கிளி
கதையாசிரியர்: ஜே.எம்.சாலி
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2026
பார்வையிட்டோர்: 36
(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொழுது நல்லபடியாகத்தான் விடிந்தது.
சந்தடி சலசலப்பு இல்லாமல் எட்டு மணி வரைக்கும் அடுப்படியில் ஆப்பம் சுட்டுக் கொண்டிருந்தாள் ஹபீபா.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளை அலைக்கழிக்கும் புயல் நெருங்கி வந்தது, கேணிக்கரை வீட்டு சைத்தூன்பீவியின் உருவத்தில்.
வாடிக்கை ஆப்பம் வாங்க வந்தவள், “யக்கா பாத்தி முத்து, வெசயம் தெரியுமில்லே…?” என்று ஆரம்பித்தபோது ஹபீபா செளியைத் தீட்டிக் கொண்டாள். இவள் சுட்டு வைக்கும் ஆப்பத்தைக் கூடத்தில் உட்கார்த்தபடி வாடிக்கையாளர்களுக்கு வினியோகிப்பாள் தாய்க்காரி – பாத்திமுத்து.
”காலங் காத்தாலே என்னா வெசயம் சொல்லப் போறே?” என்றாள் பாத்திமுத்து.
“பெரிய வவுத்தெரிச்சலாச்சுதே… அப்துல்கரீமோட நசீபு இப்படியா ஆவணும்? அந்தப் புள்ளைக்கு இப்படி ஆயிருக்கப்புடாது. நாம கவலைப்படுறதாலே போனது திரும்பி வந்துடப் போவுதாங்காட்டியும்…சரி, பத்து ஆப்பம் எண்ணி வச்சிட்டியாக்கா?”
ஹபீபாவுக்குப் பொறுக்கவில்லை. கரீமுக்கு ஏதோ ஆகியிருக்கிறது என்று சைத்தூன்பீவி சொல்கிறாளே, என்ன நடந்திருக்கும்? ஆப்பச் சட்டிக்குள் கையை விட்ட மாதிரி மனம் உதறிக் கொள்கிறது. எழுந்து போய் என்ன நடந்தது என்று சைத்தூன்பீவியை இடைமறித்துக் கேட்க வேண்டும் போல் ஹபீபாவுக்குத் துடிப்பு.
“கரீமுக்கு என்ன ஆச்சுண்டு சொல்லேன் சைத்தூன்?” அம்மாவே கேட்டு விட்டாள்.
“தோப்புத் தெருவே தூள் பறக்கு தாங்காட்டியும்…” என்று திகில் மூட்டிவிட்டு நடந்ததைச் சொல்லிவிட்டுப் போகிறாள் சைத்தூன்; அவ்வளவுதான்; நிலைகுலைந்து போனாள் ஹபீபா.
இந்த முஹர்ரம் பிறந்தால் சரியாக ஆறு வருஷம் முடிந்து விடுகிறது. கரீம் கைவிடப்பட்டதும், ஹபீபாவுக்குக் கல்யாணம் நடந்ததும் ஆறு வருஷக் கனவு. அக்னிக் கனவு.
இவளுக்கு அவன்தான் மாப்பிள்ளை என்பது ஊரே வரித்துவிட்ட சங்கதி, அவனுக்கு ஏனோ சம்சயம் –
‘”ஹபீபா, என் மனசிலே ஒரு அச்சம் இருந்துக் கிட்டேயிருக்கு!” ஒரு நாள் அவன் அதை வெளியிட்டான்.
“ஒங்களுக்கு எதுக்காக பயமாம்? ஆம்பளையாச்சே!”
“இன்னொரு ஆம்பளை ஒன்னை தட்டிக்கிட்டுப் போயிடு வானோண்டுதான் பயந்துக்கிட்டிருக்கேன்·”
“பொம்பளையாட்டம் பேசப்புடாது. எதுக்காக இப்படி நடுங்குறீங்க?”
“என்னோட நேரம் காலம் சரியில்லாத மாதிரி இருக்கு. நல்ல வேலைவெட்டி இல்லே… காதிலே வுளுவுற சேதிங்களைச் கேட்டா…!”
“சொன்னாத்தானே விளங்கும்!”
“ஊர்லேயே நீதான் ரொம்ப அழகியாம். சுல்தானா வாட்டம் இருக்கியாம்… யாராச்சும் பணக்காரப் புள்ளைங்க பாத்துட்டா கொத்திக்கிட்டுப் போயிடுவாங்களாம்!”
“என்னைப் பாருங்கண்டு நான் எதிராப்போலே போயி நிற்பேனாக்கும்…ஒங்க புத்தி ஏன் இந்தப்படிக்குப் போவுது?”
“எங்கே நீ எனக்கு இல்லாம போயிடுவியோண்டுதான்!”
“என்னிக்கிருந்தாலும் இந்த ஹபீபா உங்களோட ஓடமைதான்.”
அவளுடைய உறுதி கரீமை நிமிர்த்தியது.
ஹபீபா அவனுக்கு உடமையாகக் காத்திருந்தாள்.
விஷப் புகை தூவி, அந்த உறவை வேரறுப்பதற்கென்றே மைதீன் வந்தான். யாரும் எதிர்பார்த்திராத பிரவேசம்.
“பக்கத்து ஊர்லே ரொம்ப வசதியான எடம். கப்பல் காடிக்குப் போற மாப்பிளை. ஹபீபாவை முடிக்கணுமிண்டு ஒத்தைக் கால்லே நிக்கிறார். பத்து நாள்லே ‘நிக்கா’ பண்ணிடலாமிண்டு சொல்றாங்க நானும் சம்மதம் குடுத்துட்டேன்.” தகப்பனார் சொன்னார். ஹபீபா துவண்டு விழுந்து விட்டாள்.
“அது எப்படிங்க முடியும்? இந்தப் பொண்ணு கரீமை நெனைச்சுக்கிட்டு வருஷம் வருஷமா காத்துக்கிட்டிருக்கே” என்றாள் அம்மா,
“உள்ளதுதான். ஆனாக்கா ஒத்துவரக் கூடியதில்லையே. வேலை வெட்டி தேடுறேண்டு பம்பாய்க்குப் போனவன் போனதுதான். அவன் காசு பணத்தோட திரும்புறது எப்போ, ஹபீபாவைக் கல்யாணம் முடிக்கிறது எப்போ…? அவன் வருவானோ இல்லியோ, யார் கண்டாங்க. சொத்து சொகத்தோட மாப்பளை கெடைக்கிறப்போ எதுக்காக ஓதறி வுடணும்?”
எந்த எதிர்ப்பும் பலனளிக்கவில்லை..
திடீரென்று எதிர்ப்பட்டுத் தன்னை மீட்க வரமாட்டானா என்று ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருந்தாள். கரீம் வரவில்லை.
தாமதிக்காமல் மகளை மணவறைக்கு அனுப்பி விட்டார் தந்தை.
மாப்பிள்ளை மைதீன் சொன்னான்: “ஒன்னை அடைஞ்சே தீருவேன் அப்புடீண்டு பந்தயம் போட்டேன், அடைஞ்சாச்சு. நெனைச்சதை முடிக்கிறவன் இந்த மைதீன் அப்படீங்கிறது இந்தப் பயலுவளுக்கு இப்பத்தான் புரிஞ்சிருக்கு. நீயும் புரிஞ்சுக்கணும்…”
அவனைப் புரிந்து கொள்ள ஹபீபாவுக்கு நாளாகவில்லை.
”ஒனக்கு நான் எப்புடிக் குறிவச்சேன் தெரியுமில்லே? ஒங்க ஊர் கந்தூரிக்கு வாலிபப் பயலுவளோட வந்தப்பத்தான் பாத்தேன். விசாரிச்சேன். நீ கெடைக்க மாட்டேண்டு சொன்னானுவ. சவாலா எடுத்துக்கிட்டேன். காசை வீசி எறிஞ்சா நூறு ஹபீபா வருவாளுங்கண்டேன்.”
அவனுடைய பிரதாபங்கள் ஹபீபரவுக்குப் பயங்கரமாக இருந்தன. ‘லாட்டரி மைதீன்’ என்று நாலு பேர் பேசுகிற அளவுக்கு அவனுக்கு மலேசியா லாட்டரியில் சில முறை பரிசு கிடைத்திருக்கிறது என்பது உண்மைதான். அந்தப் பணத்தோடு கூடவே வேண்டாத அத்தனையும் சேர்ந்து கொண்டிருக்கிறதே…ஏற்கெனவே இரண்டு கல்யாணம் ஆகி அந்தப் பெண்களைத் தீர்த்து விட்டிருக்கிறான் என்பதும் ஹபீபாவுக்குத் தெரிய வந்தது.
ஹபீபாவின் அழகும் சுவர்ச்சியும் மைதீனுக்குத் தேவைப் பட்டது. அந்த இச்சையும் வெறியும் இரண்டே மாதம்தான். கசக்கி முகர்ந்து விட்டுக் கப்பல் ஏறி வருஷம் ஆறு ஆகிறது. ஒரு வரி கடிதம் இல்லை. ஒரு ரூபாய் காசு வந்ததில்லை. அன்றைக்குத் தாய் வீட்டுக்கு வந்தவளுக்கு இப்பொழுது ஊரில் பெயர், ஆப்பக்கார ஹபீபா!
