உண்மை சுடும்
கதையாசிரியர்: என்.ஸ்ரீதரன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2026
பார்வையிட்டோர்: 47
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆடி மாதத்தில் துணிக்கடையில் காணப்படும் மக்கள் வெள்ளம் போல் அதிக நபர்கள் இருதய நோய் நிபுணர் மருத்துவர் ராஜசேகரைப் பார்க்கக் காத்திருந்தனர். வாரத்தில் மூன்று நாட்கள் மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை மட்டும் அவரை அந்த மருத்துவமனையில் பார்க்க முடியும்.
ராகவன் மருத்துவரைப் பார்க்க கவலையோடு காத்திருந்தார். அவர் மனைவி கலாவிற்கு ஏற்கனவே இருதய சிகிச்சை ஆகியிருக்கிறது. சமீபத்தில் மூச்சு விடுவது கடினமாயிருப்பதால் முழுஉடல் பரிசோதனை செய்து பரிசோதனை அறிக்கையுடன் மருத்துவரை எதிர் பார்த்திருந்தார்.அறிக்கையைப் பார்த்து மருத்துவர் இருதய குழாயில் அடைப்புகள் அதிகமாகி இருக்கின்றன. வயதாகிவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கூறி மருந்து எழுதித் தந்தார்.
ராகவனுக்கு மனக்கவலை ஏற்பட்டது.”இந்தத் தகவலை எப்படி கலாவிடம் சொல்வது” என்று குழம்பினார். ”ஒருகால் அதிர்ச்சியால் அவள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடலாம்” என்று எண்ணினார். அவளிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தார். யோசித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.
அங்கே அமர்ந்திருந்த நண்பர் ராமநாதனைப் பார்த்து வியப்படைந்தார். இருவரும் ஒரே தேதியில் பிறந்தவர்கள். இந்தியன் வங்கியில் ஒரே நாளில் சேர்ந்தார்கள். இருவரும் ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றார்கள். ஓய்வு பெற்று பத்து ஆண்டுகள் ஆகின்றன. ராமநாதன் அடிக்கடி ராமநாதனை வந்து பார்ப்பார். எட்டு மாதங்கள் கழித்து இப்போதுதான் வருகிறார்.
“ராமநாதா எப்படி இருக்கிறாய் ? உன்னைப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. உன் மனைவிக்கு உடல் நலம் சரியில்லையென்று சொல்லிக்கொண்டிருந்தாயே? அவள் இப்போது நலமா?” அன்புடன் கேட்டார்.
ராமநாதன் உடனே பதில் சொல்லவில்லை. இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்தது விட்டுக் கலங்கிய கண்களுடன் அவள் என்னைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டாள்” என்றார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது.
”திடீரென்று உன் மனைவிக்கு என்ன ஆகிவிட்டது?”
“அவளுக்கு இரத்த சோகை. பார்க்காத மருத்துவர் இல்லை. அவ ஜாதகத்தைக் நல்ல ஜோசியரிடமும் காண்பித்துக் கேட்டாச்சு. ஒரு சமயம் நிலைமை அதிக மோசமாகிவிட்டது . டாக்டர், ”அவள் அதிக நாட்கள் உயிர் வாழமாட்டாள்” என்று சொன்னார்.நானும் என் மகனும் அதை அவளிடம் சொல்லாமல் மறைத்து விட்டோம். ஒரு நாள் ”உடம்பு வலிக்கிறது” என்றாள். டாக்டரிடம் அழைத்துச் போவதற்குள் அவள் உயிர் பிரிந்துவிட்டது. உயிர் போகப்போகிறது என்று தெரிந்திருந்தால் அவள் ஆசைகளைச் சொல்லியிருப்பாள். ராகவா, நான் பெரிய தப்பு செய்துவிட்டான். உண்மையை அவளிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன். என் மனசு உறுத்துகிறது.“ என்று தேம்பித்தேம்பி அழுதார்.
ராமநாதனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. அவர் முகத்தைத் தடவி, “வருத்தப்படாதே. நீ செய்தது சரியானதே. உன் நிலையில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். இறைவன் ஒருவருக்கு நாளைக் குறித்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. போன உயிர் திரும்பி வருமா ? இறப்பு நம் கையில் இல்லை. நீ நல்ல நோக்கத்துடன்தான் செய்திருக்கிறாய். வாய்மை என்பது என்ன? தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொய்மையும் வாய்மையிடத்து; என்ற குறளில் குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும். நீ கவலைப்படாதே. இனிமேல் நடக்கப் போவதைப் பார்” என்றார் ராகவன்.
இந்த ஆறுதலான வார்த்தைகளால் மனம் தேறிய ராமநாதன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.
அதன் பிறகு ராகவன் சிந்தித்தார். ராமநாதனைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டோம். மனைவியே ஆனாலும் சத்தியத்தையும் நேர்மையும் கடைப்பிடிக்காவிட்டால் உண்மை சுடும். உள்ளத்தில் வலி ஏற்பட்டாலும் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்து கலா இருந்த அறைக்கருகில் போனார்.
அப்போது கலா மருமகளிடம், எனக்கு நெஞ்சு வலி அடிக்கடி வருகிறது. நான் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. பூவும் பொட்டுமாகக் கண்ணை மூடவேண்டுமென்பது என் ஆசை உன்னுடைய ,மாமனாரை நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும்” கூறியதைக் கேட்ட ராகவனின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.
– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com
தொடர்புள்ள சிறுகதைகள்
நீதிக்கு தண்டனை
நா.ரங்கராசன்
August 4, 2026
கிணறு
ஜே.எம்.சாலி
August 4, 2026
அப்பாவின் நிழல்
எம்.பாலா முரளி
August 4, 2026