய்தது அவளுக்கு.
நாளாவட்டத்தில் எல்லாம் வழிக்கு வந்துவிடும் என்று திடமாக நம்பினாள்.
அதற்குப் பின்னும் மூன்று மாதங்கள் பொறுமையாய்க் காத்திருந்தும் பயன் ஏதுமில்லை.
மேலும் காத்திருக்கப் பொறுமையும் இல்லை வஸந்தாவிற்கு.
பெற்ற குழந்தையை உருப்படி செய்ய வேண்டிய நிர்பந்தம் அவளை முடுக்கி விட்டது.
பொறுத்தது போதும் பொங்கி எழு என உறுமியது அவள் மனம்.
வெடித்து விட்டாள்.
சாது மிரண்டால் காடு தாங்காதல்லவா.
கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை வளாகத்தில் வைத்து, மொத்தமாக ராஜேந்திரன் உறவையே முறித்துக் கொண்டாள் வஸந்தா.
மகள் வஸந்தாவையும் பேத்தி ஜனனியையும் பார்த்துவிட்டு, பேருந்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஜனனியின் தாத்தா சற்றே கண்ணயர்ந்தார்.
ஆனால் வஸந்தாவின் அம்மாவோ மனதில் ஏதேதோ குறுகுறுப்பும் கவலைகளும் ஆக்ரமித்திருக்க, தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள்.
“என்னங்க… என்னங்க…!”
“ம்…”
“வஸந்தாவுக்கு ஏதோ கடுமையான பிரச்சனைனு நினைக்கறேன். அவ நம்ம கிட்டே எதையோ மறைக்கறானு தோணுதுங்க…”
“எதை வெச்சிச் சொல்றே நீ?”
“நாம வரும்போதெல்லாம் மாப்பிள்ளை நம்மை தவிர்க்கறாரு. பேத்தியோ எல்லா குழந்தைகளையும் போல நார்மலா இல்லை. ஆசுபத்திரிக்கும் அழைச்சிப் போக மாட்டேங்கறாராம் மாப்ளை.”
புருஷன் பொஞ்சாதிக்குள்ள ஆயிரம் இருக்கும். இன்னைக்கு அடிச்சுக்குவாங்க. நாளைக்கு சேர்ந்துக்குவாங்க. அதுலல்லாம் நாம மூக்கை நுழைக்கக் கூடாது. பேசாம வா.” என்று ஒரே போடாய்ப் போட்டு அடக்கி விட்டார். அவர்.
வஸந்தாவின் பிடிவாதத்தால் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டு, டாக்டர் எதிரிலேயே வஸந்தாவையும், குழந்தையையும் கேவலமாய்ப் பேசிவிட்டு, அவர்களை சந்தியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு வந்தான் ராஜேந்திரன்.
“அவளுக்குப் போக்கிடம் வேற ஏது? திரும்பி இங்கேதானே வரணும்… பாத்துக்கலாம்… என்று கருவினான்.
வங்கியில் நகைத் திருட்டுப் பிரச்சனையில் வசமாக மாட்டிக் கொண்டு விசாரணை வளையத்தில் சிக்குண்டு மன உளைச்சலில தவிக்கும் ராஜேந்திரனுக்கு வீட்டிலும் நிம்மதி இல்லை.
கட்டப் பஞ்சாயத்து, டிபார்ட்மெண்டல் என்கொயரி, நட்பு வட்டத்தில் பேச்சு வார்த்தை, என்று ராஜேந்திரன் நாயாய் அலைக்கழிக்கப்பட்டான்.
கட்டிய மனைவியிடம் மறைத்துவிட்டு, எப்படியாவது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். என்ற நினைக்கிற ஆண்கள் கோழைகள்.
சுகத்திலும் துக்கத்திலும் பங்கு கொள்வேன் என்று அக்னி சாட்சியாக ஏற்றுக் கொண்ட பெண், நிச்சயம் கணவனின் கஷ்ட காலங்களில் கூடவே நிற்பாள் என்பதுதான் மனித குல வரலாறு.
இரவு வெகு நேரம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்தான் ராஜேந்திரன். வஸந்தா குழந்தையோடு வீடு திரும்பவே இல்லை என்பது பெருத்த ஏமாற்றமாகவும், பெருத்த அவமானமாகவும் இருந்தது.
அவளைக் கைப்பேசியில் தொடர்ப்பு கொள்வதற்கும் ராஜேந்திரனின் தன்முனைப்பு இடம் தரவில்லை.
நகைத் திருட்டுப் பிரச்சனை வேறு திகிலூட்டியது.
எப்போது தூங்கினானோ தெரியாது. காலையில் எழும்போது மிகவும் தாமதமாகிவிட்டது.
அதற்குப் பிறகு, புறப்பட்டு, ஓட்டலில் சாப்பிட்டு அலுவலகம் விரைந்தான்.
தாமதமாக வருகிறோம் என்கிற பரபரப்பில், அவசர அவசரமாக, அப்போதுதான் ராஜேந்திரன் வங்கிக்குள் நுழைந்தான்.
“ராஜேந்திரன்…”
“……………………….”
“ஏன் சோகமா இருக்கே? உன்னை பிரச்சனைலேர்ந்து வெளீல கொண்டு வர்றது என் பொறுப்பு” என்றார் வங்கி மேலாளர் மலர்.
சமீபத்தில் மேலாளராக இந்தக் கிளையில் பொறுப்பேற்றவர்.
வங்கி மேலாளர் மலருக்கு, ஆண் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
மகப்பேறு மற்றும் சம்பளமில்லா விடுப்பில் ஒரு வருடம் இருந்தவள்.
வயிற்றில் குழந்தை எட்டு மாதமாக இருக்கும்போதே, கணவனை ஒரு விபத்தில் இழந்து விட்டவள் மலர்.
பதவு உயர்வு பெற்று. இந்தக் கிளைக்கு மாற்றலாகி வந்தவள்.
டவுனில் தனி வீடு பார்த்துக் குடியிருக்கிறாள்.
தன் ஒரே மகனை, பேபி சிட்டர் போட்டு வளர்க்கிறாள்.
ஒற்றைப் பெற்றோராக குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதே அவளுக்கு முன் நிற்கும் ஒரே சவால்.
மலர்க்கு, கோவையில், பெரிய பூர்வீக வீடு இருக்கிறது.
ஒரு முறை நகைத் திருட்டு சம்பந்தமாக போலீஸ் கெடுபிடிகள் தீவிரமான போது, ராஜேந்திரனை அந்தக் கோவை வீட்டில்தான் தலை மறைவாக வைத்து, பெயில் வாங்கினாள் மலர்.
இந்த நகைத்திருட்டில் குற்றவாளி யார் என்பது தெள்ளத் தெளிவாக மலருக்குத் தெரியும்.
சி சி டி வி கேமராக்களை அணுஅணுவாகச் சோதித்துப் பார்த்துவிட்டாள்.
ஜோடிக்கப்பட்ட வழக்குகளை உடைப்பது மிகவும் கடினம்.
அது போன்ற வழக்குகளை நியாயமான முறையில் தீர்க்க, காலம்தான் ஒரே ஆயுதம் என்பதை அறிந்தவள் மலர்.
மலர் எப்போதும் ராஜேந்திரனுக்கு ஆறுதலாய் நேர்மறையாகத்தான் பேசுவாள்.
இப்போதெல்லாம் பல வங்கிகளின் நடை முறைகள் இதுதான்.
ஆட்குறைப்புகளினால் ஏற்படும் பாதிப்பை சரிகட்டுவதற்காக, ‘ஓஏ’வுக்கு தனி மேசை நாற்காலி, கம்ப்யூட்டர் எல்லாம் கொடுத்து, புது அக்கவுண்ட் ஓப்பனிங், பாஸ் புத்தகம் எண்ட்ரி போடுதல், அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்தல், இப்படியாக ஒரு குமாஸ்தாவைப் போல வேலை வாங்கி விடுகிறார்கள் சாமர்த்தியமுள்ள மேனேஜர்கள்.
லாக்கர் திறந்து பார்க்க வருபவர்களுக்கு அஸிஸ்டெண்ட் மானேஜர்தான் சென்று லாக்கர் திறந்து விட வேண்டும், அதையும் ஓ ஏவை விட்டே செய்யச் சொல்வது இப்போதெல்லாம் நடைமுறை வழக்கமாகி விட்டது.
மேனேஜராக மலர் வந்தபிறகு, அவர் பல படி மேலே போய்விட்டாள்.
ஓ ஏ ராஜேந்திரனுக்கு கம்யூட்டரில் எக்ஸ் எல் எப்படிப் பயன் படுத்துவது என்பதை, புதிதாக கிளைக்கு வந்த அரிமா மூலம் கற்றுக் கொடுக்கச் செய்தாள்.
கம்யூட்டர் சகிதம் தனி மேசை நாற்காலிகள் போட்டு, ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டபோது அது ராஜேந்திரனுக்குப் பெருமையாகத்தான் இருந்தது.
அது மட்டுமில்லை.
மலர், தன் பொறுப்புகள் எல்லாவற்றையும் உதவி மேலாளரின் தலையில் கட்டிவிட்டார்.
எல்லா நாட்களும் பிஸியாக இருக்கும் நகைக்கடன் பிரிவில், அப்ரைசரோடு இணைந்து நகை லாக்கர் திறந்து அடகு பிடித்த நகைகளை வைப்பதும், மீட்க வருபவர்களுக்கு எடுத்துக் கொடுப்பதுமான, மிகவும் பிஸியான, ரிஸ்க்கான வேலையை துணை மேலாளரிடமிருந்து பறித்து, ராஜேந்திரனிடம் கொடுத்தாள்.
மேனேஜரை எதிர்த்துப் பேசத் திராணியின்றி அந்த வேலையை ஏற்றுக் கொண்டான் ராஜேந்திரன்.
வேண்டாத வேலையைச் செய்தால் விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்.
பாபுலால் குப்தா, தான் அடகு வைத்த நகைகளில் நான்கு சவரன் சங்கிலிகள் இருந்த மூன்று கவரைக் காணவில்லை என்று புகார் எழுப்ப, அந்தப் பழி ராஜேந்திரன் மீது விழுந்தது.
– தொடரும்…
– ஜனனி…! ஜெயம் நீ..! (நாவல்), 25-02-2026, தேவியின் கண்மணி.
![]() |
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்
கே.என்.சுவாமிநாதன்
May 16, 2026
மனைவியின் காதலன்
வி.உஷா
May 16, 2026
சாவின் ஒத்திகை
அம்பாள் ஆர்.முத்துமணி
May 16, 2026
