வசந்தம் வந்து போய்விட்டது
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2026
பார்வையிட்டோர்: 177
(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம் – 1

“வசந்த காலம் இப்படியா தொடங்கும்”? சாந்தி தனக்குள் முணு முணுத்துக் கொண்டாள். இரவெல்லாம் இடியும் மழையும். அந்த ஆரவாரம் இன்னும் ஓய்ந்த பாடாயில்லை.
தன்னையணைத்துக் கொண்டு நிம்மதியாக நித்திரை செய்யும் கணவனின் தலைமயிரைத் தடவி விட்டாள் சாந்தி. இன்னும் ஒரு மணித்தியாலத்தில் அவன் ரெயின் எடுக்க வேண்டும்.
வழக்கமாக அவள் எழுந்து முகம்கழுவி கடவுள் கும்பிட்டு மெல்லிய சத்தத்தில் ஏதோ ஒரு பக்திப் பாடலை ரேப்பில் போட்டுவிட்டுக் கீழே சென்று அவனுக்ககாகக் காலைச் சாப்பாடு செய்வாள்.
இவள் தயாரிக்கும் வறுத்த பாணின் மணமோ என்னவோ இவள் பாணுக்கு பட்டர் பூசவும் அவன் எழும்பிக் குளியலறைக்குப் போகவும் சரியாயிருக்கும்.
ஆழ்ந்த நித்திரையில் இவள் மார்பில் அவன் தலை வைத்து உலகத்தை மறந்து நித்திரை செய்கிறான். அந்த அணைப்பின் சுகத்தில் வாழ்க்கை எல்லாமே காலத்தைக் கழிக்க வேண்டும் போல் அவனுக்கொரு கற்பனை பிறக்கிறது.
அவன் நேற்றும் மழையில் நனைந்து விட்டான். கொஞ்சக் குளிர் பட்டாலும் அவனுக்குத் தடிமல் வந்து விடும். காரை ரோட்டில் பார்க் பண்ணி விட்டு வீட்டுக்குள் வரும் வரைக்கும் நனைந்த மழையில் அவன் தும்மிக் கொண்டான்.
அவள் கணவன் நடராஜன் ஒரு வழக்கறிஞன். அவனுடைய ஒவ்வீஸ் லண்டனிலிருக்கிறது. அவர்கள் செயின்ட் அல்பேன்ஸ் என்ற இடத்தில் வசிக்கிறார்கள். குழந்தையின் படிப்பை முன்னிட்டும், அமைதியாக வாழ வேண்டும் என்றும் நினைத்தும் அவர்கள் லண்டனுக்கு வெளியில் வீடு வாங்கினார்கள்.
லண்டனிலுள்ள சொந்தக்காரர்களைப் பிரிந்து செயின்ட் அல்பேன்ஸ் என்ற இடத்திற்குக் குடிபெயர அவனுக்கு முதலில் விருப்பமிருந்ததில்லை. முன் பின் தெரியாத இடத்தில் என்னவென்று தனியாக வாழ்வது என்று யோசித்துக் கொண்டு வந்தவனுக்குக் குழந்தை உஷா பாடசாலைக்குச் சேர்ந்ததும் கிடைத்த சினேகிதர்களின் உறவால் குழந்தைகளின் தாய்கள் சினேகிதமாகி விட்டார்கள்.
உஷாவை அவள் இன்று கொஞ்சம் முந்தி எழுப்ப வேண்டும். குழந்தைகளை அந்தப் பாடசாலை ஆசிரியர்கள் லண்டனிலுள்ள மியுசியம் ஒன்றுக்குக் கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். உஷா அந்த உற்சாகத்தில் இரவு படுக்கைக்குச் செல்லவே மிகவும் நேரமெடுத்தது.
சாந்தி கணவனின் தலையை மெல்லமாகத் தூக்கித் தலையணையில் வைத்தாள். அத்துடன் அவன் மெல்லமாகக் கண்களைத் திறந்தான். அரை குறை நித்திரைக் கலக்கத்தில் மனைவியை இன்னொருதரம் இறுக அணைத்தான்.
“குட்மோர்ணிங்” அவள் அவன் காதுகளில் முணுமுணுத்தாள்.
“உம்…உம்” அவன் இன்னும் பிடியை விடவில்லை. “குழந்தை உஷாவை எழுப்ப வேண்டும். அவள் இன்று மியுசியம் போகிறாள்”
அவள் அவன் காதுகளில் கிசுகிசுத்தாள்.
அவன் கொட்டாவியுடன் கண்களை அகல விரித்து அவளை அப்படியே கண்களிலும் தழுவினான்.
“வேலைக்குப் போக மனமில்ல” அவன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி சொன்னான்.
“எனக்கும்தான் உங்களை வேலைக்கு விட மனமில்ல. ஆனா வீட்டுக் கடன், டெலிபோன் பில், காஸ் பில், எலக்ரிசிட்டி பில், தண்ணீர் பில் என்று எத்தனையோ பில் வருமே”
அவள் குறும்பாகச் சிரித்தாள்.
“அம்மா கெதியாய் வெளிக்கிடுங்கோ” ஆறு வயது மகள் உஷா அவசரமாக இவர்களின் அறைக்குள் வந்தாள்.
“அம்மா ரவியும் வருவானா” உஷா தாயைக்கேட்டாள். ரவி என்ற ஆறுவயதுப் பையன் உஷாவுடன் படிக்கிறான். ஆங்கிலேயத் தாய்க்கும் இந்தியத் தமிழனுக்கும் பிறந்த குழந்தை ரவி. உஷாவின் அன்புக்குரிய சினேகிதன்.
“ஏன் ரவியும் வருவானோ என்று கேட்கிறாய்”
“நேற்றுத் தடிமலுடன் கஷ்டப்பட்டான்” உஷா சொன்னாள்.
தகப்பன் மகளையணைத்துக் கொஞ்சிவிட்டு எழும்பிக் குளியலறையை நோக்கி நடந்தான்.
சாந்திக்கும் நடராஜனுக்கும் திருமணமாகிப் பத்து வருடங்களாகின்றன. உஷாவைத் தவிர இன்னுமொரு குழந்தையுமில்லை. உஷாவே அவர்களின் அருமைக் கண்மணி.
சாந்தி தன்னையறியாமல் தன் வயிற்றைத் தடவிக் கொண்டாள். மாதவிடாய் வராமல் நின்று மூன்று கிழமைகளாகி விட்டன.
இப்படி எத்தனையோ தரம் அவளுக்கு மாதவிடாய் தவறியிருக்கிறது. அவளும் ஆசையுடன் தான் கற்பவதியாய் போவதாகக் கற்பனை செய்வாள் ஆனால் சில கிழமைகள் தாண்டியதும் பீரியட் வந்து விடும்.
இந்தத் தடவை ஏதோ ஒரு காரணத்தினால் தன் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறாள் சாந்தி. அந்த நம்பிக்கையின் காரணங்களை முழுக்க முழுக்க உண்மை என்று தெரிந்து கொள்ளும்வரை அவனிடம் ஒன்றும் சொல்வதில்லை என்று இருக்கிறாள்.
வெளியில் சரியான காற்று-மிகப் பயங்கரமாக வீசிக் கொண்டிருந்தது.
“இந்த மாதிரிச் சூழ்நிலையில் குழந்தைகளை மியுசியம் கூட்டிக் கொண்டு போகிறார்கள். கடவுளே எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்” சாந்தி தன் மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டாள்.
மேல் மாடியில் தகப்பனும் மகளும் ஏதோ சொல்லிப் பெரிதாகச் சிரித்துக் கொள்வது கேட்டது.
“தனிக் குழந்தையான உஷாவுக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ பிறக்க உதவிசெய் கடவுளே”
சாந்தி வாய் விட்டுக் சொல்லிக் கொண்டாள்.
ஒரு சில தினங்களுக்கு முன் தன் நிலையை அறிந்து கொள்ள அவள் தன் டொக்டரைப் போய்ப் பார்த்தாள். தான் கற்பம் அடைந்திருப்பதாகச் சொன்னதும் அவளின் சலத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதாகச் சொன்னார்.
நேற்று சலம் பரிசோதனை நடந்தது. அதன் முடிவில் இன்று டொக்டரிடம் போய்க் கேட்க வேண்டும்.
உஷாவைப் பாடசாலையில் கொண்டு போய்விட்டு வரும் வழியில் டொக்டரைப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டாள்.
மகளும் தகப்பனும் போடும் உற்சாகமான சப்தத்தில் அவளின் சிந்தனை தடைப்பட்டது.
எத்தனை சந்தோசமான குடும்பமிது.
பெருமையுடன் அவள் தன் வீட்டு வேலையில் ஈடுபட்டாள்.
எமிலி சிம்ஸன் தன் மகனைக் கனிவுடன் பார்த்தாள். ஒன்றிரண்டு நாட்களாகத் தடிமலுடன் அவதிப்பட்டு விட்டான் ரவி. எந்த நேரமும் எதையோ செய்து கொண்டிருப்பான் ரவி.
ரவியின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். லண்டன் யூனிவர்சிட்டியில் படித்தபோது எமிலியைச் சந்தித்தான் ஆனந்த். எமிலியும் ஆனந்தும் சினேகிதமானார்கள். அதன் பிரதிபலிப்புதான் குழுந்தை ரவி,
“இன்றைக்குக் கட்டாயம் பாடசாலைக்குப் போகத்தான் வேணுமா” மகனை ஆதரவுடன் அணைத்துக் கொண்டு கேட்டாள் எமிலி.
“உம்; கட்டாயமாக…. நாங்கள் மியுசியம் போகிறோம். டைனசோர் பார்க்கப் போகிறோம்”. ரவி உற்சாகமாகச் சொன்னான்.
“உங்களுக்கு உடம்பு சரியில்லை மகன்”
“சும்மா தடிமல்தானே” பெரிய மனிதத் தனம் அந்தக் குழந்தையின் குரலில்.
அவன் தகப்பனும் அப்படித்தான். சிறிய விடயங்களைத் தூக்கிப் பிடிக்க மாட்டான், பெரிய விடயங்களென்றால் மிகவும் தீவிரமாக யோசித்து விட்டுச் சொல்வான்.
அந்தத் தகப்பனுக்கு லண்டனில் தனக்கு ஒரு மகன் வளர்கிறான் என்று தெரியுமா? தெரிந்திருந்தால் ஆனந்தன் எப்போதோ ஒடோடி வந்திருப்பான்.
கடைசியாக எமிலிக்கு அனுப்பிய கிறிஸ்மஸ் வாழ்த்து மடலுடன் தனது மனைவியுடையதும் இரண்டு வயது மகனுடையதுமான புகைப்படங்களை அனுப்பியிருந்தான்.
அந்தப் புகைப்படங்களைக் கண்டதும் எமிலி கண்ணீர் விட்டாள். ஆனந்தக் கண்ணீரா அல்லது சோகக் கண்ணீரா என்று அவளுக்கே தெரியாது. ஆனந்தன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எப்போதும் பிரார்த்திப்பாள். தன் மகனைக் காணும்போதெல்லாம் ஆனந்தனின் முகம் அவள் மனத்திரையில் படம் போடும்.
ஆனந்தனின் சுருண்ட தலைமுடி ரவியிடமுண்டு, சிரிக்கும் கண்கள் ரவியிடம் அப்படியே மறு பிறவி எடுத்திருக்கிறது.
ஆழமாக எதையும் அளவிடும் மனப்போக்கு ரவியிடம் வளரலாம்.
ரவிக்கு இப்போதுதான் ஆறு வயது. இன்னும் பல வருடங்களில் அவனும் அவன் தகப்பன் ஆனந்தன் போல் வீணையில் ஒரு வித்துவானாக வரலாம்.
“என்னம்மா யோசிக்கிறீர்கள்’ ரவி தாயின் பொன் முடியைச் சீண்டினான்.
“உனது அப்பாவைப் பற்றிச் சிந்திக்கிறேன்” என்று சொல்லலாமா?
அவள் மறுமொழி சொல்லாமல் மகனையணைத்துக் கொண்டாள்.
தனது மனைவியின் பெயர் காயத்திரி என்றும் மகளின் பெயர் தேவிகா என்றும் ஆனந்தன் எழுதியிருந்தான்.
முதற் குழந்தை மகனாய்ப் பிறக்கவில்லை என்று தன் தாய் அங்கலாய்த்ததாக அவன் எழுதியிருந்தான்.
சென்னையில் மிகப் பிரபலமான சங்கீதக் குடும்பமது. ஆனந்தன் தன் தகப்பனைப் போல் வீணையில் பாண்டித்தியம் பெறவேண்டும் என்று ஆசை. ஆனால் அதே நேரம் தாய் தகப்பனின் ஆசைப்படி எஞ்சினியரிங் படிப்பு அவன்தலையில் சுமத்தப் பட்டது.
“இப்போதெல்லாம் கர்நாடக சங்கீதத்துக்கு மதிப்புக் குறைந்து விட்டது. பொது ஜனங்கள் பெரும்பாலும் பொப் பாட்டுக்களைத்தான் விரும்புகிறார்கள். நான் என்னவோ வீணையை நம்பி வாழ்க்கையை ஓட்டிவிட்டேன். நீயாவது ஏதும் நல்ல படிப்பு படித்து முன்னுக்கு வா” நாராயணசுவாமி ஐயர் சொன்னபோது ஆனந்துக்கு வயது பதினைந்து.
வீணையின் நரம்பைத் தடவி எழுப்பும் தெய்வீக ஓசையில் உலகத்துத் துயர்கள் எல்லாம் மறப்பவன் ஆனந்த்.
மூன்று தங்கைகளுக்குத் தமயனாகப் பிறந்தவன். தாய் தகப்பன் ‘நல்ல படிப்பு’ படித்து முன்னுக்கு வா என்று சொல்வதின் அர்த்தம் தெரியாதவன் அல்ல அவன்.
எமிலியிடம் தன் குடும்ப நிலையைச் சொல்வான். மத்திய தர பிராமண வாழ்க்கைத் தரத்தில் தான் வீணையைத் தூக்கி வைத்துக் கொண்டு மூன்று தங்கைகளுக்கும் வாழ்க்கையை அமைப்பது முடியாத காரியம் என்று தாய் தகப்பன் அங்கலாய்ப்பதை அவன் துயரத்துடன் எமிலியிடம் சொல்லி முறையிடுவான்.
இருவரும் ஒரு காலத்தில் லண்டன் யூனிவர்சிட்டியில் இரண்டு டிப்பார்ட்மெண்ட்டில் இருவிதமான பட்டங்களைப் பெறப் படித்துக் கொண்டிருந்தார்கள்.
பின்னேரம் ஐந்து மணிக்குப் பின் யூனிவர்சிட்டி மாணவர்கள் பார்களிலும் கிளப்புகளிலும்தான் காணப்படுவார்கள். கோடை விடுமுறைக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் எமிலி தன் சினேகிதி ஒருத்தியிடம் கொடுத்த நோட்சை வாங்க ஸ்ருடன்ட்ஸ் பாருக்குப் போனாள்.
அவளின் சினேகிதி மிகவும் ஆரவாரமாக இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தாள்.
எமிலி தன் சினேகிதியுடன் விவாதித்துக் கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்தாள். இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன.
“ஹலோ எனது பெயர் எமிலி ஸிம்சன்” சினேகிதி தன்னை அந்த இளைஞனுக்கு அறிமுகம் செய்து வைக்காதபடியால் தானே அறிமுகம் செய்து கொண்டாள் எமிலி.
“ஹலோ, எனது பெயர் ஆனந்த் நாராயணசுவாமி ஐயர்’ அவன் குரல் கணீரென்று ஒலித்தது. அவன் பெயர் மிகவும் நீண்டிருப்பதாகப் பட்டது. இந்தியர்களும் இலங்கையர்களும் ஏன் இப்படி நீண்ட பெயர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“ஆனந்த் என்று என் சினேகிதர்கள் அழைப்பார்கள்” அவன் புன்முறுவல் மிகவும் அழகானது.
“எமிலி என்று என் சினேகிதிகள் சொல்வார்கள்” எமிலி அவனுடன் கைகுலுக்கிக் கொண்டாள்.
அவனது கைகள் மிகவும் மிருதுவாக இருந்தது. கோடை கால வியர்வைக்கோ என்னவோ மிகவும் குளிர்ந்து விட்டது.
வாழ்க்கையில் ஒரு நாளும் கஷ்டப்பட்டு வேலை செய்யாதவனாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு இப்படி மென்மையான கரங்கள் இருக்க முடியுமா? அவள் ஒரு கணம் அவன் கரங்களைப் பற்றி யோசித்தாள்.
“எமிலி, இந்த ஆனந்த் சரியான விவாதி. ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டால் அக்கு வேரும் ஆணிவேரும் ஆராய வெளிக்கிடுகிறார்”. எமிலியின் சினேகிதியின் குரலில் ஆர்வம், சந்தோசம், ஆச்சரியமெல்லாம் பிணைந்து கிடந்தன.
“கௌரவத்திற்காக அல்லது மற்றவர்களின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக நடிப்பதற்காக நான் ஆமாம் சாமி போடமாட்டேன். சரியான கருத்துக்களைச் சொல்ல ஏன் பயப்படவேண்டும்? Politness என்பது dishonest என்றும் சொல்லலாமல்லவா” அவன் சிரித்தபடி கேட்டான்.
எமிலிக்கு ஆனந்தைப் பிடித்துக் கொண்டது. அதன் எதிரொலி இரண்டு வருடங்களுக்குப் பின் ரவி அவன் வயிற்றில் கர்ப்பமாய் வளர ஆனந்த் தாய் தகப்பன் பேசி வைத்திருக்கும் பெண்ணைக் கை பிடிக்க தமிழ் நாட்டுக்குப் போனான்.
“எப்போதும் இந்த வீட்டில் தர்க்கமும் சண்டையும் தான்” அலிஸன் திட்டிக் கொண்டாள்.
“ஒரு கை அடித்தால் சத்தம் வராது, இரண்டு கைகள் அடிபட்டாற்தான் சத்தம் வரும்” டேவிட் முணுமுணுத்துக் கொண்டான்.
குழந்தைகள்- பீட்டர் ஆறுவயது, சைமன் இரண்டு வயது- இருவரும் ஒருத்தரை ஒருத்தர் சீண்டிவிட்டு அலறிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வீடு அல்லோல கல்லோலமாகக் காட்சியளித்தது.
“பீட்டர் கெதியாக வெளிக்கிடு” அலிஸன் மகனைப் பார்த்துச் சத்தம் போட்டாள்.
வெளியில் காற்றும் மழையும் போட்டி போட்டுக் கொண்டு வாரியிறைத்துக் கொண்டிருந்தன.
“நான் இன்றைக்கு வேலைக்குப் போகவில்லை” டேவிட் சலித்துக் கொண்டான். அவனுக்கு ஒரு சிறிய படக் கொம்பனியில் எடிட்டிங் வேலை. பெரும்பாலான வேலை பின்னேரம்தான் தொடங்கும்.
கடைசியாக நடந்த படப்பிடிப்பின் படச்சுருள் நேற்றுப் பின்னேரம்வரை ஸ்டுடியோவை வந்து சேரவில்லை. இன்று வந்து சேருமென்றில்லை. அத்துடன் அவன் எழுதிக் கொண்டிருக்கும் Script ன் கடைசிப் பகுதியை அவன் இன்னும் சில நாட்களில் முடிப்பதாக இருக்கிறான்.
“ஏன் யாரும் உங்கள் கேர்ள் பிரண்டைச் சந்திக்கப் போகிறீர்களா” அலிஸன் எக்காளமாய்க் கேட்டாள்.
டேவிட் மறுமொழி சொல்லவில்லை. மறுமொழி சொல்லிப் பிரயோசனமுமில்லை. அவர்களுக்குத் திருமணமாகி ஏழு வருடங்களில் அலிஸன் ஒரு நாளாவது அவனை இப்படிக் கேட்காமல் விட்டதில்லை.
எலியும் பூனையுமாக அவர்கள் வாழ்வதின் எதிரொலிப்பு இது. ஏனோதானோ என்று இழுத்துக் கொண்டு போகும் தாம்பத்திய வாழ்க்கையின் தவிர்க்க முடியாத வரட்டு வாதமது.
குழந்தைகள் பீட்டரும் சைமனும் ஒரே நேரத்தில் அழத் தொடங்கி விட்டார்கள். அவசரமாகக் குழந்தைகளை வெளிக்கிடுத்தித் தானும் வெளியேறினாள். உள்ளம் கனத்தது. உப்புச் சப்பில்லாத தன் கல்யாண வாழ்க்கையை மனதார வெறுத்தாள்.
டேவிட்டில் ஆத்திரம் வந்தது. அவன் இவளை எடுத்தெறிந்து நடத்துவதாக இவள் நினைக்கிறாள். அவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக இவள் நம்புகிறாள். ஏழுவருட மண வாழ்க்கையும் உப்புச் சப்பில்லாமல் போனதாக இவள் துயர்படுகிறாள்.
அவனோ இவள் இதையெல்லாவற்றையும் கற்பனை செய்வதாகச் சொல்கிறான்.
அலிஸன் குழந்தைகளுடன் கதவைச் சாத்திவிட்டு வெளியேறினாள். தூரத்தில் சாந்தியும் உஷாவும் வருவது தெரிந்தது.
சாந்தியைக் கண்டால் சிலவேளை அலிஸனுக்கு பொறாமை வரும். எத்தனை அன்பான கணவன் நடராஜன்?
மனம் விம்மியது. சாந்தியும் உஷாவும் வரும் வரை பொறுத்திருந்தாள் அலிஸன். அதே நேரம் முன்னுக்கிருந்த குறுக்கொழுங்கையால் எமிலியும் ரவியும் வந்து கொண்டிருந்தார்கள்.
எமிலியைக் கண்டால் அலிஸன் தர்மசங்கடப் படுவாள். ஏன் என்று அவளுக்கே தெரியாது. எமிலியின் எடுப்பான தோற்றமா அல்லது சுதந்திரமான வாழ்க்கை முறையா?
மறுமொழி தெரியாது.
அத்தியாயம் – 2
பொன்னிறத் தலையில் படிந்து பனியாய்க் கொட்ட, நீலவிழிகள் சினேகிதிகளைப் பார்க்க எமிலி, சாந்தியையும் அலிஸனையும் நெருங்கினாள்.
“என்ன இண்டைக்கு வேலைக்குப் போகவில்லையா” சாந்தி கேட்டாள்.
“வீட்டில் நின்று சில வேலைகளை முடிக்கலாம் என்றிருக்கிறேன். நேற்றும் முதல் நாளும் நான் வேலைக்குப் போகவில்லை, ரவிக்குச் சரியான சுகமில்லை”. எமிலி சொன்னாள். அவள் பிடித்திருந்த குடை காற்றில் பறக்கத் தவித்தது.
இந்த மழையிலும் காற்றிலும் ஏன்தான் குழந்தைகளை மியுசியம் கொண்டு போகிறார்களோ தெரியவில்லை.
அலிஸன் சலித்துக் கொண்டாள்.
சாந்தியும் எமிலியும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
ஏன அலிஸன் எப்போதும் எரிச்சலும் முணுமுணுப்புமாக உலகத்தைப் பார்க்கிறாள் என்று இருவரும் எத்தனையோ தரம் தங்களுக்குள் பேசிக் கொண்டதுண்டு.
“ஒரு சிலருக்கு உலகத்தை எரிச்சலுடனும் வெறுப்புடனும் பார்க்கத் தான் தெரியும்!” எமிலி எப்போதோ ஒரு தரம் சாந்திக்குச் சொல்லியிருக்கிறாள்.
குழந்தை சைமன் தள்ளுவண்டியிலிருந்தபடி நித்திரையாகிவிட்டான். அவனை இன்னும் கொஞ்ச நேரத்தில் நேர்ஸரியில் கொண்டுபோய் விடுவான் அலிஸன்.
சாந்தி குழந்தையை உற்றுப் பார்த்தாள். தனக்கும் ஒரு குழந்தை கிடைத்தால் அடுத்த வருடம் அவளும் இப்படித்தான் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு பாடசாலைக்கு வருவாள்.
திருமணமாகி அடுத்த வருடமே உஷா பிறந்தாள். அதன் பிறகு ஆறுவருடமாகியும் ஒரு குழந்தையுமில்லை. இந்த மாதமும் அவனுக்கு மாதவிடாய் தவறிவிட்டது. இப்படி எத்தனையோ தரம் தவறியிருந்தாலும் இந்தமாதம் அவள் மனத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை.
“என்ன பெரிதாக அடிக்கிற காற்றோட சேர்ந்து உனது மனமும் ஓடிவிட்டதா” எமிலி சினேகிதியைக் கேட்டாள்.
எமிலியின் நீலவிழிகள் சாந்தியின் முகத்தை ஸ்கான் பண்ணிக் கொண்டிருந்தன. சாந்தி எதையோ தீவிரமாக யோசிக்கிறாள் என்று தெரிந்தது.
ஆங்கிலேயப் பெண்மணியான எமிலி மற்றவர்களின் விடயத்தில் தேவையில்லாமற் தலையைப் போட மாட்டாள்.
அலிஸன் அதற்கு எதிர்மாறானவள். ஒன்றில் தன்னைப் பற்றி அதாவது அவள் கணவன் டேவிட்டைப் பற்றித் திட்டிக் கொண்டிருப்பாள் அல்லது குழந்தைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பாள். எதையாவது யோசிக்காவிட்டால் அலிஸனால் வாழமுடியாது போலும் என்று சாந்தி நினைத்ததுண்டு.
பாடசாலை வளவுக்குள் மியுசியம் போவதற்கான பஸ் வந்து நின்று விட்டது. குழந்தைகளின் ஆரவாரம் காற்றை விட வேகமாக எல்லா இடமும் பரந்தது.
மியுசியம் கூட்டிக் கொண்டு போகும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெயர்களைக் கூப்பிட்டுத் தங்கள் அட்டவணையில் மார்க் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
பஸ் புறப்பட்டபோது குழந்தைகளின் ஆரவாரம் வானைப் பிளந்தது.
பாடசாலைக்குப் பக்கத்திலிருக்கும் நேர்ஸரிக்குக் குழந்தையைக் கொண்டுபோய் விட அலிஸன் விரைந்தாள்.
எமிலியும் சாந்தியும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப கேற் பக்கம் சென்றார்கள்.
அவர்கள் ரோட்டில் ஏறியபோது அலிஸன் இவர்களைச் சந்திக்க ஓடி ஓடி வந்து கொண்டிருந்தாள்.
“புருஷனைத் திட்டிப் பாராயணம் பண்ண அலிஸன் எங்களை கோப்பி சாப்பிடும் சாட்டில் கூப்பிடப் போகிறாள்”
சாந்தி எமிலியிடம் முணுமுணுத்தாள்.
மழை விடாமற் கொட்டிக் கொண்டிருந்தது.
எமிலி தன் குடையைச் சரித்துப் பிடித்தபடி சாந்தியைக் கடைக் கண்ணாற் பார்த்தாள்.
“ஏன் இன்று சாந்தி அதிகப்படி சந்தோசமாக இருக்கிறாள்” எமிலியின் மனத்தில் இப்படி ஒரு எண்ணம் ஓடியது.
“என்ன எமிலி அப்படிப் பார்க்கிறாய்” சாந்தியின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
“ஏதோ மிகவும் சந்தோசமாய் இருக்கிறாய் போலத் தெரிகிறது”
சொல்லலாமா இவளுக்கு? இன்று நான் டொக்டரிடம் போய் நான் கர்ப்பவதியா இல்லையா என்று தெரிந்து கொள்ளப் போகிறேன், பெரும்பாலும் நல்ல முடிவாகத்தான் இருக்குமென்று மனம் சொல்கிறது என்று இவளுக்குச் சொல்லலாமா?
அவளின் கணவன் ராஜனுக்கே அவள் இன்னும் சொல்லவில்லை. எப்படித்தான் சினேகிதமாக இருந்தாலும் எமிலியிடம் இப்படியான பிரைவேட்டான விடயங்களை எப்படித் திடீரென்று சொல்வது?
“என்ன பெரிய யோசனை?” எமிலி இப்போது சாந்தியை நேரடியாகப் பார்த்துக் கேட்டாள்.
”குழந்தைகள் ஒரு பிரச்சினையுமில்லாமல் போய் வர வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருக்றேன்” சாந்திக்குத் தெரியும் தான் பொய் சொல்வதை எமிலி கண்டுபிடிப்பாள் என்று.
எமிலி முன்புறுவலுடன் பார்வையைத் திருப்பினாள்.
“ஹலோ, சாந்தி, எமிலி, என் வீட்டுக்கு ஒரு தரம் எட்டிப் பாருங்களேன்.. இந்த மழைக்கும் காற்றுக்கும் ஒரு சூடான கோப்பி நன்றாக இருக்குமில்லையா? “அலிஸன் மூச்சு இளைக்க ஓடி வந்து இவர்களைக் கேட்டாள்,
“நோ தாங்க்ஸ் எனக்கு நிறைய வேலைகிடக்கு. ஒரு றிப்போர்ட் எழுதி முடிக்க வேண்டும்…. அதற்காகத்தான் லீவெடுத்தேன்.'” எமிலி வழக்கமான தனது ஆறுதலான இனிய குரலிற் சொன்னாள்,
“எமிலி, நீ எப்பபோதும் பிஸியான மனுசி, நாங்கள் புருஷன் உள்ளவர்கள், எங்களுக்கில்லாத பிஸி உனக்கு” அலிஸன் இப்படிச் சொன்னது எமிலிக்கு எரிச்சலையுண்டாக்கியிருக்க வேண்டும், அவள் நீல விழிகள் ஒருதரம் அகல விரிந்தன.
“ஸோ, கணவன் உள்ள பெண்கள் மட்டும் தான் பிஸியாக இருப்பார்கள், கணவன் இல்லாதவர்கள் கனவு கண்டுகொண்டு கற்பனை உலகில் வாழ்வார்கள் என்று நினைக்கிறாயா?”
“நோ, நோ, நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. ஆண்கள் வீட்டிலிருந்தால் அவர்களைச் சமாளிக்க எத்தனையோ வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், அப்படிப் பிரச்சினையில்லாத பெண்கள்……’ அலிஸன் வார்த்தைகளை முடிக்கவில்லை.
“…தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளலாம் என்று நினைக்கிறாயா” எமிலி குரலில் சாந்தத்தை வரவழைத்தாலும் அவள் முகத்தில் எரிச்சலின் பிரதிபலிப்புத் தெரிந்தது.
“கணவர்களைப் பற்றிக் கருத்தரங்கம் ஏன் நடுத்தெருவில் செய்ய வேண்டும்” சாந்தி நடுநிலைமை வகிக்கும் தொனியிற் சொன்னாள்.
“ஹலோ லேடிஸ்” மிஸ்டர் பார்கின்ஸன் என்னும் எண்பது வயதுக் கிழவன் வழக்கம்போல் இதே நேரத்தல் இந்தப் பாதையால் தேகாப்பியாச நடைபோடுவார்.
“மழையும் பனியும் உங்களைப் பாதிக்காதா” சாந்தி ஒரு நாள் கேட்டாள்.
“மைடியர், எண்பது வயது உடம்பு, இவ்வளவு காலமும் உலகமெல்லாம் ஓடித் திரிந்த உடம்பு. உலக யுத்தத்தில் எத்தனையோ இறப்புக்களையும் இழப்புக்களையும் கண்ட உள்ளம், இந்த மழைக்கும் பனிக்கும் பயந்து விடுமா’ பார்கின்ஸன் தனது செயற்கைப் பற்கள் பளபளக்கச் சிரித்தார்.
அவர் தலையில் ஓவர்கோட்டோடு சேர்ந்த ஹாட் போடப்பட்டிருந்தது.
பார்கின்ஸன் கிழவன் இரண்டாம் உலகயுத்தக் காலத்தில் இலங்கையிற் திருகோணமலையில் வாழ்ந்தவராம்.
“எந்த ஊரிலிருந்து வந்தாய் பெண்ணே” என்று ஒரு நாள் அவர் சாந்தியைக் கேட்டார்.
“இந்து சமுத்திரத்தில் முத்துப் போல ஒரு அழகிய தீவு இருக்கிறதே அதன் பெயர் இலங்கை, அங்கேயிருந்து வந்தேன்” சாந்தி மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
“என்ன இலங்கையிலிருந்து வந்தாயா…. ” கிழவன் செயற்கைப் பற்கள் கட்டிய வாய் அகல ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தார்.
அவளுக்கு இவரின் ஆச்சரியம் விளங்கவில்லை. வெளி நாட்டாரைக் கண்டால் வெறுப்புடன் முகம் சுளிக்கும் ஆங்கில மனிதர்களைத்தான் அவள் நிறையக் கண்டிருக்கிறாள். இந்த மனிதன் ஆச்சரியத்துடன் வாய் பிழக்கிறாரே?’
“மை டியர் நான் எனது இளமைக் காலத்தில் இலங்கையிலிருந்தேன், சந்தோசம் தேடப் போகும் உல்லாசப் பிரயாணியாகப் போகவில்ல, மகா யுத்தத்தில் யப்பானியரை எதிர்த்துப் போராடும் ஆஙகிலச் சிப்பாயாகச் சென்றேன்” அவரின் கண்களில் பழைய ஞாபகங்கள் பளிச்சிட்டன போலிருந்தது.
“இலங்கையில் எந்த இடம்”
“திருகோணமலை, ஆஸ்பத்திரிக்கு அருகிலுள்ள பீச் ரோட்டில் உள்ள இடம்” சாந்தி இப்படிச் சொன்னதும் எண்பது வயதுக் கிழவன் துள்ளிக் குதித்தார். அவர் சந்தோசத்துடன் இவள் கையைப் பிடித்துக் கொண்டு “உலகம் மிகவும் குறுகித்தான் போய்விட்டது. பார்த்தாயா பார்த்தாயா, செயின்ட் அல்போன்ஸ் நகரில் எத்தனையோ ஆசியர்கள் இருக்கிறார்கள் ஆனால் நீ ஒருத்தி தான் திருகோணமலையிலிருந்து வந்திருக்கிறாய். எத்தனையோ தரம் அந்த ஊரிலிருந்து வந்த யாரையும் சந்திப்போமா என்று யோசித்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் இத்தனை வருடங்களுக்குப் பின் உலகத்தில் எனக்குப் பிடித்தமான இடத்திலிருந்து வந்திருக்கிறாய்”
அவரின் சந்தோசம் அவர்களின் நட்புறவுக்கு அடித்தளம், சாந்தி மகளுடன் பாடசாலைக்குப் போகும்போது பார்கின்ஸன் நிழவரைச் சந்திப்பாள். சில வேளை அவளுடன் பாடசாலை வரைக்கும் வருவார். உலகத்தைப் பற்றி, சுவாத்தியத்தைப் பற்றி இலங்கையில் நடக்கும் சண்டையைப் பற்றி எத்தனையோ சம்பாஷணைகள் அவர்களால் எடுக்கப்படும்.
மழை இன்னும் உரத்துக் கொட்டியது.
“நான் வீட்டுக்குப் போக வேண்டும், அலிஸன் உனது அழைப்புக்கு நன்றி, இன்னொருதரம் உனது வீட்டுக்குக் கோப்பி சாப்பிட வருவேன்… சாந்தி வீட்டுக்குப் போனதும் போன் பண்ணுவேன்” எமிலி சாந்தியையும் அலிஸனையும் பார்கின்ஸன் கிழவனையும் பிரிந்து அவசரமாக நடந்து சென்றாள்.
“எனது வீட்டுக்குக் கோப்பி சாப்பிட வருகிறாயா” என்று சாந்தி கேட்டிருந்தால் எமிலி ஒரு கொஞ்ச நேரமென்றாலும் வந்து விட்டுப் போயிருப்பாள்.
அலிஸனின் போக்கு எமிலிக்கு அவ்வளவு பிடிக்காது என்று சாந்திக்குத் தெரியும். ஏதோ சாட்டுப் போக்குச் சொல்லி அலிஸன் வீட்டுக்குச் செல்வதை எமிலி தவிர்த்துக் கொள்கிறாள் என்றும் தெரியும்.
“நானும் டொக்டரிடம் போக வேண்டும். மன்னிக்க வேண்டும்” சாந்தி நாசுக்காக விடை பெற்றாள்.
“பை பை லேடிஸ்” பார்கின்ஸன் கிழவன் தனது கைத்தடியை ஊன்றியபடி போனார்.
அலிஸன் தன் வீட்டுக்குப் போகும் தெருவில் திரும்பினாள்.
எமிலி அவசரமாக வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள். வீட்டுக்குத் திரும்பும் சந்தியில் கால் வைத்தபோது சட்டென்று அவள் அருகில் ஒரு கார் நின்றது. அவள் திரும்பிப் பார்த்தாள்.
முகம் தர்ம சங்கடத்துடன் தவித்தது. அவன் கார்க் கதவைத் திறந்து விட்டான்.
“ஏன் இந்த மழையில் நனைய வேண்டும், ஏறிக் கொண்டால் வீட்டுக்குப் போகச் சுகமாக இருக்கும்” டேவிட்டின் குறும்புத் தனத்தை ரசிக்கும் நிலையில் அவள் இல்லை.
“இப்போதுதான் உங்கள் மனைவியின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு வந்திருக்கிறேன், நீங்கள் வேறு தொல்லை செய்கிறீர்கள்” அவள் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாகச் சொன்னாள்.
அவன் அதை ரசித்தான்.
“எந்தவிதமான சூழ்நிலையிலும் என்னவென்று இப்படி நிதானமாகக் கதைக்கப் பழகினாய்” அவன் எத்தனையோ தரம் கேட்டிருக்கிறான்.
அவன் திறந்த காரை மூடாமல் பேசாமலிருந்தான். சீறியடிக்கும் மழை முன் சீட்டை நனைத்தது
“பிளீஸ் எமிலி”
“வேண்டாம் நான் உங்கள் காரில் ஏறினால் நான் போட்டிருக்கும். வாசனைத் திரவியத்தின் மணம் உங்கள் மனைவிக்குத் தடிமலைத் தந்து விடும்”
அவள் அவனின் மறுமொழிக்குக் காத்திராமல் விரைந்து நடந்தாள்.
டொக்டரிமிருந்து வீட்டுக்கு வந்தபோது சாந்தியின் மனம் சந்தோசத்தில் துள்ளியது.
தான் இரண்டாவது குழந்தைக்குத் தாயாகப் போகிறாள் என்பதை அவளாலே நம்ப முடியாதிருந்தது. உஷாவைத் தவிர தனக்கு ஒரு குழந்தையும் பிறக்காது என்றிருந்தவளுக்குக் கடவுள் அருளால் இன்னொரு குழந்தை பிறக்கப் போகிறது. மழையில் ஓடிப் போய்க் குழந்தை போல நனைந்து விளையாடவேண்டும் போலிருந்தது.
ஆண் குழந்தையா, பெண்குழந்தையா பிறக்கும் என்று அவள் யோசிக்கவில்லை. ஒரு குழந்தை பிறந்தாற்போதும். கணவன் நடராஜன் எவ்வளவு சந்தோசப் படுவான்?
மனம் விட்டு அவன் தன் துயரத்தைக் காட்டிக் கொள்ளா விட்டாலும் தங்களுக்கு இன்னொரு குழந்தை தேவை என்பதை அவன் ஆசைப்படாமலில்லை என்று தெரியும்.
அவனின் தங்கை கல்யாணமாகி நான்கு வருடங்களில் இரு குழந்தைகளைப் பெற்று விட்டாள்.
சாந்தியின் இரண்டு தமையன்களும் தங்களுக்கு இரு குழந்தைகள் பெற்று விட்டாள்.
தம்பி தனக்குக் கல்யாணமே வேண்டாமென்றிருக்கிறான்.
எல்லோருக்கும் இந்த சந்தோச சமாச்சாரத்தைச் சொல்ல வேண்டும். சொந்தக் காரர்களுக்குச் சொல்லி விட்டுப் பின் எமிலிக்குப் போன் பண்ணலாம்.
அவள் சந்தோசத்தில் என்ன யோசிக்கிறோம் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக நிர்ணயிக்க முடியவில்லை. அத்தனை சந்தோசம் அவளுக்கு. கணவனுக்கு டெலிபோன் பண்ண ரிசீவரை எடுக்க முயன்றபோது சொல்லி வைத்தாற் போல் டெலிபோன் மணியடித்தது.
எமிலியாகத்தான் இருக்க வேண்டும்.
குதூகலத்துடன் றிசீவரை எடுத்தாள் சாந்தி.
“மிஸஸ் நடராஜன்… பாடசாலைத் தலைமையாசிரியர் பேசுகிறேன்… ஐயாம் சொறி….” ஆசிரியை ஏதோ முக்கியமான செய்தி சொல்லப் போகிறாள் என்று தெரிந்தது.
“என்ன விடயம்” சாந்தி அவசரப்படுத்தினாள்.
“குழந்தைகளை மியுசியம் கொண்டு சென்ற கோச் வண்டி விபத்துக்குள்ளாகி விட்டது”
– தொடரும்…
– வசந்தம் வந்து போய்விட்டது (நாவல்),முதற் பதிப்பு: டிசம்பர் 1997, குமரன் பதிப்பகம் , சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அகந்தை வெறி!
மா.சித்திவினாயகம்
June 26, 2026
அன்புள்ள அப்பாவுக்கு…
நாகரத்தினம் கிருஷ்ணா
June 26, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 26, 2026