இந்த வேதனை தாளாமல் ஹபீபாவின் தகப்பனார் காலமாகி மூன்று வருஷம் ஆகிறது.
கரீமின் நினைவு மோதி முழங்குகிறது…
அப்பொழுது ஒரு நாள் மாவரைத்துக் கொண்டிருந்த சமயம் அவன் வந்து எதிரே உட்கார்ந்து ஆட்டுக்கல் குழவியைப் பிடித்தான். கை, அவள் கை மேல் பதிந்திருந்தது.
“எடுங்க கையை…!”
“நெஜமாத்தான் சொல்றியா, ஹபீபா?”
“பின்னே? அப்பப்ப வந்துட்டுப் போசு பெத்தவங்க அனுமதிச்சா அத்து மீற ஆரம்பிச்சுட்டீங்களே.. கன்னிப் பொண்ணோடே கையை, மெய்யைத் தீண்டுறது பாவம், தெரியுமில்லே?”
“நான் கைபிடிக்கப் போற பொண்ணு இல்லையா? சரி… இப்ப நீ ஒக்கார வேணாம்… எந்திரிச்சி அப்பாலே போ. நானே மாவரைச்சிக் குடுத்துட்டுப் போறேன்.”
“ரொம்பத் தெரிஞ்ச மாதிரிதான்!”
ஹபீபா சிரித்தாள்,
“தெரிஞ்சு வெச்சுக்கலேண்டா நாளைக்கு எனக்குத்தான் ஆபத்து.”
கரீம் மாவரைத்த வேகத்தைப் பார்த்து ஹபீபா நெற்றியைச் சுருக்கினாள்.
“இம்புட்டு வேகம் ஆகாது” என்றாள்.
“ஒன்னோட கடைக்கண் பார்வைக்கு அம்புட்டு சக்தி இருக்கு ஹபீபா. மலையே கடுகாத் தெரியும்.”
“சரி மாவரைச்சது போதும். யாராச்சும் பாக்கறதுக்கு முன்னாடி நடையைக் கட்டுங்க!”
“எம்புட்டு நாளைக்கு என்னை வெரட்டுவே இப்புடி? பம்பாய் போறேன். திரும்பி வந்து பேசிக்கிறேன்” என்றவாறு அவன் எழுந்து போனான். ஹபீபாவுக்கு மனமில்லை. அவனை அருகில் அமர்த்தி வைத்துப் பேசிக் கொண்டே இருக்கலாம் போல் ஆவல். அதற்கு வேளை வர வேண்டுமே!
காத்திருந்தாள். இலவு காத்த கிளியாக நேரிடும் என்று நினைத்திருக்கவில்லை. அவள் கழுத்தில் தாலி ஏறிய சில மாதங்களுக்குப் பிறகு ஊர் திரும்பிய கரீம் செய்தியைக் கேட்டது தான் தாமதம், வந்த வேகத்தில் திரும்பி விட்டான். அவன் எங்கே போனான் என்பது ஹபீபாவுக்குத் தெரியாது. துபாய்க்குப் போய்க் கட்டட நிர்மாண வேலையில் எடுபிடியாகச் சேர்ந்திருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது.
நிர்ப்பந்தமாகத் திரும்பியிருக்கிறான், இப்பொழுது. இந்தச் சோதனை கரீமுக்கு நேர்ந்திருக்கக் கூடாது என்று நெஞ்சம் உருகிக் கொண்டிருக்கிறாள் ஹபீபா.
கூண்டுக்கிளி! ஹபீபாவின் நிலை அப்படித்தான் இருக்கிறது. ஆறு வருஷமாக அதே நிலை…
ஹபீபாவுக்கு எப்படியோ துணிவு வந்திருக்கிறது. சிறகு விரித்துப் பறக்க வேண்டும் போல் மனத்தில் எழுச்சி.
“அம்மா… தோப்புத் தெரு வரைக்கும் போயிட்டு வரேன்.” – தாயிடம் சொன்ன போது ஹபீபாவுக்கு நடுக்கமோ, இறுக்கமோ இல்லை புரிந்து கொண்டு விட்டாள் அம்மா.
“ஒன்னோட பிரியம்…!” அதற்கு மேல் வார்த்தை இல்லை. இந்தத் துணிச்சல் எப்படி வந்தது என்பதில் ஹபீபாவுக்கே வியப்பு.
சைத்தூன் பீவி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை வீட்டில் நுழைந்த மாத்திரத்தில் ஹபீபா உணர்ந்து கொண்டு விட்டாள்.
அவள் சொன்ன நிலையில்தான் கரீம் இருக்கிறான். கட்டிலில் முடங்கியிருப்பவனைக் காணப் பொறுக்கவில்லை ஹபீபாவுக்கு.
காலடியோசை கேட்டதும் “யார்?” என்ற குரல். ஆறு வருஷத்திற்குப் பிறகு அவள் கேட்கும் குரல்.
“நான்தான்…ஹபீபா!”
“ஹபீபாவா!” — அவனுக்கு நம்ப முடியாத வியப்பு.
“ஆமாம், வந்திருக்கேன்.”
மௌனம்.
“ஒரு சேதியும் தெரியாது. அதனாலே நீ வந்திருக்கிறதா சொன்னதும் நம்பமுடியலே, ஹபீபா…”
“என்னாலேயும் நம்பத்தான் முடியலே… இப்புடி ஆகுமிண்டு நெனைச்சிக் கூட பாக்கலே யே …!” ஹபீபா நெகிழ்ந்து போகிறாள்.
“நடக்குறதுதான் நடக்கும் ஹபீபா.”
“இன்னும் என்ன நடக்கணும்? இந்தக் கோலத்திலே ஒங்களை நான் பாக்குறப்போ…”
“ஹபீபா! எனக்கு எது ஆனாக்கா என்னா? ஒன்னோட சந்தோஷந்தான் எனக்கு முக்கியம்.”
“நான் அப்புடி இருக்கிறதா நீங்க நெனைச்சிருந்தீங்களா?”
“இல்லையா?”
“இங்கே ஓடியாந்திருக்கேனே, எதுக்குண்டு தெரியுயில்லே?”
கரீம் விவரம் கோரவில்லை.
“ஒங்களுக்கு இன்னொருத்தர் ஒத்தாசை இனிமேலே தேவையில்லையா?”
“அதுக்காக?”
“கட்டிலையே உலகமாக்கிக்கிட்டு நடமாட முடியாம அடங்கிப் போன ஒருத்தருக்கு சேவை செய்யலாமிண்டு முடிவு செஞ்சிட்டேன்.”
“அது என்னோட நசீபு… விதி. ஒனக்கு இப்ப என்ன ஆச்சுங்கிறே?”
‘’எல்லாமே ஆயிப் போச்சு!”
ஹபீபா மௌனமாக நிற்கிறாள்.
“ஹபீபா, பொளைக்கப் போன எடத்திலே ரெண்டு காலையும் எளந்துப்புட்டு எதுக்கும் ஒதவாத பிண்டமா இங்கே வத்து ஒடுங்கிக் கெடக்கிறேன். எம் மேலே ஈவு, இரக்கம், பிரியம் இருக்குதுண்டா அதுக்காக ஒன்னோட வாழ்க்கையை அழிச்சிக்கணுமா? என்னாலே என்ன சொகம் கிடைக்கு மிண்டு நெனைக்கிறே?”
“சொகத்தைப் பத்தி கனவு கண்டவ இல்லே, இந்த ஹபீபா!”
“அது ஒனக்குக் கெடைக்கும். கட்டின புருஷன் ஒரு நாள் திரும்பி வர்றப்போ.”
“அந்த பந்தத்தை ஒதறிப்புட்டேன், மனசாலே, பெண்டாட்டியை நாலு மாசம் புருஷன் பராமரிக்கத் தவறிட்டா சொல்றாங்க. கல்யாணபந்தத்துக்கே அர்த்தமில்லேண்டு வருஷம் ஆறு ஆச்சு, ஒரு கடுதாசி இல்லே. ஒரு பிச்சைக் காசு இல்லே. ஆப்பக்காரி அப்புடீங்கிற பேரோட இத்தினி வருஷமா வயித்தைக் களுவியாச்சு. இதுக்கு மேலே என்ன ஆவணும்? கூண்டுக்கிளியா இருந்தேன். அது போதும், குஞ்சுக்கு இரை ஊட்டுற கிளி மாதிரி இருக்கப் போறேன்… எதுக்குண்டு தெரியு ஒங்களுக்குக் காலா இருக்கப் போறேன்”
“ஹபீபா, இது வெஷப் பரீட்சை” – கரீம் குமைந்தான்.
“இல்லே, விடுதலை எனக்கு நானே தேடிக்கிற விடுதலை. மொறைப்படிக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்யப் போறேன்; செய்யப் போறோம்” என்றாள் ஹபீபா.
– 1979, ஆனந்த விகடன்.
– சாயல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1983, தமிழ் மன்றம். கல்ஹின்னை, கண்டி.
![]() |
ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அட, என்னடா பொல்லாத வாழ்க்கை?
வளர்கவி
August 7, 2026
அதிதி
என்.ஸ்ரீதரன்
August 7, 2026
சாயல்
ஜே.எம்.சாலி
August 7, 2026
