கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 30 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30

25. சாரதாம்பாள்

மோகனாவை அனாதாஸ்ரமத்திலிருந்து ஸ்வீகாரமாக எடுத்துக்கொண்டு வந்தது முதல் அவளை என் சொந்த மகளாகவே பாவிக்கிறேன். அவளும் தன் சொந்த அம்மா வைப்போல் என்னிடம் ஒட்டி உறவாடுகிறாள். வந்து இரண்டு வருஷமாயிற்றே. அவள் என்னிடம் ஒரு பொய் சொன்னதுண்டா! என் வார்த்தையை ஒரு தடவை யாவது தட்டிப் பேசியதுண்டா! இவ்வளவு நற்குணங்கள் இவளுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறதா அல்லது அனாதாஸ்ரமத்தின் பயிற்சியினால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. இரண்டுமே சேர்ந்திருக்க வேண்டும். 

இரண்டு வருஷத்தில் இவள் நாட்டியம் நன்றாகப் பயின்று கொள்வாள் என்று நான் நினைத்திருந்தேன். இந்தப் பெண் ஒரே வருஷத்திற்குள் நான் கற்று வைத்த நாட்டிய வித்தைகளையெல்லாம் கற்றுக்கொண்டு விட்டாளே! கண்ணன் குழலூதுவதை இவள் அபிநயம் பிடிக்கும் போது, நான் மோகனாவைக் கண்ணன் உருவத்தில் அல்லவா காண்கிறேன்! அபிநயத்தில் வெகு நுணுக்கமான பாவத்தையெல்லாம் எவ்வளவு அநாயாசமாகக் காட்டுகிறாள். இது மனிதப் பெண்ணாகவே தெரியவில்லை. போன ஜென்மத்தில் நாட்டியத்தில் விட்டகுறை தொட்ட குறையோடு பிறந்திருக்கிறதோ என்னவோ! இதையெல்லாம் நினைத்துப் பூரிப்படைவதிலேயே என் நேரம் கழிகிறது. 

நாட்டியத்தில் என்னைவிட மோகனா அதிக ஆர்வம் காட்டுகிறாளென்றால் என் மனம் எப்படி இருக்கும்! ஒரே ஆனந்த மயம்தான். புதுப்பதங்களுக்கு இவள் தானாகவே நவீன முறையில் அபிநயம் பிடித்துப் பார்த்துக் கொண்டு, என்னிடம் வந்து “அம்மா இந்தப் பதத்திற்கு இப்படி அபிநயம் பிடிக்கலாமா?” என்று கேட்பாள். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும்! இத்தனை அபூர்வ மான அபிநயம், சொல்லிக் கொடுத்து வருவதில்லையென்று எனக்கு நன்றாகத் தெரியும். 

போன சித்திரையில்தான் நாகேஸ்வரர் சந்நிதியில் மோகனாவின் நடனத்தை அரங்கேற்றம் செய்து வைத்தேன். அப்பொழுது ஜனங்கள் மெய்ம்மறந்து நாட்டியத்தில் லயித்திருந்ததை நன்றாக நான் கவனித்தேன். சுந்தரியின் நடன அரங்கேற்றத்தன்று இருந்த கூட்டத்தைவிட இந்தக் கூட்டம் பெரிதாக இருந்தது. நாட்டியக் கலையில் பரிச்சயமுள்ள சிலர் என் வீடு தேடி வந்து நான் என் அபிமானப் புத்திரியாகிய இந்தப் பெண்ணுக்கு நாட்டியம் கற்பித்த திறமையைப் பாராட்டினார்கள். நானா இவ்வளவையும் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தேன்? நான் எனக்குத் தெரிந்த அளவு கொஞ்சம் சொல்லி வைத்தேன். அவளல்லவா தன் சொந்த யுக்தி கொண்டு இப்படி அபூர்வ மான பாவங்களையெல்லாம் நாட்டியத்தில் சரளமாகக் காண்பிக்கக் கற்றுக் கொண்டாள். அவள் தானாகக் கற்றுக்கொண்ட வித்தைக்காக எனக்கும் வீணான புகழ்! அவளுடைய அழகைப் பற்றிச் சொல்லாதவர்களே கிடையாது. பதினைந்து வயது. மங்கைப் பருவம். மலரும் ரோஜா போலிருக்கிறாள். ஆண்களெல்லாம் அன்று சபையில் இவள் அழகில் சொக்கி மறந்திருந்தார்கள். பெண்களெல்லாம் பொறாமைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அன்று பெரிய பெரிய மைனர்களெல்லாம் நாட்டியம் முடிந்ததும் எங்களுடன் பேசிக்கொண்டே வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் மோகனா அவர்களிடம் பேசவே விரும்ப வில்லையே! ஏன்? சுந்தரியைப்போல இவளுக்கும் ஆண்களையே பிடிக்காதோ? என் பழைய பழக்கத்தினால் என் வீட்டுக்கு அடிக்கடி வரும் கிழவர் சுந்தரபட்டரைக்கூட இவள் வெறுப்போடல்லவா பார்க்கிறாள். 

மோகனா விஷயத்தில் நான் மிகவும் ஜாக்ரதையாக இருக்க வேண்டும். ஆஸ்ரமத்திலேயே வளர்க்கப்பட்ட பெண். அதனால் ஒழுங்கு, நல்நடத்தை, கற்பு என்று எப்படியெப்படியெல்லாமோ பாடம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆஸ்ரமத்தின் தலைவி, உபாத்தியாயினிகள் எல்லோருடைய பரிசுத்தமான வாழ்க்கையையே கவனித்து வந்திருக்கிறாள். மேலும் மோகனாவின் தேஜசைப் பார்த்தால் அவள் உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண் என்றே தோன்றுகிறது. அன்றுகூடச் சொன்னாளே தான் அனாதாஸ்ரமத்திற்கு வருவதற்குமுன் எங்கோ ஒரு வீட்டில் தன் பெற்றோர்களோடு வாழ்ந்ததாகச் சிறிது ஞாபகமிருக்கிறதென்று. நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்ற குணங்கள் எங்கள் குலப்பெண்களைவிட இயற்கையில் அதிகமாகவே அமைந்திருக்கும். ஆண்களைக் கண்டால் மோகனா அவ்வளவு சங்கோஜப் படுவது இயற்கை தான். 

இங்கு வந்து பழகியவுடன் நான் ஒரு தாசி என்பதையும் தாசித்தொழில் என்றால் என்ன என்பதையும் மோகனா ஒருவாறு கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறாள். அவள் பேசும் முறையிலிருந்து தாசித்தொழில் அவளுக்குப் பிடிக்காதென்றுதான் தெரிகிறது. இப்படிப்பட்ட அழகும், குணமும், அறிவும் உள்ள பெண் மனம் வைத்துவிட்டால் ஆயிரக்கணக்காகப் பணம் தேடிவிடலாம். எல்லாம் அவள் நன்மைக்காகத்தான் நினைக்கிறேன். ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தலாம். எத்தனையோ பணக்கார வாலிபர்கள் தாசானு தாசனாக அவளுடைய ஏவல்களைச் செய்யத் தயாராகக் காத்திருப்பார்கள். அவளுடைய நாட்டியக் கலையின் புகழைப் பரப்புவதற்கும் எத்தனையோ பேர் முன்வருவார்கள். நான் வாழ்ந்ததைவிட அதிகமான பேரும் புகழும் பெற்று செல்வச் சீமாட்டியாக வாழலாம். ஆனால் அவளுடைய எண்ணம் எப்படி இருக்கிறதோ! என்னதான் இருந்தாலும், இந்த வயதில் உடலின் இன்ப உணர்ச்சிகள் தலை தூக்கி நிற்குமல்லவா! சந்நியாசினி போல இன்பங்களையெல்லாம் இந்த வயதில் தள்ளிவிட முடியுமா? வண்டுகளைத் தன்னிடம் இழுப்பதற்காகத் தானே மலர் கவர்ச்சிகரமான அழகையும் மதுரமான தேனையும் பெற்றிருக்கிறது. மலர், வண்டைக் கண்டவுடனேயே மயங்கி இன்ப விருந்தளிக்கிறதே! இதுதானே இயற்கை! ஆனால் இந்த மோகன புஷ்பம் வண்டுகளை வெறுக்கிறதே! இயற்கையை திர்த்துப் போராடுகிறாளா? செல்வம் சேர்க்கவேண்டுமென்று இவளுக்கு ஆசையில்லையா! தன் கலையின் மகிமையை நாடெங்கும் பரப்ப இவளுக்கு ஆர்வமில்லையா? ஆண்களை அடிமைப் படுத்த இவளுடைய பெண்மை உணர்ச்சி துடிதுடிக்க வில்லையா! இந்த மோகனாவின் குணமும் விபரீதமாகத் தான் இருக்கிறது. 

தாசியாகவே வாழ்ந்து விட்ட எனக்குக் குடும்பப் பெண்களின் மனோ று நன்றாகப் புலப்படாதுதான். மோகனாவின் மனம் உறுதியுள்ளதாக இருந்தால் அவளுடைய போக்கின்படியே விட்டுவிட வேண்டியதுதான். சுந்தரியை இழந்து தவித்த அனுபவம் ஒன்று போதாதா எனக்கு. இனி மோகனாவிடம் ஆண்களைப் பற்றியே அதிகமாகப் பேசக்கூடாது. யாராவது அவளை விரும்பி வந்தாலும் அவர்களை நானே வெளியில் அனுப்பிவிட வேண்டும். அந்தப் பெண்ணிற்கு விருப்பமில்லாத ஒன்றை நான் வற்புறுத்த முயற்சிப்பானேன். அவளுக்காக என்னதோன்று கிறதோ அதன்படி செய்யட்டும். என்னிடமுள்ள சொத்தை வைத்துக்கொண்டே அவள் சுகமாக வாழட்டும். அவள் தெரிந்து கொண்டிருக்கும் நாட்டியக்கலையே அவளுக்கு இன்பமளிக்கும். ஆனால் வாழ்க்கையின் இன்பம் அதோடு முடிந்து விடுகிறதா? அவள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்த விரும்புகிறாள் என்பதையாவது அறியவேண்டுமல்லவா! ரொம்ப ஜாக்ரதையாகப் பேச்சுக்கொடுத்து இது விஷயமாக அவள் மனதை அறியவேண்டும்.

26. மோகனா

என் நாட்டியத்தை மிகவும் விமரிசையாக நாகேஸ் வரர் கோவிலில் அரங்கேற்றி வைத்தார்கள். அன்றைய தினத்திலிருந்து என் மனம் ஏனோ நிம்மதியில்லாமலிருந்து வருகிறது. இதற்குக் காரணம் அன்று என்னை ஆடவர்கள் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்ததுதான். அதிலிருந்து எத்தனையோ பேர் எங்கள் வீட்டிற்கும் வந்து அடிக்கடி என்னோடு பேச முயற்சிக்கிறார்கள். ஒரு பைத்தியக்காரன் என் பக்கத்திலேயே நெருங்கி உட்கார வருகிறான். வேறு எந்த வீட்டுப் பெண் அருகிலாவது இவ்வளவு தைரியமாக நெருங்குவானா அவன்? என்னிடம் மட்டும் இப்படி நெருங்குவதற்கு அவனுக்கு என்ன உரிமை! அவன் என்னிடம் நெருங்குவதை ஆட்சேபிக்க என்னைத் தவிர வேறு யாருமில்லை. என் தாயார் கூட இதைத் தடுக்க வில்லையே ஏன்! இனம் தெரியாத ஆண்கள் என்னிடம் இம்மாதிரி அயோக்கியத்தனமாக நடப்பது இவளுக்கும் பிடித்திருக்கிறதா? 

நான் அனாதாஸ்ரமத்திலிருந்து இங்கு வந்தவுடனேயே என்னைப் பற்றிப் பலர் என் புதுத் தாயாரிடம் விசாரித்தார்கள். இரண்டொரு தாசிகள் “சரியான குட்டியைத்தான் பிடித்துக்கொண்டு வந்திருக்கிறாய். ஊரிலுள்ள மைனர்களை யெல்லாம் மயக்கி அவர்கள் பணத்தையெல்லாம் சுரண்டி விடுவாள்” என்று சொன்னார்கள். அப்புறம் நான் கொஞ்சம் கொஞ்சமாக தாசிகள் என்றால் யார்; அவர்களுடைய தொழில் என்னென்ன என்று எனக்குத் தெரிந்த இரண்டொரு நல்ல பெண்களிடம் கேட்டறிந்தேன். நான் அவர்களிடம் இதைப்பற்றிக் கேட்டதே அவர்களுக்கு விபரீதமாக இருந்தது. தாசிகளைப்பற்றி அவர்கள் சொல்லியபோதே எனக்குத் தாசிக் குலத்தைப் பற்றி வெறுப்பு உண்டாயிற்று. அவர்கள் சொல்லிய வார்த்தைகளின் உண்மையை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பிக்கும்போது மனம் துடிதுடித்து அலறுகிறது. என் தாயிடம் இதைப்பற்றி முறையிடலாமென்றால் பயமாக இருக்கிறது. அவளே ஒரு தாசி. இன்னும் தாசி மனப் பான்மையுடனேயே இருக்கிறாள். அவளிடமே தாசித் தொழிலைப்பற்றி இழிவாகப் பேசினால் அவள் என்ன நினைப்பாளோ தெரியவில்லை. 

நான் இரண்டொரு குடும்பப் பெண்களிடம் ரொம்பப் பிரியமாகப் பழகுவதைக்கூட என் தாய் விரும்பவில்லை. அதையும் ஜாடைமாடையாகத் தெரிவிக்கிறாள். இதற்கு என்னைக் கண்டிக்காமல் அவர்களைப்போய்ச் சண்டை பிடித்தாளாம். “நான், பெற்று வளர்த்த பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு, இந்தப்பெண்ணை எடுத்து வளர்க்கிறேன். நீங்கள் இவளிடம் ஏதாவது சொல்லி வைத்து அதனால் இவள் மனம் திரும்பி எங்காவது ஓடிவிடாமல் இருக்க வேண்டும். தயவு செய்து ஒன்றும் போதனை செய் யாதீர்கள்.” என்று அவர்களிடம் சொன்னாளாம். 

இவளுடைய மகள் சுந்தரி பிறருடைய பேச்சைக் கேட்டுத் தன் பெற்றதாயை மறந்து புத்தியில்லாமல் ஓடினால், நானும் அப்படிச் செய்துவிடுவேனென்று நினைக்கிறாள் போலிருக்கிறது. நான் அப்படியெல்லாம் இவளுக்குத் துரோகம் செய்ய மாட்டேனென்று ஒரு நாள் பேச்சு வாக்கில் நன்றாக உறுதி கொடுத்துவிட்டேன். அருமையான கலையை எனக்குக் கொடுத்துப் பிரியமாக வளர்த்த அன்னையைப் பிரிந்து ஓடுவதா? என் வாக்குறுதியைக் கேட்டு என் தாய் சாரதாம்பாள் எவ்வளவு ஆனந்தமடைந்தாள். என் வளர்ப்புத்தாயின் மகள் சுந்தரி எதனால், எப்படி, எதற்காக ஓடினாள் என்றெல்லாம் விசாரிக்க வேண்டு மென்று ஆவல். ஆனால் எவரும் அதைப்பற்றிச் சொல்ல மறுத்துவிட்டார்கள். சாரதாம்பாள் நாட்டியத்தில் எவ்வளவு திறமைசாலியோ அவ்வளவுக்குப் பிறரிடம் சண்டை யிடுவதிலும் சாமர்த்தியசாலியென்று அக்கம் பக்கத்தி லுள்ளவர்கள் சொன்னார்கள். ஆனால் எனக்குத் தெரிந்த வரை இவள் சண்டைபோடுவதையே நான் பார்த்ததில்லை. எவ்வளவோ பிரியமாகத்தான் எல்லோரிடமும் நடந்து கொள்கிறாள். யாராவது எனக்குப் போதனை செய்து, நான் இந்த வீட்டைவிட்டு ஓடும்படி செய்துவிடுவார்களோ என்றுமட்டும் இவளுக்குப் பயமிருக்கிறது. நான் இவளை விட்டுப் பிரிந்துவிடக் கூடாது என்ற பாசத்தினால் வருகிற பயம்தான் இப்பொழுது கோபமாக மாறியிருக்கிறது. மற்றப்படி அவளுக்கு என்னைப்பற்றியவரையில் மிகவும் திருப்தி. ஆடவர்கள் என்னோடு பேசுவதையும் நெருங்கிப் பழகுவதையும் நான் விரும்பவில்லையென்பதை இவள் நன் றாகத் தெரிந்துகொண்டாள். இப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வருகிற வாலிபர்களிடம் இவளே ஏதாவது சொல்லி உடனே வெளியே அனுப்பிவிடுகிறாள். 

நடனக்கச்சேரி செய்யவேண்டுமென்று பல இடங் களிலிருந்து வரவேற்புகள் வரும். அப்பொழுதெல்லாம் என் தாய் “மோகனா, இந்த ஊரில்போய் நாட்டிக்கச்சேரி செய்யவேண்டும். உனக்கு இஷ்டமிருக்கிறதா? இல்லையா? இஷ்டமில்லையானால் போகவேண்ட டாம்.” என்று பயந்து கொண்டேதான் கேட்பாள். 

என் நாட்டியத் திறமையைப் பிறருக்குக் காட்டுவதில் எனக்கு இஷ்டமில்லாமலா இருக்கும். அபூர்வமான கலையைப் பழகியது எதற்காக? வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பதற்காகவா? ஜனங்களின் மனதை மகிழ்விப் பதற்காகத்தானே கலைகள் தோன்றின! நாட்டியக் கலையை நான் என் தாய் சாரதாம்பாளிடம் நன்றாகக் கற்றிருக்கிறேன். இந்தக் கலையைப் பிறர் அனுபவிக்கும்படி செய்வது என் கடமைதானே! ஆடவர்கள் இதையே வியாஜமாக வைத்துக்கொண்டு என் விருப்பத்திற்கு மாறாக என்னிடம் நெருங்கிப் பழக முயற்சிக்கிறார் களல்லவா! அதனால் நான் வெளியில் போய் நாட்டியம் ஆடுவதையே வெறுக்கிறேன் என்று அவள் சந்தேகப்படுகிறாள். ஆடவர்களைப் பற்றி எனக்கு அக்கரையே இல்லை. அவர்களுடைய அற்ப ஆசைகளுக்கெல்லாம் இடம் கொடாதபடி நான் பார்த்துக் கொள்வேன். அதற்கு வேண்டிய மனவுறுதி எனக்கு உண்டு. ரோஜாச்செடியை வளர்த்து அதன் அழகிய மலரை அடைய வேண்டுமானால் முட்கள் நம்மைக் குத்திவிடாமல் சமாளித்துக் கொள்ள யூகம் வேண்டும். செடியிலுள்ள முள் குத்தி விடுமேயென்று ரோஜா மலரைப் பறித்து அனுபவிக்காமல் விட்டுவிடுவதா! ஜனங்கள் புனிதத்தன்மையோடு நாட் டியக் கலையை மட்டும் அனுபவிக்கும்படி செய்ய எனக்குத் திறமையுண்டு. அநேக தாசிப்பெண்கள் பணம் சேர்க்கும் ஆசையுடனும்,மிருக உணர்ச்சியைக் கிளறிவிடும் நோக்கத் துடனும் நாட்டியத்தை ஆடி வந்திருப்பதனால்தான் நடன மேடையில் கலை மனப்பான்மை மறைந்து காம விகாரங் கள் மிகுந்து விட்டன. தேவியினுடைய சிலையைப் பக்தி மனப்பான்மையோடு பார்ப்பதற்குப் பழகியிருக்கிறார் களல்லவா இந்த ஆடவர்கள். அதே போல ஜனங்கள் என் உருவத்தைக் கலையின் பீடமாக நினைத்து மகிழ்ந்தால் காமவிகாரத்திற்கு இடமேது! 

ஓவியத்திற்குத் திரைச்சீலையும், வர்ணங்களும் சாதன மாக இருப்பது போல நாட்டியக் கலையை வெளிப்படுத்துவதற்கு என் அழகிய உருவம் ஒரு சாதனம். அற்புதமான ஓவியத்தின் அழகை வியந்து அனுபவிக்காமல் அது வரையப்பட்டிருக்கும் துணியை, முண்டாசாகக் கட்டிக்கொள்ள ஒருவன் விரும்பினால் அவனை எவ்வளவு பெரிய மூடன் என்று உலகம் சொல்லும். ஜனங்கள் உடலை மறந்துவிட் டுக் கலையைமட்டும் அனுபவித்து மகிழும்படி செய்ய எனக்கு வழி தெரியும். ஆகையால் நட்டுவக்காரருடன் சென்று பல இடங்களில் என் நாட்டியத் திறமையைக் காட்டி வருகிறேன். ஜனங்கள் நாட்டியக் கச்சேரியில் நாட்டியத்தை மட்டிலும் அனுபவிக்கப் பழகி வருகிறார்கள். 

என் எதிர்கால வாழ்க்கையை எப்படி நடத்த விரும்புகிறேனென்று அறிய என் தாய் முயற்சிக்கிறாள். அதைப் பற்றி நான் திட்டம் போட்டுக்கொண்டுதானிருக்கிறேன். 

27. முருகன்

எத்தனையோ தடவை அனாதாஸ்ரமத்துக்கு அலைந்த பின்புதான் ஆஸ்ரமத்தின் தலைவியைக் காணமுடிந்தது. மோகனாவைப்பற்றி அவர்களிடம் விசாரித்தறிந்தேன். நாலைந்து வருஷங்களுக்கு முன்பே, நாகப்பட்டணத்திலிருந்து வந்திருந்த சாரதாம்பாள் என்ற ஒரு அம்மணிக்கு என் தங்கை மோகனாவை ஸ்வீகாரமாகக் கொடுத்து விட்டார்களாம். இதைக் கேட்டவுடன் என் மனம் துடி துடித்தது. நாங்கள் அவர்களிடம் அடைக்கலமென்று ஒப்படைத்த ஒரு பெண்ணை இவ்வாறு இன்னொருவரிடம் கொடுத்து விடுவது நீதியாகுமா என்று அந்த ஆஸ்ரமத் தலைவியிடம் சண்டை போட நினைத்தேன். ஆனால் ஒன்றுமே பேசவில்லை. என் கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு “ஏனம்மா இம்மாதிரி ஒப்படைத்தீர்கள்?” என்று கெஞ்சிக் கேட்டேன். கல்வியறிவையும் கலையறிவையும் பரப்பு வதுதான் ஆஸ்ரமத்தின் நோக்கமாம். அங்கு வளர்க்கப் படும் பிள்ளைகளை இந்த நோக்கத்துடனேதான் வளர்க்கிறார் களாம். மோகனாவிற்கு நாட்டியக்கலையில் ஆர்வமிருந்ததா லும், நாட்டியக்கலையைப் பயிற்றுவிக்கும் நோக்கத்துடனேயே சாரதம்பாள் அவளை ஸ்வீகாரமாகக் கேட்டதாலும், பலத்த ஆலோசனையின் பின்னர் அவளைச் சாரதாம்பாளோடு அனுப்பிவிட்டதாக அந்த அம்மாள் விளக்கி னார்கள். 

