உறுப்புகளைத் தேடி…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2026
பார்வையிட்டோர்: 198 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம் – 13

அடையாறிலேயே அறை எடுத்துத் தங்கிய ஹரிஸ் குளித்து முடித்து பளிச்சென்று கிளம்பி 7.00 மணிக்கெல்லாம் அமைச்சர் நாகராசன் பங்களா முன் வந்தான்.

உள்ளே செல்ல, சந்தித்துப் பேச வழி..? ஆராய…. பத்தடி தூரத்திலேயே காரை ஓரம் கட்டி நிறுத்தி இறங்கினான்.

சாலை வெறிச்சென்று அமைதியாக இருந்தது.

பங்களா முன் பாதுக்காப்பு காவலர்கள் மாறி இருந்தார்களேத் தவிர அவர்கள் நடமாட்டம் அப்படியே இருந்தது.

மனுகொடுக்க வரும் பொது மக்கள் யாரையும் காணோம்.

ஒருவேளை இன்று மனு கொடுக்கும் நாள் இல்லையா..? இல்லை இவரிடம் அப்படி மனு வாங்கும் பழக்கம் இல்லையா..? யாரைக் கேட்டால் விபரம் தெரியும்..? தலையைச் சொரிந்து சுற்றும் முற்றும் பார்த்தான். அடுத்தத் தெரு, பக்கத்துத் தெருக்களில் ஒன்றிரண்டு ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் அமைச்சர் பங்களா முன் ஈ, காக்கை இல்லை.

ஹரிஸ் காரை விட்டு நகர்ந்து கிழக்கும் மேற்கும் பார்த்தான். சிறிது தூரத்தில் உள்ள பெட்டி டீக்கடையில் ஐந்தாறு பேர்கள் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை விசாரிக்க…இவனும் ஒரு..’ டீ ‘ சொன்னான்.

வாங்கி கையில் வைத்துக் கொண்டு…ஒருவரை அணுகி…

“அமைச்சரை எப்போ பார்க்கலாம்..? ” மெதுவாகக் கேட்டான்.

“பொதுவா அவர் பத்து மணிக்குத்தான் கோட்டைக்குப் போவார். ஒன்பது மணிக்கெல்லாம் பார்க்கலாம்.”

“நாம சாதாரணமா காவல்காரரிடம் சொல்லி போய் பார்க்கலாமா..?”

“அப்படி ஒரு சட்டசபை உறுப்பினரையே பார்க்க முடியாது. இப்போதெல்லாம் மந்திரிகள் அந்தக்காலத்து கோட்டை, குறுநில மன்னர்கள் போல. சுலபமாய்ப் போய் பார்க்க முடியாது. ” சொல்லி அவர் நகர்ந்தார்.

இதுக்குத் தீர்வு..? டீயைக் குடித்துவிட்டு காருக்கு வந்தான்.

‘என்ன செய்ய..?’- வானத்தைப் பார்த்தான்.

‘முடியாது ! போய்விடலாமா..?’ நினைத்தான்.

இவனை ஒட்டி விலை உயர்ந்த ஒரு ஆடி கார் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய இளைஞன்..

“ஹரிஸ்!” அழைத்தான்.

தஞ்சை சாஸ்த்தராவில் தன்னோடு படித்த நண்பன். சட்டென்று அவனை இங்கு எதிர்பாராமல் பார்த்ததில் மகிழ்ச்சி.

“ஏ… கணேஷ்..!” – ஹரிஸ் கூவினான்.

அவன் இவனைக் கட்டிப் பிடித்து….

“பார்த்து வருசக் கணக்காயிடுச்சு. எங்கே இங்கே..?” கேட்டான்.

“அமைச்சரைப் பார்க்க…”

“அவரைப் பார்க்கவா..? ! ஏன்..?” கணேஷ் புருவம் உயர்த்தி நெற்றி சுருக்கினான்.

‘உற்ற நண்பன் இவன். இவனை விட்டால் வேறு யாரிடம் சொல்ல..? மேலும் தற்போது திக்குத் தெரியாத காட்டில் கிடைத்த திசைகாட்டி!’ நினைத்த ஹரிஸ்…

“இவர் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர். அது சம்பந்தமா…” தான் வந்த வேலையைச் சொன்னான்.

“அப்படியா…?” கணேசுக்கு ஆச்சரியம்.

“…..”

“இப்போ அவரைப் பார்க்கனும்… அவ்வளவுதானே..?”

“ஆமாம்.”

“வேற உதவி…?”

ஒன்ன்ன்ன்னும் கிடையாது !

தான் வந்த வேலை வேறு ஒன்றும் இல்லை

என்பதை அப்படி அழுத்தி திட்டவட்டமாகச் சொன்னான்.

“சரி வா…”

“நீ…?” ஹரிஸ் அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“நான் அவரோட மகன். ஷட்டில் விளையாடிவிட்டு வர்றேன்..!”

“ஏய்ய்ய்…” ஹரிசுக்குள் மட்டற்ற மகிழ்ச்சி பிரவாகம்…! பாய்ந்து நண்பன் கை இறுகப் பற்றி அதை வெளிப்படுத்தினான்.

அடுத்த வினாடி…

ஆடிக்கார் பின் க்ரீட்டா சென்றது.

உள்ளே அமைச்சர் நாகராசன் நல்ல நிறமாய், கதர் வேட்டி, கதர் சட்டையில் பருமனாய், மீசை, தலையில் கருமை பூசி…பளிச்சென்று சிரித்த முகத்துடன் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர்கள் அருகில் சென்றார்கள்.

மகனைப் பார்த்ததும்…

“யாரு..? உன் நண்பனா..?” காலை ஆட்டிக் கொண்டு உற்சாகமாய்க் கேட்டார்.

“ஆமா… ஆனா உன்னைப் பார்க்க வந்திருக்கான்”

“என்னய்யா..?!”

“ஆமாம்” அவர் முன் அமர்ந்தான்.

ஹரிசும் அவன் அருகில் அமர்ந்தான்.

“என்ன விசயம்…?” ஹரிசைப் பார்த்தார்.

“உன் இதயத்தை நலம் விசாரிக்க வந்திருக்கான்.”

“என் இதயத்தையா..?!”

“ஆமாம்ப்பா..இவன் அண்ணன் இதயத்தைதான் நீ இரவல் வைச்சிருக்கே..?”

“இரவல் இல்லே கணேசு. காசு கொடுத்து வாங்கி வச்சிருக்கேன்.”

“நீங்க லட்சம், கோடி கொடுத்திருக்கலாம். ஆனா….இவன் அம்மா, அப்பா நன்கொடையா கொடுத்திருக்காங்க. அது உனக்கு விலையாய் வந்திருக்கு…”

“திருட்டுப் பசங்க. இனாமாய் வாங்கி என்கிட்டே கோடி கோடியாய் கொள்ளையடிச்சிருக்கானுங்க.. கவனிக்கிறேன். அப்புறம் தம்பி…” என்று கேட்டு ஹரிசைப் பார்த்தார்.

இவன் அடுத்து பேச வாய் திறப்பதற்குள்…

“உங்களுக்கு எவ்வளவு வேணும் தம்பி..?” தொலைக்காட்சியிலிருந்து கண்களை விலக்காமலேயே கேட்டார்.

“எனக்கா..? என்ன..” புரியாமல் திகைப்பாய்ப் பார்த்தான்.

“பணம்…?” அவரும் தொலைக்காட்சியிலிருந்து மாறாமல் அலட்சியமாக சொன்னார்.

“மருத்துவமனைக்குப் போட்டது பிச்சைக் காசு. நீ எனக்கு போட்டது உயிர்ப்பிச்சை. எவ்வளவு வேணுமின்னாலும் கேளு..”

ஹரிஸ் கணேசைப் பரிதாபமாகப் பார்த்தான்.

“அப்பா…!!..” அவன் அதட்டலாகக் குரல் கொடுத்தான்.

“எதுக்கு அதட்டுறே, கோபப்படுறே..? தம்பி வேற எதுக்கு வந்திருக்கும்..? வேலை சம்பந்தமாவா.? வேலைகீலை வேணுமா…? உங்க தகுதிக்கு உள்ள ‘தமிழ்நாடு வேலை பரிட்சை’யை சும்மா தொட்டுட்டு வாங்க. அந்த வேலை பத்து பைசா செலவில்லாம உங்க வீடு தேடி வரும்..”

“அதெல்லாம் வேணாம் சார். நான் சும்மா உங்களை நலம் விசாரித்துவிட்டுப் போக வந்தேன்.”

“நலம் விசாரிக்கிறதுக்கா..? சும்மா கதை விடாதீங்க தம்பி. யாரு உறுப்பு யாருக்குப் பொறுத்தறோம்ன்னே மருத்துவமனை கொடுக்கிறவங்களுக்கும் சொல்ல மாட்டாங்க. வைக்கிறவங்களுக்கும் சொல்ல மாட்டாங்க. அது அவ்வளவு பெரிய மருத்துவ ரகசியம், கட்டமைப்பு! நீங்க அதையும் உடைத்து தெரிந்து தேடி வந்திருக்கீங்கன்னா விசயம் இல்லாமலா இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வருவீங்க..?”

‘இவர் பேசுவது சரியாக இருந்தாலும்… பணத்தின் கொழுப்பு, கொதிப்பு எதிரி என்ன நோக்கத்தில் வந்திருக்கிறான் என்று உணராமல் இப்படி தெனாவட்டு, திமிராக பேச வைக்கிறது?!’ – ஹரிஸ் மனசுக்குள் ஓடியது.

“இல்லே சார். உங்களை நலம் விசாரித்துவிட்டுப் போகத்தான் வந்தேன். வேற உள்நோக்கம், உதவி எதுவுமில்லை.” கறாராக சொன்னான்.

“ஆச்சரியமா..இருக்கு..” நாகராசன் இன்னும் தன் நிலை மாறாமல் ஹரிசைப் பார்க்காமல் அலட்சியமாகத்தான் பேசினார்.

‘மனிதர் சுபாவமே இதுதானா..? இல்லை…இப்படிப் பட்ட பதவிகளில் இருப்பவர்களெல்லாம் இப்படித்தான் மனிதனை மதிக்காமல் தான்தான் உயர்ந்தவன் தேடிவருபவர்களெல்லாம் சாதாரண கிள்ளுக்கீரைகள் நினைப்பில் பேசுவார்களா..?’ நினைத்த ஹரிஸ்

“இல்லே சார். நலம் விசாரித்துவிட்டுப் போகத்தான் வந்தேன். ஆபரேஷனுக்குப் பிறகு உங்களுக்கு அது சம்பந்தமா எந்தவித உடல் பிரச்சனையும் இல்லேயில்லே.” கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னுமில்லே. ஆபரேசனுக்குப் பிறகு அதெல்லாம் சுத்தமா மறந்து போச்சு. என்ன ஒரு குறை..? இந்த ஆபரேசனை அமெரிக்காவுல செய்ய ஆசைப்பட்டேன். அந்த நேரம் அங்கெ போக அவகாசமில்லே. அவசரம் இங்கேயே முடிச்சுக்கிட்டேன். அதான் வருத்தம். மத்தபடி நல்லா இருக்கேன்ப்பா.” சொல்லி முடிக்கவும்.. அவர் கைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

எடுத்து காதில் வைத்து…

“ஹலோ…. விசால்…” என்றார்.

“சார் ஒரு முக்கியமா சேதி”

ஹரிசுக்கும் கணேசனுக்கும் அந்தக் குரல் மெலிதாகக் கேட்டது.

நாகராசன் கையிலுள்ள ரிமோட்டால் தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தை முடக்கிவிட்டு..

“சொல்லுப்பா..?”

“இன்னும் ரெண்டு மணி நேரத்துல… நீங்க இருக்கிற இடத்தில மட்டுமில்லாமல் ஊர்ல இருக்கிற உங்க சொந்த வீடு, கல்லூரிகள், நிறுவனங்கள் அத்தனையிலும் ரெய்டு. வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த புகாரில் முக்கியமாய் உங்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் திட்டத்தோடு வர்றாங்க. எல்லாம் எதிர்க்கட்சி சதி. மத்திய அரசு நடவடிக்கை. உடன் இடத்தைக் காலி பண்ணுங்க…” முடித்த அடுத்த வினாடி…

நாகராசன் முகம் வெளிறி, வேர்த்து, விறுவிறுவித்து, பதற்றத்துடன் கைபேசியை அணைத்துவிட்டு அவசர அவசரமாக எழுந்தார்.

அத்தியாயம் – 14

ஹரிஸ் அறையில் வந்து படுக்கையில் விழுந்தான்.

எதற்கு இப்படி கொள்ளையடிக்க வேண்டும்..? கைது ரெய்டு என்றதும் துண்டைக்காணோம் ! துணியைக் காணோம்..! என்று ஓட வேண்டும்..? ஒளிய வேண்டும்..? பதுங்க வேண்டும்…?!

இன்னும் சிறிது நேரத்தில்…தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்திலும்…

‘அமைச்சர் வீட்டில் ரைடு. அவர் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் சோதனை. அவர் கைது. பலமணி நேரம் சோதனை செய்து முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் அள்ளிச் சென்றார்கள்!’ செய்தி வாசிப்பாகக் கிழி கிழி என்று கிழிப்பார்கள்.

இன்னும்…. நாகராசன் தலைமறைவு, ஆள் பதுங்கல் என்றால் மீடியாக்களுக்கு இன்னும் தீனி, கொண்டாட்டம். வைத்து செய்து நாறடிப்பார்கள்.

இன்னும் சில முக்கிய சேனல்களில்… நாலைந்து பேர்கள் அமர்ந்து இந்த நடவடிக்கை, தலைமறைவு, கைது எல்லாவற்றையும் அக்குவேறு அணி வேறாக அலசி தொங்க விடுவார்கள்.

அன்றைக்குச் சுதந்திரத்திற்காக, நாட்டுக்காக, மக்களுக்காக, சிறை சென்ற தலைவர்கள் எல்லாம்…வெளி வரும்போது நெஞ்சு நிமிர்த்து வரவில்லை.

‘ஐயோ! இப்படி அடக்கி, ஒடுக்கி, முடக்குகின்றார்களே…!’ வெட்கப்பட்டு வேதனைப் பட்டுத்தான் வந்தார்கள்.

ஆனால் இன்றைக்கு…?

அரசியல்வாதிகள் கொலை, கொள்ளை, பாலியல் குற்றத்தொடர்பு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு என்று எத்தனை எத்தனை குற்றங்களுக்காக எத்தனை முறை சிறை சென்றாலும்… முகத்தில் கொஞ்சம் கூட வருத்தம், அவமானம், வேதனை இல்லாமல் சிரித்த முகத்தோடுதான் வெளிவருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல்… சிறை வாசலில் காத்திருக்கும் கைக்கூலிகளின் மாலை, மரியாதைகளைப் புன்னகை முகத்தோடு ஏற்று வெற்றி வீரர்களாய் நடப்பார்கள்!

கசப்பாக இருந்தது.

ஹரிஸ் தான் மல்லாந்து படுத்திருந்த நிலைமாறாமல் பேண்ட் பாக்கெட்டிற்குள் கை விட்டு கைபேசி எடுத்தான்.

அஷ்டலட்சுமியுடன் தொடர்பு கொண்டான்.

“சொல்லுப்பா..?”

“இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஒரு அரசியல்வாதி எல்லா செய்தி வாசிப்பு சேனல்களிலும் அடிபடுவார். அவரிடம்தான் வினயன் இதயம் இருக்கு” சொல்லி அணைத்தான்.

மனசு கனமாக இருந்தது. எழுந்து வெளியே வந்தான். எழுந்து காலாற நடந்தான். வழியில்… தொலைக்காட்சிப் பெட்டிகள் நிறைந்த பெரிய விற்பனைக் கடை. பதினைந்து, இருபது தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்திலும்.

‘அமைச்சர் நாகராசன் வீட்டில் ரெய்டு. அவர் தலைமறைவு’ செய்திகள் சகட்டுமேனிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

இவனுக்கு முன் இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டே சென்றார்கள்.

“நாட்டுல அநியாயத்தைப் பார்த்தியா..?”

“எதைச் சொல்றே..?”

“அரசியல்தான்!”

“என்ன…?”

“இவன் ஆட்சிக்கு வந்தால் ‘வருவாய்க்கு அதிகமாய் சொத்துகள் சேர்த்தல்‘ன்னு எதிர்கட்சிக்காரனை ரெய்டு உடுறான். அவன் ஆட்சிக்கு வந்தால் இவனை ரெய்டு உடுறான். ஆக மொத்தத்துல கட்சிக்காரனுங்க மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கத்தான் ஆட்சிக்கு வர்றானுங்களேத் தவிர எவனும் நாட்டுக்கு, மக்களுக்கு நல்லது செய்யிறதாய் இல்லே.”

“ஆமாம் மச்சி. இவ்வளவு கொள்ளையடித்தும் மக்களுக்கு அந்த வசதி இந்த வசதின்னு செய்து கொடுக்கிறார்களே… கொள்ளையடிக்காமல் செய்தால் மக்களும் நாடும் எவ்வளவு முன்னேற்றத்தில் இருப்பாங்க தெரியுமா..?”

“ரொம்ப செல்வச் செழிப்பில் இருப்பாங்க. இதுக்கு அடுத்து மருத்துவமனைக் கொள்ளை. செத்த பொணத்தைச் செயற்கை சுவாசத்தில் வைத்து ஆள் உயிராய் இருக்கார், மூச்சு ஓடிக்கிட்டிருக்கு. இன்னைக்குப் பொழைச்சுப்பார், நாளைக்குப் பொழைச்சுப்பார்ன்னு வேளைக்கு ஐயாயிரம் பத்தாயிரத்துக்கு மருந்து மாத்திரை எழுதி அதை திருப்பிக்கொண்டு வந்து தன் கிளினிக்கில் வித்து காசு பார்கிறதோடு மட்டுமில்லாமல் பிணத்தைக் கொடுக்கும்போது சிகிச்சை செலவு, அறை வாடகை அது இதுன்னு வேற கொள்ளை.”

“அது மட்டுமா..? வர்ற விபத்து கேஸ்களிலேயே தேவைப்பட்டால் ஊசி போட்டு மூளைச் சாவு ஏற்படுத்தி ‘மூளைச் சாவு உடலுறுப்பு தானம் செய்யுங்கள்! ‘ன்னு பேரம் பேசி அதிலும் கோடிக்கணக்கில் வியாபாரம்ன்னு வேற செய்தி படிச்சேன்.”

“அப்படியா..????…!”

கேட்ட ஹரிசுக்குத் திக்கென்றது.

தன் அண்ணனுக்கும் அப்படி நடந்திருக்குமோ…? நினைக்கப் பகீரென்றது.

உடன் அஷ்டலட்சுமியைக் கைபேசியில் தொடர்பு கொண்டான்.

“அம்மா..!” அழைத்தான்.

” சொல்லுப்பா..?”

“அண்ணனோட, மூளைச் சாவு நிஜமான மூளைச் சாவுதானே..?”

“அதில்லேன்னா சந்தேகம்….?”

“மருத்துவர்கள் அதை செயற்கையாகவும் ஏற்படுத்தலாம்ன்னு பேசிக்கிட்டாங்க. அதான் கேட்டேன்.”

“அப்படிப்பட்ட மூளைச் சாவு அவனுக்குக் கிடையாது. விபத்து நடந்த அடுத்த நிமிசம் எனக்கு சேதி வந்தது. திருப்பனந்தாளுக்குப் பக்கம் ஒரு சில கிலோ மீட்டர் என்கிறதுனால பள்ளிக்கூடத்திலிருந்து உடனே ஓடிப்போய்ப் பார்த்தேன். இரண்டு காதுகள் வழியே ரத்தம் வந்து வினையனுக்கு அங்கேயே பேச்சு மூச்சு இல்லே.”

“சரிம்மா. நான் அப்புறம் பேசறேன்!” திருப்தியாய் கைபேசியை அணைத்தான். அறைக்கு வந்து நிம்மதியாய்க் கண்ணை மூடினான்.

அத்தியாயம் – 15

புதுச்சேரி முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் வணிக இடம்.

நான்காம் நூற்றாண்டில் காஞ்சி பல்லவர்களின் கட்டுப்பாடு.

10 – 13 ஆம் நூற்றாண்டு வரை தஞ்சை சோழர்கள் வசம் இருந்தது.

14 ஆம் நூற்றாண்டிலிருந்து விசய நகர பேரரசின் பிடியில் இருந்தது..

1674 லிருந்து பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி.

1962 ல் இந்தியாவுடன் இணைப்பு.

இன்றைக்குத் தனித்துவமான யூனியன் பிரதேசம்.

அழகான சுற்றுலா பூமி.

அண்டை மாநிலத்து மதுப்பிரியர்களின் சொர்க்கவாசல்.

அவர்களின் வார விடுமுறை கேளிக்கைக் கூடம்… பிறபிற…

ஹரிஸ் நினைவை வெட்டி கிழக்குக் கடற்கரைச் சாலையில் தன் ஹூண்டாய் க்ரிட்டாக் காரை நிதானமாக செலுத்தினான்.

புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு பாரதிதாசன் வீதி, 72 ஆம் வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்கினான்.

அலட்டலில்லாத அம்சமான வீடு. அழைப்பு மணி அழுத்தினான்.

வெடவெடவென்று ஒல்லியாய், மரப்பாச்சிக்குப் புடவை சுத்திய விதமாய், அழகாய், அம்சமாய் இளம்பெண் திறந்தாள்.

“சா…சார்… நீங்க…” என்று அவள் கேள்வி கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பே.

“நான் ஹரிஸ். அணைக்கரை” தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“நீங்க இங்கே யாரைப் பார்க்கணும்..?”

“பிரபாகரன் மகள் பிரபாவை”

“இதுக்கு முன் நீங்க அவளைப் பார்த்திருக்கீங்களா..?”

“இல்லே..”

“என்ன விசயமா பார்க்கனும்…?”

எப்படி சொல்ல…?

“வந்து…. வந்து….” தடுமாறினான்.

“காதலிக்கிறீங்களா…?”

“ஐயோ இல்லீங்க…”

“அவளை இல்லீங்க. நீங்க வேற எவளையாவது…?”

“இல்லே…”

“அப்போ அவளைத் தேடி ஏன் வந்தீங்க…?”

“வ….அவுங்களுக்குக் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கு…”

“ஓ…பார்க்க வந்திருக்கீங்களா…?”

“ஆமாம்!”

“கையில பழத்தைக் காணோம்..?!”

“அறுவை சிகிச்சை இப்போ இல்லே பத்து வருசத்துக்கு முன்…”

“அவளுக்குத்தான் நடந்ததா..?”

“ஆமா…?”

:எங்கே…? ‘

‘இங்கேதான் . ஜிப்மர் மருத்துவமனையில்…”

“அது எப்படி உங்களுக்குத் தெரியும்..?”

“அவுங்களுக்குப் பொருத்தி இருக்கிறது என் அண்ணன் கிட்னி!”

“அப்படியா..? !… அத்தாட்சி இருக்கா..?”

“இருக்கு.!”

“காட்டுங்க..?”

கைபேசியில் படம்பிடித்து வைத்திருந்த அந்த முகவரி கடிதத்தை எடுத்துக் காட்டினான்.

“பிரபா…!” பின்னால் குரல் கேட்டது.

“அம்மா…” – இவள் குரல் கொடுத்தாள்.

‘அடிப்பாவி பிரபா. எதுக்குடி என்னை நிக்க வைச்சு இத்தனைக் கேள்வி கேட்டே..?’ – நினைத்தான்.

“அங்கே யாரோட பேசிக்கிட்டிருக்கே..?”

“என் சொந்தக்காரரோட..”

“உன் சொந்தக்காரரா….யார் அவர்..?” – அவள் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே இவர்கள் அருகில் வந்தாள்.

புதிய முகத்தைப் பார்த்து… யோசனையுடன்…

“யாரு தம்பி நீங்க…?” கேட்டாள்.

அவள் வயது வித்தியாசம் கூட பெரிதாகத் தெரியப்படாமல் அச்சு அடையாளம், அங்கம் பங்கம் எல்லாம் பொருந்தி அம்மாவாய் இல்லாமல் அக்காளாய்த் தெரிந்தாள்.

“எல்லாம் நான் விசாரிச்சுட்டேன். நீ அந்த ஆளை உள்ளே அழைத்து வா…” சொல்லி பிரபா விடுவிடுவென்று இவர்களை எதிர்பார்க்காமல் திரும்பி நடந்தாள்.

மகள் சொல்லுக்கு மறுப்பு இல்லாமல்…

“நீங்க வாங்க தம்பி…” இவளும் அழைத்து உள் நடந்தாள்.

கூடத்தில் நடுத்தர குடும்பத்து வசதிகள்.

“உட்காருங்க..தம்பி..”

சோபாவில் அமர்ந்தான்.

அமர்ந்தாள்.

உள்ளே பிரபா இல்லை.

கண்களை ஓட்டினான்.

“அவள் காபி போட அடுப்படிக்குப் போயிருப்பாள். ஒத்தப்பொண்ணு. அப்பா செல்லம் கொடுத்து வாயாடியாய் வளர்த்து போய் சேர்ந்துட்டடார். அவள் எதுவும் தப்பா பேசினாளா..?” தாய் பரிந்து மகளுக்காக மன்னிப்புக் கேட்கும் பாவனையில் கேட்டாள்.

“அ… அதெல்லாம் இல்லீங்க…” மறுத்தான்.

அதே நேரம் பிரபா…

“காபி…” குரல் கொடுத்து அடுப்படியில் இருந்து டம்ளருடன் வெளி வந்தாள்.

ஹரிசிடம் கை நீட்டி கொடுத்துவிட்டு தாய்க்கு அருகில் அமர்ந்தாள்.

“குடிங்க தம்பி…”

குடித்தான்.

“அண்ணன் பத்து வருசத்துக்கு முன் விபத்தில்….” விபரம் சொன்னான்.

“இன்னைக்கும் உடல் உறுப்பு தானம் என்கிறது கொஞ்சம் அரிது, அபூர்வம். அதிலும் நீங்க…தேடி வந்து விசாரிக்கிறது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!” பொன்னமராவதி தன் உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் சொன்னாள்.

“இதுக்கெல்லாம் என் அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லனும். என் பையன் யாரிடம் எப்படி இருக்கிறான்னு தெரியனும். தெரியாமல் தரமாட்டேன்னு பிடிவாதம் பிடித்து முகவரிகள் வாங்கி வச்சாங்க. அதுவே எனக்குப் பார்க்கனும்ன்னு தோணிச்சு. அம்மாவுக்கும் விருப்பம் திருப்தி.” என்றான்.

“உடல் உறுப்பு தானம் என்கிறது ரொம்ப நல்ல விசயம். ஒரு உடம்பால் பலபேர் பயனடைவைத்து உயிரோடு வாழ்வது ரொம்ப பாராட்ட படவேண்டியது. அதே சமயம் இந்த கொடுத்ததைத் திரும்பிப் பார்க்கிறதென்பது கொஞ்சம் உறுத்தலான விசயமாய் என் மனசுக்குப் படுது.” என்றாள் பொன்னமராவதி.

குழப்பமாகப் பார்த்தான்.

“கொஞ்சம் யோசிச்சா புரியும்!” மறுபடியும் சொன்னாள்.

ஹரிஸ் விளங்காமல் பார்த்தான்.

“புரியல..?!” வெளிப்படையாகவேக் கேட்டான்.

“பொருத்தப்பட்டது யார் உறுப்போ என்று தெரியாமல் நிம்மதியாய் இருப்பவர்கள் மத்தியில் இந்த திரும்பிப் பார்த்தல் இனிக்குமா, கசக்குமா..?” கேள்விக்குறியுடன் யோசனையாகப் பார்த்தாள்.

“இனிக்கும்.கொஞ்ஞ்சம் கசக்கும்.! ஆனா… கொடுத்தவர்களை தெய்வமாய் அதிகம் ஆராதிக்கும் என்பதுதான் உண்மை!” என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் பிரபா.

இந்த பதில் ஹரிசுக்குத் திருப்தியாய் இருந்தது.

“சரியா சொன்னீங்க பிரபா…” என்றான்.

அவள் முகம் மலர்ந்தது.

பொன்னமராவதிக்கும் தெளிந்தது.

“என் மகள் எதையுமே சரியாச் சொல்வாள். செய்வாள். என்ன…இந்த வாய்தான் கொஞ்சம் அதிகம். அது செல்லம் மட்டும் காரணமில்லே. வயசு 28. படித்து முடித்து வெளிக்குப் போய் சம்பாதித்தாலும் இந்த வீட்ல உட்கார்ந்து சம்பாதிக்கிறதுதான் பெரிய இம்சை!” என்றாள்.

புரியாமல் பார்த்தான்.

“அழகா உடுத்திக்கிட்டு அலுவலவம் போய் சம்பாதிப்பதில் நிறைய அனுகூலங்கள். உதாரணத்திற்குப்… ஒரே இடத்தில் பல பேர்களோடு வேலை, பேச்சு பழக்கம், கோபம், தாபம், உறவுகள்ன்னு அதன் உலகமே தனி. இந்த வீட்டு வேலை என்பது எதுவும் இல்லாமல் மனிதனுக்குத் தனி. சிறை!” என்றாள் பொன்னமராவதி.

ஹரிசுக்குத் திகைப்பாய் இருந்தது.

“சரியாய்ச் சொன்னீங்க. நீங்க வேலையில் இருந்தீர்களா..?” கேட்டான்.

“நான் அரசு வேலையில் துணை இயக்குனர் பணி. நாலு வருசத்துக்கு முன் இவளுக்காகத்தான் விருப்ப ஓய்வு.” என்றாள்.

“ஏன்..?..” கேட்டான்.

“கரோனாவால் இவளுக்கு வீட்டிலேயே பணி. யோசிச்சுப் பார்த்தேன். பாதிப்பு புரிந்தது. பெண்ணுக்கு நாமாவது பேச்சாய்,, துணையாய், உறவாய் இருப்போம்ன்னு வேலையை விட்டுட்டேன். ” சொன்னாள் தாய்.

‘நல்ல அம்மா!’ இவன் அவளை பெருமையாய்ப் பார்த்தான்.

“என் அம்மாவும் இப்படித்தான். சரியா சித்தித்து செயல்படுவாங்க. பேசுறீங்களா..?” கேட்டான்.

“தேவை இல்லே தம்பி. பிள்ளையை உறுப்பு தானம் செய்திருக்காங்க என்பதிலேயே அவுங்க மனம், குணம் புரிஞ்சு போச்சு. உங்க, அம்மா கைபேசி எண் கொடுத்துட்டுப் போங்க. அப்புறமா பேசுறேன்.” என்றாள்.

ஹரிஸ் எண்களைக் கொடுத்துவிட்டு மறக்காமல் செல்பி எடுத்துக் கொண்டு விடை பெற்றான்.

தாயும் மகளும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

‘தாய்க்குப் பிறகு இவளிடம் பேச்சே இல்லை! ஏன்..?’ கேள்வியுடன் காரில் ஏறினான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *