போலி விமர்சனம்
கதையாசிரியர்: கோமதி ஸ்வாமிநாதன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 10, 2026
பார்வையிட்டோர்: 51
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று துரைச்சாமி, எங்களுக்கு அளித்த விருந்து மிகுந்த உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தது. சாப்பாட்டிற்குப் பிறகு, துரைசாமியின் வரவேற்பு அறையில் போய் உட்கார்ந்தோம். அவன் ஓர் குஷிப் பேர்வழி கலா ரசிகன். அவன் சொந்த நூல் நிலையத்தில் அனேக அபூர்வ புஸ்தகங்களை வாங்கிக் குவித்திருந்தான். அதோடு அவன் ஓர் இளம் கவிஞன். ஒரு வினாடியில் ஒன்பது வரிகள் கவிபுனைந்து விடுவான். அவனிடம் உள்ள ஓர் கெட்ட வழக்கம் என்னவென்றால், அவன் கவிதைகளை, தன் சொந்த சிலவிலேயே பிரசரித்து, நண்பர்களை, அப்பிரசரத்தைப் படிக்கும் படியான கஷ்ட நிலைமையில் வைத்து விடுவான்.
பூர்ண திருப்தியான விருந்தும் மனோகரமான வாசனைச் சந்தணப் பூச்சும் எங்களை ஸ்வர்க்கத்திலாழ்த்தியது. துரைச்சாமி நண்பர்கள் மத்தியில் வந்து நின்று கொண்டு புன் சிரிப்புடன் ஆரம்பித்தான். “ஒரு இளம் கவிஞனால்தான், மனிதர்களின் போலிப் புகழ்ச்சியையும் ஹிருதயத்தின் கபடத்தையும் நன்றாய்த் தெரிந்து கொள்ள முடிகிறது” என்றான். அவன் குசவில் கோபமில்லை ஆத்திரமில்லை. சாந்தம் த்வனித்த அந்த வார்த்தைகள் என் மனதில் சுரீரென்று தைத்தன.
“நான் கவிதைகள் புனையும் பழக்கத்தை விடவே போவதில்லை. மேலும் எழுதி எழுதிக் குவிக்கப் போகிறேன். ஆனால் என் கடைசி அனுபவத்திலிருந்து, என் கவிதைகளை புஸ்தக ரூபமாக மாத்திரம் வெளியிடப் போவதில்லை. நான் சரியான பாடம் கற்றுக்கொண்டேன்” என்றான்.
அவனுக்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. அவன் அருகிலிருந்த பீரோவிலிருந்து சில கடிதங்களை எடுத்து வந்தான். “இதைப் பார்த்தீர்களா! நான் கடைசியாக வெளியிட்ட என் புஸ்தகத்தைப் பற்றி நண்பர்கள் எழுதிய கடிதங்களை சிலவற்றைப் படிக்கிறேன் கேளுங்கள்” என்றான். எல்லோரும்.காதைத் தீட்டிக் கொண்டார்கள்.
முதல் கடிதத்தை கையில் பிரித்துக்கொண்டு இரைந்து வாசித்தான். “ஸ்ரீமான் துரைசாமிக்கு! உங்கள் கடைசிப் புஸ்தகம் மிகமிக அழகாயிருக்கிறது. அதன் இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் அகப்படவில்லை.” துரைசாமியின் முகத்தில் புன் முறுவல் ஏற்பட்டது. “இது ஓர் பெண்மணியிடமிருந்து” என்றான். அடுத்த கடிதத்தைப் படித்தான். “ஸ்ரீமான் துரைசாமி அவர்களுக்கு, உங்கள் புஸ்தகம் ஓர் அற்புதம். கவிதை என்றால் எனக்கு உயிர். அதிலும் உங்கள் கவிதை என்றால் எனக்கு உயிருக்குமேல்”.
“பெண்மணிகள் பரமரசிகர்கள்” என்று சில ஏகோபித்த குரல்கள் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டன.
“ஓர் ரசிகன் எழுதியிருப்பதைக் கேளுங்கள்” என்றான் துரை. “அன்புள்ள துரை! உன் கவிதைகளை ஆர்வத்துடன் வாசித்தேன்; திருப்பித் திருப்பி வாசித்தேன். எல்லாம் அபார கற்பனை! அதிலும், “காதல் ஓர்கலை” என்னும் கவிதை என்னை உன் பக்தனாகச் செய்து விட்டது.”
நண்பர்களெல்லாம் புன்சிரிப்புக் கொண்டார்கள். இன்னொருவர் எழுதியிருந்தார். “உன் புஸ்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொருவரியையும் மனப்பாடம் செய்துவிட்டேன். என்ன கவிதா சக்தி.”
எல்லோரும் இந்த விமர்சனத்தை ஒப்புக்கொண்டது போல் புன் முறுவல் பூத்தார்கள். என் மனதில் மாத்திரம் ஓர் பெரிய பாரம் அழுத்தித் தள்ளுவது போலிருந்தது. “கடைசியாக இதையும் வாசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த கடிதத்தைப் படித்தான் துரை. “வழக்கம்போல் இந்த வெளியீடும் ஓர் மகோன்னத சித்திரம். மேலும் மேலும் உன் கற்பனா சக்தி வளரட்டும்.”
துரைசாமி எல்லாக் கடிதங்களையும் சுற்றினான். ஒன்றைத் தவிர மற்றதை யெல்லாம் பீரோவில் கொண்டு போய் வைத்தான். திரும்பி வந்து எங்களை கம்பீரமாக ஓர் பார்வை பார்த்தான். “இனி மேல் நான் என் கவிதைகளைப் பிரசுரிக்கப் போவதில்லை” என்று தீர்க்கமான குரலில் சொன்னான்.
“ஏன்? இவ்வளவு புகழ்மாலையைச் சூட்டிக்கொள்ளும் நீ அப்படிச் சொல்லலாமா?” என்றான் சந்திரசேகான். “அப்படிக் கேள், சொல்லுகிறேன்! இந்த புகழ்மாலைகள் நிஜபுஷ்ப மாலைகள் அல்ல. போலிக்காகிதப் பூமாலைகள்! இதன் குட்டைச் சொல்கிறேன். புஸ்தகம் பிரசுரமானதும், நான் அச்சாபீசில் சொல்லி புஸ்தகங்களின் பக்கங்களைக் கிழிக்காமலேயே விட்டுவைக்கும்படி ஏற்பாடு செய்திருந்தேன். அந்த புஸ்தகம் மொத்தம் நூறு பக்கங்கள் கொண்டதாயிருந்தது. அந்தப் புஸ்தகங்களை நண்பர்களுக்கு அனுப்புமுன், வேறு மாதிரிக் கையெழுத்தில் என் பேருக்கு பணம் கொடுக்கும் படியாக ஓர் புனை பெயருடன், சிறுதுகைக்கு பல செக்குகள் தயாரித்து, ஒவ்வொரு பிரதியின் அறுபதாவது பக்கத்தில் நுழைத்திருந்தேன். புஸ்தகத்தைப் படிக்கும் போது எனக்குச் சேர வேண்டிய செக் அதில் இருந்தால் உடனே அதை எனக்கு அனுப்பத்தானே தோன்றும்?”
“சந்தேகமில்லாமஸ்!”. என்ற குரல்கள் ஏகோபித்து எழுந்தன. “அப்படியானால் உன் புஸ்தகத்திலிருந்த செக் எங்கே?” என்று திடீரென்ற துரைசாமி என்னைப் பார்த்துக் கேட்டான்.
ஆயிரம் அணுகுண்டுகள் சேர்ந்து என்னைத்தாக்கிய மாதிரி உணர்ச்சி தோன்றிற்று. இப்போதுதான் அணுகுண்டு இலக்கியங்களில்கூட ஓர் முக்யஸ்தானத்தை அடைந்து விட்டதே! “என்னையா கேட்கிறாய்?” என்று சமாளித்துக் கொண்டேன். என் தொண்டை பேச மறுத்தது. சாப்பிட்டவுடன் உட்காராமல் வீட்டிற்குப் போயிருக்கக் கூடாதா என்று தோன்றியது.
“உன்னைத்தான்! இதோ நீ எழுதியிருக்கும் கடிதத்தைப்பார். என் கவிதைகனின் ஒவ்வோர் வார்த்தையும் உன் ஹிருதயத்தில் ஊறிப்போய் விட்டதாக எழுதியிருக்கிறாயே?”
எல்லோரும் என்பதிலை வெகு ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். “எனக்கு அனுப்பிய பிரதியில் நீ செக்கை வைக்க மறந்திருக்கலாம்” என்றேன்.
”அதுதான் விசேஷம்! உன் புஸ்தகத்தில் மாத்திரம் மூன்று செக்குகளை நுழைத்திருந்தேன். கள்ளம் கபடற்ற மனோதர்மமுள்ள விமச்சகன் என்று பெருமை அடித்துக கொள்வாயே! அதைப் பரிசோதிக்கத்தான் இந்தத் தந்திரத்தைச் செய்தேன். ஆனால் நீதான் புஸ்தகத்தைப் பிரித்துப் பார்க்காமலேயே, என்னை முகஸ்துதி செய்து விட்டாய் என்று நினைக்கவேண்டாம். இவ்வளவு புகழ்மாலை அளித்தவர்கள் ஒருவராவது இன்னும் அந்த செக்குகளை அனுப்பவில்லை. புஸ்தகத்தைப் பிரிக்காமல் போலி விமர்சனம் செய்திருக்கிறார்கள்” என்று முடித்தான்.
துரைசாமி நல்லவிருந்துதான் அளித்தான். கடைசியில் கொஞ்சம் விளக்கெண்ணையையும் கொடுத்து விட்டான்!
– ‘திருமகள்’ இதழில் 1945-இல் வந்த படைப்பு.
நன்றி: https://s-pasupathy.blogspot.com/
தொடர்புள்ள சிறுகதைகள்
தன் வினை தன்னைச் சுடும்
கே.என்.சுவாமிநாதன்
May 10, 2026
அச்சம் என்பது மடமையடா!
வளர்கவி
May 7, 2026
அலெக்ஸா, மணி என்ன?
கே.என்.சுவாமிநாதன்
May 7, 2026