அந்த அம்மாளைச் சொல்வதில் என்ன குற்றமிருக்கிறது. மோகனாவை வளர்க்கமுடியாத நிலமையில் நாங்கள் இருந்த போது என் தகப்பனார் “ஆஸ்ரமத்திற்கே இவள் சொந்தம்” என்று கொடுத்துவிட்டாரே. ஆகையினால் அவர்கள் தங்கள் இஷ்டப்படி செய்தது நியாயம் தானே! மோகனா நாட்டியக் கலையைப் பயில்வதே நல்லது என்று அவர்களுக்குப் பட்டிருக்கலாம். அது அவர்களுடைய குற்றமாகுமா? 

நாட்டியக்கலை பயிற்றுவிக்கும் சாரதாம்பாள் என்றால் அவள் ஒரு தாசியாகத்தான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. என் தங்கை மோகனா ஒரு தாசியின் வீட்டில் ஸ்வீகார புத்திரியாக இருந்து நாட்டியம் பழகுவதா? என் தங்கை ஒரு நாட்டியக்காரி! தான் இன்னாருடைய தங்கை; இன்னாருடைய மகள் என்று இவளுக்கு இப்பொழுது தெரியவா போகிறது. சிறு வயதில் பிரிந்தது. அதே ரூபத்தில்தான் இன்றும் அவள் என் மனக்கண்ணில் நிற்கிறாள். எப்பொழுதாவது நாட்டியக்காரி மோகனா என்று நான் கேள்விப்பட்டால் என் மனம் என்ன பாடு படும். இந்த அவமானத்தை என் செல்வத்தினால் நிவர்த்திக்க முடியுமா? 

மோகனாவிற்கு  நாட்டியத்தில் விருப்பமிருந்ததாக ஆஸ்ரமத்துத் தலைவி சொன்னார்கள். சிறு பெண். தெரியாமல் ஏதோ சொல்லியிருப்பாள், நாட்டியம் பழக விரும்புகிறேன் என்று. தாசிக் குலத்தைப் பற்றியெல்லாம் அவளுக்கு அப்பொழுது என்ன தெரிந்திருக்கும்! பொல்லாத தாசிகள் இம்மாதிரிச் சிறு பெண்களை ஏமாற்றிக்கொண்டு போய் வளர்த்து, வயது வந்தவுடன் அவர்களை ஆடவர்களின் அக்கிரமங்களுக்கு ஆளாக்கிவைத்துப் பணம் சேர்க்கிறார்கள். இதை ஆஸ்ரமத்தின் தலைவி ஏன் உணராமல் போய்விட்டாள்! என் தங்கை மோகனா தாசித்தொழில் நடத்திக்கொண்டிருக்கிறாள் என்பதை நான் என்றைக்காவது கேள்விப்பட்டுத்தான் ஆகவேண்டுமா! இந்த எண்ணம் என் மனதைச் சுரீரென்று குத்துகிறது. 

எனக்கு மோகனா என்றொரு தங்கை உண்டென்பதையும், அவள் நாகப்பட்டணத்திலுள்ள ஒரு தாசி வீட்டில் வளர்ந்துவருகிறாள் என்பதையும் எவருமே அறியமாட்டார்கள். ஆனால் என் மனதை நான் ஏமாற்ற முடியுமா? மோகனாவைப்பற்றி எப்பொழுது நினைத்தாலும் அவள் தாசி வீட்டுப் பெண் என்றல்லவா நினைக்க வேண்டிவரும். இதைப்பற்றி எண்ண எண்ண என் மனம் குழம்புகிறது. வேறு வேலையே ஓடவில்லை. நாகப்பட்டணத்தில் அந்தத் தாசி சாரதாம்பாளின் விலாசத்தை ஆஸ்ரமத்திலிருந்து கேட்டு எழுதி வைத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் அங்கு போய் என் தங்கையிடமே அவளுடைய பிறப்பு வளர்ப்பை யெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டும். சாரதாம்பாளிடம் கெஞ்சிக்கேட்டு, அவளை என்னோடு அனுப்பிவிடும்படி சொல்லவேண்டும். அவள் சம்மதிக்கவில்லையானால் வேண்டிய பணம் கொடுத்தாவது அந்தத் தாசிக் குடும்பத்திலிருந்து என் தங்கை மோகனாவை மீட்டு வரவேண்டும். மோகனா தனது உண்மை வரலாறுகளை என் மூலம் தெரிந்து கொண்டால் உடனே என்னிடம் ஓடி வந்து விடுவாளென் பதில் சந்தேகமே இல்லை. இது விஷயமாக நாகப்பட்டிணத்திற்குப் போய்த் தீவிர முயற்சி செய்வதுதான் சரியான வழி. 


நாகப்பட்டிணத்திற்குப்போய் சாரதாம்பாளைப்பற்றி விசாரித்தேன். நான் யாரிடம் விசாரித்தேனோ அந்த ஆட்கள் என்னைப்பற்றியே விசாரிக்க ஆரம்பித்தார்கள். மோகனாவைக் ‘காதலி’ க்க விரும்பும் ஒருவனாக என்னை அவர்கள் சந்தேகித்து விட்டார்கள். அந்த நோக்கத்துடன் நான் அந்த வீட்டிற்குள் போக முடியாது என்று எனக்குச் சொல்வதற்காகத்தான் அவர்கள் என்னைப்பற்றி இப்படி விசாரித்தார்களாம். இதிலிருந்து மோகனா இன்னும் பரிசுத்தமான பெண்ணாகவே இருக்கிறாள் என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன். நான் என் தங்கை மோகனாவின் வரலாற்றையும் என்னுடைய இப்பொழுதைய நிலமையையும் தங்கையின் மீதுள்ள பாசத்தையும் அவர்களுக்கு எடுத்து விளக்கினேன். அதன் மேல் அவர்களுக்கு என் மீது இரக்கம் ஏற்பட்டது. நான் நேரடியாக சாரதாம்பாளிடம் போய் எவ்வளவு கெஞ்சிக் கூத்தாடினாலும் அவள் தன் உயிருக்குயிராக வைத்திருக்கும் மோகனாவை விடமாட்டாளென்று திட்டமாகத் தெரிவித்தார்கள். நான் மோகனாவைத் தனியாக அழைத்துக் கொண்டுபோய் எல்லா உண்மைகளை யும் தெளிவாகக் கூறினால் ஒருசமயம் அவள் சகோதர பாசத்தினால் தன் தாய்க்குத்தெரியாமல் என்னுடன் இருந்து விடச் சம்மதிக்கலாம் என்கிறார்கள். மோகனாவைத் தனிமையில் கண்டு பேசுவதற்கும் அவர்களே ஒரு வழி சொன்னார்கள். 

நான் சாரதாம்பாளின் வீட்டுக்குப் போய் ஏதாவது ஒரு விசேஷத்தைச்சொல்லி, மோகனாவை நாகர்கோவிலில் ஒரு நாட்டியக்கச்சேரி செய்வதற்கு அமர்த்த வேண்டும். அதன்படி நட்டுவக்கிழவனுடன் மோகனா நாகர்கோவிலுக்கு வருவாள். அப்பொழுது அவளிடம் எல்லா விபரத்தையும் தெரிவித்து அவளை அங்கேயே வைத்துக் காண்டு விடவேண்டும். இதுதான் அவர்கள் சொன்ன வழி. 

அவர்கள் சொன்ன யோசனையின்படியே சாரதாம்பாளின் வீட்டுக்குப் போனேன். மோகனாவை நான் கண்டேன். இளமை ததும்பும் மகா ரூபவதியாகக் கண்டேன் அவளை. அழுத முகத்துடன் சிறுவயதில் பிரிந்தவளை ஆனந்தப் புன்னகையுடன் மங்கைப் பருவத்தில் கண்டேன். அதே முகம். நான் சிறுவயதில் கண்டமுகம் அப்படியே இருக்கிறது. நேற்றுப் பிரிந்து இன்று காண்பதுபோல் இருந்தது. அவளைக் கண்டவுடனேயே “தங்கை” என்று சொல்லிக் கட்டிக்கொண்டு கோவென்று அழவேண்டும் போலவிருந்தது. அத்தனை ரூபவதியான என் தங்கையை அந்த க்ஷணமே தாசிக்குலம் என்ற மடுவிலிருந்து கரையேற்ற வேண்டுமென்று துடிதுடித்தேன். அத்தனை ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு சாரதாம்பாளிடம், நாகர்கோவிலில் யூனியன் போர்டு தேர்தலில் நான் அடைந்த வெற்றியைக் கொண்டாட என் வீட்டில் ஒரு தேநீர்க் கச்சேரி வைக்கவேண்டுமென்றும் அதற்கு மோகனாவின் நாட்டியம் வைக்க வேண்டுமென்றும் சொன்னேன். என் தங்கையென்று தெரிந்தும் நான் அவளை நாட்டியக் கச்சேரிக்காக அழைக்கும்படி நேர்ந்ததே என்று எனக்கு வருத்தம். அவள் நாட்டியமாட வரவேண்டுமென்பது என் நோக்கம் அல்லவே. இந்த உபாயத்தின் மூலம்தான் எங்கள் உறவை நான் அவளிடம் நிதானமாக எடுத்துச் சொல்ல ஒரு வழி ஏற்படும். 

மோகனாவின் நாட்டியக் கச்சேரிக்கு ஐநூறு ரூபாய் கேட்டாள் சாரதாம்பாள். அவள் கேட்ட பணத்தை நான் உடனே எண்ணிக்கொடுத்தேன். சாரதாம்பாளுக்கு ரொம்ப சந்தோஷமுண்டாய்விட்டது. மோகனாவைக் கூப்பிட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டு போய் வைக்கச் சொன்னாள். அப்பொழுதுதான் நான் என் தங்கை மோகனாவை நன்றாகப் பார்த்தேன். மோகனா என்னை உற்று நோக்கினாள். “காப்பி போடுகிறேன், அண்ணா. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று மோகனாவே சொன்னாள். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.  “அண்ணா” என்று தன்னை அறியாமலே அன்பாகக் கூப்பிட்டாள். அந்த அண்ணா என்ற சொல் என் இதயத்தையே குளிரச்செய்துவிட்டது. கள்ளமற்ற உள்ளத்துடன் அவள் என்னோடு பேசியதைக் கேட்ட வுடன் அவளுடைய இயற்கையான நற்குணங்களை நான் நன்றாக உணரமுடிந்தது. தாசிகளுக்குரிய விஷத்தன்மை அவள் வார்த்தைகளில் தொனிக்கவேயில்லை. சாரதாம்பாளின் தொழில் போதனை இன்னும் மோகனாம்பாளிடம் பாடமாகவில்லை என்பதையும் இதன்மூலம் நான் உணர்ந்தேன். 

தாசியின் வீட்டில் காப்பி சாப்பிடுவதா என்று தயங்கினேன். என் தங்கையல்லவா அருமையாகக் கேட்கிறாள் காப்பி வேண்டுமா என்று. அவள் கையினால் போட்ட காப்பி சாப்பிடவேண்டுமென்று நினைத்து “சரி போட்டுக் கொடு,சாப்பிடுகிறேன்” என்றேன். 

இதற்கு முன் மோகனா அங்கு வரும் ஆடவர்களுக்கு எதிரில் வருவதேயில்லையாம். அப்படி இருந்த மோகனா இன்று என்னை இப்படி உபசரிப்பது சாரதாம்பாளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாம். மோகனா உள்ளே காப்பி போடப் போயிருந்த சமயத்தில் இதை சாரதாம்பாளே என்னிடம் சொன்னாள். பெரிய பணக்காரனான என் மீது மோகனாவிற்குக் ‘காதல்’ விழுந்து விட்டது என்று தான் அந்தக் கிழட்டுத் தாசியின் மனம் மகிழ்ந்து கொண்டிருந்தது. என் தங்கை மோகனாவைத் தாசித்தொழிலில் இறக்கிவிட அவள் வெகு காலமாகப் பிரயத்தனம் செய்ததாகவும் மோகனா அதற்கெல்லாம் இணங்காமலிருந்ததாகவும் நான் முன்னமே கேள்விப்பட்டிருந்தேனல்லவா! ஆகையால்தான் மோகனா என்னுடன் இயற்கையான சகோதர வாஞ்சையுடன் பிரியமாக நடந்துகொண்டதை சாரதாம்பாள் தவறாக எண்ணி மகிழ்ந்தாள். எனக்கு இன்னும் பலத்த உபசாரங்கள் செய்யும்படி அவள் மோகனாவைத் தூண்டினாள். 

நான் மோகனாவிடம் நெருங்கிக் ‘காதல்’ வார்த்தை களைப் பேசவில்லையே என்று சாரதாம்பாளுக்கு வருத்தம். பைத்தியக்காரப் பெண் மோகனா இப்படிப்பட்ட ஒரு பணக்கார மைனரை விட்டுவிடக்கூடாதே என்றெல்லாம் அவள் ஏங்கியிருக்கவேண்டும். பின்பு நான் என் தங்கையிடம் விடை பெற்றுக்கொண்டு எழுந்தபோது சாரதாம்பாள் மிகவும் ஏமாற்றமடைந்திருக்கவேண்டும். மோகனா என்னிடம் மட்டிலும் அவ்வளவு தாராளமாகப் பேசியது சாரதாம்பாளுக்குத் திகைப்பை உண்டாக்கியிருக்குமென் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மோகனா திடீரென்று ஒரே நாளில் தன் தொழிலுக்குத் தயாராகி வருகிறாள் என்று மகிழ்ந்திருந்தாள். ஆனால் எதிர்பாராதவிதமாக நாங்கள் பிரிந்ததைக் கண்டால் அவளுக்கு ஏமாற்றம் தானே! 

மோகனா நாகர்கோவிலுக்கு வந்து என்னைத் திரும் பவும் மயக்கக்கூடும் என்றும் அவளுக்கு ஒரு நம்பிக்கை இருந்திருக்கலாம். இயற்கையாக எழும் சகோதர சகோதரி பாசத்தை, தாசித்தனத்திலேயே தன் மனதை அழுகவிட் டிருந்த சாரதாம்பாளால் எப்படி உணர முடியும்! 


குறிப்பிட்ட தினத்தன்று மோகனா ஒரு நட்டுவக் கிழவனுடன் வந்து சேர்ந்தாள். வந்தவுடன் முறைப்படி அவள் என் க்ஷேமத்தை விசாரித்தாள். பின்பு, தான் எந்த இடத்தில் எப்படி நாட்டியமாடவேண்டுமென்பதை யெல்லாம் என்னிடம் கேட்டாள். நாட்டியமாடுவதில் அவளுக்கு இத்தனை ஆவல் ஏன் உண்டாயிற்று என்றே என்னால் அறியமுடியவில்லை. ஏதோ பழகிவிட்ட தோஷம் போலிருக்கிறது. 

“நீ நாட்டியம் ஆடுவது இருக்கட்டும். அதற்குமுன் உன்னிடம் தனியாகப் பேசவேண்டும்” என்றேன். அவள் முகம் சட்டென்று சிவந்தது. “மோகனா, என் துயரக் கதைகளை உன்னிடம் சொல்லவேண்டும். வேறொன்றுமில்லை.” என்று சமாதானப்படுத்தி அவளை மட்டிலும் அழைத்துக் கொண்டு வீட்டு ஹாலில் போய் உட்கார்ந்தோம். 

தன் பூர்வோத்தரத்தை அவளே சொல்லட்டுமென்பதற்காக, அவள் சாரதாம்பாள் வீட்டுக்குப் போவதற்கு முன் எங்கிருந்தாள் என்பதையெல்லாம் படிப்படியாக அவளிடம் விசாரித்தேன். தான் அனாதாஸ்ரமத்தில் வாழ்ந்ததையெல்லாம் மலர்ந்த முகத்துடன் எடுத்துச் சொல்லி, அந்த ஆஸ்ரமத்துத் தலைவியையும் இப்பொழுது பார்த்துவிட்டுப் போகவேண்டுமென்றாள். ஆஸ்ரமத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்னுள்ள தன் வாழ்க்கையை மோகனா அடியோடு மறந்தே விட்டாள். நான் சில இடங்களையும் ஆட்களையும் ஞாபகமூட்டவே அவளுக்கு, ஒரு அண்ணனைப் பற்றியும் தன் தகப்பனாரைப்பற்றியும் வீட்டைப் பற்றியும் லேசாக ஞாபகம் வந்தது. நான்தான் அவளுடைய சொந்த அண்ணன் என்று நாக்குக் குழறத் தெரிவித்தவுடன் அவள் ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டு கதறிவிட்டாள். தான் வந்திருந்த காரியத்தையே மறந்துவிட்டாள். 

நாங்கள் இருவரும் பழைய கதைகளையெல்லாம் எவ்வளவோ நேரம் பேசினோம். அன்று அவளே சமையல் செய்தாள். அண்ணனும் தங்கையும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். அவளை நாகர்கோவிலுக்கு வரவழைப்பதற்காக நான் செய்த சூழ்ச்சிகளை யெல்லாம் சொன்னேன். அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். நான் அவளைக் கண்டுபிடிக்க இவ்வளவு முயற்சி யெடுத்ததைக்கேட்டு அவள் உள்ளம் உருகியது. தந்தையின் மரணத்தை நான் சொல்லிய போது நாங்கள் இருவருமே துக்கப்பட்டோம். அவ்வளவு கஷ்டதசையிலிருந்து நான் இவ்வளவு தூரம் பிரபலமடைந்திருந்தது அவளுக்கு அளவிலாத பெருமை யைக்கொடுத்தது. “அன்பிலும், செல்வத்திலும், குணத்திலும், கௌரவத்திலும் உயர்ந்த ஒருவரை என் சொந்த அண்ணனாக அடைந்திருக்கும் நான் யாரோ அனாதை யென்றல்லவா இவ்வளவு நாளாக எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேன், அண்ணா!” என்று உணர்ச்சிப் பிரவாகத்தில் குமுறினாள். 

நாலைந்து நாட்கள் இங்கேயே தங்கியிருக்கப்போவதாக சாரதாம்பாளுக்கு உடனே கடிதம் எழுதிவிட்டாள். எங்கள் பழையவீடு, என் கடை, தோட்டம், அவள் வசித்த அனாதாஸ்ரமம் எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தோம். இரண்டொரு நாட்களில் என் வீடு தோட்டம் ஊர் எல்லாம் அவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்போலவே ஆகிவிட்டது. 

இனி அவள் என்னுடனேயே இருக்கவேண்டுமென்றேன். அவளும் அதையேதான் சொன்னாள். தன்னை மிகவும் அன்புடன் வளர்த்த சாரதாம்பாளிடம் எல்லாவற்றையும் சொல்லி அவளுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு நிச்சயமாகத் திரும்பி விடுவதாகச் சொன்னாள். அவள் உறுதி கூறியதிலிருந்து நிச்சயமாக அவள் திரும்பி விடுவாள் என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. 

“மோகனா, திரும்பி வரும் போது உன் கால் சலங்கை களையெல்லாம் அங்கேயே போட்டுவிட்டு வந்துவிடு. நீ நாட்டியமாடுவதெல்லாம் அந்த வீட்டோடு நின்றுவிடட்டும்” என்றேன். 

“ஏன் அண்ணா, நாட்டியத்தை விடச்சொல்கிறாய்? அதுதானே எனக்கு உயிர்நாடி. அதை என்னால் விடமுடியாது. நாடெங்கும் என் நாட்டியத் திறமையைக் காட்ட வேண்டும்” என்றாள் மோகனா. 

அவள் இப்படிச் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாட்டியம் தாசிகளுக்குரிய தொழில். குடும்பத்தில் வாழக்கூடிய பெண்களுக்கு அது ஏற்றதல்ல என்று நான் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவள் காதுகள் நான் சொன்னவற்றை ஏற்கவேயில்லை. ஆத்மதிருப்தி யாம். புனிதமான கலையாம். அதற்கும் தாசித்தொழிலுக்கும் சம்பந்தமில்லையாம். என்னென்னவோ பயங்கரமான வார்த்தைகளைக் கொண்டு என்னோடு விவாதம் செய்தாள். முடிவில் “அண்ணா, நீ என்ன சொன்னாலும் நாட்டியத்தை நான் விடப்போவதில்லை” என்றாள் அவள். 

அப்படியானால் நீ இங்கு வரவேண்டியதில்லை என்றேன் நான். நான் இப்படிக் கேவலமாகச் சொன்னது எனக்கே வருத்தமாக இருக்கிறது. “நான் உன் தங்கை என்ற பெருமை ஒன்றே எனக்குப் போதுமானது. குடும்ப ஸ்திரீயென்ற கெளரவம் எனக்கு வேண்டியதில்லை. தாசி வீட்டிலிருந்தே கலைப்பணி செய்து வருவேன். அடிக்கடி நான் உன்னைப் பார்த்துப் போகமட்டும் வருவேன், அண்ணா” என்று சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள். 

மோகனாவின் அழகும், அன்பும், உறுதியும், ஊக்கமும், நற்குணங்களும் நாட்டியத்திற்கா பயன்படவேண்டும்! நல்ல குடும்பத்திற்கல்லவா இவை தேவை. மோகனாவுக்கிருக்கும் நாட்டியப் பைத்தியம் ஒன்றுதான் இப்பொழுது அவளை என்னிடமிருந்து பிரித்து விட்டது. இதிலிருந்து நாட்டியத்தையே ஒரு மோசமான கூத்தாட்டம் என்று வெறுத்தேன். வீட்டிலிருக்க வேண்டிய என் தங்கை ஊரூராக நாட்டியமாடுகிறாள் என்பதைக் கேட்டு நான் சகிக்க முடியுமா! கலைக்காகவே அவள் நாட்டியமாடுகிறாளாம். எங்கள் சந்திப்பு இப்படியா முறியவேண்டும்! மோகனா இப்படிப் பிடிவாதம் செய்வாளென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. மற்றப்படி என் மீது எவ்வளவு வாத்சல்யம் கொண்டிருக்கிறாள்! இனி என் தங்கையை மறந்து விட வேண்டியது தான். அவள் நாட்டியத்திற்கு அர்ப்பணமாகிவிட்டாள். ஆனால் அவள் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளப் போகிறாளோ தெரியவில்லை. தாசியாக வாழமாட்டாளென்று அவளுடைய உறுதி மொழிகள் நன்றாகத் தெரிவிக்கின்றன. அடிக்கடி அவளைப் போய்ப் பார்த்து வர வேண்டும்.

– தொடரும்…

– வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.

சிற்பியின்-கனவு சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *