சாவின் இரவு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 21 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

மே மாதத்தின் அந்த  நாட்கள், காலத்தின் ஆகப்பெரும் கொடூரத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலின் அந்தச் சிறிய நிலப்பரப்பிற்குள் மூன்று இலட்சம் மக்கள் முண்டியடித்துக் கிடந்தார்கள். அது வாழ்விற்கும், சாவிற்கும் இடையிலான மெல்லிய நூலிழையில் ஒட்டுமொத்த ஜனங்களும் தொங்கிக் கொண்டிருந்த தருணம். 

வானத்திலிருந்து இடியென இறங்கும் குண்டுகளும், கடலிலிருந்து பாயும் பீரங்கி எறிகணைகளும் அந்த எளிய மக்களின் சதைகளையும் எலும்புகளையும் துண்டு துண்டாகக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டன.

கிடுகு, பனையோலைகளாலும், பொலித்தீன் தட்டிகளாலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அந்த எளிய மக்கள் தங்குமிடக் கொட்டில்களில், காயமுற்ற ஜனங்களின் அலறல் சத்தம் காற்றின் திசையெங்கும் மரணத்தின் வாடையைப் பரப்பியது. 

அங்கே எந்த மருத்துவமனையும் இல்லை, அத்தனையும் குறிவைத்துத் தகர்த் தெறியப் பட்டது. டாக்டர்களும் இல்லை. காயங்களுக்குக் கட்ட துணிகள் இல்லை, மருந்துகள் இல்லை. சாதாரண சமையல் கத்திகளும், உப்புக் காற்றில் துருப்பிடித்த கத்தரிக் கோல்களுமே எஞ்சியிருந்தன. எந்த மயக்க மருந்தும் இன்றி, துணியைச் சுருட்டி வாயில் திணித்து விட்டு, சதைகளைக் கிழித்துக் குண்டுச் சிதறல்களைச் சாதாரண மக்களும் முதலுதவிப் போராளிகளும் செய்து கொண்டிருந்தார்கள. 

காயப்பட்ட ஒருவரையொருவர் கைகளால் அள்ளியெடுத்த போது எழுந்த ஓலங்களுக்கு மத்தியிலும், எதிரியின் குண்டுகள் அந்தக் கொட்டில்களையும் குறிவைத்து அழித்துக் கொண்டிருந்தன.

அங்கிருந்த பெரியவர் அகிலன் கொட்டிலின் நடுவே வந்து நின்று, நடுக்கத்துடன் அந்த இறுதிச் செய்தியைச் சொன்னார்:

“இன்று நடு இரவுடன் நாங்க எல்லாரும் இந்த இடத்தை விட்டு நகரணும்… இராணுவம் பக்கத்தில நெருங்கிட்டுது…”

சுற்றிலும் காயங்களுடன் கிடந்த ஜனங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாருடைய கண்களிலும் கண்ணீர் இல்லை; அவை எப்போதோ வறண்டு போயிருந்தன. இனிக் கண்ணீர் விட எதுவும் இல்லை. 

“பெரியவரே… அப்போ எழும்பக் கூட முடியாம படுத்திருக்கிற எங்கட சொந்தங்களை என்ன செய்யப் போறோம்?” என்று ஒரு இளைஞன் தழுதழுத்த குரலில் கேட்டான்.

“இப்போதைக்கு ஓரளவு நடக்க முடிந்த எல்லாரும் இந்த பாதுகாப்பற்ற இந்த இடத்தில இருந்து நகருங்கோ. இங்கிருந்தா எல்லாரும் ஒண்ணா சாக வேண்டியதுதான். போக வழியிருக்கிறவங்க போங்கோ…” நடக்க முடியாதங்கள விட அப்படியே வேண்டியதுதான்.. என்று பெரியவர் அகிலன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.  

பாதுகாப்புள்ள இடமென்று இங்கு ஏதேனும் உண்டா ?? 

ஜனங்கள் தங்களின் காயம்பட்ட உடல்களை இழுத்துக்கொண்டு, எங்கு செல்வதென்று தெரியாமல் அந்தப் பெருவெளியில் சிதறி ஓடினார்கள். அது உலக வரைபடத்தில் மனிதநேயம் முழுமையாகத் துடைத்து எறியப்பட்ட தருணம்.

இப்போது அந்த இருண்ட, உடைந்த கொட்டிலில் நானும் நடக்க முடியாத  என் சக மனிதர்களோடு காயமுற்றுக் கிடக்கிறேன். அறையின் மூலையில், மற்றவர்களுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது எதிரியின் ரவை காலையும் வயிற்றுப் பாகத்தையும்  துளைத்ததில் பலத்த காயமடைந்த இளம் பெண் நிலா உயிருக்குப்போராடிக் கொண்டிருந்தாள். சில நாட்களுக்கு முன்புதான், அவளது தந்தை இருந்த பக்கத்துக் கொட்டில் குண்டுவீச்சில் சிதறி, அவர் உடல் உருக்குலைந்து செத்து வீழ்ந்தார். அவளது அண்ணனாக இருந்து இந்தச் செய்தியைக் கொண்டு சேர்க்கும் ஆறாத் துயரம் அன்று எனக்கு வாய்த்தது.

செய்தியைக் கேட்ட அன்று, அவள் என் சட்டையைப் பிடித்துக் கதறியது என் நெஞ்சில் நிழலாடியது: “அண்ணை… எனக்கு அப்பா வேணும் அண்ணை… அவர் இல்லாமல் நான் எப்படி தனியா இருப்பேன்?”

நான் அவளது கைகளைப் பற்றி, “அழாத நிலா… இதுதான் நமக்கான  விதி தமிழராய்ப் பிறந்ததற்காக  நாம் பெற்ற பரிசு இதுதான் இனி இருக்கும் ஒருவருக்கொருவர்தான்   நமக்கு உறவு . என்று தேற்றினேன். 

அவளது கண்ணீரைத் துடைத்த , சில நாட்களில் நானும் காயப் பட்டேன். என்னுடைய காயங்களுக்குத் துணிகளை அருவருக்காமல் கிழித்துக் கட்டுப்போட்டுப் பராமரித்த அதே மகள் நிலா, இன்று எனக்கு முன்னால் காயமுற்றவளாய் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். “அப்பா… வலிக்கிதுப்பா…” என்று அவள் இப்போது அரை மயக்கத்தில் என்னை ‘அப்பா’ என்று கூப்பிட்டபோது, அவளுக்குக் கொடுக்க என்னிடம் ஒரு துளி தண்ணீர் கூட இல்லை.

நிலாவுக்குப் பக்கத்தில்,  மூத்த பெரியவர் கதிரவன் அண்ணா படுத்திருந்தார். நெஞ்சில் ஏற்பட்ட பலத்த அதிர்வுக் காயத்தால் அவரால் மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஒட்சிசனோ அல்லது எந்தவொரு உயிர் காக்கும் கருவியோ இல்லாத அந்த நள்ளிரவில், அவர் மூச்சுக்காற்று கிடைக்காமல் தவிப்பதைப் பார்த்து நான் ஓடிச் சென்று அவரது கைகளைப் பற்றினேன்.

“தம்பி… மூச்சு முட்டுது தம்பி…” என்று வேதனையில் அவரது தொண்டை விம்மியது.

“பொறுங்க அண்ணா… விசிறி விடுறேன்…” என்று நான் காகித அட்டை ஒன்றால் விசிறினேன்.

“வேண்டாம் தம்பி… சாவைத் தவிர இனி இங்க ஒண்ணும் மிச்சம் இல்ல…” என்று கூறிக்கொண்டே, சாவிற்குத் தயாராக தன் உடலை வில்லாக வளைத்து அவர் உயிரை இழுத்துக் கொண்டிருந்தார். என்னால் கண்ணீர் சொரிந்து வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

மற்றொரு பக்கம், என் வாழ்வு முழுவதிலும் என்னோடு நிழலாகப் பயணித்த என் போராளி நண்பன் இனியன் கிடக்கிறான். அவனும் ஏற்கனவே முந்தைய குண்டுவீச்சில் இரு கையையும் ஒற்றைக்காலையும் இழந்தவன். சற்று முன்புதான் கொடூரமான குண்டுவீச்சில் அவனது  மனைவியும், பிள்ளைகளும் சிதறிப் பலியாகியிருந்தனர். அவர்களின் உடல்களைக் கூட அவனால் ஒழுங்காகப் புதைக்க முடியவில்லை. மனிதனாகப் பிறந்ததே மாபெரும் சாபம் என்று அவனை எண்ண வைத்த பொழுது இது. 

தனது  காலின் தொடை எலும்பு முறிந்து, நகர முடியாமல் குருதி வெள்ளத்தில் கிடந்த அவன், என் சட்டையைப் பற்றினான்.

“அண்ணை… என்  பிள்ளைகளும், மனிசியும்  போயிட்டினம். இனி நான் யாருக்காக வாழணும்? இந்த வலியையும் என்னால தாங்க ஏலாது. என் கழுத்துல இருக்கிற குப்பியை கடிக்கப் போறன் அண்ணை கழட்டித் தாருங்கோ என்று  கதறினான். அவன் கையிரண்டும் இயலாத களப் போராளி 

ஒரு சக மனிதனாக, எமக்காகப் போராடி தம் வாழ்நாளா பூராக எம்மைக் காக்கத் துடித்த  அந்த போராளியின் தற்கொலைக்கு நான் எப்படிச் சம்மதிப்பேன்? நாளை பொழுது விடியும்போது, எதிரியின் கைகளில் அவன் சித்திரவதைப் படுவதை விட இதுதான் நடக்கும் என்று தெரிந்தும், “பொறு தம்பி… எல்லாம் சரியாகும்…” என்று அவனது தலையைக் கோதி, அவனிடம் பொறுத்திருக்குமாறு பொய் சொல்லிக் கேட்கிறேன். என் மனசாட்சி என்னைச் சுட்டெரித்தது.

அதே அறையின் மறுமுனையில், வயது முதிர்ந்த லோகன் அண்ணன் படுத்திருக்கிறான். இன்று பகல் அவனது வயிற்றுக் காயத்திற்கு நாங்களே துணியால் இறுக்கிக் கட்டுப்போட்டோம். ஆனால், குருதிப் பெருக்கு நிற்கவில்லை. குடல் வெளிவரும் போலிருந்தது. அவன் அரை மயக்கத்தில், “அண்ணை… சமையல் கஞ்சி ரெடியா? வெளிய பிள்ளைங்க பசியில அழுகுதுங்க…” என்று தன் பசியையும் கடமையையுமே பிதற்றிக் கொண்டிருந்த காட்சி எங்களைக் குமுறி அழச் செய்தது. அவர்கள் கூட இருந்த மக்களை இறுதி வரை நேசித்த சமானியர்கள். 

அப்போது, அந்த ஜனங்களின் குரலாக இருந்த ஊடகர் புகழேந்தி அண்ணாவை அங்கே தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவருக்கும் பாரிய காயம் ஏற்பட்டிருந்தது. தையலோ மருந்தோ இல்லாத நிலையில், தான் இனி உயிர்வாழப் போவதில்லை என்பதை அவர் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார்.

நான் அவர் அருகில் சென்றபோது, அவர் என் கைகளைப் பிடித்துக் கூறினார்: “தம்பி, நான் இனிப் பிழைக்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும். என்னை இங்கேயே விட்டுட்டு நீங்க எல்லாரும் கிளம்புங்க. என்னை வெளியே விட்டுவிட்டு  போகச் சொல்லுங்க, நம் சூரியனோடும் இந்த மண்ணோடும் குருதியோடிய என்மண்ணில் என் உயிர் போகட்டும்.”

அவர் வயிற்றுக் காயத்தோடு, அந்தப் பாழடைந்த அந்தக் கொட்டிலில் இருந்து மற்றவர்களால் வெளியே தூக்கிச் செல்லப்பட்டார். அவரது இறுதிப் பயணம் அதுதான் என்பதை அந்த கொட்டிலில் இருந்த அனைவரும் மௌனமாக உணர்ந்தோம்.

வெளியே முற்றத்தில் பெரியவர் அகிலன் நின்றுகொண்டிருந்தார். அவர் தன் உயிர்மேல் எந்தப் பற்றுதலும் அற்றவராய், எறிகணைகள் விழுந்து வெடித்துக் கொண்டிருந்த அந்த அந்தகார வெளியில், தனக்கென்று ஒரு பதுங்கு குழியைத் தேட வேண்டும் என்ற எண்ணமே அற்றவராய் அப்படியே உறைந்து நின்றார். அவர் கண் முன்னால், அந்த மக்கள் தங்குமிடம் மீண்டும்   எதிரியால் தாக்கப்பட்டுச் சிதறியிருந்தது. குண்டுவீச்சில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உடல்கள் அங்கே குவியல்களாகக் கிடந்தன. இரத்த ஆறு ஓடி மண்ணில் கருஞ்சிவப்பாய் மண் உறைந்திருந்தது.

நான் அவர் அருகில் சென்று, “அண்ணா… உள்ளே எல்லாரும் கிளம்பிட்டாங்க. நாங்களும் போகணும், வாங்க அண்ணா…” என்றேன்.

அவர் உடல்களின் குவியலைப் பார்த்தபடியே, மெதுவான குரலில் சொன்னார்: “தம்பி… இங்க பாரு… இவங்க எல்லாரும் இன்னைக்குக் காலையில கூட என்கிட்ட கஞ்சிக்குத் தட்டோட வந்தவங்க. இப்போ வெறும் பிணக்குவியலா கெடக்கிறாங்க. நான் இவங்களை விட்டுட்டு எங்கே போறது? ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யக் கூட இங்க எதுவும் மிஞ்சல தம்பி…”

அத்தனை துயரங்களையும் பார்த்துப் பழகிய அந்தப் பெரியவர், முற்றிலும் செயலற்று, ஒரு சிலையாக அந்த உடல்களின் குவியலுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தார். அவரது மௌனம் அந்த நள்ளிரவின் இருளை விடக் கொடூரமானதாக இருந்தது.

நள்ளிரவு நெருங்கியது. எங்களின் தற்காலிகக் கொட்டிலின் வாசல் வழியில் இரு பக்கமும் குண்டு வீச்சில் இறந்தவர்களின் உடல்கள், வயல்வெளிகளின் வரம்புகளைப் போல அடுக்கடுக்காக அகற்றப்படாமல் கிடந்தன. அந்த உடல்களுக்கு மத்தியில் தான் நாங்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. எங்கு போவது ??

காயங்களால் எழமுடியாமல், நகர முடியாமல் நிலத்தில் கிடந்த அந்தப் பாவப்பட்ட மனிதர்களை எங்களால் தூக்கிச் செல்ல முடியவில்லை. எங்களின் கைகள் வலியாலும் புண்ணாலும் நைந்து போயிருந்தன..

அதில் ஒருவர்  என் கையைப் பிடித்துக் கெஞ்சினார்: “தம்பி… எங்களை இங்கேயே விட்டுட்டுப் போறீங்களா? எங்களைக் கொன்னுட்டாவது போங்க தம்பி…”

நெஞ்சு வெடிக்கும் துயரத்துடன் எஞ்சியிருந்த சில சொட்டுத் தண்ணீரை அவர்களின் காய்ந்த உதடுகளில் நனைத்துவிட்டு, அவர்களின் நெற்றியில் முத்தமிட்டோம். “எங்களை மன்னித்துவிடுங்கள்…” என்று மனதிற்குள் கதறியபடி, அந்த நடு இரவில் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்.

வெளியே பீரங்கிச் சத்தங்கள் இன்னும் நெருங்கி வந்து கொண்டிருந்தன. மரணத்தின் நிழல் முள்ளிவாய்க்கால் மண்ணை முழுமையாகச் சூழ்ந்தது. உலக நாடுகள் அனைத்தும் மௌன சாட்சியாய் நிற்க, இந்த எளிய மக்களின் கதறல் கேட்க ஆளின்றி காற்றில் கரைந்தது.

காற்றின் திசையெங்கும் மரணத்தின் வாடை,
கடற்கரை மணலெங்கும் குருதியின் ஓடை!
வழியற்றுப் போனவர்களின் இறுதி விம்மல்,
வரலாற்றின் பக்கங்களில் அழியாத தழும்பல்!
மருந்தின்றி மாண்ட உடல்களின் சாட்சி,
மண்ணோடு மறைந்தது மனிதநேய ஆட்சி!

மருந்துகளும், உதவிகளும், உலக நாடுகளின் மனிதநேயமும் அற்றுப்போன அந்த நள்ளிரவில், எங்களின் இறுதி மூச்சும், கைவிடப்பட்ட இந்த மனிதர்களின் ஆன்மாவும், உலகமே கண்டிராத அந்தப் பேரவலமும் அந்த மண்ணின் அழியாத இரத்தச் சாட்சியாய், நெஞ்சை உலுக்கும் வரலாறாய் என்றென்றைக்குமாக உறைந்து போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *